அத்தியாயம் - 7 வியாபாரம்

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 7 வியாபாரம்


வியாபாரத்தின் நிபந்தனைகளும் அதில் தடை செய்யப்பட்டவையும்

801 ''எவ்வகை சம்பாத்தியம் மிகத் தூய்மையானது?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு , ''மனிதன் தன் கையினால் உழைத்துச் சம்பாதிக்கும் சம்பாத்தியமும், ஏமாற்றமில்லாமல் (நியாயமாகச்) செய்யும் வியாபார(த்தின் மூலம் கிடைக்கும் லாப)மும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ரிஃபாஆ இப்னுராஃபிஃ(ரலி) அறிவிக்கிறார். பஸ்ஸார். இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

802 ''மதுபானம், தானாக இறந்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை இறைவன் தடுத்து விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவில் இருக்கும் போது கூறினார்கள். அப்போது ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாமாக இறந்தவையின் கொழுப்பைப் பற்றிக் கூறுங்கள். ஏனெனில், அதைக் கொண்டு படகுகளை வழவழப்பாக்கவும், தோல்களைப் பதப்படுத்தவும். செய்கிறார்கள். இன்னும் மக்கள் அதன் மூலம் விளக்கும் எரிக்கின்றனர்'' என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''கூடாது. அதுவும் ஹராமாகும்'' என்று கூறிவிட்டு, ''யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அல்லாஹ் அவர்களுக்கு (தானாக இறந்த) அதன் கொழுப்புகளைத் தடை செய்த போது, அவர்கள் அதை உருக்கி விற்றார்கள், அதன் கிரயத்தை உண்டார்கள்.. என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

803 ''விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவருக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு, அதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்றால், பொருளுக்குரியவருடைய பேச்சே ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்; அல்லது அந்தப் பொருளை விட்டுவிட வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

804 நாயின் கிரயத்தையும், விபச்சாரியின் சம்பாத்தியத்தையும் குறிகாரனின் தட்சிணையையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அபூமஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

''நான் எனது ஒட்டகத்தில் அமர்ந்திருந்தேன். ஒட்டகம் களைத்து விட்டது. நான் அதை விட்டுவிட விரும்பினேன்.'' அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். பின்னர் எனக்காகப் பிரார்த்தித்து விட்டு, ஒட்டகத்தை அடித்தார்கள். உடனே அது இதற்கு முன்னர் செல்லாத அளவு (வேகமாகச்) செல்ல ஆரம்பித்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ''அதை என்னிடம் ஒரு ஊக்கியாவிற்கு விற்றுவிடு'' என்று கூறினார்கள். நான் ''இல்லை'' என்று சொன்னேன். பின்னரும் நபி(ஸல்) அவர்கள், ''என்னிடம் விற்று விடு!'' என்று கூறினார்கள். இதில் நான் என்னுடைய வீடு வரை சவாரி செய்து கொள்வேன் என்று நிபந்தனையிட்டு நான் அதை ஒரு ஊக்கியாவிற்கு விற்று விட்டேன். நான் வீடு சென்றதும் ஒட்டகத்தை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் அதன் கிரயத்தை என்னிடம் கொடுத்து விட்டார்கள். நான் (அதைப் பெற்றுக் கொண்டு) திரும்பினேன். அப்போது எனக்குப் பின்னால் ஆள் அனுப்பினார்கள். இன்னும் ''உன்னுடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்ள நான் உனக்குத் குறைந்த விலை கொடுத்து விட்டேன் என, எண்ணுகிறாயா? உன்னுடைய ஒட்டகத்தையும் திர்ஹம்களையும் வாங்கிக் கொள். அது உனக்கே உரியது'' என்று கூறினார்கள் என, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்.

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

806 எங்களில் ஒருவர் தன்னுடைய அடிமையிடம், ''என்னுடைய மரணத்திற்குப் பின்பு விடுதலை பெற்றுக் கொள்'' என்று கூறியிருந்தார். (ஆனால், அவர் கடன்பட்டிருந்தார். எனவே) நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை அழைத்து வரச் செய்து அவனை விற்பனை செய்து விட்டார்கள் என, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்.

807 நெய்யில் எலி விழுந்து இறந்து விட்டது. அதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு) நபி(ஸல்) அவர்கள், ''அதையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (வெளியில்) எடுத்து எறிந்து விட்டுச் சாப்பிடுங்கள்'' என்று கூறினார்கள் என நபி(ஸல்) அவர்களது துணைவியார் மைமூனா(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத் மற்றும் நஸயீயில் உறைந்த நெய்யில் எனும் வாசகமும் இடம் பெற்றுள்ளது.

