ஸலபி சகோதரர்களுக்கு சிறப்பு மிக்க ஓர் உபதேசம்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

எம் சகோதரர்களுக்கு நாம் உபதேசிப்பது என்னவென்றால், தாங்கள் கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதோடு, தஃவா களத்தில் இறங்குவதில் அவசரம் கொள்ளாமல், கல்வியைத் தரமாகப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். மேலும், கல்வியில் தரமான தகுதியை அடையும் வரை விளக்கம் கூறுவதற்கு முந்தாமல் மௌனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கல்வியில் தகுதியை அடைவதற்கு முன்னால் மௌனம் காப்பதே ஸலபி தஃவாவின் வெற்றியாகும். அத்தோடு, எமது சகோதரர்கள் ஸலபி தஃவாவுக்கு ஒத்துழைப்பையும், உதவியையும் தருவதே, இந்த தஃவாவின் மீது அவர்கள் கொண்டுள்ள நேசிப்புக்கான அடையாளமும் ஆதாரமுமாகும்.

மனிதர்களின் குரல்களினால் ஸலபி தஃவாவுக்கு வெற்றி கிடைக்க மாட்டாது. மாறாக, ஆதாரம் மாத்திரம் ஸலபி தஃவாவின் வெற்றிக்குப் போதுமானதாகும். அனைத்து அசத்தியங்களுடனும் மோதுவதற்கு ஆதாரங்கள் தரமாக அமைந்திருக்க வேண்டும். ஸலபி தஃவாவை மேற்கொள்கின்ற சகோதரர்கள் சில முக்கிய விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொது மக்களின் முன்னால் ஆதாரங்களை முன்வைக்கும் வழிமுறையை தெளிவாக அறிந்து இருக்க வேண்டும்.
ஆதாரங்களை மக்கள் புரிந்து கொள்ளும் விதத்திலும் ஜீரணிக்கும் வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை கல்வியைத் தேடும் சகோதரர்களும் கவனத்தில் கொண்டு தங்களின் கல்வியைப் தெளிவான விளக்கத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றுக்கொண்டால் தான், பிந்தைய காலங்களில் சமூகத்துக்கு தாங்கள் கற்றவற்றை எத்திவைக்க வருகின்ற போது, அவர்களிடமிருந்து அக்கல்வியைப் பெற்றுக் கொள்பவர்களும் தெளிவோடு பெற்றுக் கொள்வார்கள்.

ஸலபி தஃவாவை நேசிக்கின்ற பல சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த தஃவத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் சத்தியத்தை நேசித்த நிலையில் இருந்தாலும், தங்களின் கண்களில் காண்கின்ற தவறுகளையெல்லாம் திருத்த வேண்டும் என்று எண்ணி, தங்களின் எல்லையைத் தாண்டிச் செல்வதைத் தங்களின் வழிமுறையாக அவர்கள் அமைத்துக் கொள்ளக் கூடாது. யார் அவ்வாறு அவசரம் கொள்கிறாரோ அவர் தன்னைத் தானே அழித்துக் கொள்வார்.

தீமையைத் தடுப்பதில் ஸஹாபாக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு முறை அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) கூபாவின் பள்ளிவாசலில் ஒரு காட்சியைக் கண்டார்கள். அங்கே, மக்கள் மூன்று குழுக்களாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு குழுவில் ஒருவர் சுப்ஹானல்லாஹ் என்று நூறு தடவைகள் கூறுமாறு கூற, ஏனையவர்கள் அதனைக் கூறுகிறார்கள். இன்னுமொரு குழுவில் ஒருவர் அல்ஹம்துலில்லாஹ் என நூறு தடவைகள் கூறுமாறு கூற, ஏனையவர்கள் அதனைக் கூறுகிறார்கள். அதே போன்று இன்னுமொரு குழுவில் ஒருவர் அல்லாஹு அக்பர் என நூறு தடவைகள் கூறுமாறு கூற, ஏனையவர்கள் அதனைக் கூறுகிறார்கள். இதனைக் கண்ட அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) தானே முன்சென்று அந்த பித்அத்தான காரியத்தைத் தடுக்காமல், தன்னை விடவும் கல்வியில் தரமாக இருந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களை நோக்கிச் சென்று, பள்ளிவாசலில் நடந்ததைக் கூறினார்கள். அதன் பின்னால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) அங்கே சென்று பித்அத்தான வழிமுறையில் திக்ர் செய்து கொண்டிருந்த மனிதர்களின் செயலைக் கண்டித்து அதனைத் தடுத்தார்கள். இதில் அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) நடந்து கொண்ட விதம் எமக்கு பல படிப்பினைகளையும், ஸஹாபாக்கள் செயற்பட்ட வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.

