அத்தியாயம் - 14 நீதி வழங்குதல்

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
 அத்தியாயம் 14 - நீதி வழங்குதல்

நீதி வழங்குதல்

1411 ''நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர். 1. நீதியை அறிந்து அதன் படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார். 2. நீதியை அறிந்தும் அதன் படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார். 3. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர் நரகத்தில் புகுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ இப்னுமாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1412 ''எவரிடத்தில் தீர்ப்பளிக்கும் பொறுப்பு தரப்பட்டு விட்டதோ அவர் கத்தியில்லாமல் அறுக்கப்பட்டவர் போன்றாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

இது இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1413 ''நீங்கள் தலைமைப் பதவிக்கு ஆசைப்படவீர்களானால், மறுமையில் அதுவே உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும். அது உலக வாழ்வில் இனிமையானது மறுமையில் கசப்பானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1414 ''தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து பின்னர் சரியான முடிவை அடைந்தால் அவருக்கு இரு நன்மைகள் உண்டு. தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளித்தும் அதில் தவறு ஏற்பட்டு விட்டால், அவருக்கு ஒரு நன்மையுண்டு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அம்ர் இப்னு ஆஸ்ர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1415 ''கோபமாக இருக்கும் எவரும் அந்நிலையில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபூ பக்ரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1416 ''உன்னிடம் எவரேனும் தீர்ப்பு கேட்டு வந்தால் மற்றவரின் (பிரதி வாதியின்) பேச்சைக் கேட்காமல் தீர்ப்பளிக்காதே! (ஏனெனில்,) அப்போது தான் எவ்வாறு தீர்ப்பு அளிப்பது என்பதை நீ அறிந்து கொள்வாய்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அதற்குப் பின் நான் அவ்வாறே தீர்ப்பளித்து வந்தேன்'' என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு மதீனீயில் இது 'பலமானது' என்று கூறப்பட்டுள்ளது. இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்ததிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1417 இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் வாயிலாக ஹாகிமில் இதற்குச் சான்றாக ஒர் அறிவிப்பு உள்ளது.

1418 ''நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யமிக்கவராக இருக்கக் கூடும். எனவே, அவரிடம் கேட்டதை அடிப்படையாக வைத்து நான் அவருக்கு (சாதகமாக) தீர்ப்பளித்துவிடுகிறேன். ஆகவே, எவருக்கு (அவருக்கு உரிமையில்லாத) அவரது சகோதரனின் உரிமையிலிருந்து சிறிதை (அவருக்குரியது என்று) தீர்ப்பளித்து விடுகின்றேனோ, அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொண்டிருக்கின்றேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1419 ''எந்த சமுதாயத்தின் வலியவர்களிடமிருந்து அதிலுள்ள எளியவர்களுக்கு (அவர்களின்) உரிமை பெற்றுத் தரப்படுவதில்லையோ, அந்த சமுதாயத்தைத் தூய்மையானது என்று எப்படிச் சொல்ல முடியும்?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான்.

1420 பஸ்ஸாரில் புரைதா(ரலி) வாயிலாக இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.

1421 இப்னு மாஜாவில் அபூஸயீத்(ரலி) வாயிலாக இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.

1422 ''மறுமை நாளில் (உலகில்) நீதி செலுத்திய நீதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுவார். அவரிடத்தில் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். அப்போது, ''நான் என்னுடைய வாழ்நாளில் எந்த இருவருக்கிடையிலும், தீர்ப்பளிக்ககாமல் இருந்ததிருந்தால், நன்றாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்குமே!'' என்று கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், பைஹகீ

பைஹகீயில், ''எந்த இருவருக்கிடையிலும்'' என்பதற்குப் பதிலாக ''ஒரு காய்ந்த பேரீச்சம் பழம் தொடர்பாகவும்'' எனும் வாசகம் உள்ளது.

