இவை குறித்து இமாம் இப்னு றஜப் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது லதாஇபுல் மஆரிப் என்ற நூலில் சுட்டிக்காட்டிய விடயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
1. ஷவ்வால் மாத ஆறு நோன்புகளில் முழு வருடமும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறமுடியும்.
2. றமளானுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள ஷஃபான் மாத மற்றும் ஷவ்வால் மாத நோன்புகள் ஃபர்ளான தொழுகைகளுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள றாதிபத்தான ஸுன்னத்தான தொழுகைகளைப் போன்றவையாகும். மறுமை நாளில் ஃபர்ளான கடமைகளில் ஏற்படும் குறைகளை இந்த ஸுன்னத்கள் மூலம் நிறைவுபடுத்தி, நிவர்த்தி செய்யப்படும். நோன்பாளி றமளானின் கடமையான நோன்புகளை முழுமையாக நோற்றாலும் கூட அவனிடமிருந்து வெளிப்பட்ட குறைகளும் பாவங்களும் ஃபர்ளான கடமையில் குறைபாட்டை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அந்த வகையில் ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்புகளும் ஃபர்ளான நோன்புகளில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரமாக அமையும்.
3. றமளான் நோன்பை முடித்ததற்குப் பிறகு அல்லாஹ்வுக்கு அடியார்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதை அல்லாஹ் 2:185 ஆவது ஆயத்தில் சுட்டிக்காட்டி இருக்கின்றான். அல்லாஹ்வுக்குச் செய்யும் நன்றிகளில் ஒன்றுதான் நல்ல அமல்களில் ஈடுபடுவது. எனவே, றமளானில் நோன்பு நோற்று, நல்ல அமல்கள் செய்வதற்கு தவ்ஃபீக் செய்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் செயலாகவும் இந்த ஆறு நோன்புகளும் அமைகின்றன.
4. அடியான் றமளான் மாதத்தில் அல்லாஹ்வை எந்த அமல்களைக் கொண்டு நெருங்கினானோ அந்த அமல்கள் றமளான் முடிவடைந்ததுடன் முடிவடைந்து விடுவதில்லை; றமளான் முடிவடைந்தாலும் கூட அந்த அடியான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் அவனிடமிருந்து அந்த அமல்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதற்கும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள் அடையாளமாக இருக்கின்றன.
5. ஒரு நல்ல அமலுக்குப் பிறகு இன்னொரு நல்ல அமலுக்கு தவ்ஃபீக் செய்யப்படுவதானது முன்னர் செய்த அமல் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்குரிய அடையாளமாக இருக்கலாம்; அதேபோன்று ஒரு அமலுக்குப் பிறகு பாவமான ஒரு காரியத்தைச் செய்வது அந்த அமல் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதற்கான அடையாளமாக இருக்கலாம் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் றமளானுக்குப் பிறகும் தொடர்ந்து நோன்பு நோற்பதானது றமளானில் செய்த அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்குரிய அடையாளமாக இருக்கலாம் என்ற நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். எனினும் மறைவான விடயத்தில் நாம் எதனையும் உறுதியாகக் கூறிவிட முடியாது.
ஷவ்வால் மாத ஆறு நோன்புகளின் சட்டங்கள்:
ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹறாம் ஆகும்.
ஷவ்வாலின் இரண்டாவது நாளிலிருந்து ஆறு நோன்புகளை நோற்க ஆரம்பிக்க முடியும்.
தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பு நோற்க முடியும் அல்லது இந்த மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் தொடராக இல்லாமலும் நோற்றுக் கொள்ள முடியும்.
வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை நாளில் இருந்து கூட ஆறு நோன்புகளை ஆரம்பிக்க முடியும்; அது ஷவ்வால் மாதத்தின் ஒரு நாள் என்பதற்காக அதில் நோன்பு நோற்க முடியும். அது வெள்ளிக்கிழமை என்பதற்காக அதனை விசேஷப்படுத்தும் நோக்கில் நோன்பு நோற்பதே தடை செய்யப்பட்டுள்ளது. ஷவ்வால் நோன்பாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதாக இருந்தால் முந்திய நாள் வியாழனுடன் அல்லது அடுத்த நாள் சனியுடன் சேர்த்து நோன்பு நோற்பதுதான் நல்லது.
