அத்தியாயம் - 3 ஜனாஸா சட்டங்கள்

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 3 ஜனாஸா சட்டங்கள்

556 ''விருப்பங்களை (எல்லாம்) அகற்றக் கூடிய மரணத்தை அதிகம் நினைவு கூருங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, நஸயீ

இது இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

557 ''தனக்கேற்படும் தீங்கின் காரணமாக உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். எவரேனும் நிர்பந்தத்திற்குள்ளானால் ''இறைவா! நான் உயிர் வாழ்வது எதுவரை எனக்கு நல்லதாக இருக்குமோ அதுவரை எனக்கு வாழ்க்கையளிப்பாயாக! மேலும், எப்போது மரணமே எனக்கு நல்லதாக இருக்குமோ அப்போது என்னை உலகிலிருந்து எடுத்துக் கொள்வாயாக! என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

558 ''இறை நம்பிக்கையாளன் நெற்றி வேர்வையுடன் இறக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

559 ''இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கும் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை'' என்ற உறுதியை ஊட்டுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் மற்றும் அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னுமாஜா.

560 ''உங்களில் இறக்கும் தருவாயில் இருப்போரிடம் யாஸீன் (சூரா) ஓதுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃகில் இப்னு யஸார்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத் நஸயீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

561 நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி) அவர்களுடைய மரண நேரத்தில் அங்கு வந்தார்கள். அவருடைய கண் திறந்தவாறு இருந்தது. அவருடைய கண்ணை நபி(ஸல்) அவர்கள் மூடிவிட்டார்கள். பின்னர், ''உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் பார்வை அதைப் பின் தொடர்கிறது'' என்று கூறினார்கள். அப்போது அவருடைய குடும்பத்தாரில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். அதற்கு, ''உங்கள் உயிர்களுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் கேட்காதீர்கள். ஏனெனில், (இப்போது) மலக்குகள் நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமீன் கூறுகிறார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர், ''யா அல்லாஹ்! அபூ ஸல்மாவை மன்னித்து விடு! நேர்வழி பெற்றவர்களில் அவருடைய நிலையை உயர்த்தியருள்! அவருடைய கப்ரை அவருக்கு விசாலமாக் கியருள்! மேலும், அதில் வெளிச்சத்தை உண்டாக்கியருள்! அவருடைய அடிச்சுவட்டில் (அவரைப் பின்பற்றிப்) பணியாற்றுவரை நியமி'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

562 ''நபி(ஸல்) அவர்கள் இறந்தவுடன் அவர்கள் மீது 'ஹிப்ரா' எனும் (யமன் நாட்டின் ஒரு வகை) சால்வை போட்டு மூடப்பட்டது'' என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

563 அபூபக்ர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை இறந்த பின்னர் முத்தமிட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

564 ''இறை நம்பிக்கையாளனின் உயிர் (அவன் கடன்பட்டவனாக இருப்பின்) அவனுடைய கடன் அடைக்கப்படும் வரை அதனுடன் தொங்கிக் கொண்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ

இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

565 ''அவரை இலந்தை இலை கலந்த தண்ணீரில் குளிப்பாட்டுங்கள். மேலும் அவருடைய (இஹ்ராமின்) இரு துணிகளினால் அவருக்குக் கஃபனிடுங்கள்'' என்று (ஹஜ்ஜின் போது) ஒட்டகத்திலிருந்து விழுந்து இறந்தவர் தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

566 நபித்தோழர்கள் நபி(ஸல்) (அவர்கள் மரணமடைந்த பின்) அவர்களைக் குறிப்பாட்ட நாடிய போது, ''நாங்கள் மற்ற மனிதர்களின் ஆடைகளைப் போன்று அவிழ்ப்பதா, அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அறிய மாட்டோம்'' என்று கூறினர் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) அஹ்மத், அபூ தாவூத்

567 நபி(ஸல்) அவர்களுடைய (இறந்துவிட்ட) மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் வந்தார்கள். இன்னும், ''நீங்கள் அவரை மூன்று அல்லது ஐந்து முறை அல்லது உங்களுக்குச் சரியாகப்படும் வரை அதற்கும் அதிகமான முறைகள் குளிப்பாட்டுங்கள். இன்னும் இலந்தை இலை கலந்த தண்ணீரினால் குளிப்பாட்டுங்கள். இறுதியில் கற்பூரம் உபயோகியங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் முடித்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் தமது கீழங்கியைக் கொடுத்து ''அதை உள்ளாடையாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பின்படி அவரின் (குளிப்பாட்டுதலை) வலது புறம் மற்றும் உளு செய்யக்கூடிய பகுதிகளைக் கொண்டு தொடங்குங்கள் என்று உள்ளது. புகாரியின் மற்றோர் அறிவிப்பின்படி நாங்கள் அவரது கேசத்தை மூன்று சடையாக பிண்ணி அவருக்கு பின்னால் போட்டோம் என்றும் உள்ளது.

