ஸுன்னாவின் ஒளியில் வுழூ

ARM. ரிஸ்வான் (ஷர்கி)

சுவர்க்கத்தின் திறவுகோலாக தொழுகை அமைந்திருப்பது போல் தொழுகையின் திறவுகோலாக வுழூ அமைந்திருக்கிறது என்பது நபி மொழியாகும் (திர்மிதி).

தொழுகை என்ற உயர்ந்த, உன்னதமான வணக்கத்தை ஓர் அழகிய அரண்மனையாக கற்பனை செய்தால் அதை திறக்கும் திறவுகோலாக வுழூவை கருத முடியும். அனைத்தலுகினதும் இரட்சகனான அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் உரையாடல் என நபியவர்களால் வர்ணிக்கப்பட்ட வணக்கமாகிய தொழுகையை வுழூ இன்றி நிறைவேற்றவே முடியாது என்பதன் மூலம் வுழூவின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

வுழூவின் மகிமை, அதன் சிறப்பு குறித்து நபிகளார் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலாகித்திருக்கிறார்கள். அவற்றுள் சில :

ஒரு தடவை நபிகளார் அவர்கள் '(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, அந்தஸ்துகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்;  அல்லாஹ்வின் தூதரே!' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் வுழூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும்' எனக் கூறினார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்).

நாம் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படுவது மட்டுமன்றி மறுமையில் நமது அந்தஸ்துகள் உயர்த்தப்படுவதற்கும் நாம் செய்கின்ற சில விநாடிகள் கொண்ட வுழூ காரணமாய் அமைகிறது என
மேற்படி ஹதீஸ் குறிப்பிடுகிறது. கீழ்வரும் ஹதீஸ்களும் இதை மேலும் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன :

1. நபியவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் வுழூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு  வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார் (ஸஹீஹ் முஸ்லிம்).

2. ஒருவர் முறையாக வுழூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகங்களுக்கு கீழிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன (ஸஹீஹ் முஸ்லிம்).

3. நிச்சயமாக எனது சமூகத்தினர் வுழூ செய்ததன் அடையாளமாக முகம், கைகள், கால்கள் பிரகாசித்து இலங்கும் நிலையில் மறுமையில் வருவார்கள் (புஹாரி, முஸ்லிம்).

மேற்படி ஹதீஸ்கள் வுழூவின் அதியுன்னத மகிமையை தெளிவாக புலப்படுத்துகின்றன.

'வுழூ என்பது முன்வாழ்ந்த எந்தவொரு சமூகத்துக்கும் வழங்கப்படாத, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்துக்கு மட்டும் வழங்கப்பட்ட விசேட இறை அருட்கொடைகளுள் ஒன்றாகும் என்பதை,

"எனது சமூகம் வுழூ செய்ததன் அடையாளமாக  முகம், கைகள், கால்கள் பிரகாசித்து இலங்கும் நிலையில் மறுமையில் வருவார்கள்" (புஹாரி, முஸ்லிம்) என்ற ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.

அதே நேரம் இப்னு மாஜாவிலும் முஸ்னத் அஹ்மதிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸான,

"ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு வுழூவை கற்றுத்தந்தார்கள். இந்த வுழூ எனக்கும் எனக்கு முன் வாழ்ந்த நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட ஒன்றாகும்" என்பது ஆதாரமாக கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸாகும்' என வுழூவின் சிறப்பம்சம் குறித்து ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (பார்க்க : 'தவ்ழீஹுல் அஹ்காம்' , 1/193).

இவ்வகையில்  இச்சமூகத்துக்கென பிரத்தியேகமாக வழங்கப்பட்ட தனித்துவமிக்க வணக்கமாக வுழூ திகழ்கிறது.

நாம் நிறைவேற்றுகின்ற எந்த வணக்கமாயினும் அது அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் இரண்டு பிரதான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பது அவசியமாகும் :

1. அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றுதல்

2. நபியவர்கள் நிறைவேற்றியது போன்று, அதே ஒழுங்கு முறைப் பிரகாரம்  நிறைவேற்றுதல்.

மேற்படி இரு நிபந்தனைகளில் எது விடுபட்டாலும் அல்லாஹ்வினால் எந்தவொரு வணக்கமும் - சிறியதாயினும் பெரியதாயினும் -  ஏற்றுக்கொள்ளப்படாது. 

வுழூ என்பதும் பிரதான ஒரு வணக்கம் என்ற வகையில், அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு அதை நிறைவேற்றுவது அவசியம் என்பது போல், நபியவர்கள் வுழூ செய்த முறைகளை அறிந்து தெரிந்து அதே முறைப்படி வுழூ செய்வதும் அவசியமாகும். 

நபிகளார் வுழூ செய்த முறைகளை இந்த சமூகத்துக்கு கற்றுகொடுப்பதற்காகவே பல ஸஹாபாக்கள் தமது மாணவர்கள், தோழர்கள் பலர் பார்த்திருக்க, அவர்கள் முன்னிலையில் தண்ணீர் கொண்டு வரச்செய்து வுழூ செய்து காட்டி செயல்முறை ரீதியாக வுழூ செய்யும் முறையை கற்பித்திருப்பதை பல ஹதீஸ்களின் வாயிலாக அறிகிறோம். 

குறிப்பாக உஸ்மான் (றழி), அலி (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத்  (றழி), அபூஹுரைரா  (றழி), அனஸ்  (றழி) போன்றோரும், பெண் ஸஹாபியாவான றுபையிஃ  (றழி) போன்றோரும் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி செயல்முறை ரீதியாக விளக்கிய  ஸஹாபாக்களுள் முக்கியமானவர்களாவர். அவர்கள் விளக்கிய ஒழுங்கில் நபியவர்கள் வுழூ செய்த முறையை நாம் நோக்கலாம்.

ஸஹாபாக்கள் விபரித்த ஒழுங்கில்  நபிகளார் வுழூ செய்த முறை பற்றி நோக்குவோம் :

1. அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதனால் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது வுழூ செய்வதாக மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதற்கென தனியான  அரபு வாசகம் எதுவும் மொழிய வேண்டியதில்லை. நமக்கு வழிகாட்டுவதற்கென்றே அனுப்பப்பட்ட நபிகளார் நிய்யத் வைப்பதற்கென்று அரபு வாசகங்கள் எதையும் வுழூவுக்கும் கற்றுத் தரவில்லை, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கும் கற்றுத்தரவில்லை. 

எனவே தொழ ஆரம்பிக்கும் போது 'உஸல்லீ பர்ழ...' என்று கூறுவதற்கோ, நோன்பு நோற்கும் போது 'நவைத்து ஸவ்ம கதின்...' என்று கூறுவதற்கோ நபிகளார் நமக்கு கற்றுத் தரவில்லை.

