கீழ்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டோர் கதரிய்யாக்கள் எனப்படுவர். அதாவது 'உலகில் நடைபெறுகின்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கற்பனைக்கோ அல்லது
அவனது அறிவுக்கோ அப்பாற்பட்டதாகும். மேலும், எல்லாச் செயல்களும் நடைபெற்று முடிந்த பின்னரே அவன் அவைகளைப் பற்றி அறிந்து கொள்கிறான்' என்பவர்களே கதரிய்யாக்கள் ஆவர்.
ஹிஜ்ரி 204ல் மரணித்த இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறினார்கள்:
“செயல்கள் நடைபெறாதவரை அவைகளை அல்லாஹ் அறியமாட்டான் என்பவர் கதரிய்யாக்களைச் சார்ந்தவராவார்”. (அல்லாலகாஈ 4:701).
ஹிஜ்ரி 204ல் மரணித்த இமாம் அபூ ஸவ்ர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘மனிதனது செயல்களை(கருமங்களை) அல்லாஹ் படைக்கவில்லை. மேலும், பாவச் செயல்களை அல்லாஹ் மனிதன்மீது விதியாக்கவோ, அவைகளைப் படைக்கவோ மாட்டான்' என்று கூறுபவர்களே கதரிய்யாக்கள் எனப்படுவர்.
‘கதர்' என்னும் அரபி வார்த்தைக்கு 'விதி' என்று பொருளாகும். இதனடிப்படையில் விதியை மறுப்பவர்களே கதரிய்யாக்கள் என்றழைக்கப்பட்டனர்.
ஸஹாபாக்களின் இறுதிக்காலத்தில் மஃபத் அல்ஜுஹனி என்பவனால் இக்கொள்கை உலகில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது. ஈராக் நாட்டின் பஸரா நகரத்தின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூஸுப் (ரஹ்)என்பவரால் இவன் கொலை செய்யப்பட்டான்.
"இக்கொள்கை கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஸோஸான் என்பவன் வழியாகவே மஃபத் அல்ஜுஹனிக்குக் கிடைத்தது.
இமாம் அவ்ஸாஈ(ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
முதன் முதலில் விதியைப் புறக்கணித்துப் பேசியவன் ஸோஸான் என்பவனே. இவன் ஈராக் நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவன் ஆவான். இவன் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு மீண்டும் மதம்மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்டான்.
எனவே, ஸோஸான் வழியாக இக்கொள்கை முறையே மஃபத் அல்ஜுஹனி என்பவனுக்கும், இவனிடமிருந்து டமஸ்கஸ் நகரத்தைச் சார்ந்த கயலான் என்பவனுக்கும் கிடைத்தது. பின்னர் இக்கொள்கை பரிணாமம் பெற்று உலகின் பல நாடுகளிலும் பரவ
ஆரம்பித்தது. (அல்ஷரீஆ :243).
மேலும், கதரிய்யாக்கள் தோன்றிய ஆரம்பத்தில் இருந்தே அவர்களது கொள்கைகள் இரண்டாகும். அவையாவன:
(1) செயல்கள் (காரியங்கள்) நடைபெற முன்னர், அல்லாஹ் அவைகளைப் பற்றி அறிய மாட்டான்.
(2) மனிதனின் செயல்களை (கருமங்களை) மனிதன் தானாகவே படைக்கிறான்.
