பிரயோசனமான அறிவின் முக்கியத்துவம்

அறிவு என்பது இரண்டு வகைப்படும்

1. இவ்வுலகத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டது
2. ஈருலகத்துடன் சம்பந்தப்பட்டது

நாம் இச்சந்தர்ப்பத்தில் ஈருலகத்திலும் பலன் தரக் கூடிய கல்வியைப் பற்றியே நோக்கவுள்ளோம். அல்லாஹ் தன் திருமறையில் கூறும் போது

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارً - سورة التحريم 6

விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தவர்களையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அத்தஹ்ரீம் : 6)

இவ்வசனம் இறைவனைப்பற்றி, அவனுடைய படைப்புக்கள் பற்றி, அவனுடைய வேதம் பற்றி, வஹி பற்றி கற்க வேண்டும் என்பதனை அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஒரு மனிதன் தன்னையும் தன் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டுமாயின் அவன் இஸ்லாம் கூறும் ஏவல் விலக்கல்களை அறிந்திருக்க வேண்டும். ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் அவ்வணக்கம் பற்றி அறிந்திருக்க வேண்டும். நபிவழியில் எவ்வாறு வழிகாட்டப்பட்டிருக்கின்றது என்று அவன் அறிந்து கொள்வது அவன் மீது கடமையாகும். மேலும் தன்னை நரகிலிருந்து காத்துக் கொள்ள நரகத்திற்கு இட்டுச் செல்லும் அம்சங்கள் பற்றி அறிவது மிகவும் அவசியமாகும். நாம் நன்மைகளைத் தரக் கூடிய அம்சங்களை கற்பது போன்று தீமை தரக் கூடிய அம்சங்களையும் கற்றுக் கொள்வது அவசியமாகும்.

பிரயோசனமான அறிவு என்றால் என்ன?

நாம் உலகத்தில் எத்தனையோ விடயங்களைக் கற்கின்றோம் அவைகளைக் கொண்டு பல விதமான சாதனைகள், செயற்பாடுகள் என்று செய்கின்றோம். ஆனால், உலகில் ஓர் அறிஞன் என்று போற்றப்பட்டவன் அவன் மரணித்த உடன் அனைத்துமே அத்துடன் முடிந்துவிடுகின்றன. இறைவனின் வஹியையும் நபியவர்களின் பொன்மொழிகளையும் கற்றுக் கொள்வதும் அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதும் அதனைப் பிறருக்கு எத்தி வைப்பதன் மூலம் மரணத்தின் பின்னரான வாழ்க்கையில் நன்மை பயக்கக் கூடியதுமே பிரயோசனம் தரும் அறிவாகும்.

எனவே, தான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வறிவின் பலன் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பின்வருமாறு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

عَنْ أُمِّ سَلَمَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَانَ يَقُولُ إِذَا أَصْبَحَ حِينَ يَسْأَلُ : ' اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلا مُتَقَبَّلا -- رواه ابن ماجه، وصححه الألباني

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காலையை அடைந்தால் பிரார்த்திக்கும் போது: இறைவா! நிச்சயமாக நான் பிரயோசனம் தரக்கூடிய அறிவையும் ஹலாலான ரிஸ்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலையும் உன்னிடம் கேட்கின்றேன் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். என உம்மு ஸலமா ரழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கும் செய்தி இப்னுமாஜா என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஷைய்க் அல்பானீ ரஹிமஹூல்லாஹ் அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

மேலும், நபியவர்கள் பிரயோசனம் தராத அறிவை விட்டும் பாதுகாப்பு வேண்டியும் இருக்கின்றார்கள்.

عَنْ زَيْدِ ابْنِ أَرْقَمَ قَالَ لَا أَقُولُ لَكُمْ إِلَّا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا - صحيح مسلم

ஸைத் பின் அர்கம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்: ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிக் கொண்டிருந்தது போன்றே தவிர நான் கூற வில்லை என்று கூறினார்கள். இறைவா! நிச்சயமாக நான் பிரயோசனம் தராத அறிவிலிருந்தும் பயப்படாத உள்ளத்தை விட்டும் நிரப்பம் அடையாத ஆன்மாவை விட்டும் விடையளிக்கப்படாத (அங்கீகரிக்கப்படாத) பிரார்த்தனையை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாப்பு கேட்கின்றேன். (நூல் : முஸ்லிம்)

