ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களின்‌ தராதரம்‌ பற்றிய அஷ்‌அரிய்யாக்களின்‌ நிலைப்பாடு.

ஆஹாதான ஹதீஸ்களின்‌ தராதரம்‌ பற்றிய அஷ்‌அரிய்யாக்களின்‌ நிலைப்பாடு முஃதஸிலாக்களின்‌ நிலைப்பாடாகும்‌. அதாவது “ஆஹாத்‌ வகை” சார்ந்த ஹதீஸ்கள்‌ உறுதியான நம்பிக்கை அளிக்கும்‌ விதத்தில்‌ கூறப்பட்டவை அல்ல. அவை சந்தேகமான அடிப்படையில்‌ அமைந்தவையாகும்‌.

எனவே ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை அகீதாவில்‌ அங்கீகரிக்க முடியாது என்று அங்கீகரிக்க முடியாத காரணத்தைக்‌ கூறி, புதிய கோட்பாட்டைத்‌ தோற்றுவித்த முஃதஸிலாக்களுடன்‌ ஒரு தோணியில்‌ பயணிப்பவர்களாக அஷ்‌அரிய்யாக்கள்‌ இருப்பது இவ்விரு பிரிவினருக்கும்‌ இடையில்‌ காணப்படும்‌ நம்பிக்கைக்‌ கோட்பாட்டிலுள்ள உடன்பாட்டை உறுதி செய்கின்றது.

பலவீனமான ஹதீஸ்களை‌ பக்கங்களால்‌ நிரப்பி, அவற்றைக்‌ கொண்டு அமல்கள்‌ செய்து, அதன்மூலம்‌ மறுமையில்‌ ஈடேற்றத்தை எதிர்பார்க்கின்ற இந்தப்பிரிவினர்‌ ஆஹாத்‌ வகை சார்ந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு அர்த்தமற்ற விளக்கம்‌ தருவது ஆச்சரியமாக இருக்கின்றது.

பலவீனமான ஹதீஸ்களைவிட ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்கள்‌ ஆதாரப்பூர்வமானவையாக இருந்தும்‌ அவற்றை அங்கீகரிக்க மறுக்கும்‌ போக்கு மறைமுகமான ஹதீஸ‌ மறுப்பைத்‌ தெளிவுபடுத்துகின்றது.

ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை மட்டும்‌ இவர்கள்‌ நிராகரிக்கவில்லை. மாறாக தமது கோட்பாடுகளுக்கு ஒத்துவராத முத்தவாதிர்‌ தரத்தில்‌ அமைந்த ஹதீஸ்‌, தரத்தில்‌ உயர்‌ நிலையில்‌ காணப்படும்‌ ஹதீஸ்களையும்தான்‌ மறுத்துள்ளனர்‌.

அதனால்‌ இவர்கள்‌ மறைமுகமான நிலையில்‌ பகுதி சார்ந்த ஹதீஸ்‌ மறுப்புக்‌ கோட்பாட்டாளர்கள்‌ என்பதே உண்மை.

அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நிலைப்பாடு

ஆஹாத்‌ ஹதீஸ்களை ஆதாரமாகக்‌ கொள்வதிலும்‌ அவற்றைக்‌ கொண்டு செயல்படுத்துவதிலும்‌ நபித்தோழர்களின்‌ நிலைப்பாடு எதுவோ அதுவே அஹ்லுஸ்ஸான்னாக்களின்‌ நிலைப்பாடாகும்‌.

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களுக்குச்‌ சூனியம்‌ செய்யப்பட்டதை ஆதாரப்பூர்வமானதாக அங்கீகரிக்கும்‌ அஷ்‌அரிய்யா, மாத்ரீதிய்யா பிரிவுகளிடம்‌ ஆஹாத்‌ ஹதீஸ்‌ வகை பற்றிய நிலைப்பாட்டில்‌ முரணபாட்டையும்‌, குழப்பத்தையும்‌ தெளிவின்மையையும்‌ எடுத்துக்‌ காட்டுகின்றது. ஏனெனில்‌, அந்த ஹதீஸ்‌ ஆஹாத்‌ வகை சார்ந்ததாகும்‌.

ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை அஷ்‌அரிய்யாக்கள்‌ அகீதா அம்சங்களில்‌ அங்கீகரிப்பதில்லை. இருந்தும்‌ அதனை இலங்கைவாழ்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ அங்கீகரிக்கின்றனர்‌ என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

ஹபருல்‌ ஆஹாத்‌ நிராகரிப்புச்‌ சிந்தனை

முஸ்லிம்‌ உலகில்‌ தோன்றிய புதிய சிந்தனைப்‌ பிரிவுகளால்‌ குர்‌ஆன்‌ சுன்னாவின்‌ சிந்தனைக்கு மாற்றமான பல புதிய கோட்பாடுகள்‌ முன்வைக்கப்பட்டன. அவற்றில்‌ “ஹபருல்‌ ஆஹாத்‌” பற்றிய சிந்தனையும்‌ முக்கியமானதாகும்‌.

இந்தப்‌ புதிய சித்தாந்தம்‌ இஸ்லாத்தில்‌ புதிய சித்தாந்தமாக இருந்தது மட்டுமின்றி, “அஸ்மா, ஸிஃபாத்‌” தொடர்பாக வந்துள்ள பல அல்குர்‌ஆனிய வசனங்களும்‌, ஹதீஸ்களும்‌ தவறாகவும்‌, திரிபுபடுத்தியும்‌ திரிபுபடுத்தப்படவும்‌ காரணமாக இருந்ததோடு, நூற்றுக்கணக்கான ஹத்ஸகள்‌ நிராகரிக்கப்படவும்‌ அந்தக்‌ கோட்பாடு வழியமைத்துக்‌ கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

இஸ்மாயீல்‌ பின்‌ இப்ராஹிம்‌ பின்‌ உலையா (ம: ஹி: 218) என்ற முஃதஸிலா சிந்தனையாளர்தான்‌ ஹதீஸ்களில்‌ எண்ணிக்கை பற்றிய சிந்தனையை முன்வைத்ததில்‌ பிரபலமாகப்‌ பேசப்படுகின்றார்‌.

இந்தத்‌ தகவல்கள்‌ أحمد بن عوض الله بن داخل اللهيبي الحربي என்பவர்‌ الماتريديةدراسًةوتقويما என்ற தலைப்பில்‌ எழுதிய ஆய்வில்‌ இருந்து இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்யப்பட்டுப்‌ பகிர்ந்து கொள்ளபட்டவையாகும்‌.

இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்கள்‌ :

இமாம்‌ ஷாஃபிஈ (ஹ்‌) அவர்கள்‌ கலைகளுக்கான அடிப்படைகளை நிறுவியவர்களுள்‌ முன்னணி மேதையாவார்‌.

அல்‌- உம்மு, அர்‌-ரிஸாலா போன்ற பிரிசித்தி பெற்ற நூல்களின்‌ உரிமையாளரான இமாம்‌ அவர்கள்‌ ரிஸாலா ‌என்ற நூலில்‌ சான்றுகளை அணுகும்‌ அடிப்படைகள்‌ பற்றி எடுத்தெழுதி உள்ளார்கள்‌.

அர்ரிசாலாவில்‌ “ஒருவரால்‌ அறிவிக்கப்படுவதை நிலைப்படுத்தி ஆதாரமாகக்‌ கொள்ளுதல்‌” என்ற தலைப்பில்‌ “ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ செய்தியை நிராகரிக்காது, புறம்‌ தள்ளாது அங்கீகரித்துச்‌ செயல்படுத்துதல்‌ என்ற தலைப்பிட்டு,

ولو جاز لحد من الناس أن يقول في علم الخاصة أجمع المسلمون قديما وحديثا على تثبيت خبر الواحد والنتهاء إليه بأنه لم يعلم من فقهاء المسلمين أحد إل وقد ثبته جاز لي ، ولكن أقول لم أحفظ عن فقهاء المسلمين انهم اختلفوا في تثبيت خبر الواحد بما وصفت . (الرسالة - (ج 1 / ص 457