இமாம் அல்-குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
இக்கொள்கை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இன்று 'இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று உலகில் உள்ள கதரிய்யாக்களைப் பொறுத்தவரை, கருமங்கள் நடைபெற முன்னால் அல்லாஹ் அவைகளைத் தெரிந்து வைத்துள்ளான் என்ற முதலாவது அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னாவுடன் உடன்படுகின்றனர். எனினும், 'மனிதனுடைய செயல்கள் இறைவனால் கற்பிக்கப்பட்டு விட்டன. ஆனால், அவைகள் மனிதன் புறத்திலிருந்து தனியாக நடைபெறுகின்றன. இறைவன் அவைகளைப் படைப்பதில்லை.' என்ற தமது கொள்கையில் அஹ்லுஸ் ஸுன்னாவுடன் மாறுபடுகின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்த கதரிய்யாக்களைவிட கொள்கையில் சிறிது தெளிவுடையவர்களாக இருந்தாலும், அன்றைய கதரிய்யாக்களும் ஆரம்பத்தில் உள்ளவர்களும், இன்றைய கதரிய்யாக்களும் அசத்தியத்திலேயே நிலைத்திருக்கின்றனர்
நம் முன்னோர்களான ஸலபுஸ்ஸாலிஹீன்கள், கதரிய்யாக்கள் இறைநிராகரிப்பாளர்களா? அல்லது இறைவிசுவாசிகளா? என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, 'அல்லாஹ்விள் அறிவைப் புறக்கணிப்பவர்கள் இறைநிராகரிப்பாளர்களே எனினும், மனிதனுடைய செயல்களை அல்லாஹ் படைப்பதில்லை. அவைகள் நடைபெற முன்னர் அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்திருக்கிறான்
என்போர் இறை நிராகரிப்பாளர்களல்ல'
என்கின்றனர்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்களின் புதல்வரான இமாம் அப்துல்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுவதாவது: 'எனது தந்தையிடம், கதரிய்யாக்கள்
இறை நிராகரிப்பாளர்களா?' என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், நடைபெற இருக்கின்ற செயல்கள் பற்றி அல்லாஹ் அறியமாட்டான்' என்று கூறி அல்லாஹ்வுடைய அறிவைப் புறக்கணித்தால், அவர்கள் இறை நிராகரிப்பாளர்களே! என்று பதிலுரைத்தார்கள். (அல்-கல்லால்: அல்-ஸுன்னா :862)
இமாம் மர்வஸீ(ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்)
அவர்களிடம் கதரிய்யாக்கள் பற்றிக் கேட்டபோது, அல்லாஹ்வின் அறிவைப் புறக்கணிக்காதவர்கள்
இறை நிராகரிப்பாளர்களல்ல என்றார் (அல்கல்லால்:அல்ஸுன்னா: 871).
மேற்கூறப்பட்ட கருத்தை இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்:
விஷயங்கள் நடைபெற முன்னர் அல்லாஹ் அறிய மாட்டான்; அவ்வாறான விஷயங்களை அவன் லெளஹுல் மஹ்பூளில் பதிவு செய்து வைக்கவில்லை என்று கூறுபவர்கள் இறைநிராகரிப்பாளர்களே. என்றாலும், விஷயங்கள் நடைபெற
முன்னர், அல்லாஹ் அவற்றை அறிந்து வைத்துள்ளான். எனினும் அவற்றை அல்லாஹ் படைப்பதில்லை' என்று கூறுபவர்கள் இறைநிராகரிப்பாளர்களல்ல. (மஜ்மூஃ அல்பதாவா: 3:352).
இமாம் இப்னு ரஜப்(ரஹ்) அவர்கள் கூறுவதாவது: 'கதரிய்யாக்கள் இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா? என்பதில் மார்க்க அறிஞர்களின் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இமாம் ஷாபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத்(ரஹ்) போன்றோர்
அல்லாஹ்வின் அறிவை புறக்கணிப்பவர்கள் இறைநிராகரிப்பாளர் ஆவர்' என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள் - என்கிறார். (இப்னு ரஜப்: ஜாமிஉல் உலூம்: பக்கம்: 26).
இஸ்லாமிய வரலாற்றில் பிரபலமாக இருந்த கதரிய்யாக்கள் மறைந்து விட்டனர். எனினும், முஃதஸிலாக்கள் இவர்களது அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றுவதுடன், 'இக்கொள்கைகளைப் பாதுகாத்தும் வருகின்றனர். எனவேதான், முஃதஸிலாக்கள் கதரிய்யாக்கள் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகின்றனர். (முஃதஸிலா: பக்கம்: 40).
- மெளலவி. எம். எம். ஸக்கி, B.A(Hons) மதினா