ஃபிக்ஹ் கலை - அறிமுகம்

அரபி மூலம்: முஹம்மத் இப்னு இப்ராஹிம் இப்னு அப்துல்லாஹ் அத்துவைஜிரி

தமிழில்: இம்தியாஸ் ஸலபி


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள்‌ தொழுகைக்குத்‌ தயாரானால்‌ உங்கள்‌ முகங்‌களையும்‌, முழங்கைகள்‌ வரை உங்கள்‌ கைகளையும்‌ கழுவிக்‌ கொள்ளுங்கள்‌. மேலும்‌, உங்கள்‌ தலைகளை (தண்ணீரைத்‌ தொட்டுத்‌) தடவிக்‌ கொள்ளுங்கள்‌. கரண்டை வரை உங்கள்‌ கால்களையும்‌ (கழுவிக்‌ கொள்ளுங்‌கள்‌.) இன்னும்‌, நீங்கள்‌ குளிப்புக்‌ கடமையானவர்களாக இருந்தால்‌ (குளித்துத்‌) தூய்மையாகிக்‌ கொள்ளுங்கள்‌. நீங்கள்‌ நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால்‌ அல்லது உங்களில்‌ ஒருவர்‌ மலசலம்‌ கழித்து விட்டு வந்தால்‌, அல்லது நீங்கள்‌ (உடலுறவு மூலம்‌) மனைவியரைத்‌ தீண்டி இருக்கும்‌ நிலையில்‌ தண்ணீரைப்‌ பெற்றுக்‌ கொள்ளவில்லையென்றால்‌ தூய்மையான மண்ணை நாடி உங்கள்‌ முகங்களையும்‌, உங்கள்‌ கைகளையும்‌ அதைக்‌ கொண்டு தடவிக்‌ கொள்ளுங்கள்‌. அல்லாஹ்‌ உங்களுக்கு எந்தவித சிரமத்தையும்‌ ஏற்படுத்த விரும்பவில்லை. எனினும்‌, நீங்கள்‌ நன்றி செலுத்தும்‌ பொருட்டு உங்களைத்‌ தூய்மைப்படுத்தவும்‌ தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்‌படுத்தவுமே அவன்‌ விரும்புகின்றான்‌. (5:6)

அல்குர்‌ஆன்‌, அஸ்‌ சுன்னா, இஜ்மா, கியாஸ்‌
ஆகியன இஸ்லாமிய அடிப்படைகளாகும்‌.
குர்‌ஆனும்‌ சுன்னாவும்‌ மார்க்கத்தின்‌ இரு
அடிப்படைகளாகும்‌.

இஜ்மா என்பது இஸ்லாமிய சமூகத்தின்‌
மார்க்க அறிஞர்கள்‌ குர்‌ஆன்‌ சுன்னாவை
அடிப்படையாகக்‌ கொண்டு மார்க்க சட்டத்தில்‌
ஒன்று படுவதாகும்‌. உதாரணமாக ஐவேளை
தொழுகை கடமை என்பது போலாகும்‌.

கியாஸ்‌ என்பது, மார்க்கத்தில்‌ தெளிவாக
சொல்லப்படாத சட்டமொன்றுக்காக
தெளிவாக சொல்லப்பட்ட சட்டத்தையும்‌
அதற்கு முன்‌ வைத்த காரணிகளையும்‌
அடிப்படையாகக்‌ கொண்டு பொதுவான
தீர்வொன்றை காண்பதாகும்‌. உதாரணமாக
போதையை காரணமாக‌ வைத்து மது ஹராமாக்கப்‌பட்டுள்ளது. இச்சட்டத்தை அடிப்படையைக்‌ கொண்டு போதைப்‌ பொருட்கள்‌ தடுக்கப்‌ பட்டுள்ளது என்ற சட்டத்தை எடுப்பதாகும்‌.

இஸ்லாமிய சட்டங்களின்‌ பிரிவுகள்‌ ஐந்தாகும்‌.

வாஜிப்‌: கண்டிப்பாக செய்யவேண்டும்‌ என
அல்லாஹ்வினாலும்‌ அவனது தூதர்‌ முஹம்மத்‌
(ஸல்‌) அவர்களாலும்‌ பணிக்கப்பட்ட விடயமாகும்‌. அந்த விடயத்தை எடுத்து நடந்தவருக்கு
கூலி வழங்கப்படும்‌. விட்டவருக்கு தண்டனை
வழங்கப்படும்‌. உதாரணமாக ஐவேளை தொழுகையாகும்‌

முஸ்தஹப்பு: செய்து தான்‌ ஆகவேண்டும்‌ என்று கண்டிப்பாக அல்லாஹ்வினாலும்‌ அவனது தூராலும்‌ பணிக்கப்படாத விடயமாகும்‌. அந்த விடயத்தை எடுத்து நடப்பவருக்கு கூலி வழங்கப்படும்‌. எடுத்து நடக்காதவருக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது. உதராணமாக சுன்னத்தான தொழுகைகள்‌. சுன்னத்தான நோன்புகள்‌, ஸதகாக்கள்‌ போன்ற காரியங்களாகும்‌. இதனை மன்தூப்‌ மஸ்னூன்‌ ததவ்வுஹ்‌ என்றும்‌ கூறப்‌படும்‌.

ஹராம்‌ அல்லது முஹர்ரம்‌: கண்டிப்பாக
தவிர்க்க வேண்டும்‌ என அல்லாஹ்வினாலும்‌
அவனது தூதராலும்‌ பணிக்கப்பட்ட விடயமாகும்‌. அந்த விடயத்தை தவிர்ந்து நடப்பவருக்கு கூலி வழங்கப்படும்‌. எடுத்து நடப்பவருக்கு தண்டனை வழங்கப்படும்‌.