808 ''நெய்யில் எலி விழுந்து விட்டால், அது உறைந்ததாக இருந்தால் அதையும் அதைச் சுற்றி உள்ளதையும் (எடுத்து) எறிந்து விடுங்கள். (மீதத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்) அது உறையாததாக இருப்பின் அதை நெருங்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

809 பூனை மற்றும் நாயின் கிரயத்தைப் பற்றி நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்று கூறினார் என, அபூ ஜுபைர்(ரலி) அறிவிக்கிறார்.

''வேட்டை நாயைத் தவிர'' என்பது நஸயீயில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

810 பாரிரா என்னிடம் வந்து, ''நான் என்னுடைய எஜமானனிடம் ஒன்பது ஊக்கியாவின் போரில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டேன். வருடம் ஒன்றுக்கு ஒரு ஊக்கியோ வீதம் நான் செலுத்த வேண்டும். எனவே, எனக்கு உதவி செய்யுங்கள். எனவே, எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார். ''உன்னுடைய எஜமானன் விரும்பினால், ஒன்பது ஊக்கியாவையும் ஒட்டு மொத்தமாக நான் செலுத்தி விடுகிறேன். ஆனால் உன்னுடைய 'வலா' (ஏனைய உரிமைகள்) எனக்குரியதாக இருக்க வேண்டும். (அப்படியானால்) ''நான் (விடுதலை) செய்கிறேன்'' என்று நான் கூறினார். பாரிரா தன்னுடைய எஜமானர்களிடம் சென்று இதைக் கூறினார். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டார்கள். அவர்களிடமிருந்து (பாரிரா) என்னிடம் (மீண்டும்) வந்தார். அப்போது என்னுடன் நபி(ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அவர் (பாரிரா), ''இதை நான் அவர்களிடம் கூறியதற்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 'வலா' அவர்களுக்கே உரியது என்று கூறுகின்றனர்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதைக் கேட்டு விட்டார்கள். ஆயிஷா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் செய்தியைக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அவரைப் பெற்றுக் கொண்டு, 'வலா' உனக்கே உரியது என்று நிபந்தனையிடு. ஏனெனில், எவர் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அவருக்கே 'வலா' உரியதாகும்'' என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவ்வாறே செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்த எழுந்தார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, ''மக்களுக்கு என்னவாகி விட்டதோ? அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாதவற்றையெல்லாம் நிபந்தனைகளாக முன் வைக்கின்றனர். அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகள் இருப்பினும் சரியே! அல்லாஹ்வுடைய தீர்ப்பு தான் ஏற்கத் தகுந்ததாகும். இன்னும் அல்லாஹ்வின் நிபந்தனை தான் கட்டுப்படுத்தக் கூடியதாகும். இன்னும் 'வலா' (அடிமைகளை) விடுதலை செய்பவருக்கே உரியது'' என்று கூறினார்கள்.

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது. ''அவரை வாங்கிக் கொள்! விடுதலை செய்துவிடு! இன்னும் 'வலா' உனக்கே உரியது என அவர்களிடம் நிபந்தனையிடு!'' என்று முஸ்லிமில் உள்ளது.

811 ''குழந்தை பெற்றுள்ள அடிமைப் பெண்ணை விற்பனை செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்து விட்டார்கள். ''அவள் விற்கப்படவும் மாட்டாள், ஹிபா (அன்பளிப்பாக) கொடுக்கப்படவும் மாட்டாள், வாரிசு உரிமையும் பெறமாட்டாள். அவளிடமிருந்து முறையான பலன்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும். எப்போது (அவளது எஜமான்) இறந்து விடுகிறாரோ, அப்போது அவள் விடுதலை பெற்றவளாவாள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

அறிவிப்பாளர்கள் சிலர் இதை மாஃபூஉ என்று கூறியுள்ளனர். இது பிரமை ஆகும்.

812 நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருக்க நாங்கள் எங்கள் அடிமைப் பெண்களை அவர்கள்

குழந்தை பெற்றிருக்கும் நிலையில் விற்பனை செய்துள்ளோம். அதை அவர்கள் குற்றமாகக் கருதவில்லை. என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, இப்னு மாஜா, தாரகுத்னீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

813 (தேவைக்குப் போக) மீதமுள்ள தண்ணீரை விற்பனை செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லஹ் (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பில், ஒட்டகத்தைச் சினைக்கு விடுவதற்காகக் கிரயம் பெறுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதும் உள்ளது.

