ஷீஆ என்ற சொல் மொழி ரீதியாக “பிரிவு” “கூட்டம்” என்றும் “ஆதரவு அணி” என்றும் பொருள் தருகிறது. இவ்வர்த்தத்தில் அல்குர்ஆனும் சில இடங்களில் இச் சொல்லை உபயோகித்துள்ளது. (உ-ம்) (28:15, 37:83),
இஸ்லாமிய மரபில் அலி(ரழி) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர் மீதும் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துவதுடன் அவர்களுக்கே நபியவர்களின் பின் அரசியல், ஆன்மிக தலைமைத்துவம் வாரிசு அடிப்படையில் சென்றிருக்கவேண்டும் எனக்கூறி முந்திய மூன்று கலீபாக்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவான ஸஹாபாக்கள் மீதும் தப்பபிப்பிராயத்தைப் பரப்பும் ஒரு சிந்தனைப் பிரிவு ஷீஆ என்று அழைக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய முரண்பட்ட சிந்தனைப் பிரிவுகளுள் “ஷீஆ"என்ற பிரிவு நீண்ட வரலாற்றையும் ஒன்றுக்கொன்று முரணான பல உட்பிரிவுகளையும் உடைய சிறுபான்மை முஸ்லிம் அணியினராவர். கலீபா அலி (ரழி) அவர்களது காலத்தில் எழுந்த அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகளின் பின்னணியில் தோன்றிய இப்பிரிவின் தோற்றம் குறித்து பெரும்பான்மை முஸ்லிம் அறிஞர்களிடையேயும் ஷீஆ அறிஞர்களிடையேயும் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
தோற்றம்:
ஷீஆக்களின் தோற்றம் குறித்துக் கூறப்படும் கருத்துக்கள்:
“எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக இவரும் இவரைப் பின்பற்றும் பிரிவினருமே (ஷீஆ) மறுமையில் வெற்றி பெற்றோராவர்” என நபியவர்கள் அலி (ரழி) யைப் பார்த்து கூறினார் என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் பெயரில் ஷீயா சார்பு கிரந்தங்களில் ரிவாயத்து செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸை ஆதாரமாக வைத்து நபியவர்களது வபாத்தைத் தொடர்ந்து அபூபக்ர் (ரழி) அவர்கள் கலீபாவாக தெரிவு செய்யப்பட்ட சமயத்தில், அலி (ரழி) தானே அதற்குத் தகுதிபெற்றவர் எனக் கருதியபோது சில ஸஹாபாக்கள் அவருக்கு ஆதரவளித்ததன் மூலம் இப்பிரிவு தோற்றம் பெற்றுவிட்டது என சீயாக்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
கலீபா உஸ்மான்(ரழி) அவர்களது ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகி பெரும் குழப்பங்களும் சர்ச்சைகளும் அதிகரித்தன. கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்படுமளவுக்கு மோசமடைந்தது.
கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கலீபா அலி (ரழி) அவர்களிடம் அநீதியான முறையில் கொலை செய்யப்பட்ட கலீபா உஸ்மான் (ரழி) அவர்களுக்காக பழி தீர்க்கப்பட வேண்டும் என ஒரு குழு கோரிக்கையை முன்வைத்தது.
புதிய கலீபாவினால் உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனதால் ஏற்பட்ட முரண்பாடுகள் கலீபாவுக்கும் ஷாம் தேச கவர்னர் முஆவியா (ரழி) அவர்களுக்கும் இடையே இரு அணியையும் அந்த அணியையும் சாராத குழுவாக முஸ்லிம்கள் மூன்று அணிகளாகப் பிரிந்தனர். கலீபாவின் மூன்றாவது அணி ஷீஅது அலி என்றும் முஆவியாவின் அணி ஷீஅது முஆலியா என்றும் அழைக்கப்பட்டது.
இதன் தொடராக அலி (ரழி) அவர்களது ஆதரவாளர் அணி தொடர்ந்தும் ஷீஆ என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று.
ஷீயா சிந்தனைப் பிரிவின் வளர்ச்சிக்கு மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களது காலத்தில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலையை, சில தீய சக்திகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதன் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருந்து கொண்டே ஸஹாபாக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணும் கைங்கரியத்தில் ஈடுபட்டான்.
ஸஹாபாக்களுக்கிடையே உஸ்மான் (ரழி) அவர்களுக்கு எதிராகவும் அலி (ரழி) அவர்களுக்கு ஆதரவாகவும் மக்களைத் தூண்டிவிட்டான். சமாதான முயற்சிகளைச் சீர்குலைப்பதற்கும் முஸ்லிம் சமுதாயத்தில் தொடர்ந்தும் பிளவுகளை ஏறபடுத்துவதற்கும் மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டான். இவன் அறிமுகப்படுத்திய கோட்பாடுகளாலும் இவனது பிரச்சார முயற்சியாலும் ஷீயாப் பிரிவு வளர்ச்சியுற்று தீவிர சக்தியாக மாறியதாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
உஸ்மான் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் ஷீஆ என்ற சொற்பிரயோகம் முதற்தடவையான குறிப்பிட்டதொரு அணியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. உஸ்மான் (ரழி) அவர்களை விட அலி (ரழி) அவர்கள் கிலாபதுக்கு முற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்களே ஷீஆக்கள் என முதற்தடவையாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
யஸீதுடைய காலத்தில் அலி (ரழி) அவர்களது மகன் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக்கிற்கு ஷீஆ பிரிவினரால் தந்திரமாக வரவழைக்கப்பட்டு கர்பலா என்ற இடத்தில் மிக துக்ககரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள். (பார்க்க)
இதன் பின்னரே ஷீஆ கொள்கை கர்பாலாவுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்தப்பட்டு வளர்ந்தது.
