அத்தியாயம் - 8 திருமணம்

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 8 திருமணம்

திருமணச் சட்டங்கள்

994 ''இளைஞர் கூட்டமே! உங்களில் எவரேனும் திருமணம் செய்து கொள்ளும் தகுதி பெற்றிருந்தால் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியதாகவும், வெட்கத் தலத்தைப் பாதுகாப்புதாகவும் உள்ளது. இன்னும் எவர் (தாம்பத்ய வாழ்க்கைக்கான தேவைகளை நிறைவு(செய்ய) சக்தியற்றவராய் இருக்கின்றாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு இச்சையை அடக்கக் கூடியதாக உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்.

995 ''நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு (சிறிது நேர உரைக்குப்பின்) ''ஆனால், நான் தொழுகிறேன். மேலும் தூங்குகிறேன், மேலும் நோன்பும் நோற்கிறேன். நோன்பு நோற்காமலுமிருக்கிறேன். நான் பெண்களைத் திருமணமும் செய்கிறேன். எவர் தன்னுடைய வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ, அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

996 திருமணத்திற்குச் செலவிடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். திருமணம் செய்யாமலிருப்பதை வன்மையாகத் தடை செய்தார்கள். மேலும், ''அதிகம் குழந்தை பெறுகிற அதிக அன்புநிறைந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் அதிக எண்ணிக்கையிலிருப்பது குறித்து மற்ற நபிமார்களிடம் பெருமையுடன் பேசுவேன். மற்ற (உம்மத்) விட நான் உங்களை அதிகமாகக் காண்பேன்'' என்றும் கூறுவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

997 மஃகில் இப்னு யஸார் வாயிலாக அபூதாவூத், நஸயீ மற்றும் இப்னு ஹிப்பானில் இதற்கு சான்றாக ஹதீஸ் உள்ளது.

998 ''பெண் நான்கு காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறாள்: 1. அவளது சொத்துக்காக 2. அவளது குலச்சிறப்புக்காக 3. அவளது அழகுக்காக 4. அவளது மார்க்கத்திற்காக உனது இருகரங்களும் மண்ணாகட்டும்! மார்க்கமுடையவளை மணம் புரிந்து வெற்றியடைந்து கொள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் நஸயீ

999 எவரேனும் திருமணம் செய்தால் (அவருக்காக) ''அல்லாஹ் உனக்கு வளத்தை அளிப்பானாக, இன்னும் அருட்பேற்றை உன் மீது பொழிவானாக! இன்னும் நல்ல விஷயத்தில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைப்பானாக! என்று துஆ செய்வார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீ, இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1000 நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நிக்காஹ்) குத்பாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள்; ''நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! நாம் அவனைப் புகழ்கிறோம். மேலும் அவனிடமே உதவி தேடுகிறோம். இன்னும் அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். இன்னும் நமது உள்ளங்களில் தோன்றும் தீய எண்ணங்களைவிட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழிப்படுத்தி விட்டானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் யாரை வழி கெடுத்து விட்டானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் (3:102, 4:1, 4:70 ஆகிய) மூன்று வசனங்களை ஓதுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

இது திர்மிதீ மற்றும்  ஹாகிமில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1001 ''உங்களில் எவரேனும் (திருமணத்திற்காக) பெண் பேசினால் அவளை மணம் புரிந்து கொள்ளத் தூண்டும் அம்சம் எதையேனும் அவளிடமிருந்து அவரால் பார்க்க முடிந்தால், அவ்வாறே பார்த்துக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். இன்னும் இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1002 முகீரா வாயிலாக 1001வது ஹதீஸிற்குச் சான்றாக திர்மிதீ மற்றும் நஸயீயில் (ஹதீஸ்) உள்ளது.

1003 முஹம்மத் இப்னு மஸ்லமா வாயிலாக இப்னு மாஜா மற்றும் இப்னு ஹிப்பானில் இந்த (1001வது) ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

1004 ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நாடிய ஒருவரிடம், ''அவளை நீ பார்த்து விட்டாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அவர் ''இல்லை'' என்று சொன்னார். (அவரிடம்) ''செல்! அவளைப் பார்த்துக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1005 ''உங்கள் சகோதரர் பெண் பேசும் போது திருமண ஒப்பந்தத்தில் அவர் விட்டு விடாதவரை அல்லது அனுமதியளிக்காதவரை (இடையில் குறுக்கிட்டு) நீங்கள் பெண் பேச வேண்டாம். திருமண ஒப்பந்தம் செய்ய வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1006 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் என்னைத் தங்களுக்கு அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார்கள், பின்னர் அவரை மேலும், கீழும் பார்த்தார்கள். பின்னர் தமது தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த முடிவும் செய்யவில்லை என்பதைப் பார்த்த அந்தப் பெண் அங்கேயே அமர்ந்து கொண்டார்கள். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு அப்பெண் தேவையில்லையெனில் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். (அதற்கு) ''உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் எதுவும் இல்லை'' என்று அவர் பதிலளித்தார். (அதற்கு) ''நீ உன்னுடைய வீட்டாரிடம் சென்று அங்கு உனக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்றார். பின்னர் திரும்பி வந்து ''இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு எதுவும் கிடைக்கவில்லை'' என்று கூறினார். (அதற்கு) ''ஒரு இரும்பு மோதிரமாவது இருக்கிறதா? என்று பார்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் சென்றார். பின்னர் திரும்பி வந்து ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரும்பு மோதிரம் இல்லை. ஆனால், என்னிடம் என்னுடைய இந்தக் கீழங்கி உள்ளது. (ஸஹ்ல் தொடர்ந்து கூறினார்). ''அவருக்கு மேலாடை இல்லை!'' என்று இதில் அவளுக்குப் பாதியை கொடுத்து விடுகிறேன்'' என்றார். ''நீ கீழாடைக்கு என்ன செய்வாய்? நீ உடுத்திக் கொண்டால் அவளுக்கு எதுவும் இல்லாது போய் விடும். இதை அவள் உடுத்திக் கொண்டால் உனக்கு எதுவும் இல்லாது போய்விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர் நீண்ட நேரம் அமர்ந்து விட்டு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து வரக் கட்டளையிட்டார்கள். அவர் வந்ததும், ''குர்ஆனிலிருந்து உன்னிடம் எது (மனனமாக) உள்ளது?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''என்னிடம் இன்னின்ன அத்தியாயங்கள் உள்ளன'' என அவர் எண்ணிக் காண்பித்தார். ''இவற்றை நீ மனனமாக ஓதுவாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்றார். (அதற்கு) ''செல்! குர்ஆனிலிருந்து உன்னிடம் உள்ளவற்றிற்கு பதிலாக அவளை உனக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், ''திரும்பிச் செல்! அவளை உனக்கு மணமுடித்துக் கொடுத்து விட்டேன். அவளுக்கு குர்ஆனிலிருந்து கற்றுக் கொடு!'' என்று நபி(ஸல்) கூறியதாக உள்ளது. புகாரியுடைய மற்றோர் அறிவிப்பில் குர்ஆனிலிருந்து உன்னிடம் உள்ளவற்றிற்காக அவளை உனக்குரியவளாக்கி விட்டோம் என்றுள்ளது.

1007 ''உனக்கு எது மனனமாகவுள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ''சூரத்துல் பகரா மற்றும் அதற்கு அடுத்த அத்தியாயம்'' என்று கூறினார். ''எழு! அவளுக்கு இருபது வசனங்களைக் கற்றுக்கொடு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) வாயிலாக அபூ, தாவூதில் உள்ளது.

1008 ''திருமணத்தை அறிவியுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஸுபைர் தம்முடைய தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத். இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலுள்ளது.

1009 ''பொறுப்பாளர் (வலி) இல்லாமல் திருமணம் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ புர்தா இப்னு அபீ மூஸா தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது இப்னு அல் மதீனி, திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலுள்ளது.

1010 ''பொறுப்பாளர் (வலீ) மற்றும் இரண்டு சாட்சிகள் இல்லாமல் திருமணம் இல்லை''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன் வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்தில் அஹ்மத் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1011 எந்தப் பெண் தனது வலீயின் (பொறுப்பாளரின்) அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கிறாளோ அவளது திருமணம் செல்லாது. அவளது கணவன் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டால் அவளுடைய மர்மஸ்தானத்தை அவன் ஹலாலாக்கிக் கொண்டதால், அவளுக்கு மஹர் உண்டு. அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அப்போது, எவருக்கு வலீ இல்லையோ, அவருக்கு ஆட்சியாளரே வலீயாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது அபூஹவானா, இப்னு ஹிப்பான் மற்றும்  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1012 ''விதவைப் பெண்ணிடம் அவளது கட்டளையைப் பெறாமலும், கன்னிக் பெண்ணிடம் சம்மதம் பெறாமலும் அவர்களை திருமணம் செய்து வைக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவளது சம்மதம் எவ்வாறு? என்று கேட்டதற்கு, ''அவள் மௌனமாக இருப்பது'' என்று பதில் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1013 ''விதவைப் பெண் (தனது திருமணத்தில்) தனது பொறுப்பாளரை (வலீயை விட அதிகம் உரிமை பெற்றவள், மேலும், கன்னிப் பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும். அவளுடைய அனுமதி மௌனமாக இருப்பதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பில், ''விதவைப் பெண்ணுக்கும், வலீ (பொறுப்பாளருக்கும் இடையே எந்தப் அதிகாரமும் இல்லை. இன்னும் அநாதைப் பெண்ணிடம் அவளுடைய அனுமதியைப் பெற வேண்டும்'' என்று உள்ளது. அபூதாவூத் நஸயீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் என்னும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1014 ''எந்தவொரு பெண்ணும் மற்றொரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கக்கூடாது. மேலும் எந்தவொரு பெண்ணும் தானே திருமணம் செய்து கொள்ளக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா, தாரகுத்னி. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

1015 நபி(ஸல்) அவர்கள் ''ஷிகார்'' வகைத் திருமணத்தைத் தடை செய்தார்கள் என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 'உன் மகளை எனக்கு மணமுடித்து வைக்க வேண்டும்' என்னும் நிபந்தனையுடன் ஒருவர் தன் மகளை ஒருவருக்கு மணமுடித்து வைப்பதும் அவர்கள் இருவருமே மஹர் ஏதும் கொடுக்கமாலிருந்து விடுவதும் தான் 'ஷிகார்' ஆகும் என நாஃபிஉ(ரஹ்) அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

1016 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கன்னிப் பெண் வந்து, ''என்னுடைய தந்தை எனது விருப்பமின்றியே என் திருமணத்தை நடத்தி விட்டார்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவருக்கு (தேர்வு செய்யும்) உரிமையளித்து விட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜா. இது முர்ஸல் எனும் தரத்திலுள்ளது.

1017 ''எந்தப் பெண்ணை இரண்டு வலீகள் (இரு ஆண்களுக்கு) திருமணம் செய்து வைக்கின்றனரோ, அந்தப் பெண் அவர்களில் முதலாமவருக்கு உரியவளாவாள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஸன் சமூரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலுள்ளது.

1018 ''எந்த அடிமை தனது எஜமானர்கள் அல்லது வீட்டாரிடம் அனுமதி பெறாமல் திருமணம் செய்கிறானோ அவன் விபச்சாரம் புரிபவனாவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத் மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்றே இப்னு ஹிப்பானிலும் உள்ளது.

1019 ''ஒரு பெண்ணையும் அவளுடைய அத்தையையும், ஒரு பெண்ணையும் அவளுடைய சிற்றன்னையையும் ஒரு சேர மணமுடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1020 ''இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்து கொள்வதும் (பிறருக்கு) திருமணம் செய்து வைப்பதும் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பில் ''(நிக்காஹ்) உரையாற்ற வேண்டாம் என்றும் இப்னு ஹிப்பானில் அவன் தனக்காகவோ, பிறருக்காவோ பெண் பேசவும் கூடாது; அவரிடம் பெண் கேட்கவும் கூடாது'' என்றும் உள்ளது.