814 நபி(ஸல்) அவர்கள் (கால் நடைகளைச் சினைக்கு விடும் போது) ஆண்வர்க்கத்திற்குக் கிரயம் பெறுவதைத் தடை செய்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

815 ஒட்டகத்தின் வயிற்றில் உள்ள குட்டியை விலை பேசுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அறியாமைக் காலத்தில் (மக்கள்) இவ்வாறு செய்து வந்தனர். அவர்கள் அறுக்கக் கூடிய ஒட்டகையை அதன் வயிற்றிலிருக்கும் குட்டியை ஈன்றெடுக்கும் காலம் வரையும் அதை விலைக்கு வாங்குவார். அது அதை ஈன்றெடுக்கும் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

816 நபி(ஸல்) அவர்கள் 'வலா' உரிமையை விற்பனை செய்வதையும் அதை அன்பளிப்புச் செய்வதையும் தடை செய்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி முஸ்லிம்

817 நபி(ஸல்) அவர்கள் முனாபதா மற்றும் மோசடி வியாபாரத்தை தடை செய்தார்கள். என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

818 ''உங்களில் எவரேனும் உணவுப் பொருள் வாங்கினால், அதை அளக்காத வரையில் விற்பனை செய்யாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

819 ஒரு வியாபாரத்தில் இரண்டு வியாபாரங்கள் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

இது திர்மிதீயில் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

820 ''ஒரு வியாபாரத்தில் இரண்டு வியாபாரங்களை எவர் செய்கிறாரோ அவர் இரண்டிலும் குறை செய்ய நேரிடும். அது வட்டியாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

821 ''சலஃப் அனுமதிக்கப்பட்டதல்ல. இன்னும் ஒரு வியாபாரத்தில் இரண்டு நிபந்தனைகள் கூடாது. (பொருட்கள் தனது) பொறுப்பில் வராதிருக்கும் போது அதன் லாபம் கூடாது. உன்னிடம் இல்லாத ஒரு பொருளில் வியாபாரம் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மீதி மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீ, இப்னு குஸைமா மற்றும் ஹாகிமில் ஹஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலூமுல் ஹதீஸ் எனும் நூலில் அபூஹனீஃபா அறிவிப்பில் இடம் பெறும் ஹதீஸில் அம்ர் இப்னு ஷுஐப் இடம் பெறுகிறார். அதில், நிபந்தனை வியாபார முறையைத் தடுத்தார்கள் என்று உள்ளது. இதே போன்று தபரானீயுடைய 'அவ்ஸத்' எனும் நூலில் கரிப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

822 நபி(ஸல்) அவர்கள் உர்யான்வியாபாரம் எனும் வியாபாரத்தைத் தடை செய்துள்ளார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார்.

823 நான் கடைவீதியில் ஜைத்தூன் எண்ணை வாங்கினேன். வியாபாரம் உறுதி செய்யப்பட்டதும் மற்றொருவர் வந்து அதற்கு நல்ல (அதிகமான) லாபம் கொடுத்து என்னிடம் கேட்டார். அதை நான் அப்போதே அவரது கரத்தில் விற்று விட நாடினேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து என்னை ஒருவர் பிடித்தார். நான் திரும்பிப் பார்த்த போது அவர் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களாக இருந்தார். அவர், ''இதை உங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்லாத வரை வாங்கிய இடத்திலேயே விற்பனை செய்யாதீர்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் வியாபாரிகள் தங்கள் பொருளை வீட்டிற்கு கொண்டு சென்று வைக்காதவரை, பொருட்கள் எங்கு வாங்கப்படுகின்றனவோ அங்கேயே (அந்தப் பொருள்) விற்கப்பட வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று கூறினார் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இங்கு அபூதாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

824 அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பகீயில் ஒட்டகம் விற்கின்றேன். அந்த வியாபாரத்தை தீனார்களுக்கு பதிலாகச் செய்கின்றேன். ஆனால், திர்ஹம் வாங்கி விடுகின்றேன். இன்னும் சில நேரங்களில் திர்ஹம்களுக்கு பதிலாக வியாபாரம் செய்கிறேன். ஆனால் தீனார்களை வாங்கிக் கொள்கிறேன். நான் இதிலிருந்து அதை எடுக்கிறேன். இன்னும் அதிலிருந்து இதைக் கொடுக்கிறேன் என்று நான் கேட்டதற்கு, ''அதே நாளின் விலைக்கு எடுத்துக் கொண்டால், மீதம் ஏதும் வைத்துக் கொள்ளாமல், கொடுக்கல் வாங்கலைச் சரி செய்து கொண்டு பிரிந்து விட்டால் எந்த குற்றமும் ஆகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

825 பொருளை வாங்கும் நோக்கமில்லாமல் விலையை கூட்டிவிடுவதற்காக, விலை ஏற்றிக் கேட்பதை (தனாஜுஷ்) நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

828 வியாபாரம் செய்வதற்காக வரும் வணிகக் கூட்டத்தைச் சென்று (இடையில்) சந்திக்க வேண்டாம். இன்னும் நகரவாசி கிராமவாசியிடம் வியாபாரம் செய்ய வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (அப்போது) நகரவாசி, கிராம வாசியிடம் வியாபாரமே செய்யக்கூடாது என்பது தான் இதன் விளக்கமா?'' என்று நான் கேட்டதற்க ''நரகவாசி கிராமவாசிக்கு இடைத்தரகராக செயல்படக்கூடாது'' என்று பதிலளித்தார் என தாவூஸ் அறிவிக்கிறார்.