568 பருத்தியால் ஆன வெள்ளைத் துணியால் நபி(ஸல்) அவர்களுக்கு கஃபனிடப்பட்டது அதில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

569 (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்ததும் அவனுடைய மகன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''தாங்கள் தங்களது ஆடையைக் கொடுங்கள். நான் அதில் அவருக்குக் கஃபனிட்டுக் கொள்கிறேன்'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் கொடுதது விட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

570 ''நீங்கள் வெள்ளை ஆடை அணியுங்கள். ஏனெனில் அதுவே உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களுடைய மய்யித்துகளுக்கும் (இறந்ததோருக்கும்) வெள்ளை ஆடையில் கஃபனிடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

571 ''உங்களில் எவரேனும் தன்னுடைய (முஃமினான) சகோதரனுக்குக் கஃபனிட்டால், அதை நல்ல முறையில் செய்யட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

572 உஹத் யுத்தத்தில் ஷஹீதான இரண்டு ஆண் மய்யித்துக்களை ஒரே கஃபனில் 'நபி(ஸல்) அவர்கள் இணைத்தார்கள். ''இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?'' என்று கேட்டு அவரை குழிக்குள் முதலாவதாக வைத்தார்கள். இந்த ஷஹீத்களில் எவருக்கும் குளிப்பாட்டப்படவில்லை. தொழுகையும் நடத்தப்படவில்லை என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

573 ''கஃபன் துணிகளில் அதிக விலை போடாதீர்கள். ஏனெனில், அது அதிவிரைவில் பிடுங்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

574 ''நீ எனக்கு முன்னால் இறந்துவிட்டால் நான் உன்னைக் குளிப்பாட்டுவேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், இப்னு மாஜா

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

575 என்னை அலீ(ரலி) குளிப்பாட்ட வேண்டும் என்று ஃபாத்திமா(ரலி) வஸிய்யத் (மரண சாசனம்) செய்தார் என அஸ்மாபின்த்து உமைஸ் அறிவிக்கிறார். தாரகுத்னீ

576 புரைதா(ரலி) அவர்கள், காமிதீ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், நபி(ஸல்) அவர்கள் அவளுடைய விபச்சாரக் குற்றத்திற்காக அவளைக் கல்லேறிந்து கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அவளுக்குத் தொழுகை நடத்துமாறும் கட்டளையிட்டார்கள். அவளுக்குத் தொழுகை நடத்தப்பட்டது. அவள் அடக்க(மு)ம் செய்யப்பட்டாள் என்று குறிப்பிட்டார். முஸ்லிம்

577 தற்கொலை செய்யப்பட்ட ஒருவருடைய ஜனாஸா நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தொழுகை நடத்த வில்லை என்று ஜாபிர் இப்னு ஸம்ரா(ரலி) அறிவிக்கிறார்.

578 பள்ளிவாசலைக் கூட்டி (பெருக்கி)க் கொண்டிருந்த ஒரு பெண்ணின் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில், நபி(ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களிடம்) அப்பெண்ணைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ''அவர் இறந்து விட்டார்'' என்று கூறினார்கள். அதற்கு ''நீங்கள் ஏன் எனக்கு செய்தி சொல்லவில்லை?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அந்த விஷயத்தைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. பின்னர் ''அவளுடைய மண்ணறையை எனக்குக் காண்பியுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதை அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் காட்டினார்கள். அவளுக்காக நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பிறகு, ''இந்த மண்ணறைகள் அதிலிருப்பவர்களுக்கு இருள் நிரம்பியதாக உள்ளன. நிச்சயமாக (ஜனாஸா பாவமன்னிப்புத்) தொழுகையின் காரணமாக இவற்றில் வெளிச்சத்தை அவர்களுக்கு அல்லாஹ் உண்டாக்குகின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதும் முஸ்லிமில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

579 மரணச் செய்தியை விளம்பரம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ

இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

580 நஜாஷி மன்னருடைய மரணச் செய்தி அவருடைய மரண தினத்தன்றே நபி(ஸல்) அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (அப்போது) நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் ஜனாஸா தொழுதும் இடம் சென்று அணிவகுப்பைச் சரி செய்தார்கள். இன்னும் அவருக்காக நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