றமளானில் விடுபட்ட நோன்புகளை நோற்று முடித்ததற்குப் பிறகுதான் ஷவ்வாலின் ஆறு நோன்புகளை நோற்க வேண்டும்; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "யார் றமளானில் நோன்பு நோற்று, *பின்னர்* ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோன்பு நோற்கிறாரோ"என்று கூறியிருப்பதால், றமளான் நோன்பிற்குப் பின்னர் தான் இந்த நோன்பு அமைய வேண்டும் என்பதை அந்த வார்த்தையில் இருந்து புரிந்து கொள்ள முடியும். அதேபோன்று, "யார் றமளானில் நோன்பு நோற்று" என்ற வார்த்தையில் இருந்து றமளான் நோன்புகளை முழுமையாக நோற்றுமுடிக்காதவர் -றமளானில் இருந்து சில நோன்புகள் களாச் செய்வதற்காக எஞ்சியிருக்கும் நிலையில்- இந்த ஹதீஸில் அடங்க மாட்டார் என்று புரிந்து கொள்ளலாம். ஏனெனில், றமளான் என்பது முழு மாதத்தையும் குறிக்கும் சொல் என்பதால் அவர் றமளானின் ஒரு பகுதி நோன்பு நோற்றுவராகவே கருதப்படுவார். ஆனால் இதுவல்லாத ஏனைய ஸுன்னத் நோன்புகளை நோற்பதற்கு றமளானில் விடுபட்ட நோன்புகளைக் களாச் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. இருப்பினும் பொதுவாக ஸுன்னத் நோன்புகளை நோற்பதற்கு முன்னர் ஃபர்ளான நோன்புகளை நிறைவேற்றி விடுவது சிறந்தது. எனினும் றமளானில் ஃபர்ளான களாச் செய்ய வேண்டிய நோன்புகள் நிலுவையில் இருக்கின்ற பொழுதும் கால அவகாசம் வழங்கப்படாத அறபஹ் நோன்பு, தாஸூஆஃ, ஆஷூறாஃ போன்ற நோன்புகளை நோற்றுக்கொள்வது சிறந்தது. காரணம் அந்த ஃபர்ளான நோன்பைக் களாச் செய்வதற்கு அடுத்த றமளான் வரை கால அவகாசம் இருக்கின்றது.
றமளானில் விடுபட்ட களா நோன்பையும் ஷவ்வால் நோன்பையும் ஒரு நாளில் ஒன்றுசேர்த்து இரண்டையும் அடைந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நியத்தில் நோற்க முடியாது. அவ்வாறு நோற்றால் களா நோன்பு நிறைவேறுமே தவிர ஷவ்வால் மாத நோன்பிற்குரிய நன்மை கிடைக்காது.
அய்யாமுல் பீள் எனும் சந்திர மாதத்தின் 13, 14, 15 ஆகிய வெள்ளை நாட்களில் அல்லது திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் ஆறு நோன்புகளை நோற்று அந்த நாட்களில் நோன்பு நோற்பதற்குரிய சிறப்பு, ஆறு நோன்புகளுக்குரிய சிறப்பு ஆகிய இருவகையான சிறப்புகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒருவருக்கு நிர்பந்தத்தின் காரணத்தினால் ஷவ்வால் நோன்புகளை நோற்க முடியாமல் போனால் அம்மாதம் முடிந்ததற்குப் பிறகு அதனைக் களாச் செய்து கொள்ள முடியும். (உ+ம்: முழு றமளானிலும் நிபாஸ் நிலையில் இருந்த பெண்)
பொதுவாக எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதனை அதற்குரிய ஆரம்ப நேரத்தில் செய்து முடித்து விடுவது மார்க்கத்தில் வரவேற்கப்படுகின்றது. நன்மையான விடயங்களில் முந்திக் கொள்ளுமாறு குர்ஆனும் ஸுன்னஹ்வும் முஃமின்களுக்கு ஆர்வமூட்டியிருக்கின்றது. (உ+ம்: 3:114, 3:133, முஸ்லிம் 118) அந்த வகையில் ஷவ்வால் மாதத்தின் நோன்பை பெருநாள் முடிந்து அடுத்த நாளிலிருந்தே ஆரம்பிப்பது நல்லது. எந்த அளவுக்கு முந்திக் கொள்ள முடியுமோ, அதேபோன்று தொடர்ச்சியாக நோற்றுக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு நல்லது. தாமதிக்கும் பொழுது