மங்கள (குத்து) விளக்கு?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
இஸ்லாம் மக்கத்து மண்ணில் தோன்றுவதற்கு முன் ஜாஹிலிய்யாக் காலம் என்று சொல்லக்கூடிய மௌட்டீக காலத்தில் மக்கள் மனம் போன போக்கில் தான் நினைத்ததை எல்லாம் கண் மூடித்தனமாக செய்து வந்தனர்.
இருளில் வாழ்ந்த மக்களை நபியவர்கள் இஸ்லாம் எனும் ஒளியால் சிந்திக்க வைத்து நோ்வழிப்படுத்தினார்கள். வஹி செய்தியை கொண்டு மக்களுக்கு சிறந்த வழிகாட்டினார்கள். வாழ்க்கை என்றால் இப்படி தான் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை படித்துக் கொடுத்து உலகில் பெரும் சாதனை படைத்தார்கள்.
“அந்த துாதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது” என்பதற்கு இணங்க சகல வணக்க வழிபாடுகளுக்கும் சிறந்ததொரு வழியைக் காட்டினார்கள்.
எதை செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும், என்று ஒவ்வொரு வணக்கத்திற்கும் தானே முன் நின்று அழகிய வழி காட்டினார்கள்.
நெருப்பும் இஸ்லாமும்
இறை நிராகரிப்பாளர்கள் நெருப்பை கடவுளாக வணங்கி வந்தனர். ஆனால் இஸ்லாமோ அப்படியான வணக்கத்தின் மூலம் மறுமையில் நரகில் தண்டிக்கப்படுவா் என்று கடுமையான முறையில் எச்சரிக்கின்றது.
அதான் (பாங்கு) கடமையாவதற்கு முன் பள்ளிக்கு மக்களை எப்படி அழைக்கலாம் என்று ஸஹாபாக்களுடன் கலந்தாலோசனை செய்த போது, ஒவ்வொரு வக்துக்கும் ஒரு உயர்ந்த மலையின் மீது நெருப்பை மூட்டி மக்களை தொழுகைக்கு அழைக்கலாம் என்று சபையில் ஒருவா் கூறிய போது, வேண்டாம் அது நெருப்பு வணங்கிகளின் செயல்பாடு என்று நபியவர்கள் தடை செய்தார்கள்.
மேலும் சப்தத்தைக் கொண்டும், நெருப்பைக் கொண்டும் உங்களது ஜனாஸாக்களை எடு்த்துச் செல்லாதீர்கள் என்பதன் மூலம் அந்நியர்கள் நெருப்பை கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை நபியவர்கள் சொல்ல வருகிறார்கள்.
எந்த செயல் பாட்டுக்கும் நெருப்பை முதன்மைப் படுத்தி, முக்கியத்துவப் படுத்தக் கூடாது என்பதை இஸ்லாம் நமக்குச் சொல்லித் தருகிறது.
ஆனால் எதை நபியவர்கள் தடை செய்தார்களோ அதை அவரின் பெயராலே அரங்கேற்றப்படும் அவல நிலையை காண்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் மார்க்கத்துடைய அறிவு போதாமையாகும். மறுமை நாளில் நபியவர்களால் சொல்லப் படும் வார்த்தையை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு நினைவு படுத்துகிறான்.
“எனது ரப்பே! நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணித்து விட்டார்கள்.”
குர்ஆனை சரியாகப் படித்தால் மார்க்கத்தின் சட்டத்திட்டங்களை பேணி நடக்க முடியும். குர்ஆனின் போதனைகளை புறக்கணித்தால் காண்பதெல்லாம் சரியாகப்படு்ம் அல்லது பராவாயில்லை என்று சமாளித்து விட்டு போக நேரிடும்.?
“யார் நமது உபதேசத்தை புறக்கணிக்கிறாரோ அவர் மறுமையில் குருடராக எழுப்பப்படுவார்” என்று அல்லாஹ் குர்ஆனின் மூலம் நம்மை எச்சரிக்கின்றான்.
எனவே தடை செய்த ஒன்றை பிறருக்காக அல்லது தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது புகழுக்காக செய்யப் படும் என்றால் அவர் மறுமையில் பெரும் கைசேதப்பட வேண்டிவரும் என்பதை மறந்து விடக் கூடாது.
நெருப்பும் அந்நியர்களும்
அந்நியர்களைப் பொருத்தவரை அவர்களின் எந்த நல்ல காரியத்தை செய்தாலும் நெருப்பில்லாமல் செய்ய மாட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் கடையை திறக்கும் போது கடைக்கு வெளியே மஞ்சள் தண்ணீர் தெளித்து, நெருப்பை சட்டியில் பத்த வைத்து, சடங்கு சம்பிரதாயங்களை செய்து கடையை திறப்பார்கள்.
கடையை திறந்தப் பின் சூடம், கற்பூரம் ஏற்றி கடவுளின் போட்டோகளுக்கு நெருப்பின் மூலம் வழிபாடு செய்து தொழிலை ஆரம்பிப்பார்கள்.
