بسم الله الرحمن الرحیم
1. தஹ்ரீஃப்:
தஹ்ரீஃப் என்றால் மாற்றுதல். பெயர்கள், பண்புகளின் வார்த்தைகளையோ அவற்றின் அர்த்தங்களையோ மாற்றுவதாகும். உதாரணமாக, இஸ்தவா (உயர்ந்துவிடுதல்) என்பதற்கு ஜஹமிய்யாக்கள், இஸ்தவ்லா (கைப்பற்றுதல், ஆதிக்கம் செலுத்துதல்) என்று அர்த்தம் கூறினார்கள். சில பித்அத்காரர்கள் அல்களப் (الغضب- கோபம்) என்பதின் நோக்கம், அல்லாஹ் தண்டிக்கப் போகிறான் என்றும், அர்ரஹ்மா (الرحمة- கருணை) என்பதின் நோக்கம், அவன் அருள்புரியப் போகிறான் என்றும் கூறினார்கள். இவை அனைத்தும் தஹ்ரீஃப் ஆகும். இஸ்தவா என்பதற்கு அவர்கள் இஸ்தவ்லா என்று கூறுவது வார்த்தையிலுள்ள தஹ்ரீஃப் ஆகும். அர்ரஹ்மா என்பதற்கு அருள்புரிவதே நோக்கம் என்றும் அல் களப் என்பதற்கு தண்டிப்பதே நோக்கம் என்றும் அவர்கள் கூறுவது அர்த்தத்திலுள்ள தஹ்ரீஃப் ஆகும். உண்மை என்னவெனில், இஸ்திவா என்றால் உயர்ந்துவிடுதல், மேலே இருத்தல் என்று அர்த்தமாகும். அரபு மொழியில் இது தெளிவான ஒன்று. குர்ஆனும் அல்லாஹ் தன்னுடைய மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் தக்கவாறு அர்ஷ்க்கு மேல் உயர்ந்துவிட்டான் என்ற அர்த்தத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இது போலவே, அல்களப் மற்றும் அர்ரஹ்மா ஆகியவை அல்லாஹ் தன்னுடைய மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் தக்கவாறு கொண்டுள்ள இரண்டு உண்மையான பண்புகள். இவ்வாறே குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வந்துள்ள மற்ற பண்புகளையும் ஏற்க வேண்டும்.
ஆதாரம்: இப்னு பாஸ் (رحمه الله) அவர்களின் அத்தன்பீஹாத் அலல் வாசித்தியா
2. தஃதீல்
தஃதீல் என்றால் அல்லாஹ்வின் பண்புகளைப் புறக்கணித்து அவற்றை வெறுமையாக்குதல் எனப் பொருள். "அணிகலன் இல்லாத அழகிய கழுத்து" என்று அவர்கள் கூறுவதிலிருந்து இது எடுக்கப்பட்டது. ஜஹ்மிய்யாக்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் பண்புகளைப் புறக்கணித்தார்கள். எனவே, அவர்களை முஅத்திலா (புறக்கணித்து வெறுமையாக்குவோர்) என்று அழைக்கப்பட்டது. அவர்களின் இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது. எந்தப் பொருளாக இருந்தாலும், பண்புகளின்றி இருப்பது சாத்தியமே இல்லை. குர்ஆனும் நபிவழியும் அல்லாஹ் தன் மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் தக்க பண்புகளைக் கொண்டுள்ளான் என்பதைத் திரும்பத் திரும்ப உறுதி செய்கின்றன.
ஆதாரம்: இப்னு பாஸ் (رحمه الله) அவர்களின் அத்தன்பீஹாத் அலல் வாசித்தியா, ப:15
அதாவது அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் தங்களின் கற்பனைக் காரணங்களுக்காக புறக்கணித்தவர்கள், அவை வெறும் சொற்கள் தான். அச்சொற்கள் அழகானவை. ஆனால், அவற்றுக்கு அர்த்தங்கள் எதுவும் இல்லை. உண்மையில் அவை குறிப்பிடும் பண்புகளை அல்லாஹ்வுக்கு உண்டெனக் கருதக் கூடாது என்றார்கள். தங்கள் வாதத்திற்கு அவர்கள் கூறிய உதாரணம், ஒருவரின் கழுத்தை அழகானது என்று கூறினால், அக்கழுத்தில் அணிகலன் உள்ளதென அர்த்தமாகிவிடாது. அணிகலன் இல்லாத கழுத்தையும் அழகிய கழுத்து எனக் கூறப்படும். அதுபோலவே அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உண்டு எனக் கூறினால், அவனுக்கு அப்பெயர்கள் குறிப்பிடும் பண்புகள் உண்டென அர்த்தமாகாது. பண்புகள் இல்லாமலும் அப்பெயர்கள் அழகானவை என்றார்கள். ஆகவே, பெயர்களை வெறும் பெயர்களாகவே கருத வேண்டும் எனக் கூறி பண்புகளைப் புறக்கணித்துவிட்டார்கள்.