அதாவது, அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சிறப்புமிக்க தோழர்களில் ஒருவராக இருந்தவர். மேலும் மார்க்கத்தைத் தெளிவாக எத்திவைக்கக் கூடியவராக இருந்தவர். இவ்வாறு தரமாகக் கல்வியைப் பெற்றவராக இருந்தும் கூட, தனக்கு முன்னால் ஒரு பித்அத்தான காரியம் நடப்பதைக் கண்ட பின்னாலும், அதனைத் திருத்துவதற்கு தானே முந்திக் கொள்ளவில்லை. அவர் தன்னை விடவும் கல்வியில் தரமானவரை நாடிச் சென்று, அவரின் மூலம் அத்தவறுகள் திருத்தப்படுவது சிறப்பானதாக அமையலாம் எனக் கருதினார். இதுவே ஸஹாபாக்களின் வழிமுறையாகும். சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் போது, ஸஹாபாக்களின் இம்முன்மாதிரியை நாம் பின்பற்றி நடக்க வேண்டும். ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றி சிறப்பாகச் செயற்பட்டதன் காரணமாகவே, அல்லாஹு தஆலா அந்த ஸஹாபாக்களின் மீது திருப்தி கொண்டதாகக் கூறுகிறான்.

ஸலபி தஃவா என்பது சத்திய மார்க்கமாகும். அது தூய்மையான வழிமுறையோடு அமைந்ததாகும்.

இதில் ஒருவர் தூய்மையாகச் செயற்படும் அளவுக்கு அதன் பயனை அடைந்து கொள்வார். எவர்களிடம் தூய்மையாகச் செயற்படும் தன்மை இல்லையோ அவர்கள், இந்த தஃவாவை விட்டும் தூரமாகிவிடுவார். அல்லாஹ்வுக்காகத் தூய்மையாகச் செயற்படும் அடியார்களுக்கு அல்லாஹ் திறமையையும், தரத்தையும் வழங்குவான். அவ்வாறு அவர்களுக்கு திறமையையும், வாய்ப்பையும், வசதியையும் அல்லாஹ் வழங்கிவிட்டால், அவர்களுக்கு இருக்கும் கடமை சத்தியத்தை அதன் தூய வடிவில் எத்திவைப்பதாகும். அதைத் தவிர வேறொரு கடமை அவர்களுக்கில்லை. இன்னும், அவர்களின் தஃவாவின் நோக்கம் கூட்டத்தைச் சேர்ப்பதையும், அந்தஸ்தை வளர்ப்பதையும் நோக்கி இருக்க முடியாது.

அல்லாஹு தஆலா அவனது தூதரை நோக்கிக் கூறுகிறான்,

فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ

ஆகவே, (நபியே) அவர்கள் புறக்கணித்தால் உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் தெளிவாக எத்தி வைப்பதுதான்

(அந்நஹ்ல் – 16:82)

அழைப்புப் பணியில், அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கும் எல்லை எத்திவைப்பது மாத்திரம்தான் என்றிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதரை விடவும் ஏனையவர்களுக்கு மேலதிகமான எப்பொறுப்பும் இல்லை. எனவே, ஸலபி தஃவாவில் ஈடுபடுபவர்கள் எத்தி வைப்பதோடு நின்று கொள்தல் வேண்டும். அவ்வாறு எத்திவைக்கப்படும் போது, ஒவ்வொரு தனி மனிதனும் தனது நிலையை அறிந்து தன்னைத் திருத்திக் கொள்ள வெண்டும் என்பதே இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்மில் எவரும் தான் விரும்பும் விதமாகவே ஸலபி தஃவா அமைய வேண்டுமென எதிர்பார்க்கக் கூடாது. இந்த தஃவாவில் அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருக்கும். ஒரு சமூகத்தில் ஷிர்க்கின் அடையாளங்கள் காணப்பட்டால் அதனை ஷிர்க் என வெளிப்படையாக எத்திவைப்பதே ஸலபி தஃவாவின் வழிமுறையாகும். அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லப்படும் போது தன்னிடம் ஷிர்க்கின் அடையாளங்கள் இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் அவர் தன்னில் உள்ள ஷிர்க்கை விட்டும் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும், சிலர் தங்களிடமுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள மறந்தவர்களாக இந்த தஃவாவில் தங்களுக்கு விமர்சனம் செய்யப்படுகிறது எனக் கருதி ஸலபி தஃவாவை விட்டும் தங்களை தூரமாக்கிக் கொள்கிறார்கள். இத்தகையவர்கள் தங்களைத் தாங்களே நஷ்டத்துக்கு உள்ளாக்கிக் கொள்வார்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நூல் : ஸலபி தஃவா விடயத்தில் ஓர் உபதேசம்

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்
أحدث أقدم