'நிய்யத்' என்ற அரபுப் பதத்திற்கு 'மனதில் நினைத்தல்' என்பதே அர்த்தமாகும். அவ்வகையில் நிய்யத் என்பது உள்ளம் சார்ந்த ஒரு செயலாகும். உள்ளம் சார்ந்த ஒரு செயலை உள்ளத்தினால்தான நிறைவேற்ற வேண்டும். எனவே ஒருவர் ஒரு வணக்கத்தை நிறைவேற்றும் போது அந்த வணக்கத்தை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுவதாக  மனதில் நினைத்துக்கொண்டால் அதுவே நிய்யத் ஆகும்.  

நபிகளார் கூறினார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் மனதில் நினைத்ததற்கேற்பவே (கூலி) கிடைக்கிறது...' (ஸஹீஹுல் புஹாரி)

2. பிஸ்மில்லாஹ் என்று கூறி ஆரம்பித்தல்.

நபிகளார் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் பெயர் கூறாதவருக்கு வுழூ இல்லை' (இப்னு மாஜஹ், திர்மிதி, அபூதாவூத்).

இந்த ஹதீஸ் பலவீனமானது என இமாம் அஹ்மத் உட்பட சில ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டாலும், ஹதீஸ்கலை விதிகளின் அடிப்படையில் வேறு பல அறிவிப்பாளர்களின் வழிகளினூடாக இந்த ஹதீஸ் வந்துள்ளதால் இது  ஆதாரபூர்வமானது என்ற தரத்தை அடைகிறது என பிரபல ஹதீஸ்துறை மேதைகளான இமாம் இப்னு கதீர், இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : 'மின்ஹதுல் அல்லாம்', 1/221).

மேற்படி ஹதீஸின் வார்த்தை அமைப்பை நோக்கும் போது வுழூவின் ஆரம்பத்தில்  பிஸ்மி கூறுவது கட்டாயம் என்பது போல் தோன்றுகிறது. இதனால்தான் பிஸ்மில்லாஹ் கூறுவது கட்டாயம் என இமாம் அஹ்மத் (ஓர் அறிவிப்பின் படி), இமாம் இஸ்ஹாக், இமாம் ஷவ்கானி, ஷெய்க் அல்பானி (ரஹிமஹுமுல்லாஹ்) போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : 'தமாமுல் மின்னா', 89).

ஆயினும் இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (மற்றொரு அறிவிப்பின் படி), இமாம் இப்னு ஹஸ்ம், ஷெய்க் பின் பாஸ், ஷெய்க் உஸைமீன் (ரஹிமஹுமுல்லாஹ்) உள்ளிட்ட  பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி 
பிஸ்மில்லாஹ் கூறுவது ஸுன்னத்தாகும். இக்கருத்தே ஆதார வலுக்கூடிய கருத்தாகும். 

ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் வுழு பற்றி கூறும் போது பிஸ்மில்லாஹ் கூறுமாறு குறிப்பிடவில்லை. அது கட்டாயமானதென்றால் அல்லாஹ் அது பற்றியும் கூறியிருப்பான்.

அடுத்து, நபிகளார் வுழூ செய்த முறை பற்றி விபரித்த ஸஹாபாக்களும் பிஸ்மில்லாஹ் பற்றி கூறவில்லை (பார்க்க : 'மின்ஹதுல் அல்லாம்', 1/222-224).

எனவே பிஸ்மில்லாஹ் கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே நபிகளார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள்.  எனவே வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறுவது ஸுன்னத்தான காரியம் என்றாலும்  அதை நாம் தொடராக பேணுவது மிக வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும். 

3. நீரை மிக சிக்கனமாக பயன்படுத்தி வுழூ செய்தல் :

நபியவர்கள் இரு முறைகளில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வழிகாட்டியுள்ளார்கள் :

அ ) மிக குறைந்தளவான நீரில் வுழூ செய்தல் :

நபிகளார் வுழூவின் போது நாம் ஆச்சரியப்படுமளவுக்கு மிக குறைந்தளவான நீரையே பயன்படுத்துவார்கள்.

'நபியவர்கள் இரு கைகளினால் ஒரு தடவை அள்ளியெடுக்கும் அளவுள்ள நீரில் வுழூ செய்து முடிப்பார்கள்' (புஹாரி, முஸ்லிம் ). இந்த அளவுதான் நபியவர்கள் பெரும்பாலான நேரங்களில் வுழூ செய்யும் நீரின் அளவாக இருந்தது.

வுழூவுக்காக தண்ணீரை அள்ளியிறைக்கும் நமது சமூகத்திலுள்ள மிகப் பெரும்பாலானோருக்கு இது ஆச்சரியமளிக்கும் தகவலாக இருக்கலாம். 'இது சாத்தியமே இல்லை' எனலாம். ஆனால் நபிகளார் சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.

ஆ) மூன்று தடவைகளுக்கு மேல் உறுப்புகளை கழுவாதிருத்தல் :

ஒரு தடவை நபியவர்களிடம்  நாட்டுப்புற ஸஹாபி ஒருவர் வுழூ செய்யும் முறை பற்றி வினவினார். நபியவர்கள் அவருக்கு மூன்று தடவைகள் உறுப்புகளை கழுவுமாறு கூறிவிட்டு ' மூன்று தடவைகளுக்கு மேல்  அதிகப்படுத்துபவர் மோசம் செய்துவிட்டார், எல்லைமீறிவிட்டார், அநியாயம் செய்துவிட்டார்' என்று கூறினார்கள் (அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜஹ்). 

மூன்று தடவைகளை விட அதிகமாக செய்வோருக்கு மூன்று கண்டனங்களை நபியவர்கள் மேற்படி ஹதீஸில் தெரிவிக்கிறார்கள் எனில், வுழூவின் போது நீரை சிக்கனமாக பயன்படுத்துவது எந்தளவு முக்கியமானது என்பது தெளிவாகிறது.

மற்றொரு தடவை நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ' சுத்தம் செய்வதிலும் துஆ செய்வதிலும் எல்லைமீறுகின்ற கூட்டத்தினர் என் சமூகத்தில் தோன்றுவார்கள்' (அஹ்மத், அபூதாவூத்). இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என  சமகால ஹதீஸ்துறை அறிஞர்களான ஷெய்க் அல்பானி, ஷெய்க் ஷுஐப் அல்அர்னஊத், ஷெய்க் அப்துல் காதிர் அல்அர்னஊத்  ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

சுத்தம் செய்வதில் எல்லைமீறுவதை  மேற்படி ஹதீஸில் நபியவர்கள் கண்டிக்கிறார்கள். வுழூவின் போது அதிகளவான நீரை தேவை ஏதுமின்றி பயன்படுத்துவதை, சுத்தம் செய்வதில் எல்லைமீறும் செயலாக அறிஞர்கள் அடையாளப்படுத்துகிறார்கள் (பார்க்க : 'ஸாதுல் மஆத்' , 1/184).

