ஹராமான பார்வையிலிருந்து, தவ்பா செய்தல்

-தமிழில்
உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி 

ஒருமுறை அஷ்ஷைக் முஹம்மது அல்அமீன் அஷ்ஷன்கீதி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மஜ்லிஸில் ஒரு வாலிபர் ஒரு கேள்வி கேட்டார். இந்தக் கேள்வி, இன்றய காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று
என்று கருதுகிறேன்.

"மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டு இருக்கக்கூடிய பாலியல் வீடியோக்களை, பாலியல் பத்திரிகைகளை படிப்பதில் மிக ஆர்வம் கொள்கிறேன். அதிலிருந்து மீள முடியவில்லை. உபதேசம் செய்யுங்கள்" என்று கேட்டார்.

ஷைஹ் அவர்கள் பெருமூச்சு விட்டவர்களாக, "அல்லாஹ்விடமே நாம் உதவி தேட வேண்டும்.  இந்தப் பார்வை, அல்லாஹ் நமக்கு அருட்கொடையாக வழங்கி இருக்கிறான். கண் தெரியாத நபர்கள், இந்த அருட்கொடையை மிக அதிகம் அறிந்திருக்கிறார்கள்.  இவ்வாறு, நாம் கற்பனை செய்து கொள்வோம், 'அதாவது, உமக்கு இந்த பார்வையை கொடுத்தது, இதுபோன்ற விலக்கப்பட்ட விஷயங்களை பார்ப்பதற்காகவா? உனக்கு வெட்கம் இல்லையா? ' என்று அல்லாஹ் நாளை நம்மை மறுமையில் கேட்டால், நாம் எந்த அளவிற்கு வெட்கித்து தலை தொங்கியவர்களாக ஆகுவோம் !!!

'இந்த, இந்தக் காட்சிகளை நீ கண்டாய்' என்று ஒவ்வொன்றாக நம் முன்பு அல்லாஹ் அந்த காணொளிகளை காட்டினால், எந்த அளவிற்கு நாம் கூனி கூறுகிப் போவோம் !!

இந்த ஹராமான ஒரு காணொளியை காண்பவர், ' இது ஒரு காணொளி தானே! ஒரு பார்வை தானே ! இதனால், என்ன ஆகிவிடப் போகிறது? ' என்று இலேசாக கருதலாம். இந்த ஒரு ஹராமான பார்வையினால், அல்லாஹ் நம்மின் மீது கோபப்பட போவதும், அவன் அருளை விட்டும் நாம் மிக தூரமாக ஆகி விடப்போவதும் என்பது, அப்பொழுது நமக்கு தெரியாத ஒன்று.

அல்லாஹ் நம்மை பாதுகாக்கட்டும் !!! நேர்வழியில் நம்மை செலுத்தட்டும்!!!
இதிலிருந்து விடுபடவில்லையானால், நமது உள்ளத்தில் இருக்கும் ஈமான் என்ற பிரகாசம் அணைந்து, மறுமை வரை அகப்பார்வை அற்ற குருடர்களாக ஆகி விடுவோம் .

பாவங்கள் மிகவும் அபாயகரமானது சகோதரர்களே !! 
அது உள்ளத்தை மரணிக்க செய்து, இறையச்சத்தை நமது உள்ளத்தில் இருந்து அடியோடு பிடுங்கி விடும்.

இந்த விலக்கப்பட்ட காணொளியை காண்பதால் அவனுக்கு ஏற்படும் அந்த சிற்றின்பம், எத்தனை காலம் வரை தொடரும்? இதனால், அவனுக்கு என்ன பிரயோஜனம் கிடைத்தது? அவனுடைய நன்மை, தீமை ஏடுகளில்,/இது தெளிவாக பதிவு செய்யப்படும் !!

இமாம் இப்னுல் கையிம், தனது புத்தகமான மதாரிஜுஸ் ஸாலிகீனில், பின்வரும் சம்பவத்தை பதிவு செய்கிறார்கள். 'கல்வியை கற்கக்கூடிய ஒரு மாணவர், ஆசிரியர் வரும் வரை அந்த மஜ்லிஸில் அமர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அங்கு மிக அழகிய தோற்றம் கொண்ட கிருத்துவ சிறுவர் ஒருவர் இருந்தார். அவரின் மீது தனது பார்வை பட்டு விட்டது. அந்த சிறுவனின் அழகை ஒரு கணம் ரசித்துக் கொண்டிருக்கையில்,
அந்த மாணவரின் ஆசிரியர் அங்கு வந்து விட்டார். அவரின் பார்வையை தடுத்துக் கொள்ள சொல்கிறார்.

ஆசிரியர் அவருக்கு எச்சரிக்கை செய்கிறார்,  "இந்த பாவத்தின் தாக்கம்,  பின்னால் கண்டிப்பாக இருக்கும் என்றும், இதற்கான தண்டனையை அல்லாஹ் உனக்கு தருவான். பல காலங்கள் ஆனாலும் சரி" என்று கூறுகிறார்கள்.

இந்த மாணவர் தான் ஆலிமான பின்பு 20 வருடங்கள் வரை அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒரு நாள் இரவு தூங்குகிறார். அவர் திருக்குரானை மனனம் செய்த ஒரு ஆலிமும் கூட. மறுநாள் காலையில், முழு திருக்குர்ஆனும் மறந்து போய்விட்டது.  எவ்வளவோ முயற்சி செய்தும் மனனம் சீராகவில்லை !!!

இது போன்ற சோதனையிலிருந்து,  நம்மை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் !!

