அத்தியாயம் 16 திருமணம்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 16
திருமணம்

பாடம் : 1 திருமணத்தை ஆசைப்படும் ஒருவருக்கு அதற்கான வசதி இருந்தால், அவர் மணமுடிப்பது விரும்பத்தக்கதாகும்; வசதி இல்லாதவர் நோன்பு நோற்பதில் ஈடுபட வேண்டும்.
2710. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் மினாவில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்களை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து அவர்களுடன் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஓர் இளம் பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? உங்கள் கடந்த கால (இளமை) நிகழ்வுகளை அவள் உங்களுக்கு நினைவு படுத்தக்கூடும்" என்றார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:
இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2711. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் "மினா"வில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்களை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து, "அபூஅப்திர் ரஹ்மானே! இங்கே வாருங்கள்" என்று கூறி, தனியான இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள். (திருமணத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு) தேவை உஸ்மான் (ரலி) அவர்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்கமா இங்கே வா" என என்னை அழைத்தார்கள். நான் சென்றேன். அப்போது அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள், "அபூஅப்திர் ரஹ்மான்! தங்களுக்கு நான் ஒரு கன்னிப்பெண்ணை மணமுடித்து வைக்கட்டுமா? நீங்கள் அனுபவித்த இளமைக் காலத்தை அது உங்களுக்கு மீட்டுத் தரக்கூடும்" என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்..." என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 16
2712. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2713. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையின் சகோதரர் அல்கமா (ரஹ்) அவர்களும் அஸ்வத் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அன்று நான் இளைஞனாக இருந்தேன்.அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். அதை எனக்காகவே அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதினேன். நான் தாமதியாமல் (உடனடியாக) மணமுடித்துக் கொண்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். நானே (அங்கு சென்ற) மக்களில் இளவயதினனாக இருந்தேன்" என ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட அறிவிப்புகளில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், "நான் தாமதியாமல் (உடனடியாக) மணமுடித்துக்கொண்டேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 16
2714. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். (அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக்கொண்டு) அவர்களில் ஒருவர், "நான் பெண்களை மணமுடிக்கமாட்டேன்" என்று சொன்னார். மற்றொருவர் "நான் புலால் உண்ண மாட்டேன்" என்றார். இன்னொருவர், "நான் படுக்கையில் உறங்கமாட்டேன்" என்றார். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றிவிட்டு, "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால், நான் (இரவில்) தொழுகிறேன்; உறங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன்; நோன்பை விட்டு விடவும் செய்கிறேன். பெண்களை மணந்தும் கொள்கிறேன். என் வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2715. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி, அனுமதி கேட்டபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2716. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:
துறவறம் மேற்கொள்ள உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டிருந்தால், (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக்கொண்டிருப்போம்.
அத்தியாயம் : 16
2717. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள விரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். அவருக்கு (மட்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால், (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக்கொண்டிருப்போம்.
அத்தியாயம் : 16
பாடம் : 2 ஒரு பெண்ணைப் பார்த்த ஒருவருக்குத் தவறான எண்ணம் ஏற்பட்டால், உடனே அவர் தம் மனைவியிடமோ அடிமைப் பெண்ணிடமோ சென்று தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வது நல்லது.
2718. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். (இது போன்ற சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் அதில், "நபியவர்கள் உடனே தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார்" என்று காணப்படுகிறது. ("தமக்குரிய" எனும் குறிப்பு இல்லை.) அத்துடன், "அவள் ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 16
2719. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து, அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால், உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில், அது அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 3 தவணை முறைத் திருமணம் (இஸ்லாத் தின் ஆரம்பத்தில்) அனுமதிக்கப்பட்டு, பின்னர் காலாவதியாக்கப்பட்டது. பின்னர் (மீண்டும்) அனுமதிக்கப்பட்டு, (மறுபடியும்) காலாவதியாகப்பட்டது. (இறுதியாக) அதற்கு விதிக்கப்பட்ட தடை மறுமை நாள்வரை நீடிக்கும்.
2720. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்உத் (ரலி) அவர்கள் "எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஓர் அறப்போரில் கலந்துகொண்டிருந்தோம். நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) "நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மணக்கொடையாக)க் கொடுத்துப் பெண்களை ஒரு குறிப்பிட்ட காலம்வரை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்" என்று கூறிவிட்டுப் பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிடாதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" (5:87) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "பிறகு அவர்கள் எங்களுக்கு இந்த (5:87ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்" என இடம்பெற்றுள்ளது. "பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்" என இடம்பெற வில்லை.
அத்தியாயம் : 16
2721. மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் இளைஞர்களாயிருந்தோம். (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?" என்று கேட்டோம்" என இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம்" எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 16
2722. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) மற்றும் சலமா பின் அல்அக்வஉ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
(நாங்கள் "ஹுனைன்" அல்லது "அவ்தாஸ்" போரில் இருந்தபோது) எங்களிடம் அல்லாஹ்வின் தூதருடைய அறிவிப்பாளர் ஒருவர் வந்து, "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்து கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு (தாற்காலிகமாக) அனுமதியளித்துள்ளார்கள் என்று அறிவிப்புச் செய்தார்.
அத்தியாயம் : 16
2723. சலமா பின் அல்அக்வஉ (ரலி) மற்றும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து "அல்முத்ஆ" (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள எங்களுக்கு (தாற்காலிகமாக) அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 16
2724. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் உம்ராவிற்காக வந்தபோது, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம். அவர்களிடம் மக்கள் பல விஷயங்களைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். பிறகு அவர்களிடம் "அல்முத்ஆ" (தவணைமுறைத் திருமணம்) பற்றியும் பேசினர். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள், "ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் "அல்முத்ஆ" (தவணை முறைத் திருமணம்) செய்துள்ளோம்" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2725. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்திலும் ஒரு கையளவுப் பேரீச்சம் பழம் மற்றும் மாவு ஆகியவற்றைக் கொடுத்து, சில நாட்களுக்காக நாங்கள் "அல்முத்ஆ" (தவணைமுறைத் திருமணம்) செய்துவந்தோம். உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான விஷயத்தில் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 16
2726. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களும் ("தமத்துஉ" வகை ஹஜ் மற்றும் தவணைமுறைத் திருமணம் ஆகிய) இரு "முத்ஆ"க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டனர்" என்று கூறினார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யலாகாதென எங்களுக்குத் தடைவிதித்தார்கள். எனவே, நாங்கள் அவ் விரண்டையும் திரும்பச் செய்வதில்லை" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 16
2727. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்தாஸ்" போர் ஆண்டில் மூன்று நாட்களுக்கு "அல்முத்ஆ" (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். பின்னர் அதற்குத் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 16
2728. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது) எங்களுக்கு "அல்முத்ஆ" (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். நானும் மற்றொரு மனிதரும் "பனூ ஆமிர்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம். அவள் கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்களில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவளிடம் நாங்கள் கோரினோம். அவள், "(மணக்கொடையாக) நீங்கள் என்ன கொடுப்பீர்கள்?" என்று கேட்டாள். நான், "எனது மேலாடையை" என்றேன். என்னுடன் வந்திருந்தவர் "எனது மேலாடையை" என்று கூறினார். என்னுடன் வந்திருந்தவரின் மேலாடை எனது மேலாடையைவிடத் தரமானதாக இருந்தது. ஆனால், நான் அவரைவிட (வயது குறைந்த) இளைஞனாயிருந்தேன். அவள் என்னுடன் வந்திருந்தவரின் மேலாடையைக் கூர்ந்து பார்த்தபோது, அது அவளுக்குப் பிடித்தது. அதே சமயத்தில், அவள் என்னைப் பார்த்த போது, நானும் அவளுக்குப் பிடித்திருந்தேன். பிறகு அவள், (என்னைப் பார்த்து) "நீரும் உமது மேலாடையுமே எனக்குப் போதும்" என்றாள். நான் (அவளை மணமுடித்து) அவளுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்முத்ஆ முறையில் மணமுடிக்கப்பட்ட பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அப்பெண்ணை அவளது வழியில் விட்டுவிடட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2729. ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (சப்ரா பின் மஅபத் -ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் மக்கா வெற்றிப்போரில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்காவில் பதினைந்து நாட்கள் (முப்பது இரவு - பகல்கள்) தங்கியிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ" (தவணைமுறைத் திருமணம்) செய்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த (என் தந்தையின் சகோரர் புதல்வர்) ஒருவரும் (பெண் தேடிப்) புறப்பட்டோம். நான் அவரைவிட அழகில் சிறந்தவனாக இருந்தேன். அவர் சுமாரான அழகுடையவராகவே இருந்தார்.
