இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான், எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் எனில் இறைவனைப் படைத்தது யார்?
நம் பெற்றோர் மூலம் நாம் இவ்வுலகிற்கு வந்தோம். நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள், அவர்கள் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அது எங்கே போய் முடியுமெனில், "அப்போ இறைவன் எப்படி உருவானார்? அல்லது அவனைப் படைத்தது யார்?"
பதில் மிக எளிது.
இந்த முழு அண்டமும் உருவாவதற்கு முன் ஒரு பொருள் உருவாவது முக்கியம். அந்தப் பொருளைக் கொண்டுதான் மற்ற பொருட்களின் பிறப்பு இறப்பை கணக்கிட முடியும். அப்படிப்பட்ட பொருள் வேறெதையும் நம்பி அல்லது வேறு எந்த கட்டுப்பாடுக்கும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அது என்ன??? நேரம் !!!!
நேரத்தைப் பொறுத்தே நாம் அனைத்து பிறப்பு இறப்புகளை பதிவு செய்கிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் 'நேரத்தை' படைத்தவன் பிறப்பும் இல்லாமல் இறப்பும் இல்லாதவனாக இருக்க வேண்டும். நேரம் அல்லது மணித்துளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வர இயலாதவனாக இருக்க வேண்டும். அந்த ஒருவனையே நாம் இறைவன் என்கிறோம்.
உதாரணத்துக்கு ஒரு பென்சிலை வடிவமைக்க ஒருவர் முயல்கிறார். அவரை 'A' என்று வைத்துக் கொள்வோம். அவர் தன்னால் தனியாக அந்த பென்சிலை வடிவைக்க இயலாது. 'B' இன் உதவி தேவை என்கிறார். B என்ற நபரோ C என்ற நபரின் உதவி இல்லாமல் சாத்தியப்படாது என்கிறார். இப்படியே ஒவ்வொரு நபரும் சொல்லிக் கொண்டிருந்தால் அந்த பென்சிலை கடைசியில் வடிவமைப்பதுதான் யார்? பதிலில்லை இல்லையா? ஏனெனில் இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இன்றி என்னால் அந்த பென்சிலை வடிவமைக்க இயலும் என்று கூற வேண்டும். வடிவமைக்க வேண்டும். அப்படி இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இல்லாமல் வடிவமைத்தால்தான் அந்த சங்கிலி தொடர் முடிவுக்கு வரும். இல்லையேல் அது முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். பென்சிலும் வடிவமைக்கப் படவே படாது.
அந்த ஒருவர்தான் யாரையும் சாராமல் தனியே இயங்கக்கூடிய ஆள். அவரை மட்டுமே நாம் பரம்பொருள், சூப்பர்பவர் அல்லது இறைவன் என்போம். யாரையும் சாராமல், தனியே இயங்கவும், படைக்கவும் தெரிந்தவனே இறைவன். எனவே 'இறைவனைப் படைத்தது யார்' என்ற கேள்விக்கே இப்பொழுது இடமில்லை.
இறைவன் என்பவன் யார்?
சரி, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. 'தாய் என்பவள் யார்?' உங்களின் பதில் என்ன? யாரொருவர் ஒரு குழந்தையை பெற முடியுமோ அவரே தாயாவார். இதுதான் எளிமையான பதில்.
இல்லை என் தாயை எனக்கு பிடிக்கவில்லை, அன்னை தெரசாவை கூட்டி வாருங்கள் அவர்தான் என் தாய் என்று நாம் கூற முடியுமா? நாம் எல்லோரும் அன்னை என்றழைப்பதால் அவர் நம் அன்னையாக முடியுமா? நம்முடைய தாய் யார் என்பதை முடிவெடுக்கும் வாய்ப்பு நம்மிடம் இல்லை.
அதே போல் என்னை, உங்களை படைத்தது ஒரிறைவன்.... ஒரே இறைவன். வேறு யாரை வேண்டுமானாலும், எந்தப் பொருளை வேண்டுமானாலும் நாம் இறைவன் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய உண்மையான இறைவன் ஆகுமா? நம்மைப் படைத்தவனைப்போல ஆகுமா? எப்படி தந்தை தாயை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு / உரிமை நம்மிடம் இல்லையோ அதே போல் படைத்தவனை தவிர்த்து வேறெதையும் நம்முடைய இறைவனாக அங்கீகரிக்கும் வாய்ப்பும் உரிமையும் நம்மிடம் இல்லை. நம்மை படைத்தவன் மட்டுமே நம் இறைவன். உலகறிந்த ஒரே உண்மை இதுதான். எல்லா சமூகங்களிலும், சமயங்களிலும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரே கருத்து இதுவே.
திருமறை குர்'ஆனில் இறைவன் கூறுகிறான்:
(நபியே!)சொல்வீராக,அல்லாஹ் ஒருவனே. அவன் தேவைகள் அற்றவன் . அவன் யாரையும் பெறெடுக்கவில்லை.அவனை யா
ற்ரும் பெற்றேடுக்கவும் இல்லை. இன்னும் அவனுக்கு நிகரான எதுவும் எவரும் இல்லை.(திருக்குர்ஆன் 112:1-4)
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே
தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன -
அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன்.
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது;
அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும்
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே;
மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். (57:3)
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)
(அல்லாஹ் - உலகைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனை திருக்குர்ஆன் அல்லாஹ் என்று குறிப்பிடுகிறது. இவ்வார்தையின் பொருள் 'வணக்கத்துக்குத் தகுதியான ஒரே இறைவன் ' என்பது.)