கற்றவற்றைச் செயல்படுத்தாததன் விளைவு

أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ- 44: البقرة

நீங்கள் வேதத்தை ஓதிக் கொண்டே உங்களை மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகின்றீர்களா? (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? (அல்பகரா: 44)

இந்த வசனத்திலே அல்லாஹ் வேதம் வழங்கப்பட்டிருந்தோரிடம் பிறருக்கு ஏவுகின்ற நிலையில் நீங்கள் செயல்படமாட்டீர்களா என்று வினவுகின்றான். எனவே வேதக்காரர்களுக்கு ஒப்பாகின்ற செயலாக இதனை அல்லாஹ் வர்ணிக்கின்றான். அவர்கள் அறிவு வழங்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு ஏவுவார்கள். ஆனால், தங்களின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தமாட்டார்கள்.

மற்றுமொரு வசனத்தில்; இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ -الصف: 2 – 3

விசுவாசங் கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாததை(ப் பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரியதாகிவிட்டது.

மற்றுமொரு நபிமொழியில் நபியவர்கள் இவவ்வாறு விளக்கினார்கள்.

عن أسامة بن زيد - رضِي الله عنه - قال: سمعتُ رسول الله - صلَّى الله عليه وسلَّم - يقول: يُؤتَى بالرجل يومَ القيامة فيُلقَى في النار فتندَلِق أقتابُ بَطنِه، فيَدُور بها كما يَدُور الحمار في الرَّحَى، فيجتَمِع إليه أهلُ النار فيقولون: يا فلان، ما لك؟ ألم تكن تأمر بالمعروف وتنهى عن المنكر؟ فيقول: بلى، قد كنتُ آمُر بالمعروف ولا آتيه، وأنهى عن المنكر وآتيه -صحيح البخاري 3267، وصحيح مسلم 2989

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூற தான் கேட்டதாக உஸாமா ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மறுமையில் ஒரு மனிதர் கொண்டு வரப்படுவார்; அவரின் குடல்கள் வெளியிலே கொட்டிய நிலையில் அவர் நரகத்தில் எறியப்படுவார், அக்குடல்களுடன் செக்கில் கட்டப்பட்ட கழுதை அதனைச் சுற்றி வருவது போன்று அம்மனிதனும் சுற்றி வருவான், நரகவாதிகள் அவனிடத்தில் ஒன்று கூடி மனிதனே உனக்கு என்ன நேர்ந்தது? நீர் நன்மையை ஏவிக் கொண்டும் தீமையைத் தடுத்துக் கொண்டும் இருக்க வில்லையா? என்று அவனிடத்தில் வினவுவார்கள். அதற்கு அம்மனிதன் ஆம், நான் நன்மையை ஏவிக் கொண்டிருந்தேன் ஆனால் நான் அவைகளைச் செய்ய வில்லை, தீமையைத் தடுத்துக் கொண்டிருந்தேன் அவற்றை நான் செய்து கொண்டிருந்தேன் என்று பதிலளிப்பான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

மேலும், இதன் விபரீதத்தை நபியவர்கள் தான் இஸ்ரா சென்ற போது காண்பிக்கப்பட்ட காட்சியை வைத்து இப்படி வர்ணிக்கின்றார்கள்.

عن أنسٍ - رضِي الله عنه - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: أتيتُ ليلةَ أُسرِي بي على قومٍ تُقرَض شِفاهُهم بِمَقارِيض من نارٍ، كلَّما قُرِضَتْ وَفَتْ، فقلتُ: يا جبريل، مَن هؤلاء؟ قال: خُطَباء أمَّتك الذين يقولون ما لا يفعَلُون، ويقرَؤُون كتابَ الله ولا يعمَلُون به -رواه البيهقي في شعب الإيمان، صحيح الجامع الصغير للألباني 129

நான் இஸ்ரா பயணம் அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரிடம் சென்றேன் நெருப்பினாலான கத்தரிக் கோள்களினால் அவர்களின் உதடுகள் துண்டிக்கப்பட்டன, துண்டிக்கப்பட்ட போதெல்லாம் அவைகள் மீண்டும் பூரணமடைந்து விடுகின்றன, (தொடர்ந்து இவ்வாறு நடைபெறுகின்றது) ஜிப்ரீலே (அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) இவர்கள் யாவர்? என்று நான் கேட்டேன். (அதற்கவர்) இவர்கள் தான் உங்களுடைய சமுதாயத்தின் பேச்சாளர்கள், இவர்கள் தாம் செய்யாதவற்றை மற்றவர்களுக்கு செய்யுமாறு சொல்லுவார்கள், அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவார்கள் ஆனால், அதனைக் கொண்டு செயல்படமாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள்
நூல்: பைஹகீ (இமாம் அல்பானீ ரஹிமஹூல்லாஹ் இதனை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்)

