அத்தியாயம் 17 பால்குடி (சட்டம்)

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 17
பால்குடி (சட்டம்)

பாடம் : 1 பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்.
2853. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைக் கேட்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் (துணைவியார் ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல ஒருவர் அனுமதி கேட்கிறார்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் இன்ன மனிதர் என நான் கருதுகிறேன்" என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துச் சொன்னார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதர் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!" என்று என்னுடைய பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (முடியும்); பிறப்பு எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கி விடும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 17
2854. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கக்கூடாதவர்களை, பால்குடி உறவாலும் மணமுடிக்கக்கூடாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 2 பால்குடித் தந்தையின் (இரத்த) உறவினரும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர்தாம்.
2855. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். பர்தா (ஹிஜாப்) சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். நான் அவருக்கு அனுமதியளிக்க வேண்டும் என அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 17
2856. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூகுஐஸின் புதல்வர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார்"என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "(அவருடைய) மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லை. (எனவே அஃப்லஹ் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன்)" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் இரு கைகளும் அல்லது உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
2857. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து, என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். -அபுல்குஐஸ் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை ஆவார்.- பர்தா (ஹிஜாப்) சட்டம் அருளப்பட்ட பின் இச்சம்பவம் நடைபெற்றது. அப்போது நான், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காமல் அஃப்லஹ் (ரலி) அவர்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன். ஏனெனில், அபுல்குஐஸ் எனக்குப் பாலூட்டவில்லை; அவருடைய துணைவிதான் எனக்குப் பாலூட்டினார்" என்று கூறினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (என் பால்குடித் தந்தை) அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். உங்களிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க எனக்கு விருப்பமில்லை. (எனவே, அவருக்கு நான் அனுமதியளிக்க வில்லை)" என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதியளி" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதன் அடிப்படையில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள், "இரத்த உறவால் எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக நீங்கள் ஆக்குவீர்களோ அந்த உறவுகளைப் பால்குடி உறவின் மூலமும் நெருங்கிய உறவுகளாக ஆக்கிவிடுங்கள்" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 17
2858. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும். அவர் (அஃப்லஹ்) உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், "அபுல்குஐஸ் ஆயிஷா (ரலி) அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாயின் கணவர் ஆவார்" என்றும் காணப்படுகிறது.
2859 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் பால்குடித் தந்தையின் சகோதரர் (அஃப்லஹ் (ரலி) அவர்கள்) வந்து, என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து ஆலோசனை கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க முடியாது" என்று மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான், "என் பால்குடித் தந்தையின் சகோதரர் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டேன்" என்று தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் உன் வீட்டிற்குள் வரட்டும்" என்று கூறினார்கள். அப்போது நான், "(அவருடைய) மனைவி தான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லையே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) என்னிடம், "அவர் உன்னுடைய (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார். எனவே, அவர் உன் வீட்டிற்குள் வரட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபுல்குஐஸின் சகோதரர் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை) அபுல்குஐஸ் (ரலி) அவர்களே ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதிகேட்டார் என வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2860. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "என் பால்குடித் தந்தையின் சகோதரர் அபுல்ஜஅத் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார். நான் அதை மறுத்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்ததும் இது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன்" என்று கூறினார்கள்.
- ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் "அபுல்குஐஸ்தான் அவர் (அதாவது ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தையின் சகோதரர்) ஆவார்" என்று கூறினார்கள்.-
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உனது வலக் கை, அல்லது உனது கை மண்ணைக் கவ்வட்டும்! நீ அவருக்கு அனுமதியளித்திருக்க வேண்டாமா?" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2861. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "என் பால்குடித் தந்தையின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு (அனுமதி அளிக்காமல்) திரையிட்டுக் கொண்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீ அவரிடம் திரையிட்டு (மறைத்து)க்கொள்ள வேண்டாம். ஏனெனில், இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக ஆகுமோ, அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் நெருங்கிய உறவுகளாகிவிடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2862. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் பால்குடித் தந்தையின் சகோதரர்) அஃப்லஹ் பின் குஐஸ் (ரலி) அவர்கள் என்னிடம் எனது வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அவர் (ஒருவரை என்னிடம்) அனுப்பி, "என் சகோதரரின் மனைவி உங்களுக்குப் பாலூட்டியிருக்கிறார்; நான் உங்களுக்குப் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவேன் (எனவே நீங்கள் எனக்கு அனுமதியளியுங்கள்)" என்று கூறினார். அப்போதும் அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் இதைத் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அவர் உன் வீட்டிற்குள் வரட்டும்; ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
பாடம் : 3 பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
2863. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நம் (பனூ ஹாஷிம் குடும்பத்துப் பெண்கள் தம்)மை விட்டுவிட்டு, குறைஷியரில் (வேறு பெண்களை மணப்பதில்) நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களிடம் (நம் குடும்பத்துப் பெண்) யாரும் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அப்போது நான், "ஆம்! (என் பெரிய தந்தை) ஹம்ஸா (ரலி) அவர்களின் புதல்வி இருக்கிறார்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என்னுடைய பால்குடிச் சகோதரரின் புதல்வி ஆவார்"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2864. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா (ரலி) அவர்களின் புதல்வியை மணமுடித்துக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என் பால்குடிச் சகோதரரின் மகளாவார். மேலும், இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக ஆகுமோ, அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் நெருங்கிய உறவுகளாக ஆகிவிடும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
2865. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவார்" என்பதுடன் ஹதீஸ் முடிவடைகிறது. சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரத்த உறவு" என்பதைக் குறிக்க "ரஹிம்" எனும் சொல்லுக்குப் பதிலாக "நசப்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 17
2866. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் விஷயத்தில் உங்களது நிலை என்ன?" அல்லது, "ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் மகளை நீங்கள் பெண் கேட்கக் கூடாதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஹம்ஸா என் பால்குடிச் சகோதரர் ஆவார். (எனவே, நான் அவருடைய மகளை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 4 மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்கு வந்துள்ள தடை.
2867. (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) அபூசுஃப்யானின் புதல்வி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தபோது, நான் அவர்களிடம், "என் சகோதரியான அபூசுஃப்யானின் புதல்வி விஷயத்தில் தங்களுக்கு நாட்டம் உண்டா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் "அவளை நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்" என்றேன். அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "(ஆம்! மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்)பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப் பட்டதன்று" என்றார்கள். (சகோதரிகளை ஒரே நேரத்தில் மணப்பது கூடாது என்பதே காரணம்.)நான், "தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வைப் பெண் கேட்பதாகக் கேள்விப் பட்டேனே!"என்று கூறினேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அவர்கள், "அவள் (உம்மு சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் அவளுடைய தந்தை (அபூசலமாவு)க்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்படியே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2868. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (அபூசுஃப்யானின் புதல்வியான) என் சகோதரி "அஸ்ஸா"வைத் தாங்கள் மணந்து கொள்ளுங்கள்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! ஆம். (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(சகோதரிகளை ஒரே நேரத்தில் மணமுடிப்பது கூடாது என்பதால்) அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார் உம்மு சலமாவின் முந்தைய கணவர்) அபூசலமாவின் மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் (அபூ சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவிற்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் (உம்மு ஹபீபா (ரலி) அவர்களுடைய சகோதரியின் பெயர்) "அஸ்ஸா" என்ற குறிப்பு காணப்படவில்லை. யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அது இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 5 (ஒரு குழந்தை செவிலித் தாயிடம்) ஓரிரு முறை பால் உறிஞ்சிக் குடிப்பது தொடர்பான சட்டம்.
2869. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஒரு குழந்தை செவிலித்தாயிடம்) ஒரு தடவையோ, இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருவருக்கு மிடையே) பால்குடி உறவு ஏற்பட்டுவிடாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2870. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியாரான) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது, ஒரு கிராமவாசி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம்,அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவி, "நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன். (எனவே, இந்தத் திருமணம் செல்லாது) என்று கூறுகிறார்" எனத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிக் குடிக்கும் வகையில்) பாலூட்டுவதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2871. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியாரான) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஆமிர் பின் ஸஃஸஆ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு தடவை மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பதால் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவு ஏற்படுமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2872. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியாரான) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது. அல்லது ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பதால் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
2873. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரு தடவைகள் மட்டும் பால் குடிப்பது" "இரு தடவைகள் மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பது" என்ற வாக்கியத்திற்கு முன் "அல்லது" )ரீணூ( என்பதற்குப் பதிலாக "மற்றும்" )ணூ( எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
2874. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிப் பால் குடிக்கும் வகையில்) பாலூட்டுவது, (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவை ஏற்படுத்தாது.
