புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 4 ஜகாத்
ஜகாத்
622 நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களை யமன் தேசத்திற்குப் அனுப்பினார்கள். (அறிவிப்பாளர் ஹதீஸ் முழுவதையும் கூறினார்) அதில் உள்ளதாவது: அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று தேவையுள்ள (ஏழை) மக்களிடம் திருப்பி விடும் ஜகாத்தை அவர்களின் செல்வத்தில், அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
623 அபூ பக்ர்(ரலி) அவர்கள் அனஸ்(ரலி) அவர்களுக்கு ஜகாத் கடமை பற்றி ஒரு செய்தி எழுதினார்கள். இது முஸ்லிம்கள் மீது நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஜகாத் தர்மம் ஆகும். இது அல்லாஹ் தனது நபிக்கு இட்ட கட்டளையாகும். ''இருபது அல்லது இருபத்தி நான்கு ஒட்டகங்களுக்குள் ஒவ்வொரு ஐந்து ஒட்டகங்களுக்கும் ஒரு ஆடு (ஜகாத் ஆகும்). ஒட்டகங்களின் எண்ணிக்கை 25லிருந்து 35வரை ஆகிவிட்டால், அவற்றில் ஓர்வருடம் பூர்த்தியான ஒட்டகை ஜகாத் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 35லிருந்து 45வரை ஆகிவிட்டால், இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒட்டகம் ஜகாத் தர வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 46லிருந்து 60வரை ஆகிவிட்டால் மூன்று வருடங்கள் பூர்த்தியான ஒட்டகம் ஜகாத் ஆகும். அவற்றின் எண்ணிக்கை 61லிருந்து 75வரை ஆகிவிட்டால், அவற்றிற்கு இரணடு வரடுங்கள் பூர்த்தியான ஒட்டகங்கள் ஜகாத் ஆகும். அவற்றின் எண்ணிக்கை 91லிருந்து 100வரை ஆகிவிட்டால், பெருக்கும் தன்மையுடைய மூன்று வருட ஒட்டகங்கள் இரண்டு ஜகாத் ஆகும். அவற்றின் எண்ணிக்கை 120க்கு மேல் ஆகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஓட்டகங்களுக்கும் இரண்டு வருட ஒட்டகம் அல்லது ஒவ்வொரு ஐம்பதுக்கும் மூன்று வருடங்கள் பூர்த்தியான ஒட்டகங்கள் உள்ள எவருக்கும் ஜகாத் இல்லை. ஆனால், அதன் உரிமையாளர் விருப்பப்பட்டு கொடுக்கலாம். காடுகளில் மேயும் ஆடுகள் 40 முதல் 120 வரை இருக்குமாயின், அவற்றிற்கு ஒரு ஆடு ஜகாத் ஆகும். அவை 120லிருந்து 200 வரை ஆகிவிட்டால், அவற்றிற்கு இரண்டு ஆடுகள் ஜகாத் ஆகும். அவற்றின் எண்ணிக்கை 200லிருந்து 300 வரையாகி விட்டால், மூன்று ஆடுகள் ஜகாத் ஆகும். அவற்றின் எண்ணிக்கை 300ஐக் கடந்து விட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு (என்ற விம்தத்தில்) ஜகாத் ஆகும். எவரிடத்திலேனும் மேயக்கூடிய ஆடுகள் நாற்பதுக்கு ஒன்று குறைவாக இருந்தால், அவற்றிற்கு அதன் உரிமையாளர் விரும்பி கொடுத்தால் தவிர ஜகாத் இல்லை. தனித்தனியாக இருக்கும் பொருட்களை மொத்தம் சேர்க்க வேண்டாம். இன்னும் மொத்தமாக இருக்கும் பொருட்களை ஜகாத் கொடுப்பதற்கு பயந்து பிரித்துக் கொள்ளுதல் வேண்டாம். எந்தச் சொத்து கூட்டு முறையில் உள்ளதோ, அதனுடைய அளவுப்படி அதற்குரிய ஜகாத்தை கொடுத்து விட வேண்டும். ஜகாத் பொருட்கள் பல் உடைந்ததாகவோ, குறைபாடு உள்ளதாகவோ, ஒதுக்கப்பட்டதாகவோ, இருக்கக் கூடாது. வாங்குபவர் அதை விரும்பிக் கேட்டால் தவிர, ஜகாத் கடமை இல்லை. எவரிடத்திலேனும் நான்கு வருட ஒட்டகம் ஜகாத் கொடுப்பதற்கு இல்லை எனில், அவரிடமிருந்து மூன்று வருடம் பூர்த்தியான ஒட்டகங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதனுடன் இரண்டு ஆடுகள் அல்லது இருபது திர்ஹம் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அதேபோன்று எவருக்கேனும் மூன்று வருடங்கள் பூர்த்தியான ஒட்டகை ஜகாத் கடமையாக இருக்கும் நிலையில் அவரிடம் நான்கு வருடங்கள் பூர்த்தியான ஒட்டகை இருப்பின் ஜகாத் பெறுபவர் அதன் உரிமையாளாரிடம் அதைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆடுகள் அல்லது இருபது திர்ஹம் கொடுக்க வேண்டும் என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் ஜகாத் கடமை பற்றி தனக்கு செய்தி எழுதினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.