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

829 தானியம் (வணிகப் பொருட்களை) கொண்டு வருவோரை (வியாபாரச் சந்தைக்கு வருமுன்) இடையில் சென்று சந்திக்க வேண்டாம். அப்படியே எவரேனும் சந்தித்தால் அவர் சந்தைக்கு வரும் வரை வியாபாரம் செய்ய வேண்டாம். அதுவும் அவருடைய விருப்பத்தில் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

830 நகரவாசி, கிராமவாசியிடம் வியாபாரம் செய்வதையும், பொருளை வாங்காமல் விலையை மட்டும் அதிகமாக்கி விடுவதையும், ஒரு முஸ்லிம் சகோதரன், செய்யும் வியாபாரத்தை வேண்டுமென்றே முறித்து தான் வியாபாரம் செய்வதையும், முஸ்லிம் சகோதரனுடைய திருமண ஒப்பந்தத்தில் குறுக்கிடுவதையும், பாத்திரத்தில் உள்ளதைக் கொட்டி வீணடிப்பது போன்று தன்னுடைய சகோதரிக்கு (சக்களத்திக்கு) ஒரு பெண் தலாக் கேட்டு வாங்குவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

முஸ்லிமில் ''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குப் போட்டியாக விலைபேச வேண்டாம்'' என்று உள்ளது.

831 எவர் (இந்த உலகில்) தாய்க்கும், பிள்ளைக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துகிறாரோ, அவருக்குப் அவருக்குப் பிரியமானவர்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் பிரிவினையை ஏற்படுத்துகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ அய்هப் அல் அன்ஸாரி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்

இது திர்மிதீ, மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

832 சகோதரர்களாக இருந்த இரண்டு அடிமைகளை விற்று விடுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் அவர்களை விற்பனை செய்தேன். அவர்களுக்கிடையில் பிரிவை ஏற்படுத்தியும் விட்டேன். பின்னர் அதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''திரும்பச் சென்று அவர்கள் இருவரையும் திரும்பப் பெற்றுக் கொள் இருவரையும் இணைத்து அல்லாது விற்பனை செய்ய வேண்டாம்'' என்று கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார்.

இதில் 'ஸகாத்' உள்ளது. இது இப்னுஸ் ஜாரூத்,இப்னு ஹிப்பான், ஹாகிம், தபரானி மற்றும் இப்னு கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பலமானது. இது இப்னு ஜாரூது, இப்னு ஹிப்பான், ஹாகிம்,  தபரானி மற்றும் இப்னு கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

833 நபி(ஸல்) அவர்களது காலத்தில் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்டது. (அதனால்) மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! விலைவாசிகள் உயர்ந்து விட்டன. எனவே, மக்களுக்காக விலை நிர்ணயம் செய்யுங்கள்'' என்று கேட்டனர்.

அதற்கு, விலைவாசிகளை உயர்த்துவதும், குறைப்பதும், (உணவில்) நெருக்கடி ஏற்படுத்துவதும், விசாலமாக்குவதும், தேவையானதைக் கொடுப்பதும் அல்லாஹ் தான். இன்னும் அல்லாஹ்வை நான் சந்திக்கும் போது என்னிடம் இரத்தம் மற்றும் சொத்துக்களின் உரிமையைத் தேடுவதை நான் விரும்பவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

834 ''குற்றமிழைப்பவனைத் தவிர வேறு யாரும் உணவுப் பொருட்களைப் பதுக்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃமர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

835 ஒட்டகம் மற்றும் ஆடு (போன்ற) கால் நடைகளில் விற்பனை செய்வதற்காக அதன் பாலை (கறக்காது) தடுத்து நிறுத்தி (அவற்றின் மடியை கனக்கச் செய்து அதிகமாக பால் தருவது போன்று) காண்பித்து விடாதீர்கள். எவரேனும் இவ்வாறுள்ள கால் நடைகளை வாங்கினால் அதை (பால் கறந்து பார்த்து) நன்கு ஆய்வு செய்த பின்பு, அவர் விரும்பியதைச் செய்ய உரிமையுள்ளது. அதாவது, அவர் விரும்பினால் அதை வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு ஸாவு பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்து விடலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

''அந்த உரிமை அவருக்கு மூன்று நாள் வரை உள்ளது'' என்பதும் முஸ்லிமில் உள்ளது.

''ஒரு ஸாவு உணவுப் பொருளுடன் அதைத் திரும்பத் தரவேண்டும். வெள்ளை (விளையாத) கோதுமையாக அது இருக்கக் கூடாது'' என்று புகாரியுடைய மற்றொரு அறிவிப்பில் முஅல்லக் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''அறிவிப்புகளில் பேரீச்சம்பழம் தான் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது'' என்று இமாம் புகாரி குறிப்பிட்டுள்ளார்.