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல் மற்றவர்களுக்கு ஒரு கடமையான அம்சத்தையோ அல்லது சிறப்பான காரியத்தையோ எத்தி வைப்பது மிகவும் இழிவான தண்டனைக்குரிய குற்றமாக அல்லாஹ்வின் வேதமும் நபியவர்களின் பொன்மொழிகளும் இயம்பிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான எச்சரிக்கைகளே எங்களுக்குப் போதுமானதாகும்.

நபியவர்களின் கட்டளையும் கூட ஏவப்பட்டிருப்பவற்றை முடியுமான வரை எடுத்து நடக்க வேண்டும் என்பதும், விலக்கப்பட்டிருப்பவைகளை முழுமையாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் தான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ صَخْرٍ رَضِيَ الله تَعَالَى عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ: مَا نَهَيْتُكُمْ عَنْهُ فَاجْتَنِبُوهُ وَمَا أَمَرْتُكُمْ بِهِ فأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ - رواه البخاري ومسلم

நபியவர்கள் கூறியதை தான் செவியுற்றதாக அபூ ஹூரைரா ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு எதனை விட்டும் தடுத்தேனோ அவற்றை நீங்கள் (முழுமையாகத்) தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எவற்றை ஏவினேனோ அவற்றை முடிந்தவரை எடுத்துக் கொள்ளுங்கள்.

நூல்: புகாரி முஸ்லிம்
இறைவன் தனது திருமறையில் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்.

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا -سورة الحشر : 7

(நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்தது நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (ஹஷ்ர்: 7)

நபிமார்களும் நபித்தோழர்களும் கற்றவற்றை நடைமுறைப்படுத்தினார்கள்

وقال شعيب - عليه السلام - لقومه: وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَى مَا أَنْهَاكُمْ عَنْهُ -هود: 88

உங்களை நான் எதனை விட்டும் தடுக்கின்றேனோ, அதில் உங்களுக்கு மாறு செய்ய நான் விரும்பவில்லை. (ஹூத்:88)

நபியவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது, ஜாஹிலிய்ய செயற்பாடுகளை தனது பாதங்களுக்குக் கீழே வைத்தார்கள், அவைகளை தனது குடும்பத்தாரிடமிருந்து ஆரம்பித்தார்கள்.

حديث جابر الطويل الذي رواه مسلم وغيره، قال - صلَّى الله عليه وسلَّم -: ألاَ كلُّ شيءٍ من أمر الجاهليَّة تحت قدمي موضوع، ودِماء الجاهليَّة موضوعة، وإنَّ أوَّل دمٍ أضَعُ من دِمائنا دم ابن ربيعة بن الحارث، وربا الجاهليَّة موضوعٌ، وأوَّل ربا أضع ربانا، ربا عبَّاس بن عبدالمطلب، فإنَّه موضوع كلُّه - صحيح مسلم 1218

அறிந்து கொள்ளுங்கள் ஜாஹிலிய்ய செயற்பாடுகள் அனைத்தும் என் பாதத்தின் கீழ் விட்டுவிடப்படுகின்றன, ஜாஹிலிய்ய இரத்தம் (பழிவாங்கல்) விட்டுவிடப்படுகின்றது, நிச்சயமாக முதன் முதலில் எம்முடைய பழிவாங்கலான இப்னு ரபீஆவுடைய இரத்தம் விட்டுவிடப்படுகின்றது, ஜாஹிலிய்ய வட்டி விட்டுவிடப்படுகின்றது, முதலாவதாக எங்களுடைய வட்டி விடப்படுகின்றது, அது அப்பாஸூடைய வட்டியாகும். எனவே, நிச்சயமாக அனைத்துமே விடப்படுகின்றது என நபியவர்கள் கூறிய செய்தியை ஜாபிர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)

عن أبي هُرَيرَة قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم - حين أنزَل الله - وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ - الشعراء: 214 فقال: يا معشر قُرَيش، اشتَرُوا أنفُسَكم، لا أُغنِي عنكم من الله شيئًا، يا بني عبد مَناف، لا أُغنِي عنكم من الله شيئًا، يا عباس بن عبدالمطلب، لا أُغنِي عنك من الله شيئًا، يا صفيَّة عمَّة رسول الله، لا أغني عنك من الله شيئًا، يا فاطمة بنت محمد، سَلِيني من مالي، لا أُغنِي عنك من الله شيئًا -صحيح البخاري برقم 2753

ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள், (உனது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பீராக) என்று அல்லாஹ் இறக்கிய போது, நபியவர்கள் கூறினார்கள்: குறைஷிகளே! நீங்கள் உங்களை நரகத்தை விட்டும் காத்துக் கொள்ளுங்கள், இறைவனிடத்தில் உங்களுக்காக நான் எதனையும் செய்ய முடியாது, அப்து மனாப் கிளையினரே! இறைவனிடத்தில் உங்களுக்காக நான் எதனையும் செய்ய முடியாது, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபே! இறைவனிடத்தில் உங்களுக்காக நான் எதனையும் செய்ய முடியாது, அல்லாஹ்வின் தூதரின் மாமியான ஸபிய்யாவே! இறைவனிடத்தில் உங்களுக்காக நான் எதனையும் செய்ய முடியாது, முஹம்மதின் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) மகள் பாதிமாவே! எனது சொத்திலிருந்து எதனையும் என்னிடத்திலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள், இறைவனிடத்தில் உங்களுக்காக நான் எதனையும் செய்ய முடியாது. (நூல்: புகாரி)

அல்லாஹூத்தஆலா தன் நபிக்கு உங்கள் குடும்பத்தவர்களிடமிருந்து ஆரம்பியுங்கள் என்று அறிவித்ததும் நபியவர்கள் தனது குடும்பத்தவர்களுக்கு இறைவனின் கட்டளையை எடுத்துச் சொல்கின்றார்கள். நபிவர்களின் அழைப்புப்பணியின் ஆரம்பத்தில் தான் இந்நிகழ்வு நடைபெறுகின்றது. எனவே, மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தில் கூட ஷூஐப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தனது சமுகத்தினருக்கு நான் எதனை உங்களுக்கு தடுக்கின்றேனோ அதற்கு நான் மாற்றம் செய்ய மாட்டேன் என்று உறுதியளிப்பதை நாம் பார்க்கலாம். மேலும், நபித்தோழர்கள் கூட அல்லாஹ்வின் தூதரிடமிருந்து 10 வசனங்களைக் கற்பார்கள் அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்திய பின்னரே இன்னும் 10 வசனங்களைக் கற்பார்கள்.

கற்ற கல்வியை மறைத்தல்

இறைவன் நமக்கு அருளியுள்ள மகத்தான மேன்மைமிக்க இக்கல்வியை தத்தமது வாழ்வில் கடைபிடிக்காமல் பொடுபோக்காக எடுத்துக் கொள்வது போன்று, அக்கல்வியை தமது சுயநோக்கங்களுக்காக, அந்தஸ்துகளுக்காக, பதவிகளுக்காக, வேறு பல நோக்கங்களுக்காக மறைப்பதும் மிகப்பாரிய குற்றமாக இறைவனிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. இதனைத்தான் இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு இயம்பிக் கொண்டிருக்கின்றான்.

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللهُ وَيَلْعَنُهُمُ اللاعِنُونَ . إِلا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وأنا التَّوَّابُ الرَّحِيمُ . -سورة البقرة:159 ـ 160

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் இறக்கிய தெளிவான சான்றுகளையும் வழிகாட்டலையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பதற்கு (உரிமையுடையவர்களும்) சபிக்கின்றனர். ஆனால், எவர்கள் (தம் தவறிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி, தம்மை சீர்திருத்திக் கொண்டு, (தாம் மறைத்தவற்றை) தெளிவுபடுத்துகின்றார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிக்க மன்னிப்பவன்;. நிகரற்ற அன்புடையவன் (2:159,160)

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أنزل اللهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَناً قليلاً أُولَئِكَ مَايَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إلا النَّارَ وَلايُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلايُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ. -البقرة:174

நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்து அதைக் கொண்டு அற்பக் கிரயத்தை பெற்றுக் கொள்கின்றார்களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்ணுகின்றனர். மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. (2:174)

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ كَتَمَ عِلْمًا يَعْلَمُهُ جِيءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ مُلْجَمًا بِلِجَامٍ مِنْ نَارٍ

