அகீகாவின் சட்டங்கள்

-ஆஸிர் ஸலபி


மனித சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களில் ஒன்றுதான் குழந்தைச் செல்வம். அன்று தொட்டு இன்று வறை அச் செல்வங்களைக் கொண்டு சந்தோசம் அடைபவர்களும் உண்டு, கவலையடைபவர்களும் உண்டு

இதனை இறைவன் திருமறையில் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றான். “ அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பற்றி நன்மாராயம் சொல்லப்பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகின்றான்.” (16:58)

அதே போன்று நபி(ஸல்) அவர்கள் அழகான சில வழிமுறைகளைச் செய்து காட்டினார்கள். அதாவது ஒருவனுக்கு குழந்தை பிறந்து விட்டால் அதனால் எப்படி சந்தோசம் அடைய வேண்டும் என்பதனை சொல்லியும் செய்தும் காட்டினார்கள்.

அப்படிச் சொல்லி செய்து காட்டியவற்றில் ஒன்றுதான் “அகீகா” வாகும்.

மக்கள் மத்தியில் இவ்வழிமுறை, நடைமுறையில் இருந்தாலும் அதனுடைய சட்டம் சரியாகச் செய்யப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடையமாகும். ஒர் சில உலமாக்கள் கூட இச் சட்டத்தை மக்களுக்கு சொல்வதில் தவறிழைத்து விடுகின்றார்கள்.

எனவே இவ்வாய்வானது அகீகாவின் சட்டத்தை முழுமை கொண்டதாகும்.

அகீகா என்றால் என்ன?

இதனை மொழி நடையில் : ‘வெட்டுதல்’ அல்லது ‘இரத்தத்தை ஓட்டுதல்’ எனப்படும்.

பரிபாசையில் : குழந்தை பிறந்து எழாவது நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அறுக்கப்படும் அல்லது அறுத்துக் கொடுக்கப்படும் ஆட்டுக்குச் சொல்லப்படும்.

அகீகா எனும் பெயரில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. அதாவது “நபி(ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் இரத்தம் ஓட்டுவதை விரும்புவதில்லை எனக் கூறினார்கள் அவர்கள் அகீகா எனும் பெயரை வெறுப்பது போன்று சொன்னார்கள். அப்போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வுடைய தூதரே எங்களுடைய ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது (அதைப் பற்றி) நாங்கள் கேட்கின்றோம் அதற்கு நபி(ஸல்) அவர்கள் யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூதாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத் 182,183)

இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் அகீகா எனும் பெயரை வெறுப்பது போன்று சொன்னார்கள். ஆகவே அகீகா எனும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என சிலர் வாதிடுகின்றார்கள்.

“ ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீகாவைக் கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஏழாவது தினத்தில் அதற்காக அறுக்கப்படும், தலை முடி மழிக்கப்படும், அத்தினத்திலே பெயர் சூட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்” 
(அறிவிப்பவர்: சமுறா (ரலி), ஆதாரம் : அபூ தாவுத் 2839)

அகீகா எனும் வார்த்தையை பயன்படுத்தக் கூடாதா?

அதாவது மேற் சொன்ன இரண்டு ஹதீஸ்களையும் வைத்து பார்க்கும் போது இரண்டு ஹதீஸ்களும் முரண்படுவதாக தோன்றும் ஆனால் உண்மை நிலை என்னவென்றால் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஹதீஸ் மன்சூஹான அதாவது இரண்டாவது சொல்லப்பட்ட ஹதீஸால் மாற்றப்பட்டதாக காணப்படுகின்றது.
எனவே மாற்றப்பட்ட ஹதீஸ் இருந்தாலும் அதனை நாம் நடைமுறைப்படுத்துவதில்லை என்கின்ற சட்டத்தை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

எனவே அகீகா என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் எவ்வித தடையும் கிடையாது. அதே போன்று “அத் தன்சீக், அத்தபீஹா” என்ற வார்த்தைகளையும் பயன்படுத்தலாம்.

அகீகாவின் சட்டம்:

அகீகா கட்டாயக் கடமையா? அல்லது சுன்னத்தான விடையமா? என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து முரண்பட்டுக் கொள்கின்றார்கள்.