ஷீயாக்களின் அகீதா:
இன்று ஷீஆக்களிடையே காணப்படும் நம்பிக்கைகள், செயன்முறைகள் ஆகியவற்றுள் பல, தூய இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டுடன் கற்பனைகள், மூடநம்பிக்கைகள், பிறகலாசார சித்தாந்தங்கள் ஆகியன வலிந்து சேர்க்கப்பட்ட ஒரு கலவையாகும். அஹ்லுஸ் ஸான்னா வல் ஜமாஅத்தினருக்கு முரணாக அவர்களினால் தீவிரமாக நம்பப்படும் கோட்பாடுகளுள் சில வருமாறு:
இமாமத் (தலைமைத்துவம்):
தலைமைத்துவம் எனும் பொருள் தரும் “இமாமத்” என்ற சொற்பிரயோகம் ஷீஆக்களிடத்தில் அகீதா சார்ந்த விடயமாக நம்பப்படுகிறது. ஆகவே இமாமத்துக்குரியவர் அல்லாஹ்வினால் அல்லது முந்திய தலைவரினால் நியமிக்கப்படுகின்ற தெய்வீக அந்தஸ்துப் பெற்றவராக இருக்க வேண்டும் என்று நம்புகின்றனர். முஹம்மத்(ஸல்) அவர்கள் தனக்குப் பின் அலி(ரழி) அவர்களை இமாமாக நியமித்துச் சென்றார்கள். இது போன்று ஒவ்வொரு இமாமும் தனக்குப் பின்னால் வரக்கூடிய இமாமை முறையாக நியமித்துள்ளார்கள். இவர்களை விசுவாசித்து அரசியல், ஆன்மீகம், இஸ்லாமிய அறிவியல் ஆகிய துறைகளில் இவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது நபியை விசுவாசித்து அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது போன்றதாகும்.
ஷீயாக்களின் இந்நம்பிக்கையே கலீபாக்களான அபூபக்ர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரையும் இஸ்லாத்துக்காக அரும்பாடுபட்ட இன்னும் அதிகமான ஸஹாபாக்களையும் இவர்கள் வெறுப்பதற்குக் காரணமாக அமைந்தது.
ஷீயாக்களின் இமாமியத் நம்பிக்கைக்கு ‘கதிர்கும்’ எனும் இடத்தில் நபியவர்கள் கூறியதாகச் சொல்லப்படும் போலி ஹதீஸையே ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
ஷீயாக்கள் முன்வைக்கும் இமாமியத் கோட்பாட்டில் காணப்படும் குறைபாடுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
கதிர்கும் தொடர்பான ஹதீஸின் நம்பகமற்ற தன்மை.
இமாம்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதில் ஷீயாக்களிடம் காணப்படும் கருத்துவேறுபாடுகள்.
இமாம்களின் எண்ணிக்கையில் காணப்படும் கருத்துவேறுபாடுகள் இமாம்களின் எண்ணிக்கை பன்னிரண்டுடன் முற்றுப்பெறுதல்.
இமாமியத் கோட்பாடு ஷீயாக்கள் கூறும் ஆரம்ப கால இமாம்களிடம் காணப்படாமை.
ஷியாக்களின் நம்பிக்கைகள் அவ்வக்காலங்களில் தோன்றிய அரசியல் பின்னணிகளின் பின்புலத்தில் மாற்றங்களுக்குட்பட்டமை.
பிறகலாசாரத்தாக்கங்கள் செல்வாக்குச் செலுத்தியமை.
இமாமியத் சிந்தனையின் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:
முதல் இமாம் எனக்கருதப்படும் அலி(ரழி) அவர்களிடம் இமாமத் எனும் கோட்பாடு ஒருபோதும் இருக்கவில்லை. ஆகவே தான் அவர் தனக்கு முந்திய கலீபாக்கள் எவரையும் எந்த ஒரு காரணத்துக்காகவும் எதிர்க்கவில்லை. மாறாக அவர்களுக்கு மிகவும் விசுவாசமானவராகவும் அவர்களின் சிறந்த ஆலோசகராகவுமே இருந்துள்ளார்.
அவ்வாறுதான் ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) மற்றும் அலி இப்னு ஹுஸைன்(ரஹ்) ஆகியோரும் கலீபாக்கள் மூவர் மீதும் மிகுந்த மரியாதையுடனேயே இருந்துள்ளனர். இவர்கள் அலி(ரழி) அவர்கள் கலீபாக்களால் அநீதி இழைக்கப்பட்டார்கள் என்று கருதினார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.
நான்காவது இமாமாகிய அலி இப்னு ஹுஸைனுக்கு முஹம்மத், ஸைத் என்ற இரு ஆண் பிள்கைள் இருந்தனர். ஷீஆக்களில் ஒருசாரார் முஹம்மதையும் இன்னொரு சாரார் ஸைதையும் இமாமாகக் கொள்கின்றனர். ஆனாலும் இமாம் ஸைதைப் பொறுத்தவரையில் அவரது நிலைப்பாடு அலி(ரழி) அவர்களே கிலாபத்துக்கு மிகவும் தகுதியானவர் என்றாலும் அபூபக்ர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோரை ஒருபோதும் நிராகரிக்கவில்லை.