ஹபருல்‌ ஆஹாத்‌ விவகாரத்தில்‌ ஆரம்பக்‌ கால மற்றும்‌ பிற்கால ஹதீஸ்‌ கலை அறிஞர்‌ பெருமக்கள்‌ ஏகமனதாக அங்கீகரித்து, அதை ஆதாரமாகக்‌ கொள்வதிலும்‌, இறுதியில்‌ அதன்‌ பக்கம்‌ சட்டத்திற்காகச்‌ சென்றடைவதிலும்‌ முனைப்புடன்‌ ஆர்வம்‌ காட்டினர்‌ என்பது ஒருவர்‌ உறுதியிட்டுக்‌ கூற முடிகின்ற போது முஸ்லிம்‌ ஃபுகஹாக்கள்‌ அனைவரும்‌ அதனை உறுதியாக அங்கீகரித்துள்ளனர்‌. இருப்பினும்‌ நான்‌ கூறுகின்றேன்‌ : முஸ்லிம்‌ ஃபுகஹாக்கள்‌ நான்‌ கூறிய பிரகாரம்‌ ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ செய்திகளை ஆதாரமாகக்‌ கொள்வதில்‌ அவர்கள்‌ தமக்குள்‌ முரண்படவில்லை என்று எனக்கு அறுதி இட்டுக்‌ கூறிட முடியும்‌. இது ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்களின்‌ ஆழமான கருத்தாகும்‌.

ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்கள்‌ அகீதாவில்‌
நிராகரிக்கப்படலாகாது

ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்கள்‌ ஆஹாத்‌ என அழைக்கப்படுகின்றன. ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை அகீதாவில்‌ அங்கீகரிக்க முடியாது எனக்‌ காரணம்‌ காட்டி அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரிக்கும்‌ நிலை ஜஹ்மிய்யாக்கள்‌, முஃதஸிலாக்கள்‌ முதல்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌, மாத்ரூதிய்யாப்‌ பிரிவினர்‌ வரை கையாண்ட மிக மோசமான செயற்பாடாகும்‌.

அல்குர்‌ஆன்‌ முத்தவாதிர்‌ தரத்தில்‌ அமைந்தது. அதைத்தான்‌ அகீதாவில்‌ அங்கீகரிப்பதாகக்‌ கூறிக்‌ கொண்டு அதில்‌ இடம்‌ பெறும்‌ கருணை, கோபம்‌, மன்னிப்பு போன்ற அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரித்து, தமக்குள்‌ முரண்பட்டுக்‌ கொண்ட இந்தக்‌ குழுக்கள்‌, குறைந்த பட்சம்‌ இவர்கள்‌ குர்‌ஆனில்‌ வந்துள்ள பண்புகளையாவது நிலைப்படுத்தி இருந்தால்‌ நிச்சயமாகத்‌ தமது கோட்பாட்டில்‌ நிலையானவர்கள்‌ என்று அவர்களை நம்பமுடியும்‌.

அதே போன்று முஃதஸிலாக்கள்‌ அல்லாஹ்‌ அடிவானத்திற்கு இறங்கிவரும்‌ செய்தி முத்தவாதிராக இருந்தும்‌ அதை மறுக்கின்றனர்‌. இதுவும்‌ முரணபாடாகும்‌. இமாம்கள்‌ பலர்‌ இது பற்றிப்‌ பேசியுள்ளார்கள்‌; சுருக்கமாக இங்கு தரப்படுகின்றது.

இமாம்‌ புகாரீ (ரஹ்‌)

இது பற்றி இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ ஃபத்ஹுல்‌ பாரியில்‌ குறிப்பிடும்‌ செய்தி முக்கியமானதாகும்‌.

இமாம்‌ புகாரீ (ரஹ்‌) அவர்களது கிரந்தத்தில்‌ “அத்தவ்ஹீத்‌ அத்தியாயத்தில்‌” அல்லாஹ்வின்‌ உயர்வான பண்புகளை உள்ளடக்கிய ஹதீஸ்களை ஒவ்வொரு பாடத்திலும்‌ இமாம்‌ அவர்கள்‌ உள்ளடக்கி உள்ளார்கள்‌. அத்துடன்‌, அவற்றிற்குத்‌ துணையாக அல்குர்‌ஆனிய வசனங்களையும்‌ கொண்டு வந்துள்ளார்கள்‌.