581 முஸ்லிமான ஒரு மனிதர் இறந்து, அல்லாஹ்விற்கு ஒரு போதும் இணைவைக்காத நாற்பது நபர்கள் அவருடைய ஜனாஸாவிற்காக சேர்ந்து (தொழ) நின்றால் அவருக்காக அவர்களுடைய பரிந்துரையை அல்லாஹ் ஏற்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

582 நிஃபாஸுடைய நாட்களில் இறந்து போன ஒரு பெண்ணுக்காக நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்துகையில் நான் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதேன். அப்போது அவர்கள் அதன் (மையத்தின்) நடுவில் நின்றிருந்தார்கள் என்று ஸமுரா பின் ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

583 அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் 'பைதா' எனும் பெண்ணுடைய இரண்டு மகன்களின் (ஜனாஸா) தொழுகையை பள்ளிவாயிலில் தொழ வைத்தார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

584 ஸைத் இப்னு அர்கம்(ரலி) எங்களுக்கு ஜனாஸாத் தொழ வைக்கும் போது நான்கு தக்பீர்கள் கூறுவார்கள். ஒரு ஜனாஸாவில் ஐந்து தக்பீர் கூறிவிட்டார்கள். (இது பற்றி) நான் அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தக்பீர் கூறியுள்ளார்கள் என பதிலளித்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா அறிவிக்கிறார். முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

585 ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துகையில் அலி(ரலி) அவர்கள் ஆறு தக்பீர் கூறினார்கள். பின்னர் ''அவர் பத்ருத் தோழர்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஸயீத் இப்னு மன்ஸூர்(ரலி) இதன் மூலம் புகாரியில் உள்ளது.

586 நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாக்களுக்கு தொழும் போது நான்கு தக்பீர் கூறுவார்கள். மேலும், முதல் தக்பீரில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவார்கள் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஷ்ஷாஃபிஈ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

587 நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸாத் தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்கள். பின்னர், அறிந்து கொள்ளுங்கள்! இது சுன்னத்தாகும்'' என்று கூறினார்கள் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

588 ''இரட்சகனே! இவரை மன்னித்தருள்வாயாக! மேலும் இவர் மீது கருணை புரிவாயாக! மேலும் இவரது பிழையைப் பொறுத்து, சுகம் அளிப்பாயாக! இவர் செல்லும் இடத்தை சங்கைக்குரியதாக்குவாயாக! மேலும், இவர் புகும் இடத்தை (கப்ரை) விசாலமாக்குவாயாக! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் (இவரது பாவங்களைக்) கழுவித் தூய்மைப்படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடையை சுத்தப்படுத்துவது போன்று பிழைகளிலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! மேலும்! இங்குள்ள குடும்பத்தாரை விட சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! மேலும், இங்குள்ள குடும்பத்தை விட (மனைவியை விட) சிறந்த குடும்பத்தை ஏற்படுத்துவாயாக! மேலும், இவரை சுவர்க்கத்தில் புகுத்துவாயாக! மேலும், இவரை மண்ணறையின் சோதனையிலிருந்தும் மற்றும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தம் காத்தருள்வாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகையின் போது ஓதுவார்கள். நான் அதை மனனம் செய்து கொண்டேன்'' என அவ்ஃப் இப்ன மாலிக்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

589 ''இரட்சகனே! எங்களில் உயிரோடிருப்போரையும், மரணித்தவர்களையும் இங்கு வந்திருப்போரையும், சிறியவர்களையும் பெரியவர்களையும் ஆண்களையும், பெண்களையும் மன்னித்தருள்வாயாக! இரட்சகனே! எங்களில் உயிரோடு இருப்போரை இஸ்லாத்தின் அடிப்படையில் வாழச் செய்வாயாக! இன்னும் எங்களில் இறப்பவர்களை இறைநம்பிக்கை உள்ள நிலையில் இறக்கச் செய்வாயாக! இரட்சகனே! இவருக்குரிய (நற்) கூலியை (நாங்கள் அவருக்காக உன்னிடம் கேட்டும் அதை) எங்களுக்குத் தடுத்துவிடாதே! என்று நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகையின் போது ஓதுபவர்களாக இருந்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம், அபூதாவூத் நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.