836 ''எவர் பால் தரும் ஆட்டை விலைக்கு வாங்கி விட்டு பின்னர் அதைத் திரும்பக் கொடுக்கிறாரோ, அவர் அதனுடன் ஒரு ஸாவு (உணவுப் பொருள்) கொடுக்கட்டும்'' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். புகாரி

இஸ்மாயீலிய்யி எனும் நூலில் ''(ஒரு ஸாவு) பேரீச்சம் பழம்'' என்று உள்ளது.

837 நபி(ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில் ஈரம்பட்டது. ''உணவுக் காரரே! இது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கவர், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மழை பொழிந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு, ''மக்கள் பார்க்கும் விதமாக அதை நீ மேலே போட்டிருக்க வேண்டமா?'' (என்று கூறிவிட்டு) ''எவர் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

838 ''நன்கு தெரிந்து கொண்டே அறுவடைக் காலத்தில் திராட்சையைப் பதுக்கி வைத்து விட்டுப் பின்னர் மது தயாரிக்கும் நபருக்கு அதை விற்பனை செய்பவர் நரகத்தில் புகுகிறார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அப்துல்லாஹ் இப்னு புரைதா(ரலி) அறிவிக்கிறார். தப்ரானி. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

839 ''வருமானம் பொறுப்பாளரையே சாரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது புகாரி மற்றும் அபூதாவூதில் ளயீஃப் என்றுள்ளது. திர்மிதீ, இப்னு குஸைமா, இப்னுல் ஜாரூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் மற்றும் இப்னு கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

840 ''குர்பானிக்காக கால்நடை அல்லது ஆடு வாங்குவதற்கு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு தீனார் கொடுத்தார்கள். நான் அதில் இரண்டு ஆடுகள் வாங்கி விட்டேன். பின்னர் அவற்றில் ஒன்றை ஒரு தீனாருக்கு விற்பனை செய்து விட்டேன். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் (மீதமுள்ள) ஓர் ஆட்டையும், தீனாரையும் கொண்டு வந்தேன். அப்போது என்னுடைய வியாபாரத்தில் அருள்வளம் கிடைத்திட நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள். நான் அதில் மண்ணை வாங்கி இருந்தாலும் லாபம் கிடைத்திருக்கும்'' என்று உர்வா அல் பாக்கி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இந்த ஹதீஸ் புகாரியிலும் உள்ளது. ஆனால், முழு வாசகமாக இல்லை.

841 மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக ஹகீம் இப்னு ஹிஸாம் அவர்களின் ஒரு ஹதீஸ் திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.

842 கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டியை அது ஈன்றெடுக்காதவரை விலை பேசுவதையும், மடுவிலிருக்கும் பாலை விலை பேசுவதும், ஓடிவிட்ட அடிமையை விலை பேசுவதையும், பிரித்தளிக்கப்படாத கனீமத் பொருட்களை விலை பேசுவதையும், கைக்குவராத தர்மப் பொருட்களையும், (தண்ணீரில்) மூழ்கி (பொருட்களை) எடுப்பவர் (இன்னும் மூழ்கியெடுக்காத பொருளுக்கு) விலை பேசி மூழ்குவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என ஆபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா, பஸ்ஸார் மற்றும் தராகுத்னீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

843 ''தண்ணீரிலிருக்கும் மீனை விலை பேசாதீர்கள்'' ஏனெனில் அது ஏமாற்றுவதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத். இது மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

844 (சாப்பிடும் அளவுக்கு) நன்றாகப் பழுக்காதவரை பழத்தை விற்பனை செய்வதையும், ரோமத்தை அது (ஆட்டின்) முதுகில் இருக்கும் போது விற்பனை செய்வதையும், மடுவில் இருக்கும் பாலை விற்பனை செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

இது இக்ரிமா(ரலி) வாயிலாக முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனுடைய அறிவிப்பாளர் தொடர் பலமானது.

