ஸகாத் - கூட்டு நடைமுறையின் அவசியம்

- எஸ் எச் எம் இஸ்மாயில் ஸலபி 

ஸகாத்தைத் அவரவர் தனித்தனியாக வழங்காது கூட்டாக சேகரித்து வழங்குவது அதிக பயனளிக்கத்தக்கதாகும்.

'(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..' (9:103).

என்ற வசனம் ஸகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து எடுங்கள் என்று கூறுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,

'அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்' எனக் கூறியுள்ளார்கள்' (அறிவிப்பவர்: முஆத் (ரலி), நூல்: முஸ்லிம்)

இந்த நபிமொழி ஸகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

ஸகாத் பெற தகுதியான எட்டு கூட்டம் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது ஸகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.

'(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,..' (9:60).

என்று கூறுகின்றது. இதுவும் ஸக்காத்தைச் சேகரிக்க ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அடிப்படையில் ஸகாத்தை ஒரு குழு சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

1) அதிக மூலதனம்

ஒரு ஊரில் ஸகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் ஐம்பது பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஸகாதும் ஒன்று திரட்டப்பட்டால் ஸகாத்தின் தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள பத்துப் பேருடைய பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

2) திட்டமிட்ட பகிர்ந்தளிப்பு

கூட்டுமுறையில் ஸகாத் சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

3) அனைவரையும் சென்றடையும்

கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஸகாத் சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.

4) சுய கௌரவம் பாதுகாக்கப்படும்

தேவையுடையோர் தனித்தனி நபர்களையணுகி ஸகாத் பெற முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய கௌரவம் பாதிக்கப்படுகின்றது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயகௌரவம் பாதுகாக்கப்படுகின்றது.

5) தற்பெருமைக்கு இடமிருக்காது

தனித்தனியாக ஸகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமை எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஸகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் ஸலாம் சொல்லவேண்டும்; பல்லிளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் எடுபட்டு செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

6) ஸகாத்தின் நோக்கம் நிறைவேறும்

தனித்தனியாய் 100, 200 என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது அல்லது தொழில் செய்வதற் கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஸகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.

7) கணக்குப் பார்க்காத ஸகாத்

நூற்றுக்கு இரண்டரை வீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஸகாத்தை நிறைவேற்றிவிட்டதாக எண்ணுகின்றனர். கூட்டு நடைமுறையூடாக இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.

8) பிச்சைக்கார சமூகத்தை உருவாக்கல்

தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஹதியா, பித்ரா என்ற பெயரில் படையெடுக்கும் பிச்சைக்காரக் கூட்டம் இதற்கு நிதர்சன சான்றாகும்.

9) சுய கௌரவமுள்ள ஏழைகள் பாதுகாக்கப்படல்

தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையால் சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள ஏழை கள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும்; தாழ்ந்து செல்லும் துர்ப்பாக்கியம் நிகழ்கின்றது. கூட்டு முறையில் வழங்கும் போது இவர்களும் அப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

10) குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை

கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் நாடு பூராகச் சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று கொள்ளை லாபம் பெற, இப்பழக்கமற்ற நல்லோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

11) சொந்தப் பகுதிக்கு ஸகாத் செல்லாமை

ஒரு ஊரிலுள்ள ஸகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஸகாத் பெறுகின்றான். இது ஸகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும்.

12) பரஸ்பரம் புரிந்துணர்வு

கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர் கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஸகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் தூய எண்ணத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

أحدث أقدم