1021 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் மைமூனா(ரலி) அவர்களை நிக்காஹ் செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1022 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத (ஹலாலான) நிலையில் தான் என்னை மணமுடித்துக் கொண்டார்கள் என்று மைமூனா(ரலி) அவர்கள் கூறினார்கள் என, ஓர் அறிவிப்பு முஸ்லிமில் பதிவாகியள்ளது.

1023 ''எதன் வாயிலாக மர்மஸ்தானங்களை நீங்கள் (உங்களுக்கு) அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறீர்களோ அந்த மஹர் தொகை தான் நிபந்தனைகளிலேயே நிறை வேற்றுவதற்கு அதிகத் தகுதி வாய்ந்ததாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1024 'அவ்தாஸ்' யுத்தத்தின் போது மூன்று தினங்களுக்க முத்ஆ-(தற்காலிக திருமணம்) செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். பின்னர் அதைத் தடை செய்து விட்டார்கள். என்று ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1025 நபி(ஸல்) அவர்கள் 'முத்ஆ' திருமணத்தை கைபர் போர் நடந்த ஆண்டில் தடை செய்தார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1026 பெண்களை 'முத்ஆ' (தற்காலிகமாக) மணம்புரிவதையும், நாட்டுக் கழுதையை உண்பதையும் நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின் போது தடை செய்தார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லீம், அஹ்மத், நஸயீ

1027 ''பெண்களை 'முத்ஆ' திருமணம் புரிவதை நான் உங்களுக்கு ஆகுமானதாக்கி இருந்தேன். இப்போது மறுமை நாள் வரை 'அல்லாஹ அதனைத் தடை செய்து விட்டான். எனவே, எவரிடமேனும் அப்படி எதுவும் இருந்தால் அவர் அவளது வழியில் அவளை விட்டு விடட்டும். அவளுக்குக் கொடுத்ததிலிருந்து எதையும் வாங்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ரபீஃ இப்னு ஸப்ரா(ரலி) அறிவிக்கிறார்கள். முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான்.

1028 மூன்று தலாக் நிறைவேறிய பின் அதைத் திரும்பப் பெறுவதற்காக பெயரளவில் மற்றொருவருடன் திருமணம் செய்பவரையும், திருமணம் செய்து வைக்கப்படுபவரையும், நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் என, இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், நஸயீ

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1029 அலீ(ரலி) வாயிலாக அபூதாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜாவில் மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

1030 ''கசையடி கொடுக்கப்பட்ட ஆண் விபச்சாரி தன்னைப் போன்றோருடன் அல்லாது திருமணம் செய்ய மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

1031 ஒருவர் தன்னுடைய மனைவியை மூன்று முறை தலாக் செய்து விட்டார். அவரை மற்றொருவர் மணமுடித்து உடலுறவு, கொள்வதற்கு முன்னரே, தலாக் செய்து விட்டார். பின்னர் அவரை முதல் கணவர் (மறுபடியும்) திருமணம் செய்ய விரும்பினார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு) ''இல்லை. முதலாமவர் அவளிடமிருந்து தேன் சுவைத்தது போன்றே இரண்டாமவர் (தேன்) சுவைக்காதவரை கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.



சமத்துவம் மற்றும் விருப்பம் (தேர்வு)

1032 ''அரபு மக்களில் ஒருவர் மற்றவருக்கு சமமாவார். விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் ஒருவர் மற்றவருக்குச் சமமாவர்; நெசவாளியை அல்லது இரத்தம் குத்தி எடுப்பவரைத் தவிர'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

இது  ஹாகிமில் அறிவிப்பாளர் பெயர் இல்லாமல் உள்ளது. அபூஹாதமில் முன்கர் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஆத் இப்னு ஜபல் வாயிலாக பஸ்ஸாரில் முன்கதீ எனும் தரத்தில் உள்ளது.

1033 மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக பஸ்ஸாரில் முஆத் இப்னு ஜபல்(ரலி) வாயிலாக முன்கதிஃ எனும் தரத்தில் ஹதீஸ் உள்ளது.

1034 ''உஸாமாவை மணம் புரிந்து கொள்'' என்று என்னை நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள். என ஃபாத்திமா பின்த்து கைஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1035 ''பனூ பயாளா குலத்தாரே! அபூ ஹிந்திற்கு திருமணம் செய்து வையுங்கள், அவருக்குத் திருமணம் செய்து வையுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றனர்.

இது  ஹாகிம் மற்றும் அபூ தாவூதில் நல்ல அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1036 பாரிரா(ரலி) விடுதலை செய்யப்பட்டபோது அவருடைய கணவருடன் இருக்க அவருக்கு உரிமை வழங்கப்பட்டது என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் அவரது கணவர் அடிமையாக இருந்தார் என்றும். மற்றோர் அறிவிப்பில் சுதந்திரமானவராக இருந்தார் என்றும் உள்ளது. முதல் கூற்றே பலமானது.

இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக புகாரியில், ''அவர்அடிமையாக இருந்தார்'' என்றுள்ளது.

1037 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன். இரண்டு சகோதாரிகள் என் கீழ் (ஒரே நேரத்தில் மனைவியராக) உள்ளனர்?'' என்று நான் கூறியதற்கு ''அவர்களில் நீ விரும்பியவனை விவாகரத்துச் செய்து விடு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ளஹ்ஹாக் இப்னு ஃபைரூஜ் அத்தய்லமி தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா.

இது இப்னு ஹிப்பான், பைஹகீ மற்றும் தாரகுத்னியில் ஸஹீஹ் எனும் தரத்திலும், புகாரியில் மஃலூல் எனும் தரத்திலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

1038 கைலான் இப்னு ஸலமா இஸ்லாத்தில் இணைந்தார். அவருக்குப் பன்னிரெண்டு மனைவியர் இருந்தனர். அவர்களும் அவருடன் இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்களில் (விரும்பிய) நான்குபேரை மட்டும் தேர்வு செய்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள் என ஸாலிம் தன் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ,

இது  ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் புகாரி, அபூஸுர்ஆ மற்றும் அபூஹாத்தமில் 'மஃலூல்' எனும் தரத்திலும் உள்ளது.

1039 நபி(ஸல்) அவர்கள் தமது மகள் ஸைனபை ஆறு வருடங்களுக்குப் பிறகு (தம் மருமகர்) அபுல் ஆஸ் இப்னு ரபீஉ அவர்களிடம் (அவர்களுடைய) திருமணத்தைப் புதுப்பிக்காமலேயே திருப்பியனுப்பினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ மற்று இப்னு மாஜா

இது அஹ்மத் மற்றும்  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1040 நபி(ஸல்) அவர்கள் தமது மகள் ஸைனபை (தம் மருமகர்) அபுல் ஆஸ்பின் ரபீஉ அவர்களிடம் (அவர்களுடைய ( திருமணத்தைப் புதுப்பித்து திருப்பியனுப்பினார்கள் என்று அமர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.

இப்னு அப்பாஸ் உடைய ஹதீஸில் அறிவிப்பாளர் தொடர் பலமானது. இருப்பினும் அம்ர் இப்னு ஷுஐபுவின் ஹதீஸின்படியே செயல்பாடு உள்ளது'' என்று திர்மிதீ கூறியுள்ளார்.

1041 ஒரு பெண் இஸ்லாத்தில் இணைந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டார். (அதன்பின்னர்) அவளது கணவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன். நான் இஸ்லாத்தில் இணைந்ததை என்னுடைய மனைவியும் அறிந்து கொண்டாள்'' என்று கூறினார். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் அவளது இரண்டாவது கணவனிடமிருந்து அவளைப் பிரித்து அவளது முதல் கணவனிடம் திருப்பியனுப்பி விட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா

இது இப்னு ஹிப்பான் மற்றும்  ஹாகிமில் ஸஹீஹ் என்றுள்ளது.

1042 பனூ கிஃபார் குலத்திலிருந்து 'ஆலியா' எனும் பெண்ணை நபி(ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொண்டார்கள். அப்பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன் ஆடையை நீக்கிய போது; அவளது இடுப்பில் (நோயின் காரணமாக) வெண்மையாகக் கண்டவுடன் நபி(ஸல்) அவர்கள், '' உன் வீட்டாரிடம் போய்ச் சேர்'' என்று கூறிவிட்டு அவளுக்கு மஹர் தொகையைக் கொடுக்கும் படி உத்தரவிட்டார்கள் என ஸைத் இப்னு கஅப் இப்னு உஜ்ரா தம் தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார்.

இதன் அறிவிப்புத் தொடரில் இடம் பெறும் ஜமீல் இப்னு ஸைத் மறதியுடையவர் என்பதும் இன்னும் அதிகமாக கருத்து முரண்பாடுகள் அவரைப்பற்றி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் புரிந்து அவளுடன் உடலுறவு கொண்ட பின் அவள் வெண்குஷ்டம் பிடித்தவளாகவோ, பைத்தியக்காரியாகவோ, ஒரு வியாதிக்காரியாகவோ இருப்பத கணவனுக்குத் தெரியவந்தால், அவளைத் தொட்டு (அனுபவித்து) விட்ட காரணத்தால் மஹர் தொகை அப்பெண்ணுக்கே உரியதாகும். அவள் வாயிலாக அவரை ஏமாற்றியவர் அவருக்கு அந்த மஹர் தொகையைக் கொடுத்து விட வேண்டும்'' என்று உமர்(ரலி) அவர்கள் கூறியதாக சயீத் பின் முஸய்யப்(ரஹ்) அறிவிக்கிறார். சயீத் பின்மன்சூர், மாலிக், இப்னு ஆபீஷைபா. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

தலையில் கட்டியுள்ள பெண்ணை மணந்து கொண்டால்; அவளை மணபந்தத்தில் வைதிருக்க பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்து விட கணவனுக்கு உரிமையுண்டு. அவளுடன் உறவு கொண்டு விட்டிருந்தால் அவன் அவளை அனுபவித்த காரணத்தால் அவளுக்கு மஹர் கொடுத்தாக வேண்டும் என்று சயீத் பின் முஸய்யப்(ரஹ்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடமிருந்தே அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

சயீத்(ரஹ்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடமிருந்து இதே போன்று அறிவித்துள்ளார்கள்.

உமர்(ரலி) அவர்கள் ஆண்மையற்றவர் ஒருவரின் விஷயத்தில் அவனுக்கு ஓராண்டுக் காலம் தவணை வழங்கப்பட வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.



பெண்களுடன் உறவு

1043 ''எவன் பெண்ணின் (தன்னுடைய மனைவியின்) பின் துவாரத்தில் உறவு கொள்கிறானோ அவன் சபிக்கப்பட்டவனாவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ,

இங்கு நஸயீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

1044 ''எவன், ஓர் ஆண் அல்லது பெண்ணுடன் பின் துவாரத்தில் உறவு கொண்டானோ, அவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, நஸயீ, இப்னு ஹிப்பான்

இது மவ்கூஃப் எனும் தரத்திலுள்ளது.

1045 எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்புகிறாரோ அவர் தன்னுடைய அண்டைவீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். இன்னும் நீங்கள் பெண்களுடன் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் விலா எலும்பால் படைக்கப் பட்டுள்ளார்கள். எலும்புகளிலேயே விலா எலும்பின் மேல் பகுதி தான் வளைவானது. அதை நீ நேராக்க நினைத்தால், உடைத்து விடுவாய். அதை நீ அப்படியே விட்டுவிட்டால் அது எப்போதும் வளைந்தே இருந்துவிடும். நீங்கள் பெண்களுடன் நன்றாக நடந்து கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்.

இங்கு புகாரியின் வாசம் இடம் பெற்றுள்ளது.

முஸ்லிமில், ''நீ பெண்ணிடமிருந்து பலன் பெற்றால், அவளது கோணல் குணத்துடனே நீ பலன் பெறுவாய். அவளை உடைத்துவிடுவாய். அவளை உடைப்பதென்பது அவளை விவாகரத்து செய்வது ஆகும்'' என்று உள்ளது.