அகீகாவின் யதார்த்தமான சட்டம் என்ன? அதாவது நான்கு மத்ஹப் இமாம்களும் தங்கள் வாழ்ந்த காலத்துக்கு ஏற்பவும் தாங்கள் ஹதீஸை விளங்கியதுக்கேற்பவும் மக்களுக்கு விளக்கங்களைச் சொன்னார்கள்.

எந்த இமாம்கள் எந்தக் கருத்தைச் சொன்னார்கள் என்பதை விட நாம் நேரடியாக எந்தக் கருத்து சரியானது என பார்ப்பது சிறந்ததாகும்.

அதாவது அகீகா சட்டமானது சுன்னதான விடையமாகும். நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் இருந்து நாங்கள் இந்த சட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம். “யார் தன்னுடைய குழந்தைக்கா அறுவையிட விரும்புகின்றாறோ அவர் அதனைச் செய்யட்டும்.” 
(ஆதாரம் : அபூ தாவுத் 2842)

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘யார் விரும்புகின்றார்களோ’ என்ற வார்த்தை போதும் நாம் அகீகாவினுடைய சட்டத்தை விளங்கிக் கொள்ள. அதே போன்று இன்னும் பல ஹதீஸ்கள் அகீகாவின் சட்டத்தை விளக்கக் கூடியதாக வந்துள்ளது.

(பார்க்க : திர்மிதி 1515, நஸாயீ 4212, முஸ்னத் அஹ்மத் 6713, ஹாகிம் 4 \238, முஅத்தா 1066,1838, இப்னு மாஜாஆ 3164)

இவ் ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது அகீகா ஒரு சுன்னத்தான விடயமாகும்.

இறைவன் திருமறையில் கூறுவது போன்று “ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சுவனவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். எவரையும் நாம் அவர்களின் சக்கதிக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை” (7:43)

எனவே தங்களைத் தாங்களே சிரமத்தின் பக்கம் கொண்டு செல்ல வேண்டாம்.

எத்தனை ஆடு அறுக்க வேண்டும்?

ஆண் குழந்தையாயின் இரு ஆடுகள், பெண்குழந்தையாயின் ஒரு ஆடு. 

“நபி(ஸல்) அவர்கள் யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)

குறிப்பு : அதாவது ஓர் சிலர் கேட்கின்ற கேள்விதான் இரண்டு ஆடு அறுக்க முடியவில்லையாயின் ஒரு ஆடு அறுக்க முடியுமா? இவ் விடயத்தில் இமாம்கள் கூறுகின்ற விடயம் என்ன வென்றால் தன்னால் முடியவில்லையாயின் அதனை விட்டு விடுவது சிறந்ததாகும். ஒரு ஆடு அறுப்பதில் எத்தடையுமில்லை எனக் குறிப்பிடுகின்றார்கள். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

எப்போது அறுக்கப்படும் ?

குழந்தையின் ஏழாவது நாளில் அறுக்கப்படும். “ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீகாவைக் கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஏழாவது தினத்தில் அதற்காக அறுக்கப்படும், தலை முடி மழிக்கப்படும், அத்தினத்திலே பெயர் சூட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்” 
(அறிவிப்பவர்: சமுறா (ரலி), ஆதாரம் : அபூதாவுத் 2839)

ஒர் சிலரிடம் சில சந்தேகங்கள் ஏற்படலாம் அதாவது குழந்தை பிறந்த தினத்தை எப்படி கணக்கிடுவது என்று. உதாரணமாக குழந்தை சனிக்கிழமை பிறந்தால் வருகின்ற வெள்ளிக்கிழமை அறுக்கப்படும். குழந்தை பிற தினத்திலிருந்து நாள் கணக்கிடப்படும்.