590 ''நீங்கள் ஜனாஸாத் தொழுகை தொழுதால் அதற்காகத் தூய்மையான எண்ணத்தோடு (இறைவனிடம்) பிராத்தனை செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இது இப்னுஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

591 ''ஜனாஸாவை விரைவாக எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், அது நல்ல(செயல் செய்த)தாக இருந்தால் நல்லது. அதை அதன் இடம் எடுத்துச் செல்பவராவீர்கள். அவ்வாறில்லையெனில், அது தீயது. அதை உங்களை தோளை விட்டு வேகமாக இறக்கி விட்டவராவீர்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

592 ''எவர் ஒருவர் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டு அதற்கு தொழுகை நடத்தும் வரை இருக்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது 'இரு கீராத்துக்கள்' என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு, ''இரண்டு பெரும் மலையை போன்றவை (நன்மைகள்)'' என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

அது அடக்கம் செய்யப்படும் வரை என்பதற்கு பதிலாக ''அது கப்ரில் வைக்கப்படும் வரை'' எனும் வாசகம் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

593 அபூஹுரைரா(ரலி) வாயிலாக புகாரியில் ''எவர் ஒருவர் இறை நம்பிக்கையோடும், நன்மையை நாடியவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின் தொடர்கிறாரோ, மேலும் அதறகு தொழுகை நடத்தி அடக்கம் செய்து முடிக்கும் வரை அதனுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு கீராத்துகள் நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹது மலை போன்றதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.

594 நபி(ஸல்) அவர்கள் அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் ஜனாஸாவிற்கு முன்பாகச் சென்றதை, தான் பார்த்துள்ளதாக ஸாலிம் தம்முடைய தந்தை இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும், நஸயீயில் மஃலூல் எனும் தரத்திலும் மற்றும் ஒரு குழுவிடம் 'முர்ஸல்' எனும் தரத்திலும் இடம் பெற்றுள்ளது.

595 ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்குத் தடை செய்யப்பட்டது. ஆயினும், எங்களுக்கு அது கடுமையாக தடை செய்யப்படவில்லை என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

596 ''நீங்கள் ஜனாஸாவைப் பார்த்து விட்டால் எழுந்து நில்லுங்கள். எவர் அதைப் பின்தொடர்கிறாரோ, அது கீழே வைக்கப்படும் வரை அவர் அமர வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஸயீத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

597 அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) மய்யித்தை மண்ணறையில் கால் பக்கமாக இறக்கி, ''இது சுன்னத்தாகும்'' என்று கூறினார்கள் என அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவிக்கிறார். அபூதாவூத்

598 '' நீங்கள் உங்களில் இறந்தவர்க மய்யித்துக்களை மண்ணறைகளில் வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா மில்லத்தி ரஸுலில்லாஹி என்று கூறுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத் மற்றும் நஸாயீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும், தாரகுத்னீயில் மவ்கூஃப் மற்றும் மஃலூல் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

599 ''மய்யித்துடை எலும்புகளை உடைப்பது உயிருள்ளவருடைய எலும்புகளை உடைப்பது போன்றதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இது முஸ்லிமின் நிபந்தனைகளுக்குட்பட்ட ஹதீஸாகும்.

600 உம்மு ஸலமா(ரலி) வாயிலாக, ''பாவங்களில் உள்ளதாகும்'' எனும் வாக்கியத்தை இப்னு மாஜா அதிகமாக பதிவு செய்துள்ளது.

601 எனக்காக கப்ரை உட்புறமாகத் தோண்டி, நபி(ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்டது போன்று சுடப்படாத செங்கல்லை உள்ளே வையுங்கள் என ஸஅத் இப்னு அபீவக்காஸ்(ரலி) கூறினார். முஸ்லிம்

602 ஜாபிர்(ரலி) வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் போன்றே பைஹகீயில் உள்ளது. இன்னும் அதில் அவருடைய மண்ணறை தரையிலிருந்து ஓர் அங்குலம் உயர்த்தப்பட்டிருந்தது'' என்றும் உள்ளது. இது இப்னுஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

603 நபி(ஸல்) அவர்கள் கப்ருக்கு சுண்ணாம்பு பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் தடுத்தார்கள் எனும் ஹதீஸ் ஜாபிர்(ரலி) வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

604 நபி(ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு மழ்ஊனுக்குத் தொழுகை நடத்தினார்கள். இன்னும் (அவரது) மண்ணறைக்கும் வந்தார்கள். பின்னர் நின்றபடியே மூன்று கைப்பிடி மண் எடுத்து அதில் போட்டார்கள். அப்போது அவர்கள் நின்று இருந்தார்கள் என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

605 நபி(ஸல்) அவர்கள் மய்யித்தை அடக்கி முடித்து விட்டால் அங்கு நின்று கொண்டு ''நீங்கள் உங்களுடைய சகோதரனுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள். அவருக்கு உறுதியை அளிக்கும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள். ஏனெனில் இப்போது அவர் கேள்வி கேட்கப்படுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, உஸ்மான்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

