ஷஃபானில் நோன்பு நோற்காதவர்கள் ஷவ்வாலில் நோன்பு நோற்றுக்கொள்வது சிறந்தது


عن عمران بن حصين رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لَهُ: - أَوْ لِآخَرَ - أَصُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ قَالَ: لَا، قَالَ: فَإِذَا أَفْطَرْتَ، فَصُمْ يَوْمَيْنِ (مَكَانَهُ). أخرجه البخاري (1983)، ومسلم (1161) واللفظ له.

இம்றான் இப்னு ஹுஸைன் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடத்தில் அல்லது வேறொருவரிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "ஷஃபான் மாதத்தின் 'ஸரர்' என்ற பகுதியில் நீர் நோன்பு நோற்றீரா?" என்று கேட்க, அவர் இல்லை என்று பதிலளித்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எனவே,  அதற்குப் பகரமாக றமளானை முடித்ததற்குப் பிறகு இரண்டு நாட்கள் நோன்பு நோற்றுக் கொள்வும்" என்று கூறினார்கள். புகாரி 1983,  முஸ்லிம் 1161.


ஹதீஸில் இருந்து பெறப்படும் பயன்களும், குறிப்புகளும்:

 ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு

 வழக்கமாக நோற்று வரும் உபரியான நோன்புகள் விடுபட்டால் அவற்றைக் களாச் செய்ய முடியும் 

 ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் ஷவ்வால் மாதத்தில் அதனைக் களாச் செய்வது சிறந்தது 

 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது தோழர்கள் விடயத்தில் கவனமெடுப்பார்கள்; தொடர்ந்தும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில் அவர்களுக்கு ஆர்வமூட்டுவார்கள்.

 'ஸரர்' என்பதற்கு மாதத்தின் இறுதிப் பகுதி என்பதே மொழி ரீதியாக மிகப் பொருத்தமான கருத்தாகும்.

 'ஸரர்' என்பது மாதத்தின் இறுதிப் பகுதியான சந்திரன் மறைந்திருக்கும் காலத்தைக் குறிக்கின்ற சொல்லாகும் என்பதே பலமான கருத்தாகும். பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும் இதுவாகும்.

 சிலர் மாதத்தின் ஆரம்பம், வேறு சிலர் மாதத்தின் நடுப்பகுதி ஆகிய கருத்துக்களையும் கொடுத்துள்ளனர். ஆனால் அவை மொழி ரீதியாக தூரமான கருத்துக்களாகும்.

ஆனாலும் ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்கக்கூடாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். அது ஒரு பொதுவான சட்டத்தைச் சொல்லும் ஹதீஸாகும். அதுதான் அமுல்செய்யப்பட வேண்டும். இந்த ஹதீஸில் ஷஃபான் மாதத்தின் இறுதியில் நீ நோன்பு நோற்றீரா? என்று இந்த நபித்தோழரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதிலிருந்து அதன் இறுதிப் பகுதியில் நோன்பு நோற்க முடியும் என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட ஸஹாபியோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம். 

இதற்கு வேறு பின்னணிகள் இருக்கக்கூடும். 

1- சில வேளை றமளானுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் நோன்பு நோற்கக் கூடாது என்ற தடை வருவதற்கு முன்னர் இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நபித்தோழரிடத்தில் கேள்வி கேட்டிருக்கலாம். 

2-  அல்லது அவர் மாத இறுதியில் நோன்பு நோற்கும் வழமையுள்ள ஒருவராக இருந்திருக்கலாம்; றமளானுக்கு ஒரிரு நாட்களுக்கு முன்னர் நோன்பு நோற்கக் கூடாது என்ற தடையை அறிந்து, அவர் அந்த நாட்களில் நோன்பு நோற்காமல் இருந்திருக்கலாம். வழக்கமாக ஒருவர் நோன்பு நோற்று வந்தால் அவருக்கு அந்தத் தடை செல்லுபடியாகாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைச் சட்டத்தில் விதிவிலக்குச் செய்திருப்பதை இந்த நபித்தோழர் அறியாமல் இருந்திருக்கலாம்.

3- அல்லது இந்த நபித்தோழர் அந்நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று நேர்ச்சை வைத்திருக்கலாம். நபியவர்கள் அந்நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்று தடை செய்ததன் காரணமாக அவர் அவற்றில் நோன்பு நோற்பதைத் தவிர்த்து இருக்கலாம். அதன் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடத்தில் அவ்வாறு கேள்வி கேட்டிருக்கக் கூடும். 

எது எப்படியோ இது ஒரு நபித்தோழருடன் சம்பந்தப்படுகின்ற தனியான ஒரு நிகழ்வாகும்; இதற்கு ஏதேனும் பின்னணிகள் இருக்கலாம்; எனவே இதனை நாம் பொதுச் சட்டத்தைக் கூறும் ஹதீஸுக்கு முரணாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

-Sunnah Academy


Previous Post Next Post