அவர்களின்‌ போக்கு (அஹ்பாறுல்‌ ஆஹாத்)‌ ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை நம்பிக்கைக்‌ கோட்பாட்டில்‌ ஆதாரமாக எடுக்காது விடுவதை அனுமதிக்கக்‌ கூடாது என்பதை சுட்டிக்காட்டவும்‌, மேலும்‌

அவற்றை நிராகரிப்போர்‌ நிச்சயமாக குர்‌ஆன்‌, சுன்னா
ஆகிய இரண்டிற்கும்‌ முழுமையாக முரண்பட்டவர்கள்‌ என்று சைக்கினையாகச்‌ சுட்டிக்காட்டிடவும்தான்‌ என இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. அவர்கள்‌ தொடர்ந்து கூறுகின்ற போது:

“அர்ரத்து அலல்‌ ஜஹ்மிய்யா” என்ற நூலில்‌ இமாம்‌ இப்னு அபீஹாதம்‌ அவர்கள்‌ இமாம்‌ புகாரியின்‌ ஆசிரியர்களுக்கு ஆசிரியரான சல்லாம்‌ பின்‌ முதீஃ அவர்கள்‌ வழியாக அறிவிக்கும்‌ செய்தியில்‌ ஐஹ்மிய்யாக்கள்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது இவ்வாறு கேள்வி எழுப்பியதாகக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

அவர்களுக்கு (ஐஹ்மிய்யாக்களுக்கு) என்ன கேடு பிடித்திருக்கின்றது. இந்த ஹதீஸ்களில்‌ அவர்கள்‌ எதைத்தான்‌ நிராகரிக்க முடியும்‌? அல்லாஹ்வின்‌ மீது சத்தியமாக ஹதீஸில்‌ இடம்பெறும்‌ எந்த ஒன்றிற்கும்‌ குர்‌ஆனில்‌ அதே போன்றதொரு செய்தி இல்லாமல்‌ இருப்பதில்லை. நிச்சயமாக அல்லாஹ்‌ செவியுறுபவனும்‌, பார்ப்பவனுமாவான்‌. “அல்லாஹ்‌ உங்களுக்கு அவனது நஃப்ஸைப்பற்றி (தன்னைப்‌ பற்றி) எச்சரிக்கின்றான்‌” “அந்நாளில்‌ பூமிகள்‌ அனைத்தும்‌ அவனது பிடியில்‌ இருக்கும்‌; வானங்கள்‌ அவனது வலக்கரத்தில்‌ சுருட்டப்பட்டிருக்கும்‌” “நான்‌ எனது இரு கரங்களாலும்‌ படைத்தவனுக்கு நீ சுஜுத்‌ செய்யாமல்‌ இருக்க உனக்கென்ன நேர்ந்தது?” “மூசாவுடன்‌ அல்லாஹ்‌ பேசினான்‌” “அர்ர்ஹ்மான்‌ அர்ஷின்மீதானான்‌” என்று அல்லாஹ்‌ கூறுகின்றான்‌ எனக்‌ குறிப்பிட்டார்கள்‌. (ஃபத்ஹுல்‌ பாரீ‌)

இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌)

ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்டுகின்ற செய்திகளை அகீதாவிலும்‌ ஆதாரமாகக்‌ கொள்ளலாம்‌ என்பதை நிரூபிக்கின்ற செயற்பாடாக இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்கள்‌ தமது ரிசாலா என்ற நூலில்‌, ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ செய்திகளை உறுதிப்படுத்துவது பற்றிய ஆதாரம்‌ எனத்‌ தலைப்பிட்டு அது பற்றிய தமது நிலைப்பாட்டைத்‌ தெளிவுபடுத்தி உள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.

இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌)

மாமேதை இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தமது முஸ்லிம்‌ கிரந்தத்தின்‌ முன்னுரையில்‌ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்‌.

பிறிதொரு நம்பகமான ஒருவர்‌ வழியாக வரும்‌ நம்பகமான ஒருவர்‌ வழியான செய்தியானது ஆதாரப்பூர்வமானதாகும்‌.

அதைக்‌ கொண்டு செயல்படுவது அவசியமாகும்‌. (பார்க்க: முஸ்லிமின்‌ முன்னுரை)

இது இமாம்‌ முஸ்லிமின்‌ தெளிவான நிலைப்பாட்டை
உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இது பற்றிய மேலும்‌ பல தெளிவினை இமாம்களான தாரகுத்னீ, பைஹகீ, இப்னுஹிப்பான்‌ போன்ற அறிஞர்களின்‌ நூல்களில்‌ பெற முடியும்‌.

-ரிஸ்வான் மதனீ, நூல்: அஸ்மா வஸ்ஸிஃபாத்
Previous Post Next Post