நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை

நபிகள் நாயகம் ﷺ  அவர்களின் தன்மைகள்:

அவர்களின் வம்சம்:

முஹம்மத் > அப்துல்லாஹ் (தந்தை) > அப்துல் முத்தலிப் (பாட்டன்) > ஹாஷிம் (பூட்டன்) > அப்து மனாஃப் (முப்பாட்டன்) > குசை > கிலாப் > முர்ரஹ் > கஃ'ப் > லுஐ > காலிப் > ஃபிஹ்ர் > மாலிக் > நழ்ர் > கினானஹ் > குஸைமஹ் > முத்ரிகஹ் > இல்யாஸ் > முழர் > நிஸார் > மஅத் > அத்னான்.

அத்னான் என்பவர் அல்லாஹ்வின் உற்ற நட்பைப் பெற்றவரான இப்றாஹீம் நபியின் அறுத்துப் பலியிடுமாறு ஏவப்பட்ட மகனான இஸ்மாஈல் நபியின் பரம்பரையில் வந்தவராவார்.

நபி ﷺ அவர்களே பூமியில் வாழ்ந்தவர்களில் வம்சத்தால் மிகச் சிறந்தவராவார்கள்.

ரோம சாம்ராஜ்யத்தின் மன்னரான ஹெர்குலிஸ் குறைஷிகளின் தலைவர் அபூ ஸுஃப்யானிடம் நபிகளார் ﷺ அவர்களைப் பற்றிய பல விடயங்களை விசாரித்துவிட்டு பின்வருமாறு கூறினார்:
'அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத்தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள்...'.
(புகாரி 7)

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:

நபி ﷺ கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இஸ்மாஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பரம்பரையிலிருந்து கினானஹ்வை தேர்ந்தெடுத்தான். கினானஹ்வின் பரம்பரையிலிருந்து குறைஷை தேர்ந்தெடுத்தான். குறைஷின் பரம்பரையிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தினரை தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம்களிலிருந்து என்னை தேர்ந்தெடுத்தான். (முஸ்லிம் 2276)

 நபிகளார் ﷺ அவர்களின் பெயர்கள்:

இப்பெயர்கள் அனைத்தும் ஆளை அடையாளப்படுத்தும் வெறும் அடையாளங்கள்  மாத்திரமன்று; பண்புகளைக் குறிக்கும் அர்த்தமுள்ள வர்ணனைகளுமாகும். இவை நபி ﷺ அவர்களாரில் காணப்படும் புகழையும் பூரணத்துவத்தையும் கட்டாயப்படுத்தும் பண்புகளில் இருந்து பெறப்பட்ட பெயர்களாகும். அவை:

1. முஹம்மத்: இதுவே அவர்களின் பெயர்களில் மிகப் பிரபலமானதாகும்.   அவர்களுக்கு தவ்ராத் வேதத்தில் தெளிவாக இப்பெயரே சூட்டப்பட்டுள்ளது. இதன் அர்த்தம்: புகழுக்குரிய பல பண்புகளை தன்னகத்தே கொண்டவர்.

2. அஹ்மத்: அதாவது படைப்புகளில் அல்லாஹ்வை மிக அதிகமாக புகழ்கின்றவர். மோலும், அவர்களிடம் நிறைந்திருக்கும் பண்புகளுக்காக வானம், பூமிகளிலுள்ளவர்களினதும் இம்மை மறுமையிலுள்ளவர்களினதும் புகழைப் பெற்றவர்கள். அவர்களை இப்பெயர் மூலமே  ஈஸா அலைஹிஸ் ஸலாம்  குறிப்பிட்டுள்ளார்கள்.

3. அல்முதவக்கில் (தவக்குல் வைப்பவர்): அவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டதற்கான காரணம்: மார்க்கத்தை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து - பாரம் சுமத்தி இணையற்ற தவக்குளை மேற்கொண்டார்கள்.

4. அல்மாஹீ (நீக்குபவர்/ஓழிப்பவர்): அல்லாஹ் அவர்கள் மூலம் குஃப்ரை - இறைநிராகரிப்பை நீக்குகிறான். அவர்களைக் கொண்டு குஃப்ர் ஒழிக்கப்பட்டது போன்று வேறு எவரைக் கொண்டும் ஒழிக்கப்படவில்லை.

5. அல்ஹாஷிர் (ஒன்றுதிரட்டுபவர்): அவர்களுக்கு பின்னால் மனிதர்கள் மறுமையில் ஒன்றுதிரட்டப்படுவர். ஆகையால், அவர்கள் மனிதர்களை ஒன்று திரட்டுவதற்காக எழுப்பப்பட்டவர் போன்று இருக்கிறார்கள்.

6. அல்ஆகிப் (பிறகு வந்தவர் / இறுதியானவர்): அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் இல்லை. இப்பெயர் (خ)காதம் என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.

7. அல்முகஃப்ஃபீ (தனக்கு முன்வந்தவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிவந்தவர். அல்லாஹ் அவர்களை அவர்களுக்கு முன்வந்த தூதர்களுக்குப் பின்னால் அனுப்பிவைத்தான்.

8. நபிய்யுத் தவ்பஹ்: அல்லாஹ் அவர்கள் மூலம் பூமியிலுள்ளவர்களுக்கு தவ்பஹ் - பாவமன்னிப்பின் வாயிலைத் திறந்து கொடுத்தான். அவர்களுக்கு முன் என்றுமே இல்லாதளவுக்கு பூமியிலுள்ளவர்களுக்கு மன்னிப்பை வழங்கினான். மேலும், அவர்களும் மனிதர்களிலே மிகவும் இஸ்திஃபார், தவ்பஹ் செய்பவர்களாக இருந்தார்கள்.

9. நபிய்யுல் மல்ஹமஹ்: (மல்ஹமஹ் - கடுமையான போராட்டம்.)
அல்லாஹ்வின் எதிரிகளுடன் போராடுவதற்காக அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களும் அவர்களின் உம்மத்தும் போராடிய அளவுக்கு எந்த ஒரு நபியும் அவரது உம்மத்தும் ஒருபோதும் போராடவில்லை. அவர்களது காலத்தில் நடைபெற்ற பாரிய யுத்தங்கள் போன்று அவர்களுக்கு முன்னர் நடைபெற்றதாக அறியப்படவில்லை.

10. நபிய்யுர் றஹ்மஹ் (அருட்கொடை நபி): அல்லாஹ் அவர்களை உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பிவைத்தான். அவர்கள் மூலம் பூமியில் வாழும் அனைவருக்கும் அருள் புரிந்தான். முஃமின்கள் இவ்வருட்கொடையில் இருந்து பெரும் பங்கைப் பெற்றுக்கொண்டனர். நிராகரிப்பாளர்களும் கூட  அதிலும் குறிப்பாக வேதக்காரர்கள் அவர்களின் காலத்தில் அவர்களது ஆதரவில் வாழ்ந்தார்கள்.

11. அல்ஃபாதிஹ் (திறக்கக்கூடியவர் / வெற்றியாளர்):  மூடப்பட்டிருந்த நேர்வழியின் கதவை அல்லாஹ் அவர்களைக் கொண்டு  திறந்துவிட்டான். அவர்களைக் கொண்டு அல்லாஹ் குருடான கண்களையும் செவிடான காதுகளையும் திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறந்துகொடுத்தான். நிராகரிப்பாளர்களின் நகரங்களையும் சுவனத்தின் வாயில்களையும் பயனுள்ள கல்வி மற்றும் நற் செயலுக்கான  வழிகளையும் அல்லாஹ் அவர்கள் மூலமாக திறந்துவிட்டான்.

12. அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர்):  உலகத்தாரில் இப்பெயரிற்கு மிகவும் தகுதியானவர் அவர்களே. அவர்கள் அல்லாஹ்வின் 'வஹ்ய்' மற்றும் மார்க்க விடயத்தில்  அவனிடத்தில் நம்பிக்கைக்குரியவர். வானத்திலுள்ளவர்களிடத்திலும் பூமியிலுள்ளவர்களிடத்திலும் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள். அதைவிட மேலாக அவர்கள் தூதராக அனுப்பபடுவதற்கு முன்னர் அவர்களை குறைஷிக் காஃபிர்களே  'அல்அமீன்' என்று பெயர் சூட்டினர்.

13. அல் பஷீர் (நன்மாராயம் கூறுபவர்): தனக்கு வழிப்பட்டவர்களுக்கு நற்கூலி இருக்கிறது என்று நன்மாராயம் கூறினார்கள். தனக்கு மாறுசெய்தவர்களுக்கு தண்டனை இருக்கிறது என்று அச்சமூட்டி எச்சரித்தார்கள்.

14. ஸய்யிது வலதி ஆதம் (ஆதாமின் மக்களின் தலைவர்): நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நான் மறுமை நாளில் ஆதமின் பிள்ளைகளின் தலைவனாவேன். இதில் எந்தப் பெருமையும் இல்லை. (பார்க்க: முஸ்லிம்: 2278, திர்மிதி 3615)

15. அஸ்ஸீராஜுல் முனீர் (ஒளிவிளக்கு): முனீர் என்ற சொல்லில் சுட்டெரிக்காத ஒளியைக் கொடுக்கக்கூடியது என்ற அர்த்தமுள்ளது. முனீர் என்ற இச்சொல் 'வஹ்ஹாஜ்' என்ற சொல்லிற்கு மாற்றமானது. ஏனெனில் வஹ்ஹாஜ் என்றால் அதில் ஒரு வகை எரித்திடும் தன்மையும் காணப்படும்.

16. அவர்கள் அல்லாஹ்வின் அடிமை - அப்துல்லாஹ். தனித்துவமானவர்களிலும் தனித்துவமானவர்களிடம் காணப்படும் அடிமைத்துவம் அவர்களிடம் காணப்பட்டது. ஏனெனில் அவர்கள் அடிமைத்தனத்தின் அனைத்து படித்தரங்களை பூரணப்படுத்தியுள்ளார்கள்.


நபி ﷺ அவர்களின் மொத்தப் பண்புகளின் சுருக்கம்:

நபி ﷺ  அவர்கள் தன்னைப் பற்றி வர்ணனை செய்திருப்பதே அவர்களின் பண்புகளைப் பற்றிய பரிபூரணமான ஒரு வர்ணனையாக விளங்குகின்றது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நான் முஹம்மத் அல்லாஹ்வின் அடியானும் அவனது தூதருமாவேன். அல்லாஹ் எந்த இடத்தில் என்னை வைத்திருக்கின்றானோ அந்த இடத்திற்கு மேலால் நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்புவதில்லை. أحمد 12551، والنسائي في الكبرى 10077

நபி ﷺ அவர்கள் மனிதர்களிலேயே உடலமைப்பிலும் பண்பாட்டிலும் மிக அழகானவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் கூறுகிறான்: {(நபியே) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்.} [அல்கலம்:4]

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்: நபி ﷺ அவர்களது குணம் அல்குர்ஆனாக இருந்தது.  أحمد 25813

அதாவது அதனை கொண்டு செயல்படுவார்கள். அதன் எல்லைகளோடு நின்று விடுவார்கள். அது பொருந்துவதைப் பொருந்திக் கொள்வார்கள். அது வெறுப்பதை வெறுப்பார்கள்.

நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வின் (خ)கலீலாக - உற்ற நண்பனாக விளங்கினார்கள். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உற்ற நண்பனாக எடுத்துக்கொண்டதைப் போன்று என்னையும் உற்ற நண்பனாக எடுத்துக்கொண்டான்).  مسلم 532


நபி ﷺ அவர்களின் உடற்பண்புகள்:

நபி ﷺ அவர்களது கண்ணியமிக்க உடம்பு:

அனஸ் (றழியல்லாஹ் அன்ஹு) அவர்கள் கூறியதாவது: 
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சிவப்பு கலந்த வெண்மை நிறத்தை கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் வியர்வைத் துளிகள் முத்துக்களைப் போன்று (தெளிவாக) இருந்தன. அவர்கள் நடந்தால் (பள்ளத்தில் இறங்குவதைப் போன்று முன்பக்கம்) சாய்ந்து நடப்பார்கள் (அதாவது சற்று விரைவாக நடப்பார்கள்). அவர்களது உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரண பட்டையோ நான் தொட்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களது (உடல்) வாசனையைவிட சுகந்தமான கஸ்தூரியையோ "அம்பரை"யோ நான் நுகர்ந்ததேயில்லை. مسلم 2330

 நபி ﷺ  அவர்களின் உயரம்:

பறாஃ இப்னு ஆஸிப் (றழியல்லாஹு அன்ஹுமா) கூறினார்கள்: 
நபி ﷺ அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அவர்களை விட அழகான எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. البخاري 3551 

நபி ﷺ  அவர்களின் முகம்:

கஅப் இப்னு மாலிக் (றழியல்லாஹ் அன்ஹு) கூறினார்கள்: 'நான் அல்லாஹ்வின் தூதருக்கு ஸலாம் சொன்ன போது. அவர்களின் முகம் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் ﷺ மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டைப் போல் பிரகாசமாகிவிடும். அதனை (அதாவது மகிழ்ச்சியில் அவர்களின் முகம் ஒளிர்வதை) நாம் அறிந்து வைத்திருந்தோம்'. البخاري 3556 

'நபி ﷺ அவர்களின் முகம் (பிரகாசத்தில்) வாளைப் போன்று இருந்ததா என்று?' பராஃ இப்னு ஆஸிப் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் 'இல்லை, அதைவிட (பிரகாசமாக) சந்திரனைப் போல  இருந்தது' என்றார்கள். البخاري 3552

நபி ﷺ  அவர்களின் முடி:

அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:  
நபி ﷺ அவர்கள் பருத்த கைகள் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களைப் போன்று (வேறு யாரையும்) நான் பார்க்கவில்லை. நபி ﷺ அவர்களின் (தலை) முடி சுருண்டதாகவோ முற்றிலும் நீண்டதாகவோ இருக்கவில்லை; அவ்விரண்டிற்கும் இடையில் இருந்தது.
البخاري 5906

நபி ﷺ  அவர்களின் கண்கள்:
 
"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் விசாலமான வாயும் விழி வெண்படலத்தில் சிறிதளவு சிவப்பு கலந்த கண்களும் சதை குறைவான குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள்" என்று ஜாபிர் இப்னு ஸமுறஹ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள். مسلم 2339

 நபி ﷺ  அவர்களின் வியர்வை:

அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: 
நபி ﷺ அவர்கள், எங்களது வீட்டுக்கு வந்து மதிய ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்களது உடலில் வியர்வை ஏற்பட்டது. என் தாயார் (உம்மு ஸுலைம் -றழியல்லாஹு அன்ஹா-) அவர்கள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வந்து வியர்வையை அந்தக் குடுவையில் சேகரிக்கலானார்கள். நபி ﷺ அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "உம்மு ஸுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள். என் தாயார், "இது தங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருளில் சேர்க்கிறோம். இது வாசனைப் பொருட்களில் அதிக மனம் கமழக் கூடியவையில் ஒன்றாகும்" என்று சொன்னார்கள். مسلم 2331

நபி ﷺ  அவர்களின் நபித்துவ முத்திரை:

அவர்களது இரண்டு தோள்பட்டைகளுக்கும் மத்தியில் நபித்துவ முத்திரை காணப்பட்டது. அது அவர்களின் உடம்பில் மச்சத்தை போன்று வெளிப்படையாக இருந்தது.
 
ஜாபிர் இப்னு ஸமுறஹ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்: "நபி ﷺ அவர்களது முதுகில் தோள்பட்டையின் அருகில் நபித்துவ முத்திரையை நான் கண்டேன். அது (அளவில்) புறா முட்டையைப் போன்று (நிறத்தில்) அவர்களது உடலை ஒத்திருந்தது". مسلم 2344


நபி ﷺ அவர்களின் நற்பண்புகள்:

நபி ﷺ அவர்களது தோழர்கள் அவர்களுக்கு அளித்த கண்ணியம்:

அம்ர் இப்னுல் ஆஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை.مسلم 121

உர்வஹ் இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (றழியல்லாஹு அன்ஹு) இஸ்லாத்தை ஏற்க முன் குறைஷிகளின் சார்பாக ஹுதைபியஹ் உடன்படிக்கைக்கு வந்துசென்று குறைஷிகளிடம் கூறினார்: 
'என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்துக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் வுளூச் செய்தால் அவர் வுளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தங்களின் குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். அவரை கண்ணியப்படுத்தும் நோக்கத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை. البخاري 2732


அல்லாஹ்வுடன் நபி ﷺ அவர்கள் பேணிய ஒழுக்கம்:

அப்துல்லாஹ் இப்னு ஷிக்கீர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: நாம் நபி ﷺ அவர்களை நோக்கி நீங்கள் எங்கள் தலைவர் என்று கூறினோம். அதற்கவர்கள், (யதார்த்தத்தில்) தலைவன் அல்லாஹ் -தபாரக வதஆலா- தான் என்று கூறினார்கள். நீங்கள் (அந்தஸ்தில்) எங்களில் மிகச் சிறந்தவர், மேலும் கொடையில் எங்களில் மிக மகத்தானவர் என்று கூறினோம். அதற்கவர்கள் உங்களின் வார்த்தையை கூறிக் கொள்ளுங்கள் அல்லது அவற்றில் சிலதை கூறிக் கொள்ளுங்கள். ஷைத்தான் உங்களை (அளவுகடப்பதின் பக்கம்) ஓட்டிச் சென்று விடக்கூடாது. أبو داود 4816

நபி ﷺ அவர்களின் வீரம்:

பராஉ இப்னு ஆஸிப் (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! போர் (உச்சகட்டமடைந்து) சிவந்து (கனன்று) கொண்டிருந்த போது நபியவர்களையே கேடயமாக்கி நாங்கள் தப்பித்துக்கொண்டிருந்தோம். எங்களில் வீரர்கள்கூட நபியவர்களுக்கு நேராக (அவர்களுக்குப் பின்னாலேயே) நின்று கொண்டிருந்தனர். مسلم 1776

நபி ﷺ அவர்களின் இறையச்சம்:

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். البخاري  5063

 நபி ﷺ தம் குடும்பத்தோடு நல்ல முறையில் நடந்து கொண்டமை:

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் தன் குடும்பத்திடம் சிறந்தவரே நானும் என் குடும்பத்திடம் சிறந்தவனாக இருக்கின்றேன். الترمذي 3895

நபி ﷺ அவர்களின் வெட்கம் - நாணம்:

அபூ ஸயீத் அல் குத்ரீ (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: நபி ﷺ அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்துவிட்டால், அந்த வெறுப்பினை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துவிடுவோம். البخاري 6102

நபி ﷺ அவர்களின் எதையும் இலகுபடுத்தும் தன்மை:

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்: (பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி ﷺ அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து மனிதர்களில் வெகு தொலைவில் (விலகி) நிற்பவராக அவர்களே இருப்பார்கள். البخاري 3560

நபி ﷺ தமக்காக பழிவாங்கமாட்டார்கள்:

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! தனக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென என்று எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாக தண்டிக்க வேண்டுமென்று இருந்தால் தவிர.  البخاري 6786

நபி ﷺ உணவை குறை கூறமாட்டார்கள்:

அபூ ஹுறைறஹ் (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: 
நபி ﷺ அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள். البخاري 5409

நபி ﷺ அன்பளிப்பை (ஹதீய்யஹ்வை) ஏற்றுக் கொள்வார்கள்:

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:  அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்வார்கள். البخاري 2585

நபி ﷺ தர்மாக வழங்கப்படும் (ஸதகஹ் / ஸகாத்) பொருளை உண்ணமாட்டார்கள்:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் குடும்பத்தினர் தர்மமாக வழங்கப்படும் (ஸதகஹ் / ஸகாத்) பொருளை உண்ணமாட்டார்கள். البخاري 1485

 நபி ﷺ அவர்களின் பணிவு:

அபூ மஸ்வூத் அல்பத்ரி (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: நபி ﷺ அவர்களிடம் ஒரு மனிதர் வந்து பேச முற்பட்டார். (அச்சத்தால்) அவரது நெஞ்சு நடுங்கத் தொடங்கியது. அப்போது அவருக்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: *(என் விடயத்தில்) உன் மீது இலகுவாக நடந்து கொள்வீராக (எனக்கு நீர் பயப்படத் தேவையில்லை). ஏனெனில் நான் அரசன் இல்லை; நானோ (வெயிலில்) உலர்த்திய இறைச்சியை உண்ணும் ஒரு பெண்ணின் மகன் தான்.*
[ابن ماجه 3312 وصححه الألباني]
[இமாம் அல்பானி இதனை ஆதாரபூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்.]