624 நபி(ஸல்) அவர்கள் தம்மை யமன் நாட்டிற்கு அனுப்பிய போது ''ஒவ்வொரு முப்பது மாடுகளுக்கும் ஜகாத்தாக ஒரு வருடக் காளை அல்லது பசு வாங்க வேண்டும். வயது வந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தீனார் ஜகாத்தாக வாங்க வேண்டும் அல்லது அதன் விலை மதிப்புள்ள துணி வாங்க வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் தமக்குக் கட்டளையிட்டார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
இங்கு அஹ்மதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மவ்ஸூல் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
625 ''முஸ்லிம்களிடமிருந்து அவர்களுடைய தண்ணீருக்கும் ஜகாத் வாங்க வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம்முடைய தந்தையிடமிருந்தும் அவர் தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத்
''அவர்களுடைய ஜகாத்தை அவர்களுடைய வீடுகளிலிருந்து பெற வேண்டும்'' என்று அபூதாவூதில் உள்ளது.
626 ''எந்த ஒரு முஸ்லிம் மீதும் அவன் (சவாரிக்காக) வைத்திருக்கும் குதிரை மற்றும் அவனுடைய அடிமைக்காக ஜகாத் செலுத்துவது கடமையல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
''அடிமையின் மீது ஸதக்கத்துல் ஃபித்ரைத் தவிர்த்து எந்த ஜகாத்தும் கடமை இல்லை'' என்றும் முஸ்லிமில் பதிவாகியள்ளது.
627 ''காடுகளில் மேய்ந்து கொள்ளும் ஒட்டகங்களில் ஒவ்வொரு நாற்பதிற்கும் இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம் ஐகாத் ஆகும். இதைக் கணக்கிட்டு (ஜகாத் கொடுக்காதிருக்க) அவர்கள் அவற்றைப் பிரித்துக் கொள்ளக் கூடாது. எவர் ஜகாத்தை இறைவனிடம் நற்கூலியை எதிர்பார்த்து கொடுக்கின்றாரோ, அவர் அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்வார். எவர் ஜகாத் கொடுக்கவில்லையோ, அவரிடமிருந்து நாம் அதைக் கண்டிப்பாக வாங்குவோம். அவருடைய சொத்தின் ஒரு பகுதி நம் இறைவனால் வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் ஒன்றாகும். அதில் இருந்து எதுவுமே முஹம்மதின் குடும்பத்தாருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, பஹஜ் இப்னு ஹகீம் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ
நஸாயீ மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும், ஷாஃபிஈயில் முஅல்லக் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
628 ''உன்னிடம் இருநூறு திர்ஹம் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அவற்றிலிருந்து ஐந்து திர்ஹம் ஜகாத்(கடமை) ஆகும். உன்னிடம் இருபது தீனார்கள் வரும் வரை நீ ஜகாத் கொடுக்க வேண்டியது இல்லை. இருபது தீனார்கள் மட்டும் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அரை தீனார் அவற்றிலிருந்து ஜகாத் ஆகும். அதற்கு மேல் எவ்வளவு அதிகமானலும் அதைக் கணக்கிட்டு ஜகாத் கொடுப்பது கடமையாகும். வருடம் ஒன்று கழியாத எந்த ஒரு சொத்தின் மீதும் ஜகாத் கடமை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மர்ஃபூஃ எனும் தரத்தைப் பெற்றுள்ளதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
629 ''ஒருவர் ஒரு சொத்தைப் பெற்ற பின்பு அதன் மீது வருடம் ஒன்று கழியாமல் ஜகாத் இல்லை'' என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.