845 ஒட்டகத்தில் வயிற்றில் இருப்பவற்றையும் மற்றும் ஒட்டகத்தின் முதுகில் இருப்பவற்றையும் விற்பனை செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

846 ''எவர் ஒருவர் ஒரு முஸ்லிமோடு தான் செய்து கொண்ட வியாபாரத்தை 'இகாலா' செய்கிறாரோ, அதாவது செய்து முடிக்கப்பட்ட வியாபார ஒப்பந்தத்திற்குப் பின்பு விற்பவரோ அல்லது வாங்குபவரோ சிக்கலின் காரணமாக அவ்வொப்பந்தத்தைத் திரும்பப் பெறும்படி கோரியதால், அதை திரும்பப் பெறுகிறாரோ அல்லாஹ் (மறுமையில்) அவரின் சிக்கலை நீக்குகிறான் என்று'' நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை

847 இரண்டு பேர் வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டால், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து செல்லாமல் ஒன்று சேர்ந்திருக்கும் வரை அவர்களில் ஒவ்வொருவருக்கும் வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமையுண்டு. வாங்குபவர் விற்பவர் இருவரில் ஒருவர் மற்றவருக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை வழங்கி, அதைப் பயன்படுத்தாமல் இருவரும் வியாபார ஒப்பந்தம் செய்து கொள்வார்களேயானால், வியாபாரம் உறுதிப்பட்டு விடும்; இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரில் யாருமே ஒப்பந்தத்தை முறிக்காமல் பிரிந்து சென்று விட்டால், அப்போதும் வியாபாரம் உறுதிப்பட்டு விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

848 ''விற்பவரும் வாங்குபவரும் ஒருவர் மற்றவரை விட்டுப்பாரிந்து செல்லாதவரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர், முறித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்ட ஒப்பந்தமாயிருந்தாலே தவிர! எங்கே ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவாரோ என்று (அவசர அவசரமாகப்) பிரிந்து செல்வது அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ரு பின் ஷுஐப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, தாரகுத்னீ மற்றும் இப்னு குஸைமா

849 தன்னுடைய வியாபாரத்தில் ஏமாற்றம் ஏற்படுகிறது என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கூறிய போது ''நீ (என்னுடன்) வியாபாரம் செய்தால் நான் ஏமாற்ற மாட்டேன். (எனவே நீயும் என்னை ஏமாற்றாதே!) என்று கூறிவிடு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.



வட்டி

850 வட்டியை உண்பவரையும், அதை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்து விட்டு, ''அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள்'' என்றும் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.

851 850-ம் எண் ஹதீஸ் போன்றே புகாரியில் அபூஜுஹைஃபா (ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

852 வட்டிக்கு 73 வாசல்கள் உள்ளன. அதில் இலேசானது (கடைசித் தரம்) தன்னுடைய தாயையே திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்.

இது ஹாகிமில் முழுவதுமாக அறிவிக்கப்பட்டு ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

853 ''தங்கத்திற்கு பதிலாக தங்கத்தை சமமான அளவில் அல்லாது விற்பனை செய்ய வேண்டாம். அவற்றில் ஒன்றின் மீது மற்றொன்றை அதிகப்படுத்த வேண்டாம். இன்னும் வெள்ளிக்கு பதில், வெள்ளியை ஒன்றுக்கொன்று சமமான அளவில் அல்லாது விற்பனை செய்ய வேண்டாம். அவற்றில் ஒன்றை மற்றொன்றைவிட அதிகப்படுத்த வேண்டாம். மேலும், அவற்றில் இருப்பதை இல்லாததைக் கொண்டு விற்பனை செய்யாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார்.

854 ''தங்கத்திற்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, மணிக்கோதுமைக்கு மணிக்கோதுமை, வாற் கோதுமைக்கு வாற் கோதுமை, பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழம், உப்புக்கு உப்பு ஒரே தரத்தில், சம அளவில் (உடனுக்குடன் விற்பனை செய்து கொள்வது குற்றமில்லை. இந்த இனங்கள் மாறுபடும் போது உடனுக்குடன் என்றால்) நீங்கள் விரும்பியவாறு விற்பனை செய்து கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவிக்கிறார்.

855 ''தங்கத்திற்கு பதிலாக தங்கத்தை எடைக்கு எடை ஒரே தரத்தில், இன்னும் வெள்ளிக்கு பதிலாக வெள்ளியை எடைக்கு எடை, ஒரே தரத்தில் (விற்பனை செய்து கொள்ளுங்கள்). எவர் இதில் அதிகமாக வாங்குகிறாரோ, அல்லது கொடுக்கிறாரோ அது தான் வட்டியாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

856 நபி(ஸல்) அவர்கள் ஒரு நபரைப் பணியாளராக நியமித்து கைபருக்கு அனுப்பினார்கள். அவர் (கைபரின்) உயர்தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். (அதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள்) ''கைபரின் எல்லாப் பேரீச்சம் பழங்களும் இவ்வாறு தான் உள்ளனவா?'' என்று கேட்டார்கள். அதற்கவர், ''இல்லை! அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் இரண்டு ஸாவுக்கு பதிலாக இந்த ஒரு ஸாவுவை வாங்குகிறோம். இன்னும் (சில நேரங்களில்) மூன்று ஸாவுக்குப் பதிலாக இரண்டு ஸாவு வாங்குகிறோம்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''இவ்வாறு செய்யாதீர்கள். பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களையும் சில திர்ஹம்களுக்குப் பதிலாக விற்பனை செய்து விட்டுப் பின்னர் சில திர்ஹம்களுக்குப் பதிலாக உயர்தரமான பேரீச்சம் பழங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். இன்னும் (தராசு) நிலையிலும் இது போன்றே என்று அறிவிப்பாளர் கூறினார். புகாரி, முஸ்லிம்

''தராசிலும் இவ்வாறே'' எனும் வாசகம் முஸ்லிமில் உள்ளது.