நபி ﷺ தமது குடும்பத்திற்கு வீட்டுப் பணிகளில் ஒத்துழைப்பார்கள்:

அஸ்வத் இப்னு யஸீத் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்: நபி ﷺ அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள்? என ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்' என ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) கூறினார்கள். 
صحيح البخاري 676

நபி ﷺ அவர்கள் அறிவீனர்களை பொருட்படுத்தவில்லை:

(குறைஷி நிராகரிப்பாளர்கள் நபிகளார் ﷺ அவர்களை திட்டும்போது 'முஹம்மத்' -புகழப்படுபவர்- என்ற பெயருக்கு பதிலாக 'முதம்மம்' -இகழப்படுவர்- என்று கூறுவர், அதனால்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: குறைஷிகளின் திட்டுதலையும், அவர்களின் சபித்தலையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படி திருப்பி விடுகிறான் என்பதையிட்டு நீங்கள் ஆச்சரியப்படவில்லையா?  அவர்கள் 'முதம்மமை' (ஒரு இகழப்படுவரை) ஏசுகிறார்கள்; சபிக்கிறார்கள். ஆனால் நானோ 'முஹம்மத்' ஆவேன். 
[البخاري 3533]

நபி ﷺ அவர்களின் உண்மைத் தன்மை:

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: ...
[البخاري 3208]

நபி ﷺ தமது பணியாளருடன் பேணிய நற்குணம்:

அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:  
நான் நபி ﷺ அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் ஊரிலும் பிரயாணத்திலும் பணிவிடை செய்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக (மனம் வேதனைப்படும்படி) என்னை 'ச்சீ' என்றோ, நான் செய்த எதைப் பற்றியும் 'இதை ஏன் நீ இப்படிச் செய்தாய்?' என்றோ, நான் செய்யாத எதைப் பற்றியும் 'இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை?' என்றோ நபியவர்கள் என்னிடம் சொன்னதில்லை.
[البخاري 6038، 6911، مسلم 2309]

நபி ﷺ தமது தோழர்களிடமிருந்து தம்மை வித்தியாசமாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. தாராள, பரந்த மனப்பான்மையுடையவர்களாக இருந்தார்கள்

அனஸ் இப்னு மாலிக் (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: நபி ﷺ அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியினுள்ளே ஒட்டகத்தைப் படுக்கவைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் 'உங்களில் முஹம்மத் யார்?' என்று கேட்டார். நபி ﷺ அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத்  ﷺ) என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி ﷺ அவர்களை 'அப்துல் முத்தலிபின் மகனே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'ஆம்' என்று கூறினார்கள். அப்போது அம்மனிதர் நபி ﷺ அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கப் போகிறேன். கேள்வி கேட்பதில் கடினமாக நடந்து கொள்வேன். அதற்காக நீங்கள் என் மீது வருத்தப்படக் கூடாது' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உம்முடையதும் உமக்கு முன்னிருந்தோரதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர், 'அல்லாஹ் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதியுள்ளவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி ﷺ அவர்கள் 'ஆம் அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். உடனே அம்மனிதர் 'நீங்கள் (அல்லாஹ்விடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் 'ளிமாம் இப்னு ஸஃலபஹ்', அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சேர்ந்தவன்' என்றும் கூறினார்'. 
[البخاري 63]

நபி ﷺ அவர்களின் ரொட்டி:

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மரணிக்கும் வரை  அவர்களின் குடும்பத்தார் தொடர்ந்து இரண்டு நாட்கள் வாற்கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை. 
[البخاري 5374]

நபி ﷺ அவர்களின் உலகப் பற்றற்ற தன்மை:
 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: இந்த உஹுத் மலை போல் எனக்கு தங்கம் கிடைத்து, மூன்றாவது இரவு வரும்போது அதிலிருந்து  ஒரேயொரு பொற்காசு கூட என்னிடம் (எஞ்சி) இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. (வாங்கிய) கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்துவைக்கும் சிலதை தவிர! மேலும் அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவு செய்யுமாறு நான் சொல்லிக்கொண்டு இருந்தாலே தவிர. [البخاري 6444]

நபி ﷺ அவர்கள் திட்டமாட்டார்கள்:

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்: நபி ﷺ அவர்கள் இயல்பில் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. கடைவீதிகளில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பவராகவும் இருக்கவில்லை. கெடுதிக்கு கெடுதியைப் பிரதியாக செய்யமாட்டார்கள். ஆனாலும் (மனதால்) மன்னிப்பவராகவும் (தனக்குக் குற்றமிழைத்தவரின் குற்றத்தை வெளிப்படையில்)  பொருட்படுத்தாதவராகவும் இருந்தார்கள். 
[الترمذي 2016، وصححه الألباني]
[இமாம் அல்பானி இதனை ஆதாரபூர்வமானது என உறுதிப்படுத்தியுள்ளார்.]

நபி ﷺ அவர்கள் எந்த அன்னியப் பெண்ணுடையவும் கையையும் கூடத் தொட்டதில்லை:

அல்லாஹ்வின் மீது ஆணையாக. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் கை  (மஹ்ரமில்லாத) எந்தப் பெண்ணின் கையையும் ஒரு போதும் தொட்டதில்லை.
[البخاري 5288، مسلم 1866]

நபி ﷺ அவர்களின் எளிமையான வாழ்க்கையும் வாழ்விடமும்:

உமர் (றஹிமஹுமல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்ததும் அவர்கள் தமது வேஷ்டியை தம் மீது நீட்டி (ஒழுங்குபடுத்தி)ப்போட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களது கருவூல அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு "ஸாஉ" அளவு வாற்கோதுமையும், அறையின்  ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. 
(இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது கருவூல அறை; இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது கருவூல அறை இவ்வாறு இருக்கிறதே!" என்றேன். 
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அவர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (திருப்திதான்)" என்றேன்.
[مسلم 1479]


நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வழிமுறைகள்:

உடை, உணவு, பானம் ஆகியவற்றில் நபி ﷺ அவர்களின் வழிமுறை:

நபி ﷺ அவர்களுக்கு விருப்பமான நிறம்:

அவர்களுக்கு விருப்பமான நிறம் வெள்ளை நிறமாகும். நபி ﷺ  அவர்கள் கூறினார்கள்: *உங்கள் ஆடைகளில் வெண்மையானவற்றை அணிந்து கொள்ளுங்கள். அவையே உங்கள் ஆடைகளில் மிகச் சிறந்தவையில் உள்ளவையாகும். அவையாலே உங்களில் மரணித்தவர்களை கஃபன் செய்யுங்கள்.*
[أبو داود 3878، الترمذي 994. صححه الألباني]
[அல்பானி மற்றும் பல ஹதீஸ் துறை அறிஞர்களும் இதனை ஆதாரபூர்வமானது என உறுதி செய்துள்ளனர்.]

நபி ﷺ அவர்களின் ஆடை:

கம்பளி, பருத்தி, லினன் ஆகிய ஆடைவகைகளில் தமக்கு வசதிப்பட்டதை அணிந்து கொள்வார்கள். தமது ஆடையை அணிகின்ற போது வலது பக்கத்தால் ஆரம்பிப்பவர்களாக இருந்தார்கள்.

நபி ﷺ அவர்கள் உடையில் நடுநிலைமை பேணினார்கள்:

ஸலபு ஸாலிஹீன்களில் ஒரு அறிஞர் கூறுகின்றார்: முன் சென்றவர்கள் ஆடைகளில் மிக உயர்ந்த மற்றும் மிகத் தாழ்ந்த இரு தரங்களை கொண்ட பிரபல்யத்தை ஏற்படுத்தும் ஆடைகளை  விரும்பாதவர்களாக இருந்தார்கள். இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: *யார் இவ்வுலகில் பிரபல்யத்தை ஏற்படுத்தும் ஆடை அணிகின்றாரோ எழுப்பப்படும் (மறுமை) நாளில் அவருக்கு அல்லாஹ் இழிவை ஏற்படுத்தும் ஆடையை  அணிவிப்பான். பின்னர் அதில் நெருப்புப் பற்றும்.*
[أبو داود 4029، 4030، ابن ماجه 3606، أحمد 5664. حسنه الألباني والأرناؤوط]
[அல்பானி, அர்ணாஊத் ஆகியோர் இதனை ஹஸன் தரத்திலுள்ள ஆதாரபூர்வமான ஹதீஸ் என உறுதிப்படுத்தியுள்ளனர்.]

அவன் அதன் மூலம் பெருமையை விரும்பியதால் அல்லாஹ் அவனைத் தண்டிக்கிறான்.
நபி ﷺ அவர்கள் கூறியதாக இன்னொரு  ஹதீஸில் இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்தார்கள்: *எவன் பெருமைக்காக தன்னுடைய ஆடையை (நிலத்தில்) இழுத்துச் செல்கிறானோ எழுப்பப்படும் (மறுமை) நாளில் அல்லாஹ் அவனை பார்க்கமாட்டான்.* 
[البخاري 3665]

நபிகள் நாயகம் ﷺ அவர்களின் உணவு:

இருப்பதை மறுக்கமாட்டார்கள். இல்லாததை சிரமப்பட்டு தேடமாட்டார்கள். அவர்களுக்காக கொடுக்கப்படும் சுத்தமான நல்ல எந்த உணவையும் சாப்பிடுவார்கள். ஆனாலும் அவர்களது மனம் விரும்பாவிட்டால் ஹராம் ஆக்காமல் விட்டுவிடுவார்கள். ஆஇஷஹ் (றலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்: *நபி ﷺ அவர்கள் எந்த ஒரு உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் விரும்பினால் சாப்பிடுவார்கள்; இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.* 
[البخاري 3563]

உதாரணமாக தமக்கு பழக்கம் இல்லாததன் காரணமாக 'ளப்' (ضبّ) (எனும் உடும்பின் அமைப்புக்கு நெருக்கமான ஒரு தாவர உண்ணியை) சாப்பிடவில்லை. 

[குறிப்பு: இது  உடும்பு அல்ல; இது ஒரு தாவர உண்ணி, மிக மிக அரிதாகவே நீர் அருந்தும், இதன் முகமும் உடும்பின் முகத்தை விட சற்று வித்தியாசமாக இருக்கும். உடும்பு ஒரு ஊனுண்ணியாகும். மேலும், எமது நாட்டிலுள்ள உடும்பு நஜிஸ்களையும் அருவருப்பான சிறிய உயிரினங்களை சாப்பிடுகிறது; நீருக்கும் செல்கிறது.]

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உணவு உண்ணும் முறை:

அ. அவர்களின் பெரும்பாலான உணவு பூமியில் (ஸுஃப்றஹ்) விரிப்பில் வைக்கப்படும்.

ஆ. தமது மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள்.

இ. சாய்ந்தபடி சாப்பிடமாட்டார்கள்.

ஈ. உணவு உண்ண ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிடுவார்கள். உண்டு முடித்த பிறகு அல்லாஹ்வைப் புகழ்வார்கள்.

உ. உண்டு முடித்த பிறகு தமது விரல்களை நக்கிக்கொள்வார்கள்.


நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பானங்கள் அருந்தும் முறை:

அ. அவர்கள் பெரும்பாலும் உட்கார்ந்து கொண்டே குடிப்பார்கள். நின்றுகொண்டு குடிப்பதைத் தடுத்தும் இருக்கிறார்கள். எனினும் உட்கார முடியாத சந்தர்ப்பத்தில் நின்று கொண்டு குடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ஆ. குடித்து முடித்த பிறகு தனது வலப்பக்கத்தில் இருப்பவருக்கு அதனை முதலில் பகிர்வார்கள். இடதுபக்கத்தில் இருப்பவர் வலப் பக்கத்திலுள்ளவரை விடப் பெரியவராக இருந்தாலும் சரியே.