இது மவ்கூஃப் எனும் தரத்தில் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
630 ''வேலை வாங்கப்படும் காளை மாடுகளில் மீது ஜகாத் கடமை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அலீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், தாரகுத்னீ
இது மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
631 ''அநாதையுடைய சொத்துக்கு எவர் பொறுப்பேற்றுள்ளாரோ அவர் அதை வியாபாரம் (தொழில்) செய்து பெருக்கிக் கொள்ளட்டும். ஜகாத் அதை விழுங்கும் அளவிற்கு விட்டு விட வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். திர்மிதீ, தாரகுத்னி
632 மக்கள் ஜகாத்தை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுக்கும் போது ''யா அல்லாஹ்! இவர்களுக்கு கருணை செய்வாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள் என, அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
633 அப்பாஸ்(ரலி) அவர்கள் தம்முடைய ஜகாத்தை அதன் நேரம் வரும் முன்பே செலுத்துவது சம்பந்தமாக கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் அவருகளுக்கு அவ்வாறு செய்ய அனுமதி வழங்கினார்கள் என்று அலி(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, ஹாகீம்
634 ''இருநூறு திர்ஹத்திற்கும் குறைவாக வெள்ளி இருப்பின் அதன் மீது ஜகாத் இல்லை. ஒட்டகங்கள் ஐந்திற்கும் குறைவாக இருப்பின், அவற்றின் மீதும் ஜகாத் இல்லை. ஐந்து வஸ்க்கிற்குக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தின் மீதும் ஜகாத் இல்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
635 முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''ஐந்து வஸக் அளவிற்கும் குறைவாக உள்ள பேரீச்சம்பழம் மற்றும் தானியங்களுக்கு ஜகாத் இல்லை'' என்று அபூசயீத்(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரி முஸ்லிம் உள்ளது.
636 ''மழைத்தண்ணீர், ஊற்றுத் தண்ணீர் ஆகியவற்றால் பாசனம் செய்யப்படும் நிலம் அல்லது ஈரத் தன்மையுள்ள நிலத்தின் மூலம் செய்யப்படும் வேளாண்மையில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் கடமையாகும். தண்ணீர் இறைத்துப் பாசனம் செய்யப்படும் நிலத்திலிருந்து வரும் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கு ஜகாத் (கடமை) ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் தம் தந்தை இப்னு உமர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். புகாரி
தானாக விளையும் வேளாண்மைக்குப் பத்தில் ஒரு பங்கும், சால்(பை) அல்லது கால்நடைகள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படும் நிலத்தின் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கடமை என்று அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது.
637 ''தானியங்களில் வாற்கோதுமை, கோதுமை, திராட்சை, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்த்து வேறு எந்த வேளாண்மைக்கும் ஜகாத் வாங்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) மற்றும் முஆத்(ரலி) அறிவிக்கின்றனர்.
தப்ரானி, ஹாகிம்
638 வெள்ளரிக்காய், தர்பூசணிப்பழம், மாதுளை மற்றும் 'கஸப்' எனும் ஒரு வகைப் புல் ஆகியவற்றிற்கு (ஜகாத் இல்லை) என நபி(ஸல்) அவர்கள் சலுகை அளித்ததாக முஆத்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
639 ''நீங்கள் (ஜகாத்தை) மதீப்பிடு செய்ய (வசூலிக்கச்) சென்றால், மூன்றில் ஒரு பகுதியை விட்டு, விட்டு (மற்றவற்றில் ஜகாத்தைப்) பெற்றுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒரு பங்கை விடாவிட்டால் நான்கில் ஒரு பங்கை(யாவது) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ
இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
640 பேரீச்சம் பழத்தில் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலிப்பது) போன்றே திராட்சையிலும் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலித்துக்) கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அதற்குரிய ஜகாத் காய்ந்த திராட்சை (ம்ஸ்மிஸ்) ஆக வாங்கப்பட்டது என அத்தாப் இப்னு அத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
இது முன்கதிஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
641 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவருடன் கையில் அவருடைய மகள் இருந்தாள். அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அந்தப் பெண்மணியிடம் ''நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''இல்லை'' என்றார். ''மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?'' என்று கேட்டார்கள். (இதைக் கேட்டவுடன்) அவர் அவற்றைக் கழற்றிக் கொடுத்து விட்டார் என்று அமீர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ
இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