1046 ஒரு யுத்தத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் மதீனா வந்த போது நகரினுள் நுழைய நாடினோம். அப்போது ''நில்லுங்கள். இரவில் நுழையுங்கள் - அதாவது இஷா நேரம் - ஏனெனில், (பயணிகளின்) மனைவியர் தலைசீவி அழுக்குகளைப் போக்கித் தயாராகிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்.

புகாரியின் மற்றொரு அறிவிப்பிங்ல ''உங்களில் எவரேனும் நீண்ட பயணம் சென்றிருந்தால், இரவில் திடீரென வீட்டிற்கு வரவேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.

1047 ''எவன் (தன்னுடைய மனைவியிடம்) சென்று, அவளும் அவனிடம் வந்து (உறவுகொண்டு) பின்னர் அவளுடைய ரகசியத்தை வெளிப்படுத்துகிறானோ, அவன்தான் மறுமைநாளில் அல்லாஹ்விடம் மக்களில் மோசமானவனாக இருப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1048 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மனைவிக்கு எங்கள் மீது உள்ள உரிமை என்ன?'' என்று நான் கேட்டேன். ''நீ உண்ணும்போது அவளையும் உண்ணச் செய்! நீ உடுத்தும் போது அவளையும் உடுத்தச் செய்! அவளது முகத்தில் அடிக்காதே! இன்னும் முகத்தில் அடிக்காதே! இன்னும் அவளைத் (தீய வார்த்தைகளால்) திட்டாதே! அவளை வீட்டில்லாது (வெளியே) கண்டிக்காதே!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹக்கீம் இப்னு முஆவியா தன் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா.

இது புகாரியில் முஅல்லக் ஆகவும் இப்னு ஹிப்பான் மற்றும்  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும் உள்ளது.

1049 மனிதன் தன்னுடைய மனைவியிடம் அவளது பின்புறமாக முன் துவாரத்தில் உறவு கொண்டால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது ''பெண்கள் உங்களது விளைநிலமாவர். அதில் நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்'' என்னும் இறைவசனம் அறிவிக்கப்பட்டது என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்.

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1050 உங்களில் ஒருவர் தன் மனைவியுடன் உறவு(கொள்வதற்கு) நெருங்கி, ''அல்லாஹ்வின் பெயரால், (என்று தொடங்கி) ''இரட்சகனே! எங்களை ஷைத்தானிடமிருந்து தூரமாக்குவாயாக! இன்னும் நீ எங்களுக்கு அளிப்பதிலிருந்து ஷைத்தானைத் தூரமாக்குவாயாக'' என்று கூறிவிட்டால், (அதற்குப் பின்பு) அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்குமாயின் அதை ஒருபோதும் ஷைத்தான் நெருங்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1051 ''ஒருவன் தன்னுடைய மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் மறுத்துவிட (அவளது) கணவன் கோபமான நிலையில் இரவைக் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கிறார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியில் வாசகம் இடம் பெற்றுள்ளது.

முஸ்லிமில், ''அவளது கணவன் அவளைப் பற்றி மகிழ்ச்சியடையும் வரை வானத்தில் இருப்பவன் அவள் மீது கோபமாக இருப்பான்'' என்று உள்ளது.

1052 சவுரி முடி வைத்து விடும் பெண்களையும், சவுரி முடி வைத்துக கொள்ளும் பெண்களையும், பச்சை குத்தும் பெண்களையும், பச்சை குத்திக் கொள்ளும் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1053 நபி(ஸல்) அவர்கள் மக்கள் சிலரிடையே இருந்த போது நான் அவர்களிடம் சென்றேன் அப்போது அவர்கள், ''கீலா செய்வதை தடுத்துவிட நான் எண்ணினேன். ஆனால் ரோமர்களையும், பாரசீகர்களையும் பார்க்கும் போது 'கீலா' செய்வதை தடுத்துவிட நான் எண்ணினேன். ஆனால் ரோமர்களையும், பாரசீகர்களையும் பார்க்கும் போது 'கீலா' செய்வதால் அவர்களது பிள்ளைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்பட வில்லை'' என்று கூறினார்கள். பின்னர் மக்கள் அஸ்ல் செய்வதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு, 'அது மறைமுகமாக உயிருடன் புதைப்பதாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஜுதாமா பின்த்து வஹப்(ரலி) அறிவிக்கிறார்.

1054 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள் கர்ப்பமாவதை நான் விரும்பாத காரணத்தால் அவளிடம் நான் 'அஸல்' செய்கிறேன். மற்ற ஆண்கள் விரும்புவதையே நானும் விரும்புகிறேன். ஆனால், யூதர்கள், 'அஸ்ல் செய்வதை உயிருடன் புதைப்பதைப் போன்றது தான்' என்று கூறுகின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''யூதர்கள் பொய்யுரைத்தார்கள். (ஏனெனில்) அல்லாஹ் அதை (குழந்தையை) படைக்க நாடிவிட்டால், உம்மால் அதை மாற்றியமைக்க முடியாது'' என்று கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ஸல்) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. நஸயீ மற்றும் தஹாவீயிலும் உள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

1055 நாங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் 'அஸ்ல்' செய்திருக்கிறோம். இது தடை செய்யப்பட வேண்டியதாக இருந்திருப்பின் அதைச் செய்யக் கூடாது என்று குர்ஆன் எங்களுக்குத் தடை விதித்திருக்கும் என ஜாபிர்(ரலி) கூறினார். புகாரி, முஸ்லிம்

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பின்படி இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியும், அவர்கள் இதைத் தடைசெய்யவில்லை என்று உள்ளது.

1056 நபி(ஸல்) அவர்கள் ஒரே குளியலுடன் தமது மனைவிமார்களிடம் வலம் வருவார்கள் (உறவு கொள்வார்கள்) என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.



மஹர் தொகை

1057 நபி(ஸல்) அவர்கள் ஸஃபியா(ரலி) அவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அந்த விடுதலையையே அவருக்கு மஹராகவும் அறிவித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1058 ''நபி(ஸல்) அவர்கள் கொடுத்த மஹர் அளவு என்ன? என நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ''அவர்களது மனைவியருக்கு அவர்கள் கொடுத்த மஹர் தொகை பன்னிரெண்டு ஊக்கியா மற்றும் ஒரு 'நஷ்' ஆக இருந்தது'' என்று கூறிவிட்டு, ''நஷ்'' என்றால் என்ன என்பதை அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான் ''இல்லை'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''அது அரை ஊக்கியா ஆகும். அது (மொத்தம்) ஐநூறு திர்ஹம் ஆகும். இது தான் நபி(ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்கு (அளித்த) மஹராக இருந்தது'' என்று கூறினார்கள் என அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1059 அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது, ''அவளுக்கு (மஹராக) ஏதேனும் கொடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு, ''என்னிடம் எதுவுமில்லை'' என்று அலீ கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஜுதமிய்யாவால் தயாரிக்கப்பட்ட உன்னுடைய கேடயம் எங்கே?'' என்று கேட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ. இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1060 ''திருமணத்திற்கு முன் (நிர்ணயிக்கப்படும்) மஹர் அல்லது (மணப்பெண்ணுக்கோ அல்லது மற்றவருக்கோ வழங்குவதாக கூறப்படும்) அன்பளிப்பு அல்லது வாக்குறுதி ஆகியவை மணப் பெண்ணுக்கே உரியதாகும். திருமணத்திற்குப் பின் (வழங்கப்படும் அன்பளிப்பு மற்றும் வாக்குறுதி) யாருக்கு வழங்கப்படுகிறதோ அது அவரையே சாரும். மேலும், மனிதன் தன் மகள் அல்லது சகோதாரி விஷயத்தில் சங்கை செய்யப்படுவதற்கு மிகவும் உரித்தானவன் ஆவான்'', என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஹுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, மற்றும் இப்னு மாஜா.

1061 ஒருவர் பெண்ணை மணமுடித்து அவளுக்கென மஹர் நிர்ணயம் செய்யாமலும், இறந்துபோன ஒருவரைப் பற்றி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ''மற்ற பெண்களுக்குரியது போன்ற மஹர் அவருக்கு உண்டு. அது குறைவாகவோ, கூடுதலாகவோ இல்லை. மேலும், அவள் மீது (இத்தா) கடமையாகும். இன்னும் அவளுக்குச் சொத்துரிமையும் உண்டு'' என்று பதிலளித்தார்கள். அப்போது மஃகல் இப்னு ஸினான் அல் அஷ்ஜயீ(ரலி) அவர்கள் எழுந்து, ''எங்கள் குலத்தைச் சேர்ந்த பர்வஃ பின்த்து வாஷிக் எனும் பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்து போன்றே நீங்கள் தீர்ப்பளித்துள்ளீர்கள்'' என்று கூறினார். (இதைக் கேட்ட) இப்னு மஸ்வூத்(ரலி) மகிழ்ச்சியுற்றார்கள் என அல் கமா(ரஹ்) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீயில் 'ஸஹீஹ்' எனும் தரத்திலும் மற்றொரு குழுவிடத்தில் ஹஸன் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1062 ''எவரொருவர் மஹராக மாவு அல்லது பேரீச்சம்பழம் கொடுக்கின்றாரோ, அதுவும் அவருக்கு (பெண்ணை) அனுமதிக்கப்பட்டவளாக்கி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது மவ்கூஃப் எனும் தரத்திலுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

1063 காலணிகளுக்குப் பதிலாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் என, அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீஆ தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கருத்து வேறுபாடுகளும் உள்ளன.

1064 ஓர் இரும்பு மோதிரத்திற்குப் பதிலாக ஒருவருக்கு ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்து வைத்தார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். (இது நீண்ட ஹதீஸின் சுருக்கம்)  ஹாகிம்

''பத்து திர்ஹமிற்குக் குறைவாக மஹர் இருக்கக்கூடாது'' என்று அலீ(ரலி) கூறினார்.

இது தாரகுதனீயில் மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1065 ''சுலபமாக இருக்கக் கூடிய மஹரே சிறந்தது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உக்பா இப்னு ஆமீர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1066 அம்ரா பின்த்து ஜவ்ன் நபி(ஸல்) அவர்களிடம் பாதுகாப்புத் தேடினார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, அதாவது: அவர் நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்தபோது, ''நீ சரியான இடத்தில் பாதுகாப்புத் தேடிக் கொண்டாய்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவரை தலாக் (விவாகரத்துச்) செய்து மூன்று துணிகளை அவருக்கு உதவிப் பொருளாகக் கொடுக்குமாறு உஸாமாவிடம் கட்டளையிட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா

இதன் அறிவிப்புத் தொடரில் ஒருவர் விடுபட்டுள்ளார்.

1067 அபூ உஸைத் அஸ்ஸாஇதி வாயிலாக ஸஹீஹில் இதன் முழுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.



வலீமா விருந்து

1068 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் மீது மஞ்சள் நிறத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ''இது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஒரு (பேரீச்சம்பழக்) கொட்டையளவு தங்கத்திற்குப் பகரமாக நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்'' என்று கூறினார். ''அல்லாஹ் உனக்கு அருள்வளம் அளிப்பானாக! நீ ஓர் ஆட்டையேனும் வலீமா விருந்தாகக் கொடு! என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லீம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1069 ''உங்களில் எவரேனும் வலீமா விருந்திற்கு அழைக்கப்பட்டால், அதற்கு அவர் செல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், ''உங்கள் சகோதரன் உங்களை விருந்திற்கு அழைத்தால் நீங்கள் பதிலளியுங்கள் (செல்லுங்கள்) அது வலீமா விருந்தாகவோ அல்லது அது போன்ற மற்ற விருந்தாகவோ இருந்தாலும் (சரி)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உள்ளது.