சிலர் வுழூ செய்யும் போது தமக்கு திருப்தி ஏற்படும் வரை நீரை இறைத்து உறுப்புகளை கழுவிக்கொண்டே இருப்பார்கள். மூன்று தடவைகள் கழுவிய பின்னரும் திருப்தி ஏற்படவில்லையெனில், அது ஷைத்தான் உள்ளங்களில் ஏற்படுத்தும் 'வஸ்வாஸ்' எனப்படும் மனக்குழப்பமாகும். இது போன்ற தேவையற்ற மனக்குழப்பங்கள் உள்ளங்களை அரிக்க நாம் இடமளிக்ககூடாது. ஒரு விடயத்தில் நபிகளாரின் வழிகாட்டல் என்ன என்பது உறுதியாகிவிட்டால், அதில் பூரண திருப்தியடைய வேண்டும். அதுவே முஃமின்களின் பண்பாகும்.  

எனவே  வுழூ செய்யும் போது நபிகளாரை பின்பற்றி நீரை மிக சிக்கனமாக பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திகொள்ள வேண்டும்.

4) பற் துலக்குதல் :

பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள்  சான்று :

1.  'நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?' என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது 'பற் துலக்குவது' என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).

2. நபிகளார் மரணத் தருவாயில் ஆயிஷா (றழி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்துகொண்டிருந்த வேளை அங்கு வந்த அன்னை ஆயிஷாவின் சகோதரர் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களின் கையில் பற் துலக்கும் குச்சி இருப்பதை நீண்ட நேரம்  அவதானித்துகொண்டே இருந்ததை கண்ட ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் பற் துலக்க விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து,  அந்த குச்சியை தம் சகோதரரிடமிருந்து பெற்று மென்று நபியவர்களுக்கு பற் துலக்கி விட்டார்கள் (ஸஹீஹுல் புஹாரி). மரணம் நெருங்கிய வேளையிலும் பற் துலக்குவதை நபிகளார் விரும்பியிருக்கிறார்கள்.

அதிலும் விசேடமாக, வுழூவின் போது பற் துலக்குவதை அல்லாஹ்வின் தூதர் அதிகமாக வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நபிகளார் அவர்கள் கூறினார்கள்:  'என் சமூகத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்' (புஹாரி, முஸ்லிம்).

மற்றோர் அறிவிப்பில் '... ஒவ்வொரு முறை வுழூ செய்யும் போதும் பல் துலக்குமாறு ஏவியிருப்பேன்' என்று கூறியுள்ளார்கள் (திர்மிதி, அபூதாவூத்).

வுழூவின் போது பற் துலக்குதல் கட்டாயக்கடமை இல்லை என்ற போதிலும், தொழும் போது நம்மைப் படைத்த அல்லாஹ்வுடன் நாம் உரையாடுகிறோம், மலக்குகள் நம்மோடு தொழுகையில் ஒன்றாக சங்கமிக்கிறார்கள், பல முஸ்லிம்களுடன் நாம் அணிவகுத்து நிற்கிறோம் என்ற உணர்வு எமக்கு ஏற்பட்டால் வுழூ செய்யும் போதெல்லாம் பற் துலக்குவதை தவறவிட மாட்டோம்.

நபிகளார் கூறினார்கள் : 'பற் துலக்குவது வாயை சுத்தப்படுத்துவதோடு, அல்லாஹ்வின் திருப்தியையும் பெற்றுத்தரும்' (புஹாரி, நஸாஈ).

ஆண்கள் மட்டுமன்றி வீடுகளில் தொழும் பெண்களும் வுழூவின் போது பற் துலக்குவதை வழக்கப்படுத்திகொள்வது மிகச் சிறந்தது.

எந்த சந்தர்ப்பபத்தில் பற் துலக்குவது என்பதில் அறிஞர்களிடையே இரு கருத்துகள் காணப்படுகின்றன : 

சில அறிஞர்கள் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது பற் துலக்குவதே நல்லது எனக்கூற,   
பெரும்பாலானோர் வாய்க்கு நீர் செலுத்தும் போது பற்துலக்க வேண்டும் எனக் கூறுகின்றனர் (பார்க்க : 'பத்ஹு தில் ஜலாலி வல் இக்ராம்', 1/172, 'மின்ஹதுல் அல்லாம்' , 1/141). 

நபிகளாரின் ஸுன்னாவில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு வருகிறது :

'நபியவர்கள் தமது மனைவி மைமூனா  (றழி) அவர்களின் வீட்டில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இரவில் கியாமுல் லைல் தொழுவதற்காக எழுந்து பற் துலக்கிவிட்டு வுழூ செய்தார்கள்' (ஸஹீஹ் முஸ்லிம்).

மேற்படி ஹதீஸின் வெளிப்படையான வாசக அமைப்பை நோக்கும் போது, நபிகளார் பற்துலக்கி விட்டு வுழூ செய்தார்கள் என்று அமைந்திருப்பதால், பற் துலக்கிவிட்டு வுழூ செய்ய ஆரம்பிப்பதே  சிறந்ததாக தோன்றுகிறது என சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்பவ்ஸான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  ஆயினும் வாய்க்கு நீர் செலுத்தும் வேளையில் பற்துலக்கினாலும் குற்றமில்லை (பார்க்க : 'மின்ஹதுல் அல்லாம்' , 1/142).

வழக்கமாக பல முஸ்லிம்கள் பற் துலக்க பயன்படுத்துகின்ற குச்சியை பயன்படுத்துவது போன்றே,  குச்சி இல்லாதவர்கள் பற் தூரிகையை (ப்ரஷ்) பயன்படுத்துவதனாலும் இந்த ஸுன்னாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கும்.

5)  இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுதல் :

உஸ்மான் (றழி), அலி (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி), அபூஹுரைரா (றழி) ஆகிய ஸஹாபாக்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நபிகளார் வுழூ செய்த முறையை செயல்முறை ரீதியாக விபரித்த போது,  ஆரம்பமாக இரு கைகளிலும் நீரை ஊற்றி மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவினார்கள் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்).

இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவது கட்டாயம் அல்ல, அது ஸுன்னத் ஆகும் என்பதே மிக பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது கைகளை கழுவுதல் பற்றி கூறவில்லை. கட்டாயம் என்றிருந்தால் அது பற்றி கூறியிருப்பான்.