குடும்ப வாழ்க்கையில் நபி ﷺ அவர்களின் வழிமுறை:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: *உலக விடயங்களில் எனக்கு பெண்களும் வாசனைத் திரவியமும் விருப்பமானதாக ஆக்கப்பட்டிருக்கின்றன. என்னுடைய கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.*
[النسائي 3940، أحمد 12293. صححه الألباني والوادعي]
[அல்பானி, அர்ணாஊத் ஆகியோர் இதனை ஆதாரபூர்வமான ஹதீஸ் என உறுதிப்படுத்தியுள்ளனர்.]

தமது மனைவியர் இடையே இரவில் தங்குவதையும் தங்குமிட வசதியையும்  செலவு செய்வதையும் சமமாக பகிர்ந்தளிப்பார்கள்.

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்: *அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கலில்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். 
[البخاري 2593]

அவர்கள் தமது மனைவியருடன் அழகான நெருக்கமான குடும்ப உறவையும் நற்குணத்தையும் பேணுவார்கள்.

அன்சாரிச் சிறுமிகள் ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களுடன் விளையாடுவதற்காக வழி செய்வார்கள். ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) தடைசெய்யப்படாத ஏதாவது ஒன்றை விரும்பும் பொழுது அதற்கு இடமளிப்பார்கள்; உடன்படுவார்கள்.

மனைவியின் மடியில் சாய்ந்திருப்பார்கள். அந்நிலையில் குர்ஆன் ஓதுவார்கள். அம்மனைவி மாதவிடாய் காலத்தில் இருந்தாலும் சரியே.

மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள். பின்னர்  மனைவியை அணைத்துக் கொள்வார்கள்.

நோன்பு நோற்றிருக்கும் நிலையிலும் மனைவியை முத்தமிடுவார்கள்.

தமது மனைவிக்கு விளையாடுவதற்கு இடமளிப்பது அவர்களின் நற்குணத்திற்கும் மென்மைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இரண்டு முறைகள் தனது மனைவியுடன் பிரயாணத்தில் ஓட்டப் போட்டியில் ஈடுபட்டார்கள். இருவரும் ஒரு முறை வீட்டில் இருந்து வெளியேறும் போது விளையாட்டுக்காக தள்ளிக்கொண்டார்கள்.

பிரயாணம் செய்தால்  இரவில் மனைவியிடம் திரும்பிவரமாட்டார்கள். அவ்வாறு செய்வதை தடுத்தும் இருக்கின்றார்கள். 
[திடீர் என்று வரும் போது சில வேளை மனைவி தன்னை கணவனுக்காக சுத்தம்செய்து தயார் நிலையில் வைத்திருக்கமாட்டாள் என்பது இத்தடைக்கு காரணமாகும்.]


தூங்குவதிலும் விழித்தெழுவதிலும் நபி ﷺ அவர்களின் வழிமுறை:

நபி ﷺ அவர்கள்  உறங்குவதற்காக தனது படுக்கைக்குச் சென்றால்,
اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوْتُ
'அல்லாஹும்ம பிஸ்மிக அஹ்யா வஅமூத்'  
(அல்லாஹ்வே! உன் பெயரை கொண்டு நான் உயிர் வாழ்கிறேன் மற்றும் மரணிக்கிறேன்) என்று கூறுவார்கள்.
[البخاري 7394]

ஒவ்வோர் இரவிலும் நபி ﷺ அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலை, முகம், தம் உடலின் முற்பகுதியில் ஆரம்பித்து கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். 
[البخاري 5017]

நபி ﷺ அவர்கள் தூங்கும் போது தனது வலக்கரத்தை வலது கன்னத்திற்குக் கீழ் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். பின்வரும் துஆவை கூறுவார்கள்: 
«اَللَّهُمَّ! قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»
அல்லாஹ்வே! உனது அடியார்களை நீ எழுப்புகின்ற நாளில் உனது வேதனையை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!
[الترمذي 3399. صححه الألباني والوادعي]
[அல்பானி, வாதிஈ மற்றும் பல ஹதீஸ் துறை அறிஞர்கள் இதனை ஆதாரபூர்வமானது என உறுதிசெய்துள்ளனர்.]

தூக்கத்தில் இருந்து எழுந்ததும் பின்வரும் துஆவை   ஓதுவார்கள்
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹிந் நுஷூர்' 
*எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது* என்று கூறுவார்கள்.
[البخاري 7394]

பின்னர் பல் துலக்குவார்கள்.
[البخاري 245]

இரவின் ஆரம்ப பகுதியில் உறங்குவார்கள். இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். ஆரம்ப இரவிலும் சில வேளை முஸ்லிம்களின் நலன்களைக் கவனிப்பதற்காக விழித்திருப்பார்கள்.
[البخاري 1147]

அவர்களின் கண்கள் தான் உறங்கும்; உள்ளம் உறங்குவதில்லை.
[البخاري 1147]

அவர்கள் உறங்கினால் அவர்களாகவே எழும்பும் வரையில் எவரும் அவர்களை எழுப்பமாட்டார்கள்.
[البخاري 344]

அவர்கள் உறங்கும் காலஅளவு மிக நேர்த்தியான அளவாக இருந்தது. அதுவே மிகவும் பயனுள்ள உறக்கமாகும்.


சமூகம் சார்ந்த நடத்தையில் நபி ﷺ அவர்களின் வழிமுறை:

நபி ﷺ அவர்கள் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்கள். அதிலும் உண்மையே பேசுவார்கள்.

நபி ﷺ அவர்கள் ஆலோசனை கூறுபவர்களாகவும் ஆலோசனை கேட்பவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

நபி ﷺ அவர்கள் நோயாளியை நோய் விசாரிக்கச் செல்வார்கள். ஜனாஸஹ்வில் கலந்து கொள்வார்கள். விருந்திற்கு அழைக்கப்பட்டால்  சமுகமளிப்பார்கள். விதவை, ஏழை, பலவீனமானவர் போன்றவர்களுடன் சென்று அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பார்கள்.

நபி ﷺ அவர்கள் புகழ்பாடும் கவிகளை கேட்டு, அவற்றிற்கு சன்மானம் வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் புகழ்ச்சிகளில் சிறிய ஒரு பகுதியே கூறப்பட்டுள்ளது. ஏனையவர்களை பற்றி கூறப்படும் புகழ்ச்சிகளில் பெரும்பாலான விடயங்கள் பொய்யானவையாகவே இருக்கும்.

நபி ﷺ அவர்கள் தமது செருப்பை தம் கையாலேயே தைத்திருக்கிறார்கள். தம் ஆடையில் தம் கையாலேயே ஒட்டுத்தையல் போட்டிருக்கிறார்கள். தமது வாளியை தாமே ஒட்டுப்போடிருக்கிறார்கள். தமது ஆட்டில் தாமே பால் கறந்து இருக்கிறார்கள். தமது ஆடையில் இருந்து தாமே அழுக்கு நீக்கியிருக்கிறார்கள். தமக்கும் தம் குடும்பத்திற்கும் பணி செய்திருக்கிறார்கள். மஸ்ஜித் கட்டப்படும் போது தாமும் மக்களுடன் கற்களை சுமந்து சென்றிருக்கிறார்கள்.

நபி ﷺ அவர்கள் சிலவேளை பசியின் காரணமாக தமது வயிற்றில் கல்லை கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். சில வேளை வயிறார சாப்பிட்டும் இருக்கிறார்கள்.

நபி ﷺ அவர்கள் விருந்து அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டும் இருக்கிறது.

நபி ﷺ அவர்கள் தமது உச்சந்தலையிலும் பாதத்திற்கு மேலாலும் பிடரியிலும் பிடரி மேலிருக்கும் இரு நரம்புகளிலும் ஹிஜாமஹ் எனும் இரத்தம் குத்தி எடுக்கும் சிகிச்சை செய்துள்ளார்கள்.

நபி ﷺ அவர்கள் சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். ஓதிப் பார்த்திருக்கிறார்கள். (றுக்யஹ் எனும் நிவாரணம் பெறுவதற்கு ஓதுதல்). தமக்கு ஓதிப்பார்க்குமாறு எவரிடமும் கேட்டதில்லை. நோயாளிக்கு பத்தியம் பேண வைத்திருக்கிறார்கள்.

நபி ﷺ அவர்கள் கொடுக்கல்-வாங்கலில் மிகச் சிறந்த முறையில் நடந்து கொள்பவர்களாக இருந்தார்கள். பெற்ற கடனை திருப்பிக் கொடுக்கும்போது சிறந்த முறையில் திருப்பிக் கொடுப்பார்கள்.


நடையில் நபி ﷺ அவர்களின் வழிமுறை:

மனிதர்களிலே நபி ﷺ அவர்களின் நடை  வேகமாகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது.

நபி ﷺ அவர்கள் தமது தோழர்களை விட விரைவாக நடப்பார்கள். அவர்கள் நபி ﷺ அவர்களை அடைந்து கொள்வது சிரமமாக இருக்கும்.

நபி ﷺ அவர்கள் செருப்பு அணிந்தவர்களாக நடப்பார்கள். சில வேளை செருப்பு அணியாதவர்களாகவும் நடப்பார்கள்.

பொதுவாக நபித்தோழர்கள், நபி ﷺ அவர்களுக்கு முன்னால் நடப்பார்கள். நபி ﷺ அவர்கள் பின்னால் செல்வார்கள்.

நபி ﷺ அவர்கள் ஒரு நபித்தோழரோடும், நபித்தோழர் கூட்டத்தோடும் நடந்துசெல்பவர்களாக இருந்தார்கள்.


திக்ரில் நபி ﷺ அவர்களின் வழிமுறை:

மனிதர்களிலேயே நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதில் பூரணமானவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய பேச்சே அல்லாஹ்வை நினைவு கூர்வதிலும் அதையொட்டிய விடயங்களிலும் அமைந்திருந்தது.

உறக்கத்திலிருந்து கண் விழிக்கின்ற போதும், தொழுகையை ஆரம்பிக்கின்ற போதும், வீட்டில் இருந்து வெளியேறுகின்ற போதும், மஸ்ஜிதில் நுழையும் போதும், காலை நேரத்திலும், மாலை நேரத்திலும், ஆடை அணிகின்ற போதும், வீட்டுக்குள் நுழையும் போதும், மலஜலம் கழிக்கச் செல்லும் போதும், வுளூ செய்வதற்கு முன்னாலும், அதற்குப் பிறகும், அதானை செவிமடுக்கின்ற போதும், தலைப்பிறையை காண்கின்ற போதும், உணவு உண்ண முன்னாலும், உணவு உண்ட பிறகும், தும்மலின் போதும் ... அல்லாஹ்வை சதாவும் நினைவு கூறுகின்றவர்களாக இருந்தார்கள்.


