“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்…

முஸ்னதுஷ் ஷாபிஈ என்ற ஹதீஸ் கிரந்தம் மிகவும் பயனுள்ள பெறுமதி வாய்ந்த ஒரு நபி மொழித் தொகுப்பாகும்.

“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய “முஸ்னத்” என்று அறியப்பட்ட இந்த ஹதீஸ் தொகுப்பு இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்படவில்லை, இமாம் அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்கள் இமாம் ஷாபிஈ அவர்களுடைய மாணவராகிய இமாம் ரபீஃ பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நபிமொழிகளையே நூல் உருவாக்கம் செய்துள்ளார்கள் அதுவே “முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய “முஸ்னத்” என்பதாக மக்களிடையே அறியப்படுகிறது.

இமாம் ரபீஃ பின் ஸுலைமான் அவர்கள் இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கிதாப் அல் உம்மு , அல்மப்ஸூத் போன்ற நூல்களிலிருந்தே செய்திகளை அறிவித்துள்ளார்கள், அதனையே முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்கள் நூலாக தொகுத்துள்ளார்கள் என்ற செய்தி பல அறிஞர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்; இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னதை ரபீஃ பின் ஸுலைமான் அவர்களின் வழியாக அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்கள் தொகுத்துள்ளார்கள்.

நூல் – ஸியரு அஃலாமிந் நுபலா – 12/589

இமாம் இப்னுஸ் ஸலாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்; இமாம் ஷாபிஈ அவர்கர்களுடைய “முஸ்னத்” என்று அறியப்பட்ட ஹதீஸ் தொகுப்பு இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்படவில்லை, அபுல் அப்பாஸ் முஹம்மத் பின் யஃகூப் அல் அஸம்மு அவர்களிடம் உள்ள செய்திகளை மாத்திரமே உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது, இமாம் ஷாபிஈ அவர்களிடமிருந்த அனைத்து ஹதீஸ்களும் அதிலே ஒன்று திரட்டப்படவில்லை.

நூல் – தபகாதுல் புகஹாஇஷ் ஷாபிஇய்யா – 1/292

அபுல் அப்பாஸ் அவர்கள் ரபீஃ பின் ஸுலைமான் அவர்களிடம் கேட்ட செய்திகளே இமாம் ஷாபிஈ அவர்கர்களுடைய “முஸ்னத்” என்று அறியப்படுகிறது என்பதாக அல் முஃஜமுல் முபஹ்ரிஸ் 39 ஆவது பக்கத்தில் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்களும் தாரீஹுல் இஸ்லாம் – 25/367 ல் இமாம் தஹபி அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஹதீஸ்களை திரட்டியவர்கள் அவற்றை மஸானீத்களின் அடிப்படையிலோ (பிக்ஹ்) மார்க்க சட்டதிட்டங்களின் அடிப்படையிலோ ஒழுங்குபடுத்தவில்லை இது கடுமையான ஒரு குறையாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “தஃஜீலுல் மன்பஆ” வில் பதிவு செய்துள்ளார்கள்.

“முஸ்னதுஷ் ஷாபிஈ” பிற்பட்ட காலங்களில் (பிக்ஹ்) மார்க்க சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டது. “கிதாபுல் வுழூ” வைக் கொண்டு ஆரம்பம் செய்யப்பட்டுள்ள “முஸ்னதுஷ் ஷாபிஈ” 1819 ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடமிருந்து இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கேட்ட 553 செய்திகள் பதிவாகியுள்ளன, இமாம் ஷாபிஈ அவர்கள் மாத்திரம் தனித்து அறிவித்த, வேறு எவரிடமும் பெற்றுக்கொள்ள முடியாத 128 செய்திகள் பதிவாகியுள்ளன.

அல்லாமா முஹம்மத் ஆபித் அஸ்ஸிந்தி அவர்கள் “தர்தீபு முஸ்னதில் இமாம் அபீ அப்தில்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாபிஈ” என்ற பெயரிலும் அல்லாமா அல் பன்னா அஸ்ஸாஆதி அவர்கள் “பதாஇஉல் மினன் பீ தர்தீபி முஸ்னதிஷ் ஷாபிஈ வஸ்ஸுனன்” என்ற பெயரிலும் முஸ்னதுஷ் ஷாபியை ஒழுங்குபடுத்தியுள்ளார்கள்.

இமாம் அபுல் காஸிம் அர்ராபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்னதுஷ் ஷாபியிற்கு விரிவுரை எழுதியுள்ளதாக இமாம் தஹபி அவர்கள் “ஸியரு அஃலாமிந் நுபலா” விலும் இமாம் தாஜுத்தீன் சுப்கி அவர்கள் “தபகாதுஷ் ஷாபிஇய்யா” விலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் இப்னுல் அஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விரிவுரை எழுதியுள்ளதாக இமாம் தஹபி அவர்கள் “ஸியரு அஃலாமிந் நுபலா” வில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாமா ஸன்ஜர் பின் அப்துல்லாஹ் அத்தாவதாரி அல்பர்லி அவர்கள் முஸ்னதுஷ் ஷாபியினை ஒழுங்கு படுத்தி விரிவுரை எழுதியுள்ளார்கள் என “தப்ஸீருல் முன்தபிஹ்” ல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

“அஷ்ஷாபில் இய்யு அலா முஸ்னதிஷ் ஷாபிஈ” என்ற பெயரில் இமாம் சுயூதி அவர்களும் முஸ்னதுஷ் ஷாபியிற்கு விரிவுரை எழுதியுள்ளார்கள்.

“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகத்தை தமிழ் பேசும் உலகுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்திலே அது பற்றிய சிறியதொரு அறிமுகத்தை இங்கு வழங்கியுள்ளேன்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இல்லையென்றிருந்தால் நாம் ஹதீஸின் ஆழத்தை அடைந்திருக்கமாட்டோம்.

நூல் – தாரிஹு மதீனதி திமிஷ்க் – 51/345

உலகம் போற்றும் மாமேதை இமாமுனா ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கீர்த்தியை உணர்த்த இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இந்த ஒரு செய்தி போதும் என நினைக்கிறேன்.

எங்களுடைய அன்புக்குரிய இமாம்கள் எல்லோரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு வழங்குவானாக!

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி, விரிவுரையாளர், அல்மனார் இஸ்லாமிய நிலையம், துபாய், அமீரகம்.
أحدث أقدم