யார் தான் அறிந்த அறிவை மறைக்கின்றாமறைக்கிறாரோ அவர் மறுமையில் நரக நெருப்பிலானான கடிவாளம் இடப்பட்டவராகக் கொண்டுவரப்படுவார் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறைவன் தன்னுடைய வேத அறிவை வழங்கிய பின் மக்களுக்கு இதனை மறைக்காமல் தெளிவுபடுத்த வேண்டுமென்று வேதக்காரர்களிடம் ஒப்பந்தம் வாங்கிய போதும் அவர்கள் அவ்வொப்பந்தத்தை முறித்து இறை வேதத்தையும் எறிந்து விட்டார்கள் என்ற விடயத்தை இறைவன் பின்வரும் வசனத்தில் மிகவும் தெளிவாக அறிவைக் கொண்டு அமல் செய்யாத கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகின்றான்.

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُون - آل عمران – 187

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை நீங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதை நீங்கள் மறைக்கக் கூடாது என்றும் அல்லாஹ் வாக்குறுதி எடுத்ததையும் அவர்கள் அதை தங்களது முதுகுக்குப்பின்னால் எடுத்தெறிந்து விட்டு அதை அற்ப விலைக்கு விற்று விட்டதையும் (எண்ணிப்பாருங்கள்) அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும். (3:187)

அறிவைச் சுமந்த நிலையில் செயல்படுத்தாதோருக்கு உதாரணம்

அல்லாஹ் தன் திருமறையில் பலதரப்பட்டவர்களுக்கும் பலவிதமான உதாரணங்களைக் கூறியிருப்பதை நாம் அவதானிக்க முடியும். அவ்வாறே அறிவைச் சுமந்து அதனைப் பயன்படுத்தாதவர்களுக்கும் சில உதாரணங்களை பின்வரும் வசனங்களில் கூறிக்காட்டுகின்றான்.

مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِين سورة الجمعة 5

தவ்ராத் சுமத்தப்பட்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தாதவர்களுக்கு உதாரணம், ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தைப் போன்றாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்த இக்கூட்டத்தாருக்குரிய உதாரணம் மிகக் கெட்டதாகும். அநியாயக்காரக் கூட்டத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (62:5)

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ سَاءَ مَثَلًا الْقَوْمُ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَأَنْفُسَهُمْ كَانُوا يَظْلِمُونَ -سورة الأعراف:175- 177

நாம் எவனுக்கு நமது அத்தாட்சிகளை வழங்கினோமோ அவனின் செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அதை விட்டும் அவன் நீங்கி விட்டான். எனவே, ஷைதான் அவனைப் பின் தொடர்ந்தான். அவன் வழிகேடர்களில் ஆகிவிட்டான். நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், பூமியின் (சுகபோகத்தின்) பால் சாய்ந்து, தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனது உதாரணம், நாயின் உதாரணத்தைப் போன்றது. அதை நீ விரட்டினாலும் அது நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்ளும். அதை விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்க விட்டுக் கொள்ளும். இதுவே நமது வசனங்களைப் பொய்ப்பித்த சமுகத்திற்கு உதாரணமாகும். அவர்கள் சிந்திக்கும் பொருட்டு இச்சரித்திரங்களை எடுத்துக் கூறுவீராக! நமது வசனங்களைப் பொய்ப்பித்து, தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட கூட்டத்தாரின் உதாரணம் கெட்டதாகிவிட்டது. (7:175-177)

அல்குர்ஆன் ஒருமனிதனுக்கு சார்பாக அல்லது எதிராக அமையும்

ஒரு மனிதன் தன் வாழ்வை இறைவனின் வேதத்தை எவ்வகையில் எடுத்துக் கொள்கின்றானோ அதற்கேற்ற விதத்தில் இறைவேதம் மறுமையில் இம்மனிதன் விடயத்தில் நடந்து கொள்ளும்.

عن أبي مالك الحارث بن عاصم الأشعري رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : الطهور شطر الإيمان ، والحمد لله تملأ الميزان ، وسبحان الله والحمد لله تملآن - تملأ - ما بين السماوات والأرض ، والصلاة نور ، والصدقة برهان ، والصبر ضياء ، والقرآن حجة لك أو عليك- رواه مسلم .