எங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு போர்வை இருந்தது. எனது போர்வை மிகப் பழையதாயிருந்தது. என் தந்தையின் சகோதரர் புதல்வரது போர்வை புதியதாகவும் மிருதுவாகவும் இருந்தது. நாங்கள் மக்காவிற்குக் "கீழ் புறத்தில்" அல்லது "மேற்புறத்தில்" இருந்தபோது, கழுத்து நீண்ட இளம் ஒட்டகத்தைப் போன்ற (அழகான) கன்னிப்பெண் ஒருத்தி எங்களைச் சந்தித்தாள். அவளிடம் நாங்கள், "எங்களில் ஒருவரை "அல்முத்ஆ" (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள இசைவு உண்டா?" எனக் கேட்டோம். அவள், "நீங்கள் இருவரும் (எனக்காக) என்ன செலவிடுவீர்கள்?" என்று கேட்டாள். எங்களில் ஒவ்வொருவரும் எங்களிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினோம். அவள் எங்கள் இருவரையும் கூர்ந்து நோக்கலானாள். என்னுடன் வந்திருந்தவர் அவளது ஒரு பக்கத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, "இவரது போர்வை பழையது; எனது போர்வை புதியது; மென்மையானது" என்று சொன்னார். உடனே அவள், "இவரது போர்வையே பரவாயில்லை (அதுவே போதும்)" என மூன்று முறை, அல்லது இரு முறை கூறினாள். பிறகு அவளை நான் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்துகொண்டேன். நான் (அங்கிருந்து) புறப்படவில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டார்கள்.
- மேற்கண்ட தகவல் சப்ரா அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நாங்கள் மக்கா வெற்றி ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அப்பெண் "அந்த மனிதர் (எனக்கு) ஒத்துவருவாரா?" என்று கேட்டதாகவும் இடம் பெற்றுள்ளது. என்னுடன் வந்திருந்தவர், "இவரது போர்வை இற்றுப்போன பழைய போர்வை எனக் கூறினார்" என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2730. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், "மக்களே! நான் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரைத் தடை விதித்துவிட்டான். எனவே, "அல்முத்ஆ" திருமணம் செய்த பெண்ணைத் தம்மிடம் வைத்திருப்பவர், அவளை அவளது வழியில் விட்டுவிடட்டும். அவளுக்கு நீங்கள் (மணக்கொடையாகக்) கொடுத்திருந்த எதையும் (திரும்ப) எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதுக்கும் கஅபாவின் தலைவாயிலுக்கும் நடுவில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 16
2731. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவிற்குள் நுழைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உத்தரவிட்டார்கள். பின்னர் மக்காவிலிருந்து புறப்படுவதற்குள் அதிலிருந்து எங்களைத் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 16
2732. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ளுமாறு தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நானும் பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவரும் புறப்பட்டுச் சென்று பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணைச் சந்தித்தோம். அவள் நீண்ட கழுத்துடைய இளம் ஒட்டகத்தைப் போன்று (அழகாக) இருந்தாள். எங்கள் இருவரிடம் இருந்த இரு போர்வைகளைக் காட்டி அவளை நாங்கள் பெண் கேட்டோம். அவள் (எங்களைக்) கூர்ந்து பார்த்தபோது, என் நண்பரைவிட நான் அழகனாக இருப்பதைக் கண்டாள். எனது போர்வையைவிட என் நண்பரின் போர்வை அழகானதாக இருந்ததையும் அவள் கண்டாள். சிறிது நேரம் அவள் மனத்திற்குள் யோசித்துவிட்டு, என் நண்பரை விடுத்து என்னை (கணவராக)த் தேர்ந்தெடுத்தாள்.
அவ்வாறு மணமுடிக்கப்பட்ட பெண்கள் எங்களுடன் மூன்று நாட்கள் இருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களைவிட்டுப் பிரிந்துவிடுமாறு கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 16
2733. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2734. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 16
2735. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் காலகட்டத்தில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணத்திற்குத் தடை விதித்தார்கள். நான் இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் முடித்திருந்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2736. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஒரு நாள்) மக்காவில் (சொற்பொழிவாற்ற) எழுந்து நின்று, "அல்லாஹ், மக்களில் சிலருடைய கண்களைக் குருடாக்கியதைப் போன்று அவர்களின் உள்ளங்களையும் குருடாக்கிவிட்டான்;அவர்கள் "அல்முத்ஆ" திருமணம் (தற்போதும்) செல்லும் எனத் தீர்ப்பளிக்கின்றனர்" என்று கூறி, ஒரு மனிதரைச் சாடையாக விமர்சித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை அந்த மனிதர் அழைத்து, "நீர் ஒரு விவரமற்ற முரடர்; என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) காலத்தில் "அல்முத்ஆ" திருமணம் நடைமுறையில் இருந்தது" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "(அது அப்போதே மாற்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து) உம்மை நீர் பக்குவப்படுத்திக்கொள்வீராக! (இந்த விவரம் தெரிந்த பின்பும்) அவ்வாறு நீர்("அல்முத்ஆ" திருமணம்) செய்தால், (அது விபசாரக் குற்றம் என்பதால்) உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னிடம் காலித் பின் அல்முஹாஜிர் பின் சைஃபில்லாஹ் (ரஹ்) அவர்கள், "நான் ஒரு மனிதருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒருவர் வந்து "அல் முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அந்த மனிதர் அதற்கு அனுமதியளித்தார். அப்போது (தீர்ப்பளித்த) அந்த மனிதரிடம் இப்னு அபீஅம்ரா அல்அன்சாரி (ரலி) அவர்கள், "நிதானி(த்துத் தீர்ப்பளி)ப்பீராக!" என்றார்கள். அதற்கு அவர், "அவ்வாறில்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (நபி (ஸல்) அவர்களது) காலத்தில் அது ("அல்முத்ஆ" திருமணம்) நடைபெற்றது" என்று கூறினார்.
அதற்கு இப்னு அபீஅம்ரா (ரலி) அவர்கள், "அல்முத்ஆ (தவணை முறைத்) திருமணம், இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவருக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டதைப் போன்று அனுமதிக்கப்பட்டிருந்தது.பிறகு அல்லாஹ் இந்த மார்க்கத்தை உறுதியாக்கியதும் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டான்" என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களுடைய புதல்வர் ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:
நான் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்திருந்தேன். பின்னர், "அல்முத்ஆ" திருமணம் செய்யலாகாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள்.
தொடர்ந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது நான் அங்கு அமர்ந்திருந்தேன்.
அத்தியாயம் : 16
2737. சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்யலாகாதெனத் தடை செய்தார்கள். "அறிந்துகொள்ளுங்கள். இன்றைய நாளிலிருந்து மறுமை நாள்வரை அதற்குத் தடை விதிக்கப்பெறுகிறது. ஒருவர் (ஏற்கெனவே "அல்முத்ஆ" முறையில் மணமுடிக்கும்போது அப்பெண்களிடம்) எதையேனும் கொடுத்திருந்தால், அதை அவர் (திரும்பப்) பெற வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2738. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர்நாளில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிப்பதற்கும் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இன்ன மனிதரிடம் "நீர் ஒரு நிலைகெட்ட மனிதர்..." என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2739. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கைபர் போர்நாளில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணத்திற்கும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2740. முஹம்மத் பின் அலீ பின் அபீதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் தொடர்பாக மென்மையான தீர்ப்பு வழங்குவதைச் செவியுற்ற (என் தந்தை) அலீ (ரலி) அவர்கள், "இப்னு அப்பாஸே! நிதானம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் போர்நாளில் அதற்கும் ("அல்முத்ஆ"), நாட்டுக்கழுதையின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித்துவிட்டார்கள்" என்றார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2741. முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் போர்நாளில் "அல்முத்ஆ" (தவணைமுறைத்) திருமணத்திற் கும், நாட்டுக் கழுதையின் இறைச்சியைப் புசிப்பதற்கும் தடை விதித்தார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 4 ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (அத்தை), அல்லது ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (காலா) சேர்த்து மண முடிப்பதற்கு வந்துள்ள தடை.
2742. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2743. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பின்வரும்) நான்கு பெண்களை ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாதெனத் தடை விதித்தார்கள். ஒரு பெண்ணும் அவளுடைய தந்தையின் சகோதரியும், ஒரு பெண்ணும் அவளுடைய தாயின் சகோதரியுமே அந்த நால்வர்.