இமாம் ஸைதிடம் முதல் கலீபாக்கள் மூவரைப் பற்றியும் வினவிய போது அவர் நல்லதையே கூறினார். இதனால் கோபமடைந்த அவர்கள் இமாமின் நிலைப்பாட்டை நிராகரித்து அவரை விட்டும் பிரிந்து சென்றனர். அவ்வாறு சென்றவர்களே ராபிழ்கள் எனப்படுகின்றனர். இமாம் ஸைத் அவர்கள் உமையாக்களின் அடாவடித்தனங்களை எதிர்த்துப் போரிட்டமையினால் ஹிஜ்ரி 122ல் கொலை செய்யப்பட்டார். அதன் பின் உருவான பிரிவினரே ஸைதிகள் எனப்படுகின்றனர்.
இமாம் முஹம்மதுக்குப் பின் வந்த இமாம் ஜஃபர் ஸாதிக் (ரஹ்) தனது முன்னோரைப் போன்றே கலீபாக்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவராகவே திகழ்ந்தார். ஷீயாக்களிடம் காணப்படும் எந்த ஒரு நம்பிக்கையும் இவரிடம் இருக்கவில்லை. அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானவராகவே அவர் இருந்துள்ளார்.
ஜஃபர் ஸாதிக்(ரஹ்) அவர்களுக்குப் பின் மூஸா இப்னு ஜஃபர்(ரஹ்) இமாமாகக் கருதப்படுகிறார். இக்காலத்தில் அப்பாசியர் தமக்குச் சார்பாக அஹ்லுல் பைத் ஆதாரவாளர்களை இணைத்துக் கொண்டனர். இவர்களும் அப்பாஸியருக்கு ஆதரவளிப்பதன் மூலம் அரசியல் தலைமைத்துவத்தை அலி(ரழி) அவர்களின் பரம்பரையினருக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்று நம்பினர்.
அப்பாசியர் அஹ்லுல் பைத் ஆதாரவாளரின் எதிர்பார்ப்புக்கள் எவற்றையும் நிறைவேற்றாமையினால் ஏமாற்றமடைந்த நிலையில் இமாம் அலி அர்ரிழா(ரஹ்) திடீர் மரணம் எய்தவே அவரது மரணத்தில் அப்பாசியரைச் சந்தேகித்து எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இக்காலத்தில் இவர்கள் அபூதாலிபின் பெயரில் தாலிபிய்பூன்
என அழைக்கப்பட்டனர்.
அப்பாஸிய கிலாபத்துக்கெதிராக தாலிபிய்யூன்கள் கிளர்ச்சி செய்து கொண்டிருந்த சமகாலத்தில் பாரசீகர்களும் கிலாபத்துக் கெதிராகக் கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர்.
பலம் பெற்றிருந்த அப்பாஸிய கிலாபத்தை வீழ்த்துவது எளிதல்ல என்பதை உணர்ந்த பாரசீகர் தாலிபீன்கள் ஆதரவைப் பெறுவதன் மூலம் இதைச் சாதிக்கலாம் எனக் கருதினர். பாரசீகர்களின் இவ்விணைப்புதான் வெறும் அரசியல் பிரிவாக இருந்த அஹ்லுல் பைத் ஆதரவாளர்களாகிய முஸ்லிம்களிடையே பாரசீக நம்பிக்கைகளுடன் ஒன்றறக் கலந்த “ஷீஆ” என்ற சமயப்பிரிவு தோன்றுவதற்கு காரணமாய் அமைந்தது.
இமாம் அலி அர்ரிழாவின் மரணத்தைத் தொடர்ந்து, மரணிக்கின்ற இமாமின் மூத்த புதல்வனே அடுத்த இமாமாகத் தெரிவு செய்யப்படும் மரபு தோன்றியது. மூத்த பிள்ளைக்கு அரசதலைமைத்துவத்தை வழங்குதல் பாரசீக மரபுகளில் ஒன்றாகும்.
பதினோராவது இமாம் ஹஸன் இப்னு அலி அல்அஸ்கரி என்பவர் ஹி 260ல் மரணிக்கும் போது 5 வயது சிறுவனாக இருந்த அவரது மூத்த மகன் முஹம்மத் இமாமாகத் தெரிவு செய்யப்பட்டார். துரதிஷ்ட வசமாக முஹம்மத் தனது சிறுவயதிலேயே மரணித்தமையினால் இமாமத் பதவிக்கு வாரிசு ஒருவர் இல்லாத நிலையினால் கலவரமடைந்த ஷீயாக்கள் இமாம் மரணித்தார் என்று கூறாமல் தற்காலிகமாக மறைந்து விட்டார் என்ற நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டனர்.