சுத்தம் ஈமானின் பாதியாகும், அல்ஹம்துலில்லாஹ் மீஸான் தராசை நிறப்பும், ஸூப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் வானங்கள் பூமிகளுக்கு மத்தியில் நிறப்பும், தொழுகை ஒளியாகும், தர்மம் ஆதாரமாகும், பொறுமை ஒளியாகும், அல்குர்ஆன் உனக்கு சாதகமாக அல்லது உனக்கு எதிராக இருக்கும் என ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹூ அன்ஹூ (நூல்: முஸ்லிம்)

அறிவைக் கொண்டு அமல் செய்தவர்களும் அமல் செய்யாதவர்களும்

அறிவு வழங்கப்பட்டு அதனை தம் வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தவர்களை இறைவன் தன் அருளுக்குரியவன் என்று தன் மறையில் புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கின்றான். அவர்களின் வழியில் தான் முஃமின்கள் செல்ல வேண்டும் என்றும் வழிகாட்டுகின்றான். அதற்காக வேண்டி பிரார்த்திக்குமாறும் இறைவன் நமக்கு இயம்பிக் கொண்டிருக்கின்றான். நாம் தினமும் பர்ழான மற்றும் உபரியான தொழுகைகளில் ஸூரதுல் பாதிஹா ஓதுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த ஸூராவிலேயே இறைவன் அவனுடைய அருளுக்குரியவர்கள், கோபத்திற்குள்ளானவர்கள் மற்றும் வழி கொட்டவர்களைப் பற்றியும் பின்வரும் வசனங்களில் கூறுகின்றான்.

قال الله تعالى: اهدِنَا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! அது நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழி. (அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ, வழி தவறியவர்களினதோ வழி அல்ல. (1:5,6)

இவ்வசனத்தில் அருளுக்குரியவர்கள் யாரென்பதை இறைவன் இவ்வசனத்தில் மிகவும் தெளிவாக விளக்குகின்றான்.

وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا وَإِذًا لَآتَيْنَاهُمْ مِنْ لَدُنَّا أَجْرًا عَظِيمًا وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ - سُورَةُ النِّسَاءِ : 66 – 69

இன்னும் அவர்கள் தமக்கு உபதேசிக்கப்பட்டவற்றைச் செயல்படுத்தியிருந்தால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாகவும் (அவர்களை) நன்கு உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும். அப்போது நாம் அவர்களுக்கு மகத்தான கூலியை நம்மிடமிருந்து வழங்கியிருப்போம். மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியிருப்போம். யார் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்களே சிறந்த தோழர்களாவார்கள். (4: 66-69)

மேலும், கோபத்திற்குள்ளானவர்கள் வழிகெட்டவர்கள் யாரென நபியவர்கள் கூறும் போது பின்வருமாறு கூறினார்கள்.

وقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال: -اليهود مغضوب عليهم، والنصارى ضالون

யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்கள் இன்னும் கிறிஸ்தவர்கள் வழிகெட்டவர்கள் என நபியவர்கள் கூறினார்கள்.

யூதர்கள் ஏன் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாகியிருந்தார்கள் என்றால் அவர்கள் அறிவு ஞானம் வழங்கப்பட்டிருந்தார்கள். இறைவன் இவர்களிடத்தில் அவ்வறிவைக் கொண்டு செயல்படுமாறும் எத்திவைக்குமாறும் உறுதிப்பிரமானம் எடுத்திருந்தான். ஆனால், இவர்களோ அதனைச் சரியாக செய்ய வில்லை. ஆகவே தான் இறைவனின் கோபத்திற்குள்ளானார்கள். கிறிஸ்தவர்கள் ஏன் வழிகெட்டவர்கள் என்றால் அவர்களுக்கு எவ்வித அறிவுமின்றி அமல் செய்தார்கள். அவர்கள் வெறும் வணக்கசாலிகள் மாத்திரமே தவிர அவர்கள் எவ்வித அறிவையும் தங்களிடத்தில் கொண்டிருக்கவில்லை. எனவே, அறிவின்றி வணக்க வழிபாடுகளைச் செய்து வழிகேட்டில் சென்றது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் வழிகெடுத்தியும் விட்டார்கள்.

எனவே, சதோதரர்களே! நாம் இறைவனின் பெரும் அருட்கொடையான அறிவைப் பெற்றிருக்கின்றோம். அவ்வறிவை எமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவதோடு, மற்றவர்களுக்கும் எத்தி வைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். கற்றவற்றை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நாம் மறைக்காமல் எத்தி வைத்து இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் இவ்வறிவை பிரயோசனம் தரக்கூடிய அறிவாக நாம் மாற்றிக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

by: ABU MU'AAD JAMALUDDEEN
أحدث أقدم