அத்தியாயம் : 16
2744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய சகோதரனின் மகளையும் ஒருசேர மணக்கலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய சகோதரியின் மகளையும் ஒருசேர மணக்கலாகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2745. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மனைவியராக்கிக் கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இதை வைத்து, ஒரு பெண்ணின் தந்தையின் சகோதரியையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒரே தரத்திலேயே நாங்கள் கருதுகிறோம்.
அத்தியாயம் : 16
2746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணக்கலாகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2747. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண்ணை, தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது, எவரும் (இடையில் குறுக்கிட்டுத்) தமக்காகப் பெண் பேசலாகாது. ஒருவர், தம் சகோதர (இஸ்லாமிய)ன் (ஒரு பொருளுக்கு) விலை பேசிக் கொண்டிருக்கும்போது, (அதைவிட அதிகம் தருவதாக) விலை பேசலாகாது. ஒருவர் ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணக்கலாகாது. ஒரு பெண் தன் (இஸ்லாமிய) சகோதரியின் பாத்திரத்தைக் கவிழ்த்து(விட்டு அதைத் தனதாக்கி)க்கொள்ளும் பொருட்டு அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தாம் மணக்கப் போகின்றவரிடம்) கோரலாகாது. அவள், (முதல் மனைவி இருக்கவே) மணந்துகொள்ளட்டும். ஏனெனில், இவளுக்காக அல்லாஹ் விதித்துள்ளது நிச்சயம் இவளுக்குக் கிடைக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மணமுடிப்பதற்கும், (ஒரு பெண்) தன் (இஸ்லாமிய) சகோதரியின் (வாழ்க்கைப்) பாத்திரத்தைக் கவிழ்த்து (அதைத் தனதாக்கி)விடுவதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தாம் மணக்கப்போகின்றவரிடம்) கோருவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஏனெனில், வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இவளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் ஆவான்.
அத்தியாயம் : 16
2749. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியாக்கிக் கொள்வதற்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 5 இஹ்ராம் கட்டியிருப்பவர் திருமணம் செய்வதற்கு வந்துள்ள தடையும், அவர் பெண் கேட்பது வெறுக்கத்தக்கதாகும் என்பதும்.
2750. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள் (தம்முடைய புதல்வர்) தல்ஹா பின் உமருக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். எனவே, (அவ்வாண்டு) ஹாஜிகளின் தலைவராயிருந்த அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்களி டம் ஆளனுப்பி (அத்திருமணத்திற்கு) வருமாறு கூறினார்.
அப்போது அபான் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக்கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது" என்று கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.
அத்தியாயம் : 16
2751. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள், தம் மகனுக்கு ஷைபான் பின் (ஜுபைர் பின்) உஸ்மான் (ரஹ்) அவர்களின் மகளைப் பெண் கேட்டுக்கொண்டிருந்தார். எனவே, அப்போது ஹஜ் காலத்தில் இருந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் என்னை அனுப்பி (அத்திருமணத்திற்குச் சாட்சியாக இருந்து நடத்திவைக்க வருமாறு கோரி)னார்கள்.
அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், "அவரை நான் ஒரு (விவரமற்ற) கிராமவாசியாகவே கருதுகிறேன். நிச்சயமாக இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது" என்று சொன்னார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள் என்றும் கூறி (மறுத்து)விட்டார்கள்.
அத்தியாயம் : 16
2752. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2753. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஹ்ராம் கட்டியவர் மணமுடிக்கவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2754. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள், ஒரு ஹஜ்ஜின்போது தம்முடைய புதல்வர் தல்ஹாவுக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்ய விரும்பினார். அப்போது ஹாஜிகளின் தலைவராக அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். எனவே, உமர் பின் உபைதில்லாஹ், "நான் (என் மகன்) தல்ஹா பின் உமருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று கூறி அபான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். அப்போது அபான் (ரஹ்) அவர்கள், "உம்மை நான் ஒரு முரட்டு இராக்கியராகவே கருதுகிறேன். "இஹ்ராம் கட்டியவர் மணமுடிக்கக் கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.
அத்தியாயம் : 16
2755. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
இந்த ஹதீஸை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே திருமணம் செய்தார்கள்" என யஸீத் பின் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்றார்கள்.
அத்தியாயம் : 16
2756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்தார்கள்.
அத்தியாயம் : 16
2757. மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே என்னைத் திருமணம் செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மைமூனா (ரலி) அவர்கள் என் தாயின் சகோதரியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியும் ஆவார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 6 தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண் கேட்கலாகாது. ஒன்று முதலில் பெண் கேட்டவர் இவருக்கு அனுமதியளிக்கும் வரை, அல்லது அதைக் கைவிடும்வரை இவர் பொறுத்திருக்க வேண்டும்.
2758. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வியாபாரம் செய்யும்போது, மற்றவர் (தலையிட்டு) வியாபாரம் செய்ய வேண்டாம். உங்களில் ஒருவர் பெண் பேசும்போது, மற்றவர் (குறுக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2759. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் போது (தலையிட்டுத் தமக்காக) வியாபாரம் செய்ய வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காகப் பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2760. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமத்திலிருந்து (விற்பனைச்சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும், அல்லது வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது (இடைமறித்துத்) தமக்காகப் பெண் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது (தலையிட்டு) விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தன் சகோதரி (சக்களத்தி)யின் (வாழ்க்கைப்) பாத்திரத்திலுள்ளதைக் கொட்டி (அதைத் தனதாக்கி) விடுவதற்காக ஒரு பெண் (தன் மணாளரிடம்) தம் சகோதரியை மணவிலக்குச் செய்யுமாறு கேட்கவேண்டாம் என்றும் (இவையனைத்திற்கும்) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அம்ருந் நாகித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "தம் சகோதர (இஸ்லாமிய)ன் விலை பேசிக்கொண்டிருக்கும்போது அதைவிட (அதிக விலை தருவதாகக் கூறி) விலை பேச வேண்டாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2761. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, (குறுக்கிட்டு) மற்றவர் வியாபாரம் செய்ய வேண்டாம். கிராமத்திலிருந்து (விற்பனைச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (இடையில் குறிக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம். ஒரு பெண் தன் சக்களத்தியின் பாத்திரத்திலுள்ளதைக் கொட்டிக் கவிழ்ப்பதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தம் மணாளரிடம்) கேட்க வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2762. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது,எவரும் (குறுக்கிட்டு விலையை) அதிகமாக்கி விடவேண்டாம்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் சகோதர முஸ்லிம் விலை பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டு அதை விட அதிக விலை தருவதாக) விலை பேச வேண்டாம். (இதைப் போன்றே) அவர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துப்) பெண் பேசவேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2764. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தம் சகோதர (இஸ்லாமிய)னின் விலைமீது விலை பேச வேண்டாம்; அவன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது பெண் பேசவேண்டாம்" என (சிறிய வேறுபாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2765. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது தாம் (குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய ஓர் இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி இல்லை. தம் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துத் தமக்காக) அவர் பெண் பேசமாட்டார். சகோதரர் அதைக் கைவிடும்வரை (பொறுத்திருப்பார்).
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 7 மணக்கொடையின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் திருமணத்திற்கு ("ஷிஃகார்") வந்துள்ள தடையும் அத்திருமணம் செல்லாது என்பதும்.
2766. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஷிஃகார்" முறைத்திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.
ஒருவர் மற்றொருவரிடம் "நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே "ஷிஃகார்" எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் "மஹ்ர்" (மணக்கொடை) இராது.
அத்தியாயம் : 16
2767. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் "ஷிஃகார்" என்றால் என்ன? என்று கேட்டேன்" (அதற்குத்தான் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு விளக்கம் கூறினார்கள்) என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2768. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப்பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 16
2769. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப் பெண் எடுத்தல் ("ஷிஃகார்") இஸ்லாத்தில் இல்லை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2770. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் மற்றொருவரிடம் நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்றோ, அல்லது "நான் என் சகோதரியை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் சகோதரியை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்றோ (முன் நிபந்தனையிட்டுக்) கூறுவதே "ஷிஃகார்" ஆகும்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது கூடுதலான தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 16
2771. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப்பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 8 திருமண (ஒப்பந்த)த்தின்(போது பேசப்பட்ட) நிபந்தனைகளை நிறைவேற்றல்.
2772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 9 கன்னி கழிந்த பெண்ணின் சம்மதத்தைத் திருமணத்தின்போது வாய் மொழியாகப் பெற வேண்டும்; கன்னிப் பெண்ணின் மௌனம் சம்மதமே.
