மிம்பர் மேடைகளில் இப்னுல் முல்ஜிம்களும் சமூக வலைத் தளங்கில் வாஸில் பின் அதாக்களும் ஜஹ்ம் பின் ஸஃப்வான்களும் அதிகரித்துவிட்டனர்

யார் இந்த  அப்துர் ரஹ்மான் இப்னுல் முல்ஜிம் ?

கவாரிஜிய சிந்தனையில் ஊரிறித் திழைத்த அப்துர் ரஹ்மான் இப்னுல் முல்ஜிம் அல்முராதி எமனைச் சேர்ந்தவன். முஸ்லிம்களாகிய நமது
நான்காம் கலீஃபா அலி (ரழி) அவர்களை கூஃபா பெரிய பள்ளியில் ஹி : 40, (கி.பி. 661) ஒரு ரமளான் மாதம் 19 நாள் கொலை செய்த படுபாவி என்பதை அறிந்து வைத்துள்ள  நாம் அவனது சரித்திர பின்னணி பற்றியும் தெரிந்திருப்பது தாயிக்களான நம்மை நாம் மேலும் மேலும் சுய பரிசோதனை செய்து, சீர்திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

கொலை செய்யப்பட்டவர் யார்?

கலீஃபாக்களைப் போல சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம்
கூறப்பட்ட நபித்தோழர்களில் ஒருவர்.

அஹ்லுல் பைத்- நபியின் உயர் குடும்ப பரம்பரையில்  முக்கியமான ஒருவர்.

கூடவே ; இறைத் தூதரின் சிறிய தந்தையின் மகன்.

மேலும் அவர்களின் பாசமகள் சொர்க்கத் தலைவி அன்னை ஃபாத்திமாவின் அன்புக் கணவர் .

வீரத்திற்கு புகழ்  பெற்ற வீரமகன், மாவீரர்.

நேர்வழி நடந்த நான்காம் கலீஃபா. 

ஹஸன் ஹுஸைன், முஹ்ஸின், அபூபக்கர், உமர், உஸ்மான், ஆயிஷா போன்ற மேலும் 29 ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பாசமிகு தந்தை.
 
இறைத் தூதர் முன்னறிவிப்புச் செய்த கவாரிஜிய இயக்கத்தை தலைவன் துல் குவைஸரா அத்தமீமியை நேரில் கண்டதோடு அவனது கிளர்ச்சிக் குழுவுடன் நுட்பமான முறையில் போராடி அவர்களில் பலரைப் பதம் பார்த்த பெரும் தலைவர்.

கொலைகார இப்னுல் முல்ஜிம் என்பவன் யார் ? அவனது கல்வித் தகைமை என்ன? கலீஃபாவைக் கொலை செய்ய அவன் கூறும் விளக்கங்கள், என்ன? 

தொடக்க காலத்தில் 
குர்ஆனைக் கற்றிந்தவன். 

எகிப்தின் கவர்னராகிய அம்று பின் ஆஸ் (ரழி) அவர்கள் மதீனாவில் வாழ்ந்து வந்த இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களிடம் அமீருல்  முஃமினீன் அவர்களே!
يا أمير المؤمنين أرسل لي رجلا قارئا للقرآن يقرئ أهل مصر القرآن"
எகிப்திய மக்களுக்காக அல்-குர்ஆனைப் போதிக்க குர்ஆனில் திறமையான ஒருவரை  தந்துதவுங்கள் என கடிதம் எழுதினார்.  உடனே கலீஃபா அவர்கள் :
فقال عمر بن الخطاب :-
"أرسلت إليك رجلا هو عبد الرحمن بن ملجم من أهل القرآن آثرتك به على نفسي"
உங்களை முற்படுத்தி (எங்களுக்கு தேவையான) ஒரு மனிதரை உங்களிடம் அனுப்புகின்றேன். அவர்தான் அப்துர் ரஹ்மான் இப்னுல் முல்ஜிம், அவர் வந்து சேர்ந்ததும் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க ஒரு இல்லத்தை தயார் செய்து கொடுக்கவும், அவரை கண்ணியமாக பார்த்துக்கொள்ளவும் எனவும் பதிலளித்து இப்னுல் முல்ஜிமை எகிப்துக்கு முஅல்லிம் (முஹஃப்பிழ் குர்ஆனாக) அனுப்பி வைத்தார்கள்.