ஆயினும் தூங்கி எழுந்த பின் பாத்திரம் அல்லது தொட்டி போன்றவற்றினுள் வுழூ செய்வதாயின் இரு கைகளையும் அதனுள் இடுவதற்கு முன் கைகளை கழுவிக்கொள்வது கட்டாயமானது என சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பின்வரும் ஹதீஸை அதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள் :

'உங்களில் ஒருவர் தூங்கி எழுந்ததும் தனது கையை கழுவாமல் பாத்திரத்தினுள் இட வேண்டாம். ஏனெனில் தூக்கத்தில் அவரது கை எதை தொட்டது என்பதை அவர் அறியமாட்டார்' (புஹாரி, முஸ்லிம்).

அதே வேளை கைகளை கழுவும் போது இரு கைவிரல்களையும் ஒன்றாக கோர்த்து கழுவ வேண்டும்.

நபியவர்கள் லகீத் (றழி) அவர்களுக்கு பின்வருமாறு கூறினார்கள் :
'வுழூவை பூரணமாக செய்துகொள். விரல்களுக்கிடையே கோதி கழுவிக்கொள்...'(அபூதாவூத், திர்மிதி).

வுழூ செய்யும் போது தலை மற்றும் இரு காதுகளை தவிர ஏனைய உறுப்புகளை அதிக பட்சம் மூன்று தடவைகளோ, அல்லது இரு தடவைகளோ, அல்லது ஒரு தடவையோ கழுவ முடியும். இதற்கான ஆதாரங்களாவன :

1. நபியவர்கள் வுழூவின் போது தலையையும் காதுகளையும் தவிரவுள்ள ஏனைய உறுப்புகளை மூன்று தடவைகள் கழுவினார்கள் என்பதை உஸ்மான் (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) ஆகியோர் அறிவிக்கும் ஹதீஸ்களில் காணமுடிகிறது (புஹாரி, முஸ்லிம்). 

2. நபியவர்கள் (சில வேளை) உறுப்புகளை இரு  தடவைகள் கழுவினார்கள் (புஹாரி).

3. நபியவர்கள் (சில வேளை) உறுப்புகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தடவை கழுவினார்கள் (புஹாரி).

இவ்வாறே ஒரு வுழூவின் போது சில உறுப்புகளை ஒரு தடவையும் சில உறுப்புகளை இரு தடவைகளும் சில உறுப்புகளை மூன்று தடவைகளும் கழுவ முடியும். பின்வரும் ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது :

'நபியவர்கள் ஒரு தடவை வுழூ செய்த போது முகத்தை மூன்று தடவைகள் கழுவினார்கள். கைகளை இரு தடவைகள் கழுவினார்கள். தலையை ஒரு தடவை தடவினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்).

6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :

நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :

1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :

அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) அவர்கள் நபியவர்கள் வுழூ செய்த முறையை செய்துகாட்டிய போது, தமது ஒரு கையினால் தண்ணீரை எடுத்து வாயினுள்ளும் மூக்கினுள்ளும் நீர் செலுத்தினார்கள் (புஹாரி, முஸ்லிம்).

நபிகளார் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் வுழூ செய்யும் போது தனது மூக்கினுள் நீரை செலுத்தி மூக்கை சிந்திவிடவும்' (புஹாரி, முஸ்லிம்).

அலி (றழி) அவர்கள் நபியவர்கள் வுழூ செய்த முறையை கற்பித்த போது தனது வலது கையினால் நீரை அள்ளி வாயிலும் மூக்கிலும் செலுத்தி இடது கையினால் மூக்கை சிந்தினார்கள்... இறுதியில் ' நபியவர்கள் வுழூ செய்த முறையை அறிய ஆசைப்படுபவர் இதுதான் நபி செய்த வுழூ என்பதை தெரிந்துகொள்ளட்டும்' என்று கூறினார்கள் (ஸுனனுத் தாரமீ )
- இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2. இரண்டையும் ஒரே தடவையில் செய்தல் :

அதாவது வாய்க்கு நீர் செலுத்துவதையும் மூக்கினுள் நீர் செலுத்துவதையும் தனித்தனியாக செய்யாமல் வலது கையினால் நீரை எடுத்து இரண்டையும் ஒன்றாகவே நிறைவேற்றுதல். 

சில அறிஞர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாய்க்கும் மூக்கிற்கும் தனித்தனியாக தண்ணீரை எடுத்து இரண்டையும் தனித்தனியாக செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். அந்த ஹதீஸாவது, 

நபியவர்கள் வாய்க்கு நீர் செலுத்துவதையும் மூக்கினுள் நீர் செலுத்துவதையும் தனித்தனியாக பிரித்து செய்தார்கள் (அபூதாவூத்).

ஆயினும் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஸர்ரிப் மற்றும் அவரது தந்தை ஆகியோர் அறியப்படாதவர்கள்  என்பதனால் இது பலவீனமான ஹதீஸாகும் என இமாம் இப்னுல் கத்தான் (ரஹ்),  ஹாபிழ் இப்னு ஹஜர் (றஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : ' மின்ஹதுல் அல்லாம்' , 1/226 ).

பலவீனமான ஹதீஸை நடைமுறைப்படுத்த முடியாது என்ற வகையில் வாய்க்கும் மூக்குக்கும் நீர் செலுத்துவதை ஒன்றாகவே செய்யவேண்டும் என்பது உறுதியாகிறது.

3. நோன்புடன் இருக்கும் போது மூக்கினுள் சிறிதளவாக நீரை செலுத்துதல்

நபியவர்கள் லகீத் இப்னு ஸப்ரா (றழி) அவர்களுக்கு வுழூ செய்யும் முறையை கற்பித்த போது ' நோன்பாளியாக இருந்தாலே தவிர ஏனைய வேளைகளில் மூக்கினுள் நன்றாக நீர் செலுத்திக்கொள்...' என்று கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி).

மேற்படி ஹதீஸ் நோன்புடன் இருக்கும் போது மூக்கினுள் அதிகமாக நீர் செலுத்தக்கூடாது என்பதை குறிப்பிடுவதோடு, நோன்பு இல்லாத நிலையில் மூக்கினுள் நன்றாக நீர் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது

07) முகம் மற்றும் இரு கைகளை முழங்கை உட்பட கழுவுதல் :

முகம் முழுவதையும் கழுவுதல் வுழூவின் கட்டாயக் கடமைகளுள் ஒன்றாகும். 

அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது முகம் கழுவுதல் பற்றியே முதலாவதாக குறிப்பிடுகிறான் :

'விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு ஆயத்தமானால் உங்கள் முகங்களையும் முழங்கை வரை உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்...' (5:6)

நபிகளாரின் வுழூ பற்றி அறிவிக்கும் அனைத்து ஸஹாபாக்களும் நபியவர்கள் முகம் கழுவியதை குறிப்பிடுகிறார்கள் (புஹாரி, முஸ்லிம்)

முகத்தின் எல்லை என்பது அகலவாக்கில் ஒரு காதுச் சோணையிலிருந்து மறு காதுச் சோணை வரைக்கும்; நீளவாக்கில் நெற்றியின் முடி முளைக்கும் பகுதியிலிருந்து நாடி வரைக்குமான பகுதியாகும். 
இப்பகுதிக்குட்பட்ட முகம் முழுவதையும் -  கன்னக்குழி போன்ற பள்ளமான பகுதி மற்றும் மூக்கின் கீழான மறைவான பகுதி உட்பட அனைத்தையும் நல்ல முறையில் கழுவுவது கட்டாயமாகும். பலர் முகத்தை கழுவும் போது இவ்வாறான மறைவான, பள்ளமான பகுதிகளை சரிவர பேணி கழுவுவதில் தவறிவிடுகின்றனர்.

முகம் கழுவும் போது தாடியையும் கோதி கழுவுவது முக்கியமான ஸுன்னத்தாகும்.

'நபியவர்கள் வுழூ செய்யும் போது தமது தாடியை கோதி கழுவுவார்கள்' என உஸ்மான் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் (திர்மிதி, இப்னு மாஜஹ்)

அனஸ் (றழி) கூறுகிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்தால் ஒரு கையில் தண்ணீரை எடுத்து அதை தமது தாடை பகுதியில் இட்டு தாடியை கோதி கழுவுவார்கள். இவ்வாறு செய்து விட்டு 'எனது இறைவன் இவ்வாறு செய்யுமாறு ஏவினான்' எனக் கூறுவார்கள் (அபூதாவூத், பைஹகீ).

முகத்தை நன்றாக ஒரு தடவை அல்லது இரு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கழுவிய பின் இரு கைகளையும் அவ்வாறே ஒரு அல்லது இரு அல்லது மூன்று தடவைகள் முழங்கை வரை கழுவுவது கட்டாயமாகும்.

முன்னதாக குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் முகத்துக்கு அடுத்து இரு கைகளையும் முழங்கை வரை கழுவுமாறு  அல்லாஹ் ஏவுகிறான் (5:6).

இவ்வாறே ஸுன்னாவில் நோக்கும் போது நபியவர்கள் முகத்தை கழுவிய பின் இரு கைகளையும் முழங்கை வரை கழுவியிருக்கிறார்கள் என்பதை பல ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன (புஹாரி, முஸ்லிம்).

'முழங்கை வரை கைகளை கழுவுதல்' எனும் போது அறிஞர்களிடையே இரு வகையான கருத்துகள் நிலவுகின்றன.

சில அறிஞர்கள் முழங்கை வரைக்குமே கைகளை கழுவுவது கட்டாயமானது, முழங்கையை 
கழுவுவது கட்டாயமல்ல என்று கூற, ஏனைய அறிஞர்கள் கைகளை கழுவுதல் எனும் போது அதில் முழங்கையும் உள்ளடங்கும், எனவே முழங்கையும் கட்டாயம் கழுவப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். 

இவற்றுள் முழங்கை யும் சேர்த்தே கழுவப்பட வேண்டும் என்பதே மிக ஆதாரபூர்வமான கருத்தாகும்.  பின்வரும் இரு ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக அமைகின்றன :

அபூஹுரைரா (றழி) அவர்கள் நபிகளார் வுழூ செய்த முறையை கற்பித்த வேளை கைகளை கழுவும் போது முழங்கைகளையும் சேர்த்தே கழுவினார்கள் (முஸ்லிம்).

ஜாபிர் (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்யும் போது தமது இரு முழங்கைகளையும் சுற்றி தண்ணீரினால் கழுவுவார்கள் (தாரகுத்னீ, பைஹகீ) - இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என இமாம் இப்னு ஹஜர், இமாம் அல்பானி (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க : 'ஸிபது வுழூஇந் நபி' , பக்:25).

கைகளின் மடிப்பு, புறப்பகுதி என்பவற்றையும் வுழூ செய்யும் போது கவனத்திற்கொண்டு கழுவ வேண்டியது அவசியமாகும். அதிகம் பேர் இப்பகுதிகளை கழுவுவதில் பொடுபோக்கு செய்கின்றனர். இவற்றை  கவனமெடுத்து கழுவாமல் விடுவதன் மூலம் வுழூ நிறைவேறாமல் போய்விடும்.

8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) :

முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின்  தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6).

நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும்   தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.

தலைப்பாகை அணிந்திருக்கும் போது அவர்கள் மஸ்ஹு செய்த முறைகளாவன :

1. இரு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து அவ்விரு கைகளையும் பிடரி வரை கொண்டு சென்று பின்னர் ஆரம்பித்த இடத்திற்கே கைகளை கொண்டுவந்து சேர்த்தல். இதன் மூலம் தலை முழுவதும் மஸ்ஹு செய்யப்படும்.
பின்வரும் ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது :

அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தலையை மஸ்ஹு செய்யும் போது தமது இரு கைகளையும் தலையின் முன் பகுதியில் வைத்து பிடரி வரை பின்னோக்கி கொண்டு சென்று மீண்டும் அதே கைகளை தலையின் முன் பகுதியை நோக்கி ஆரம்பித்த இடத்துக்கு கொண்டு வந்தார்கள் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி).

2. தலையின் மேற்பகுதியிலிருந்து கீழ் பகுதி நோக்கி இரு கைகளாலும் தண்ணீரால் தடவுதல் (மீண்டும் மேல் பகுதி நோக்கி கொண்டுசெல்வதில்லை).

பெண் ஸஹாபியாவான ருபையிஃ (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்த போது தமது கைகளை தலையின் மேற்பகுதியில் வைத்து கீழ் பகுதி நோக்கி தண்ணீரால் தடவினார்கள். அவர்களது தலைமுடி கலையாமலே நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள் (அபூதாவூத், அஹ்மத்).

தலைப்பாகை அணிந்திருக்கும் போது மஸ்ஹு செய்த முறைகளாவன :

1. தலைப்பாகை மீது மாத்திரம் மஸ்ஹு செய்தல் :

அம்ர்  இப்னு உமையா (றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தலைப்பாகையின் மீது மஸ்ஹு செய்வதை நான் கண்டேன் (புஹாரி, நஸாஈ, இப்னு மாஜஹ்).