2773. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறப்படாமல் மண முடித்துக்கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக்கொடுக்க வேண்டாம்" என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண்ணின் அனுமதி(யை) எப்படி(ப் பெறுவது)? (அவள் வெட்கப்படக்கூடுமே?)" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் மௌனமாக இருப்பதே (அவளது சம்மதமாகும்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹிஷாம் பின் அபீஅப்தில் லாஹ் (ரஹ்), ஷைபான் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்), முஆவியா பின் சல்லாம் (ரஹ்) ஆகியோரின் வாசகங்கள் ஒன்று போல அமைந்துள்ளன.
அத்தியாயம் : 16
2774. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "ஒரு கன்னிப் பெண்ணை அவளுடைய வீட்டார் மணமுடித்துக்கொடுக்கும் போது அவளிடம் அனுமதி பெற வேண்டுமா, இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அவளிடம் அனுமதி பெற வேண்டும்" என்றார்கள். நான், "அவ்வாறாயின், அவள் வெட்கப்படுவாளே?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் மௌனமாக இருந்தால், அதுவே அவளது சம்மதம்தான்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2775. யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர் களிடம், "விதவை, தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடமோ, அவள் விஷயத்தில் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனமே சம்மதமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்க, அவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் அல்ஃபள்ல் (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2776. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கன்னி கழிந்த பெண், தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2777. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "கன்னி கழிந்த பெண், தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடம் அவளுடைய தந்தை அவள் தொடர்பாக அனுமதி பெற வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும்" என்று இடம் பெற்றுள்ளது. அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில சந்தர்ப்பங்களில் "அவளது மௌனம் அவளது இசைவாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 10 இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல்.
2778. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
அதாவது நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு (என் தலை முடி உதிர்ந்து)விட்டது. பின்னர் என் தலைமுடி பிடரிவரை வளர்ந்தது. நான் என் தோழியர் சிலருடன் ஏற்றப் பலகையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, (என் தாயார்) உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் என்னை எதற்காக அழைத்தார் என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் எனது கையைப் பிடித்துக் கொண்டுவந்து, கதவுக்கருகில் என்னை நிறுத்தினார். (அவர் வேகமாக இழுத்துவந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது.) ஆஹ்... ஆஹ்... என்றேன். பின்னர் மூச்சிறைப்பு நின்றதும் என்னை (எனது) அறைக்குள் அனுப்பினார். அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள், "நன்மையுடனும் வளத்துடனும் வருக! (இறைவனின்) நற்பேறு உண்டாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினர். என் தாயார் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் எனது தலையைக் கழுவி என்னை அலங்கரித்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் திடீரென என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2779. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2780. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள்.
அத்தியாயம் : 16
2781. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னைவிட்டு இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 11 ஷவ்வால் மாதத்தில் மணமுடிப்பதும் மணமுடித்துவைப்பதும் தாம்பத்திய உறவைத் தொடங்குவதும் விரும்பத்தக்கவையாகும்.
2782. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் (குடும்பப்) பெண்களை ஷவ்வால் மாதம் (மணமுடித்து) அனுப்பிவைப்பதையே விரும்புவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ஆயிஷா (ரலி) அவர்களின் செயல் குறித்த (இறுதிக்) குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 16
பாடம் : 12 ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.
2783. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்ளும்! ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உண்டு" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 16
2784. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போகிறேன்" என்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா? ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை)உள்ளது"என்றார்கள். அதற்கு அந்த மனிதர், "அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்" என்றார். "எவ்வளவு மணக்கொடையில் (மஹ்ர்) அவளை மணக்கப்போகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான்கு ஊக்கியாக்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "(ஓ!) நான்கு ஊக்கியாக்களா? வெள்ளியை நீங்கள் இந்த மலைப்பகுதியிலிருந்து குடைந்தெடுக்கிறீர்கள் போலும். உமக்கு (உதவித் தொகையாக)க் கொடுப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை. ஆயினும், நாம் உம்மை ஒரு படைப்பிரிவுக்கு அனுப்புவோம். அப்போது, நீர் போர்ச் செல்வத்திலிருந்து அதைப் பெற்றுக்கொள்ளக்கூடும்" என்றார்கள்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் "பனூ அப்ஸ்" குலத்தாரை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பியபோது அவர்களுடன் அந்த மனிதரையும் அனுப்பிவைத்தார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 13 மணக்கொடையும், அது குர்ஆனைக் கற்பித்தலாகவோ இரும்பு மோதிரமாகவோ அளவில் குறைந்ததாகவோ கூடியதாகவோ இருக்கலாம் என்பதும்; சக்திக்கு மீறாதிருப்பின் ஐநூறு திர்ஹங்கள் கொடுப்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
2785. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ளுமாறு கோரி) வந்துள்ளேன்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்" என்றார்கள். அவர் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். "இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது; அதில் பாதி அவளுக்கு" என்று சொன்னார்.
-அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டு கூட இல்லை. (அதனால்தான் தனது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.)-
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது (ஒரு) வேட்டியை வைத்துக் கொண்டு நீர் என்ன செய்வீர்? இந்த வேட்டியை நீர் அணிந்துகொண்டால், அவள்மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்துகொண்டால், உம்மீது ஏதும் இருக்காது" என்றார்கள்,
பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச்செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது, அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் அழைக்கப்பட்டார். அவர் வந்தபோது, "உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?" என்று கேட்டார்கள். அவர், "இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளது" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2786. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சில அறிவிப்பாளர்கள் வேறு சிலரைவிடக் கூடுதலாக அறிவித்துள்ளனர். ஆயினும், ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் சென்று அவளுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பீராக!" என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2787. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியருக்குக்) கொடுத்த மணக்கொடை (மஹ்ர்) எவ்வளவு?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடை, பன்னிரண்டு ஊக்கியாவும் ஒரு நஷ்ஷுமாகும்" என்று கூறிவிட்டு, "நஷ்ஷு என்றால் என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அவர்கள், "அரை ஊக்கியாவாகும்; (ஆகமொத்தம்) அது ஐநூறு திர்ஹங்கள் ஆகும். இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடையாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2788. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (ஆடையின்) மீது மஞ்சள் நிற(முள்ள வாசனைத் திரவிய)த்தின் அடையாளத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இது என்ன?" என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மணக்கொடையாக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டேன்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "பாரக்கல்லாஹு லக்க" (அல்லாஹ் உங்களுக்கு வளத்தை வழங்குவானாக) என்று (வாழ்த்துக்) கூறிவிட்டு, "ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2789. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு போரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மணக்கொடையாக)க் கொடுத்து (ஒரு பெண்ணை) மணமுடித்துக் கொண்டார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 16
2790. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மணக்கொடையாக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "ஓர் ஆட்டையாவது (அறுத்து)மண விருந்து (வலீமா) அளியுங்கள்" என்று சொன் னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் ஒரு பெண்ணை மண முடித்துக்கொண்டேன்" என அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2791. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் திருமணத்தின் மகிழ்ச்சி (ரேகை)யைக் கண்டார்கள். அப்போது நான், "ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்" என்றேன். அவர்கள், "அவளுக்கு எவ்வளவு மஹ்ர் கொடுத்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான் "ஒரு பேரீச்சங்கொட்டை (எடையளவு)" என்றேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒரு பேரீச்சங்கொட்டை(யின் எடையளவு) தங்கத்தை" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2792. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மணக்கொடையாக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவர் "தங்கத்தில் (ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவை மணக் கொடையாகக் கொடுத்தார்கள்)" என்று கூறினார் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 14 ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக் கொள்வதன் சிறப்பு.
2793. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ ஏழாவது ஆண்டு) கைபர்மீது போர் தொடுத்தார்கள். அப்போது கைபருக்கு அருகில் (ஓரிடத்தில்) நாங்கள் (இறுதி இரவின்) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி) அவர்களும் வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். நான் அபூதல்ஹா அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் சாலையில் (தமது வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முழங்கால், (அருகில் சென்றுகொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வேட்டி தொடையிலிருந்து விலகியது; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன்.
அந்த (கைபர்) ஊருக்குள் அவர்கள் பிரவேசித்தபோது, "அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்); கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகவே அமையும்" என்று மூன்று முறை கூறினார்கள். (அந்த ஊர்) மக்கள் தங்கள் அலுவல்களுக்காகப் புறப்பட்டு வந்தபோது (எங்களைக் கண்டதும்), "அல்லாஹ்வின் மீதாணையாக, முஹம்மத் (வந்துவிட்டார்)"என்று கூறினர்.
