தாகூத்து என்றால் என்ன?

தாகூத் என்றால் வரம்புமீறிய சக்தி என்று பொருள். 

இமாம் தப்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 தாகூத் என்பதைக் குறித்து என்னிடம் சரியான கருத்து என்னவெனில், அல்லாஹ்விற்கு எதிராக வரம்பு மீறுகின்றவைகளும், அவனல்லாமல் வணங்கப்படுவைகளும் தாகூத் ஆகும். வணங்குவோரின் மீது அது அடக்குமுறை செய்வதாக இருந்தாலும் சரி அல்லது அதனை வணங்குவோர்கள் அதற்கு கட்டுப்படுவதன் மூலமாக இருந்தாலும் சரி, இன்னும் அது மனிதனாகவோ அல்லது ஷைத்தானாகவோ, சிலையாகவோ, வேறு எதுவாக இருந்தாலும் சரி அனைத்துமே தாகூத் ஆகும். 

 நூல்: தஃப்சீர் தப்ரி - 5/419. 
                                                
 அல்பகரா 256 வசனத்தின் விளக்கத்தில் இதனை கூறியுள்ளார்கள். 
                                                
 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 தாகூத் என்பது கட்டுப்படுவதிலும், பின்பற்றுவதிலும், வழிபடுவதிலும், அடியார்கள் வரம்பு மீறும் அனைத்தும் தாகூத் ஆகும். அவ்வாறே அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய சட்டத்திற்கு புறம்பாக யாரிடம் தீர்ப்பை நாடி மக்கள் செல்வார்களோ அல்லது அல்லாஹ்வை விட்டு யாரை வணங்குவார்களோ அல்லது அல்லாஹ்விடமிருந்துள்ள வழிகாட்டுதல் இல்லாமல் யாரை பின்பற்றுவார்களோ அல்லது அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதைக் குறித்து அறியாமல் பிறருக்கு கட்டுப்படுவதும் தாகூத் ஆகும். இவை அனைத்தும் உலகத்தின் தாகூத்கள் ஆகும். இவைகளைக் குறித்தும், இவைகளுடன் மக்கள் நடந்து கொள்ளக்கூடிய நிலைகளையும் சிந்தித்துப் பார்த்தால், அதிகமானவர்கள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டு தாகூத்தை வணங்குவதன் பக்கம் வழிமாறிச்‌ சென்றார்கள் என்பதையும், அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் தீர்ப்பை நாடி செல்வதற்கு பதிலாக தாகூத்திடத்தில் தீர்ப்பை நாடிச் செல்வதையும் இன்னும் அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப்படுவதையும், அவரைப் பின்பற்றுவதையும் விட்டுவிட்டு தாகூத்திற்கு கட்டுப்பட்டு அதனைப் பின்பற்றுவதையும் காணலாம். 

 நூல்: இஅலாமுல் முவக்கிய்யீன் - 1/40 
                                                
 இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 தாகூத்துக்கள் ஏராளமாக உள்ளனர் அவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் ஐவர். 
                                                
 1. அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடிபணியுமாறு அழைப்பு விடுக்கும் ஷைத்தான் இதுபற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. 
                                                
 اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِىْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَ‌‌ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ 

 “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா? 

 (அல்குர்ஆன் : 36:60) 
                                                
 2. அல்லாஹ்வுடைய சட்டத்தை மாற்றுகின்ற அக்கிரமக்கார அரசன்: இவன் இஸ்லாத்துக்கு மாறான சட்டமொன்றை ஏற்படுத்துகின்றவனைப் போலாவான். அல்லாஹ் அங்கீகரிக்காதவற்றை மார்க்கமாக்கக் கூடிய இணைவைப்பவர்களை மறுத்து பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான். 
                                                
 اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ اللّٰهُ‌ 

 அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? 

 (அல்குர்ஆன் : 42:21) 
                                                
 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيْدُوْنَ اَنْ يَّتَحَاكَمُوْۤا اِلَى الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ يَّكْفُرُوْا بِهٖ  وَيُرِيْدُ الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْ ضَلٰلًا بَعِيْدًا 

 (நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான். 

 (அல்குர்ஆன் : 4:60) 
                                                
 3. அல்லாஹ் அருளாததைக் கொண்டு தீர்ப்பளிக்கும் நீதிபதி: 

 அல்லாஹ் அருளிய சட்டம் பொருத்தமற்றது என்று நம்புதல், அல்லது அவனுடைய சட்டமல்லாததைக் கொண்டு தீர்ப்பளிப்பதை ஆகுமாக்குதல் போன்ற ‌செயல்களையே, இவன் தனது தொழிலாகக் கொள்வான். இதுபற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. 
                                                
 وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ 

 எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாகக் காஃபிர் (நிராகரிப்பவர்)களே! 

 (அல்குர்ஆன் : 5:44) 
                                                
 4. அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் மறைவானவற்றை அறியும் ஆற்றலுண்டு என்று கூறுதல்: 

 இதுபற்றிக் குர்ஆன் கூறுவதாவது: 
                                                
 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ 

 (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; 

 (அல்குர்ஆன் : 27:65) 
                                                
 عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖۤ اَحَدًا ۙ اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۙ 

 “(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். 

 “தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக ஏற்படுத்துகிறான். 

 (அல்குர்ஆன் : 72:26,27) 
                                                
 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ 

 அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. 

 (அல்குர்ஆன் : 6:59) 
                                                
 5. அல்லாஹ்வை விடுத்து யாரை வணங்கப்படுகிறதோ, அவர் அதனை பொருந்திக் கொண்டால் அவரும் காஃபிர் ஆவார். 

 இதுபற்றிக் குர்ஆன் கூறுவதாவது: 
                                                
 وَمَنْ يَّقُلْ مِنْهُمْ اِنِّىْۤ اِلٰـهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِيْهِ جَهَـنَّمَ‌ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ 

 அவர்களில் எவனாவது அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் ஓர் ஆண்டவன் தான் என்று கூறினால் அவனுக்கு நரகத்தையே நாம்  கூலியாக்குவோம். அக்கிரமக்காரர்களுக்கு (அவர்கள் எவராயினும்) இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். 

 (அல்குர்ஆன் : 21:29) 
                                                
 அறிந்துகொள்ளுங்கள்! ஒரு முஃமின் தனது ஈமானில் உறுதியாக இருப்பதற்காக தாகூத்துகளை நிராகரிப்பது அவன் மீது கடமையாகும். குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது. 
                                                
 فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌  وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ 

 எவன் ஷைத்தானை நிராகரித்து விட்டு, அல்லாஹ்வை விசுவாசிக்கிறானோ, அவன் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டான். அல்லாஹ் செவியுறுவோனும் அறிவோனுமாக இருக்கின்றான். 

 (அல்குர்ஆன் : 2:256) 

 நூல்: மஜ்மூஅத்து தௌஹீத் - 377,378. 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
أحدث أقدم