857 ''அளவு தெரியாத பேரீச்சம் பழக்குவியலைக் குறிப்பிட்ட அளவுள்ள பேரீச்சம் பழக்குவியலுக்குப் பதிலாக விற்பனை செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

858 ''உணவுப்பதார்த்தற்திற்கு பதிலாக உணவுப்பதார்த்தம் ஒரே தரத்தில் கொடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களது அன்றைய உணவுப்பதர்த்தம் கோதுமையாக இருந்தது என, மஃமர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

859 நான் கைபர் தினத்தன்று பன்னிரண்டு தீனாருக்கு ஒரு சங்கிலியை விலைக்கு வாங்கினேன். அதில் தங்கம் மற்றும் கோர்க்கப்பட்ட கற்கள் இருந்தன. நான் அவற்றை(த் தனித்தனியாகப்) பிரித்தேன். அப்போது அதில் பன்னிரண்டு திர்ஹத்தை விட அதிகத் தங்கத்தை நான் பெற்றேன். பின்னர் அதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு, ''அதைப் பிரித்தெடுக்காத வரை விற்பனை செய்யாதே!'' என ஃபுளாலா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

860 ''கால்நடைக்கு பதிலாக கால்நடையை தவணைக்கு (பிறகு பெற்றுக் கொள்வதாக) விற்பனை செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்'' என, ஸமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது திர்மிதீ மற்றும் இப்னுல் ஜாரூதில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

861 ''நீங்கள் மாடுகளின் வால்களைப் பிடித்துக் கொண்டு மேய்க்கச் சென்றால், நாணயத்தின் வாயிலாக வியாபாரம் செய்து அதாவது விலையைப் பெற்றுக் கொள்வதாக சொல்லி விற்ற பொருளை அப்பொருளுக்கான விலையைப் பெறும் முன்பே ரொக்கப் பணம் கொடுத்து வாங்கினால், விவசாயத்தில் மூழ்கி ஜிஹாதை விட்டுவிட்டால் நீங்கள் உங்களது மார்க்கத்தின் பால் திரும்பும் வரை அல்லாஹ் உங்கள் மீது இழிவைத் திணித்து விடுவான்; அது வரை அதை நீக்கவே மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

நாஃபிஉ வாயிலாக அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களிடமிருந்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனுடைய அறிவிப்புத் தொடரில் ஆட்சேபனை உள்ளது. இது போன்று அதா வாயிலாக அஹ்மதிலும் உள்ளது. அதன் அறிவிப்பாளர் பலமானவர். இது இப்னு கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

862 ''எவரேனும் தன்னுடைய சகோதரனுடைய பாரிந்துரை செய்து, அதற்காக அவருக்கு அன்பளிப்பு அனுப்பப்பட்டு, அதை அவர் பெற்றுக் கொண்டால் நிச்சயமாக அவர் வட்டியின் பெரும் வாசலுக்குச் சென்று (நுழைந்து) விட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா (ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இதன் ஸனதில் ஆட்சேபனை உள்ளது.

863 ''லஞ்சம் வாங்குபவரையும் லஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

864 (புனிதப் போர் புரிய அனுப்பவிருந்த) படையொன்றுக்குத் தேவையான (உணவு, உடை, வாகனங்கள் மற்றும் தளவாடப்) பொருட்களை தயார் செய்து கொடுத்தனுப்பும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். ஒட்டகங்கள் தீர்ந்து போய் விட்டன. உடனே நபி(ஸல்) அவர்கள் ஜகாத்துடைய (வாலிபப்பெண்) ஒட்டகங்களை எடுத்துக் கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அறிவிக்கிறார். (மேலும்) ஜகாத்துடைய ஒட்டகங்கள் வந்த பின்னர் இரண்டு ஒட்டகங்களுக்குப் பதிலாக ஒரு ஒட்டகம் தான் நான் வாங்கினேன் என்றும் கூறினார். ஹாகிம், பைஹம்

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

865 நபி(ஸல்) அவர் முஸாபனா (எனும் வியாபார) முறையைத் தடுத்தார்கள். அதாவது பேரீச்சம் பழம் மரத்தில் இருக்கும் போதே அளக்கப்பட்ட பேரீச்சம பழத்திற்குப் பதிலாக அதை விற்பது, இன்னும் திராட்சை கொடியில் இருக்கும் போதே அளக்கப்பட்ட கிஸ்மிஸ் பழத்திற்குப் பதிலாக அதை விற்பது, இன்னும் நிலத்திலுள்ள பயிரை அதற்குப்பதிலாக (ஏனைய) அளக்கப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்வது, இவை 'அனைத்தையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி முஸ்லிம்