- (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எம்முடைய நண்பர்களில் சிலர் "முஹம்மதும் (அவரது) ஐந்து அணிகள் கொண்ட படையும் (வந்துவிட்டனர்) என்று அந்த மக்கள் கூறினர்"என அறிவித்தனர்.-
பிறகு தாக்குதல் மூலம் கைபரை நாங்கள் கைப்பற்றினோம். (போருக்குப் பின்) போர்க் கைதிகள் திரட்டப்பட்டபோது, திஹ்யா (அல்கல்பீ-ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்கு (போர்ச் செல்வமாக)த் தாருங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள். திஹ்யா (ரலி) அவர்கள், (கணவனை இழந்திருந்த) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கிவிட்டீர்களே! ஸஃபிய்யா, உங்களுக்குத் தவிர வேறெவருக்கும் பொருத்தமாகமாட்டார்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திஹ்யாவையும் அப்பெண்ணையும் அழைத்துவாருங்கள்" என்றார்கள். ஸஃபிய்யாவுடன் திஹ்யா (ரலி) அவர்கள் வந்தார்கள். ஸஃபிய்யாவைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திஹ்யா (ரலி) அவர்களிடம்), "கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள்.
-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அனஸ் (ரலி) அவர்களிடம் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள், "அபூ ஹம்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மணக்கொடையாக (மஹ்ர்) என்ன கொடுத்தார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அவரையே மணக்கொடையாக ஆக்கினார்கள்; (அதாவது) அவரை விடுதலை செய்து (அதையே மணக்கொடையாக ஆக்கி) அவரை மணந்துகொண்டார்கள்" என்று பதிலளித்தார்கள்.-
பிறகு, நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் ("சத்துஸ் ஸஹ்பா" எனுமிடத் தில்) இருந்தபோது, (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (அலங்கரித்துத்) தயார்படுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார்கள். காலையில் புது மாப்பிள்ளையாக இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம்மிடம் ஏதேனும் (உணவுப் பொருட்கள்) வைத்திருப்பவர், அதை (நம்மிடம்) கொண்டுவாருங்கள்" என்று கூறி, தோல் விரிப்பொன்றையும் விரித்தார்கள். அப்போது (அங்கிருந்தவர்களில்) ஒருவர் பாலாடைக் கட்டியைக் கொண்டுவரலானார்; மற்றொருவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வரலானார்; இன்னொருவர் நெய்யைக் கொண்டுவரலானார். அவற்றை ஒன்றாகக் கலந்து "ஹைஸ்" எனும் ஒரு வகைப் பலகாரத்தைத் தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த மணவிருந்தாக (வலீமா) அமைந்தது.
அத்தியாயம் : 16
2794. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினோரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் (போர்க் கைதியான) ஸஃபிய்யாவை விடுதலை (செய்து திருமணம்) செய்தார்கள்; மேலும்,அவரது விடுதலையையே மணக்கொடையாக (மஹ்ர்) ஆக்கினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
ஹிஷாம் பின் அபீஅப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்; அவரது விடுதலையையே மஹ்ராக ஆக்கினார்கள்" என்று இடம்பெற் றுள்ளது.
அத்தியாயம் : 16
2795. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தம்முடைய அடிமைப் பெண்ணை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்து, தாமே அவளை மணந்துகொண்ட ஒருவருக்கு இரட்டை நன்மைகள் உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2796. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கைபர் போர் நாளில் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். எனது பாதம், (பக்கத்து ஒட்டகத்தில் பயணம் செய்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதத்தைத் தொட்டது. சூரியன் உதிக்கத் துவங்கிய நேரத்தில் நாங்கள் கைபர்வாசிகளிடம் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தம் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கோடரிகள்,பேரீச்சங்கூடைகள் மற்றும் மண்வெட்டிகளுடன் (தோட்டந்துரவுகளை நோக்கிப்) புறப்பட்டுவந்தனர். (எங்களைக் கண்டதும்) "முஹம்மதும் (அவருடைய) ஐந்து அணிகள் கொண்ட படையினரும் (வந்து விட்டனர்)" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் களத்தில் இறங்கிவிட்டோமாயின் எச்சரிக்கப்பட்ட அம்மக்களுக்கு அது கெட்ட காலையாகவே அமையும்" என்று கூறினார்கள்.
வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கைபர்வாசிகளைத் தோற்கடித்தான். (போர்ச் செல்வங்களில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களது பங்கில் ஓர் அழகிய இளம் பெண் போய்ச்சேர்ந்தார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு அடிமைகளைக் கொடுத்து அப்பெண்ணை (திஹ்யா (ரலி) அவர்களிடமிருந்து) வாங்கிக்கொண்டார்கள். பிறகு அப்பெண்ணை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து, தமக்காக அலங்காரமும் ஆயத்தமும் செய்யவைத்தார்கள்.
-அறிவிப்பாளர் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், "உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்திலேயே அப்பெண்ணைக் காத்திருப்புக் காலத்தில் (இத்தா) தங்கவைத்(துப் பரிசோதித்)தார்கள்" என்று கூறினார்கள் என நான் கருதுகிறேன்.-
ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களே அப்பெண் ஆவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை(க் கலந்து தயாரித்த "ஹைஸ்" எனும் பலகாரத்தை)யே மணவிருந்தாக (வலீமா) ஆக்கினார்கள். (முன்னதாக) பூமியில் நன்கு மண்ணைப் பறித்து (குழியாக்கி), தோல் விரிப்பொன்று கொண்டு வரப்பட்டு, அதனுள் அவ்விரிப்பு (விரித்து) வைக்கப்பட்டது. பாலாடைக் கட்டியும் நெய்யும் கொண்டுவரப்(பட்டு, அதில் கொட்டப்)பட்டது. மக்கள் அதிலிருந்து எடுத்து வயிராற உண்டனர். மக்கள், "அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணந்து மனைவியாக்கிக்கொண்டார்களா, அல்லது குழந்தை பெற்றுத்தரும் அடிமைப் பெண்ணாக (உம்முல் வலத்) ஆக்கிக்கொண்டார்களா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பர்தா இட்டு மறைத்தால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆவார்; பர்தா இட்டு மறைக்காவிட்டால், அவர் அடிமைப் பெண் (உம்முல் வலத்) ஆவார்" என்று பேசிக்கொண்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் புறப்பட நாடியபோது, அவருக்குத் திரையிட்டு மறைத்தார்கள். அவர் ஒட்டகத்தின் கடைக்கோடியில் அமர்ந்திருந்தார். அப்போது மக்கள் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்தாம் என்று அறிந்துகொண்டனர். அவர்கள் மதீனா நெருங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள்; நாங்களும் (எங்கள் வாகனங்களை) விரைவாகச் செலுத்தினோம். அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) "அல்அள்பா" எனும் அந்த ஒட்டகத்திற்குக் கால் இடறியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒட்டகத்திலிருந்து) விழுந்துவிட்டார்கள்; ஸஃபிய்யா (ரலி) அவர்களும் விழுந்துவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். அப்போது பெண்கள் எட்டிப் பார்த்து, "அந்த யூதப் பெண்ணை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்துவானாக!" என்று கூறினர்.
அறிவிப்பாளர் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (அனஸ் (ரலி) அவர்களிடம்), "அபூ ஹம்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழுந்துவிட்டார்களா?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழுந்து விட்டார்கள்" என விடையளித்தார்கள். தொடர்ந்து அனஸ் (ரலி) அவர் கள் கூறினார்கள்:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் (ரலி) அவர்களின் மணவிருந்திலும் (வலீமா) நான் கலந்துகொண்டேன். அவ்விருந்தில் ரொட்டியையும் இறைச்சியையும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். (முன்னதாக) மக்களை அழைப்பதற்காக என்னை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். (விருந்து) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து செல்ல நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். இரண்டு மனிதர்கள் எழுந்து செல்லாமல் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (மற்ற) துணைவியரிடம் சென்று, அவர்களில் ஒவ்வொருவருக்கும் "சலாமுன் அலைக்கும்" என முகமன் சொல்லிவிட்டு, "வீட்டாரே! எப்படி இருக்கிறீர்கள்?" என (குசலம்) விசாரிக்கலானார்கள். அதற்கு அவர்கள் "நலமுடன் உள்ளோம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் (புதிய) துணைவி எப்படி?"என்று கேட்கலாயினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்று" என்றார்கள்.