இயற்கை மரபு (ஸுன்னஹ்)களும் அவற்றை ஒட்டிய ஸுன்னஹ்களும்:

இயற்கை மரபு (ஸுன்னஹ்)கள்:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: பத்து இயற்கை மரபு (ஸுன்னஹ்)களாவன:
1. மீசையை கத்தரித்துக் கொள்ளல்
2. தாடியை வளர்வதற்கு விட்டு விடுதல்
3. பல் துலக்குதல்
4. மூக்கினுள் தண்ணீர் செலுத்திக் கழுவுதல்
5. நகங்களை வெட்டுதல்
6. விரல்களின் மூட்டுக்களை கழுவுதல்
7. அக்குள் முடியை பிடுங்குதல்
8. மர்மஸ்தான முடியை மழித்தல்
9. (மலசலம் கழித்துவிட்டு) தண்ணீரால் சுத்தம் செய்தல்.
10. பத்தாவதை அறிவிப்பாளர் மறந்துவிட்டார்.
[مسلم 261]

வலது பக்கத்தை முற்படுத்தல்:

நபி ﷺ அவர்கள் செருப்பு அணிவதிலும், தலைமுடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், கொடுப்பதிலும், வாங்குவதிலும் வலது பக்கத்தை முற்படுத்துவதை விரும்புவார்கள். தமது வலக்கரத்தை உண்ணுவதற்கும், பருகுவதற்கும், வுளூ செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். தமது இடக்கரத்தை இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுதல், அழுக்குகளை நீக்குதல் போன்ற விடயங்களுக்கு பயன்படுத்துவார்கள்.

தலை முடி மழித்தல்:

தலைமுடியை மழிப்பதில் நபி ﷺ அவர்களின் வழிமுறை யாதெனில் தலையை முழுமையாக மழிப்பார்கள்.  அல்லது முழுமையாக விட்டுவிடுவார்கள்.

பல் துலக்குதல்:

நபி ﷺ அவர்கள் பல் துலக்குவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையிலும் நோற்காத நிலையிலும்  பல் துலக்குவார்கள். நபி ﷺ அவர்கள் தூக்கத்திலிருந்து விழிக்கின்ற போதும் வுளூச் செய்கின்ற போதும் தொழுகைக்கு முன்னாலும் வீட்டிற்குள் நுழைகின்ற போதும் பல் துலக்குபவர்களாக இருந்தார்கள். அறாக் (உகாய்) குச்சியால் பல் துலக்குபவர்களாக இருந்தார்கள்.

வாசனைத் திரவியம் பூசுதல்:

நபி ﷺ அவர்கள் அதிகமாக வாசனைத் திரவியத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். வாசனைத் திரவியத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

மீசையும், தாடியும்:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: *இணைவைப்பாளர்களுக்கு மாறுசெய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள் (கத்தரியுங்கள்).*  
[البخاري 5892]

மேற்படி விடயங்களுக்கான காலக்கெடுவு:

அனஸ் (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:
*மீசையை கத்தரித்துக் கொள்ளல், நகங்களை வெட்டுதல்,  அக்குள் முடியை பிடுங்குதல், மர்மஸ்தான முடியை மழித்தல் ஆகியவற்றில் நபி ﷺ அவர்கள் எங்களுக்கு நாற்பது இரவுகளை விட அதிகமாக விட்டுவைக்கக்கூடாது என்று காலக்கெடுவு வழங்கினார்கள்.*
[مسلم 258]


பேச்சு, சிரிப்பு, அழுகை, சொற்பொழிவு என்பவற்றில்  நபி ﷺ அவர்களின் வழிமுறை:

நபி ﷺ அவர்களது பேச்சு:

ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:  
நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக, வேகவேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அவசரமாக அறிவித்ததில்லை'
[البخاري 3568]

நபி ﷺ அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்றுவிடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.) 
[البخاري 3567]

தமது பேச்சை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்  என்பதற்காக அதிகமான நேரங்களில் மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். ஸலாம் கூறினால் மூன்று முறை கூறுவார்கள்.

தேவையில்லாமல் பேசமாட்டார்கள். அதிகமான அர்த்தங்களை குறைவான சொற்களில் பேசுவார்கள்.

தமக்கு அவசியமில்லாததைப் பேசமாட்டார்கள். நற்கூலியை எதிர்பார்த்தே தவிர பேசமாட்டார்கள்.

நபி ﷺ அவர்கள் இயல்பாகவோ, செயற்கையாகவோ கெட்டவார்த்தை பேசுபவர்களாகவோ, வீண் கூச்சலிட்டு சர்ச்சைப்படுபவர்களாகவோ  இருக்கவில்லை. 
[البخاري 3559 والترمذي 2016]

நபி ﷺ அவர்களின் சிரிப்பு:

நபி ﷺ அவர்களின் சிரிப்புகள் அனைத்தும் புன்முறுவலாகவே இருந்தது. அவர்களின் சிரிப்பின் உச்சகட்டம் அவர்களது கடைவாய்ப் பற்கள் தென்படுவதேயாகும்.

நபி ﷺ அவர்களின் அழுகை:

மூச்சை சுவாசப் பைக்குள் உள்வாங்கி சப்தத்தை உயர்த்தி அழமாட்டார்கள். எனினும் அவர்களின் கண்கள் அதிகமாக கண்ணீரை சொரியும். அதனால் அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரம் கொதிக்கும் போது ஏற்படும் சப்தத்தைப் போன்ற சப்தம் அவர்களின் நெஞ்சிலிருந்து வெளிப்படும்.

மரணித்த ஒருவர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அல்லது தனது உம்மத்தின் மீது அச்சப்பட்டு, கருணையால்  அல்லது அல்லாஹ்வின் பயத்தால்  அல்லது குர்ஆனை செவிமடுக்கும் போது என பல்வேறு சந்தர்ப்பங்களில் அழுதிருக்கிறார்கள்.

நபி ﷺ அவர்களின் சொற்பொழிவு:

நிலத்தில் நின்றும் மிம்பர் மேடையின் மீது நின்றும் ஒட்டகத்தின் மீது இருந்தும் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: *அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் உரை நிகழ்த்துகின்ற போது அவர்களின் கண்கள் சிவந்துவிடும், சப்தம் உயர்ந்துவிடும், கோபம் அதிகரித்துவிடும்; ஒரு படையை எச்சரிப்பவரைப் போல இருப்பார்கள். [مسلم 867]

நபி ﷺ அவர்கள் எந்த உரையையும் அல்லாஹ்வைப் புகழ்ந்தே ஆரம்பம் செய்வார்கள்.  

உரை நிகழ்த்தப்படும் மக்களின் தேவைக்கும் நலனுக்கும் ஏற்பவே நபி ﷺ அவர்களின் அனைத்து உரைகளும் அமைந்திருக்கும்.

[மேலதிக தகவலுக்கு பார்க்க:  زاد المعاد لابن القيم]


நபி ﷺ அவர்களின் தனித்துவங்கள்: - 
 (خَصائِص النبي ﷺ):

நபி ﷺ அவர்கள் (அனைத்திலும் ஏகத்துவம் சார்ந்த) "ஹனீஃபிய்யஹ்" என்ற கொள்கையைக் கொண்டும் (விட்டுக்கொடுத்தல், தாராளத் தன்மை, இலகுத்தன்மை போன்ற அர்த்தங்களை கொடுக்கும்)  "ஸம்ஹஹ்" என்ற கொள்கையைக் கொண்டும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். [பார்க்க: 2924 الصحيحة]
 
இமாம் இப்னுல் கைய்யிம் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:  இந்த மார்க்கம்  "ஹனீஃபிய்யஹ்" என்ற கொள்கையை கொண்டிருக்கின்ற அதேநேரம் "ஸம்ஹஹ்" என்ற கொள்கையையும் கொண்டிருக்கிறது. அது எகத்துவத்தில்  "ஹனீஃபிய்யஹ்" ஆகவும் செயல்பாட்டில் "ஸம்ஹஹ்" ஆகவும் இருக்கிறது. இவ்விரண்டிற்கும் எதிராக இருக்கின்றவை: இணைவைத்தலும் ஹலாலை (ஆகுமாக்கப்பட்டதை) ஹறாமாக்குவதுமாகும். [பார்க்க: 1/157 إغاثة اللهفان]


நபி ﷺ அவர்கள் அனைத்து மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், நானோ மனிதர்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' 
[البخاري 335]

[நபி ﷺ அவர்களின் தூதுத்துவம் ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானது என்பதில் முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஸூறதுல் றஹ்மான், ஸூறதுல் ஜின் ஆகியனவும் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.]


நபி ﷺ அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதமும் அவர்களின் பிரச்சாரமும்:

{அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இரட்சகனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்தின் பக்கம் நீர் கொண்டுவருவதற்காக; அதாவது புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையின் பக்கம் அவர்களை நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்.}
(அல்குர்ஆன் : 14:1)


நபி ﷺ அவர்களுக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகள்:

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அத்தாட்சிகளில் மிகப்பெரியது அல்குர்ஆனாகும். அவர்களுக்கு முன் வாழ்ந்த ஒவ்வொரு ரஸூலுக்கும் அல்லது நபியிற்கும் கொடுக்கப்பட்ட அத்தாட்சிகளை போன்ற அல்லது அதைவிட பலமான அத்தாட்சிகள் நபி ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்டன.


நபி ﷺ அவர்களை நேசிப்பது மார்க்கத்தில் முக்கிய அம்சமாகும்:
 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு தனது பிள்ளை, தனது பெற்றோர், ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவராக இருக்கும் வரையில் அவர் (உண்மையான) முஃமினாகமாட்டார். [البخاري 15، ومسلم 44]


நபி ﷺ அவர்களை வெறுப்பவனுக்குரிய தீர்ப்பு: 

அத்தகையவன் பெரும் குப்ரைச் செய்யும் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்: {(நபியே!) நிச்சயமாக  உம்மை வெறுப்பவனே (அனைத்து நலவுகளிலிருந்தும்) துண்டிக்கப்பட்டவனாவான்.} 
(அல்குர்ஆன் : 108:3)


நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வின் கலீல் - உற்ற நண்பராவார்கள்:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டதைப் போன்று என்னையும் உற்ற நண்பராக எடுத்துக்கொண்டான்.
[مسلم 532]


நபி ﷺ அவர்கள் உலுல் அ(ز)ஸ்ம் எனும் உறுதிமிக்க ரசூல்மார்களில் ஒருவராவார்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: 
{மேலும், நபிமார்களிடமிருந்தும் (குறிப்பாக) உம்மிடமிருந்தும், நூஹிடமிருந்தும் இன்னும், இப்றாஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடமிருந்தும் அவர்களின் உறுதிமொழியை நாம் எடுத்தோம் (என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!).  அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதிமொழியையே நாம் எடுத்தோம்.}
(அல்குர்ஆன் : 33:7)


நபி ﷺ அவர்களின் அறிவு:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:  உங்களில் (அல்லாஹ்வை) மிகவும் அஞ்சக்கூடியவரும் அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறிந்தவரும் நானே.
[البخاري 20]

{(நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை...}
(அல்குர்ஆன் : 6:50)


நபி ﷺ அவர்களுக்கு மாறுசெய்பவருக்கும் மற்றும் அவர்களுக்கு  வழிப்படுபவருக்குமுரிய தீர்ப்புகள்:

{(நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்துவிடுவான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.}
(அல்குர்ஆன் : 3:31)

{(விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம்,  கவலையும் பட வேண்டாம், (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள்.}
(அல்குர்ஆன் : 3:139)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; மறுத்தவரைத் தவிர (அதாவது அதனை விரும்பாதவரைத் தவிர)' என்று கூறினார்கள். மக்கள், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! யார் மறப்பார் (அதனை விரும்பமாட்டார்!)?' என்று கேட்டார்கள். நபி ﷺ அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள். 
[البخاري: 7280]

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: என்னுடைய கட்டளைக்கு மாறுசெய்தவருக்கு இழிவும் சிறுமையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. 
[علقه البخاري بصيغة التمريض، وأخرجه أحمد (5667) وغيره، وحسنه الألباني وغيره]


நபி ﷺ அவர்களின் உம்மத் - சமுதாயம்:

{(விசுவாசிகளே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்,  (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள்,  தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும்,  நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்} (அல்குர்ஆன் : 3:110)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: '...என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்கவேண்டுமென நான் பேராவல் கொள்கிறேன்...'
[البخاري 6530]


 நபி ﷺ அவர்களின் ஊர்:

அவர்களின் ஊர் "மக்கஹ்" ஆகும். 