உதாரணமாக இறைநிராகரிப்பு (குப்ரு) இணைவைப்பு (ஷிர்க்‌) விபச்சாரம்‌, வட்டி, அநியாயம்‌, அத்துமீறல்‌ போன்ற பெரும்‌ பாவங்களாகும்‌

மக்ரூஹ்‌: அல்லாஹ்வினாலும்‌ அவனது
தூதராலும்‌ செய்யக்‌ கூடாது என கண்டிப்பாக
பணிக்கப்படாத விடயமாகும்‌. அதை விட்டு
நடப்பவருக்கு கூலி வழங்கப்படும்‌ செய்கின்றவருக்கு தண்டனை வழங்கப்படமாடடாது.

உதாரணமாக தொழுகையில்‌ இருக்கும்‌ போது
கரண்டை காலுக்குக்‌ கீழால்‌ ஆடையை
தொங்கவிடுவது.

முபாஹ்‌: செய்ய வேண்டும்‌ என்ற
கட்டளையயோ செய்யக்‌ கூடாது என்ற
தடையோ இல்லாத விடயமாகும்‌. இந்த
விடயத்தில்‌ தெரிவு செய்யும்‌ உரிமை முஸ்லிமிடமே விடப்பட்டுள்‌ளது. அதனை செய்கின்றவருக்கு கூலியோ செய்யாதவருக்கு தண்டனையோ வழங்கப்படமாட்டாது.

உதாரணமாக நல்லவைகளை உண்பது,
கடலிலும்‌ தரையிலும்‌ வேட்டையாடுவது,
வேதக்காரர்களின்‌ உணவை உண்பது,
வேதக்காரர்களின்‌ பெண்களை மணமுடிப்பது
போன்றவையாகும்‌.

ஆகுமாக்கப்பட்ட இக்காரியத்தை செய்வதன்‌
மூலம்‌ அல்லாஹ்வை வழிபடுவதற்கு உதவியாக அமையும்‌ என்று எண்ணுகின்றவருக்கு கூலி வழங்கப்படும்‌. இவ்வாகுமாக்‌கப்பட்ட காரியத்தின்‌ மூலம்‌ நல்லதை செய்தால்‌ நல்லவைகளுடனும்‌ தீயதை செய்தால்‌ தீயவைகளுடனும்‌ சேர்க்கப்படும்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ சொல்‌ செயல்களின்‌ விளக்கம்‌ ஒரு விடயத்தை செய்ய வேண்டும்‌ அல்லது செய்யக்‌ கூடாது என நமி (ஸல்‌) அவர்கள்‌ தூண்டியிருப்பார்கள்‌. அவர்கள்‌ தூண்டிய காரியத்திற்கு மாற்றமாக அவர்களே நடந்திருப்பார்களாயின்‌ இக்காரியத்தில்‌ விரும்பியதை (மக்கள்‌) செய்து கொள்ளலாம்‌ என்பதே அர்த்தமாகும்‌. எனினும்‌ அதில்‌ மிகச்சிறந்த காரியத்தை நபி (ஸல்‌) அவர்கள்‌ தொடராக செய்து வருவார்கள்‌.

உதாரணமாக, வுழு செய்யும்‌ போது ஒவ்வொரு
உறுப்புக்களையும்‌ மும்மூன்று முறை
கழுவதற்கு தூண்டினார்கள்‌. எனினும்‌ இரு
முறையாகவோ ஒரு முறையாகவோ உறுப்புக்‌களை கழுவி வுழு செய்து முள்ளார்கள்‌.

நின்று கொண்டு நீர்‌ பருகுவதை கண்டித்தார்‌கள்‌. எனினும்‌ நின்று கொண்டும்‌ நீர்‌ பருகியுள்ளார்கள்‌.

நடந்தவர்களாக தவாப்‌ செய்தவர்கள்‌ வாகனத்‌தில்‌ இருந்தவாரும்‌ தாவப்‌ செய்துள்ளார்கள்‌.
செருப்பு அணியாதவர்களாக நடந்தவர்கள்‌
செருப்பு அணிந்தவர்களாகவும்‌ நடந்துள்ளார்‌கள்‌. இதுபோன்ற பல உதாரணங்கள்‌ உண்டு இவை அனைத்தும்‌ ஆகுமானது என்பதை காட்டுகின்றது.

எனினும்‌ இவைகளில்‌ மிகச்சிறப்பான காரியங்களை நபியவர்கள்‌ தொடராக செய்து வந்துள்ளார்கள்‌. அதாவது வுழுவின்‌ போது ஒவ்வொரு உறுப்புக்களையும்‌ மும்‌ முறை கழுவுவது, உட்கார்ந்து கொண்டு பருகுவது நடந்த நிலையில்‌ தவாப்‌ செய்வது செருப்பு அணிந்து கொண்டு நடப்பது போன்றவையாகும்‌.

நபி(ஸல்‌) அவர்களின்‌ செயலை விட சொல்லை
முற்படுத்த வேண்டும்‌. செயலைப்‌ பொறுத்தவரை அது அவர்களது தனிப்பட்ட காரணங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்‌. சொல்லைப்‌பொருத்தவரை (மக்களுக்கு) பொதுவானதாகவும்‌ உறுதியான சட்டத்தை கூறுவதாகவும்‌ இருக்கும்‌.


இஸ்லாமிய சட்டக்‌ கலையில்‌
அடிப்படைகளின்‌ முக்கியத்துவம்‌:

(அதாவது இஸ்லாமிய சட்டக்‌ கலையில்‌ பின்வரும்‌ வார்த்தைப்‌ பிரயோகம்‌ அடிப்படை சட்டங்களை தெளிவுப்படுத்தவும்‌, கையாளவும்‌ பயன்படுத்தப்படுகிறது.)

உறுதியான எண்ணத்தை சந்தேகத்தைக்‌ கொண்டு நீக்கிவிட முடியாது அசுத்தமானது என்று ஆதாரத்தை கொண்டு நிரூபிக்கும்‌ வரை அடிப்படையில்‌ அனைத்தும்‌ சுத்தமானதாகும்‌.