கபா:
மறைவு என்று மொழிரீதியாக பொருள்படும் இச்சொற்பிரயோகம் ஷீஆக்களிடத்தில் அகீதா சார்ந்த ஒரு சொற்பிரயோகமாகும். ஷீஆக்களில் ஒவ்வொரு பிரிவினரும் கடைசி இமாம் யார் என்பதில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஓர் பதுங்கு குழியினுள் மறைந்து வாழ்கிறார் என்ற நம்பிக்கையில் அனைத்துப்பிரிவினரும் பெரும்பாலும் உடன்படுகின்றனர். அவர்கள் குறிப்பிடும் அம்மறைவே கபா என்று அழைக்கப்படுகின்றது.
ரஜீ்ஆ:
ரஜ்ஆ என்றால் மொழி அடிப்படையில் மீண்டு வருதல் என்று பொருள். அகீதாத்துறையில் இது சீயாக்களின் ஒரு கோட்பாடாகும். அக்கோட்பாட்டின்படி சீயாக்கள் தமது மறைந்து போன இமாம் மீண்டும் வருவார் என்றும் அவர் சீயாக்களின் உரிமைகள் அனைத்தையும் மீட்டிக் கொடுப்பார் என்றும் நம்புகின்றனர்.
இஸ்மத்:
இஸ்மத் என்பதன் மொழிக்கருத்து தடுப்பு, பாதுகாப்பு என்பதாகும். அகீதாத் துறைப் பரிபாசையில் பாவங்கள் தவறுகள் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையைக் குறிக்கிறது. அவ்வாறு விலக்களிக்கப்பட்டவர் மஃஸும் என்று அழைக்கப்படுகின்றார்.
ஷீயாக்களது அகீதாவில் இமாம்கள் மஃஸும்களாவர். அதன்படி இமாம்களிடமிருந்து சிறிதோ பெரிதோ வேண்டுமென்றோ மறதியாகவோ எத்தகைய பாவங்களோ தவறுகளோ நிகழ்வதில்லை.
தகிய்யா:
தகிய்யா என்பதன் மொழிக்கருத்து பாதுகாத்துக் கொள்ளல் என்பதாகும். பரிபாசையில் சீயாக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவோ அல்லது தமது பிரசார நடவடிக்கைகளுக்காகவோ தமது நம்பிக்கைக்கு முரணாக வெளிப்படுத்தும் தந்திரோபாயமான செயற்பாடுகளைக் குறிக்கிறது. ஷீஆக்கள் தகிய்யாவை அகீதா சார்ந்த விடயமாகவே நோக்குகின்றனர். யாரிடம் தகிய்யா இல்லையோ அவரிடம் ஈமான் இல்லை என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
தீனா:
களிமண் எனப் பொருள் தரும் இச்சொல் சீயாக்களிடத்தில் ஹுஸைன் (ரழி) அவர்களது அடக்கஸ்தலத்திலிருந்து பெறப்பட்ட மண்ணுடன் தொடர்பான சில நம்பிக்கைகளைக் குறிக்கிறது. குறிப்பிட்ட அம்மண் அனைத்து நோய்களுக்கும் மருந்து என்று இவர்கள் நம்புகின்றனர்.
முத்ஆ:
இன்பப் பொருள் என்பது இதன் மொழிக்கருத்து. பரிபாசையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில் செய்து கொள்கின்ற தற்காலிகத் திருமணம் முத்ஆ எனப்படுகிறது.
இஸ்லாத்தில் நிரந்தரமாக ஹராமாக்கப்பட்ட முத்ஆ திருமணத்தை ஷீஆக்கள் தமது சமய நம்பிக்கையின் மிகமுக்கிய அமலாகக் கருதுகின்றனர். அதனை நிராகரித்தவர் மார்க்கத்தையே நிராகரித்தவர் என்பதே அவர்களது நிலைப்பாடு
ஷீயா ஒரு கொள்கையாக வளர்ச்சிபெறல்:
ஷீஆ இயக்கத்தின் இமாம்களில் ஒருவரான ஜஃபர் ஸாதிக் (ரஹ்) (ஹி.40:148) மற்றும் ஷீஆ சிந்தனையாளரான ஹிஷாம் பின் ஹகம் (ஹி.190மரணம்) போன்றோர் ஷீஆக் கொள்கைகளை வகுத்தில் முன்னணி வகித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னர் முஸ்லிம் உம்மத்தின் தலைவராக அலி (ரழி) அவர்களை நியமித்து விட்டுச் சென்றார் என்ற கருத்தை முதன் முதலாக ஹி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிஷாம் பின்ஹகம் ஆவார்.
ஷீஆ, சிந்தனையின் வரலாற்றில் அல்குர்ஆன், ஹதீஸின் மூலம் அலி (ரழி) அவர்களது தலைமைத்துவத்திற்கு ஆதாரங்கள் முன்வைக்கும் மரபு ஹிஷாம் பின் ஹகமுக்குப் பின்பே தோற்றம் பெற்றது. இவ்வாறு அல்குர்ஆன் வசனங்களுக்கூடாகவும் நபி (ஸல்) அவர்களது நபி மொழிக்கூடாகவும் அலி (ரழி) அவர்களது தலைமைத்துவத்திற்கு ஆதாரம் முன் வைக்கும் ஷீஆக் கொள்கை வரலாற்றில் அகீதுந் நஸ் வல் வஸிய்யா எனப்படுகிறது.