{(இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கஹ் (மக்கஹ்)வில் இருப்பது தான். பரக்கத்துச் செய்யப்பட்டதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழியாகவும் இருக்கின்றது. 
அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்ராஹீம் நின்ற இட(மான ‘மகாமு இப்ராஹீ’)மும் இருக்கின்றது,  மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்லச் சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்.  எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை  ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் அனைவரை விட்டும் தேவையற்றவன்.} (அல்குர்ஆன் : 3:96,97)

மக்கஹ் புனிதம் மிக்க ஊராகும்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கியதைக் கொண்டு மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும்.
[البخاري 3189]

மறுமை நாள் வரையில் அது முஸ்லிம்களுக்குரிய ஊராகும். 

நபிﷺ அவர்கள் மக்கஹ் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கூறினார்கள்: '(மக்கஹ்வின்) வெற்றிக்குப் பின்பு (மக்கஹ்விலிருந்து) ஹிஜ்ரத் என்பது கிடையாது.'
[البخاري 2825]


நபி ﷺ அவர்களின் உறவினர்களும் மனைவியரும் 
(قرابة النبي ﷺ وأزواجه):

நபி  ﷺ  அவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் மூன்று ஆண்களும் நான்கு பெண்களுமாவர். 

1. *காஸிம்* 
இப்பிள்ளையின் பெயரின் காரணமாகத்தான் நபி ﷺ அவர்களுக்கு அபுல் காஸிம் (காஸிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரும் இருக்கின்றது.
2. *ஸைனப்* (றழியல்லாஹு அன்ஹா)
3. *றுகையஹ்*  (றழியல்லாஹு அன்ஹா)
4. *உம்முகுல்ஸூம்* (றழியல்லாஹு அன்ஹா)
5. *பாதிமஹ்* (றழியல்லாஹு அன்ஹா)
6. *அப்துல்லாஹ்*  இவருக்கு தைய்யிப், தாஹிர் ஆகிய சிறப்புப் பெயர்களும் உள்ளன.
7. *இப்றாஹீம்* இவரின் தாயார் நபி ﷺ அவர்களின் ஸுர்ரிய்யஹ் (அடிமைப் பெண்) ஆக இருந்த மாரியதுல் கிப்திய்யஹ் (றழியல்லாஹு அன்ஹா)  ஆவார்கள். ஏனைய பிள்ளைகள் கதீஜஹ்  (றழியல்லாஹு அன்ஹா) மூலமாக பிறந்தவர்கள். வேறெந்த மனைவியர் மூலமாகவும் நபி ﷺ அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.

ஃபாதிமஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களைத் தவிர நபி ﷺ அவர்களின் அனைத்து பிள்ளைகளும் அவர்களுக்கு முன்னரே மரணமடைந்துவிட்டனர். நபி ﷺ அவர்கள் மரணித்து ஆறு மாதங்களுக்குப் பின்னரே ஃபாதிமஹ்  (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் மரணித்தார்கள். நன்மையை எதிர்பார்த்து அவர்கள் செய்த பொறுமையின் காரணமாக அல்லாஹ் அவர்களின் அந்தஸ்துகளை உயர்த்தினான், இதனால் உலகத்துப் பெண்கள் அனைவரை விடவும் சிறப்பிக்கப்பட்டார்கள். பொதுவாக ஃபாதிமஹ்  (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் தான் நபி ﷺ அவர்களின் பெண் பிள்ளைகளிடையே மிகச் சிறந்தவர்களாவார்கள்.


 நபி ﷺ அவர்களின் தந்தையின் சகோதரர்கள் 11 பேர் இருந்தனர்:

1- *ஷுஹதாக்களின் தலைவர் ஹம்ஸஹ்* (றழியல்லாஹு அன்ஹு) 
2- *அப்பாஸ்* (றழியல்லாஹு அன்ஹு) 
3- அபூ தாலிப் (அவரது பெயர்: அப்து மனாஃப்) 
4- அபூ லஹப் (அவனது பெயர்: அப்துல் உஸ்ஸா)
5- ஸுபைர்
6- அப்துல் கஃபஹ்
7- முகவ்விம்
8- ளிறார்
9- குஸம்
10- முகீறஹ்  (இவரது பெயர்: ஹஜல்)
11- கய்தாக் (இவரது பெயர்: முஸ்அப்)

நபிகளார் ﷺ அவர்களின் தந்தையின் சகோதரர்களில் ஹம்ஸஹ் (றழியல்லாஹு அன்ஹு), அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரையும் தவிர ஏனையவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை.


 நபி ﷺ அவர்களின் தந்தையின் சகோதரிகள் 6 பேர் இருந்தனர்:

1- *ஸபிய்யஹ்*  (றழியல்லாஹு அன்ஹா) (இவர் ஸுபைர் இப்னுல் அவ்வாம் -றழியல்லாஹு அன்ஹு- அவர்களின் தாய்)
2- உம்மு ஹகீம் - பைளா
3- ஆதிகஹ்
4- பர்ரஹ்
5- அர்வா
6- உமைமஹ்


நபி ﷺ அவர்களின் மனைவியர் 11 பேர்:

அவர்களின் பெயர்களின் முதல் எழுத்துக்களை பின்வரும் அரபு வாக்கியத்தில் உள்ளடக்கலாம்
*حَجَزَ صَخْرٌ سَمْعَه*

1- *ஹஃப்ஸஹ்* - பின்து  உமர் (றழியல்லாஹு அன்ஹுமா)
2- *ஜுவைரியஹ்* - பின்துல் ஹாரிஸ்  (றழியல்லாஹு அன்ஹா)
3- *ஸைனப்* - பின்து ஜஹ்ஷ்  (றழியல்லாஹு அன்ஹா)
4- *ஸைனப்* - பின்து குஸைமஹ்  (றழியல்லாஹு அன்ஹா)
5- *ஸஃபிய்யஹ்* - பின்து ஹுயய்  (றழியல்லாஹு அன்ஹா)
6- *கதீஜஹ்* - பின்து குவைலித்  (றழியல்லாஹு அன்ஹா)
7- *உம்மு ஹபீபஹ்* - ரம்லஹ் - பின்து அபீ ஸுஃப்யான்  (றழியல்லாஹு அன்ஹுமா)
8- *ஸவ்தஹ்* - பின்து ஸம்அஹ்  (றழியல்லாஹு அன்ஹா)
9- *மைமூனஹ்* - பின்துல் ஹாரிஸ்  (றழியல்லாஹு அன்ஹா)
10- *ஆஇஷஹ்* - பின்து அபீ பக்ர் (றழியல்லாஹு அன்ஹுமா)
11- *உம்மு ஸலமஹ்* - ஹிந்த் பின்து அபீ உமைய்யஹ்  (றழியல்லாஹு அன்ஹா)


நபி ﷺ அவர்களின் மனைவியர் ஒவ்வொருவரையும் பற்றிய சுருக்கமான அறிமுகம்:

1. முஃமின்களின் தாய் *கதீஜஹ்* (றழியல்லாஹு அன்ஹா):

இவர்கள் நபி ﷺ அவர்களின் முதல் மனைவி. குறைஷிக் கோத்திரத்தின் பனூ அஸத் கிளையைச் சேர்ந்தவர்கள். நபித்துவத்திற்கு முன்னர் நபி ﷺ அவர்கள் அன்னையவர்களை மணந்து கொண்டார்கள். அப்போது அன்னையின் வயது 40. [மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: 40 என்பது பிரபல்யமான கருத்தாக இருந்தாலும், அது பலவீனமான அறிவிப்பாகும். மேலும் 25, 28, 30, 35 போன்ற கருத்துக்களும் உள்ளன. இத்திருமணத்தின் போது அன்னை அவர்களின் வயது குறித்து அறிவிக்கப்படும் மேற்படி எந்த அறிவிப்பும் பலமான அறிவிப்பாளர் வரிசையை கொண்டதாக இல்லை. ஆனாலும் 25 அல்லது 28 என்பவை ஏனைய   அறிவிப்புகளை விட குறைவான பலவீனத்தை கொண்டவையாகவும் அதிக சாத்தியமானவையாகவும்  காணப்படுகின்றன.]
அன்னையவர்கள் மரணிக்கும் வரை அவர்களுடன் இணைத்து வேறு எந்தப் பெண்ணையும் நபி ﷺ அவர்கள் மணக்கவில்லை.
இப்ராஹீமைத் தவிர நபி ﷺ அவர்களின் அனைத்துப் பிள்ளைகளும் அன்னையவர்கள் மூலமாகவே பிறந்தார்கள்.
நபித்துவம் கிடைத்த போது நபி ﷺ அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக நின்றார்கள். அவர்களோடு சேர்ந்து போராடினார்கள். தன்னுடைய உயிராலும் பொருளாலும் தியாகத்துடன் நபி ﷺ அவர்களை அரவணைத்தார்கள்.
அல்லாஹ்வே அவர்களுக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலமாக ஸலாம் கூறி அனுப்பினான். இத்தனிச் சிறப்பு அவர்களைத் தவிர வேறு எந்தப் பெண்களுக்கும் கிடைக்கவில்லை.
ஹிஜ்றத்திற்கு 3 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் மரணித்துவிட்டார்கள்.

2. முஃமின்களின் தாய் *ஸவ்தஹ்* - பின்து ஸம்அஹ்  (றழியல்லாஹு அன்ஹா): 

நபி ﷺ அவர்கள் அன்னை கதீஜஹ்  (றழியல்லாஹு அன்ஹா) அவர்களின் மரணத்திற்குப் பிறகு [தம்மை விட மூத்த] ஸவ்தஹ் அவர்களை திருமணம் முடித்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் "ஸம்அஹ்". அவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள். [வயது முதிர்ந்த போது] தன்னுடன் நபியவர்கள் தங்கும் நாளை ஆஇஷஹ்  (றழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.