சில நேரம் வேறு சோலிகள், சோர்வு, பித்னஹ்கள், நோய், மரணம் ஆகியவை ஏற்பட்டு அவற்றை நோற்க முடியாமல் போகக் கூடும். முந்திக்கொள்வதால் நன்மையான காரியங்களில் முந்திக்கொள்ள வேண்டும் (2:148) என்ற அல்லாஹ்வின் கட்டளையை நடைமுறைப்படுத்திய நன்மையும் கிடைக்கும். ஆனால் அந்த நேரத்தில் அதைவிட முக்கியமான அல்லது விரைவாகச் செய்யவேண்டிய ஒரு அமலை ஒருவர் செய்ய வேண்டி நேர்ந்தால் அந்த நேரத்தில் அவர் நோன்பைப் பிற்படுத்திவிட்டு அந்த அமலைச் செய்வது சிறந்தது. உதாரணமாக ஒருவருக்கு பெருநாளைக்குப் பின்னர் உறவினர்களைச் சந்திக்க வேண்டியிருந்தால்; அவர்களோடு உணவு பரிமாற வேண்டியிருந்தால் அந்த ஆரம்ப நாட்களில் உறவினர்களைச் சந்திப்பது சிறந்தது. உறவுகளைப் பேணுவதற்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. சில நேரங்களில் அதன் அவசியம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக ஆறு நோன்புகளைப் பிற்படுத்தலாம். இந்த நிலையில் இவ்வாறு பிற்படுத்துவது சிறந்தது.
"நபில் முத்லக்" எனும் ஸுன்னத் நோன்புகளுக்கு பஜ்ருக்கு முன்பிருந்தே நிய்யத் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; ஒருவர் பஜ்ரில் இருந்து நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் செய்யாவிட்டால் அந்த நாளின் எந்த நேரத்தில் இருந்தும் ஸுன்னத் நோன்பை ஆரம்பிக்க முடியும். ஆனால் அவருக்கு முழு நாளும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்குமா? அல்லது அவர் நோன்பை ஆரம்பித்த நேரத்தில் இருந்து தான் நன்மை எழுதப்படுமா? அதாவது முழுமையான ஒரு நாளில் நோன்பு நோற்ற நன்மை கிடைக்காதா? என்று கருத்து வேறுபாடு உள்ளது. முழு நாளும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்காது என்ற கருத்தின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளில் ஒன்றையேனும் பஜ்ருக்கு முன்பிருந்தே ஆரம்பிக்காது விட்டிருந்தால் முழுமையாக ஆறு நோன்புகளையும் நோற்ற நன்மை அவருக்குக் கிடைக்காது என்று கருதப்படுகின்றது. இந்தக் கருத்தை இமாம் இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.
ஒருவர் ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்களை விடக் குறைவான நாட்கள் நோன்பு நோற்றால் அவருக்கு அவர் நோற்ற நோன்புக்குரிய நன்மைகள் கிடைக்குமே தவிர முழுமையாக ஆறு நோன்புகள் நோற்றால் கிடைக்கும் தனிச் சிறப்புக்கள் கிடைக்காது.
தேவை ஏற்படின் ஸுன்னத் நோன்பை முழுமையாக்காமல் இடையில் முறிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அதனைத் தேவையின்றி முறிப்பது நல்லதல்ல. முறித்த ஸுன்னத் நோன்பைக் களாச் செய்யத் தேவையில்லை.
ஆறு நோன்புகளுக்கு என்று எந்த ஒரு பெருநாளும் கிடையாது. மார்க்க அறிவு இல்லாத சிலர் ஷவ்வால் மாதத்தின் எட்டாவது நாளில் ஆறு நோன்புப் பெருநாள் என்று ஒரு பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இது மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட பித்அத் ஆகும்; பாவமான செயலாகும். இந்த நாளில் பெருநாளுக்குரிய எந்த ஒரு அடையாளமும் வெளிப்படுத்தப்படக்கூடாது.
-Sunnah Academy