ஆதாரம்‌ வரும்‌ வரை பொறுப்பிலிருந்து நீங்கியிருத்தல்‌, என்பது பொது விதியாகும்‌.
அசுத்தமானது அல்லது தடுக்கப்பட்டது என்ற
ஆதாரத்தை கொண்டு வரும்‌ வரை அனைத்தும்‌
ஆகுமானதாகும்‌.

கஷ்டம்‌ இலகுவை கொண்டு வரும்.‌ நிர்ப்பந்தம்‌ தடுக்கப்பட்டவைகளை ஆகுமாக்கும்‌

நிர்ப்பந்தமானவை அதன்‌ அளவுக்கேற்பவே
கணிக்கப்படும்‌.

கட்டாயமனவை (வாஜிபானவை) பற்றிய
பூரண அறிவு கிடைத்து, அவைகளை
செய்வதற்கு ஆற்றலும்‌ இருந்தாலுமேயன்றி
கடமையாகாது.

இயலாமையுடன்‌ எதுவும்‌ கடமையாகாது.

நிர்ப்பந்தத்துடன்‌ எதுவும்‌ ஹராமாகாது.

கடமைகள்‌ மார்க்க சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்‌ மீது கடமையாகும்‌.

வணக்க வழிபாடுகள்‌, மற்றும்‌ கொடுக்கல்‌
வாங்கல்களின்‌ அனைத்து நிபந்தனைகளும்‌
சந்தர்ப்பங்களுக்கேற்ப கணிக்கப்படும்‌.
நற்காரியங்கள்‌ செய்வதை பார்க்கிலும்‌
குழப்பங்களை தடுப்பதை முற்படுத்தப்படும்‌.
இரு நலவுகளில்‌ மிக உயர்ந்ததை தெரிவு
செய்யப்படும்‌.

நெருக்கடியின்‌ போது இரு குழப்பமான சூழ்‌
நிலை காணப்படுமாயின்‌ அதில்‌ குறைந்த குழப்பமுள்ளதை செய்ய வேண்டும்‌.

ஒரு சட்டத்தை உறுதிப்படுத்துவதற்கும்‌ நீக்குவதற்கும்‌ காரண காரியம்‌ இன்றியமையாததாகும்‌.

அழிவுகளை தடுப்பது மார்க்க சட்டங்களுக்கு
உட்பட்டவர்கள்‌ மீதும்‌ ஏனையவர்கள்‌ மீதும்‌
கடமையாகும்‌.

ஆதாரம்‌ கிடைக்கும்‌ வரை வணக்கம்‌ புரிவது அடிப்படையில்‌ தடுக்கப்பட்டுள்ளது.

பழக்க வழக்கங்களும்‌ கொடுக்கல்‌ வாங்கல்‌களும்‌ தடுக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரம்‌ கிடைக்கும்‌ வரை அவை அடிப்டையில்‌ ஆகுமானவையாகும்‌.

விரும்பத்தக்கது அல்லது ஆகுமானது என்ற
ஆதாரம்‌ கிடைக்கும்‌ வரை மார்க்கக்‌ கட்டளைகள்‌ அடிப்படையில்‌ கடமையானதாகும்‌.

வெறுக்கத்தக்கது என்ற ஆதாரம்‌ கிடைக்கும்‌ வரை விலக்கப்பட்ட அனைத்தும்‌ அடிப்‌படையில்‌ ஹராமாகும்‌.

பயனுள்ள அனைத்தும்‌ ஹலால்‌ என்பது அடிப்படையாகும்‌.

அசுத்தங்கள்‌ மற்றும்‌ தீங்கு விளைவிப்பவைகள்‌
ஹராம்‌ என்பது அடிப்படையாகும்‌.


நபி (ஸல்‌) அவர்களது செயற்பாடுகள்‌

நபி (ஸல்‌) அவர்களது செயற்பாடுகள்‌ மூன்று வகையாக நோக்கப்படும்‌.

1. மனித இயற்கையுடன்‌ தொடர்பாக அமைந்த
செயற்பாடுகள்‌. உதாரணமாக நிற்றல்‌, உட்காருதல்‌, உண்ணுதல்‌, பருகுதல்‌, தூங்குதல்‌, விழித்திருத்தல்‌ போன்றவையாகும்‌. இவை மார்க்கம்‌ என்ற அடிப்படையில்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ செய்யவில்லை.

எனவே நானும்‌ நபி(ஸல்‌) அவர்களை பின்பற்றி அல்லாஹ்வின்‌ நெருக்கத்தை விரும்பி நிற்கிறேன்‌ உட்காருகிறேன்‌ என்று எவரும்‌ கூற முடியாது.

2. மார்க்கச்‌ செயற்பாடுகளுடன்‌ அமைந்த செயற்‌பாடுகள்‌.

உதாரணமாக தொழுகை, ஹஜ்‌ போன்ற மார்க்கக்‌ கிரிகைகளாகும்‌. இவை கடமைகள்‌ என்ற அடிப்படையில நபி(ஸல்‌) அவர்கள்‌ செய்ததனால்‌ நாமும்‌ நபி(ஸல்‌) அவர்களை பின்பற்றி அவைகளை செய்ய வேண்டும்‌. அவர்களது சுன்னா மற்றும்‌ வரலாற்றின்‌ மூலம்‌ ஆறுதலடையவும்‌ வேண்டும்‌

3. மார்க்கத்திற்கும்‌ இயற்கையான காரியங்களுக்கும்‌ உடன்பட்டதாக அமைந்த செயற்‌பாடுகள்‌.

மனித இயற்கை என்ற அடிப்படையில்‌ ஒரு காரியத்தை நபி(ஸல்‌) அவர்கள்‌ செய்திருப்‌பார்கள்‌. அது வணக்கத்துடன்‌ தொடர்புபட்டதாகவோ அல்லது அதற்கு உதவியானதாகவோ இருக்கும்‌.