இதை உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2875. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "ஒரு தடவை மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 17
பாடம் : 6 ஐந்து முறை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்.
2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அத்தியாயம் : 17
2877. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், எத்தனை முறை பால் குடித்தால் பால்குடி உறவு உண்டாகும் என்பதைப் பற்றிக் கூறுகையில் பின்வருமாறு கூறினார்கள்: குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் (பால்குடி உறவு உண்டாகும்) என்ற சட்டம் குர்ஆனில் இடம் பெற்றிருந்தது. பின்னர் குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்ற சட்டம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 7 பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது தொடர்பான சட்டம்.
2878. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கிறேன்" என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் - மகன் உறவு ஏற்பட்டு விடும்)" என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், "அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, "அவர் பருவவயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
2879. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது (அபூஹுதைஃபாவின் மனைவி சஹ்லா) பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "சாலிம் ஆண்கள் அடையும் பருவவயதை அடைந்துவிட்டார். மற்ற ஆண்கள் அறிவதை அவரும் அறிகிறார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகிறார். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது என்று நான் எண்ணுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஹ்லாவிடம், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்துவிடும்" என்று கூறினார்கள்.
அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, "நான் அவருக்குப் பால் கொடுத்துவிட்டேன். இதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2880. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (ரலி) அவர்கள் எங்களுடன் எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். -அவர் (சஹ்லாவின் கணவர்) அபூ ஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார்.- அவர் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார்; மற்ற ஆண்கள் அறிகின்றவற்றை அவரும் அறிகிறார்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய்" என்று கூறினார்கள்.
இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஓர் ஆண்டு காலமாக, அல்லது சுமார் ஓராண்டு காலமாக இந்த ஹதீஸை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க நான் அஞ்சினேன். பின்னர் (ஒரு முறை) காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம், "நீங்கள் என்னிடம் ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை இதுவரை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை" என்று கூறினேன். காசிம் (ரஹ்) அவர்கள், "அந்த ஹதீஸ் என்ன?" என்று (என்னிடம்) கேட்க, நான் அதைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், "என்னிடமிருந்து நீங்கள் அதை (தாராளமாக) அறிவியுங்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அதை அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2881. ஸைனப் பின்த் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்க வில்லையா?" என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அபூஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார்; அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் - மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாமே!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
2882. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! (பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட) பால் குடிக்கும் அவசியமில்லாத நிலையில் உள்ள சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "எதற்காக (நீங்கள் அவ்வாறு கூற வேண்டும்)?" என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கிறேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் - மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)" என்று கூறினார்கள்.
அதற்கு சஹ்லா (ரலி) அவர்கள், "அவர் (சாலிம்) தாடி உள்ளவராயிற்றே (அவருக்கு எப்படி பாலூட்ட முடியும்)?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), "நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்" என்று கூறினார்கள்.
பின்னர் சஹ்லா (ரலி) அவர்கள், "(நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று நான் செய்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அதற்குப் பின்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2883. ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுவார்கள்: (ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர) நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் எவரும் பால்குடிப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து ("செவிலித் தாய் - மகன்" என்ற) உறவை ஏற்படுத்தி, அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனுமதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை; எங்களை(த்திரையின்றி)ப் பார்த்துமில்லை" என்று கூறினர்.
அத்தியாயம் : 17
பாடம் : 8 பால்குடி உறவு என்பதெல்லாம், பசிக்காகப் பால் அருந்(தும் பருவத்தில் அருந்)தினால்தான் ஏற்படும்.