மார்க்க விளக்கமில்லாது கவாரிஜியர்களோடு கடும் போக்கை கடைப்பிடித்த இப்னுல் முல்ஜிமின் வாதம்:

எமனைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்னுல் முல்ஜிம் மதீனிவுக்கு ஹிஜ்ரத் செய்து நபிவழி வந்த ஃபிக்ஹுத் துறையில் பிரசித்து பெற்று விளங்கிய நபித்தோழர் முஆத் பின் ஜபலிடம் - ஃபிக்ஹ்- மார்க்க சட்டங்களைப் படித்த மேதையாகளில் ஒருவராகவும் இருந்தான்.

அத்தோடு எகிப்தை வெற்றிகொள்ள சென்ற போர் வீரர்களில் ஒருவனாகவும் குதிரை வீரன் என்ற சிறப்பு பெயர் பெற்றவனாகவும் அறியப்பட்டான்.

சிந்தனைப் பிறழ்வு:

இறையச்சம், உலகப் பற்றற்ற வாழ்வோடு பயணித்தும் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க மதீனாவில் இருந்து இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட நம்பிக்கைக்குரிய ஆசானாக இப்னுல் முல்ஜிம் இருந்தாலும் இப்னு அப்பாஸ் ரழி போன்ற நபித்தோழர்கள் போல குர்ஆனின் தெளிவான விளக்கம் அற்றவனாக இருந்ததன் விளைவாகவும் , கவாரிஜிய தலைகள் என வர்ணிக்கப்பட்ட 
الحجاج التَّميمي البُرَك بن عبد الله
அல்ஹஜ்ஜாஜ் அல்பர்க் பின் அப்துல்லாஹ் அத்தமீமி, மற்றும்
عَمْرو بن بكر التميمي 
அம்று பின் பக்ர் அத்தமீமி ஆகிய இருவரையும் மக்காவில் சந்தித்து   உரையாடியதன் பின்னணியில் ஏற்பட்ட கொள்கை மாற்றத்தாலும்,

 கலீஃபா அலி, சிரியா கவர்னர் முஆவியா, எகிப்து கவர்னர் அம்று பின் ஆஸ் (ரழி) ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தீர்த்துக் கட்ட அவர்கள்  செய்த முடிவை எதிர்க்காமல் சரி கண்டு கூஃபா நோக்கி விரைந்து கவாரிஜியக் குழுக்களோடு இணைந்து தனது வழிகேட்டில் தொடராக பயணித்தான். 

கொலைக்கான காரணம் என்ன?

முஸ்லிம் சமூகத்தின் இந்த நிலைக்கு மேல் கூறப்பட்ட மூன்று நபித்தோழர்களே முக்கிய காரணம் என்பதோடு, கலீஃபாவோடு நடந்த நஹ்ரவான் போரில் கொல்லப்பட்ட  தமது கவாரிஜிய சகாக்களுக்காக பழிவாங்கும் நோக்கம் என்பனவும் இந்த திட்டத்தில் உள்ளடங்கி இருந்தது. 

இடையில் மாட்டிய காதலியால் கலீஃபாவைக் கொலை செய்ய தீர்மானித்த வழிகேடன் இப்னுல் முல்ஜிம்:

கலீஃபா அலியைக் கொலை செய்ய கூஃபா புறப்பட்ட இப்னுல் முல்ஜிம் நஹ்ரவான் போரின் போது அப்பனும் மகனும்  கொல்லப்பட்ட கிதாம் பின்த் ஷிஜ்னா அத்தமீமிய்யா என்ற பெண்ணோடு காதல் தொடர்பு கொண்டான். 

அவள் கலீஃபா அலி ரழியைக் கொலை செய்வதற்கு அவன் உடன்பட்டால் அதற்காக தனது மஹர் தொகையை விட்டுத்தரவும் அவனைத் திருமணம் செய்யவும் சம்மதித்தாள். அதற்கு அவனும் சம்மதித்தான் அவ்வாறே நடந்தது.

கலீஃபா அலி ரழி கொலை செய்யப்பட்ட பின் ஐந்தாம் கலீஃபாவாக பதவி ஏற்ற அவரது மூத்த புதல்வர் ஹஸன் பின் அலி (ரழி) அவர்களின் கட்டளையின் பேரில் கூஃபா பெரிய பள்ளி வளாகத்தில் இவனது தலை துண்டிக்கப்பட்டது.

இறையச்சம் இருந்தும் கவாரிஜிய குழுவோடு தொடர்புபட்டதன் விளைவு நபித்தோழர்கள் வழிகேடர்களாகவும் இரத்தம் ஓட்டப்பட முடியுமான பாவிகளாகவும் இந்த பாவிகளுக்குத் தென்பட்டனர். 