உதாரணமாக ஹஜ்ஜூக்காக வாகனத்தில்‌ ஏறி
பயணிப்பது, தொழுகையில்‌ நடு இருப்பில்‌
ஓய்வாக இருப்பது, பெரு நாள்‌ தொழுகைக்காக
போய்வரும்‌ வழிகளை மாற்றிக்‌ கொள்ளுவது,
சுபஹ்வுடைய சுன்னத்‌ தொழுகைக்கும்‌ சுபஹ்‌
தொழுகைக்குமிடையில்‌ வலப்‌ பக்கமாக சாய்ந்து உறங்குவது, மினாவிலிருந்து சென்ற பின்னர்‌ முஹஸ்ஸப்‌ எனும்‌ இடத்தில்‌ தங்குவது. இவை போன்றவை மனித இயற்கை என்றாலும்‌ மார்க்கம்‌ என்ற காரியமும்‌ அடங்கியுள்ளது. விரும்பியவர்‌ இதனை செய்யலாம்‌ அல்லது விட்டு விடவும்‌ செய்யலாம்‌.


மார்க்கக்‌ கட்டளைகளை நிறைவேற்றுவதின்‌
சட்டம்‌

அல்லாஹ்வின்‌ கட்டளைகள்‌ இலகுவானதும்‌
அருளுக்குரியதுமாகும்‌. ஒரு அடியான்‌ தனது
சக்திக்கு ஏற்ப அக்கட்டளைகளை நிறைவேற்றுவார்‌, விலக்கப்பட்டவைகளை கண்டிப்பாக அவர்‌ தவிர்ந்து கொள்வார்‌.

எனவே உங்களால்‌ முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக்‌ கொள்ளுங்கள்‌ செவிசாயுங்கள்‌ இன்னும்‌ கட்டுப்படுங்கள்‌ (நல்லறங்‌களில்‌) செலவு செய்யுங்கள்‌. (அது) உங்களுக்குசிறந்ததாகும்‌. எவர்கள்‌ தமது உள்ளத்தின்‌ கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்‌படுகின்றார்‌களோ அவர்கள்‌ தாம்‌ வெற்றியாளர்கள்‌. 64:16

நான்‌ உங்களை விட்டு விட்ட விடயங்களில்‌
என்னை நீங்கள்‌ விட்டுவிடுங்கள்‌. உங்களுக்கு
முன்பிருந்தவர்கள்‌ அழிந்ததெல்லாம்‌ அவர்‌களது கேள்விகளாலும்‌ அவர்களது நபிமார்களுடன்‌ முரண்பட்டதாலுமேயாகும்‌. நான்‌ உங்களுக்கு ஒரு விடயத்தை தடுத்திருந்தால்‌ அதனை தவிர்ந்து கொள்ளுங்கள்‌. ஒரு விடயத்தை உங்களுக்கு ஏவியிருந்தால் ‌உங்களால்‌ முடிந்தளவு எடுத்து நடவுங்கள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: அபூஹூரைரா (ரலி) நூல்‌ புகாரி)


நற்காரியங்கள்‌ (சாலிஹான அமல்கள்‌) ஏற்றுக்‌ கொள்ளப்‌படுவதற்கான நிபந்தனைகள்‌

ஒரு அமல்‌ சாலிஹானதாக அமைய வேண்டுமானால்‌ பின்வரும்‌ மூன்று விடயங்கள்‌ பூரணத்துவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

ஒன்று: (இஹ்லாஸ்‌)அல்லாஹ்வுக்கென்ற மனத்‌தூய்மை இருத்தல்‌ வேண்டும்‌.

நேரிய வழி நின்று கலப்பற்றவர்களாக, அவனுக்கே கட்டுப்பட்டு, அல்லாஹ்வை வணங்குமாறும்‌, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும்‌ கொடுத்து வருமாறே, தவிர அவர்கள்‌ ஏவப்படவில்லை.இதுதான்‌ நேரிய மார்க்கமாகும்‌.(98:5)

இரண்டு: நபி(ஸல்‌) அவர்கள்‌ காட்டி தந்ததற்கு
ஏற்றவாறு இருத்தல்‌ வேண்டும்‌.

பல கிராமத்தவர்களிடமிருந்து அல்லாஹ்‌ தன்‌
தூதருக்கு மீட்டி கொடுத்தவை (அவரது)
உறவினர்களுக்கும்‌ அநாதைகளுக்கும்‌ ஏழைகளுக்கும்‌ வழிப்போக்கர்களுக்கும்‌ உரியதாகும்‌.
(செல்வம்‌) உங்களிலுள்ள செல்வந்தர்களிடம்‌
மாத்திரம்‌ சுற்றாதிருப்பதற்காக (இவ்வாறு
ஏவுகிறான்‌). இத்தூதர்‌ உங்களுக்கு எதை
வழங்கினாரோ அதை நீங்கள்‌ எடுத்துக்‌
கொள்ளுங்கள்‌. அவர்‌ எதை உங்களை தடுத்‌தாரோ (அதை விட்டும்‌) விலகிக்‌ கொள்ளுங்கள்‌. இன்னும்‌ அல்லாஹ்வை அஞ்சிக்‌ கொள்ளுங்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ தண்டிப்பதில்‌ கடுமை யானவன்‌(59:7)

மூன்று: அதனை செய்பவர்‌ முஃமினாக
இருத்தல்‌ வேண்டும்‌.

ஆணோ அல்லது பெண்ணோ நம்பிக்கை கொண்ட நிலையில்‌ நல்லறம்‌ புரிந்தால்‌ அவருக்கு நல்வாழ்வளிப்போம்‌. அவர்கள்‌ செய்து கொண்டிருந்த நல்லவற்றிக்காக அவர்களது கூலியை நாம்‌ அவர்களுக்கு வழங்குவோம்‌.(16:97)

இந்த நிபந்தனைகள்‌ பூர்த்தியானால்‌ மட்டுமே
அமல்களை அல்லாஹ்‌ அங்கீகரிப்பான்‌. இதில்‌
ஒரு நிபந்தனையேனும்‌ இழக்கப்படுமாயின்‌
அது நிராகரிக்கப்பட்டு விடும்‌.