கோவிலுக்கு சென்றால் பூசாரி நெருப்பை கடவுளிடம் காட்டி ஆராத்தி எடுத்தப் பின் வரிசையாக நிற்கும் மக்களிடத்தில் நெருப்பைக் காட்டுவார் அதை மக்கள் தொட்டு, தொட்டு முகத்தில் ஒத்துக் கொள்வார்கள்.
வீட்டிலிருந்து வேலைக்குப் போகும் போது தாயின் மூலம் அல்லது மனைவியின் மூலம் நெருப்பினால் ஆராதனை செய்து, விபூதி பூசி அனுப்பிவைப்பார்கள்.
சவத்தை துாக்கிச் செல்லும் போதும் நெருப்பு பந்தத்தை துாக்கிச் சுற்றிக் கொண்டே செல்வார்கள்.
மார்கழி மாதத்தில் கார்த்திகை தீபத்தினால் வீட்டையும் கோவிலையும், தெருக்களையும், அலங்கரிப்பார்கள்.
பொதுவாக அவரவர் விசேட தினங்களில் எல்லா மதத்தினரும் சிறிய நெருப்பு விளக்குகளால் அவரவர் வணக்கஸ்தலங்களை அலங்கரிப்பார்கள்.
திருமணம் முடிக்கும் போது புதிய மாப்பிள்ளையும், பொண்ணும் சேர்ந்த நிலையில் அக்கினியை (நெருப்பை ) வலம் வந்து தாலி கட்டுவார்கள்.
மேலும் கிறிஸ்தவர்கள் மெழுகு வர்த்தியினால் ஆராதனை செய்வார்கள்.
பொது நிகழ்ச்சிகளின் போது பெரிய குத்து (மங்கள) விளக்கை வரக் கூடிய முக்கியஸ்தர்கள் ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பிப்பார்கள்.
இப்படி நெருப்பு இல்லாமல் எந்த காரியத்தையும் அந்நியர்கள் செய்ய மாட்டார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை எந்தக் காரியத்திலும் நெருப்பினால் இப்படியான எதையும் செய்ய மாட்டார்கள்.
ஆனால் அந்நியர்களின் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்கும் போது சிரித்த முகத்துடன் மங்கள விளக்கை தானே முன் வந்து பற்றவைக்கும் காட்சிகளை நாம் காணக்கூடியதாக உள்ளது?
இது ஒரு ஷிர்க்கான காரியம், இஸ்லாத்தில் கூடாது என்று நன்கு தெரிந்திருந்தும் பகிரங்கமாக பாவத்தை செய்து வருகிறார்கள். செய்து விட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக ஏதாவது மழுப்பளான பதில்களை சொல்லி விடுகிறார்கள். அல்லது சமுதாயத்திற்காக செய்தோம் என்று நழுவி விடுகிறார்கள்.
மார்க்கத்தில் பற்றில்லாதவர்கள், மார்க்கம் சரியாக தெரிந்து கொள்ளாதவர்கள் தான் செய்கிறார்கள் என்றால் படித்த ஓரிரு ஆலிம்களும் இப்படியான காரியத்தை பகிரங்கமாக செய்கிறார்கள்.வேலியே பயிரை மேயும் அவல நிலை?
அந்நியர்களுடன் அன்னியோன்னியமாக இரண்டரக் கலந்து பரஸ்பரமாக இருக்கத்தான் வேண்டும். அப்படி தான் இஸ்லாம் நமக்கு போதுக்கிறது. ஆனால் மார்க்கம் என்று வந்து விட்டால் உங்களது மார்க்கம் உங்களுக்கு,எங்களது மார்க்கம் எங்களுக்கு என்ற நிலையில் உறுதியாக நிற்க வேண்டும்.
மங்கள விளக்கு பற்றவைப்பது அந்நியர்களின் வணக்கம். அவர்களின் வணக்கத்தை நாம் செய்வோம் என்றால் நாம் இஸ்லாத்தை விட்டு விட்டு துாரமாகி விடுகிறோம் என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.
“யார் பிற கூட்டத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களை சார்ந்தவர் ஆவார் என்று நபியவர்கள் எச்சரித்தார்கள். எனவே அந்நியர்களுடன் சேர்ந்து நாமும் மங்கள விளக்கு ஏற்றுவோமேயானால் நமது நிலை மறுமை நாளில் பரிதாபத்திற்குறியதாக மாறிவிடும்.
மார்க்கத்தில் எல்லை மீறுபவர்கள் நாசமாகட்டு்ம்” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். இப்படியான எச்சரிக்கைகளை நாம் கவனத்தில் எடுத்து நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே ஆலிம்களாக இருந்தாலும் சரி,அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பதவியுடையவர்களானாலும் சரி, வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முக்கியஸ்தர்களானாலும் சரி அந்த விடயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புதாரிகளும் தவறை திருத்திக் கொடுக்க கூடிய அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும் அதை விட்டு விட்டு நமக்கு நெருங்கியவர் என்பதற்காக மீண்டும் மீண்டும் அந்தத் தவறை செய்வதற்கு துணை போகக் கூடாது, அவர்களையும் அந்த நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அல்லாஹ்வை பயந்து மார்க்கத்தை தெளிவாக சொல்வதில் உறுதியாக இருப்போமாக!