அத்தியாயம் - 15 சுதந்திரம்

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 15 சுதந்திரம்


1448 ''எந்த முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை விடுதலை செய்கின்றானோ, அல்லாஹ் விடுதலை செய்யப்பட்டவனது உறுப்புக்குப் பகரமாக அவனது ஒவ்வொரு உறுப்பையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1449 ''(அடிமைகளான) இரண்டு முஸ்லிம் பெண்களை விடுதலை செய்த முஸ்லிம் ஒருவன் நரகத்திலிருந்து விடுதலை பெற அவ்விரு முஸ்லீம் பெண்களே காரணமாவர்'' என்று அபூ உமாமா(ரலி) வாயிலாக திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1450 ''ஒரு முஸ்லிம் பெண்ணை விடுதலை செய்யும் ஒரு முஸ்லிம் பெண் நரகத்திலிருந்து விடுதலை பெற (விடுவிக்கப்பட்ட) அந்தப் பெண்ணே காரணமாவாள்'' என்று கஅப் இப்னு முர்ரா(ரலி) வாயிலாக அபூ தாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1451 ''எந்தச் செயல் சிறந்தது'' என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ''அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதும், அவனது வழியில் போராடுவதும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''எப்படிப்பட்டோரை விடுதலை செய்வது சிறந்தது?'' என்று நான் கேட்டதற்கு ''எஜமானனிடம் இருக்கக் கூடிய அடிமைகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமான விலை உயர்ந்த அடிமையை விடுதலை செய்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1452 ''எவர் ஓர் அடிமையில் தனக்குரிய பங்கை விடுதலை செய்கிறாரோ, அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவிற்குச் செல்வம் இருந்தால், (அந்த அடிமையின்) நியாயமான விலையை மதிப்பிடப்பட்டு, தனது பங்குதாரர்களுக்கு அவர்களின் பங்குக்கான விலையை கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்குத் தான் விடுதலை செய்தவராவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1453 புகாரி, முஸ்லிம் அறிவித்துள்ள ஹதீஸில் ''இல்லையெனில் அவ்வடிமையின் (நியாயமான) விலை மதிப்பிடப்பட்டு (மீதி பங்குகளின் விலையை தருவதற்காக) உழைத்து சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அதிக சிரமத்தை தரக்கூடாது'' என்று அபூஹுரைரா(ரலி) வாயிலாக இடம் பெற்றுள்ளது.

1454 ''ஒருவர் தன்னுடைய தந்தையை அடிமையாகக் காண்பாராயின் அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்வதைத் தவிர்த்து வேறு எதுவும் அவருடைய தந்தைக்குப் கைம்மாறு செய்ததாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1455 ''எவரேனும் (தனக்கு மணம் புரிந்து கொள்ள) விலக்கப்பட்ட நெருங்கிய உறவினருக்கு எஜமானனாம் விட்டால் அந்த உறவினர் (தானாகவே) சுதந்திரம் பெற்றவராம் விடுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

1456 ஒருவர் தன் மரணத் தருவாயில் தன்னிடமிருந்த ஆறு அடிமைகளை விடுதலை செய்தார். அவர்களை தவிர அவரிடம் வேறு சொத்து எதுவுமில்லை. அப்போது நபி(ஸல்) அவர்களை அழைத்து மூன்று பிரிவாகப் பிரித்து அவர்களுக்கு மத்தியில் குலுக்கலில் போட்டார்கள். பின்னர் (தேர்ந்தெடுக்கப்பட்ட) இருவரை விடுதலை செய்தார்கள். மீதமுள்ள நான்கு பேரையும் அடிமைகளாகவே இருக்கச் செய்தார்கள். மேலும், (மரணத் தருவாயில் இருந்த) அவரைக் கடுமையாக கண்டித்தார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1457 ''நீ வாழ்க்கை முழுவதும் நபி(ஸல்) அவர்களுக்கு ஊழியராக இருக்க வேண்டும்'' என்ற நிபந்தனையின் போரில் உம்மு ஸலமா(ரலி) தமது அடிமையை விடுதலை செய்தார் என ஸஃபீனா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ மற்றும்  ஹாகிம்.

1458 ''அடிமையை விடுதலை செய்தவருக்கே 'வலா' உரியதாகும்'' என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நீண்ட ஹதீஸ் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்

1459 ''வலா எனும் உறவு இரத்த உறவைப் போன்றதாகும். அதை விற்கவோ அன்பளிப்புச் செய்யவோ கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஷ்ஷாஃபிஈ

இது இப்னு ஹிப்பான் மற்றும்  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், புகாரி, முஸ்லிமில் வேறு வார்த்தைகளில் உள்ளது.

