சூஃபித்துவத்தின் கொள்கைகள்.

மார்க்கம் சிறப்பிற்குரியவர்களுக்கு மட்டுமே உரிய ஹகீகத் என்றும், பொதுமக்களுக்குரியது ஷரீஅத் என்றும், தீனுக்கும், அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் மார்க்கத்தை கூறுபோடுவது பாத்திலாகும் 
                                                
 இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளிலிருந்து வழிதவறிச் சென்ற, சூஃபிய கொள்கையின் தவறான கோட்பாடுகளைப் பற்றிதான் இந்த உஸுல் பேசுகிறது. 
                                                
 சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்: 

 1. ஷரீஅத் (மார்க்கம்), 
 2. தரீக்கத் (ஆன்மீகப்பயிற்சிபெறல்), 
 3. ஹகீக்கத் (யதார்த்தத்தை அறிதல்), 
 4. மஃரிபத் (மெஞ்ஞான முக்தியடைதல்) 

 என இவர்கள் இஸ்லாத்தை நான்கு அம்சங்களாக வகுத்து வைத்துள்ளார்கள். இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது. 
                                                
 1. ஷரீஅத் (மார்க்கம்) 
                                                
 சூஃபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற சாதாரண மார்க்க கடமைகளைக் குறிக்கும். இவர்களின் கருத்துப்படி, ஆரம்ப நிலையிலுள்ள உண்மையை அறியாத, பண்படாத சாதாரண பாமர மக்களுக்குரிய ஆன்மீகப்பயிற்சி நெறிகளே இவ்வகை வணக்கங்களாகும். இவற்றால் மனிதனுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. நெல்லை மூடியிருக்கும் உமி போன்றதே ஷரீஅத் சட்டங்கள். உள்ளேயிருக்கும் அரிசியைப் போன்றதுதான் ஹகீகத். ஆரம்பப் பருவத்தில் உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி அவசியம்தான். எனினும் காலப் போக்கில் கதிர் முற்றியதும் அறுவடையின் பின் உமியை நீக்கித் தூர வீசி விடுவது போன்று ஹகீகத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை, மார்க்க கடமைகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதே இவர்களின் கோட்பாடு. ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே இவற்றை ஒருவன் செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய விரும்புபவன் உமியைத் தூக்கி வீசிவிடுவது அவசியம் போன்று, ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான அமல்களை - மார்க்க கடமைகளை விட்டுவிட வேண்டும் என்பதே இவர்களின் கோட்பாடு. 
                                                
 2. தரீக்கத் (ஆன்மீகப் பயிற்சி பெறல்) 
                                                
 அன்றைய சூஃபித்துவவாதிகள் முதல் இன்றுள்ள நவீன சூஃபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விஷயம்தான் இந்த தரீக்காவாகும். இதில் பல படித்தரங்கள்‌ உள்ளன. சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர், முதலில் ஒரு ஷெய்க் கிடத்தில் பைஅத் செய்து, அவர் செல்லும் வழியில் நடைபயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர். அதாவது ஒரு ஆன்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள், புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த நிலைக்கு கொண்டு வருதல் வேண்டும். இதற்கான பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷெய்க் காக இருப்பவரே முன்னின்று சொல்லிக் கொடுப்பார். 
                                                
 இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு கூறுகின்றார்: 

 தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்), ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர் (விழித்திருத்தல்), ஸூம்து (மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும். 

 நூல்: இஹ்யா உலூமுத்தீன் - 2/243. 
                                                
 அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும். இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக்காலில் நிற்றல், தலைகீழாக நிற்றல், முள்ளின் மீது அமர்தல், நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷெய்க் கானவர் மேற்கொள்வார். 
                                                
 இவர் கூறும் அனைத்தையும் "முரீது" (சீடர்) எவ்வித மறுப்போ, வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது சூஃபித்துவத்தின் பொது விதி, சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷெய்க்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கு எவ்வித விருப்பு, வெறுப்போ, சுய சிந்தனையோ இருக்கக் கூடாது. அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக்கூடாது. அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவி உட்பட) எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன் ஓதுதல், திக்ர், அறிவைத் தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக்கூடாது. 

 நூல்: அல் அன்வாருல் குத்ஸிய்யா - 1/187. 
                                                
 அபூ யஸீத் அல் புஸ்தாமி எனும் சூஃபி கூறுகின்றார்: 

 ஒரு ஷெய்க் கானவர் தனது முரீதை ஒரு வேலையின் நிமித்தம் வெளியே அனுப்பினால், அவன் போகும் வழியிலேயே தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் இந்த முரீதானவன் இப்போது உடனடியாகத் தொழுது விட்டு அதன்பின் அந்த வேலையை முடிக்கலாம்தானே என்று எண்ணிவிட்டால் கூட அவன் ஆழமறியாத ஒருபாதாளக் கிணற்றினுள் வீழ்ந்தவனைப் போலாவான் என்கின்றார். 

 நூல்: ஸத்ஹாத்துஸ் சூஃபிய்யா ப - 343. 