இக்கொள்கையை முதன் முதலாக ஹிஷாம் பின் ஹகம் முன்வைக்க அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்களும், பின்னால் வாழ்ந்தவர்களும் அதனைப் பிரசாரம் செய்தார்கள். இந்த வகையில் ஹத்தாத், அபூ ஸஈத் வராக், இப்னு ராவன்தி போன்றோர் இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இக்கொள்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஷீயா(க் கட்சி) தனியான சிந்தனைப் பிரிவாக மாறியது. இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய ஏனைய சிந்தனைப் பிரிவுகளிலிருந்து ஷீயா இயக்கத்தை வேறுபடுத்தும் அடிப்படைக் கொள்கையாகவும் இது கருதப்படுகிறது. ஷீயது அலி - அலியின் கட்சியினர் என்ற அரசியல் நிலைப்பாடாக மாத்திரம் இருந்த நிலை மாறி ஷீயா என்பது ஒரு கொள்கையாக வளர்ச்சி கண்டது.
எனினும், அஹ்லுல் பைத் எனப்படும் நபியவர்களது குடும்பத்தினரை நேசிப்பதன் மூலம் ஒருவர் ஷீயாக் கொள்கையைச் சார்ந்தவராக ஆகிவிட முடியாது. அலி (ரழி) அவர்களது தலைமைத்துவத்திற்கு ஆதாரமாக முன்வைக்கப்படும் இக்கொள்கையை நம்புபவரே ஷீஆக் கொள்கையின் அங்கத்தவனாக ஷீஆ, சமூகத்தினால் கருதப்படுவர். இந்த வகையில்தான் அலி (ரழி) அவர்களின் ஆதரவாளர்களாகவோ அல்லது. அவரது அணியைச் சார்ந்தவர்களாகவோ இருப்பவர்கள் ஷீஆக்களாக கருதப்படுவதில்லை.
அலி (ரழி) அவர்கள் ஷீஆக் கொள்கையின் ஸ்தாபகரோ ஷீஆவோ அல்லர் மாறாக ஷீஆக்களின் வழிதவறிய கொள்கைகளிலிருந்து முற்றிலும். நிரபராதியானவர்கள். இந்நிலையில் அலி (ரழி) அவர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் ஷீஆக்கள் என நம்பிக்கை கொள்வது வழிதவறிய நிலைப்பாடாகும்.
ஷீயாக்களின் உட்பிரிவுகள்:
நபி (ஸல்) அவர்களுக்குப்பின் அலி(ரழி) அவர்களுக்கே அரசியல் ஆன்மிகத் தலைமைத்துவம் செல்ல வேண்டும் என்ற தீவிர நம்பிக்கைக் கோட்பாடு காரணமாக பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தை விட்டும் பிரிந்து சென்ற ஷீயாக்கள் ஹுஸைன்(ரழி) அவர்களுக்குப்பின் அடுத்த இமாம் யார் என்ற விடயத்தில் ஒவ்வொரு இமாமின் மரணத்தைத் தொடர்ந்தும் தமக்கு மத்தியில் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக தமக்குள் இன்னும் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்றனர். ஷீயாக்கள் எவ்வாறு பிரிந்து சென்றார்கள் என்பது பற்றி ஷீயாக்களின் பேரறிஞர்களில் ஒருவரான அல்லாமா தபதபாயி பின்வருமாறு விளக்குகிறார்.
இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தின் பின் ஷீயாக்களில் பெரும்பான்மையினர் அலி இப்னு ஹுஸைன் அஸ்ஸஜ்ஜாதினுடைய இமாமத்தை ஏற்றுக் கொண்ட அதேவேளை, கிஸானிய்யா என்று அறியப்பட்ட ஒரு குழுவினர் அலியின் மூன்றாவது புதல்வாரன முஹம்மத் இப்னு ஹனபிய்யாவை நான்காவது இமாம் என்றும் வாக்களிக்கப்பட்ட மஹ்தி அவரே என்றும் நம்பினர். இமாம் ஸஜ்ஜாதின் மறைவிற்குப்பின் ஷீயாக்களில் பெரும்பான்மையினர் அவரது புதல்வர் முஹம்மத் பின் பாக்கிரை இமாமாக ஏற்றுக் கொண்டனர். இமாம் அல் ஸஜ்ஜாதின் இன்னொரு புதல்வாரன ஸைத் அல் ஷஹிதைப் பின்பற்றிய சிறுபான்மையினர் ஸைதிகள் என அறியவரப்பட்டனர்.
இமாம் முஹம்மத் அல்பாகிரைத் தொடர்ந்து ஷீயாக்கள் அவரது புதல்வர் ஜஃபர் அல் ஸாதிகை இமாமாக ஏற்றுக் கொண்டனர். இமாம் ஜஃபரின் மறைவுக்குப்பின் பெரும்பான்மையினர் அவரது புதல்வர் மூஸா அல் காழிமைப் பின்பற்றினர். எனினும் ஒரு கூட்டத்தினர் ஆறாம் இமாமின் மூத்த புதல்வர் இஸ்மாயீலைப் பின்பற்றத் தொடங்கினர். இஸ்மாயீல் தந்தையார் உயிருடன் இருக்கும் போதே காலமானார்.