1423 ''பெண்ணிடம் தன் விவகாரங்களை ஒப்படைக்கும் சமுதாயம் எப்போதும் உருப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூபக்ரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1424 ''முஸ்லிம்களுடைய விவகாரங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பாளராக அல்லாஹ் எவரை நியமித்து விட்டானோ, அவர் முஸ்லிம்களில் தேவையுடையவர்களையும், ஏழை எளியவர்களையும் அவர்களது தேவையை நிறை வேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிட்டால், அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மர்யம் அல் அஸ்தீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ

1425 (மார்க்க மற்றும் நீதிமன்றத்) தீர்ப்புக்காக இலஞ்சம் வாங்குபவரையும், இலஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்

திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

1426 அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக திர்மிதீ அபூதாவூத் மற்றும் இப்னுமாஜாவில் இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.

1427 நீதிவிசாரணையின் போது வாதியும், பிரதிவாதியும் நீதிபதிக்கு முன்பு (சரிசமமாக) அமர வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



சாட்சிகள்

1428 ''சாட்சியமளிப்பவர்களில் சிறந்தவர் யாரென உங்களுக்கு அறிவிக்கட்டுமா? கேட்பதற்கு முன்பே சாட்சி சொல்பவரே அவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1429 ''உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையை சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள், பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் அவர்களிடம் சாட்சியம் கேட்காமலேயே சிலர் சாட்சி சொல்வர், அவர்கள் மோசடி செய்வார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்படாது. (ஏனெனில்) அவர்கள் நேர்ச்சை செய்யமாட்டார்கள். அதில் அவர்களது உண்மை நிலை வெளிப்பட்டு விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1430 ''மோசக்காரன், மோசக்காரியின் சாட்சியம் செல்லாது. பொறாமைக்காரன் தன் (முஸ்லிம்) சகோதரனுக்கு எதிராகச் சொல்லும் சாட்சியமும் செல்லாது. ஒரு வீட்டாருக்கு ஆதரவாக அவர்களின் பணியாள் (அல்லது ஊழியர்) சொல்லும் சாட்சியமும் செல்லாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

1431 ''நகரவாசிக்கெதிராக கிராமவாசி அளிக்கும் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், இப்னுமாஜா

1432 உமர்(ரலி) அவர்கள் உரை நிகழ்த்திய போது, ''நபி(ஸல்) அவர்களது காலத்தில் சிலர் (தவறிழைத்த போது) வஹீ மூலம் கண்டித்து தண்டிக்கப்பட்டார்கள். இப்போது வஹீ அறிவிக்கப்படுவது நின்று விட்டதால், உங்கள் செயல்களில் எது வெளிப்படுகிறதோ, அதற்காகவே இப்போது நாம் உங்களைப் பிடிப்போம்'' என்று கூறினார்கள். புகாரி

1433 ''பொய் சாட்சியைப் பெரும் பாவங்களில் மிகப் பெரியதாக நபி(ஸல்) அவர்கள் கருதினார்கள்'' என அபூபக்ராஹ்(ரலி) அறிவிக்கிறார். (நீண்ட ஹதீஸ்) புகாரி, முஸ்லிம்

1434 நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதாரிடம், ''நீ சூரியனைப் பார்க்கிறாயா?'' என்று கேட்டதற்கு அவர் ''ஆம்'' என்றார். ''அதைப்போன்று தெளிவானவற்றில் சாட்சி சொல்! இல்லையேல் விட்டுவிடு!'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

இப்னு அதீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தவறுதலாக அப்படிச் சொல்லி விட்டார்.

1435 நபி(ஸல்) அவர்கள் ஒரு சத்திதயத்தையும் ஒரு சாட்சியைக் கொண்டும் தீர்ப்பளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம், அபூதாவூத் மற்றும் நஸயீ

இது நஸயீயில் சிறந்தது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

1436 அபூதாவூத் மற்றும் திர்மிதீயில் அபூஹுரைரா(ரலி) வாயிலாக மேற்கண்ட. ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



தாவா மற்றும் ஆதாரம்

1437 ''மக்களுக்கு, அவர்களுடைய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கோருவதையெல்லாம் (பிரதிவாதியை விசாரிக்காமல்) கொடுத்து விட்டோம் என்றால் மக்கள், பலரது உயிருக்கும் உடமைக்கும் உரிமை கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். எனினும், பிரதிவாதியின் மீது (தன் மீது) சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்திட) சத்தியம் செய்யும் கடமை உள்ளது'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1438 ''தாவா செய்தவன் (வாதி) ஆதாரம் கொண்டு வர வேண்டும். அதை மறுப்பவன் (பிரதிவாதி) சத்தியம் செய்ய வேண்டும்'' என நபி(ஸல்) கூறினார்கள். பைஹகீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவாகியள்ளது.