ஏழு நாட்கள் கடந்த பின் அறுக்கலாமா? என்றால் முடியாது. நபி (ஸல்) அவர்களுடைய செய்தி தெளிவாக வந்துள்ளதினால். ஒரு குழந்தை ஏழு நாட்களை தாண்டும் என்றால் ஆடு அறுத்துக் கொடுக்க முடியாது. அதே போன்று ஒர் சிலர் முன் வைக்கும் ஆதாரம்தான் ஆயிஷா (ரலி) அவர்களின் செய்தி. அதாவது “ ஏழாம் நாளில் இல்லை (ஆடு அறுக்கப்படவில்லை) என்றால், பதின் நான்காம் நாள் அறுக்கப்படும், அதிலும் இல்லை (ஆடு அறுக்கப்படவில்லை) என்றால் இருபத்தி ஓராம் நாளில் அறுக்கப்படும்” என அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம் : ஹாகிம் 4\266)

இந்த ஹதீஸில் “அதாஃ” என்பவரின் மூலம் சொல்லப்பட்ட செய்தியே தவிர வேறில்லை. இதனால் இந்த ஹதீஸ் முத்ரஜ் எனும் தரத்தை அடைவதனால் இதனை பலவீனமான ஹதீஸ் எனப்படும்.

(பார்க்க : இர்வாஹீல் ஹலீல் 4\369) இமாம் அல்பானிக்குரிய புத்தகமாகும்.

எனவே குழந்தை ஏழு நாட்களை தாண்டினால் ஆடு அறுக்க முடியாது என்பது தெளிவாகின்றது.

குறிப்பு : இமாம் இப்னு பாஸ், இப்னு உஹீத், அப்துல் ரஸ்ஸாக் அல் அபீபி போன்றோர் ஏழு நாட்களின் பின் அறுப்பதனால் அவர்கள் பாவியாகமாட்டார்கள் எனக் கூறிப்பிடுகின்றார்கள். ( அல்லாஹ் மிக அறிந்தவன்.)

எழாவது நாளுக்கு முன் மரணித்து விட்டால்? 

இதில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படும்.
1- உயிரோடு பிறத்தல்.
2- மரணித்துப் பிறத்தல்.

உயிரோடு பிறத்தல் என்பது பிறந்து ஏழு நாட்களை அடைவதற்கு முன் மரணித்துவிடல். எனவே அக் குழந்தைக்கு அகீகா இருக்கின்றதா?

ஹதீஸ்களின் அடிப்படையில் பார்ப்போமானால் குழந்தை ஏழு நாளை அடைதல் அல்லது அதற்கு முன் மரணித்து விடுதல் என்பது பிரித்துக் கூறப்படவில்லை. அதாவது ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் “ ஒவ்வொரு குழந்தைக்கும் அகீகாவுடன்(பிறக்கின்றது) இருக்கின்றது. ஆகவே அதற்காக வேண்டி(ஆட்டினுடைய) இரத்தத்தை ஓட்டுங்கள், அதனை விட்டும் நோவினையை நீக்குங்கள்” (நோவினை எனப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை முடியை குறிப்பிடுவதாகும்.)
(ஆதாரம் : புஹாரி 5472)

இன்த ஹதீஸின் அடிப்படையில் பார்போமேயானால, குழந்தை பிறந்து மரணித்துவிட்டாலும் அதனுடைய ஏழாவது நாளில் அதற்காக ஆடு அறுக்கப்படும். அப்படி அறுப்பதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது.

ஆனால் இன்று எம்முடைய சமுதாயத்தில் இந் நடைமுறை கிடையாது. அப்படிச் செய்யப்பட்டால் அதைச் செய்பவர்களை பித்அத் வாதிகளாக பார்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் பலவாறாக விமர்சிக்கின்றார்கள். இம்முறை நடை முறைப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

அடுத்து மரணித்துப் பிறந்தால்?

இவ்விடயத்தில் இமாம்கள் கருத்து வேறுபட்டுக் கொள்கின்றனர். என்றாலும் பெரும்பான்மையான இமாம்கள் உயிரோடு பிறந்து ஏழு நாட்களுக்கு முன்னர் மரணித்த குழந்தையின் சட்டம் போன்று தான் இக் குழந்தையின் சட்டமும் வரும் எனக் கூறுகின்றார்கள். 

ஆடுதான் அறுக்க வேண்டுமா?

நபி(ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183)

ஆனால் இன்று ஓர் சில போலி உலமாக்கள் ஆடு கிடைக்காவிட்டால் ஏனைய பிராணிகளான மாடு, ஒட்டகம் அறுக்க முடியும் எனக் கூறுகின்றார்கள். அதற்கு எந்த ஸஹீஹான அல்லது பலவீனமான ஆதாரம் கூடக்கிடையாது. எதனை வைத்து ஆதாரம் காட்டுகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியாது.
எனவே ஆடுதான் அறுத்துக் கொடுக்க வேண்டும்.