3. முஃமின்களின் தாய் *ஆஇஷஹ்* - பின்து அபீ பக்ர் (றழியல்லாஹு அன்ஹுமா): 

நபி ﷺ அவர்கள், ஸவ்தஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்குப் பிறகு ஆஇஷஹ் அவர்களைத் திருமணம் முடித்தார்கள். அவர்களுக்கு உம்மு அப்தில்லாஹ், ஸித்தீக்கஹ் போன்ற சிறப்புப் பெயர்களும் உள்ளன. ஏழு வானங்களுக்கு மேலாக இருந்து அல்லாஹ்வால் அவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். நபி ﷺ அவர்களுக்கு மிகப் பிரியமானவர்கள். நபி ﷺ அவர்கள் ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களை திருமணம் முடிப்பதற்கு முன்னரே ஒரு வானவர் நபி ﷺ அவர்களின்  கனவில் வந்து, ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களை ஒரு பட்டுத்துணியில் வைத்துக்  காண்பித்து, இது உங்களுடைய மனைவி என்று கூறினார்கள். ஷவ்வால் மாதத்தில் அவர்களது ஆறு வயதில் அவர்களை மணந்துகொள்ள நபி ﷺ அவர்கள் திருமண ஒப்பந்தம் செய்தார்கள். ஹிஜ்ரி முதலாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அவர்களது 9 வயதில் நபி ﷺ அவர்கள் அவர்களுடன் குடும்பமாக வாழ ஆரம்பித்தார்கள். இவர்களைத் தவிர எந்த ஒரு கன்னிப் பெண்ணையும் நபி ﷺ அவர்கள் திருமணம் முடித்ததில்லை. இவர்களைத் தவிர நபி ﷺ அவர்கள் வேறு எந்த மனைவியின் போர்வைக்குள் இருக்கும் போதும் வஹ்ய்-இறைச்செய்தி இறங்கியதில்லை. அன்னை அவர்களை அவதூறு கூறுபவர்கள் காஃபிர்கள் என்பது முஸ்லிம் உம்மத்தின் ஏகமனதான முடிவாகும். நபி ﷺ அவர்களின் மனைவியர்களிலேயே மிகவும் புத்திசாலியாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருந்தார்கள். இல்லை, இல்லை பொதுவாக இந்த உம்மத்துப் பெண்களிலேயே மிகச் சிறந்த மார்க்க அறிவுள்ளவர்களாக இருந்தார்கள். மூத்த நபித்தோழர்கள் கூட அன்னையின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புவார்கள். அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்புக் கேட்பார்கள்.

4. முஃமின்களின் தாய் *ஹஃப்ஸஹ்* (றழியல்லாஹு அன்ஹா):

இவர்கள் உமர் இப்னுல் கத்தாப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகளாவார். தனது முதல்  கணவரான குனைஸ் இப்னு ஹுதாஃபஹ் அஸ்-ஸஹ்மீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். இருவருமாக மதீனஹ்விற்கு ஹிஜ்றத் செய்தனர். கணவர் உஹுத் போருக்குப் பிறகு மரணமானார். பின்னர் நபி ﷺ அவர்கள் இவர்களை மணந்தார்கள்.

5. முஃமின்களின் தாய் *ஸைனப் பின்து குஸைமஹ்*  (றழியல்லாஹு அன்ஹா): 

அடுத்ததாக, நபி ﷺ அவர்கள், குஸைமஹ் இப்னுல் ஹாரிஸ் என்பவரின் மகளான ஸைனப் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களை  மணந்து கொண்டார்கள். இவர்கள் "பனூ ஹிலால் இப்னு ஆமிர்" என்ற கோத்திரத்தின் "கைஸ்" கிளையைச் சேர்ந்தவராவார். நபி ﷺ அவர்கள் இவர்களை திருமணம் முடித்து இரண்டு மாதங்களில் இவர்கள் மரணமானார்கள். உம்முல் மஸாகீன் என்ற சிறப்புப் பெயரும் இவர்களுக்குண்டு.

6. முஃமின்களின் தாய் *உம்மு ஸலமஹ்* (றழியல்லாஹு அன்ஹா):

அடுத்தாக  நபி ﷺ அவர்கள் உம்மு ஸலமஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். ஹிந்து பின்து அபீ உமைய்யஹ் என்பது இவர்களின் பெயர். இவர்கள் குறைஷிக் குலத்தின் மக்ஸூம் கிளையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் தந்தையான அபூ உமைய்யஹ் என்பவரின் இயற்பெயர் ஹுதைஃபஹ் இப்னுல் முகீறஹ் என்பதாகும். இவர்கள்தான் நபி ﷺ அவர்களின் மனைவியர்களிலேயே இறுதியாக மரணித்தவராவார்கள். ஹிஜ்ரி 62 ஆவது ஆண்டு மரணமானார்கள்.

7. முஃமின்களின் தாய் *ஜுவைரியஹ்* (றழியல்லாஹு அன்ஹா):

இவர்கள் பனூ முஸ்தலிக் கோத்திரத்தின் தலைவரான அல்-ஹாரிஸ் இப்னு அபீ ளிறார் என்பவரின் மகளாவார். [அவர் நபி ﷺ அவர்களையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்காக படை திரட்டியவர்.] அக்கூட்டத்தோடு நடந்த யுத்தத்தில் ஜுவைரியஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களின் தந்தையும் கணவரும் கொல்லப்பட்டனர். பனூ முஸ்தலிக் கோத்திரத்திலிருந்து கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்த இப்பெண்மணி தன்னை விடுவித்துக் கொள்வதற்காக உரிமைச் சீட்டு எழுதினார். அதற்குரிய பணம் தன்னிடம் இல்லாததன் காரணமாக நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்து உதவி வேண்டினார். நபி ﷺ அவர்கள் உரிமைச்சீட்டுக்குரிய செலவைச் செலுத்தி அக்கூட்டத்தின் தலைவரின் மகளான இப்பெண்மணியை  உரிமையிட்டது மட்டுமல்லாமல், அப்பெண்ணின் விருப்பத்தோடு அவர்களை திருமணமும் செய்து; அவர்களை கண்ணியப்படுத்தினார்கள். [இவர்கள் நபி ﷺ  அவர்களின் மனைவியானதும், நபித் தோழர்களிடம் கைதிகளாக இருந்த இவர்களது கூட்டத்தைச் சேர்ந்த  100 குடும்பங்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் நபி ﷺ அவர்களின் மனைவியின் சொந்தக்காரர்கள் என்பதால் அவர்களை கைதிகளாக வைத்துக் கொள்ள நபித்தோழர்கள் விரும்பவில்லை. ஜுவைரியஹ் (றழியல்லாஹு அன்ஹா) நபி ﷺ அவர்களுடன் இணைந்ததற்கு பிறகுப் அல்லாஹ்வை அதிகமதிகமாக வணங்குகின்ற ஒருவராகத் திகழ்ந்தார்கள்.]

8. முஃமின்களின் தாய் *ஸைனப் பின்த் ஜஹ்ஷ்*  (றழியல்லாஹு அன்ஹா): 

அடுத்ததாக நபி ﷺ அவர்கள் இப்பெண்மணியை மணந்தார்கள். இவர்கள் பனூ அஸத் இப்னு குஸைமஹ் என்ற கிளையைச் சேர்ந்தவர்கள். நபி ﷺ அவர்களின்  உமைமஹ் எனும் மாமியின் மகளாவார்கள். இம்மனைவி விடயத்தில் தான் பின்வரும் அல்குர்ஆன் வசனம் இறங்கியது: 
{ஸைத் (என்பவர் ஸைனபைத் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்க்கை எனும் தன்) தேவையை அவளிடமிருந்து நிறைவேற்றிமுடித்(து விவாக விலக்கு அளித்)த போது, நாம் அவளை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம்.}
(அல்குர்ஆன் : 33:37)
இதனால்தான் இவர்கள் நபி ﷺ அவர்களின் ஏனைய மனைவிமார்களிடத்தில் "உங்களையெல்லாம் உங்களுடைய குடும்பத்தார்கள் திருமணம் செய்துவைத்தனர். என்னை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலாக இருந்து திருமணம் செய்து வைத்தான்" என்று பெருமிதமாகக் கூறிக்கொள்வார்கள். இவர்கள் உமர் இப்னுல் கத்தாப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் மரணமானார்கள். ஆரம்பத்தில் zஸய்த் இப்னு ஹாரிஸஹ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு மனைவியாக இருந்தார்கள். அவர்கள் இவர்களைத் 'தலாக்' விட்டார்கள். ஸைத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி ﷺ அவர்கள் இஸ்லாத்திற்கு முன்னர் தமது பிள்ளையாக தத்தெடுத்து இருந்தார்கள். பின்னர் தனது பிள்ளை இல்லாத ஒருவரை தனது பிள்ளையாக அழைப்பது கூடாது என்று அல்லாஹ் தடை செய்தான். தத்தெடுக்கப்பட்டவர்களால் 'தலாக்' விடப்பட்ட  பெண்களை தத்தெடுத்தவர்கள் மணமுடிப்பது குற்றமில்லை. ஏனெனில் அவர்கள் இவர்களது உண்மையான பிள்ளைகள் அல்லர். அல்லாஹ் இந்த சட்டத்தை உம்மத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்தத் திருமணத்தைச்  செய்து காட்டினான்.

9. முஃமின்களின் தாய் *உம்மு ஹபீபஹ்*  (றழியல்லாஹு அன்ஹா):

அதற்குப்பிறகு நபி ﷺ அவர்கள் உம்மு ஹபீபஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களை மணந்து கொண்டார்கள். இவர்களது இயற்பெயர் றம்லஹ் பின்து அபூ ஸுஃப்யான் என்பதாகும். இவர்கள் குறைஷிக் குலத்தில் உமைய்யஹ் கிளையை சேர்ந்தவர்கள். அபீசீனியாவிற்கு ஹிஜ்றத் செய்து தனது கணவனை இழந்த விதவையாக இருந்த இவர்களை அங்கு இருக்கும் நிலையிலேயே நபி ﷺ அவர்கள் மணந்துகொண்டார்கள். நபிகள் நாயகம் ﷺ சார்பாக நஜாஷி மன்னர் இவர்களுக்கு 400 தீனார்களை - தங்க நாணயங்களை மஹராகக் கொடுத்தார். அங்கிருந்து மதீனஹ்விற்கு நபி ﷺ அவர்களிடம்  அழைத்துவரப்பட்டார்கள். அன்னை அவர்கள் தனது சகோதரன் முஆவியஹ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மரணமானார்கள்.