2884. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னிடம் அமர்ந்திருந்தார். அ(ந்த மனிதர் என் வீட்டிற்குள் அமர்ந்திருந்த)து நபி (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. கோபத்தை அவர்களது முகத்தில் கண்ட நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர் என் பால்குடிச் சகோதரர் ஆவார்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) உங்கள் பால்குடிச் சகோதரர்கள் யார் என ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பசியால் (பால் அருந்தினால்)தான் பால்குடி உறவு ஏற்படும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 9 கருச்சோதனை நடத்திய பின், பெண் போர்க்கைதியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அவளுக்கு (ஏற்கெனவே) கணவன் இருந்தாலும், (போரில்) சிறை பிடிக்கப்பட்டதால் அத்திருமணம் முறிந்துவிடும்.
2885. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத்தார் வசிக்கும்) "அவ்தாஸ்" என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அவர்கள் எதிரிகளை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:
மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகிவிட்ட பெண்களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும். (4:24)
அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால்,அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவர். (அவர்களுடன் நீங்கள் தாம்பத்திய உறவு கொள்ளலாம்.)
அத்தியாயம் : 17
2886. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் "அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2887. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அவ்தாஸ்" போர் நாளில் அவர்கள் சில பெண்களைச் சிறை பிடித்தனர். அப்பெண்களுக்கு (ஏற்கெனவே) கணவர்கள் இருந்த காரணத்தால் (மற்றொருவரின் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள)அஞ்சினர். இது தொடர்பாகவே "மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகி விட்ட பெண்களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும்" எனும் (4:24ஆவது) வசனம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 10 பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியது. (இருப்பினும், சாயலை வைத்து) சந்தேகங்களைத் தவிர்க்க வேண்டும்.
2888. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஓர் இளைஞன் விஷயத்தில் (நபி (ஸல்) அவர்களிடம்) வழக்காடினர்.
சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸின் மகன் ஆவான். என் சகோதரர் (தமது இறப்பின்போது) இந்த இளைஞன் தம்முடைய மகன் என்று என்னிடம் வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரது சாயலில் இருப்பதை நீங்கள் கவனியுங்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இளைஞன் என் சகோதரன் ஆவான். என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்" எனக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்விளைஞனிடம் உத்பாவின் தெளிவான சாயலைக் கண்ட பிறகும் (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம்), "அப்தே! அவன் உமக்குரியவனே. (ஒரு பெண் பெற்றெடுத்த) குழந்தை, (அப்)பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" எனக் கூறினார்கள்.
பிறகு (தம் மனைவி சவ்தா (ரலி) அவர்களிடம்), "சவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் பர்தாவைப் பேணிக்கொள்" என்று கூறினார்கள். "அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்களை அந்த இளைஞன் ஒருபோதும் கண்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் (அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களை) "அப்தே!" என்று அழைத்தது இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மஅமர் மற்றும் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்புகளில் "விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 17
2889. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஒரு பெண் பெற்றெடுத்த) குழந்தை, (அப்)பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் ஏற்படும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 11 அங்க அடையாளங்களை வைத்து உறவு முறையைக் கண்டறியும் நிபுணர், ஒரு குழந்தை யாருக்குரியதென்று தீர்மானிக்கிறாரோ அதன்படி செயல்படுதல்.
2890. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நெற்றிக்கோடுகள் ஒளிர்ந்த வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள். அப்போது "உனக்குத் தெரியுமா? சற்று முன் (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை பிள்ளையைக் கண்டறியும்) முஜஸ்ஸிஸ் என்பார், ஸைத் பின் ஹாரிஸாவையும் (அவருடைய புதல்வர்) உசாமா பின் ஸைதையும் (அவர்கள் படுத்திருந்தபோது) அவர்களின் பாதங்களைப் பார்த்தார். மேலும், "இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது"என்று சொன்னார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2891. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்தார்கள். அப்போது "ஆயிஷா! "பனூ முத்லிஜ்"குலத்தைச் சேர்ந்த முஜஸ்ஸிஸ் என்பவர், என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவருடைய தந்தை) ஸைதும் ஒரு துணியைப் போர்த்தி(க்கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலைகளை மூடியிருந்தனர்; (ஆனால்) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் "இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது என்று சொன்னார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2892. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணர் ஒருவர் (என் வீட்டிற்கு) வந்தார். உசாமா பின் ஸைத் அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் அப்போது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த நிபுணர் (இருவரின் பாதங்களையும் பார்த்து), "இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது" என்று சொன்னார். அதனால் நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சி யடைந்து, அவரைக் கண்டு வியந்தார்கள். மேலும், அதை எனக்குத் தெரிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முஜஸ்ஸிஸ், அங்க அடையாளங்களைக் கொண்டு உறவு முறையைக் கண்டறியும் நிபுணராக இருந்தார்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 12 (புதிதாக மணந்துகொண்ட) கன்னிப் பெண்ணுக்கும் கன்னி கழிந்த பெண்ணுக்கும், திருமணத்திற்குப் பின் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்களின் அளவு.