எத்தனை வயது கொண்ட ஆடாக இருக்க வேண்டும்?

ஆட்டினுடைய வயது குறிப்பிடப்படவில்லை ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களின் செய்தியில் இரண்டு வயதைத் தாண்டிய ஆடாக இருக்க வேண்டும் என்ற செய்தி பலவீனமானது. நாம் மேலே ஆயிஷா (ரலி) அவர்களின் பலவீனமான ஹதீஸ் ஒன்றைப்பார்த்தோம். அத் தொடரிலேயே இச் செய்தி இடம் பெறுகின்றமையால் இரண்டு வயதைத் கடந்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை உள்ளடங்காது.

ஆனால் ஆண் குழந்தைக்காக அறுக்கப்படும் ஆடு ஒரே சமனிலையைய் கொண்டதாக காணப்பட வேண்டும். நபி(ஸல்) “ஆண் குழந்தைக்கு இரண்டு சமனான ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஒரு ஆடும்” எனக் கூறினார்கள்.
(ஆதாரம் : அபூதாவுத் 2836, திர்மிதி 1/286, அஹ்மத் 6/31, 158 )

அகீகாவை எப்படிக் கொடுப்பது?

நாம் அறுக்கும் ஆட்டை சமைத்தோ அல்லது இறைச்சியை மட்டுமோ கொடுக்கலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது.

நாம் சாப்பிடலாமா?

நாம் சாப்பிடுவதில் எந்த தடையும் இல்லை. இந்த விடயத்தில் இஸ்லாம் ஏழைகளுக்கு மட்டும்தான் வினியோகிக்க வேண்டும் என்று எந்த கட்டளையையும் இடவில்லை. அறுக்கும் ஆட்டின் எலும்பை உடைக்கலாம், அதனுடைய தோலை பதனிடலாம். இவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை.

முழுமையாக அறுக்கப்பட்ட ஆட்டை வாங்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூதாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183)

இந்த ஹதீஸில, அவர் அறுத்துப் பலியிடட்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே யார் அகீகா கொடுக்க விறும்புகின்றாறோ அவர் அல்லது அவருடைய உறவினர்களோ தான் அறுக்க வேண்டும்.
முழுமையாக அறுக்கப்பட்ட ஆட்டை விலைக்கு வாங்க முடியாது.

ஆட்டினுடைய பெறுமதியை கொடுக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183)

இந்த ஹதீஸிலும் அகீகா பற்றி பேசுகின்ற அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்டைத்தான் கொடுக்க வேண்டும் என வந்துள்ளது. எனவே ஆட்டினுடைய பெறுமதியைக் கொடுக்க முடியாது.

குழந்தையின் தந்தை மரணித்து விட்டால் யார் மீது கடமை ?

இக் கேள்வியினுள் தந்தை இருந்தும் முடியாவிட்டால் என்கின்ற கேள்வியும் உள்ளடங்கும். 

“நபி (ஸல்) அவர்கள் ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகிய இருவருக்கும் அகீகா கொடுத்தார்கள்”
(ஆதாரம் : நஸாயீ 2\188, அஹ்மத் 5\355,316, தபரானீ 2\121 )

இந்த ஹதீஸின் தந்தை இருந்தும் அல்லது இல்லாவிட்டாலும் மற்றவர்கள் கொடுக்கலாம் என்பதனைச் சொல்கின்றது.

தனக்குத் தனே அகீகா கொடுக்கலாமா?

அதாவது தன்னுடைய தந்தை அல்லது உறவினர்களால் தனக்கு அகீகா கொடுக்கப்படவில்லை என்றால் தனக்குத் தானே கொடுக்கலாமா? என்பதுதான் இக் கேள்வி. 

“நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் பின் தங்களுக்கு அகீகா கொடுத்தார்கள்.”
(ஆதாரம் : ஸனனல் அல் குப்ரா 19750)

இந்த ஹதீஸை வைத்துத்தான் தற்போது தனக்குத் தானே அகீகா கொடுக்கலாம், என பத்வா கொடுக்கின்றார்கள்.