நான்‌ உங்களைப்‌ போன்ற மனிதன்‌ தான்‌ (உண்மையாக) வணங்கப்‌ படத்‌ தகுதியான உங்கள்‌ இரட்சகன்‌ ஒருவனே என்று எனக்கு (வஹி) அறிவிக்கப்படுகிறது. என (நபியே) நீர்‌ கூறுவீராக எவர்‌ தனது இரட்சகனின்‌ சந்திப்பை ஆதரவு வைக்கின்றாரோ அவர்‌ நல்லறம்‌ செய்யட்டும்‌ மேலும்‌ தனது இரட்சகனின்‌ வணக்கத்தில்‌ எவரையும்‌
இணையாக்காதிருக்‌கட்டும்‌.(18:110)


அமல்கள்‌ நிறைவேற்றப்பட வேண்டிய
முறைகள்‌

அனைத்து அமல்களும்‌ நிறைவேற்றப்பட வேண்டிய முறைகள்‌ யாதெனில்‌, அவை பலனுள்ளதாகவும்‌, பயனளிக்கக்‌ கூடியதாகவும்‌, ஏற்றுக்‌ கொள்ளப்பட தக்கதாகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

தொழுகை நோன்பு ஸகாத்‌ ஹஜ்‌ போன்ற வணக்க வழிபாடுகளாக இருந்தாலும்‌ வியாபாரம்‌ கூலிக்கு கொடுத்தல்‌ சமாதானம்‌ செய்து வைத்தல்‌ கொடுக்கல்‌ வாங்களுக்காக பிறருக்கு அதிகாரத்தை வழங்குதல்‌ போன்ற விடயங்களாக இருந்தாலும்‌ அல்லது ஒழுக்க
பண்பாடுகள்‌ குடும்ப உறவுகள்‌ திக்ருகள்‌
பிரார்த்தனைகள்‌ அல்லாஹ்வின்‌ பக்கம்‌ மக்களை அழைத்தல்‌ மார்க்கத்தை கற்பித்தல்‌ நன்மையை ஏவி தீமையை தடுத்தல்‌ போன்றவைகளாக இருந்தாலும்‌ அவைகளை மேற்‌கொள்ள முறைகள்‌ உள்ளன.

ஒவ்வொரு அமலும்‌ பயனளிக்ககூடியதாகவும்‌
ஏற்றுக்‌ கொள்ளப்பட தக்கதாகவும்‌ இருப்பதற்கு
பின்வரும்‌ முக்கிய பண்புகள்‌ நிறைவேற்றப்பட வேண்டும்‌.

ஒன்று: இந்த அமல்‌ அல்லாஹ்வும்‌ அவனது
தூதரும்‌ ஏவியதாகும்‌. இதனை நிறைவேற்றுவதன்‌ மூலம்‌ சந்தேகமின்றி இம்மை மறுமைக்‌குரிய எமது தேவைகள்‌ பூர்த்தியாக? எமது வெற்றிகள்‌ உறுதியாகும்‌ என்று உறுதியாக எண்ணுவதாகும்‌.

இரண்டு: இந்த அமல்‌ இணையற்ற ஏக
இரட்சகனான அல்லாஹ்வுக்குரியது என்ற
மனத்தூய்மை இருத்தல்‌ வேண்டும்‌. காரணம்‌
அவனே எம்மை படைத்தான்‌ எமக்கு நேர்வழி
காட்டினான்‌ எமக்கு உதவியளித்தான்‌ எமக்கு
கூலி வழங்குகின்றான்‌ மார்க்கத்தின்‌ கடமைகள்‌
பெறுமதி வாய்தவையாகும்‌. அதற்கான பெறுமதியை அல்லாஹ்‌ ஒருவனைத்‌ தவிர வேறு எவராலும்‌ வழங்க முடியாது. வானம்‌ பூமியிலுள்ளவர்கள்‌ ஒன்று சேர்ந்தாலும்‌ ஒரு தஸ்பீஹ்‌ உடைய நன்மையை வழங்கிட முடியாது.

எனவே உங்களுக்கு கூலி தருவதாக வாக்களித்த அல்லாஹ்வுக்கு தூய்மையான மனதுடன்‌ அமல்‌ செய்யுங்கள்‌. அவன்‌ தனித்தவன்‌ அவனுக்கு யாதொரு இணையுமில்லை.

மூன்று: எல்லா காரியங்களிலும்‌ நபி (ஸல்‌) அவர்களை பின்பற்றுதல்‌ வேண்டும்‌. அவர்கள்‌ செய்தது போன்றே நாமும்‌ செய்ய வேண்டும்‌. அவர்கள்‌ எமக்கு முன்னால்‌ இருந்தால்‌ எந்த நிலையிலிருந்து செய்து காட்டுவார்களோ அதையே நாம்‌ செய்ய வேண்டும்‌ என்ற மன நிலையை ஏற்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.

எனவே அறிந்ததைக்‌ கொண்டு அமல்‌ செய்ய
வேண்டும்‌. அறியாததை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்‌.

நான்கு: வணக்கங்களின்‌ சிறப்பை மனதில்‌
வரவழைத்துக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌. ஏனெனில்‌ வணக்கங்கள்‌ அனைத்தும்‌ சிரமமானவை. அதன்‌ சிறப்புக்களை அறிந்தோமேயானால்‌ அவைகளை தொடர்ச்சியாகவும்‌ அதிகமாகவும்‌ நிறைவேற்றி அதன்‌ பால்‌ அழைப்புவிடுப்பது இலகுவாகிவிடும்‌.