2. தலைப்பாகை மீதும் முன் நெற்றி முடியின் மீதும் மஸ்ஹூ செய்தல் :

அல்முகீரா இப்னு ஷுஃபா (றழி) கூறுகிறார்கள் : நபியவர்கள் வுழூ செய்த போது தலைப்பாகை மீதும் முன் நெற்றி முடியிலும் மஸ்ஹு செய்தார்கள்...(முஸ்லிம், அபூதாவூத்)

(பார்க்க : 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா' , 1/72, 73).

சுருங்கக் கூறின், நபிகளார் தலைப்பாகை அணியாமல் இருந்த போது இரு முறைகளிலும் தலைப்பாகை அணிந்திருந்த போது இரு முறைகளிலும் தலையை மஸ்ஹு செய்திருப்பதை அவதானிக்கலாம். 

இவ் அடிப்படையில் இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலானோர் தலைப்பாகை அணியாத நிலையிருப்பதனால் மேற்குறிப்பிட்டவாறு நபிகளார் தலைப்பாகை அணியாத நிலையில் எவ்வாறு இரு முறைகளில் தலையை மஸ்ஹு செய்தார்களோ அவற்றுள் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி அல்லது இரு முறைகளையும் மாறி மாறி பின்பற்றி தலை முழுவதையும் மஸ்ஹு செய்வதே ஸுன்னாவை சரிவர பின்பற்றுவதாக அமையும். 

ஆனால்  பெரும்பாலானவர்கள் தலைப்பாகை அணியாத நிலையிலும் முன்னெற்றி முடி மீது மாத்திரம் மஸ்ஹு செய்வது சரியான முறையல்ல என்பதை மேற்படி ஹதீஸ்களிலிருந்து புரிந்துகொள்கிறோம். எனவே நமது வழிகாட்டியும் முன்மாதிரியுமான நபிகளாரை பின்பற்றி  இதை முற்றிலுமாக திருத்தியமைத்து நமது வுழூவை சீரமைத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். 

பெண்கள் தலையை மஸ்ஹு செய்வதை பொறுத்தவரை  நபியவர்கள் பெண்களுக்கென வேறான ஒரு முறையை கற்றுத்தரவில்லை என்பதனால், நேற்றைய தொடரில் குறிப்பிடப்பட்ட முறையையே அவர்களும் பின்பற்ற வேண்டும். ஆயினும் பெண்கள்  பிடரிக்கு நகர்த்திய கைகளை மீண்டும் முன்னோக்கி கொண்டு வரவேண்டியதில்லை என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது :

ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் வுழூ செய்த முறையை கற்றுக்கொடுத்தார்கள். அப்போது தலையை மஸ்ஹு செய்த வேளை தனது தலையின் முன் பகுதியில் இரு கைகளையும் வைத்து பிடரி வரை கொண்டு சென்று விட்டார்கள். இவ்வறு ஒரு தடவை செய்தார்கள் (நஸாஈ).

எனவே பெண்கள்  தலையின் பின்பகுதி வரை அதாவது பிடரி வரை கொண்டு சென்று விட்டால் போதுமானது, மீண்டும் தலையின் முன்பகுதிக்கு கைகளை கொண்டு வரத் தேவையில்லை என்பது மேற்படி ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.

அதே வேளை  அவர்கள் தலை மறைத்து ஹிஜாப் அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் தலைத் திரை மீது  மஸ்ஹு செய்ய முடியும் என்பதை கீழ்வரும் செய்தி தெளிவுபடுத்துகிறது :

உம்மு ஸலமா (றழி) அவர்கள் வுழூ செய்த போது தனது தலைத் திரை மீது மஸ்ஹு செய்தார்கள் (முஸன்னப் இப்னு அபீஷைபா). இது  ஆதாரபூர்வமான தகவல் என பிரபல ஹதீஸ் துறை அறிஞர் ஹாயிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (பார்க்க : 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா, 1/73 ).

அடுத்து, தலையை மஸ்ஹு செய்த பின் இரு காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும். 

நபிகளார் கூறினார்கள் : 'இரு காதுகளும் தலையை சேர்ந்ததாகும்' (திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜஹ்) 

அதாவது தலையை மஸ்ஹு செய்த பின் அதே நீரினால் காதுகளையும் மஸ்ஹு செய்ய வேண்டும் என்பதனாலேயே நபியவர்கள் 'இரு காதுகளும் தலையை சேர்ந்தது' எனக் கூறினார்கள்.

தலையை மஸ்ஹு செய்த பின் காதுகளை மஸ்ஹு செய்வதற்கென புதிதாக நீரை எடுப்பதற்கு ஸுன்னாவில் ஆதாரங்கள் இல்லை என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே தலையை மஸ்ஹு செய்த அதே நீரினாலேயே காதுகளை மஸ்ஹு செய்வதே நபிகளாரின் நடைமுறையாகும்.

அதே நேரம் (சில வேளைகளில்) 'நபியவர்கள் தமது இரு கைகளையும் முழங்கை வரை கழுவிய பின் கையில் எஞ்சியுள்ள நீரினாலும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள்' என ருபையிஃ (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

காதுகளை எவ்வாறு மஸ்ஹு செய்வது என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது :

'நபிகளார் தமது தலையை மஸ்ஹு செய்த பின் இரு ஆட்காட்டி விரல்களையும் இரு காதுகளுக்குள் நுழைத்து இரு பெருவிரல்களினாலும் காதுகளின் வெளிப்புறங்களை மஸ்ஹு செய்தார்கள்' (அபூதாவூத், நஸாஈ, இப்னு மாஜஹ்).

பலர் காதுகளை மஸ்ஹு செய்யும் முறையை அறியாததால் தவறாக செய்வதை அவதானிக்கிறோம். அத்தகையோர் மேலுள்ள முறைப் பிரகாரம் தவறை திருத்திக்கொள்வது அவசியமாகும்.

இவ்வாறே நபிகளார் ஏனைய உறுப்புகளை ஒரு தடவை, அல்லது இரு தடவைகள்,  அல்லது மூன்று தடவைகள் கழுவியிருக்கிறார்கள். ஆனால் தலையையும் அதனுடன் சேர்த்து இரு காதுகளையும் ஒரு தடவை மாத்திரம் மஸ்ஹு செய்திருக்கிறார்கள். நபிகளார் வுழூ செய்த முறை பற்றி குறிப்பிடுகின்ற அனைத்து ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் தலையையும் இரு காதுகளையும் ஒரு தடவை மஸ்ஹு செய்ததாகவே அமைந்துள்ளன. 