2893. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டபோது, என்னுடன் மூன்று நாட்கள் தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "(புதுமணப் பெண்ணான உன்னுடன் மூன்று நாட்கள் மட்டும் தங்குவதால்) உனக்கு உன் கணவரால் எந்த அவமரியாதையும் கிடையாது. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாட்கள் தங்குகிறேன். ஆனால், உன்னிடம் ஏழு நாட்கள் தங்கினால், என்னுடைய மற்றத் துணைவியரிடமும் ஏழு நாட்கள் தங்குவேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2894. அப்துல் மலிக் பின் அபீபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது, (மறுநாள்) காலையில் தம்முடன் இருந்த உம்மு சலமாவிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதுமணப் பெண்ணான உன்னுடன் மூன்று நாட்கள் மட்டும் தங்குவதால்) உனக்கு உன் கணவரால் எந்த அவமரியாதையும் கிடையாது. நீ விரும்பினால் உன்னிடம் ஏழு நாட்கள் தங்குகிறேன். நீ விரும்பினால் உன்னிடம் மூன்று நாட்கள் தங்கிவிட்டு, (மற்றத் துணைவியர்) ஒவ்வொருவரின் வீட்டுக்கும் செல்கிறேன்" என்று கூறினார்கள். அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள், "என்னிடம் மூன்று நாட்கள் தங்கியிருங்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு காணப்படுகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களை மணந்து அவர்களுடன் தங்கியிருந்தார்கள். (மூன்று நாட்களுக்குப்) பின்னர் (மற்றத் துணைவியரின் வீட்டுக்குச் செல்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் புறப்பட முற்பட்டபோது, உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் மேலும் சில நாட்கள் (உன்னுடன்) தங்குகிறேன். (ஆனால்,) அதை உனது கணக்கில் (கழித்து) வைத்துக்கொள்வேன். ஏழு நாட்கள் கன்னிப் பெண்ணுக்கும், மூன்று நாட்கள் கன்னி கழிந்த பெண்ணுக்கும் உரியவையாகும்"என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2895. அப்துல் வாஹித் பின் அய்மன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்து பல விஷயங்களை அறிவித்துள்ளார்கள். அவற்றில் (பின்வரக்கூடிய) இதுவும் ஒன்று: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களை மணந்தார்கள். (அப்போது) அவர்களிடம், "நீ விரும்பினால் நான் உன்னிடமும் ஏழு நாட்கள் தங்குகிறேன்; (அதைப் போன்று) என்னுடைய மற்றத் துணைவியரிடமும் ஏழு நாட்கள் தங்குவேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
2896. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கன்னி கழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, மற்றொரு கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால், (முதலில்) கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவார். ஒருவர் கன்னிப்பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னி கழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னி கழிந்த பெண்ணிடம் மூன்று நாட்கள் தங்குவார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இதை அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்" என்று நான் சொன்னால், அது (தவறாகாது) சரிதான். ஆயினும், அனஸ் (ரலி) அவர்கள், "இதுவே நபிவழியாகும்" என்று (மட்டுமே) கூறினார்கள்.
அத்தியாயம் : 17
2897. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் (தாம் மணந்த) கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவதே நபிவழியாகும்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நினைத்தால் "இதை அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்" என்று சொல்ல முடியும்.(அது தவறில்லை.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 13 மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வதும், ஒவ்வொரு மனைவிக்கும் (குறைந்தது) ஓர் இரவு ஒரு பகலை ஒதுக்குவதே நபிவழியாகும் என்பதன் விளக்கமும்.
