கண்டெடுக்கப் பட்ட பொருள்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை

இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன செய்வது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொணடேயிரு. அதன் உரிமையாளர் (தேடி) வந்தால் (கொடுத்துவிடு) இல்லையேல் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள்.

அந்த மனிதர், “வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஒநாய்க்கு உரியது” என்று கூறினார்கள்.

அந்த மனிதர், “வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன்க்கும் அதற்கும் என்ன தொடர்பு? (குடிப்பதற்கு) அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (திமிலும்), (நடப்பதற்கு) அதன் கால்குளம்பும் உள்ளது. அதை அதன் உரிமையாளன் சந்திக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக்கொள்கிறது) மரத்திலிருந்து (அதன் இலைதழைகளைத்) தின்கிறது (அதைப் பற்றி நீ ஏன் கவலைப் பட வேண்டும்?)” என்று சொன்னார்கள்.
முஸ்லிம் 3545

இந்த ஹதீஸின் படி கண்டெடுக்கப் பட்ட எந்த பொருளும் யாருக்கும் சொந்தம் கிடையாது, அந்த பொருள் பற்றிய தகவலை ஒரு வருடத்திற்கு அறிவிப்பு செய்ய வேண்டும். அந்த பொருளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வருடம் அறிவிப்பு செய்து, யாரும் கேட்டு வரா விட்டால், அந்தப் பொருளை கண்டெடுத்தவர் தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

அதே நேரம் தவறி வந்த ஆட்டைப் பற்றி நபியவர்கள் கூறும் போது, முதலாவது அந்த ஆடு உனக்கு சொந்தம். அல்லது அதை எடுக்க கூடிய உன் சகோதரனுக்கு சொந்தம் அல்லது ஓநாயிக்கு சொந்தம் என்பதன் மூலம், தவறி வந்த ஆட்டை ஆட்டின் உரிமையாளர் தெரிந்தால் அவரிடம் அதை ஒப்படைத்து விட வேண்டும். இல்லா விட்டால், ஏனைய கண்டெடுக்கப் பட்ட பொருளை போன்று ஒரு வருடம் அறிவிக்க அவசியம் இல்லை. எடுத்தவர் அதை சொந்தமாக்கி கொள்ளலாம்.

மேலும் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி கேட்ட போது அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஏன் என்றால் ஒட்டகம் உணவை தானாக தேடிக் கொள்ளும், தண்ணீரை தனக்குள் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளும், கொடூரமான மிருகத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.

சுவைத் பின் ஃகபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர்களும் சல்மான பின் ரபீஆ (ரலி) அவர்களும் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றபோது, (ஓரிடத்தில்) சாட்டை ஒன்றை நான் கண்டேன். அதை நான் எடுத்துக் கொண்டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘அதை போட்டுவிடு’ என்று கூறினார்கள். நான், ‘இல்லை. நான் இதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டிருப்பேன். இதன் உரிமையாளர் வந்தால் சரி (அதை அவரிடம் ஒப்படைத்து விடுவேன்). இல்லையென்றால், இதை நான் பயன்படுத்திக்கொள்வேன்’ என்று அவர்களிடம் கூறி மறுத்துவிட்டேன் .

நாங்கள் போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது, நான் ஹஜ்ஜுக்குச் செல்வேன் என என் விதியில் இருந்தது (நான் ஹஜ்ஜுக்குச் சென்றேன்). அப்போது நான் மதீனா (வழியாகச்) சென்றேன். (அங்கு) உபை பின் கஅப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அந்தச் சாட்டையைப் பற்றியும் அதைப் பற்றி என் தோழர்கள் இருவரும் கூறியதைப் பற்றியும் அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு சுருக்குப் பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் (பொற்காசுகள்) இருந்தன. அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையாளர்) யாரையும் நான் காணவில்லை.

பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘மேலும் ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்துகொண்டிரு’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையாளர்) யாரையும் நான் காணவில்லை. பிறகு திரும்பவும் அவர்களிடம் சென்றேன்.

அப்போதும் அவர்கள், ‘மேலும் ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்பு செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அதைப் பற்றி அறிவிப்பு செய்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையளர்) யாரையும் நான் காணவில்லை. (நான்காம் முறையாக நான் அவர்களிடம் சென்றபோது) அந்த பையிலுள்ள காசின் எண்ணிக்கையையும் பையையும் அதன் முடிச்சையும் நினைவில் வைத்துக்கொள். அதன் உரிமையாளர் வந்தால் சரி (அவரிடம் அதை ஒப்டைத்துவிடு). இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள்’ என்று கூறினார்கள். ஆகவே நான் பயன்படுத்திக்கொண்டேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்களை அதன் பின்னர் மக்காவில் நான் சந்தித்தபோது ‘மூன்றாண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்ய வேண்டுமா அல்லது ஒரேயோர் ஆண்டு அறிவிப்புச் செய்ய வேண்டுமா என எனக்கு தெரியவில்லை’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் ‘நான் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர்களுடனும் சல்மான் பின் ரபீஆ (ரலி) அவர்களுடனும் (போருக்குப்) புறப்பட்டுச் சென்றபோது சாட்டை ஒன்றைக் கண்டேன்…’ என்று ஹதீஸ் ஆரம்பமாகி ‘ஆகவே அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்’ என்பதோடு முடிவடைகிறது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்களைப் பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் சந்தித்தேன். அப்போது அவர்கள் ‘ஓரேயோர் ஆண்டு நீ அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள்.