1439 ஒரு கூட்டத்தை நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யுமாறும் கட்டளையிட்ட போது அவர்கள் விரைவாக சத்தியம் செய்ததைக் கண்டு, ''யார் சத்தியம் செய்வது?'' என்று குலுக்கல் போடக் கட்டளையிட்டார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1440 ''எவரேனும் பொய் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையைப் பறித்து விட்டால், அவருக்கு அல்லாஹ் நரகத்தை விதித்து விட்டான். மேலும், சுவர்க்கத்தை விலக்கி விட்டான். மேலும், சுவர்க்கத்தை விலக்கி விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட ஒருவர்) ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஒரு சாதாரணப் பொருளுக்காகவுமா?'' என்று கேட்டார். ''அராக் மரத்தின் ஒரு கிளையாக இருந்தாலும்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலாளித்தார்கள் என அபூ உமாமா அல்ஹாரினிய்யீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1441 ''எவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக ஒரு முஸ்லிமுடைய சொத்தைப்பறித்துக் கொள்கிறானோ அதில் அவன் பொய்யனாக இருப்பின் மறுமையில் அல்லாஹ்வை அவன் தன் மீது கோபமான நிலையில் சந்திப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1442 ஒரு கால்நடை விஷயத்தில் இரண்டு மனிதர்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. அவர்கள் இருவரிடமுமே (அது யாருடையது என்ற) ஆதாரம் எதுவும் இல்லை. (எனவே அந்த வழக்கு தம்மிடம் கொண்டுவரப்பட்ட போது) அவர்கள் இருவருக்கிடையில் பாதிப் பாதியாகப் பிரித்து நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், மற்றும் நஸயீ

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பு சரியானது, சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1443 ''எவர் என்னுடைய மிம்பருக்கு அருகே (அல்லது மிம்பரில் நின்று) பாவகரமான (பொய்) சத்தியம் செய்கிறாரோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத் மற்றும் நஸயீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1444 ''மூன்று வகையான மனிதர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு. 1. வானாந்திரத்தில் மிஞ்சியிருக்கும் தண்ணீரை வழிப்போக்கர்கள் பயன்படுத்த விடாமல் தடுப்பவன் 2. அசருக்குப் பின் ஒருவருடன் வியாபாரம் செய்து அந்தப் பொருளை இன்ன விலைக்கு வாங்கினேன் என்று பொய் சத்தியம் செய்து அதை உண்மை என்று நம்ப வைத்தவன். ஆனால் அது உண்மை அல்ல. 3. உலக லாபத்திற்காகவே ஆட்சித் தலைவரிடம் பைஅத் செய்தவன். அவன் ஏதேனும் கொடுத்தால், அவனுக்கு நன்றி செலுத்துவான்; எதையும் கொடுக்கவிட்டால் அவனுக்கு மாறு செய்வான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1445 ஓர் ஒட்டகம் தொடர்பாக இருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவரும் இந்த ஒட்டகம் என்னிடம் தான் பிரசவிக்கப்பட்டது என்றனர். தம் வாதத்திற்கான சான்றுகளைச் சமர்ப்பித்தனர். அந்த ஒட்டகம் எவரிடமிருந்தோ, அவருக்கே (அது உரியது) என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

1446 உரிமையைக் கோருபவரின் பக்கமே நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தைத் திருப்பி விட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

மேற்கண்ட இரண்டு ஹதீஸும் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1447 ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் மின்ன என்னிடம் வந்தார்கள். ''(ஆயிஷாவே!) முஜஸ்ஸிஸ் அல் முத்லிஜியை நீ பார்க்கவில்லையா? அவர் ஸைது இப்னு ஹாரிஸா மற்றும் உஸாமா இப்னு ஸைதைப் பார்த்து இந்தக் கால்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று கூறினார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் 

Previous Post Next Post