2898. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். அவர்களிடையே (இரவுகளைப்) பங்கிட்டு (ஒவ்வொருவரிடமும் ஓர் இரவு வீதம் தங்கிவந்ததால்), முதலாவது மனைவியிடம் ஒன்பது நாட்களுக்குப் பிறகே நபியவர்கள் திரும்பச் செல்வார்கள். எனவே, யாருடைய வீட்டில் நபியவர்கள் தங்குவார்களோ அவரது வீட்டில் எல்லாத் துணைவியரும் ஒவ்வோர் இரவிலும் ஒன்றுகூடுவர். (ஓர் இரவில்) ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் இருந்தபோது, ஸைனப் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா என்று நினைத்து) ஸைனபிடம் கையை நீட்டினார்கள்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் "இவர் ஸைனப்" என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கையை விலக்கிக்கொண்டார்கள். இதனால் ஆயிஷா (ரலி) அவர்களும் ஸைனப் (ரலி) அவர்களும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்டும்கூட அவர்கள் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டு (கோபமுற்று, நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! அவர்களின் வாயில் மண்ணைத் தூவிவிட்டு, நீங்கள் தொழச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (தொழச்) சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "இப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவார்கள்; என்னைக் கடுமையாகக் கண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். (அதைப் போன்றே) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து கடுஞ்சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும், "இப்படியா நீ நடந்து கொள்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 17
பாடம் : 14 மனைவியரில் ஒருவர், தனது முறை நாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம்.
2899. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கூர்மையான அறிவும் திடமான மனமும் கொண்ட சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்களைத் தவிர, வேறு எந்தப் பெண்ணைப் பார்த்தும் "அவராக நான் இருக்க வேண்டும்" என்று நான் விரும்பியதில்லை. சவ்தா (ரலி) அவர்கள் முதுமை அடைந்தபோது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் ஒதுக்கப்பட்ட தமக்குரிய முறை நாளை சவ்தா (ரலி) அவர்கள் எனக்கு விட்டுக் கொடுத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு ஒதுக்கிய (முறை) நாளை நான் ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டேன்" என்று நபி (ஸல்) அவர்களிடம் சவ்தா கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குரிய முறைநாளையும் சவ்தா (ரலி) அவர்களுக்குரிய முறை நாளையும் சேர்த்து இரண்டு நாட்களை எனக்கு ஒதுக்கினார்கள்.
அத்தியாயம் : 17
2900. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டவர்களில் சவ்தா (ரலி) அவர்களே முதல் பெண்மணி ஆவார் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
2901. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே (மஹ்ரின்றி) கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். நான், "ஒரு பெண் தன்னைத் தானே (ஓர் ஆணுக்கு) அன்பளிப்பாக வழங்கவும் செய்வாளா?" என்று சொல்லிக் கொண்டேன்."(நபியே! உம் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் மீது குற்றம் ஏதுமில்லை" (33:51) எனும் இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் நபியவர்களிடம் "உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்" என்று சொன்னேன்.
அத்தியாயம் : 17
2902. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "ஒரு பெண் தன்னைத் தானே ஓர் ஆணுக்குக் கொடையாக வழங்க வெட்கப்பட மாட்டாளா?" என்று கூறிவந்தேன். பின்னர் "(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம்" எனும் (33:51ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் நபியவர்களிடம் "உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்கிறான்" என்று சொன்னேன்.
அத்தியாயம் : 17
2903. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் ஜனாஸாவில் (இறுதித் தொழுகையில்) நாங்கள் "சரிஃப்"எனும் இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
இவர் நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார். இவரது (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது குலுக்கவோ அசைக்கவோ செய்யாதீர்கள்; மென்மையுடன் (எடுத்துச்) செல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப் பேருக்கு அவர்கள் (இரவைப்) பங்கிட்டுவந்தார்கள்; ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை.
அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவைப் பங்கிட்டுக் கொடுக்காத அந்தத் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் ஆவார்" என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2904. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மதீனாவில் இறந்த நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்தாம் இறுதியானவர் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 15 மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணப்பது விரும்பத்தக்கதாகும்.