10. முஃமின்களின் தாய் *ஸபிய்யஹ்*  (றழியல்லாஹு அன்ஹா):

இவர்கள் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சகோதரரான நபி ஹாறூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பரம்பரையில் வந்த, பனூன் நளீர் எனும் யூதக் கோத்திரத்தின் தலைவரான ஹுயை இப்னு அக்தப் என்பவரின் மகளாவார். மிக அழகான பெண்களில் ஒருவராக இருந்தார்கள். யூத தரப்பிலிருந்து கைபர் போரில் கைது செய்யப்பட்டார்கள். [இவர்கள் ஒரு கோத்திரத்தின் தலைவரின் மகளாக இருந்ததனால் ஒரு நபித்தோழரின் ஆலோசனைப்படி நபி ﷺ அவர்கள் இவர்களை மணந்து கொண்டார்கள்.] நபி ﷺ அவர்கள் இவர்களை விடுதலை செய்து, விடுதலையை மஹராக ஆக்கித் திருமணம் செய்துகொண்டார்கள்.

11. முஃமின்களின் தாய் *மைமூனஹ் பின்துல் ஹாரிஸ்*  (றழியல்லாஹு அன்ஹா):

அடுத்ததாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இவர்களை திருமணம் முடித்தார்கள். இவர்கள் ஹிலால் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.  இறுதியாக இவர்களையே நபி ﷺ அவர்கள் திருமணம் முடித்தார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ،[ஹி 7இல்] உம்றதுல் களாவுக்குச் சென்றிருந்த நேரத்தில் மக்கஹ்வில் வைத்து இஹ்றாம் கலைந்த பிறகு இவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மரணிக்கும் போது அவர்களிடம் ஒன்பது மனைவியர் இருந்தனர். அவர்களில் நபியவர்களுக்குப் பிறகு முதலில் மரணித்தவர் ஸைனப் பின்து ஜஹ்ஷ்  (றழியல்லாஹு அன்ஹா) ஆவார்கள். இவர்கள் ஹி 20 ஆம் ஆண்டு மரணமானார்கள். அவர்களில் இறுதியாக மரணித்தவர் உம்மு ஸலமஹ் (றழியல்லாஹு அன்ஹா) ஆவார்கள். இவர்கள் ஹி 62 ஆம் ஆண்டு யஸீத் இப்னு முஆவியஹ்வின் ஆட்சிக்காலத்தில் மரணமானார்கள்.


நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல பெண்களைத் திருமணம் முடித்தது எதற்காக?

நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்யாத அல்லது இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இஸ்லாத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் சில எழுத்தாளர்கள், நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டதைத் தவறாக சித்தரிக்கின்றனர். 

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சிறுவயதிலிருந்தே மிகவும் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய ஒழுக்கத்தில் அவர்களின் காலத்தில் வாழ்ந்த எவராலும் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. நபியவர்களின் தூய்மையான வாழ்க்கை நபித்துவத்திற்கு முன்னரே அவர்களின் காலத்தில் வாழ்ந்த, அவர்களைப் பற்றித் தெரிந்த அனைவராலும் போற்றப்பட்டது. தமது 25ஆவது வயதில் முதல் முதலாக தம்மை விட மூத்த கதீஜஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்களை மணந்தார்கள். 25 வருடம் ஒரு மனைவியுடன் வாழ்ந்தார்கள். அவர்கள்  மரணமான பிறகு தமது 50 வயதிற்குப் பிறகு தம்மை விட வயதில் மூத்த  ஸவ்தஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்களைத் திருமணம் முடித்தார்கள். ஸவ்தஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்கள் குறைஷிகளின்  கொடுமை தாங்க முடியாமல் அபீசீனியாவிற்கு ஹிஜ்றத் செய்து திரும்பிய ஒருவராகவும் தன்னுடைய கணவனை இழந்த ஒரு விதவையாகவும் மக்கஹ்வில் அசத்தியவாதிகளுக்கு மத்தியில் சத்தியத்தை சுமந்துகொண்டு வாழ்ந்து வந்தார்கள். நபி ﷺ அவர்கள் அப்பெண்மணியை மணமுடித்து அவர்களின் கண்ணியத்தை உயர்த்தினார்கள். அதனை அடுத்து நபி ﷺ அவர்கள் இஸ்லாத்திற்காக ஆரம்பத்திலிருந்து பல தியாகங்களை செய்த தமது நெருங்கிய தோழரின் மகள் ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்களைத் திருமணம் முடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இது அவர்களின் தோழமையை மேலும் வலுப்படுத்தியது. அன்னையவர்கள் மாத்திரமே நபி ﷺ அவர்கள் முடித்த ஒரே ஒரு கன்னிப்பெண். அவர்கள் சிறிய வயதுடையவராக இருந்ததினால் நபி ﷺ அவர்கள் அவர்களோடு அந்த நேரத்தில் சேர்ந்து வாழவில்லை. மதீனஹ்விற்கு ஹிஜ்றத் சென்ற பிறகு; திருமணம் முடித்து மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் குடும்பமாக அவர்களுடன் வாழ ஆரம்பித்தார்கள். அப்போது அன்னை அவர்களுக்கு 9 வயது. அன்றைய காலத்திலும் அதற்குப் பிறகும் கூட அதிகமான பெண்கள் சிறிய வயதிலேயே பருவமடைவதையும் வரலாற்றில் காணமுடிகின்றது. அதேபோன்று அறிவு முதிர்ச்சியும் சில பிள்ளைகளுக்கு அதிகமாக இருக்கும். அன்னையவர்கள் சிறிய பெண்ணாகவும் அறிவுக்கூர்மை மிக்கவராகவும் இருந்ததனால் நபி ﷺ அவர்களிடம் இருந்து அதிகமான விடயங்களைக் கற்றுக் கொண்டார்கள். நபி ﷺ அவர்கள் மரணித்த பிறகு 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உலகத்தில் வாழ்ந்தார்கள். பல மாணவ-மாணவிகளை பக்குவமும் அறிவும் நிறைந்த ஆளுமைகளாக உருவாக்கி விட்டுச் சென்றார்கள். அன்னையவர்கள் உலகத்தாருக்கு முன்மாதிரியாக விளங்கும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் குடும்பவாழ்க்கை, வீட்டுக்குள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் போன்ற விடயங்களை உலகத்திற்குக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். நபி ﷺ அவர்களிடம் இருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவித்த ஏழு நபித்தோழர்களின் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்தார்கள். மூத்த நபித்தோழர்களே அன்னையிடம் சென்று மார்க்கத் தீர்ப்பு கேட்கும் அளவிற்கு அறிவுச்சுடராக விளங்கினார்கள். நபி ﷺ அவர்களின் காலத்திலும் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் உலகில் அதிகமான பகுதிகளில் பெண்கள் இது போன்ற வயதில் திருமணமாவது குறையாகப் பார்க்கப்படவில்லை. அன்றைய பெண்கள் அந்த வயதில் திருமணமாவதற்குத் தகுதிபெற்றிருந்தனர். அதேபோன்று திருமணத்தில் வயது வித்தியாசமும் குறையாகப் பார்க்கப்படவில்லை. அதனால்தான் நபி ﷺ அவர்களின் காலத்திலோ அதற்குப் பிறகு நீண்ட காலமாகவோ இஸ்லாத்தின் எதிரிகள் நபி ﷺ அவர்கள் ஆஇஷஹ் (றழியல்லாஹு அன்ஹா) அவர்களை மணந்துகொடதைத் தவறாக விமர்சிக்கவில்லை. 

அன்னை அவர்களுக்குப் பிறகும் நபி ﷺ அவர்கள் பல பெண்களைத் திருமணம் முடித்தார்கள். பலதார மணம் என்பது அன்றைய காலத்தில் சாதாரணமான ஒன்றாக பார்க்கப்பட்டது. நபி ﷺ, அவர்களல்லாதவர்களும் பல திருமணங்களை முடித்திருந்தார்கள். கோத்திர யுத்தங்களும் ஆபத்துக்களும் நிறைந்த அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு;  முக்கியமாக கணவனை இழந்த விதவைகளுக்கு ஆண் துணையின் தேவை அதிகமாக உணரப்பட்டது. திருமணமும் இலகுவாக்கப்பட்ட விடயமாக இருந்தது. அது பெண்களுக்கு அதிக கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கொடுத்தது. இஸ்லாமும் பலதாரமணத்தை வரையறைகளோடும் நிபந்தனைகளோடும் அனுமதித்தது. இன்னும் நபி ﷺ அவர்களுக்கு திருமண விடயத்தில் தனியான சட்டங்களையும் இஸ்லாம் வழங்கியது.

நபி ﷺ அவர்கள் ஒவ்வொரு பெண்களையும் முடித்ததற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்:

பெண்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சட்டங்கள், குடும்ப வாழ்க்கை, உள்வீட்டு நடத்தைகள் போன்றவை பற்றிய கல்வியைப் பரப்புதல். உதாரணம்: ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா)

விதவைகளுக்கு இரக்கம் காட்டுதல், இஸ்லாத்திற்குத் தியாகம் செய்தவர்களை கண்ணியப்படுத்துதல். உதாரணம்: ஸவ்தஹ், உம்மு ஸலமஹ், ஸைனப் பின்து குஸைமஹ் (றளியல்லாஹு அன்ஹுன்ன)

உறவை வலுப்படுத்துதல். 
உதாரணம்: ஆஇஷஹ், ஹஃப்ஸஹ் (றளியல்லாஹு அன்ஹுமா)

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விரோதித்துக் கொண்டிருக்கும் அல்லது விரோதித்து தோல்வி அடைந்த சில கோத்திரத்தார்களுடன் உறவைக் கட்டியெழுப்புதல். உதாரணம்: உம்மு ஹபீபஹ், ஜுவைரியஹ், ஸஃபிய்யஹ் (றளியல்லாஹு அன்ஹுன்ன)

சில சட்டங்களை நிறுவுவதற்கும் தவறான நம்பிக்கைகளை களைவதற்கும். உதாரணம்: ஸைனப் பின்து ஜஹ்ஷ் (றளியல்லாஹு அன்ஹா)

எனவே இஸ்லாத்தின் வரலாற்றை முழுமையாக தெரிந்திராத அல்லது இஸ்லாத்தின் மீது குரோதம் கொண்ட இஸ்லாத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் சில எழுத்தாளர்கள் சொல்வதைப் போன்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வெறும் இச்சைக்காக  பெண்களை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காகத்தான் திருமணம் செய்ததாக இருந்தால் தம்முடைய வாலிப வயதில் அதனை அவர்கள் செய்திருக்க வேண்டும். தமது 50 வயதிற்கும் பிறகுதான் பலதாரமணம் செய்திருக்கிறார்கள். இது படிப்படியாக இச்சைகள் குறைவடையும் பருவம். அதேபோன்று வெறும் இச்சைக்காக திருமணம் செய்வதாக இருந்தால் அழகான கன்னிப் பெண்களை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்; அவர்களுக்குப் பெண் கொடுப்பதற்கு அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்களைத் தவிர நபி ﷺ அவர்களின் வேறு எந்த  மனைவியும் கன்னிப் பெண்ணாக இருக்கவில்லை. அவர்களைவிட வயதில் மூத்தவர்களாகக் கூட சில மனைவியர் இருந்திருக்கிறார்கள்.

-ஸுன்னஹ் அகாடமி

Previous Post Next Post