இவரைப் பின்பற்றிய கூட்டத்தார் பெரும்பான்மை ஷீயாக்களிடமிருந்து பிரிந்தும் இஸ்மாயிலிகள் எனப்பட்டனர். ஏனையோர் ஆறாவது இமாமின் ஒரு புதல்வாரன அப்துல்லாஹ் அல் அப்தாவையோ அல்லது மற்றொரு புதல்வாரன முஹம்மதையோ இமாமாக ஏற்றுக் கொண்டனர். இறுதியாக இன்னொரு கோஷ்டியினர் ஆறாம் இமாமைக் கடைசி இமாமாகக் கருதி அவருடன் நிறுத்திக் கொண்டனர். அதே போன்று இமாம் மூஸா காழிமின் உயிர்த் தியாகத்தின் பின் பெரும்பான்மையினர் அவரது புதல்வர் அலி அழ்ரிழாவை எட்டாவது இமாமாகப் பின்பற்றினர். எனினும் ஒரு சிலர் ஏழாவது இமாமுடன் நிறுத்திக் கொண்டனர். அவர்கள் வாகிபிய்யா எனப்பட்டனர்.
பத்தாவது இமாமின் புதல்வர் ஜஃபர் தம் சகோதரரான பதினோராவது இமாமின் மறைவிற்குப்பின் தாமே இமாமென உரிமை கொண்டாடினார். ஒரு கோஷ்டியினர் அவரைப் பின்பற்றிய போதிலும் சில நாட்களில் அவர்கள் சிதறிப் போயினர். அதன் பின் ஜஃபரும் இமாமென உரிமை கோருவதை விட்டுவிட்டார்.
ஷியாக்கள் பற்றி ஆய்வு செய்தவர்கள் அவர்களுக்கு மத்தியில் எழுபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் காணப்படுவதாக் கூறுகின்றனர்.
முக்கியமானவைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. இஸ்னாஅஷ்அரிய்யா
2. கைஸானிய்யா
3. பத்ஹிய்யா
4. வாகிபிய்யா
5. நுஸைரிய்யா
6. ஸைதிய்யா
7. இஸ்மாஈலிய்யா
இஸ்னாஅஷ்அரிய்யா:
இஸ்னாஅஷ்அரிய்யா என்றால் பன்னிருவரைச் சார்ந்தோர் எனப் பொருள்படும் பிரிவினர் இவ்வாறு அழைக்கப்படக் காரணம் இவர்கள் இமாம்களின் மொத்த எண்ணிக்கை பன்னிரண்டு என்று நம்புவதனாலாகும். அத்துடன் இவர்கள் இமாமிய்யா என்றும் அழைக்கப்படுகின்றனர். இஸ்னாஅஷ்அரிகளே இன்று உலகில் மிகக்கூடிய எண்ணிக்கையும் செல்வாக்கும் கொண்ட ஷீஆப் பிரிவினராவர்.
இஸ்மாஈலிய்யா:
இமாம் ஜஃபர் ஸாதிகின் மூத்த பிள்ளையாகிய இஸ்மாஈல் என்பவரைப் பின்பற்றுபவர்களே இஸ்மாலிய்யா எனப்படுகின்றனர். இவர்கள் வாக்களிக்கப்பட்ட மஹ்தி இஸ்மாஈல் என்றும் அவர் மரணிக்கவில்லை மீண்டும் வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் தந்த உயிருடன் இருக்கும் போதே இஸ்மாஈல் மரணித்துவிட்டார் என்றே பெரும்பாலான ஷியாக்கள் நம்புகின்றனர் இஸ்மாஈலின் இமாமத்துடன் தொடர்பான விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுயாட்டினால் உருவாகிய இப்பிரினர் காலப்போக்கில் இன்னும் பல பிரிவுகளாகப் பிரிந்தனர்.
பாத்தினிகள்:
பாத்தினிய்யாக்களின் சமயக் கோட்பாட்டை நிறுவியவர்கள் நெருப்பு வணங்கிகளான “மஜுஸ்கள்” என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டள்ளனர். இவர்கள் தமது மூதாதையர்களான நெருப்பு வணங்கிகளின் வழியில் ஈர்க்கப்பட்டவர்களாக விளங்கினர்.
நெருப்பு வணங்கிகளான பாரசீகர்கள் முஸ்லிம் மன்னர்களின் வாள்களுக்கு முகம் கொடுப்பதற்கு அஞ்சியே தமது கொள்கையை வவளிக்காட்டாது மறைத்துக் கொண்டனர். இவர்களில் யூத மதகுருவும் பல்சமய சிந்தனையாளருமான மைமூன் அல் கத்தாஹ் என்று அறியப்பட்ட மைமூன் பின் தைஸான் என்பவனோடு 'இணைத்து, தன்தான் என்ற புனைப் பெயரில் அறிமுகமான முஹம்மத் பின் அல் ஹுஸைன் என்ற தத்துவ மேதை, இறை மறுப்பாளனாகிய ஹம்தான் கர்மத், மற்றும் அபூஸயீத் அல்ஜனாபி போன்றவர்கள் முக்கியமானவர்கள். (ஸமியறின் அடிக்குறிப்பில் இருந்து)
பாத்தினிய்யா எனப்படும் இஸ்மாயீலிய்யா பிரிவினர் ஒரு இரகசிய இயக்கமாகும். அவர்கள் ஷீஆக்களிலும் பார்க்க எல்லை மீறிய, அவர்களில் இருந்து பிரிந்த மற்வறாரு வழிகெட்ட பிரிவாகும். அதன் ஸ்தாபகராக மைமூன் அல் கத்தாஹ் என்ற யூதன் இடம்பெறுகின்றான்.