2905. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)கொண்டு வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2906. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண்ணை மணந்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் என்னிடம், "ஜாபிரே! நீ மணமுடித்து விட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம், (மணமுடித்துவிட்டேன்)" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "(அவள்) கன்னிப் பெண்ணா? அல்லது கன்னி கழிந்த பெண்ணா?"என்று கேட்டார்கள். நான் "(அவள்) கன்னி கழிந்த பெண்" என்று கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு நீ அவளுடன் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர்.எனவே, (வயதில் சிறியவளான அனுபவமில்லாத கன்னிப் பெண்ணை மணப்பதால்) அவள் எனக்கும் என் சகோதரிகளுக்குமிடையே பிரச்சினையாக இருந்துவிடுவாள் என்று நான் அஞ்சினேன். (எனவேதான், கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டேன்)" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், இ(வ்வாறு நீ செய்த)து சரிதான்!" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) சொன்னார்கள்:
(மூன்று நோக்கங்களுக்காக) ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. 2. அவளது செல்வத்திற்காக. 3. அவளது அழகிற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்.
அத்தியாயம் : 17
பாடம் : 16 கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத்தக்கதாகும்.
2907. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். பின்னர் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ மணமுடித்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "கன்னிகழிந்த பெண்ணை மணந்து கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்களைவிட்டும்,அவர்களுடன் (கொஞ்சிக் குலவி) விளையாடுவதைவிட்டும் நீ எங்கே விலகிச் சென்றுவிட்டாய்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இந்த ஹதீஸை (அறிவிப்பாளர்) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், "நான் இந்த ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து பின்வருமாறு கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 17
2908. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ஒன்பது பெண் மக்களை (அல்லது ஏழு பெண் மக்களை) விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்து "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே" அல்லது "நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே" " என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "ஒன்பது" அல்லது "ஏழு" பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு "வளத்தை அளிப்பானாக" என்று, அல்லது "நல்ல வார்த்தையை" என்னிடம் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுர்ரபீஉ அஸ்ஸஹ்ரானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (ஐயப்பாடின்றி) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "திருமணம் முடித்துக் கொண்டாயா, ஜாபிரே?" என்று கேட்டார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகி, "மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை(க் கருத்தாக)ப் பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே கன்னி கழிந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்)" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ செய்தது சரிதான்" என்று கூறினார்கள் என்று ஹதீஸ் முடிகிறது.
அத்தியாயம் : 17
2909. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் மெதுவாகச் செல்லக்கூடிய என் ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் எனக்குப் பின்னால் வாகனம் ஒன்றில் வந்துசேர்ந்து, தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ காணுகின்ற ஒட்டகங்களிலேயே மிக உயர்தரமானது போன்று ஓடலாயிற்று. நான் திரும்பிப் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), "ஜாபிரே! என்ன அவசரம் உனக்கு?" என்று கேட்டார்கள். அதற்கு, "அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ மணந்தது கன்னிப் பெண்ணையா, அல்லது கன்னி கழிந்த பெண்ணையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணையே (மணந்தேன்)" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?" என்று கேட்டார்கள்.
பிறகு மதீனாவிற்கு வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு (இஷா) நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்" என்று சொன்னார்கள். மேலும், "நீ (ஊருக்குச்) சென்றால் புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்து கொள்" என்றும் சொன்னார்கள்.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து நாங்கள் திரும்பியபோது) எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைத் தாமதப்படுத்திவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "ஜாபிர்(தானா)?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "என்ன விஷயம் (ஏன் தாமதம்)?" என்று கேட்டார்கள். "எனது ஒட்டகம் களைத்துப் பலமிழந்து போனதால் நான் பின்தங்கிவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாகனத்திலிருந்து) கீழே இறங்கி, முனைப்பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு "ஒட்டகத்தில் ஏறு" என்றார்கள். நான் ஒட்டகத்தில் ஏறினேன். (அது விரைந்தோடியது.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்திவிடாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ திருமணம் செய்து கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு, "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்து கொண்டேன்)" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?" என்று கேட்டார்கள். நான், "எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்போது நீ ஊருக்குச் செல்லப்போகிறாய். ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்" என்று கூறிவிட்டு, "உனது ஒட்டகத்தை (எனக்கு) விற்றுவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். நான் "சரி" என்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஓர் "ஊக்கியா" விலை பேசி அதை வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வந்து சேரும்வரை அதிலேயே நான் வந்தேன்.)