'தலையை நபியவர்கள் மூன்று தடவை மஸ்ஹு செய்தார்கள்' என அபூதாவூத், தாரகுத்னீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெறும் ஹதீஸ் ஆதாரமாக கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸ் ஆகும் என இமாம் இப்னுல் கையிம் (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (பார்க்க : 'பத்ஹுல் பாரீ', 1/298 மற்றும் 'ஸாதுல் மஆத்' , 1/186).

9) கணுக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்:

வுழூவின் நிறைவாக இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது இறுதியாக கால்களை கழுவுமாறு குறிப்பிடுகிறான் (5:6).

கால்களை கழுவும் போது முதலாவதாக வலது காலையும் இரண்டாவதாக இடது காலையும் கழுவ வேண்டும். 

நபிகளார் வுழூ செய்த முறை பற்றி விபரிக்கின்ற உஸ்மான் (றழி), அபூஹுரைரா (றழி), அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) போன்ற அனைத்து ஸஹாபாக்களும்  நபியவர்கள் கால்கள் இரண்டையும் கழுவும் போது முதலாவதாக வலது காலையும் அடுத்து இடது காலையும் கணுக்கால் வரை கழுவியதாக விபரிக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்).

பொதுவாகவே வலப்பக்கத்திலிருந்து ஆரம்பிப்பது நபியவர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

ஆயிஷா(றழி) அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் செருப்பணியும்போதும் தலை சீவும் போதும் வுழூச் செய்யும் போதும் இன்னும் எல்லா விடயங்களிலும்  வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள் (புஹாரி, முஸ்லிம்).

'நீங்கள் ஆடை அணியும் போதும் வுழூ செய்யும் போதும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பம் செய்யுங்கள்' என நபிகளார் கூறியதாக அபூஹுரைரா (றழி) அறிவிக்கிறார்கள் (அபூதாவூத், திர்மிதி).

இவ்விடயத்தில் பிரதானமாக இரு தவறுகள் இடம்பெறுகின்றன :

1. கைகள் மற்றும் கால்களை கழுவும் போது இடதை முதலாவதாக செய்தல். இது தவிர்க்கப்பட வேண்டும். பலர் இது பற்றி அறிந்திருந்தாலும் பொடுபோக்கின் காரணமாக இத்தவறு அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது.

2. முதலில் வலது, பின்னர் இடது, பின்னர் மீண்டும் வலது, பின்னர் இடது என மாறி மாறி கைகளையும் கால்களையும் கழுவிக் கொண்டிருத்தல். இதுவும் திருத்தப்படவேண்டிய ஒன்றாகும். முதலாவதாக வலதை மூன்று முறை கழுவி விட்டால் பின்னர் இடதை மூன்று முறை கழுவி நிறைவு செய்துவிட வேண்டும்.

கால்களை கழுவும் போது குதிகால் மற்றும் புறப் பகுதியை பேணி கழுவ வேண்டியது அவசியமாகும். அதிகமானோர் இதிலும் பொடுபோக்காக இருந்துவிடுகின்றனர். ஆனால் நபிகளார் குதிகால்களை முறையாக கழுவாதவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்திருக்கிறார்கள் :

1. அப்துல்லாஹ் பின் அம்ர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர்  அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். பாதையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக வுழூ செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், '(சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு கேடுதான்/நரக வேதனைதான். வுழூவை முழுமையாகச் செய்யுங்கள்' என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்).
 
2. மக்கள் வுழூச் செய்யும் தொட்டியிலிருந்து வுழூச் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற அபூ ஹுரைரா(றழி) (எங்களைப் பார்த்து) 'வுழூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக இறைத்தூதர் அவர்கள் 'குதிகால்களை சரியாகக் கழுவாதவர்களுக்கு கேடுதான்/ நரகம்தான்' என்று கூறினார்கள்' என்றார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி).

இவ்வாறே கால்களை கழுவும் போது கால் விரல்களை கோதி அதன் இடுக்குகளுக்குள்ளும் தண்ணீரை செலுத்தி கழுவுவது அவசியமாகும் :

நபியவர்கள் லகீத் இப்னு ஸப்ரா (றழி) அவர்களுக்கு இவ்வாறு கூறினார்கள் : 'நீர் வுழூ செய்தால் விரல்களுக்கிடையே கோதி கழுவிக்கொள்...' (திர்மிதி, அபூதாவூத் ).

இதே வேளை மற்றுமொரு ஹதீஸ் இவ்வாறு வருகிறது :

'நபிகளார் வுழூ செய்தால் தமது கால் விரல்களை (அவற்றின் இடுக்குகளுக்குள்) கையின் சின்ன விரலினை விட்டு கோதி கழுவுவார்கள்' (அபூதாவூத், திர்மிதி).

மேற்படி ஹதீஸின் அடிப்படையில் கையின் சின்ன விரலால் கால்விரல்களை கோதி கழுவ வேண்டும் என சிலர் கூறுவர். ஆயினும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு லஹீஆ என்பவர் இடம்பெறுகிறார். ஹதீஸ் துறையில் இவர் பலவீனமானவர் என்பதால் இவர் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்களை ஆதாரமாகக்கொள்ள முடியாது என்பது இமாம் இப்னு அபீஹாதிம், இமாம் இப்னு ஹஜர் உள்ளிட்ட பல ஹதீஸ்துறை விமர்சகர்களின் கருத்தாகும். 

எனவே, கால் விரல்களை ஏதோ ஒரு வகையில் கோதி கழுவ வேண்டும். ஆயினும்  கையின் சின்ன விரலால்தான் கோதி கழுவ வேண்டும் என்பது அவசியமல்ல. 

10) வுழூவின் பின்னரான துஆ

வுழூவை பூரணமாக நிறைவேற்றிய பின் துஆ ஓதுவது முக்கியமான ஸுன்னத்தாகும்.

நபிகளார் கூறினார்கள் :  'உங்களில் ஒருவர் முழுமையான முறையில் வுழூ செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரஸூலுஹு (மற்றுமோர் ஹதீஸ் அறிவிப்பின் படி, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்
(ஸஹீஹ் முஸ்லிம்).

மேற்படி துஆ மிக ஆதாரபூர்வமான துஆவாகும். வுழூச் செய்து முடித்த பின் இதை ஓதுவதன் மூலம் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அளப்பரிய பாக்கியத்தை மறுமையில் அடைந்துகொள்ள முடியும். 

இதே வேளை மேலும் இரு துஆக்கள் வுழூச் செய்து முடித்த பின் ஓதுவதற்கென வந்துள்ளன. அவற்றின் ஆதாரத்தன்மை தொடர்பில் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன.