முதப்பா முகாதப் உம்முல் வலத்

1460 அன்ஸார்களில் ஒருவர் தன்னிடமிருந்த ஒர் அடிமையை ''நீ என் மரணத்திற்குப் பிறகு விடுதலையாவாய்'' என்று அறிவித்து விட்டார். ஆனால், அவரிடத்தில் அதைத் தவிர வேறு சொத்து எதுவுமில்லை. இச்செய்தி நபி(ஸல்) அவர்களிடம் எட்டிய போது, ''அவரை (அந்த அடிமையை) என்னிடமிருந்து யார் விலைக்கு வாங்குவார்'' என்று கேட்டார்கள். உடனே நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவரை எண்னூறு திர்ஹம்கள் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.

நஸயீயுடைய மற்றொரு அறிவிப்பில் அவருக்குக் கடனிருந்தது. எனவே அந்த அடிமையை நபி(ஸல்) அவர்கள் எண்னூறு திர்ஹம்களுக்கு விற்பனை செய்து அவரிடம் கொடுத்து ''உன்னுடைய கடனை அடை'' என்று கூறினார்கள் என்று உள்ளது.

1461 ''அடிமை விடுதலைப் பத்திரம் (சுதந்திரப் பத்திரம்) எழுதிக் கொடுத்தவன், ஒரு திர்ஹம மீதம் வைத்திருக்கும் வரையிலும் அடிமையாகவே இருப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தமது தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.

இது அபூ தாவூதில் 'ஹஸன்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ மற்றும் நஸயீயில் உள்ளது. இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1462 ''(பெண்களே!) நீங்கள் உங்கள் அடிமைக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தினால், விடுதலை செய்து விடுவதாக வாக்களித்திருந்து சுதந்திரப்பத்திரம் எழுதப்பட்டு அவனிடம் அதைச் செலுத்துவதற்கான பணமும் இருக்குமாயின் (பெண் - எஜமானி) அவனிடமிருந்து தன்னை மறைத்து (பர்தா போட்டு)க் கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ இப்னுமாஜா

1463 ''விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை கொல்லப்பட்டு விட்டால், அவன் எந்த அளவிற்கு (ஒப்பந்தப் பணத்தைச்ச செலுத்தி) சுதந்திரமானவனாகியள்ளானோ அந்த அளவிற்கு சுதந்திரமானவனுக்குரிய இரத்த ஈட்டுத் தொகை (அவனது வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். எந்த அளவிற்கு தொகை செலுத்தப்படாமல் இன்னும் (விடுவிக்கப்படாமல்) அடிமையாக இருக்கின்றானோ, அந்த அளவிற்கு அடிமைக்குரிய இரத்த ஈட்டுத் தொகை (அவனது வாரிசுகளுக்கு) வழங்கப்பட வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், மற்றும் நஸயீ

1464 நபி(ஸல்) அவர்கள் மரணம் எய்திய போது தம்முடைய வெள்ளை நிறம் கோவேறுக் கழுதை, ஆயுதம் மற்றும் அவர்கள் தர்மம் செய்த நிலம் இவற்றைத் தவிர திர்ஹம், தீனார், அடிமைப் பெண், அடிமை இது போன்ற எதையுமே விட்டுச் செல்லவில்லை என்று உம்முல் மூஃமினீன் (இறை நம்பிக்கையாளர்களின் தாய்) ஜுவைரியாவின் சகோதரர் அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி,

1465 ''தனது எஜமானனுக்குக் குழந்தை பெறுகின்ற அடிமைப் பெண் அவனது மரணத்திற்குப் பின் சுதந்திரம் பெற்றவளாவாள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

இது இப்னு மாஜா மற்றும்  ஹாகிமில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாரார் இதை உமர்(ரலி) மீது மவ்கூஃப் செய்துள்ளனர்.

1466 ''எவர் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவனுக்கு உதவுகிறாரோ அல்லது கடன்பட்டிருப்பவரது கஷ்ட நிலையை நீக்குகிறாரோ அல்லது சுதந்திரப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமையை விடுதலை செய்கிறாரோ அவருக்கு நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் தன் நிழலை அவருக்கு அளிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸஹ்ல் ஹுனைஃபி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத். இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Previous Post Next Post