(எனக்கு முன்பே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச்) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நான் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். "இப்போது தான் வருகிறாயா?" என்று என்னிடம் கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "உனது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழு" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் உள்ளே சென்று தொழுது விட்டுத் திரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக ஓர் "ஊக்கியா" எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்(துத் தந்)தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது "ஜாபிரை எனக்காக அழைத்துவா" என்றார்கள். அவ்வாறே நான் அழைக்கப்பட்டேன். நான் (என் மனதிற்குள்) "இப்போது எனது ஒட்டகத்தை எனக்கே திரும்பத் தந்துவிடுவார்களோ! அ(வ்வாறு ஒட்டகத்தையும் வாங்கிக்கொண்டு விலையையும் பெற்றுக்கொண்டு நபியவர்களைச் சிரமப்படுத்துவ)தைவிட வெறுப்பானது எனக்கு வேறொன்றுமில்லை" என்று கூறிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது ஒட்டகத்தை நீயே எடுத்துக்கொள்; அதன் கிரயமும் உனக்கே" என்றார்கள்.
அத்தியாயம் : 17
2910. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு (போரை முடித்துத் திரும்பும்) பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நான் எனது நீர் இறைக்கும் ஒட்டகத்தில் இருந்தேன். அது மக்களின் பின்வரிசையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு பொருளால் அதை "அடித்தார்கள்" அல்லது "குத்தினார்கள்". பின்னர் அது எனக்கு அடங்காமல் மக்களை முந்திக்கொண்டு ஓடத் துவங்கியது. பின்னர் அதை நான் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இ(ந்த ஒட்டகத்)தை இன்னின்ன விலைக்கு எனக்கு நீ விற்றுவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது" என்றேன். அவர்கள், "அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இன்னின்ன விலைக்கு இதை நீ எனக்கு விற்றுவிடுகிறாயா?" என்று (மீண்டும்) கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது" என்றேன். அவர்கள் என்னிடம், "உன் தந்தை(யின் மறைவு)க்குப் பின் நீ மணமுடித்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணையா, அல்லது கன்னிப் பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான், "கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)"என்றேன். "ஏன், கன்னிப் பெண்ணை மணந்து அவள் உனக்கும் நீ அவளுக்கும் மகிழ்வூட்டலாமே; அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே?" என்று கேட்டார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் ("அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இதை நீ இன்னின்ன விலைக்கு எனக்கு விற்றுவிடுகிறாயா?" எனும்) இச்சொல்லே, "அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இன்னின்னதைச் செய்" என்று முஸ்லிம்கள் கூறுகின்ற சொல்வழக்காக அமைந்தது.
அத்தியாயம் : 17
பாடம் : 17 பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
2911. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
பாடம் : 18 பெண்களுக்கு நலம் நாடுதல்.
2912. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டு விட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2913. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்க மாட்டாள். அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியதுதான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தேவிடுவாய். அவளை "ஒடிப்பது" என்பது, அவளை மணவிலக்குச் செய்வதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2914. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஏதேனும் பிரச்சினையில் பங்கெடுத்தால் ஒன்று, நல்லதையே பேசட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும். பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே,பெண்களுக்கு நன்மையே நாடுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2915. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்" என்றோ, அல்லது (இதைப் போன்று) வேறொரு முறையிலோ கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 19 "ஹவ்வா" இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் ஒருபோதும் தன் கணவனை ஏமாற்றியிருக்கமாட்டாள்.
2916. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
ஹவ்வா (ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களின் துணைவி ஏவாள்) இருந்திறாவிட்டால், எந்தப் பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் ஏமாற்றியிருக்கமாட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2917. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்கள் இருந்திராவிட்டால் உணவு கெட்டுப்போயிருக்காது; இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் ஒருபோதும் தன் கணவனை ஏமாற்றியிருக்கமாட்டாள்.
Previous Post Next Post