ஷாம் மற்றும் பாரஸீக ஈரானில் தோன்றிய இந்தப் பிரிவினர் திரைமறைவில் முஸ்லிம் அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சிகளை நியாயப்படுத்தும் சிந்தனையை முன் நிறுத்தி ஆரம்பத்தில் தமது நடவடிக்கைகளை இரகசியமாக முன்னைடுத்தனர்.
தமது வழிகெட்ட சித்தாந்தத்தினை யூதப் பரம்பரையில் வந்த மைமூன் பின் தைஸான், அல்கத்தாஹ், மற்றும் அவனது மகன் அப்துல்லாஹ் அல்லது உபைதுல்லாஹ் மைமூன் அல்கத்தாஹ் என்பவர்கள் வாயிலாகவும், எகிப்தில் உபைதிய்யாக்களால் நிறுவப்பட்ட தாருல்ஹிக்மா, மற்றும் அல்பாதிமிய்யா போன்ற கல்விக் கூடங்களில் இருந்தும், கராமித்தாக்கள் போன்றோரிடம் இருந்தும்
பெற்றுக் கொண்டனர்.
எகிப்தில் பாத்திமிய்யாக்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, அதன் செல்வாக்கை இழக்க ஆரம்பித்த போது, மறைந்து காணப்பட்ட இந்தப் பிரிவினரின் சிந்தனைகள் முஸ்லிம் உலகில் வெளிப்படத் தொடங்கின என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
நல்லவர்களான அஹ்லுல் பைத்தினர் (நபியின் குடும்பத்தின்) பெயரில் நெருப்பு வணங்கிகளின் பாரம்பரிய சிந்தனைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் முழுமையாகப் பிரதிபலிக்கின்ற இந்தப் பிரிவினரின் தொடக்கம் நெருப்பு வணங்கிகளின் தேசமான பாரஸீகம் என்பதுதான் உண்மை.
இஸ்லாமிய அடிப்படைகளை சிதைத்து, இஸ்லாமிய ஆட்சியை ஆட்டங்காணச் செய்யும் நோக்கில் பாமரர்களையும், கல்வி அறிவற்றவர்களையும் பயன்படுத்திப் பல இரகசியக் குழுக்களை இவர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் உருவாக்கி, தமது நகர்வுகளை முன்னெடுத்து வெற்றி கண்டனர். இன்றும் தனித்த ஒரு குழுவாகவே 'இயங்கிவருகின்றனர்.
இவர்கள் வரலாற்றில் தோன்றிய மிகமோசமான பிரிவினராவர். இவர்கள் மதுவை ஹலாலாக்கிக் கொண்டனர். தொழுகையை இரு நேரமாக்கினர். தமது கொள்கை சாராத ஏனைய முஸ்லிம்களைக் கொலை செய்வதை ஹலாலாக்கிக் கொண்டனர். இவர்கள் மக்காவுக்குச் சென்று பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களைக் கொலை செய்து ஹஜருல் அஸ்வத் கல்லை யெமனுக்கு எடுத்துச் சென்றனர். இவர்கள் இஸ்லாத்தின் புற அம்சங்களை அந்தரங்கமான முறையில் அர்த்தப்படுத்துவதன் காரணமாக பாதினிகள் எனப்படுகின்றனர். இடைப்பட்ட ஒரு காலத்தில் கராமைத் என்பவரால் வழிநடாத்தப்பட்டதனால் இவர்கள் கராமிதாக்கள் என்றும் அழைக்கப்படுன்றனர். விரிவாக அறிய
நிஸாரிகள்:
இஸ்மாயிலிய வழியில் வந்த எகிப்தை ஆட்சி செய்த பாத்திமீக்களின் ஏழாவது தலைமுறை இமாமின் மறைவுக்குப்பின் முஸ்தாலிக், நிஸார் என்ற அவரது இரு புதல்வர்களுக்கிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் விளைவாக பாத்திமீக்கள் இரு பிறிவினராகப் பிரிந்தனர். அவர்களுள் நிஸாரை ஆதரித்தவர்கள் நிஸாரிகள் எனப்படுகின்றனர். ஆரம்பத்தில் இவர்கள் இஸ்மாயிலியப் பிரிவின்பால் மக்களை அழைத்தனர். பிற்காலத்தில் பாரசீகத்தில் பிறந்த ஆகாகான் என்ற நிஸாரி பிரிவைச் சேர்ந்தவர் பம்பாய்க்குத் தப்பிச் சென்று அங்கு பாதினிய சிந்தனையுடன் கலந்த ஒரு நம்பிக்கையினைப் பிரச்சாரம் செய்தார். இதனால் இன்று நிஸாரிகள் ஆகாகானிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
முஸ்தாலிகள்:
அல்முஸ்தாலியைப் பின்பற்றியோர் முஸ்தாலிகள் எனப்படுகின்றனர். பாதிமிய ஆட்சி வீழ்ச்சியுறும் வரை எகிப்தில் இவர்கள் செல்வாக்குடன் திகழ்ந்தனர். முஸ்தலிக்குகளின் சிந்தனையை முழுமையாகத் தத்தெடுத்தவர்களே இன்று போராக்கள் (நுஸைரிகள்) எனப்படுகின்றனர்.