அதன் விளைவாக இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமிய அரசுக்கு எதிரான முதல் கிளர்ச்சிக் குழுவான கவாரிஜிய குழுவோடு தொடர்பைப் பேணுபவனாகவும், அவர்களின் கோட்பாடுகளை கண்ணை மூடிக் கொண்டு சரி காணுபவனாகவும் மாறியதோடு, கலீஃபாவையும் கவர்னர் முஆவியா, அம்று பின் மற்றைய முஸ்லிம்கள் அனைவரையும் காஃபிர்கள், நரகவாதிகள் என்ற நிலைப்பாட்டிலும் பார்க்கின்ற தலைக்கடித்த போக்கை கடைப்பிடித்ததன் காரணமாகவே கலீஃபா அலியைக் கொலை செய்யத் துணிந்தான்.

கலீஃபாவின் படைகளோடு போரிடவும் முஸ்லிம்களைக் கொல்லவும்  முன் நின்றான் .

இப்னுல் முல்ஜிமின் ஆதாரம் என்ன?

நபித்தோழர்களின் இரதத்தை ஓட்டுவதை ஆகுமாக்கியவன் காஃபிர் என்ற நிலையில் அறிஞர்களால் பார்க்கப்படுகின்ற வழிகேடன் இப்னுல் முல்ஜிமிடம்.
وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَاد《البقرة : ٢٠٧》
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறனர்.  அல்லாஹ் (இத்தகைய ) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.( அல்பகரா:207) என்ற  குர்ஆன் வசனம் ஆதாரமாக இருந்ததைப் போலவே
சமூக வலைத் தளங்களில் முஸ்லிம் பெண்களின் ஆடை ஒழுங்குகள், நவீனத்துவம், போட்டி, ஓட்டம், ஆடை அலங்காரம் பற்றிப் பேசுகின்ற ஜஹ்ம் பின் ஸஃப்வான்கள், மற்றும் ஸஹீஹான ஹதீஸ் மறுப்பு குழுக்கள், மன்ஹஜ் ஸஹீஹ் பற்றிய கண்மூடித்தனமான விமர்சகர்கள் போன்ற முத்தல் கேஸ்களுக்கும் சமூகத்தை படுகுழியில் தள்ளும் ஆதாரங்கள் இருக்கின்றன. 

அந்த கொடிய கொலைகாரனைக் கூட புகழ்ந்து பின்வருமாறு கவிபாடினானாம் ஒருவன்:
கவாரிஜிய பெண்ணை திருத்திடும் நோக்கோடு திருமணம்  செய்து, அவளது பகுத்தறிவு வாதங்களை முறியடிக்க வக்கற்ற ஹதீஸ் அறிவிப்பாளராக இருந்து பின் கவாரிஜியாக மாறிய இம்ரான் பின் ஹத்தான் என்பவன். 

يَا ضَرْبَةً مِنْ تَقِيَ مَــــــا أَرَادَ بِهَا
إلاَّ لِيَبْلُغَ مِنْ ذِي العَرْشِ رِضْوَانا
இறையச்சத்தில் உயர்ந்த அவனது தாக்குதல் அர்ஷின் இரட்சகனிடம் பொருத்தம் வேண்டியே தவிர மேற்கொள்ளப்படவில்லை.
 
إنِّي لأَذْكُــــرُهُ يَــــوْماً فَأَحْسَــــبُهُ"
أَوْفَى البَرِيَّةِ عِنْــــدَ الله مِــــيزَانا

அல்லாஹ்விடம் அவனுக்கு நன்மதிப்பை நாடி நான் அவனை அனுதினமும் நினைவு கூர்வேன்.

தமது மார்க்கத்தில் வீண் விளையாட்டைக் கலக்காத இவர்கள் தங்கி வாழும் பறவைகளின் வயிறுகளான அவர்களின் மண்ணறைகளை சங்கைப்படுத்திடு."

அது போலவே இந்த மிம்பர் மேடைகளில் முழங்கும் முல்ஜிம்களும் குத்பா, பயான் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் சமூகத்தை சீரழிக்கின்றனர்.