642 தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒருவகை நகையை நான் அணிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இதுவும் (சேகரித்துப் பதுக்கி வைக்கும்) புதையல் ஆகுமா?'' என்று அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, ''அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், தாரகுத்னீ. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
643 நாங்கள் வியாபாரத்திற்காகத் தயாரிக்கும் பொருட்களிலிருந்து ஜகாத்தை எடுத்துச் கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என, ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
644 ''புதையலில் (மற்றும் சுரங்கப் பொருட்களில்) ஐந்தில் ஒரு பகுதி ஜகாத் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
645 பாழடைந்த ஓர் இடத்திலிருந்து ஒருவருக்குக் கிடைத்த புதையலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில், ''அதை நீ மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பெற்றிருந்தால் (யாருடையது எனக் கேட்டு) அதை அறிவிப்புச் செய்! மக்கள் வசிக்காத பகுதியிலிருந்து அதைப் பெற்றிருந்தால் அதன் ஐந்திலொரு பங்கு ஜகாத் ஆகும்'' என்று கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
646 'கபலிய்யா' எனும் சுரங்கத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வாங்கினார்கள் என பிலால் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
நோன்புப் பெருநாள் தர்மம்
647 முஸ்லிம்களிலுள்ள அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவர் மீதும் ஒரு 'ஸாவு' பேரித்தம்பழத்தை அல்லது ஒரு 'ஸாவு' வாற்கோதுமையை 'ஜகாத்துல் ஃபித்ர்' (பெருநாள் தர்மம்) என, நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் மக்கள் தொழுகைக்கு வெளியேறும் முன்பே அதைக் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
648 ''அந்த நாளில் ஏழைகள் (உணவில்லாமல்) அலைந்து திரிவதைப் போக்கி விடுங்கள்'' என, இப்னு அதீ எனும் நூலிலும் தார குத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
649 நாங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெருநாள் தர்மமாக உணவு பொருட்களில் ஒரு 'ஸாவு' அல்லது வாற்கோதுமையில் ஒரு 'ஸாவு' அல்லது காய்ந்த திராட்சையில் ஒரு 'ஸாவு' கொடுத்துக் கொண்டிருந்தோம் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார்.
புகாரி, முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பின்படி அல்லது ஒரு ஸாவு பால் கட்டி என்று உள்ளது. ''நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் எதைக் கொடுத்துக் கொண்டிருந்தேனோ, அதையே கொடுத்து கொண்டிருப்பேன்'' என்று அபூ ஸயீத் கூறினார். அபூதாவூதின் அறிவிப்பில் நான் ஒருபோதும் ஒரு ஸாவுவைத் தவிர கொடுக்க மாட்டேன் என்று உள்ளது.
650 நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக்க கடமையாக்கி, ''நோன்பாளிகளின் வீண் மற்றும் ஆபாசப் பேச்சுகளைத் தூய்மைப்படுத்தும் முகமாகவும், ஏழைகளின் உணவாகவும் (பெருநாள் தர்மம்) உள்ளது. எவர் அதைப் பெருநாள் தொழுகைக்கு முன்பே செலுத்துகிறாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாகும். எவர் அதைத் தொழுகைக்கு முன்பே செலுத்துகிறாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாகும். எவர் அதைத் தொழுகைக்குப் பின்பு செலுத்துகிறாரோ, அது தர்மங்களில் ஒரு தர்மமாகும்'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், இப்னு மாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபரியான தர்மங்கள்
651 ''இறைவனுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில் அல்லாஹ் தன்னுடைய நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது) அவர்களில் ஒருவர் தன்னுடைய வலக் கை செய்யும் தர்மத்தை தனது இடக் கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
652 ''(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், ஹாகிம்
653 ''எந்த முஸ்லிம் ஆடையற்றிருக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பச்சை நிற ஆடையை அணிவிப்பான். எந்த முஸ்லிம் பசியுடனிருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்தின் பழவகைகளை உண்ணச் செய்வான். எந்த முஸ்லிம் தாகித்திருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுகின்றாரோ, அல்லாஹ் (சுவர்க்கத்தில்) அவருக்கு 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை புகட்டுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இதன் அறிவிப்புத் தொடர் பலஹீனமானது
654 மேலிருக்கும் கை கீழிருக்கும் கையை விடச் சிறந்தது. மேலும், நீ தர்மத்தை உன்னுடைய சொந்தபந்தங்களிலிருந்து தொடங்கு தேவைக்குப் போக (மீதம்) உள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். எவர் (பிறரிடம் தர்மம் கேட்காமல்) தன் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறாரோ, அல்லாஹ்வும் அவனுடைய சுயமரியாதையைப் பாதுகாக்கின்றான். எவர் (ம்டைத்ததை வைத்துப்) போதுமென்ற மனத்துடன் (தர்மத்தை ஏற்காமலேயே) இருந்து வருகிறாரோ, அல்லாஹ்வும் அவருக்குப் போதுமென்ற மனத்தையளிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஹக்கிம் இப்னு ஹிஜாம்(ரலி) அறிவிக்கிறார்.