ஆனால் இந்த ஹதீஸினுடைய தரத்தைப் பார்க் மறந்து விட்டார்கள். இந்த ஹதீஸிற்கு ஹதீஸ் கலை இமாம்கள் பலவீனமான ஹதீஸ் என விளக்கமளித்துள்ளார்கள். அதாவது இந்த ஹதீஸில் “முஹர்ரர்” என்பவர் இடம் பெறுகின்றார்.
இவர் பலவீனமானவர் என்பதில் இமாம்கள் அனைவரும் உடன்படுகின்றார்கள்.
எனவே ஒருவர் தனக்குத் தனே அகீகா கொடுக்க முடியாது என்பது தெளிவாகின்றது.

குழந்தையின் ஏழாவது நாளில் தந்தை ஊரில் இல்லாவிட்டால்?

அகீகா சட்டமானது தந்தையுடன் சம்மந்தப்பட்டதல்ல எனவே தந்தை உயிருடன் இல்லாத போது எப்படி அறுக்கப்படுமோ அதே சட்டந்தான் இதற்கும் வாரும்.

இரட்டை குழந்தை பிறந்தால்?

இரட்டை குழந்தை பிறந்தால் எப்படி ஆடு கொடுப்பது என்பதுதான் இக்கேள்வி. இரண்டு பேருக்கும் சேர்த்து இரண்டு ஆடு கொடுத்தால் போதுமா? என்பன போன்ற கேள்விகளும் உள்ளடங்கும்.

நபி(ஸல்) அவர்கள் “ ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஒரே அளவுள்ள சமனான இரட்டிரண்டு ஆடுகள் கொடுத்தார்கள்”
(ஆதாரம் : ஹாகிம் 4\237 )

இந்த ஹதீஸின் அடிப்படையில் இரட்டைக் குழந்தை பிறந்தால் இருவருக்கும் சேர்த்து நான்கு ஆடுகள் கொடுத்தல் வேண்டும், என ஒர் சிலர் பத்வா கொடுத்து வருகின்றார்கள்.

ஆனால் இந்த ஹதீஸை அவதானிக்க மறந்து விடுகின்றார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஒவ்வொரு ஆடு அகீகா கொடுத்தார்கள்”
(ஆதாரம் : அபூதாவுத் 2841, பைஹகீ 9\299,302 )

இப்பொழுது மேலோட்டமாக பார்க்கின்றபோது இரண்டு ஹதீஸ்களும் முரண்படுவது போன்று தென்படும். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், ஆரம்பத்தில் சொன்ன ஹதீஸானது அதாவது இரண்டிரண்டு ஆடுகள் அகீகாவாக கொடுத்தார்கள் என்று வருகின்ற ஹதீஸில் “சவார் அபூ ஹம்ஸா” என்பவர் வருகின்றார். இவரை ஹதீஸ்கலை இமாம்கள் பலவீனமானவர் என்று கூறிப்பிடுகின்றார்கள்.

இரண்டிரண்டு என்ற தொடரில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானதாகும். அதே போன்று ஹஸன்(ரலி) அவர்களுக்கு மட்டும் ஒரு ஆடு கொடுத்தார்கள் என்று வருகின்ற ஹதீஸ்களும் பலவீனமானதாகும்.

இரண்டு ஆண் குழந்தைகள் ஒரேயடியாகப் பிறந்தால் நபி (ஸல்) அவர்களின் செயலுக்கு ஏற்ப இருவருக்கும் இரண்டு ஆடுகள் கொடுத்தால் போதுமானதாகும்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தால்?

மூன்று ஆடுகள் கொடுக்க வேண்டும். மேற் சொன்ன சட்டம், இரண்டு ஆண் குழந்தைகள் ஒன்றாகப் பிறந்தால், அவர்களுக்குரிய தனிச் சட்டமாகும்.

குறிப்பு : எமது இந்த ஆய்வில் அகீகாவின் சட்டங்கள் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. தலை முடி வெட்டுதல், பெயர் சூட்டுதல், ஹத்னா செய்தல் என்பன தனித் தனியாக ஆய்வு செய்யப்படுகின்றன. எமது ஆய்வின் இறுதியில் குழந்தையின் ஏழாம் நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்கின்ற ஆய்வென்றும் சுருக்கமாக வெளியிடப்படும்.
أحدث أقدم