தஃதீலுக்கு உதாரணம்:
தஹ்ரீஃப் பற்றிய உதாரணங்களே தஃதீலுக்கும் பொருந்தும். ஏனெனில், அர்த்தத்தை மாற்றுபவர்கள் அங்குக் குறிப்பிடப் படும் பண்பைப் புறக்கணிக்கவே அதைச் செய்கிறார்கள். தஹ்ரீஃபுக்கும் தஃதீலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றிய ஓர் உதாரணம் போதுமானது.
இமாம் முஹம்மது ஸாலிஹ் உஸைமீன் (رحمه الله) சொல்கிறார்கள்:
அல்லாஹ்வின் இரண்டு கைகளும் விரிந்தே இருக்கின்றன. (5:64) என அல்லாஹ் கூறியுள்ளான். இங்கு கைகள் என்பது அல்லாஹ்வின் ஆற்றலைக் குறிக்கிறது என்று ஒருவர் கூறினால், அவர் ஆதாரத்தை மாற்றியவர். அத்துடன், சரியான அர்த்தத்தையும் மறுத்துவிட்டவர். ஏனெனில் உண்மையாகவே கையைக் குறிப்பிடுவதுதான் இங்கு நோக்கம். அவரோ அந்த அர்த்தத்தின் நோக்கத்தை மறுத்து, அதற்கு மாறான அர்த்தம் ஒன்றை உறுதி கொள்கிறார். ஆனால் ஒருவர், "அவனுடைய இரண்டு கைகளும் விரிந்துள்ளன" என்பதின் விஷயத்தில், "எனக்குத் தெரியாது. காரியத்தை நான் அல்லாஹ்விடம் விட்டுவிடுகிறேன். உண்மையாகவே கை உண்டெனவும் உறுதிகொள்ள மாட்டேன். கை என்பதற்கு மாற்று அர்த்தமும் கூறமாட்டேன்" என்று சொல்வாரானால், அப்போது நாம் கூறுவோம்: "இவர்தான் தஃதீல் செய்பவர். இவர் தஹ்ரீஃப் செய்பவர் அல்ல. ஏனெனில், வார்த்தையின் அர்த்தத்தை இவர் மாற்றவில்லை. அதன் நோக்கத்திற்கு மாறான அர்த்தத்தையும் விளக்கவில்லை. ஆனால் அல்லாஹ்வுக்கு கை உண்டு எனும் அர்த்தத்தின் நோக்கத்தை உறுதிகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்".
ஆதாரம்: ஷர்ஹ் அல்அகீதத்தில் வாசித்திய்யா, ப:73
3. தக்யீஃப்:
அல்லாஹ்வின் பண்புகள் எப்படி இருக்கும் என விவரிப்பது தக்யீஃப் எனப்படும். எனவே, அவன் எப்படி அர்ஷ்க்கு மேல் உயர்ந்தான்? அவனுடைய கை எப்படி இருக்கும்? அவனுடைய முகம் எப்படி இருக்கும்? என்று விவரிக்கக் கூடாது. அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றி பேசும்போதெல்லாம் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும். அவனுடைய தாத் எப்படி இருக்கும் என்பதை நாம் அறியாதது போலவே அவனுடைய பண்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அறியமாட்டோம். எனவே இரண்டையுமே விவரிக்கக் கூடாது. ஆயினும், நாம் அவற்றின் அர்த்தத்தில் இருக்கும் உண்மை நிலையை நம்பிக்கை கொள்வோம்.
ஆதாரம்: இப்னு பாஸ் (رحمه الله) அவர்களின் அத்தன்பீஹாத் அலல் வாசிதிய்யா, ப: 16
4. தம்ஸீல்:
தம்ஸீல் என்றால் உதாரணம் கூறுவது. இதன் அர்த்தம், தஷ்பீஹ் ஆகும். அதாவது, ஒப்பிடுதல் என்பதாகும். அல்லாஹ்வின் தாத்திற்கு நம்முடைய தாத்தை உதாரணம் கூறுவதோ, நம்முடைய தாத்துடன் அதை ஒப்பிடுவதோ கூடாது. அது போன்றே, அல்லாஹ்வின் பண்புகளுக்கு நம்முடைய பண்புகளை உதாரணம் கூறுவதோ, நம்முடைய பண்புகளுடன் அவற்றை ஒப்பிடுவேதோ கூடாது.
ஆதாரம்: இப்னு பாஸ் (رحمه الله) அவர்களின் அத்தன்பீஹாத் அலல் வாசிதிய்யா, ப: 16