திக்ரு, தொழுகை, நோன்பு, ஹஜ்‌, அல்லாஹ்வின்பால்‌ அழைப்பு விடுத்தல்‌, குடும்ப உறவை பேணல்‌ இவை போன்ற அனைத்து நற்செயல்களின்‌ சிறப்புக்களை நாம்‌ அறிந்திருப்பதன்‌ மூலம்‌ அவைகளை தொடர்ச்சியாக செய்வதற்கு இலகுவாகிவிடுகிறது.

ஐந்து : நீ அல்லாஹ்வை காணாவிட்டாலும்‌ அவன்‌ உன்னை பார்த்துக்‌ கொண்டிருக்கிறான்‌ என்ற நிலையில்‌ அவனை பார்ப்பது போன்று வணங்கவேண்டும்‌.

அல்லாஹ்‌ எம்மை பார்த்துக்‌ கொண்டிருக்‌கிறான்‌ எமது பேச்சை கேட்டுக்‌ கொண்டிருக்‌கிறான்‌ எமது நிலைகளை அறிந்து கொண்டிருக்‌கிறான்‌ எமது செயற்பாடுகளை அவதானித்துக்‌ கொண்டிருக்கிறான்‌ என்பதை மனதில்‌ வரவழைத்துக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌ அப்போது அவனுக்குரிய அமலை சிறந்ததாக
செய்வோம்‌. அவனை பார்ப்பது போன்று
வணங்குவோம்‌. அவன்‌ எம்மை அவதானித்துக்‌
கொண்டிருக்‌கிறான்‌ எமது (அமல்களுக்கான)
செயல்‌ களுக்கான கூலிகளை வழங்குவான்‌
என்றும்‌ எண்ணிக்‌ கொள்வோம்‌. உண்மையான அடியான தனிமையில்‌ இருந்தாலும்‌ மக்களுடன்‌ இருந்தாலும்‌ தனது மனதை ஒரே நிலையில்‌ வைத்து அல்லாஹ்வுக்‌கென்றே அமல்‌ புரிகின்றவனாக இருப்பான்‌.

மக்கள்‌ முன்னிலையில்‌ அழகுடனும்‌ தனிமையில்‌ இருக்கும்‌ போது மோசமாகவும்‌, எவன்‌ அல்லாஹ்வை வணங்குகிறானோ அவன்‌ மக்களை கண்ணியப்படுத்துகிறானே தவிர அல்லாஹ்வை கண்ணியப்படுத்தவில்லை. இது ஒரு நயவஞ்சகமாகும்‌.

ஆறு: நற்காரியங்களின்‌ பால்‌ விரைவாக செல்ல எமது உள்ளங்களை பயிற்றுவித்தல்‌ வேண்டும்‌. அல்லாஹ்‌ விரும்புகின்ற நாடுகின்றவற்றின்‌ பால்‌ எமது உள்ளங்களை இட்டுச்‌ செல்ல வேண்டும்‌. அல்லாஹ்வின்‌ திருப்திக்காக நம்மிடமுள்ளவற்றை செலவிட வேண்டும்‌. அவன்‌ விரும்புவதை செய்யவேண்டும்‌. அவன்‌ வெறுக்கின்றவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும்‌.

தான்‌ விரும்புவதை பார்க்கிலும்‌ அல்லாஹ்‌
விரும்புவதையும்‌ நாடுவதையும்‌ முற்படுத்துபவனே உண்மையான அடியானாவான்‌. அவனை அல்லாஹ்‌ பொருந்திக்‌ கொண்டால்‌ அவனே உண்மையான முஜாஹித்‌ ஆவான்‌.

எவர்கள்‌ நமது விடயத்தில்‌ முயற்சிக்கின்றார்‌களோ நிச்சயமாக நாம்‌ நமது (நேரான) வழிகளில்‌ அவர்களை செலுத்துவோம்‌ நிச்சயமாக அல்லாஹ்‌ நன்மை செய்வோருடன்‌ இருக்கின்றான்‌.29:69

இவ்வாறான இந்த பண்புகள்‌ மூலம்‌
செயலாற்றுவோமாயின்‌ நமது கல்வியும்‌ அமலும்‌ நற்பண்புகளும்‌ விரித்தியடையும்‌. இப்பண்புகளுக்கு மாற்றமாக செயற்‌படுவோமாயின்‌ விவாதமும்‌ முரண்பாடும்‌ சோம்பேறித்‌தனமும்‌ முகஸ்துதியும்‌ அதிகரித்து குழப்பங்கள்‌ தோன்றி பிரிவினைகளும்‌ குழுக்களும்‌ தோற்றம்‌ பெற்றுவிடும்‌.

எனவே, (நபியே!) மார்க்கத்திற்காக உமது
முகத்தை நேரிய வழியில்‌ நிலை நிறுத்துவீராக!
(இதுவே) அல்லாஹ்‌ மனிதர்‌களைப்‌
படைத்திருக்கும்‌ அவனுடைய இயற்கையான
மார்க்கமாகும்‌. அல்லாஹ்வின்‌ படைப்பில்‌
எவ்வித மாற்றமும்‌ இல்லை. இதுவே
நிலையான மார்க்கம்‌. எனினும்‌ மனிதர்களில்‌
அதிகமானோர்‌ அறிந்து கொள்ள மாட்டார்கள்‌.
நீங்கள்‌ அவன்‌ பக்கமே மீண்டவர்களாக,
அவனை அஞ்சி நடந்து, தொழுகையையும்‌
நிலைநாட்டுங்கள்‌. மேலும்‌, இணை
வைப்பாளர்களில்‌ நீங்கள்‌ ஆகிவிட வேண்டாம்‌.
எவர்கள்‌ தங்கள்‌ மார்க்கத்தைப்‌ பிரித்து, பல
குழுக்களாக ஆகிவிட்டார்களோ அவர்களிலும்‌
நீங்கள்‌ (ஆகிவிட வேண்டாம்‌.) ஒவ்வொரு
பிரிவினரும்‌ தம்மிடமிருப்பதைக்‌ கொண்டு
மகிழ்ச்சியடை கின்றனர்‌. (30:30-32)

இந்த நற்பண்புகளுடன்‌ செயற்பட்டவர்‌
இம்மையிலும்‌ மறுமையிலும்‌ அல்லாஹ்வினால்‌
வாக்களிக்கப்பட்ட நன்மைகளை பெற்றுக்‌
கொள்வார்‌.