பேசி முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் செல்ல, அவர்களுடன் நானும் திரும்பினேன். (புது மணப்பெண் தங்கியிருந்த வீட்டின்) வாசலை அடைந்ததும், அப்போதும் அவ்விருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் செல்வதைக் கண்ட அவ்விருவரும் எழுந்து வெளியேறிவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த இருவரும் வெளியேறிவிட்டார்கள் என்று "நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா" அல்லது "இறையறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டதா" என்று எனக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புது மணப்பெண்ணிருந்த வீட்டுக்குத்) திரும்பி வந்தார்கள். அவர்களுடன் நானும் திரும்பிவந்தேன். அவர்கள் தமது காலை வாசற்படியில் வைத்ததும் எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். உயர்ந்தோன் அல்லாஹ், "நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உணவுண்ணச் செல்லாதீர்கள்..." எனும் இந்த (33:53ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 16
2797. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போருக்குப் பின்) திஹ்யா அல் கல்பீ (ரலி) அவர்களது (போர்ச் செல்வத்தின்) பங்கில் ஸஃபிய்யா அவர்கள் போய்ச்சேர்ந்தார்கள். மக்கள் ஸஃபிய்யா அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாராட்டிப் பேசினர். "கைதிகளில் அவரைப் போன்று (அழகான) வேறெவரையும் நாங்கள் பார்க்கவில்லை" என்று (கூறி, அவரை மணந்துகொள்ளுமாறு) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி (அவர்களை வர வழைத்து) ஸஃபிய்யாவுக்குப் பகரமாக திஹ்யா (ரலி) அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா அவர்களை என் தாயாரிடம் ஒப்படைத்து, "இவரை அலங்காரம் செய்க" என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து (மதீனா நோக்கிப்) புறப்பட்டார்கள். கைபரைக் கடந்துவந்ததும் (ஓரிடத்தில்) இறங்கி, ஸஃபிய்யாவுக்காகக் கூடாரம் அமைத்தார்கள். (அங்கு இரவில் தங்கினார்கள்.) விடிந்ததும், "உணவுப் பொருட்களில் ஏதேனும் எஞ்சியவற்றை வைத்திருப்பவர், அவற்றை நம்மிடம் கொண்டு வரவும்" என்றார்கள்.
அப்போது ஒரு மனிதர் தமது தேவைபோக எஞ்சிய பேரீச்சம் பழங்களையும் மாவையும் கொண்டுவந்தார். (மற்றவர்கள் அவரவரிடமிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தனர்.) அதில் "ஹைஸ்" பலகாரத்தின் ஒரு குவியலையே உருவாக்கி,அதிலிருந்து உண்ணத் தொடங்கினர். பிறகு அவர்களுக்கு அருகிலிருந்த மழை நீர் குட்டையிலிருந்து தண்ணீர் அருந்தினர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக அளித்த மண விருந்தாக (வலீமா) அமைந்தது.
பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்து, மதீனாவின் சுவர்களைக் கண்டதும் அதற்காக நாங்கள் குதூகலித்தோம். நாங்கள் எங்கள் வாகனத்தை விரைவாகச் செலுத்தினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள். அப்போது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார்கள். தமக்குப் பின்னால் (இருக்கையமைத்து) அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமரவைத்திருந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகம் கால் இடறி விழுந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டனர். மக்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையோ ஸஃபிய்யா (ரலி) அவர்களையோ பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாமே எழுந்து,ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நமக்கு எந்தப் பாதிப்பும் நேரவில்லை" என்றார்கள். பின்னர் நாங்கள் மதீனாவுக்குள் நுழைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இளம் துணைவியர் புதுமணப்பெண்ணைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தனர். அவர் கீழே விழுந்ததைக் குறித்து அகமகிழ்ந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 15 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் திருமணமும், பர்தா பற்றிய வசனம் அருளப்பெற்றதும், மணாளர் மணவிருந்து (வலீமா) அளிப்பதற்கான சான்றும்.
2798. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், "ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு" என்றார்கள். எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.
ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(த் தாம் மணந்துகொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம்.
எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, "ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பிவைத்துள்ளார்கள்" என்றேன். அதற்கு அவர், "நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை" என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார்.
அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது. (அதில், "(நபியே! ஸைத், தம் மனைவியான ஸைனபை விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், உமக்கு நாம் அவரை மணமுடித்து வைத்தோம் என்று அல்லாஹ் அறிவித்தான்.) அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அனுமதி பெறாமலேயே ஸைனபின் இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் வேளையில் எங்களுக்கு ரொட்டியும் இறைச்சியும் (மணவிருந்தாக) உண்ணக் கொடுத்தது எனக்கு நினைவில் உள்ளது.
அப்போது மக்கள் (விருந்து) உண்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். சிலர் மட்டும் உண்ட பின்பும் அவ்வீட்டிலேயே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியில் புறப்பட்டுச் சென்றார்கள். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் தம் துணைவியரின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறலானார்கள். அப்போது துணைவியர், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் (புது) மனைவியை எவ்வாறு கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். பிறகு மக்கள் (ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த) வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டனர் என்ற செய்தியை நான் அவர்களிடம் தெரிவித்தேனா,அல்லது அவர்கள் (வஹீ மூலம் அறிந்து) என்னிடம் தெரிவித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அந்த வீட்டிற்குச் சென்று நுழைந்தார்கள். அவர்களுடன் நானும் நுழையப்போனேன். அப்போது அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டு விட்டார்கள். அப்போது பர்தா பற்றிய இறைவசனமும் அருளப்பெற்று, மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அறிவுரை கிடைத்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றிருப்பதாவது: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து)இராதீர்கள்" என்று தொடங்கும் (33:53ஆவது) வசனமே பர்தா பற்றிய அந்த வசனமாகும்.
அத்தியாயம் : 16
2799. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்ட போது அளித்த மணவிருந்தைப் போன்று தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளித்ததை நான் பார்க்கவில்லை; ஏனெனில், (ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை அறுத்(து மணவிருந்தளித்)தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2800. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த மணவிருந்தைவிட "அதிகமாக" அல்லது "சிறப்பாக"த் தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் மணவிருந்தளிக்கவில்லை" என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், (அனஸ் (ரலி) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணவிருந்தாக என்ன அளித்தார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "மக்களுக்கு ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக்கொடுத்தார்கள்; (உண்ண முடியாமல்) மக்கள் அதை விட்டுச்சென்றனர்" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2801. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்தபோது மக்களை (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் எழுந்துபோகத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஆஸிம் (ரஹ்) மற்றும் இப்னு அப்தில் அஃலா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் கூடுதலாகப் பின்வரும் தகவல் இடம்பெற்றுள்ளது:
ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்)கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த வீட்டுக்குள்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் (மூவரும்) அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள்.
நான் சென்று, அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள். நானும் அவர்களுடன் உள்ளே நுழையப்போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள்.
அப்போதுதான் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைநம்பிக்கை கொண்டோரே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்" என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 16
2802. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணமுடித்திருந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை மணவிருந்துக்காக (வலீமா) அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறுசிலரும் அமர்ந்திருந்தனர். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (தம் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (விருந்து நடந்த வீட்டில்) அமர்ந்திருந்தவர்கள் வெளியேறியிருப்பர் எனக் கருதித் திரும்பிவந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போதும் அந்தச் சில பேர் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவிட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை அடைந்தார்கள். மீண்டும் (புதுமணப் பெண்ணிருந்த) வீட்டிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் நானும் திரும்பினேன். இப்போது அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டிருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையொன்றை இட்டார்கள். அப்போதுதான், அல்லாஹ் பர்தா(வின் சட்டத்தைக் கூறும்) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 16
2803. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்துத் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "ஹைஸ்" எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, "அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்" என்றார்கள்.
அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, "என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை" என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!" என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.
-இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்" என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
(தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு" என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்" என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.
அப்போது, "அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு" என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.
(எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு) மக்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் (ஸைனப் (ரலி) அவர்கள்) தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுத் தம்முடைய மற்றத் துணைவியரிடம் சென்று சலாம் (முகமன்) சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பி வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்ததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்துவிட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்துவந்து அனைவரும் வெளியேறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்துகொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்துகொண்டிருந்தேன். சிறிது நேரம்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53ஆவது) வசனம் அருளப்பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (அங்கு நடக்கும்) விருந்திற்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து)இராதீர்கள். மாறாக, (உணவு தயார்;வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது" என்பதே அந்த வசனமாகும்.
அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இந்த வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்தும்,நபி (ஸல்) அவர்களின் துணைவியர் பர்தாவில் இருந்தது குறித்தும் மக்களிலேயே நன்கறிந்தவன் நானே ஆவேன்" என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2804. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் "ஹைஸ்" எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். (அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)" என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.
நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இருக்க, நீண்ட நேரம் பேசிக்கொண்டே (அமர்ந்து) இருந்தனர். அவர்களிடம் (எழுந்து செல்லுமாறு) ஏதேனும் கூற நபி (ஸல்) அவர்கள் வெட்கப் பட்டார்கள். எனவே, அவர்களை நபியவர்கள் அப்படியே வீட்டில் விட்டுவிட்டு (தாம் மட்டும் எழுந்து) வெளியே சென்றார்கள். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்" என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அவரது பாத்திரத்தைப் பார்த்துக்கொண்டிராதீர்கள் (ஃகைர நாழிரீன இனாஹு)" என்பதன் பொருள், "உணவு தயாராவதை எதிர்பார்த்து இராதீர்கள்" என்பதாகும்.
அத்தியாயம் : 16
பாடம் : 16 விருந்துக்கான அழைப்பை ஏற்பது தொடர்பாக வந்துள்ள கட்டளை.
2805. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மணவிருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2806. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் விருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "வலீமா என்பது மணவிருந்தையே குறிக்கும் என உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2807. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மணவிருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2808. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2809. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரை விருந்துக்கு அழைத்தால், அதை ஏற்று அவர் செல்லட்டும். அது மணவிருந்தாக இருந்தாலும் சரி, மற்ற விருந்தாக இருந்தாலும் சரி.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2810. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மணவிருந்துக்கோ, மற்ற விருந்துக்கோ அழைக்கப்பட்டவர் அதை ஏற்றுச் செல்லட்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த (மண)விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (நஃபில் எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில்கூட மணவிருந்துக்கும் மற்ற விருந்துகளுக்கும் சென்றுவந்தார்கள்.
அத்தியாயம் : 16
2813. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்டுக்கால் விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2814. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ண அழைக்கப்பெற்றால், ஏற்றுக்கொள்ளட்டும்.(அங்கு சென்று) விரும்பினால் உண்ணட்டும். இல்லையேல் (உண்பதை) விட்டுவிடட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்"உணவு உண்ண" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2815. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால் ஏற்றுக்கொள்ளட்டும்.அவர் நோன்பு நோற்றிருந்தால் (அழைத்தவருக்காகப்) பிரார்த்திக்கட்டும்; நோன்பு நோற்காமலிருந்தால் உண்ணட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2816. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். (அழைப்பை ஏற்று) விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
அத்தியாயம் : 16
2817. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "அபூபக்ர் அவர்களே! செல்வர்களின் உணவே உணவுகளில் தீயதாகும்" எனும் இந்த ஹதீஸ் எப்படி (சரிதானா)? என்று கேட்டேன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்துவிட்டு, " "செல்வர்களின் உணவே உணவுகளில் மிகத் தீயதாகும்" என்றில்லை அந்த ஹதீஸ்" என்றார்கள்.
என் தந்தையும் செல்வராயிருந்ததால் அந்த ஹதீஸைக் கேட்டு நான் பதற்றமடைந்திருந்தேன். எனவே, ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் அந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அப்துர் ரஹ்மான் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் தம்மிடம் கூறினார்கள் என மேற்கண்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே (அதாவது எழைகளை விட்டுவிட்டு, செல்வர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து உணவே, கெட்ட உணவாகும் என்று) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 16
2818. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2819. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு, மறுப்பவர்கள் (செல்வர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 17 மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் வேறொரு கணவனை மணந்து, அவன் அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டு,பின்னர் அவனும் மணவிலக்குச் செய்து, அவளது காத்திருப்புக் காலம் (இத்தா) முடியாத வரை அவள் முதல் கணவனுக்கு (வாழ்க்கைப்பட) அனுமதிக்கப்படமாட்டாள்.
2820. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் ரிஃபாஆவிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, நான் (அவருக்குப் பிறகு) அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் அவர்களை மணமுடித்துக்கொண்டேன். அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது (இந்த முகத்திரைத்) துணியின் குஞ்சத்தைப் போன்றதுதான்" என்று கூறினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பின்னர், "நீ (உன் முதல் கணவர்) ரிஃபாஆவிடம் திரும்பிச்செல்ல விரும்புகிறாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (தமக்கு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவதை) எதிர்பார்த்தவராக வாசலில் இருந்தார். அவர், "அபூபக்ரே! இந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா? (நீங்கள் இவரைத் தடுக்கக் கூடாதா?" என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2821. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை அவர் மணமுடித்துக்கொண்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் என்பாரை மணந்துகொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (இரண்டாவது கணவரான) அவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த முகத்திரையின் குஞ்சத்தைப் போன்றதுதான்" என்று கூறித் தமது முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.பிறகு, "நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (இரண்டாவது கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது" என்றார்கள்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமக்கு உள்ளே வர அனுமதி கிடைக்காததால் அறையின் வாசலில் உட்கார்ந்திருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்களை காலித் (ரலி) அவர்கள் அழைத்து, "அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பகிரங்கமாக இப்படிப் பேசக்கூடாதென நீங்கள் இப்பெண்ணைக் கண்டிக்கக் கூடாதா?" என்று கேட்கலானார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2822. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்து விட்டார்கள். பின்னர் அவரை அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் மணந்துகொண்டார். இந்நிலையில் அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ரிஃபாஆ அவர்கள் என்னை மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார்" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 16
2823. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "ஒரு பெண் ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். பின்னர் அவளை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, அவள் வேறொருவரை மணந்துகொண்டாள். அக்கணவன் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்துவிடுகிறான். இந்நிலையில் அவள் முந்தைய கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவாளா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் "இ(ரண்டாவது கண)வர் அவளிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரை அது முடியாது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2824. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவளை இன்னொருவர் மணந்துகொண்டார். பின்னர் அவளிடம் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவரும் தலாக் சொல்லிவிட்டார். இந்நிலையில் அவளை அவளுடைய முந்தைய கணவர் மணமுடித்துக்கொள்ள விரும்பினார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய இன்பம்) அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாவது கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்காத வரை அது முடியாது" என்று கூறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 18 தாம்பத்திய உறவின்போது ஓத வேண்டிய விரும்பத்தகுந்த பிரார்த்தனை.
2825. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விழையும்போது "பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா" (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!") என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்குக் குழந்தை விதிக்கப்பட்டால், அக்குழந்தைக்கு ஒரு போதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிஸ்மில்லாஹி" ("அல்லாஹ்வின் திருப் பெயரால்") எனும் குறிப்பு இடம்பெறவில்லை. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "பிஸ்மில்லாஹ்" இடம்பெற்றுள்ளது; மன்ஸூர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிஸ்மில்லாஹ் கூறியதாகவே கருதுகிறேன்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 19 ஒருவர் தம் மனைவியிடம் முன்புறமாகவும் பின்புறமாகவும் பெண் உறுப்பில் புணரலாம்; ஆசனவாயில் புணரலாகாது.
2826. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து பிறவி உறுப்பில் உடலுறவு கொண்டால் (பிறக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, "உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" எனும் (2:223ஆவது) இறை வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2827. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பின்புறத்திலிருந்து பிறவி உறுப்பில் புணரப்பட்ட பெண் கருவுற்றால் அவள் (பெற்றெடுக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். அப்போதுதான் "உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" எனும் (2:223ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 16
2828. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நுஅமான் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "விரும்பினால் அவள் கவிழ்ந்து படுத்திருக்கும் நிலையில்; விரும்பினால் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில். ஆயினும், பெண் உறுப்பில்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 20 ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
அத்தியாயம் : 16
2831. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவரிடம் அவள் செல்லாமலிருக்க, அதை முன்னிட்டு அவள்மீது கோபம் கொண்ட நிலையில் அவர் இரவைக் கழிப்பாராயின், விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 21 மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை வெளியிடுவது தடை செய்யப் பட்டுள்ளது.
2832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவன் ஆவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2833. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 22 புணர்ச்சி இடைமுறிப்பின் ("அஸ்ல்") சட்டம்.