1070 ''வருபவர்களைத் தடுத்தும், விருப்பமற்றவர்களை அழைத்தும் நடத்துகின்ற வலீமா விருந்தே (உணவுகளில்) தீய உணவு. இன்னும் எவர் விருந்தழைப்பைப் புறக்கணிக்கின்றாரோ அவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1071 ''உங்களில் எவரேனும் விருந்திற்கு அழைக்கப்பட்டால் அவர் பதில் அளிக்கட்டும்! (செல்லவும்). அவர் நோன்பாளியாக இருந்தால் (அழைத்தவருக்காக) பிரார்த்திக்கட்டும். அவர் நோன்பில்லாதவராக இருந்தால் (சென்று) உணவு உண்ணட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1072 ஜாபிர்(ரலி) வாயிலாக முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், ''அவர் (கடமையல்லாத நோன்பிருப்பவர்) விரும்பினால் சாப்பிடட்டும்' அல்லது விட்டு விடட்டும்'' என்று உள்ளது.

1073 ''வலீமா உணவு முதல் நாளில் கடமையாகும், இரண்டாவது நாள் உணவு சுன்னத்தாகும் மூன்றாவது நாள் உணவு பகட்டாகும். எவன் பகட்டு காட்டுகிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் பம்ரங்கப்படுத்துகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

இது காரிப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் சரியானவர்கள்.

1074 மேற்கண்ட ஹதீஸிஹ்குச் சான்றாக இப்னு மாஜாவில் அனஸ்(ரலி) வாயிலாக ஒரு ஹதீஸ் பதிவாகியள்ளது.

1075 நபி(ஸல்) அவர்கள் (திருமணம் செய்த போது) தங்கள் மனைவியருக்காக இரண்டு 'முத்' கோதுமையை 'வலீமா' விருந்தாக கொடுத்தார்கள் என ஸஃபிய்யா பின்த்து ஷைபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1076 கைபருக்கும், மதீனாவிற்கும் இடையில் நபி(ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அப்போது ஸஃபிய்யா(ரலி) அவர்களைத் திருமணம் செய்திருந்த காரணத்தால் அவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டது. அப்போது நான் முஸ்லிம்களை வலீமா விருந்திற்கு அழைத்தேன். அ(ந்த விருந்)தில், ரொட்டியோ, கறியோ இல்லை. நபி(ஸல்) அவர்களது கட்டளைப்படி போர்வைகள் விரிக்கப்பட்டன. அவற்றின் மீது பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி மற்றும் நெய் (விருந்துணவாக) வைக்கப்பட்டது என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1077 ''இரண்டு பேர் ஒன்றாக (ஒரே நேரத்தில்) விருந்திற்கு அழைத்தால் உன்னுடைய வீட்டிற்கு நெருக்கமானவரின் அழைப்பை நீ ஏற்றுக் கொள்! (இருப்பினும்) அவ்விருவரில் எவர் முந்திக் கொள்கிறாரோ, அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித் தோழர்களில் ஒருவர் அறிவிக்கிறார். அபூதாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1078 ''நான் (எதன் மீதும்) சாய்ந்து கொண்டு சாப்பிடுவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுஹைஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1079 ''சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறி உன் வலக்கரத்தால் சாப்பிடு! மேலும் உனக்கு முன்பாக உள்ளதிலிருந்து சாப்பிடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என உமா இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1080 நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு கோப்பையில், குழம்பில் ஊற வைக்கப்பட்ட ரொட்டி கொடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் ''(தட்டின்) ஓரங்களிலிருந்து உண்ணுங்கள். நடுவிலிருந்து உண்ணாதீர்கள். ஏனெனில், அதன் நடுவில் அருள்வளம் (பரக்கத்) வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். நூல்: அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.

இங்கு நஸயீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1081 நபி(ஸல்) அவர்கள் எப்போதும் உணவைக் குறை கூறியதில்லை. அவர்கள் ஒன்றை விரும்பினால், அதைப் புசிப்பார்கள். அவர்கள் அதை வெறுத்தால், அதை விட்டு விடுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1082 ''இடக் கரத்தால் உண்ணாதீர்கள். ஏனெனில், ஷைத்தான் இடக் கரத்தால் உண்ணுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1083 ''உங்களில் எவரேனும் பரும்னால் அவர் அந்தப் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1084 இப்னு அப்பாஸ் வாயிலாக அபூதாவூதில் மேற்கண்ட ஹதீஸ் போன்றே இடம் பெற்றுள்ளது. அதில், ''அதனுள் (பாத்திரத்தினுள்) ஊத வேண்டாம்'' என்று உள்ளது. மேலும், இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் இடம் பெற்றுள்ளது.



பங்கீடு

1085 நபி(ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்கு மத்தியில் (தம்மிடம் உள்ளதைப்) பங்கிடுபவர்களாகவும், நீதியுடன் நடப்பவர்களாகவும் இருந்தார்கள். இன்னும் அவர்கள் ''இரட்சகனே! இது நான் கட்டுப்பாடாக இருப்பதால் செய்யப்படும் பங்கீடாகும். என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத, உன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளதைக் கொண்டு என்னை இழிவுபடுத்தி விடாதே!'' என்று கூறுபவர்களாகவும் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு ஹிப்பான் மற்றும்  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தரம் மேலோங்கியள்ளதாக திர்மிதீ குறிப்பிடுகிறார்.

1086 ''ஒருவருக்கு இரு மனைவியர் இருந்து, அவர்களிடருவரில் ஒரு மனைவியின் பக்கம் அவர் அதிகம் சாய்ந்து விட்டால், மறுமை நாளில் அவர் தனது ஒரு பக்க தோள்புஜம் இறங்கியவராக வருவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது 'ஸஹீஹ்' எனும் தரத்தில் இடம் பெற்றுள்ளது.

1087 எவரொருவர் (மனைவி இருக்கும் நிலையில்) கன்னிப் பெண்ணை மணக்கிறாரோ, அவர் அவளுடன் ஏழு இரவுகள் தங்கி இருக்கவேண்டும். பின்னரே (இரவுகளைப்) பங்கீடு செய்ய வேண்டும். எவர் கன்னி கழிந்த (விதவை அல்லது கைவிடப்பட்ட) பெண்ணைத் திருமணம் செய்கிறாரோ, அவர் அவளுடன் மூன்று இரவுகள் தங்கிய பின்னரே இரவுகளைப் பங்கீடு செய்ய வேண்டும் என்பது சுன்னத்தாகும் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1088 நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரழி) அவர்களைத் திருமணம் செய்த போது அவருடன் மூன்று இரவுகள் தங்கிவிட்டு, உன்னை உன் கணவர் (நான்) லேசாகக் கருதவில்லை. நீ விரும்பினால் நான் உன்னுடன் ஒரு வாரம் தங்குவேன். உன்னிடம் ஒரு வாரம் தங்கினால், என்னுடைய மற்ற மனைவிகளிடமும் ஒரு வாரம் தங்க வேண்டியது வரும்'' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி). அவர்களே அறிவிக்கிறார். முஸ்லிம்

1089 ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) தனது ஓர் இரவை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு (அன்பளிப்பாக) அளித்து விட்டதால், நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களது நாளையும் ஸவ்தா(ரலி அவர்களது நாளையும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கே பங்கிட்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1090 ''என்னுடைய சகோதாரியின் மகனே! நபி(ஸல்) அவர்கள் (தம் மனைவிமார்களான) எங்களிடம் தங்கும் நாட்களில் ஒருவரை விட மற்றொருவருக்கு அதிகப் பங்கு அளிக்க மாட்டார்கள். பங்கீட்டில் ஏதாவது ஒரு நாள் மீதமாம் விட்டால், அவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளிலும் தங்களது மனைவியர் எல்லாருடைய வீட்டிற்கும் வந்து உடலுறவு கொள்ளாமல், அனைவரோடும் நெருக்கமாக உறவாடுவார்கள். இறுதியில் அந்த நாள் யாருடையதோ அவரது இல்லத்தை அடைந்து அவரிடம் இரவைக் கழிப்பார்கள்'' என ஆயிஷா(ரலி) கூறினார் என உர்வா(ரஹ்) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இங்கு அபூதாவூதில் வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றும் இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1091 நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதுவிட்டால், தமது மனைவியர் அனைவரிடமும் சென்று அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவார்கள் என, ஆயிஷா(ரலி) வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. (ஹதீஸ் சுருக்கம்)

1092 நபி(ஸல்) அவர்கள் தமது இறப்புக்கு முன்பாக நோய் வாய்ப்பட்டிருந்த போது எனது இல்லத்தில் தங்க விரும்பி, ''நாளை நான் எங்கு தங்குவது?'' என்று அடிக்கடி புரிந்து கொண்ட அவர்களது மற்ற மனைவியர் நபி(ஸல்) அவர்களுக்க அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கிக் கொள்ள அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் எனது இல்லத்தில் தங்கினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1093 நபி(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால், தமது மனைவியருக்கிடையில் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். யாருடைய பெயர் அப்போது வருகிறதோ, அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1094 ''அடிமையை அடிப்பது போன்று; உங்கள் மனைவியை எவரும் அடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவிக்கிறார். புகாரி



குல்வு சட்டம்

1095 ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களது மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஸாபித் இப்னு கைஸ் அவர்களை அவர்களது ஒழுக்கத்திலோ, மார்க்கத்திலோ நான் குறை ஏதும் கூறவில்லை. ஆனால், இஸ்லாத்தில் இருந்து கொண்டு இறை நிராகரிப்பை (இறைவனுக்கு மாறு செய்வதை) வெறுக்கிறேன்'' என்று கூறினார். அதற்கு, ''அப்படியானால் (அவர் மஹராக உனக்களித்த) அவருடைய தோட்டத்தை அவரிடம் திருமபக் கொடுக்கிறாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ''கொடுக்கிறேன்'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஸாபித் இப்னு கைஸிடம்) ''உன்னுடைய தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு இவரை ஒட்டு மொத்தமாக விட்டுவிடு!'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

மற்றோர் அறிவிப்பின்படி ''அவரை தலாக் விவகாரத்துச் செய்யுமாறு அவரிடம் கட்டளையிட்டார்கள்''என்று வாசகம் உள்ளது.

1096 ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களது மனைவி அவரிடமிருந்து குல்வு (விவாகரத்துக் கேட்டார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவருக்கு ஒரு மாதவிடாய் காலத்தை 'இத்தா' என நிர்ணயித்தார்கள் என்று ஹஸன் எனும் தரத்தில் அபூதாவூத் மற்றும் திர்மிதீயில் உள்ளது.

1097 மற்றோர் அறிவிப்பில், ''ஸாபித் இப்னு கைஸ் அருவருப்பான தோற்றமுடையவராக இருந்தார். அதனால் அவரது மனைவி, ''அல்லாஹ்வின் அச்சம் எனக்கு இல்லை என்றால், அவர் என்னுடன் உறவு கொண்ட போது அவருடைய முகத்தில் நான் துப்பி இருப்பேன்'' என்று கூறினார் என அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இப்னுமாஜா

1098 ''இது தான் இஸ்லாத்தின் முதல் 'குல்வு'வாக இருந்தது என, ஸஹ்ல் இப்னு அபீஹஸ்மாஹ்(ரலி) வாயிலாக அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.



'தலாக்' (விவாகரத்து)

1099 ''அனுமதிக்கப்பட்ட விஷயங்களிலேயே 'தலாக்' தான் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமூட்டக் கூடியது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், இப்னு மாஜா

இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முர்ஸல் எனும் தரம் மேலோங்கியள்ளதாக அபூஹாதிம் குறிப்பிட்டுள்ளார்.

1100 நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் இப்னு உமர்(ரலி) அவர்கள் தமது மனைவியை அவர் மாதவிலக்காக இருக்கும் நிலையில் விவாகரத்துச் செய்துவிட்டார். இதைப்பற்றி உமர்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது, ''அவரை திருப்பியழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு (உன் மகனுக்கு) கட்டளையிடுங்கள். பின்னர் அவள் தூய்மையாகும் வரை அவளைத் தன்னிடம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அவர் விரும்பினால் வைத்துக் கொள்ளட்டும் அல்லது அல்லது அவர் விரும்பினால், தொடாமலேயே விவாகரத்து செய்யட்டும். பெண்களை விவாகரத்து செய்வதற்கு இந்தக் கால வரம்பு அல்லாஹ் இட்ட கட்டளையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1101 முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், ''அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு கட்டளையிடு! பின்னர் அவள் தூய்மையாயிருக்கும் நிலையிலோ, கர்ப்பமாக இருக்கும் நிலையிலோ, அவளை அவர் விவாகரத்து செய்யட்டும்'' என்று உள்ளது.