சகோதரர்களே!!! அல்லாஹ் தடுத்திருக்கக்கூடிய ஒரு ஹராமான பார்வையின் தாக்கம், இந்த அளவிற்கு என்றால், நாம் எத்தனை ஹராமான பார்வைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  பிறகு, அல்லாஹ்வின் சோதனையிலிருந்து எவ்வாறு நாம் தப்ப முடியும் ?

சில சமயம், நாம் நமது வாழ்வில் மன இறுக்கத்தை பெறுவோம்.  வியாபாரத்தில் நஷ்டத்தை காண்போம்.  இவைகள் அனைத்தும், இறை தண்டனைகள் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த சோதனைகள் ஊடாக, அல்லாஹ் நம்மை தவ்பா செய்வதற்கு வாய்ப்பை வழங்குகிறான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸலபுஸ் ஸாலிஹீன்கள் (முன்னோர்கள்) கூறுவார்களாம்,  "பாவத்தை எந்த அளவிற்கு செய்தோம் என்று பார்ப்பதை விட,  யாருக்கு எதிராக செய்தோம் என்று பார்க்க வேண்டும்." 

நம்மை படைத்து பரிபாலிக்கக்கூடிய அல்லாஹ்விற்கு எதிராக, நாம் இந்த பாவத்தை செய்கிறோம் !!

நான் உங்களுக்கு இது போன்ற செய்திகளை சொல்லி அல்லாஹ்விடமிருந்து பெறக்கூடிய அருளை விட்டும், உங்களை தூரமாக்க விரும்பவில்லை.  உங்களை நிராசை உடையவர்களாக ஆக்கவும் விரும்பவில்லை.
அது, எனது நோக்கமும் அல்ல. ' பாவமான இந்த காணொளிகளால், விலக்கப்பட்ட இந்த விஷயங்களால், நாம் எந்த அளவிற்கு நமது வாழ்வில் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகி விடுவோம்' என்ற அபாயத்தைத் தான் உணர்த்த விரும்புகிறேன்.

வாலிபரே!!!
  துஆவில் ஒரு சொட்டாவது கண்ணீரை வடித்து, நாம் செய்த தவறுகளை நினைத்து, தனியாக இருக்கும் பொழுது பிறர் பார்வையில் படாத விதத்தில், அல்லாஹ்விடம் அழுது தௌபா செய்வோம்!!! அவனின் பக்கம் மீள்வோம் !!!

வாலிபரே!!!
 நீங்கள் மீள முடியாத இந்த பாவத்திலிருந்து மீட்சி அடைவதற்கும், உங்களை இந்தப் பாவ குழியிலிருந்து பரிசுத்தம் செய்வதற்கு,  அல்லாஹ் ஒருவனே தகுதியானவன், அவனிடமே தௌபா செய்து மீள்வோம்.

இறைத்தூதர் ﷺ அவர்கள் நாளை மறுமையில், அல்லாஹ்வின் அர்ஷின் நிலலில், அமளி துமளிகள் நிறைந்திருக்கும் அந்த வேளையில், மகிழ்ச்சியாக வீற்றிருக்கும் ஏழு நபர்களை பற்றி கூறுகிறார்கள் அல்லவா !!

" அதில் ஒருவர் அல்லாஹ்வை நினைத்து இறையச்சத்தால்  அழுதவர்" என்று வருகிறது.

நூல் -ஸஹீஹ் புகாரி -660-முஸ்லிம் -1031

سبعةٌ يظلُّهمُ اللَّهُ في ظلِّهِ يومَ لا ظلَّ إلَّا ظلُّهُ الإمامُ العادلُ، وشابٌّ نشأَ في عبادةِ اللهِ، ورجلٌ قلبُه معلَّقٌ في المساجدِ، ورجلانِ تحابَّا في اللهِ اجتمعا علَيهِ وتفرَّقا عليه، ورجلٌ طلبتهُ امرأةٌ ذاتُ منصبٍ وجمالٍ فقالَ إنِّي أخافُ اللَّه. ورجلٌ تصدَّقَ بصدقةٍ أخفاها حتَّى لا تعلمَ يمينُه ما تُنفقُ شمالُه ، ورجلٌ ذَكرَ اللَّهَ خاليًا ففاضت عيناهُ.
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح ابن خزيمة | الصفحة أو الرقم : 358 | خلاصة حكم المحدث : الصواب: "لا تعلم شماله..." وبهذا اللفظ أخرجه البخاري | الصحيح البديل | التخريج : أخرجه البخاري (660)، ومسلم (1031) باختلاف يسير

இரண்டாவது,
 ' வாலிபரே!!! நீங்கள் செய்த இந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டேன் ' என்று உறுதி கொள்ளுங்கள். 
 நீங்கள் உறுதி கொள்ளாத வரை, அல்லாஹ் உங்கள் மனதில் உறுதியை அளிக்க மாட்டான்.

நீங்கள் முதலில் ஆழமாக நம்புங்கள்.  'இந்த பாவத்திலிருந்து உங்களால் மீள முடியும்' என்று, அல்லாஹ் நிச்சயமாக உங்களை இந்தப் பாவத்திலிருந்து பாதுகாப்பான்.

குறிப்பு - 
"ஹராமான பார்வையிலிருந்து தவ்பா செய்தல்", التوبة من النظر الحرام என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உரை.

உரை - அஷ்ஷைக் முஹம்மது அல்அமீன் அஷ்ஷன்கீதி ரஹிமஹுல்லாஹ் .
காணொளியின் காலஅளவு -4:51 நிமிடங்கள்.

https://youtu.be/OA5YRqJ-Ps8?si=0u0PUk1UTDcEXx8E
أحدث أقدم