இவற்றில்‌ ஒரு பண்பையேனும்‌ விட்டவருக்கு
அல்லாஹ்வால்‌ வாக்களிக்கப்பட்ட அந்த நன்மை கிடைக்காது மேலும்‌ அவர்‌ வெற்றி பெறுவதற்காக பின்வரும்‌ குர்‌ஆன்‌ வசனத்திலுள்ள நான்கு காரியங்களை பரிபூர்ணமாக செய்யும்‌ வரை நஷ்டத்திலிருந்து தப்பிக்கவும்‌ மாட்டார்‌

காலத்தின்‌ மீது சத்தியமாக மனிதன்‌ நஷ்டத்தில்‌
இருக்கின்றான்‌. எவர்கள்‌ நம்பிக்கைக்‌ கொண்டு
நல்லறங்கள்‌ புரிந்து சத்தியத்தைக்‌ கொண்டு
ஒருவருக்‌ கொருவர்‌ உபதேசித்து கொண்டும்‌
மேலும்‌ பொறுமையைக்‌ கொண்டு ஒருவருக்‌கொருவர்‌ உபதேசித்து கொண்டும்‌ இருக்கின்‌றார்களோ அவர்களை தவிர(103:1-3)


நற்காரியங்களை நாசப்படுத்துபவை

தொழுகை நோன்பு தான தர்மங்கள்‌ போன்ற
நற்காரியங்களை செய்கின்றவருக்கு
அவைகளை நாசப்படுத்துகின்ற பின்வரும்‌
மூன்று காரியங்கள்‌ இடையூராக இருக்கும்‌.

1. பிறர்‌ பார்ப்பதற்காக அமல்‌ செய்தல்‌.(தனது
அமலை பிறருக்கு காண்பித்தல்‌.)

2. அதற்கான பிரதி உபகாரத்தை
எதிர்பார்த்தல்‌.

3. தனது காரியத்தை கெகொண்டு
திருப்தியடைந்து அமைதியடைதல்‌


1. பிறர்‌ காண்பதற்காக அமல்‌ செய்தல்‌:

இந்த விபரீதத்திலிருந்து விடுபட வேண்டுமாயின்‌ இந்த அமலை (காரியத்தை) செய்வதற்கு அல்லாஹ்‌ தனக்கு அருளும்‌ ஈடேற்றமும்‌ புரிந்திருக்கின்றான்‌ எனவே இது அல்லாஹ்‌ விடமிருந்து வந்த கடமை.
அவனுக்கே உரிய கடமை. தவிர மனிதனிடமிருந்து வந்த கடமையல்ல என்பதை புரிந்து செயற்பட வேண்டும்‌.

2. பிரதி உபகாரத்தை எதிர்பார்த்தல்‌: 

இந்த விபரீதத்திலிருந்து விடுபட வேண்டுமாயின்‌
தான்‌ அல்லாஹ்வின்‌ அடிமை. இந்த அடிமை
எக்கூலிக்கும்‌ தகுதியற்றவன்‌. அடியானுக்கு
அல்லாஹ்‌ கூலி வழங்குவானாயின்‌ அது
அவனுடைய அருட்‌ கொடையும்‌ பேருபகாரமுமே தவிர அமலுக்குரிய பிரதியுபகாரம்‌ அல்ல என்பதை அறிந்‌திருத்தல்‌ வேண்டும்‌.

3. தனது காரியத்தை கொண்டு திருப்தியடைந்து
அமைதியடைதல்‌.

இந்த விபரீதத்திலிருந்து விடுபட வேண்டுமாயின்‌ தனது குறைகளையும்‌ தனது காரியத்திலுள்ள அலட்சியப்‌ போக்கையும்‌ அவதானிக்க வேண்டும்‌ அக்காரியத்தில்‌ தனக்கும்‌ ஷைத்தானுக்குமுள்ள பங்கையும்‌ அவதானித்தல்‌ வேண்டும்‌. அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமையின்‌ மகத்துவத்தை அறிவதோடு அக்கடமையை பரிபூர்ணமாக நிறைவேற்றுவதில்‌ அடியான்‌ மிக பலஹீனமானவன்‌ என்பதை அறிந்திருத்தல்‌ வேண்டும்‌.
எனவே மனத்தூய்மையையும்‌ உதவியையும்‌
ஸ்தீர தன்மையையும்‌ அழகிய முறையில்‌
வணங்குவதையும்‌ அல்லாஹ்விடம்‌ நாம்‌ கேட்போமாக.

நபியே! நீரும்‌ உம்முடன்‌ பாவமன்னிப்புக்‌
கோருபவர்களும்‌ ஏவப்பட்டவாறு நிலைத்திருப்‌பீராக. இன்னும்‌ வரம்பு மீறாதீரகள்‌. நிச்சயமாக அவன்‌ நீங்கள்‌ செய்பவைகளை பார்ப்பவனாக இருக்கின்றான்‌.(11:112)


சாலிஹான அமலை பாதுகாக்கும்‌ வழிகள்‌

சாலிஹான அமலை (நற்காரியங்களை) செய்வதுடன்‌ மட்டும்‌ நின்று விடாது அவைகளை நாசப்படுத்தக்‌ கூடிய காரியங்களிலிருந்து பாதுகாப்பு பெறவும்‌ வேண்டும்‌. முகஸ்துதி என்பது அற்பமாக இருந்தாலும்‌ அது நற்காரியத்தை நாசப்படுத்தக்‌ கூடிய பல வழிகள்‌ உள்ளன.