1102 புகாரியுடைய மற்றோர் அறிவிப்பின்படி, ''இது ஒரு தலாக்காக' கணக்கிடப்பட்டது'' என்று உள்ளது.

1103 முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், இடம் பெற்றுள்ளதாவது: (தம்மிடம் தலாக் குறித்து கேள்வி கேட்டவர் ஒருவருக்கு பதிலளித்த போது) இப்னு உமர்(ரலி) அவர்கள், ''நீ அவளை ஒன்று அல்லது இரண்டு முறை தலாக் செய்திருந்தால் (நான் அவ்விதம் ஒருமுறை என் மனைவியை தலாக் செய்த போது) நபி(ஸல்) அவர்கள் நான் அவளைத் திரும்ப அழைத்துக் கொண்டு, மற்றொரு மாதவிடாய்க் காலம் வரும் வரை அப்படியே அவளை வைத்திருந்து: அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை காத்திருந்துவிட்டு பிறகு அவளுடன் உறவு கொள்ளும் முன்பே சொல்லி விடு'' என்று எனக்குக் கட்டளையிட்டார்கள். (அவ்வாறே நீயும் செய்.) நீ அவளை (ஒரே சமயத்தில்) மூன்று தலாக் சொல்லி விட்டால், உன் மனைவியை தலாக் சொல்ல உன் இறைவன் கட்டளையிட்ட வழிமுறையைக் கைவிட்டு அவனுக்கு நீ மாறு செய்தவானாய்'' என்று சொன்னார்கள்.

1104 அவளை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பி விட்டார்கள். அந்த தலாக்கை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மேலும் ''அவள் தூய்மை அடைந்து விட்டால், தலாக் செய்து கொள்ளட்டும்! அல்லது வைத்துக் கொள்ளட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் என்று உள்ளது.

1105 நபி(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும், இன்னும் உமர்(ரலி) அவர்களின் ஆரம்ப இரண்டு வருட ஆட்சிக் காலத்திலும் மூன்று தலாக் (சொல்வது) ஒன்றாகவே கருதப்பட்டது. பின்னர் உமர்(ரலி) அவர்கள், ''எதில் தாமதப்படுத்துவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதோ, அதில் மக்கள் அவசரப்படுகின்றனர். எனவே இதை (ஒரே சமயத்தில் விடப்படும் மூன்று தலாக்கை) அவர்கள் மீது செல்லுபடியாக்கினால், அதுவே சரியானதாக இருக்கும்'' என்று கூறி அதை செல்லுபடியாக்கினார் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1106 ஒருவர் தன்னுடைய மனைவிக்கு மூன்று தலாக்கை ஒருசேரக் கூறிவிட்டார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. (உடனே) அவர்கள் கோபமாக எழுந்து, ''நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும் பொழுதே, அவர் அல்லாஹ்வுடைய சட்டத்தில் விளையாடுகிறாரா?'' என்று கூறினார்கள். ஒரு மனிதர் எழுந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவரை நான் கொன்று விடட்டுமா?'' என்று கேட்டார் என மஹ்மூது இப்னு லபீத்(ரலி) அறிவிக்கிறார். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். நஸயீ

1107 உம்முருகானவை அபூருகானா விவாகரத்துச் செய்துவிட்டார். அவரிடத்தில், ''உன்னுடைய மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு, அவர், ''நான் அவளை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன்'' என்றார். அதற்கு, நான் நன்றாக அறிவேன். அவளைத் திரும்ப அழைத்துக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

1108 அஹ்மதில் இடம் பெற்றுள்ளதாவது: அபூ ருகானா தமது மனைவியை ஒரே அமர்வில் மூன்று தலாக் சொல்லி விட்டார். பின்னர் அதற்காக வருந்தினார். அப்போது, ''மூன்று தலாக்குகளும் ஒன்றாகத் தான் கருதப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடத்தில் கூறினார்கள். மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளின் அறிவிப்பாளர் தொடரிலும் இப்னு இஸ்ஹாக் இடம் பெறுகிறார்.

1109 இதை விட அழகாக அபூதாவூதின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது. அதில்: அபூ ருகானா தமது மனைவியை ஒட்டு மொத்தமாக தலாக் செய்து விட்டார். பின்னர், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதன் மூலம் ஒரு தலாக் கொடுக்கவே விரும்பினேன்'' என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள் சுஹைமாவை அவரிடமே திருப்பியனுப்பி விட்டார்கள் என்று உள்ளது.

1110 ''மூன்று விஷயங்கள்; அவற்றைப் பொறுப்புடன் கையாண்டாலும் அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஏற்பட்டே தீரும். அவற்றை விளையாட்டாகக் கையாண்டாலும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் ஏற்பட்டே தீரும். 1, நிக்காஹ் 2, தலாக் 3, தலாக்கை திரும்ப பெறுதல்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1111 இப்னு அதீ வாயிலாக ளயீஃப் எனும் தரத்தில் மற்றோர் அறிவிப்பில், ''அவை: 1, தலாக் 2, அடிமையை விடுதலை செய்தல் 3, நிக்காஹ்'' என்று உள்ளது.

1112 ''மூன்று விஷயங்களில் விளையாட்டு அனுமதிக்கப்படவில்லை. 1. தலாக் 2. நிக்காஹ் 3. அடிமையை விடுதலை செய்தல். எவரேனும் இவற்றை வாயால் மொழிந்தால், அது கடமையாகி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என உபாதா இபனு ஸாமித்(ரலி) வாயிலாக ஹாரிஸ் இப்னு அபீ உஸாமாவின் நூலில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1113 ''என்னுடைய சமுதாயத்தவர் தங்கள் உள்ளங்கள் எண்ணுவதைப் பேசாமலிருக்கும் வரை அல்லது அவற்றை செயல்படுத்தாமலிருக்கும் வரை அவர்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1114 என்னுடைய சமுதாயத்தில் மறதியாகவோ, தவறுதலாகவோ அல்லது நிர்பந்தத்தின் காரணமாகவோ செய்யும் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். இப்னுமாஜா,  ஹாகிம் இந்த அறிவிப்பு நிரூபணமாகவில்லை.

1115 ''மனிதன் தன்னுடைய மனைவியைத் தானாக ஹராமாக்கிக் கொண்டால், அது ஒரு பொருட்டல்ல, (அதை தலாக்காக கருத முடியாது)'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறி, ''உண்மையில் அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் தான் உங்களுக்கு அழகிய முன் மாதிரியுள்ளது'' என்றும் கூறினார். புகாரி

1116 ''மனிதன் தன்னுடைய மனைவியைத் தனக்கு ஹராமாக்கிக் கொண்டால், அது சத்தியம் செய்ததாகும். எனவே அதற்குப் பரிகாரம் செய்தாக வேண்டும்'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என முஸ்லிமில் உள்ளது.

1117 ஜவ்னுடைய மகள் நபி(ஸல்) அவர்களுக்குத் நிக்காஹ் செய்து வைக்கப்பட்டு, அவரை நபி(ஸல்) அவர்கள் நெருங்கிய போது, ''நான் உங்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டாய். நீ உன்னுடைய குடும்பத்தரிடம் சென்று சேர்ந்து கொள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1118 ''திருமணத்திற்கு முன்பு 'தலாக்' இல்லை. இன்னும் உரிமையாளராவதற்கு முன்னால் அவனை விடுதலை செய்வதென்பது இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அபூ யஃலா

இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இது மஃலூல் எனும் தரத்தில் உள்ளதாகும்.

1119 மேற்கண்ட ஹதீஸ் போன்றே மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வாயிலாக இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது. இது ஹஸன் எனும் தரத்தில் உள்ளது. ஆனால் இதுவும் மஃலூல் எனும் தரத்தில் உள்ளதாகும்.

1120 ''எந்தப் பொருளுக்கு தான் உரிமையாளனில்லையோ, அந்தப் பொருளை நேர்ச்சை செய்ய ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) உரிமையில்லை. எந்த அடிமைக்கு அவன் உரிமையாளனில்லையோ அந்த அடிமையை விடுதலை செய்யவும் அவனுக்கு உரிமையில்லை. எந்தப் பெண்ணுக்கு (மணபந்தத்தின் வாயிலாக) அவன் உரிமையாளனாக இல்லையோ அவளைத் தலாக் செய்யவும் அவனுக்கு உரிமையில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தனது தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான சட்டங்களில் இந்த ஹதீஸ் மிகவும் ஸஹீஹ் என்று புகாரி குறிப்பிட்டுள்ளார்.

1121 ''மூன்று நபர்களின் குற்றங்கள் (அவர்களின் வினைச்சுவடியில்) எழுதப்பட மாட்டா 1. தூங்கிக் கொண்டிருப்பவர் கண்விழிப்பதற்கு முன்பு வரை செய்யும் குற்றங்கள் 2, சிறியவர் பெரியவராகும் முன்பு செய்யும் குற்றங்கள் 3, புத்தி சுவாதீனமிழந்தவன் புத்தி சுவாதீனமடையும் முன்பு அல்லது தெளிவடையும் முன்பு செய்யும் குற்றங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, மற்றும் இப்னு மாஜா.

இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இப்னு ஹிப்பானிலும் உள்ளது.



விவாகாரத்தைத் திரும்ப பெறுதல்

1122 சாட்சி ஏதும் இல்லாமல் (மனைவியைத்) 'தலாக்' செய்து பின்னர் (சாட்சி ஏதும் இல்லாமலேயே) திருப்பியழைத்துக் கொண்ட ஒருவரைப் பற்றி தம்மிடம் கேட்கப்பட்டதற்கு, ''தலாக்கின் போதும், அதைத் திரும்பப் பெறும் போதும் சாட்சியை ஏற்படுத்திக் கொள்க!'' என்று பதிலளித்ததாக இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவிக்கிறார்.

இது அபூ தாவூதில் 'மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது 'ஸஹீஹ்' எனும் தரத்தில் உள்ளது.

1123 பைஹகீயுடைய மற்றோர் அறிவிப்பில், (தலாக் செய்துவிட்ட) தன்னுடைய மனைவியை, சாட்சி ஏதுமில்லாமல் திரும்பப் பெற்றுக் கொண்ட ஒருவரைப் பற்றி கேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அது சரியான வழி முறையல்ல. இனிமேல் சாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்கள் என உள்ளது.

தப்ரானியுடைய மற்றொரு அறிவிப்பில் ''அவர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரட்டும்'' என்பது அதிகப்படியாக உள்ளது.