முதலாவது துஆ:

'அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன் வஜ்அல்னீ மினல் முததஹ்ரீன்' (திர்மிதி)

இது ஆதாரபூர்வமானது என இமாம்களான இப்னுல் கையிம், அல்பானி, பின் பாஸ் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் கூறுகின்ற அதே நேரம், இது பலவீனமான ஹதீஸ் என இமாம்களான இப்னு ஹஜர், அஹ்மத் ஷாகிர் உட்பட மற்றும் பலர் குறிப்பிடுகின்றனர்.

இரண்டாவது துஆ :

ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஹ்பிருக வஅதூபு இலைக

இதுவும் ஆதாரபூர்வமான துஆ என ஷெய்க் அல்பானி போன்ற அறிஞர்கள் குறிப்பிடும் அதே வேளை, இது இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூஸஈத் அல்குத்ரீ (ரழி) என்ற ஸஹாபியின் கூற்றேயன்றி நபிகளார் கூறியதல்ல என இமாம்களான நஸாஈ, இப்னு ஹஜர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர் (நூற்கள் : 'அல்புதூஹாதுர் ரப்பானிய்யா', 'ஸஹீஹுல் ஜாமிஃ', 'ஹாஷியா அலத் திர்மிதி', 'பதாவா பின் பாஸ்')

எனவே வுழூ செய்த பின் ஓதுவதற்கென வந்துள்ள மூன்று துஆக்களில் முதலாவது துஆவை நாம் தவறாமல் ஓதும் அதே நேரம், ஏனைய இரு துஆக்கள் தொடர்பில் சர்ச்சை இருப்பதால் அவற்றை தவிர்ந்துகொள்ள முடியும். ஆயினும் அவற்றை ஆதாரபூர்வமானவை என குறிப்பிடும் அறிஞர்களின் ஆய்வின் அடிப்படையில் யாரேனும் அவற்றை ஓதினால் அதை தவறென கூற முடியாது. 

இது தவிர, வுழூவின் உறுப்புகள் ஒவ்வொன்றையும் கழுவும் போது ஓதுவதற்கென எந்த ஒரு துஆவும் ஹதீஸ்களில் வரவில்லை. அவ்வாறு யாரேனும் ஏதேனும் துஆக்களை ஓதினால் அது மார்க்கத்தில் இல்லாத தெளிவான பித்அத் ஆகும்.

ஷாபிஈ மத்ஹபின் முன்னணி அறிஞரான இமாம் நவவி (ரஹ்) கூறுகிறார்கள் :
' வுழூவின் உறுப்புகளை கழுவும் போது ஓதுவதற்கென நபியவர்களிடமிருந்து எந்தவொரு துஆவும் ஹதீஸ்களில் வரவில்லை' (நூல் : 'அல்அத்கார்', 30).

இமாம் இப்னு கையிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகிறார்கள் : ' வுழூவின் ஆரம்பத்தில் ஓதப்படவேண்டிய பிஸ்மில்லாஹ் மற்றும் வுழூ செய்து முடித்த பின் ஓதப்படும் துஆ ஆகிய இரண்டையும் தவிர வேறு எந்தவொரு துஆவையும் நபிகளார் வுழூவின் போது ஓதியதில்லை, தமது சமூகத்துக்கு அவ்வாறான துஆக்களை கற்றுத்தரவுமில்லை.  ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது (சிலரால்) ஓதப்படுகின்ற அனைத்தும் நபியவர்களின் பெயரால் புனையப்பட்ட பொய்களாகும்' (பார்க்க : 'ஸாதுல் மஆத்' , 1/195).

11) வுழூவின் பின்னரான ஸுன்னத்தான தொழுகை

வுழூச் செய்து துஆவும் ஓதிய பின் இரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுவது மற்றுமொரு முக்கியமான ஸுன்னத்தாகும். அதற்கென வாக்களிக்கப்பட்ட நற்கூலி அளப்பரியதாகும்.

1. யாரேனும் ஒருவர் அழகிய முறையில் வுழூ செய்து பின்னர் அகமும் முகமும் ஒன்றித்த நிலையில் இரண்டு றக்அத் தொழுதால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகிவிடும் (முஸ்லிம்).

2. யாரேனும் நபியவர்கள் வுழூ செய்தது போன்று  வுழூ செய்து பின்னர் இரண்டு றக்அத்துகளை மன ஒருமைப்பாட்டுடன் தொழுதால் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புஹாரி, முஸ்லிம்).

முடிவுரை 

கடந்த 12 தினங்களாக 'ஸுன்னாவின் ஒளியில் வுழூ' என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுத அருள்புரிந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். இத்தொடரில் எழுதப்பட்ட விடயங்களை எழுதியவர் உட்பட அனைவரும் முடியுமான வரை பின்பற்றியொழுகும் வாய்ப்பை அல்லாஹ் வழங்கிட வேண்டும். இத்தொடரை எழுதுமாறு அன்புடன் வேண்டிக்கொண்ட, உளமார பிரார்த்தித்த, உற்சாகப்படுத்திய, பல வலைத்தளங்களிலும் இதை பகிர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் நிறைவான நற்கூலிகளை வழங்குவானாக. இத்தொடரை எழுதுவதற்காக பல அறிஞர்களின்  நூற்களை உசாத்துணையாக கொண்டேன். 
'அல்லாஹ்வின் உயர்ந்த மார்க்கத்தை எத்திவைத்தல்' என்ற உன்னத பணியில் தம்மை அர்ப்பணித்த அந்த அறிஞர்கள் அனைவருக்கும் அல்லாஹ்  அருள்புரிந்து நிறைவான நற்கூலிகளை வழங்குவானாக. 

உசாத்துணை நூல்கள் :

1. 'ஸாதுல் மஆத் பீ ஹத்யி கைரில் இபாத்', இமாம் இப்னு கையிம் அல்ஜவ்ஸிய்யா

2. 'மின்ஹதுல் அல்லாம் ஷர்ஹு புலூஹில் மராம்', அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்பவ்ஸான்
 
3. 'பத்ஹு தில் ஜலாலி வல் இக்ராம்', அல்லாமா முஹம்மத் ஸாலிஹ் அல்உதைமீன்

4. 'தவ்ழீஹுல் அஹ்காம்', அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்பஸ்ஸாம்

5. 'ஸிபது வுழூஇந் நபி', பஹ்த் பின் அப்திர் ரஹ்மான் அத்தவ்ஸரி

6. 'தமாமுல் மின்னா பித்தஃலீகி அலா பிக்ஹிஸ் ஸுன்னா', அல்லாமா முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி

7. 'தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா', ஆதில் பின் யூஸுப் அல்அஸ்ஸாஸி
أحدث أقدم