2834. அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூஸிர்மா (ரஹ்) அவர்களும் (பள்ளிவாசலில் அமர்ந்திருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஸிர்மா அவர்கள், "அபூசயீத் அவர்களே! "அஸ்ல்" பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றுள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "ஆம்" என்று கூறிவிட்டு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனூ முஸ்தலிக் ("முரைசீஉ") போரில் கலந்து கொண்டோம். அப்போது,உயர்ந்த அரபு இனப் பெண்களைப் போர்க்கைதிகளாகப் பிடித்தோம். நீண்ட காலம் நாங்கள் திருமணம் செய்துகொள்ளாதவர்களாக (இருந்ததால், தாம்பத்திய உறவில் நாட்டம் கொண்டவர்களாக) இருந்தோம். அதே நேரத்தில், (போர்க் கைதிகளை விடுதலை செய்து) நஷ்டஈடு பெறுவதற்கு ஆசையும்பட்டோம், ஆகவே, (போர்க் கைதிகளான பெண்களிடம்) தாம்பத்திய சுகம் அடையவும், (அதே சமயம் அவர்கள் கருவுற்றுவிடக் கூடாது என்பதற்காக) "அஸ்ல்" செய்து கொள்ளவும் விரும்பினோம்.
இந்நிலையில் "நம்மிடையே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்காமல் நாம் "அஸ்ல்"செய்வதா?" என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பின்னர் அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள் மீது (குற்றம்) இல்லை. படைக்க வேண்டுமென அல்லாஹ் எழுதிவிட்ட எந்த ஓர் உயிரும் மறுமை நாள்வரை உருவாகியே தீரும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2835. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை தான் படைக்கவிருப்பவற்றை எழுதி (முடித்து)விட்டான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2836. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில போர்க் கைதிகளைப் பெற்றோம். (எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) "அஸ்ல்" செய்து கொள்ளவும் விரும்பினோம். அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள், "நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டுதான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு, "மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2837. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அதை (அஸ்லை)ச் செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் (அதாவது கருத்தரிப்பதும் கருத்தரிக்காமல் இருப்பதும்) விதி யாகும்" என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) மஅபத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், "இதை நீங்கள் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2838. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் விதியாகும்" என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
பஹ்ஸ் பின் அசத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் "நான் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் "நீங்கள் இதை அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2839. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "அஸ்ல்" (புணர்ச்சி இடைமுறிப்பு) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அவ்வாறு (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் "உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை" என்பது, தடையுத்தரவுக்கு நெருக்கமான சொல்லாட்சி என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2840. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அருகில் "அஸ்ல்" (புணர்ச்சி இடைமுறிப்பு) பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "பாலூட்டும் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் கருவுற்று விடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அவ்வாறே) தம் அடிமைப்பெண்ணோடு உறவு கொள்ள விரும்பும் ஒருவர்,அதனால் அவள் கருவுற்றுவிடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அப்போது "அஸ்ல்" செய்துகொள்வார்)" என்று விடையளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் ஹசன் பின் அபில் ஹசன் யசார் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒரு கண்டனத்தைப் போன்றுள்ளது" என்று கூறினார்கள்.
- அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் பின் பிஷ்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மஅபத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், "நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் "அஸ்ல் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எதையேனும் நீங்கள் செவியுற்றுள்ளீர்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று "அதுவெல்லாம் விதியாகும்" என்பதுவரை அறிவித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2841. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) குறித்துப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், "அதை உங்களில் ஒருவர் ஏன் செய்கிறார்?" என்று கேட்டுவிட்டு, -(கவனிக்கவும்: "உங்களில் எவரும் அவ்வாறு செய்ய வேண்டாம்"என்று அவர்கள் குறிப்பிடவில்லை)- "படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2842. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "விந்தின் அனைத்து (உயிரணு)க் கூறுகளிலிருந்தும் குழந்தை உருவாவதில்லை. (ஒரே உயிரணு போதும்.) அல்லாஹ் ஒன்றைப் படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2843. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் "புணர்ச்சி இடை முறிப்பு" (அஸ்ல்) செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்"என்றார்கள். அம்மனிதர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உம்மிடம் நான் ஏற்கெனவே கூறிவிட்டேனே!" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2844. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். நான் அவளிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு"ச் செய்துவருகிறேன்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அ(வ்வாறு அஸ்ல் செய்வ)து அல்லாஹ் நாடியுள்ள எதையும் தடுத்து விடப்போவதில்லை" என்றார்கள். அந்த மனிதர் (சில நாட்களுக்குப் பின்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களிடம் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண் கருவுற்று விட்டாள்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதரும் ஆவேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 16
2845. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆன் அருளப்பெறும் காலத்தில் நாங்கள் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்து கொண்டிருந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருந்தால் அவ்வாறு செய்யக் கூடாதெனக் குர்ஆனே நமக்குத் தடை விதித்திருக்கும்" என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2846. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்துகொண்டிருந்தோம்.
அத்தியாயம் : 16
2847. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "புணர்ச்சி இடை முறிப்பு"ச் செய்துகொண்டிருந்தோம். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தகவல் எட்டியபோது, அவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை.
அத்தியாயம் : 16
பாடம் : 23 கருவுற்றிருக்கும் பெண்போர்க் கைதியைப் புணருவது தடை செய்யப்பட்டுள்ளது.
2848. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கூடாரத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த, மகப்பேறு காலத்தை நெருங்கிய ஒரு (கைதிப்) பெண்ணைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ(ளைச் சிறைப்பிடித்தவ)ர் அவளுடன் உறவுகொள்ள விரும்புகிறார் போலும்!" என்றார்கள். அதற்கு மக்கள் "ஆம்" என்ற(ஆமோதித்த)னர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் அவரைக் கடுமையாகச் சபிக்க விரும்பினேன். அ(ந்தச் சாபமான)து, அவருடன் அவரது சவக்குழிக்குள்ளும் நுழையும். அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனை எவ்வாறு தம் வாரிசாக ஆக்கிக்கொள்ள முடியும்? அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனைத் தம்முடைய ஊழியனாக எவ்வாறு பயன்படுத்த முடியும்?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 24 பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு ("அல்ஃகீலா") கொள்ளலாம்; அப்போது "புணர்ச்சி இடைமுறிப்பு"ச் செய்வது வெறுக்கத் தக்கதாகும்.
2849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள ("அல்ஃகீலா") வேண்டாமென நான் தடை விதிக்க விரும்பினேன். ரோமர்களும் பாரசீகர்களும் அவ்வாறு செய்தும், அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை நான் நினைவுகூர்ந்தேன் (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்).
இதை ஜுதாமா பின்த் வஹ்ப் அல் அசதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இவரது பெயர் ஜுஃதாமா என்று அறிவிப்பாளர் கலஃப் (ரஹ்) கூறுகிறார். ஆனால், யஹ்யா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளபடி "ஜுதாமா" ("ஃதால்" ஙு அல்ல; "தால்"கு) என்பதே சரி.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2850. உக்காஷா (ரலி) அவர்களின் சகோதரி ஜுதாமா பின்த் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மக்களில் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்குச் சென்றேன். அப்போது அவர்கள், "பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள ("அல்ஃகீலா") வேண்டாமென நான் தடை விதிக்க விரும்பினேன். பிறகு ரோமர்களும் பாரசீகர்களும் தம் குழந்தைகள் பால் அருந்திக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டும் அதனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப்பாதிப்பும் நேராமலிருப்பது குறித்து நான் யோசித்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்)" என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்வதைப் பற்றி வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது மறைமுகமான சிசுக்கொலை யாகும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பில், "என்ன பாவத்திற்காகக் கொல்லப்பட்டாள் என உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" எனும் (81:8,9 ஆவது) வசனத்தில் கூறப்பட்டுள்ள சிசுக் கொலைக்கு "அஸ்ல்" ஒத்திருக்கிறது என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2851. மேற்கண்ட ஹதீஸ் ஜுதாமா பின்த் வஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்வது" என்பதைக் குறிக்க "ஃகீலா"என்பதற்குப் பகரமாக) "ஃகியால்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 16
2852. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் என் மனைவியுடன் (உறவு கொள்ளும்போது) "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்கிறேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏன் (அவ்வாறு) செய்கிறாய்?"என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், "அவளது குழந்தையின் மீது" அல்லது "அவளுடைய குழந்தைகள் மீது"பரிவுகாட்டு(வதற்காகவே அவ்வாறு செய்)கிறேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(வ்வாறு பாலூட்டும் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்வ)து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாயிருந்தால், பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இக்காரணத்திற்காகவே நீ அவ்வாறு செய்கிறாய் எனில்,அவ்வாறு செய்யலாகாது. அது பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையே!" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post