1124 நான் என் மனைவியை தலாக் செய்யும் போது, என் தந்தை உமர்(ரலி) அவர்களிடம், ''அவளைத் திருப்பியழைத்துக் கொள்ளும்படி அவருக்குக் கட்டளை இடுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்



ஈலா, ளிஹார் மற்றும் அதற்குரிய பரிகாரம்

1125 நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் சிலரை ஈலா செய்துவிட்டு, ஹராமாக்கிக் கொண்டார்கள். பின்னர் தாம் ஹராமாக்கிக் கொண்டதை மீண்டும் ஹலால் ஆக்கிக் கொண்டார்கள். இன்னும் சத்தியம் செய்ததற்காகப் பரிகாரம் செய்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்

ஈலா செய்தவன் (அதே நிலையில்) நான்கு மாதங்களை கழித்து விட்டால், அவர் ஆட்சியாளர் முன்பு கொண்டு வரப்பட்டு, ஆட்சியாளர் முன்பே 'தலாக்' செய்ய வேண்டும். அவர் தலாக் மொழியாதவரை 'தலாக்' நிறைவேறாது என்று இப்னு உமர்(ரலி) கூறினார். புகாரி

'நான் நபித்தோழர்களில், பத்துக்கும் மேற்பட்டோரை ஈலாவை நான்கு மாதம் முடிந்த உடன் நிறுத்தி விடுபவர்களாகக் கண்டுள்ளேன்'' என, சுலைமான் இப்னு யஸார்(ரலி) அறிவிக்கிறார். அஷ் ஷாஃபிஈ

''அறியாமைக் காலத்தில் 'ஈலா' ஒரு வருடம், இரண்டு வருடம் என்றிருந்தது (இஸ்லாத்தில்) அது நான்கு மாதங்கள் தான் என, அல்லாஹ் அதற்கு கால நிர்ணயம் செய்து விட்டான். நான்கு மாதங்களுக்குக் குறைந்ததில் 'ஈலா' இல்லை'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். பைஹகீ

1126 ஒருவர் தன்னுடைய மனைவியை ளிஹார் செய்து விட்டு, பின்னர் அவளுடன் உறவு கொண்டு விட்டு, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''நான் பரிகாரம் செய்வதற்கு முன்பே அவளுடன் உறவு கொண்டு விட்டேன்'' என்று கூறினார். அதற்கு, ''அல்லாஹ் உனக்களித்துள்ள சட்டத்தை நீ நிறைவேற்றாதவரை நீ அவளை நெருங்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதியில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முர்ஸல் எனும் தரமே மேலோங்கியள்ளதாக நஸயீ குறிப்பிடுகிறார்.

இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக பஸ்ஸாருடைய மற்றொரு அறிவிப்பில் ''பரிகாரம்'' செய்து கொள்! இனிமேல் இவ்வாறு செய்யாதே!'' என்று உள்ளது.

1127 ரமளான் வந்து விட்டதால், அதில் என் மனைவியுடன் உறவு கொண்டு விடுவனோ, என்று பயந்தவனாக நான் என்னுடைய மனைவியை ளிஹார் செய்துவிட்டேன். ஒர் இரவில் அவளது அங்கம் ஒன்று வெளிப்பட்டு (என்னைக் கவர்ந்து) விட்டதால், நான் அவளுடன் உறவு கொண்டு விட்டேன். அதற்காக நபி(ஸல்) அவர்கள் என்னிடம், நி ஓர் அடிமையை விடுதலை செய்! என்று கூறினார்கள். ''என்னுடைய தலையைத் தவிர வேறு எந்தத் தலைக்கும் நான் உரிமையாளன் இல்லை'' என்று நான் கூறினேன். ''அப்படியானால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றுக்கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், ''எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை நோன்பினால் தானே ஏற்பட்டுள்ளது? என்று கூறினேன். அதற்கு, ''ஏழைகளுக்கு ஒரு ஃபரக்'' அளவு பேரீச்சம் பழத்தை உணவளி'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸலமா இப்னு ஸக்ர்(ரழி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு குஸைமா மற்றும் இப்னு அல் ஜாரூதில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



'லிஆன்' சட்டம்

1128 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே!'' எங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை மானக்கேடான செயலில் ஈடுபட்டிருக்கக் கண்டால், அவர் என்ன செய்வது?'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் பேசினாலும், மிகப்பெரியதொரு விஷயத்திற்காகத்தான் பேசுவார்கள்; மௌனமாயிருந்தாலும் அப்படிப்பட்டதொரு விஷயத்திற்காகத் தான் மௌனமாயிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவர் பின்னர் மறுபடியும் வந்து, ''நான் தங்களிடம் கேட்ட விஷயத்திலே, நானே பாதிக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறினார். ஏற்கனவே அல்லாஹ் இது தொடர்பான சூரத்துன்னூர் வசனங்களை அவருக்கு ஓதிக் காண்பித்து உபதேசம் செய்தார்கள். இன்னும் உலகத் தண்டனை மறுமைத் தண்டனையை விட லேசானது என்றும் தெரிவித்தார்கள்'' அதற்கு அவர் ''இல்லை தங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் அவர்களுக்கெதிராகப் பொய் சொல்லவில்லை'' என்று கூறினார். பின்னர், அவரது மனைவியை அழைத்து அவளுக்கும் அவ்வாறே உபதேசம் செய்தார்கள். அவள் ''இல்லை, தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் பொய்யர்'' என்று கூறினாள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் முதலில் அந்த மனிதரை அழைத்து சத்தியம் செய்யச் சொன்னார்கள். அவர் நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் இரண்டாவதாக அந்தப் பெண்ணை அழைத்து சத்தியம் செய்யச் சொன்னார்கள். பின்னர், இருவரையும் பிரித்து விட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்.

1129 நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்த இருவரிடமும், ''உங்கள் கணக்கு அல்லாஹ்விடம் உள்ளது; ஏனெனில், உங்கள் இருவரில் ஒருவர் பொய்யராவார். இனி அந்தப் பெண்ணுடன் உனக்கு எந்தத் தொடர்புமில்லை'' என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மஹர் தொகை என்னாவது?'' என்று கேட்டார். ''நீ உண்மை பேசியிருந்தால் அவளது பிறப்பு உறுப்பை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டு அவளை நீ அனுபவித்ததற்கு அந்த மஹர் தொகை பகரமாம் விடும். நீ பொய் சொல்லியிருந்தால் (அதற்கு தண்டனையாக) அந்தப் பொய்யே அவளிடமிருந்து (மஹர் தொகையைத் திரும்பப் பெறவிடாமல்) உன்னை தூரமாக்கி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1130 அந்தப் பெண்ணைப் பாருங்கள். அவள் கட்டழகான முழு வடிவம் கொண்ட வெண்மையான குழந்தையைப் பெற்றெடுத்தால், அது அவளது கணவனது பிள்ளையாகும். அவள் குட்டையான கருப்பான குழந்தையப் பெற்று எடுத்தால், அது அவளது கணவனது பிள்ளையாகும். அவள் குட்டையான கருப்பான குழந்தையைப் பெற்று எடுத்தால், அந்தப் பிள்ளை, பழி சுமத்தப்பட்டவனின் பிள்ளையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1131 ஐந்தாவது முறை தனது வாயில் கையை வைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் ஆணுக்குக் கட்டளையிட்டார்கள். ''நிச்சயமாக இந்த முறை சத்தியம் செய்வது (தண்டனையை) விதித்துவிடும்'' என்றும் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

1132 'லிஆன்' செய்த இருவரைப் பற்றிக் குறிப்பிடு கையில், அவர்கள் தம் சத்தியத்தை முடித்துக் கொண்டதும், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அவள் விஷயத்தில் பொய்யுரைத்தேன். அவளை என்னிடத்தில் நிறுத்திக் கொண்டால், நான் மூன்று 'தலாக்' செய்தாக வேண்டும். பின்னர் நபி(ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிடும் முன்பு மூன்று தலாக் செய்துவிட்டார் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1133 நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ''நிச்சயமாக என்னுடைய மனைவி அவளைத் தொடுபவர்களின் கரத்தை விலக்குவதில்லை'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''அவளைத் தூரமாக்கி விடு!'' என்று கூறினார்கள். அதற்கவர் ''என்னுடைய உள்ளம் அவளைப் பின் தொடரும் என அஞ்சுகிறேன்'' என்று கூறினார். ''அப்படியானால் அவளைக் கொண்டு பலன் பெற்றுக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதி மற்றும் பஸ்ஸார். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக நஸயீயின் மற்றொரு அறிவிப்பில் ''அவளை 'தலாக்' செய்துவிடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர், ''அவளது பிரிவை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று கூறினார் ''அப்படியானால் அவளைக் கொண்டு பலன் பெற்றுக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதி மற்றும் பஸ்ஸார். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்

இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக நஸயீயின் மற்றொரு அறிவிப்பில் ''அவளை 'தலாக்' செய்துவிடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர், ''அவளது பிரிவை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று கூறினார். அதற்கு, ''அப்படியானால் அவளை வைத்துக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.

1134 'லிஆன்' செய்த இருவரையும் பற்றிய வசனம் அருளப்பட்ட போது எந்தப் பெண் ஒரு குடும்பத்தாரைச் சேராத ஒரு பிள்ளையை (தன் கணவனுக்குப் பெறாமல் தன் கள்ளக் காதலனுக்குப் பெற்ற குழந்தையை கணவனின்) அந்தக் குடும்பத்தார் இடையே (அவர்களின் சந்ததி என்று பொய் சொல்லிப்) புகுத்துகிறாளோ, அவளுக்கும் அல்லாஹ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும், அவளை அல்லாஹ் ஒரு போதும் சுவர்க்கத்தில் நுழைய விடமாட்டான். இன்னும் எவன் தன்னுடைய பிள்ளையைப் பார்த்துக் கொண்டே (தனது பிள்ளை என அறிந்து கொண்டே அது தன்னுடைய பிள்ளை இல்லை என) மறுக்கின்றானோ? அல்லாஹ் அவனை விட்டுத் தன்னைத் திரையிட்டுக் கொள்வான். இன்னும் அவனை முந்தியவர்கள் பிந்தியவர்கள் அனைவரின் முன்பாகவும் இழிவுபடுத்தி விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற தான் கேட்டதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ மற்றும் இப்னுமாஜா

இது இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண் சிமிட்டும் அளவு நேரமேனும் எவராவது தன்னுடைய பிள்ளையை ஒப்புக் கொண்டால் பின்னர் அதை மறுப்பதற்கு அவனுக்கு உரிமையில்லை'' என்று உமர்(ரலி) கூறினார். பைஹகீ

இது ஹஸன், மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1135 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மனைவி கறுப்பான பையனைப் பெற்றிருக்கிறாள்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?'' என்று கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்றார் ''அவற்றின் நிறங்கள் என்ன?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்றார். அதற்கு ''அது எப்படிப் பிறந்தது?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ''அதன் ஒரு நரம்பு அவ்வாறு பெற்றிருக்கக் கூடும்'' என்றார். ''அப்படியானால் உன்னுடைய மகனையும், ஏதாவது ஒரு நரம்பு இவ்வாறு பெற்றிருக்கலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

முஸ்லிமுடைய மற்றொரு அறிவிப்பில், ''அவர் (தன் மகனை) மறுக்க முற்பட்டார்'' என்று இடம் பெற்றுள்ளது. அதன் இறுதியில் அவ்வாறு ''நபி(ஸல்) அவர்கள் மறுப்பதற்கு அனுமதியளிக்கவில்லை'' என்று இடம் பெற்றுள்ளது.



இத்தா விதவை அனுஷ்டிக்கும் துக்கம், கருப்பைச் சோதனை முதலியன

1136 சுபைஆ அல் அஸ்லமிய்யா(ரலி) அவர்கள் தம் கணவரது மரணத்திற்குப் பின்பு (குழந்தை பெற்றெடுத்து) சில இரவுகள் 'நிஃபாஸ்' உதிரப் போக்குள்ளவராக இருந்தார். பின்னர் அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று திருமணத்திற்கு அனுமதி கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்து விட்டார்கள். பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டார் என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

இதன் மூலம் முஸ்லிமிலும் உள்ளது. மற்றொரு அறிவிப்பில், ''அவர் தன் கணவன் இறந்து நாற்பது இரவுகளுக்குப் பின்பு குழந்தை பெற்றார்'' என்று உள்ளது. பெண் உதிரப் போக்குள்ளவளாக இருக்கும் நிலையில் திருமணம் செய்வது குற்றமில்லை. ஆனால், ''அவள் தூய்மை அடையும் வரை கணவன் அவளை நெருங்கக் கூடாது'' என்று ஜுஹ்ரி கூறினார் என முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

1137 மூன்று மாதவிடாய் காலகட்டம் வரை இத்தா இருக்க வேண்டுமென பாரிரா கட்டளையிடப்பட்டார் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். ஆனால் இது 'மஃலூல் எனும் தரத்தில் உள்ளது.