இப்னுல் முல்ஜிம் பற்றிய குறிப்பில் :
هذا الرجل الزاهد العابد الورع محـفـظ القران وحافظه
இவன் ஒரு துறவி, வணக்கசாலி, பேணுதல் மிக்க வாழ்வு வாழ்ந்தவன், அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் ஆசான், அதனை மனனம் செய்த ஹாஃபிழ் எனப் புகழ்ந்து வர்ணித்திருப்பதைப் பார்க்கின்ற போது 
அல்ஹாஃபிழ், அஷ்ஷைக் விளம்பரம் போட்டு ஆக்ரோஷமாகவும் அடுத்தவர்களை தரம் தாழ்த்தியும்
மதனி, மக்கி, ரியாதி, ஸலஃபி எனத்திட்டியும், உண்மைக்குப் புறம்பாக விமர்சித்தும் பயான் செய்கின்ற சில மௌலவிகள் இப்னுல் முல்ஜிமின் வழியில் பயணிக்கின்றவர்களா? என பள்ளிவாசல் நிர்வாகங்கள் இனம் காணத் தவறும் பட்சத்தில் ஒரு காலத்தில் இஜ்திஹாத் சார்ந்த விசயமாக உள்ள பிறை மூலம் தவ்ஹீத் சமூகத்தை கூறுபோட்டு வழிகேட்டு ஃபத்வாவும் தந்தது போல தவ்ஹீத் பள்ளிகளைக் இஜ்திஹாத் சார்ந்த விசயத்தில் கூறுபோடுவார்கள்.

இதனால்  நாம் பெற வேண்டிய பாடங்கள் என்ன?

(1) நபித்தோழர்களிடம் குர்ஆனைக் கற்ற ஒருவனின் இறுதி முடிவு  இவ்வாறு செல்லக் காரணம் மார்க்கத்தை துறைபோகக் கற்காதோரிடம் சகவாசம் வைதத்ததும், தலைகீழான அவர்களின் மார்க்க விளக்கத்தை சரி கண்டதும். 

(2) இந்த சமுதாயத்தில் அல்குர்ஆனை மேலோட்டமாக ஓதும் ஒரு கூட்டம் வெளிப்பட்டு இந்த சமூகம் சிந்தனா ரீதியாக நாசம் செய்யப்படுகின்ற போது (ஸலஃப்) ஆரம்ப கால அறிஞர்களின் தீர்க்கமான வழிக் கல்வியே ஈடேற்றத்திற்கான சிறந்த வழி என்பதை கவாரிஜியக் குழுக்களோடு இப்னு அப்பாஸ் ரழி போன்ற பெரிய அறிஞர்கள் நடத்திய விவாதமும் ஒன்றாகும்.

(3) மார்க்கத்தில் தலைக்கடித்த குழுக்கள் தோன்றி வில்லில் இருந்து அம்பு வெளியேறுவதைப் போல மீண்டும் அதில் இருந்து வெளியேறுவர் என கவாரிஜ்கள் பற்றிச் சொன்ன ஹதீஸ்களையும் அவர்களின் வாதங்களையும் இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நான் உட்பட குர்ஆனைப் போதிப்போராக தம்மை அடையாளப்படுத்திய அழைப்பாளர்கள் தொடராக மீள் வாசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

(4) கவாரிஜ்கள் பற்றிய விளக்கத்தை சிந்தித்தால் சிறு குழுவினர் தற்காலத்தில் குர்ஆன், ஹதீஸ் பேசுகின்ற சமூகத்திலும் காணப்படுகின்ற துர்பாக்கிய நிலையை மறுக்க முடியாது. 

வணக்கம், குர்ஆன் படித்தல், பேணுதல் போன்ற ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபாடுடையவராக இருப்பவர் புனிதமிகு குர்ஆனை நபித்தோழர்கள், பெரிய பெரிய இமாம்கள் வழியில் விளங்காதவராக, பித்ஆ முஃபஸ்ஸிகா, முகஃப்பிரா போன்ற வேறுபாடுகளை விளங்காதவராக இருப்பின் தனது வழிமாத்திரமே சுவனத்து வழி. மற்ற முஸ்லிம்கள் பிழையான, வழிகேடான வழியில் பயணிப்போரே என முடிவு செய்வதில் இப்னுல் முல்ஜிம் ஒரு முன்னுதாரணமாகும்.

மற்றொரு திசையில்  இஸ்லாமிய நவீனத்துவம் என்ற பெயரில் ரோஷம், சூடு, சொரனை அற்ற  நாத்திக சிந்தனையை முற்படுத்தி சீரழிந்த சமூகத்தை தோற்றுவிக்கும் துர்பாக்கிய நிலையும் தொடரும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. 

والله تعالى أعلم .
எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி 
أحدث أقدم