சுன்னாவை கொண்டு வரையறுக்கப்படாத எந்த அமலும்‌ அழிந்துவிடும்‌. அந்த அமல்‌ மூலம்‌ அல்லாஹ்வின்‌ அருளை எதிர்பார்ப்பதும்‌
உள்ளத்தை நாசப்படுத்திவிடும்‌. படைப்பினங்களை நோவினைப்‌படுத்துவது நன்மையை குறைத்து விடும்‌.

அல்லாஹ்வின்‌ கட்டளைகளுக்கு மனமுரண்‌டாக மாறு செய்வதும்‌ அதனை அலட்சியப்‌படுத்துவதும்‌ நன்மைகளை அழித்துவிடும்‌.

எனவே இவ்விடயத்தில்‌ ஒரு முஸ்லிம்‌ விழிப்பாக இருந்து தனது இரட்சகனை வணங்க வேண்டும்‌. அவன்‌ எப்போதும்‌ பார்த்துக்‌ கொண்டும்‌ கேட்டுக்கொண்டும்‌ இருக்கின்றான்‌. அல்லாஹ்‌ மகத்துவமும்‌ கண்ணியமும்‌ பெருமையுமிக்க இரட்சகனாவான்‌.

சாலிஹான அமல்‌ நன்மையையும்‌ தீய அமல்‌
தண்டனையையும்‌ கொண்டு வரும்‌ என்பதை
அறிந்து கொள்ள வேண்டும்‌.

நம்பிக்கைக்‌ கொண்டு நல்லறங்கள் புரிவோரை
நிச்சயமாக அல்லாஹ்‌ சுவனச்சோலைகளில்‌
நுழைவிப்பான்‌. அவற்றின்‌ கீழ்‌ ஆறுகள்‌ ஓடிக்‌
கொண்டிருக்கும்‌. எவர்கள்‌ நிராகரிக்கின்றார்‌
களோ அவர்கள்‌ (இவ்வுலகில்‌) சுகம்‌ அனுபவித்துக்‌ கொண்டும்‌ கால்நடைகள்‌ உண்பது போல்‌ உண்டுகொண்டுமிருப்பார்கள்‌. நரகமே அவர்களின்‌ தங்குமிடமாகும்‌. (47:12)


நிய்யத்தின் முக்கியத்துவம் 

நிய்யத்‌ என்பது அல்லாஹ்வை நெருங்குவதற்காக வணக்கம்‌ புரிதல்‌ எனபதை மனதால்‌ உறுதி கொள்ளல்‌ என்பதாகும்‌.

ஒரு அமல்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்கும்‌ கூலி
வழங்கப்படுவதற்கும்‌ நிய்யத்‌ ஒரு நிபந்தனையாக கணிக்கப்படுகிறது. அந்த நிய்யத்‌ உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு அமலுடன்‌ ஒன்றிருத்தல்‌ வேண்டும்‌.

நிச்சயமாக செயல்கள்‌ யாவும்‌ எண்ணங்களை
கொண்டே அமைகின்றன ஒவ்வொரு
மனிதனுக்கும்‌ அவன்‌ நாடியதே கிடைக்கும்‌ என
நபி (ஸல்‌) கூறினார்கள்‌. (நூல்: புகாரி,
முஸ்லிம்‌)

1. ஒரு செயலை செய்வதாக எண்ணுதல்‌.

உதாரணமாக ஒரு முஸ்லிம்‌ வுழு செய்வதாக
குளிப்பதாக தொழுவதாக நிய்யத்து வைத்தல்‌

2. அல்லாஹ்வுக்காக செய்தல்‌ என்பதாக
நிய்யத்து வைத்தல்‌. 

வுழு செய்தாலோ குளித்தாலோ தொழுதாலோ அல்லது வேறு நற்காரியங்கள்‌ செய்தாலோ அக்காரியங்கள்‌ அனைத்தையும்‌ அல்லாஹ்‌ ஒருவனை
நெருங்குவதற்காக செய்வதாக நிய்யத்து
வைத்தல்‌

இந்த இரண்டாவது வகை முதலாவது வகையையப்‌ பார்க்கிலும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாகும்‌. இவ்விரு வகைகளும்‌ எல்லா அமல்களிலும்‌ ஒன்றிணைந்து இருத்தல்‌ வேண்டும்‌

மனத்தூய்மை (இஹ்லாஸ்‌) என்பதன்‌ அர்த்தம்‌:

மனிதர்களின்‌ அவதானிப்பை விட்டு விட்டு
ஒரு அடியான்‌ வெளிப்படையாகவும்‌ உள்ரங்கமாகவும்‌ அல்லாஹ்வுக்காக தனது அமல்களை தூய்மைப்படுத்துவதே இஹ்லாஸ்‌ எனப்படும்‌.

இஹ்லாசுடன்‌ அமல்‌ புரியும்‌ போது அல்லாஹ்‌
அவனை தேர்ந்தெடுத்து அவனது உள்ளத்தை
உயிர்‌பிக்கின்றான்‌. அவனை நெருக்கத்திற்‌குரியவனாக ஆக்கிக்‌ கொள்கின்றான்‌.
அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேசிக்கச்‌ செய்து
அவனுக்குமாறு செய்வதை வெறுக்கவும்‌ செய்‌கின்றான்‌.

இஹ்லாஸ்‌ இல்லாதவனின்‌ உள்ளம்‌ இதற்கு
மாற்றமானதாக இருக்கும்‌.அவனது உள்ளம்‌
தேட்டமும்‌ ஆசையும்‌ (உலக) நோக்கமும்‌
கொண்டதாக இருக்கும்‌ சில வேளை
தலைமைத்துவமும்‌ பிரபல்யமும்‌ செல்வம்‌ தேடுதலும்‌ நோக்கமாகவும்‌ இருக்கும்‌.

நேரிய வழி நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு அல்லாஹ்வை வணங்குமாறும்‌ தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தையும்‌ கொடுத்து வருமாறே தவிர அவர்கள்‌ ஏவப்படவில்லை. இதுதான்‌ நேரிய மார்க்கமாகும்‌.(98:5)


أحدث أقدم