1138 மூன்றாவது முறை 'தலாக்' செய்யப்பட்ட பெண்ணைப் பற்றிக் குறிப்பிடுகையில், ''அவளுக்குத் தங்குமிடமோ செலவுத் தொகையோ இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஃபாத்திமா பின்த்து கைஸ்(ரலி) வாயிலாக அஷ்ஷு அபிய்யி அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1139 ''இறந்துவிட்ட எவருக்காகவும், ஒரு பெண் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவன் இறந்து விட்டால் மட்டும் மனைவி நான்கு மாதம் பத்து நாள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அப்போது அவள் சாயமிடப்பட்ட ஆடைகள் அணியக் கூடாது. ஆனால் சாயமிடப்பட்ட பருத்தி ஆடைகள் அணியலாம். கண்ணுக்கு கர்மா போடக்கூடாது. நறுமணமும் பூசக் கூடாது. தூய்மையடைந்து விட்டால் நறுமணச் செடிகளிலிருந்து சிறிதளவு பயன்படுத்தலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. அபூதாவூத் மற்றும் நஸயீயில் ''சாயம் பூசிக் கொள்ளக் கூடாது'' என்றும் நஸயீயில் ''தலைவாரிக் கொள்ளக் கூடாது'' என்றும் உள்ளது.

1140 நபி(ஸல்) அவர்கள், ''அது முகத்தை வண்ணத்தால் அழகாக்கி விடும். ஆகவே, அதை இரவில் மட்டும் இட்டுக் கொள்; பகலில் அகற்றிவிடும். நறுமணம் பூசித் தலை வாராதே! ஏனெனில் அது சாயமாகும்'' என்று சொன்னார்கள். நான், ''எதனால் நான் தலைவாரிக் கொள்வது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இலந்தை இலைச் சாறினால் தலைவாரிக் கொள்'' என்று சொன்னார்கள். அபூதாவூத், நஸயீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1141 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மகளின் கணவர் இறந்துவிட்டார். அவளைக் கண்வலி பீடித்துள்ளது. (அதனால்) அவளுக்கு சுர்மா இடலாமா?'' என்று ஒரு பெண் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ''கூடாது'' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1142 என்னுடைய சின்னம்மா 'தலாக்' செய்யப்பட்டு (இத்தாவில்) இருந்த போது பேரீச்சம் பழத்தைப் பறிக்க விரும்பினார். அப்போது அவர் வெளியில் செல்வதைக் குறித்து ஒருவர் கடிந்து கொண்டார். அதனால் (அதைப் பற்றி சட்டம் கேட்க) அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது ''நீ உனது பேரீச்சம் பழத்தை பறித்துக் கொள். ஏனெனில், அதை நீ தர்மம் செய்யலாம்; அல்லது அதன் மூலம் ஏதேனுமொரு நல்ல காரியம் செய்யலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1143 என்னுடைய கணவர் தம் அடிமைகளைத் தேடிச் சென்றார். அவர்கள் அவரைக் கொலை செய்துவிட்டார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ''நான் என்னுடைய குடும்பத்தாரிடம் செல்லட்டுமா? ஏனெனில், என்னுடைய கணவர் எனக்காக அவருக்குச் சொந்தமான வீடு எதையும் கொடுக்கவில்லை. எனது செலவிற்காகவும் எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம்'' என்று கூறினார்கள். நான் என்னுடைய அறையில் இருந்த போது மறுபடியும் என்னை அழைத்து, ''இத்தாவுடைய காலம் முடியும் வரை நீ உன்னுடைய வீட்டிலேயே தங்கியிரு!'' என்று கூறினார்கள் நான் என்னுடைய அந்த வீட்டில் நான்கு மாதம் பத்து நாள் இத்தாவைக் கழித்தேன். அதற்குப் பின்பு உஸ்மான்(ரழி) எனது இந்த நிகழ்ச்சியை வைத்தே அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என ஃபுரைஆ பின்த்து மாலிக்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் துஹலி

இப்னு ஹிப்பான்,  ஹாகிம், திர்மிதீ ஆகியவற்றில் இது 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1144 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய கணவர் என்னை மூன்று 'தலாக்' செய்து விட்டார். எனவே இந்தக்கால கட்டத்தில் எனக்கேதும் நேர்ந்து விடும் என நான் அஞ்சுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு அவர் என்னுடைய வீட்டை மாற்றிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; நானும் மாற்றிக் கொண்டேன் என ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1145 நபி(ஸல்) அவர்களது சுன்னத்தை எங்களுக்கு குழப்பி விடாதீர்கள். 'உம்முல் வலத்' உடைய எஜமான் இறந்துவிட்டால் நான்கு மாதம் இறந்து விட்டால் நான்கு மாதம் பத்து நாள் அவளது 'இத்தா' காலமாகும் என்று அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார். அஹ்மத், அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா

இது  ஹாகிமில் 'ஸஹீஹ்' எனும் தரத்திலும், தாரகுத்னீயில் 'முன்கதி' என்பதுடன் 'மஃலூல்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''தலாக் செய்யப்பட்ட பெண்கள் (இத்தா காலமாக) மூன்று குர்உகள் வரை எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும்'' (2:227) என்னும் இறை வசனத்தில் சொன்ன மூன்று குர்உகள் என்பது மாதவிடாய்க்கு பின் தூய்மையடையும் (மூன்று) காலங்களைக் குறிக்கும்'' என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

மாலிக்(ரஹ்) அவர்கள் ஒரு சம்பவத்தை விவரிக்கும் போது, இதை ஸஹீஹான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்து உள்ளார்கள்.

1146 ''அடிமைப் பெண்ணுடைய தலாக் இரண்டாகும். அவளது இத்தா காலம் இரண்டு மாத விடாயாகும்'' என்று இப்னு உமர்(ரலி) கூறினார். தாரகுத்னீ. இது மர்ஃபீல் மற்றும் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1147 ஆயிஷா(ரலி) வாயிலாக அபூதாவூத், திர்மிதீ, இப்னு இடம் பெற்றுள்ளது. இது  ஹாகிமில் மட்டும் ஸஹீஹ் என்று உள்ளது. ஆனால், இது ளயீஃப் என்பதில் அனைவரும் ஒத்த கருத்துடன் உள்ளனர்.

1148 ''தனது தண்ணீரை அந்நியனின் பயிரில் பாய்ச்சுவது (கர்ப்பமுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் அல்லது அடிமைப் பெண்ணுடன் பாலுறவு கொள்வது) அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகின்ற எந்த ஆணுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ருவைஃபி இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ

இது இப்னு ஹிப்பானில் ''ஸஹீஹ்'' எனும் தரத்திலும், பஸ்ஸாரில் 'ளயீஃப்' எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''கணவன் காணாமல் போன பெண், நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குப் பின் நான்கு மாதம் பத்து நாள் இத்தா கொள்ள வேண்டும் என்று உமர்(ரலி) கூறினார்கள். மாலிக், ஷாபிஈ

1149 ''கணவன் காணாமல் போன பெண், அவளிடம் அவனைப் பற்றிய தெளிவான செய்தி வரும் வரை அவனது மனைவியாகவே இருப்பாள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். இது தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1150 ஒரு பெண்ணுடன் அவளை மணந்து கொண்டவரோ, அவளை மணந்து கொள்ளத் தர விதிக்கப்பட்டுள்ள (நெருங்கிய) உறவினரோ, அன்றி, வேறெவரும் இரவு நேரத்தில் (தனியாகத்) தங்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1151 ''திருமண உறவு தடை செய்யப்பட்டவருடனல்லாமல் வேறு எந்த ஆணும், ஒரு பெண்ணுடன் ஒரு போதும் தனித்திருக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1152 ''கர்ப்பிணியாக இருப்பவள், தனது குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை உறவு கொள்ள வேண்டாம். இன்னும் கர்ப்பிடிணயாக இல்லாதவள் ஒரு முறை மாதவிலக்காம் தூய்மையடையாதவரை உறவு கொள்ள வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் அவ்தாஸ் யுத்தக் கைதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது  ஹாகிமில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1153 மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அப்பாஸ் (ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ஹதீஸ் உள்ளது.

1154 ''(ஒரு பெண்ணின்) படுக்கைக்குச் சொந்தக்காரர் எவரோ, அவருக்கே (அவளது) குழந்தை உரியதாகும். (அப் பெண்ணுடன்) விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1155 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா(ரலி) வாயிலாக நஸயீயில் பதிவாகியள்ளது.

1156 இப்னு மஸ்வூத்(ரலி) வாயிலாகவும் நஸயீயில் பதிவாகி உள்ளது.

1157 அபூதாவூதில் உஸ்மான்(ரலி) வாயிலாகவும் பதிவாகியள்ளது.



பால்குடிச் சட்டம்

1158 ''ஒரு முறை அல்லது இரண்டு முறை (குழந்தை பாலை) சிறிது உறிஞ்சுவதால், திருமண உறவு விலக்கப்பட்டதாக ஆகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1159 ''பெண்களே! உண்மையில் உங்கள் (பால்குடிச்) சகோதரர்கள் எவரொருவர் ஆராய்ந்து (அறிந்து வைத்துக்) கொள்ளுங்கள். ஏனெனில், (குழந்தை) பசியின் காரணத்தால் (ஒரு பெண்ணிடம்) பால்குடிப்பதன் மூலமாகத் தான் பால்குடி உறவு ஏற்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1160 ஸஹ்லா பின்த்து ஸுஹைல் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அபூஹுதைஃபாவால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஸாலிம் எங்கள் வீட்டில் இருக்கிறார். அவர் இப்போது மற்ற மனிதர்களைப் போன்று பருவம் அடைந்து விட்டார்'' என்று கூறினார். அதற்கு, ''அவருக்குப் பால் கொடுத்திருந்தால் நீ அவருக்கு ஹராமாம் விடுவாய்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1161 அபுல் குஅய்ஸ் உடைய சகோதரர் பர்தா சட்டம் வந்த பின்பு என்னிடம் வந்து (பார்க்க) அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டேன். நபி(ஸல்) அவர்கள் வந்ததும் நபி(ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்ததை தெரிவித்தேன். நபி(ஸல்) அவர்கள் அவரை, என் முன்பு வர அனுமதித்து, அவர் உன்னுடைய சிறிய தந்தையாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1162 ''பத்து தடவை வாய் வைத்துப் பாலருந்துவது (தான்)(திருமண உறவைத்) தடை செய்யக் கூடியதாகும்'' என்று குர்ஆனில் (சட்டம்) இருந்தது. பின்னர் அது ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அது (ஓதப்படக் கூடாத வசனமென மக்கள் அறியாததால் இப்போதும்) குர்ஆனிலிருந்து ஒதப்படுகிறது என்று ஆயிஷா(ரலி) கூறினார். முஸ்லிம்

1163 ஹம்ஸாவுடைய மகளை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு, ''ஹம்ஸா என்னுடைய பால்குடி சகோதரராக உள்ள காரணத்தால் அவள் எனக்கு அனுமதிக்கப்பட்டவளல்ல. இரத்த சம்பந்தமான உறவுகளில் எவெரல்லாம் (மணம் செய்ய) விலக்கப்பட்டவர்களோ, பாலூட்டும் உறவுகளிலும் அவர்கள் (மணம் செய்ய) விலக்கப்பட்டவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1164 ''பால்குடிப் பருவத்தில் இரைப்பையைச் சென்றடையும் விதமான பாலூட்டுதலைத் தவிர மற்றவை (திருமண உறவை) விலக்கி விடாது. இது பால்குடி மறக்கடிப்பதற்கு முன்பு நிகழ வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலாமா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1165 ''இரண்டு வருடத்திற்குள் இல்லாமல் பால்குடி (கணக்கில்) இல்லை'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். தாரகுத்னீ, இப்னு அதீ

இது மர்ஃபூஉ மற்றும் மவ்கூஃப் எனும் தரத்தில் உள்ளது. இரண்டு நூலாசிரியர்களிடத்திலும் மவ்கூஃப் எனும் தரமே மேலோங்கியள்ளது.