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
655 ''தர்மத்தில் சிறந்தது எது?'' என்று மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ''குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், அஹ்மத்
இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா மற்றும் ஹாகிமில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
656 ''தர்மம் செய்யுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது?'' என்று கூறினார். அதற்கு, நீ அதை உனது செலவுக்கு வைத்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றுமொன்றுள்ளது'' என்று கூறினார். அதற்கு, ''நீ உன்னுடைய பிள்ளைகளுக்கு செலவிடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்றுமுள்ளது'' என்றார். அதற்கு, நீ அதை என்னுடைய ஊழியர்களுக்குச் செலவிடு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்றும் உள்ளது'' என்றார். அதற்கு, ''அதைப் பற்றி நீயே தீர்மானித்துக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ
இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
657 ''தன் வீட்டு உணவை வீணடிக்காமல் செலவு செய்யும் பெண்ணுக்கு அதைச் செலவிட்ட அளவுக்கு நன்மை உண்டு. அதை சம்பாதித்ததற்காக அவளுடைய கணவனுக்கும் நன்மையுண்டு. அதைப் பாதுகாக்கும் கருவூலக் காப்பாளருக்கும் அதே போன்ற நன்மை உண்டு. இது போன்றே மற்ற செலவினங்களிலும் நன்மை உண்டு. இவர்களில் எவர் காரணத்தாலும் மற்றவருக்குரிய நன்மை குறைக்கப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
658 இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மனைவி ஜைனப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று தாங்கள் கட்டளையிட்டார்கள். என்னிடம் சில நகைகள் இருந்தன. அவற்றை தர்மம் செய்வதை விட நான் விரும்பினேன். ஆனால் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களோ (நான் செலவிட விரும்புவோரை விட) அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அதற்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டார்.'' (நான் என்ன செய்வது) என்று கேட்டார். அதற்கு, மஸ்வூத் உண்மையே சொன்னார். நீ செலவிட விரும்புவோரை விட, உன்னுடைய கணவன் மற்றும் உன் பிள்ளைகள் தாம் அதிகம் உரிமை பெற்றவர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி
659 ''எவன் மக்களிடம் (தன் தேவைகளை) எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றானோ, அவன் மறுமை நாளில் தனது முகத்தில் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் (எலும்புக் கூடாக) வருவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
660 ''தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களின் பொருட்களை எவன் யாசித்துக் கொண்டே இருக்கின்றானோ, அவன் நெருப்புக்கங்கையோ கேட்கின்றனர். இனி விரும்பியவர் கூட்டியோ, குறைத்தோ வாங்கி கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
661 ''உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து (விறகுக் கட்டைகளை கட்டி, அதை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்து, விற்பனை செய்கிறார். அது மக்களிடம் யாசிப்பதை விட்டும் அவரைத் தடுத்து விடுகிறதெனில், அதுவே மக்களிடம் கேட்பதை விட அவருக்குச் சிறந்ததாகும். மக்கள் கொடுத்தாலும் சரி. கொடுக்காவிட்டாலும் சரி'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு அல் அவ்வாம்(ரலி) அறிவிக்கிறார்.
662 ''அதிகாரம் உள்ளவரிடமும் தவிர்க்க முடியாத விஷயத்திற்காகவும் தவிர மற்ற யாசகங்கள், ஒரு மனிதன் தன் முகத்தில் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வடுவாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மம் பொருட்களின் பங்கீடு
663 ''(இங்கு இடம் பெறும்) ஐந்து நபர்களைத் தவிர ஜகாத் பொருட்களைப் பெறும் தகுதி எந்த செல்வந்தருக்கும் இல்லை. 1 ஜகாத் பொருட்களைச் சேகரிக்க உழைப்பவர் 2 தன்னுடைய பொருளைப் பகரமாகக் கொடுத்து ஜகாத் பொருளை வாங்குபவர் 3. கடன் பெற்றிருப்பவர் 4. அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் 5. ஜகாத்தைப் பெற்ற ஏழையிடமிருந்து அன்பளிப்புப் பெற்றவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
664 ''நாங்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் ஜகாத்திலிருந்து (உதவி) வாங்குவதற்காகச் சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்க்ள எங்களின் பால் பார்வையைத் திருப்ப எங்களை வளமானவர்களாகக் கண்டு, ''நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்குத் தருகிறேன். ஆனால், இது செல்வந்தர் மற்றும் சம்பாதிக்கும் சக்தி பெற்றவர்களுக்கு உரிய தன்று'' என்று கூறினார்கள் என இருநபர்கள் தன்னிடம் கூறியதாக உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னு அல் கியார்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸாயீ
இதன் அறிவிப்பாளர் பலமானவர்.