துரூஸ்கள்:
ஸிரியாவின் துரூஸ் மலைப்பிரதேசத்தில் வாழ்ந்த பாதிமி கொள்கை வழியில் வந்தவர்களே துரூஸ்களாவர். பின்னர் நஷ்தாகின் என்பவரது மதப்பிரச்சாரப் பணி காரணமாக பாத்தினிப்பிரிவில் சேர்ந்தனர். இவர்களது பிரதான நம்பிக்கை ஆறாவது பாத்திமி கலீபா அல்ஹக்கீம் பில்லாஹ் மரணிக்கவில்லை, அவர் விண்ணுலகம் சென்றுள்ளார், மீண்டும் அவர் வருவார் என்பதாகும்.
முகன்னாஹ்:
குராசானைச் சேர்ந்த மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கை வைத்த முகன்னா என்பவரைப் பின்பற்றும் ஷீயாக்ளே முகன்னாப் பிரிவினர் எனப்படுகின்றனர். ஆரம்பத்தில் தன்னை நபியென்று வாதிட்ட முகன்னா பின்னர் தான் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் கூறிக்கொண்டார். இவரும் இவரது சீடர்களும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஏனையோர் இஸ்மாயிலியத்தை தழுவி பாத்தினி வழியைப் பின்பற்றினர்.
ஸைதிக்கள்:
ஹுஸைன்(ரழி) அவர்களின் மகன் அலி அவர்களின் இரண்டாவது புதல்வர் ஸைத்(ரஹ்) அவர்களைப் பின்பற்றியவர்களே ஸைதிகள் எனப்படுகின்றனர். இவர்கள் ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருக்கு மிகவும் நெருக்கமான ஷீஆப்பிரிவினராவர். இமாம் ஸைத்(ரஹ்) அவர்களிடம் காணப்பட்ட ஒரே ஒரு மாற்றுக் கருத்து நபியவர்களுக்குப்பின் கிலாபத்துக்கு மிகவும் தகுதிபெற்றவர். அலி (ரழி) அவர்கள் என்பதாகும். என்றாலும் இமாம் ஸைத் அவர்கள் ஒருபோதும் முதல் மூன்று கலீபாக்கள் பற்றி குறை கூறியதில்லை.
நுஸைரிக்கள்:
முஹம்மத்பின் நுஸைர் என்பவரினால் உருவாக்கப்பட்ட ஷீஆப்பிரிவினரே நுஸைரிகள் எனப்படுகின்றனர். இவர்கள் அலவிய்யூன்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஷீயாக்களில் மிகவும் மோசமான பிரிவினர்களாகவே இவர்கள் வரலரற்றில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். அலி (ரழி) அவர்களுக்கு தெய்வீக அந்தஸ்த்து இருப்பதாக வாதிடும் இவர்கள் அலி(ரழி) அவர்களைக் கொலை செய்த இப்னு முல்ஜிமையும் நேசிக்கின்றனர். அத்துடன் இஸ்லாம் ஹராமாக்கிய பல விடயங்களை தமக்கு ஹலாலாக்கிக் கொண்டுள்ளனர். இவர்கள் பற்றி இமாம் இப்னு தைமியா (ரஹ்) பின்வருமாறு கூறுகிறார்கள். “பாதினிப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் யூதர்களையும் கிறிஸ்த்தவர்களையும் விட நிராகரிப்பில் கூடியவர்கள். முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் செய்த தாத்தாரிகளைவிடவும் இவர்கள் ஆபத்தானவர்கள். தாத்தாரியர்கள் இவர்களது உதவியுடனேயே முஸ்லிம் நாடுகளுக்குள் நுழைந்து கலீபாவையும் அதிகமான முஸ்லிம்களையும் கொலை செய்தனர்”
நுஸைரிப் பிரிவைச் சேர்ந்த ஷியாக்கள் இன்று சிரியாவிலும் துருக்கியிலும் வாழ்கின்றனர். சிரியாவில் நீண்ட காலமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் அஸாத் குடும்பத்தினரும் நுஸைரிப்பிரிவைச் சேர்ந்த ஷீயாக்களே ஆவர்.
ஷீயாக்கள் பற்றிய அஃலுஸ்ஸுன்னாக்களின் நோக்கு:
அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்கள் ஷீயாக்களின் உட்பிரிவுகளுக்கு ஏற்ப அவர்கள் பற்றிய மூன்று வகையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
1. நேர்வழியில் செல்வோர்:
அகீதா ரீதியில் அல்லாமல் மேலோட்டமான சில விடயங்களில் மாத்திரம் கருத்து வேறுபாடு கொண்டவர்கள்.
2. வழிகேடர்கள்:
அகீதாவில் சில புதிய விடயங்களை இணைத்துக் கொண்டாலும் ஈமானின் அடிப்படையான விடயங்களில் அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் அமைய விசுவாசம் கொள்பவர்கள்.
3. காபிர்கள்:
ஈமானின் அடிப்படை அம்சங்களில் அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணாக விசுவாசம் கொள்பவர்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் ரீதியாக தோற்றம் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த பிரிவுகளில் ஷீயாக்கள் மிகவும் முக்கியமானவர்கள். “ஷீயது அலி” அலியின் கட்சி என்ற சொல்லிலிருந்தே ஷீயாக்கள் என்ற சொல் தோற்றம் பெற்றது.