முஸ்லிம் 3553

பெறுமதியற்ற பொருளாக இருந்தாலும் இதே சட்டம் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் மேல் சுட்டிக் காட்டிய ஹதீஸில் மூன்று ஆண்டுகள் அதைப் பற்றிய அறிவிப்பு செய்ய வேண்டும் என்று வந்துள்ளதால் குறைந்தது ஒரு வருடம் கூடியது மூன்று வருடம் என்று விளங்கிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

இன்றை காலத்தைப் பொருத்த வரை கண்டெடுத்த பொருளைப் பற்றி அறிவித்தல் கொடுத்தல் என்பது மிகஇமிக இலகுவானது. தொலைக் காட்சி வானொலி இணைய தளங்கள் மூலம் அறிவிக்கலாம். மேலும் பக்கத்தில் உள்ள பொலிஸ் டேசன் பள்ளிகள் அமைப்புகள் மூலமாக தகவலை கொடுக்க முடியும்.

கண்டெடுக்கப் பட்ட பொருளைப் பற்றி அறிவித்தல் கொடுக்காமல் அதை தம்மிடமே வைத்துக் கொண்டவர் வழி கேட்டிலே உள்ளார் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வழிகேட்டிலேயே உள்ளார்.

இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.  முஸ்லிம் 3556

கண்டெடுத்த பொருளை அறிவித்தல் கொடுக்காமல் எனக்கு நல்ல அதிஸ்டம் கிடைத்துள்ளது என்று அவர் இரகசியமாக வைத்துக் கொண்டால் அது பெரிய பாவம் அவர் வழிகேட்டிலே உள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் ஹாஜிகளால் தவற விடப் பட்ட பொருளை எடுக்க கூடாது என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம். அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹாஜிகள் தவறவிட்ட பொருளை எடுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம 3555;

உம்றா ஹஜ் செய்வதற்காக சென்ற சமயம் பணமோ அல்லது பொருளோ ஹரத்து எல்லைக்குள் கண்டெடுக்கப்பட்டால் அதை எடுத்தவா; வைத்துக் கொள்ள கூடாது. ஹாஜிகளின் கண்டெடுக்கப் பட்ட பொருளை ஒப்படைப்பதற்கு என்று தனியான ஓர் இடம் இருப்பதால் அங்கு ஒப்படைத்து விட வேண்டும். இடம் தெரியா விட்டால் அங்கு பணிபுரியூம் காவலாளிகளிடம் ஒப்படைத்தால் அவர்கள் அதை உரிய இடத்தில் சேர்த்து விடுவார்கள்.

மேற்ச் சொல்லப் பட்ட செய்திகள் மூலம் சில முக்கியமான விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கண்டெடுக்கப்பபட்ட பொருள் அது பிறரின் பொருள் அதை அமானிதமாக பாதுகாக்க வேண்டும்.

பணத்தையோ பொருளையோ தவற விட்டவர் கைசேதப்பட்டு மிகவும் கவலையோடு இருப்பார். பெருமதியான அளவு என்றால் முடிந்த அளவு முயற்ச்சி செய்து அவரிடம் போய் சேர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் செய்வது மிக அவசியம் என்பதை விளங்கி வேண்டும்.

ஒரு பொருளை கண்டெடுத்த உடன் நீங்கள் அடையும் சந்தோசத்தை விட தவற விடடவர் அடையும் கவலை அதிகமாக இருக்கும்.

ஒரு பத்து ருபாய் அல்லது ஒரு நூறு ருபாய் கண்டெடுக்கிறீர்கள் உரியவர் இல்லை என்றால் அதை தர்மமாக பிறருக்கு கொடுத்து விடுங்கள். அது உங்களுக்கும் சிறப்பாக இருக்கும் தவற விட்டவருக்கும் நன்மையாக அமைந்து விடும் கண்டெடுக்கப் பட்ட பொருளின் பெறுமதியை வைத்து ஒரு வருடம் வரை பாதுகாப்பதா ? அல்லது உடனே அதை தர்மமாக கொடுத்து விடுவதா என்பதை நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் வெளிநாடு சென்ற சமயம் ஒரு பொருளை கண்டெடுத்தால் அது பெறுமதியான பொருள் என்றால் அங்குள்ள பொலிஸ் டேசனிலோ அல்லது நம்பிக்கையான ஒரு அமைப்பிடமோ அதை ஒப்படைத்து விட்டு வந்து விடலாம்.

أحدث أقدم