665 (தன் வேலைகளை) கேட்பது மூன்று மனிதர்களைத் தவிர்த்து வேறு எவருக்கும் ஹலால் அனுமதிக்கப்பட்டது) இல்லை. 1. எவர் பிணைப் பொறுப்பேற்று (மாட்டிக்) கொண்டாரோ, அவர் அதை, நிவர்த்தி, செய்யும் அளவு கேட்டுக் கொண்டு நிறுத்திக் கொள்ளவும். 2. ஏதோ ஆபத்து ஏற்பட்டு தன்னுடைய உடமைகள் எல்லாம் இழந்து நிற்பவர் தன்னுடைய சொந்தக் காலில் நிற்கும் வரை கேட்கலாம். 3. ஒருவருக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது என்று சாட்சியளிக்க முன்வந்தால் அவருடைய பஞ்சம் தீரும் வரை, தர்மம் கேட்பது அவருக்கு அனுமதிக்கப்பட்டதாகும்.
கபீஸாவே! மேற்கண்ட மூன்று நிலைகளைத் தவிர்த்து யாசிப்பது விலக்கப்பட்டதாகும். அதனை (யாசித்து) உண்டால் அது ஆகுமானதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கபீஸா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம், அபூதாவூத், இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான்.
666 ''முஹம்மதின் குடும்பத்தினருக்கு ஜகாத் தேவையற்றது. ஏனெனில் அது மக்களின் அழுக்கேயன்றி வேறில்லை'' (மற்றோர் அறிவிப்பின்படி) ''முஹம்மதுக்கும், முஹம்மதின் குடும்பத்தாருக்கு ஜகாத் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல'' என்றும் உள்ளது என அப்துல் முத்தலிப் இப்னு ரபீஆ இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
667 நானும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று! ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கைபருடைய குமுஸிலிருந்து (ஐந்தில் ஒரு பகுதியிலிருந்து) அப்துல் முத்தலிபுடைய சந்ததியினருக்கு அளித்தீர்கள் தங்களுடன் இருவருடைய பந்தமும் ஒரே மாதிரியானதாக இருந்தும் கூட எங்களை விட்டு விட்டீர்களே'' என்று கேட்டோம். அதற்கு, ''முத்தலிப் மற்றும் பனூ ஹாஷிமின் மக்கள் இரு சாராரும் ஒன்றே என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் (காரணம்) அல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
668 தர்மப் பொருட்களுக்காக பனூ மக்ஸூம் கூட்டத்திலிருந்து ஒருவரை நபி(ஸல்) அவர்கள் நியமித்தார்கள் ''நீயும் என்னுடன் சேர்ந்து கொள்! அதனால் நீ (பலன்) பெறுவாய்!'' என்று அவர் அபூராஃபிஉவிடம் கூறினார். அதற்கவர் ''நபி(ஸல்) அவர்களிடம் வந்து (இதைப் பற்றிக்) கேட்டார். அப்போது, ''அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர் விடுதலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவராவார். நிச்சயமாக நமக்கு ஜகாத் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ராஃபிவு(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ இப்னு மாஜா மற்றும் இப்னு ஹிப்பான்
669 நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்த போது, ''என்னை விடத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்கள்!'' என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு, ''நீங்கள் இதை வாங்கிக் வைத்துக் கொள்ளுங்கள்.
இதை உங்களுக்காக எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தர்மம் செய்து விடுங்கள். இந்த (குமுஸ்) செல்வத்திலிருந்து நாங்களாக ஆசைப்படாமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்குக் கிடைப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். தானாக வராததை நீங்களாகத் தேடிச் செல்லாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் இப்னு உமர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். முஸ்லிம்