606 கப்ரில் மய்யித்தை வைத்து விட்டு அதைச் சமப்படுத்தி செல்வதற்கு முன்பு ''இன்னாரே! 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று மூன்று முறை கூறுவீராக! என்று கூறுவதை முஸ்தஹப் என நாங்கள் கருதிக் கொண்டிருந்ததோம் என ளம்ரா இப்னு ஹபீப்(ரலி) கூறியதாக தாபியீன்களில் ஒருவர் அறிவிக்கிறார். அபூதாவூத்

இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

606 கப்ரில் மய்யித்தை வைத்து விட்டு அதைச் சமப்படுத்தி செல்வதற்கு முன்பு ''இன்னாரே! ''லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று மூன்று முறை கூறுவீராக! மேலும், என்னுடைய மார்க்கம் இஸ்லாம், என்னுடைய தூதர் முஹம்மத்(ஸல்) என்றும் கூறுவீராக!'' என்று கூறுவதை முஸ்தஹப் என நாங்கள் கருதிக் கொண்டிருந்ததோம் என ளம்ரா இப்னு ஹபீப்(ரலி) கூறியதாக தாபியீன்களில் ஒருவர் அறிவிக்கிறார்.

இது ஸயீத் இப்னு மன்ஸூர் உடைய நூலில், மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

607 மேற்கண்ட ஹதீஸ் போன்று அபூ உமாமா(ரலி) வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்தில் தாரகுத்னீயில் நீண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

608 ''நான் உங்களை கப்ரு ஸியாரத்தை விட்டு தடுத்திருந்தேன். இப்போது நீங்கள் ஸியாரத் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா இப்னு அல்ஹுஸைப் அல் அஸ்லமி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

''நிச்சயமாக அது மறுமையை நினைவு கூரக்கூடியதாக உள்ளது'' என்பதும் திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.

609 இப்னு மஸ்வூத்(ரலி) வாயிலாக ''இது உலக வாழ்க்கையின் மோகத்தைப் போக்குகிறது'' என்பதும் இப்னு மாஜாவில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

610 கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்க்ள சபித்தார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

611 நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்து அழுபவர்களையும் அதைக் கேட்டுக் கொண்டு (தடுக்காமல்) இருப்பவர்களையும் சபித்துள்ளார்கள் என அபூஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார்கள். அபூதாவூத்

612 ஒப்பாரி வைக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வாக்குறுதி வாங்கினார்கள் என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

613 ''ஒப்பாரி வைப்பதால் கப்ரில் மய்யித் வேதனை செய்யப்படுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

614 முகீரா இப்னு ஷுஅபா(ரலி) வாயிலாக 613வது ஹதீஸ் போன்றே புகாரி மற்றும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

615 நபி(ஸல்) அவர்களது மகள் (உம்மு குல்ஸூம்) அடக்கம் செய்யப்படும் போது நான் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் மண்ணறை அருகில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களின் இரண்டு கண்களும் கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

616 ''நீங்கள் நிர்பந்தத்திற்குள்ளானால் தவிர மய்யித்துகளை இரவில் அடக்கம் செய்யாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா

இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது. ஆனால், பாதி இரவில் தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்வதையும் கண்டித்தார்கள் என்றுள்ளது.

617 ஐஅஃபர்(ரலி) அவர்கள் மூத்தா போரில் சொல்லப்பட்டு ஷஹீதான செய்தி வந்த போது ''அவருடைய குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் வேறு விசயங்களில் கவனம் செலுத்த வே;ணடியுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஜாஃபர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

618 அவர்கள் மண்ணறைகளின் பால் சென்றால், ''முஃமினான முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ் நாடினால், நாங்களும் உங்களிடம் வரவிருக்கின்றோம். உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடமும் நாங்கள் சுகத்தை வேண்டுகின்றோம்'' என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள் என சுலைமான் இப்னு புரைதா தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். முஸ்லிம்

619 ''மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ் உங்களையும் எங்களையும் மன்னிக்கட்டும்! நீங்கள் சென்று விட்டீர்கள். நாங்கள் பின்னர் வருவோம்'' என்று நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கப்ருகளைக் கடந்து செல்லும் போது மண்ணறைகளின் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார் திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

620 ''இறந்தவர்களைப் பற்றிய குறைகளைச் சொல்லித் திரியாதீர்கள். ஏனெனில், அவர்கள் செய்த செயல்களின் பால் அவர்கள் சென்று விட்டார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

621 முகீரா(ரலி) வாயிலாக 620 வது ஹதீஸ் போன்றே திர்மீதியில் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில், ''நீங்கள் உயிருள்ளவர்களை நோவினை செய்வீர்கள்'' எனும் வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

أحدث أقدم