1166 ''எலும்பை இணைத்து; வலுப்படுத்தி, சதையை வளர்க்கும் (கால கட்டத்தில்) பாலூட்டலைத் தவிர வேறெதுவும் (பால்குடி உறவை உருவாக்கும்) பாலூட்டலாகக் கருதப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

1167 உம்மு யஹ்யா பின்த்து அபீ இஹாபை நான் திருமணம் செய்ததும் ஒரு பெண் வந்து, ''நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டியுள்ளேன்'' என்று கூறினார். அதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ''இவ்வாறு சொல்லப்படும் போது நீ எப்படி அவளுடன் (மணபந்தத்தில்) இருக்க முடியும்?'' என்று அவர்கள் கூறினார்கள். நான் அவளை விட்டுப் பிரிந்து விட்டேன். அந்தப் பெண் மற்றொரு திருமணம் செய்து கொண்டார் என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1168 அறிவு குன்றிய பெண்களின் பாலை (பிள்ளைகளுக்கு) ஊட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என ஸியாத் அஸ்ஸஹ்மீ அறிவிக்கிறார். அபூதாவூத்

இது முர்ஸல் எனும் தரத்தில் உள்ளது. இன்னும் ஸியாத் ஒரு நபித் தோழர் அல்லர்.



செலவிடுதல்

1169 அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த்து உத்பா நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அபூ ஸுஃப்யான் கஞ்சத்தனமான மனிதர். அவர் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் போதுமான அளவு பணத்தை செலவிற்குக் கொடுப்பதில்லை. எனவே, அவருக்குத் தெரியாமல், அவருடைய பணத்திலிருந்து நான் எதையும் எடுத்தால்; அது என் மீது குற்றமாம் விடுமா?'' என்று கேட்டதற்கு, ''நியாயமான அளவிற்கு உனக்கும் உன்னுடைய பிள்ளைகளுக்கும் போதுமானதை அவருடைய பணத்திலிருந்து நீ எடுத்துக்கொள்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1170 நாங்கள் மதீனாவிற்கு வந்த போது நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று மக்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அபபோது, ''கொடுப்பவரின் கையே உயர்ந்த கையாகும். எனவே நீங்கள் உங்கள் வீட்டாரிலிருந்து, உங்கள் தாய், தந்தை, சகோதரர், சகோதரயிலிருந்து கொடுக்கத் துவங்குகள். பின்னர் உங்களுக்கு நெருக்கமான உறவினர்களுக்கும் பின்னர், அதற்கடுத்து நெருக்கமான உறவினர்களுக்கும் கொடுங்கள்'' என்று கூறினார்கள் என தாரிக் அல் முஹாரிபீ(ரலி) அறிவிக்கிறார். நஸயீ

இது தாரகுத்னீ மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1171 ''அடிமைக்கு உணவு அளிப்பதும் உடை தருவதும் அவனது சக்திக்கு மீறிய வேலையை அவன் மீது சுமத்தாமலிருப்பதும் அவனது எஜமானன் மீது கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1172 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்கள் மனைவியருக்கு எங்கள் மீதுள்ள உரிமை என்ன?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ''நீ உண்ணும் போது அவளை உண்ணச் செய்! நீ உடுத்தும் போது அவளையும் உடுத்தச் செய்!'' என்று கூறினார்கள் என ஹகீம் இப்னு மு ஆவியா(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) இது முழுமையாக 1048வது ஹதீஸில் இடம் பெற்றுவிட்டது.

1173 நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், அறியப்பட்ட வழிமுறைப்படி அவர்களுக்கு உணவு, உடுத்துவது அனைத்தும் (அளிப்பது) ஆண்களான உங்கள் மீது கடமையாகும்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரழி) ஹஜ்ஜுடைய நீண்ட ஹதீஸில் கூறினார். முஸ்லிம்

1174 ''தனது குடும்பத்திற்குச் செலவிடாமல் அவர்களை வீண் அடிப்பதே ஓர் ஆணுக்கு (அவனை அழித்திட)ப் போதுமான பாவமாம் விடுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ

''தான் எவரைப் பரிகாரமக்கக் கடமைப்பட்டுள்ளானோ அவர்களுக்கு (அதாவது) தன் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தாருக்கு செலவிடாமல் இருப்பதே ஓர் ஆணுக்கு (அவனை அழித்திடப்) போதுமான பாவமாம் விடுகிறது'' எனும் வாசகம் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

1175 கணவன் இறந்து விட்ட கர்ப்பமான விதவை பெண்ணைப் பற்றிக் கூறுகையில், ''அவளுக்குச் செலவுத் தொகை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக மர்ஃபூஃ எனும் தரத்தில் ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். பைஹகீ

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். இன்னும் இது மவ்கூஃப் எனும் தரத்தில் பாதுகாக்கப்பட்டது.

1176 செலவுத் தொகை இல்லை என நிரூபமான ஃபாத்திமா பின்த்து கைஸ் உடைய ஹதீஸ் முன்பு சென்றுள்ளது. முஸ்லிம்

1177 ''மேலிருக்கும் கை கீழிருக்கும் கையை விடச் சிறந்தது. மனிதன் தான் பராமாரிப்பவளுக்கு (மனைவிக்கு) முதலில் அளிக்கட்டும். (ஏனெனில்) 'எனக்கு உணவு கொடு இல்லையேல், என்னை தலாக் செய்து விடு' என்று பெண் கூறுகிறாள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1178 ''எவர் தன்னுடைய மனைவிக்குப் போதிய அளவு செலவிட இயலாதவராக உள்ளாரோ அவரையும் அவருடைய மனைவியையும் பிரித்து வைத்து விட வேண்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் அறிவிக்கிறார்.

ஸயீத் இப்னு முஸ்ய்யிப்பிடம், ''இது நபிவழியா'' என்று அபூஜினாத் கேட்டதற்கு, ''ஆம்; இது நபிவழி தான்'' என்று கூறினார் என ஸுப்யான் வாயிலாக ஸயீத் இப்னு மன்ஸுரில் பதிவாகியள்ளது. இது முர்ஸல் எனும் தரத்திலுள்ள பலமான அறிவிப்பாகும்.

எவர் தங்கள் மனைவியரை விட்டு ஒடிவிட்டார்களோ, அவர்களைப் பிடித்து அவர்கள் தங்கள் மனைவியருக்குச் செலவிற்குக் கொடுக்க வேண்டும் அல்லது விவாகரத்துச் செய்து விட வேண்டும்; அப்படி அவர்கள் விவாகரத்துச் செய்துவிட்டால், அந்த (இடைப்பட்ட) காலத்தில் அவர்களுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருந்த செலவுத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும் என்று கட்டளையிடுமாறு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு (ஆணையிட்டு) உமர்(ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அஷ்ஷாஃபிஈ, அல்பைஹகீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1179 (''தர்மம் செய்யுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள்.) அப்போது ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது'' என்று கூறினார். அதற்கு, ''அதை உன்னுடைய பிள்ளைகளுக்குச் செலவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்று உள்ளது'' என்று கூறினார். அதற்கு, ''நீ அதை உன்னுடைய மனைவிக்குச் செலவிடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்று உள்ளது என்றார். அதற்கு, ''நீ அதை உன்னுடைய ஊழியர்களுக்குச் செலவிடு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் இன்னொன்றும் உள்ளது'' என்றார். அதற்கு, ''அதைப் பற்றி நீயே தீர்மானித்துக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். ஷாஃபிஈ, அபூதாவூத், நஸாயீ,  ஹாகிம்

இங்கு அபூதாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1180 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் யாருக்கு அதிக நன்மை செய்ய வேண்டும்?'' என்று நான் நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்டதற்கு, ''உன்னுடைய தாய்க்கு'' என்று அவர்கள் கூறினார்கள். ''பின்னர் யாருக்கு?'' என்று நான் கேட்டதற்கு ''உன்னுடைய தாய்க்கு'' என்றே கூறினார்கள். ''பின்னர் யாருக்கு?'' என நான் (நான்காவது முறை) கேட்டதும், உன்னுடைய நெருங்கிய உறவினருக்கு; பின்னர் அதற்கடுத்து நெருங்கிய உறவினருக்கு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு  ஹாகிம் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



பொறுப்பேற்றல்

1181 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இவன் என்னுடைய மகன்! என்னுடைய வயிறு இவனுக்குப் பாதுகாப்பான தொட்டிலாகவும், என்னுடைய மார்பு இவனுக்குத் தண்ணீர்ப் பையாகவும், என்னுடைய மடி இவனுக்கு வீடாகவும் இருந்தது. இவனுடைய தந்தை என்னை விவாகரத்துச் செய்து விட்டார். அவர் இவனையும் என்னிடமிருந்து பறித்துக் கொள்ள விரும்புகிறார்'' என்று ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் கூறியதற்கு, ''நீ (மறு)மணம் செய்து கொள்ளாத வரை அவன் மீது நீயே அதிகம் உரிமை பெற்றவள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத். இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1182 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மகனை என்னுடைய கணவர் கொண்டு செல்ல விரும்புகிறார். அவனோ எனக்குப் பயனுள்ளவனாகவும், 'அபூ இனபா' எனும் கிணற்றிலிருந்து எனக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டுமிருக்கிறான்'' என்று ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். அப்போது அவளது கணவர் அங்கு வந்தார். ''சிறுவனே! இதே உன்னுடைய தந்தை. உன்னுடைய தாய். இவர்கள் இருவரில் நீ விரும்பியவரின் கையைப் பிடித்துக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அந்தச் சிறுவன்) தனது தாயின் கரத்தைப் பிடித்துக் கொண்டான். அவனுடன் அவள் சென்றுவிட்டாள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1183 ராஃபிஉ இப்னு ஸினான்(ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவருடைய மனைவி இஸ்லாத்தை ஏற்க மறுத்து விட்டாள். நபி(ஸல்) அவர்கள் தாயை ஓர் ஓரத்திலும், தந்தையை ஓர் ஓரத்திலும் அமர்த்தி பையனை இருவருக்கும் மத்தியில் அமர்த்தி விட்டார்கள். அவன் தன் தாயின் பக்கமே திருப்பினான். அப்போது ''இரட்சகனே! அவனுக்கு நேர் வழியைக் கொடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே, அவன் தன் தந்தையின் பக்கம் திரும்பி விட்டான். அவர் அவனைப் பிடித்துக் கொண்டார் என்று ராஃபி இப்னு ஸினான்(ரலி) அவர்களே அறிவிக்கிறார். அபூதாவூத் நஸயீ

1184 ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் விஷயத்தில் அவரது சித்தியைப் பொறுப்பாளராக நியமித்துத் தீர்ப்பளித்தார்கள். மேலும் அப்போது, ''சித்தி தாயின் ஸ்தானத்தில் இருப்பவர்'' என்று கூறினார்கள் என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1185 ''கன்னிப் பெண் அவளது சித்தியிடமிருப்பாள். சித்தி தாய் (போன்று) ஆவாள்'' என்று அலீ(ரலி) கூறினார்கள் என ஹதீஸ் அஹ்மதில் உள்ளது.

1186 ''உங்களில் ஒருவருக்கு அவரது ஊழியர் அவரது உணவைக் கொண்டுவந்தால், அவர் அந்த ஊழியரைத் தன்னுடன் அமரச் செய்யாவிட்டாலும், குறைந்த பட்சம் அவருக்கு ஓரிரு கவளமாவது கொடுக்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம். இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1187 ''ஒரு பூனை விஷயத்தில் ஒரு பெண் தண்டிக்கப்பட்டாள். (ஏனெனில்) அது சாகும் வரை அதை அவள் சிறை வைத்திருந்தாள். அதனால் அவள் நரகத்தில் புகுந்து விட்டால். அவள் அந்தப் பூனைக்க உணவளிக்கவுமில்லை, நீர் புகட்டவில்லை. அதை அடைத்தே வைத்திருந்தாள். பூமியிலுள்ள புழு, பூச்சிகளை அது இரையாகத் தேடிக்கொள்ள அதை அவள்விட்டு விடவுமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி முஸ்லிம்

Previous Post Next Post