 3. ஹகீக்கத் (யதார்த்தத்தை அறிதல்) 
                                                
 ஹகீக்கத் எனப்படுவது சூஃபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது. தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூஃபிகளை நாடும் போது, முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில் தள்ளி, தம்மை தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்க கூடாது எனும் நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் ஞானதீட்சை  பெற்ற பின்னர் அவனுக்கு சூஃபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம். அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான் உண்மை யதார்த்த நிலை. ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. அவர்களிடம் "ஞானதீட்சை" பெறாதவர்களுக்குத் தெரிவிப்பதும் இல்லை. காரணம் இவர்கள் கூறும் பைத்தியக்காரத்தனமான உளறல்களையும், ஷைத்தானிய வசனங்களையும், பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனை கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப் பாமரனும் இல்லை. எனவே இவனால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது. ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின் குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். "ஆப்பசைத்த" குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும். ஆதாரம் இருந்தால்தானே சமர்ப்பிக்க முடியும். இந்துப் புராணங்களில், யூத, கிறிஸ்தவ, கிரேக்க தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம். குர்ஆன் ஹதீஸில் கிடைக்குமா? அதனால் தான் தமது சூஃபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று, மூளையை அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த ஹகீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதுவும் அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன். 
                                                
 அது என்ன ரகசியம்? என்ன ஹகீக்கத்? என்று பார்ப்போம். 
                                                
 அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான். அவனின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் என்பதை தெரிந்து கொள்வதே ரகசியம் நாம் பார்க்கும், கேட்கும், தொடும் அனைத்துமே, நான், நீ, அவன், அவள், அது, வானம், பூமி, சந்திரன், சூரியன், ஆடு, மாடு, நாய், பன்றி அனைத்துமே அல்லாஹ்தான் (இத்தகைய எண்ணங்களை விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக) கடலிலுள்ள நீர்தான் அலையாகவும், நுரையாகவும், உப்பாகவும் பரிணமித்திருப்பது போல், அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத் தோற்றம் தருகின்றான். அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே பைத்தியக்காரர்களின் மஃரிபத் எனும் மூட தத்துவம். இதை அறிந்தவர்தான் ஞானி - ஆரிப் என இவர்களிடம் அழைக்கப்படுவார். 
                                                
 பிரபல சூஃபி கஸ்ஸாலி சொல்கிறார்: 

 அல்லாவை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார். ஏனெனில் அனைத்து பொருட்களுமே அவனிலிருந்தே, அவனை நோக்கியே, அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே. 

 நூல்: இஹ்யா உலூமுத்தீன் - 1/254. 
                                                
 தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கிறார்.... 

 மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே பயணிக்கும்போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள், எல்லாம் ஒன்றே எனும் ஓர்வையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து (غيرية) வேறொன்று என்ற வார்த்தை பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கிவிடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் "நான் தான் அல்லாஹ்" என்றும், வேறு சிலரோ 'நானே அல்லாஹ், நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்' என்றும், வேறு சிலர் 'எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை' என்றும் கூறியிருக்கின்றார்கள். 

 நூல்: மிஸ்காதுல் அன்வார் - ப:122 
                                                
 இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்: 

 ஆரிப் என்பவர் எல்லா பொருட்களிலும் அல்லாஹ்வையே காண்பார். ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும். முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் அல்லாஹ் என்றே அழைத்தார்கள். அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச்சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள், அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள். 

 நூல்: புஸூஸூல் ஹிகம் - இப்னு அரபி ப:192 
                                                
 இதுதான் வழிகெட்ட இந்த சூஃபிகள் சொல்லும் ரகசியம். இது வழிகேட்டின் உச்சம், இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதை பாமரன் கூட எடுத்துக் கூறாமலேயே அறிந்து கொள்வான். இது சுத்த பைத்தியக்காரர்களின் உளறல். முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரணமானவன் கூடச் சொல்வான். அல்குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர், கலப்பற்ற ஷிர்க் என்று விவரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும். 
                                                
 4. மஃரிபத் (மெஞ்ஞானம்) 
                                                
 சூஃபிகளின் கூற்றுப்படி தேவையற்ற ஷரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூஃபிக் குருவின் சீடனாகி, தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும், சுய சிந்தனையையும் பறிகொடுத்து, பின்னர் ஹகீக்கத் என்னும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில்(!?) (சூஃபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால்) 'பனாஃ' எனும் நிலை ஏற்படுமாம். இதற்கு இறைநினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் (அதாவது தன்னிலை மறந்து விடும் நிலை) என்று சூஃபிகள் வாதிடுகின்றனர். 
                                                
 உண்மையில் இது போதை மயக்கத்தில் பேதலித்து விடுவதால், அல்லது ஊண் உறக்கமின்றி சதா காலமும் ஏதோ ஒன்றை நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பதால் ஏற்படும் ஒருவகை மூளைக் குழப்பம் அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலை என்பதில் சந்தேகமில்லை. 
                                                
 அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு விருப்பமான, அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த, இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கே இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையே.. இப்படியொரு பனாஃ நிலைக்குச் சென்று இவர்களைப் போல் உளறவில்லையே... நபியவர்களை விட இந்த சூஃபிகள் இறைநேசர்களா? அவர்களை விடக் கடுமையான வணக்கசாலிகளா? 
                                                
 அவர்களுக்குத் தெரியாத ஹகீக்கத்தை (ரகசியத்தை) இவர்கள் தெரிந்து கொண்டார்களா? 
                                                
 நபியவர்களின் ஆன்மீக பாசறையில் பயிற்சி பெற்ற லட்சக்கணக்கான ஸஹாபாக்களில் ஒருவருக்கேனும் இப்படியொரு நிலை ஏற்பட்டுப் புலம்பியதாக வரலாறு உண்டா? அப்படி இந்த சூஃபிகள் நிரூபிப்பார்களா? அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல்குர்ஆனிலேயே அறிவிக்கப்பட்ட அந்த இறை நேசர்களுக்குக் கற்பிக்காத ரகசியத்தை இந்த சூஃபிகளுக்கு கற்றுக் கொடுத்தானா? இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளான். 
                                                
 இங்கே சொல்லப்பட்ட பெருவாரியான தகவல்கள் மௌலவி. முஹம்மத் ஜலீல் (மதனீ) எழுதிய சூஃபித்துவ தரீக்காக்கள் அன்றும், இன்றும் என்ற ஆக்கத்திலிருந்து பெறப்பட்டது. 
                                                 

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
 
أحدث أقدم