866 உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக ஈரப்பதமான பேரீச்சம் பழத்தை வாங்குவது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது ''ஈரப்பதமான பேரீச்சம்பழம் காய்ந்து விட்டால் அளவு குறைந்து விடுமா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் ''ஆமாம்'' என்றனர். பின்னர் அதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என ஸஅத் இப்னு அழு வக்காஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது இப்னு அல்மதீனீ, திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

867 (கடனைக் கொடுக்காத) தாமதக்காரைக் கொண்டு (அதே போன்ற) தாமதக்காரர் செய்யும் வியாபாரத்தை, அதாவது கடனுக்குப் பதிலாக கடனைக் கொண்டு வியாபாரம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். இல்ஹாக், பஸ்ஸார். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



அராயாவில் அளிக்கப்பட்டுள்ள சலுகை

868 குத்துமதிப்பாகக் கணக்கிடப்பட்ட பேரீச்சம் பழத்தின் மதிப்பை அளவையில் கணக்கிட்டு விற்றுக் கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

வீட்டார் சாப்பிடுவதற்குப் பதமான பேரீச்சம் பழத்தை நிறுவையில் மதிப்பிட்டுக்கொள்ள சலுகையளித்தார்கள் எனும் வாசகம் முஸ்லிமில் உள்ளது.

869 'அராயா' பேரீச்சம் பழங்களைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு அது ஐந்து பஸக்குகள் அல்லது அதற்கும் குறைவாக உள்ள பட்சத்தில் காய்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பகரமாக விற்பனை செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

870 பழங்கள் நன்றாக பழுக்காதவரை விற்பனை செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். நன்றாகப் பழுத்தல் என்பது எதைக் குறிக்கிறது? என்று ஒருவர் கேட்டார். அதற்கு, ''சிவப்பாகவும், மஞ்சளாகவும் ஆம் விடுவதாகும்'' என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

872 திராட்சை கறுப்பாகாதவரையும் தானியம் நன்றாக விளையாதவரையும் அவற்றை விற்பனை செய்வதை நபி(ஸல்) அவர்கள்தடை செய்தார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, மற்றும் அஹ்மத் இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

873 நீ உன் சகோதரனுக்குப் பழங்களை விற்று, அதில் ஏதாவது கேடு ஏற்பட்டு விட்டால் அந்த முஸ்லிம் சகோதரனிடமிருந்து எதுவும் வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், தன்னுடைய சகோதரனின் பொருளை எதற்குப் பதிலாக அவர் வாங்குவார்?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமென கட்டளையிட்டார்கள்'' என்று உள்ளது.

874 ''மகரந்தச் சேர்க்கை செய்த பின் பேரீச்சை மரத்தை வாங்குபவர் விளைச்சல் எனக்கே சேரும் என்று நிபந்தனை வைக்கவில்லை என்றால் அதன் பழம் விற்பவரையே சேரும். ''என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.



முன் பணம், கடன் மற்றும் அடகு

875 நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த போது அங்குள்ளவர்கள் பழங்களுக்காக ஒரு வருடம், இரண்டு வருடம் முன் பணம் (ஸலஃப்) பெற்றுக் கொண்டிருந்தனர். அப்போது ''எவர் பழங்களுக்காக முன்பணம் பெறுகிறாரோ, அவர் குறிப்பிட்ட அளவையில், குறிப்பிட்ட நிலுவையில் குறிப்பிட்ட தவணைக்கு பெற்றுக்கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். புகாரி முஸ்லிம்

புகாரியில் ''எவரேனும் ஒரு பொருளுக்கு முன் தொகை செலுத்தினால் என்று உள்ளது.

876 நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் கனீமத் பொருட்களைப் பெற்றுக் கொண்டிருந்தோம். அப்போது சிரியா தேசவணிகக் கூட்டத்திலிருந்து ஒரு கூட்டம் வந்தது. நாங்கள் அவர்களிடம் கோதுமை, மைதா, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை முன் தொகையாகக் கொடுப்போம் என அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர். புகாரி

(புகாரியிலேயே மற்றோர் அறிவிப்பில்) ''நாங்கள் குறிப்பிட்ட காலம் வரை ஜைத்தூன் எண்ணையும் கொடுப்போம்'' என இருவரும் கூற, (அப்போது) அவர்களிடம் விவசாய நிலம் இருந்ததா?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''நாங்கள் அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதில்லை'' என்று பதிலளித்தாக உள்ளது.

877 ''மக்களது பொருளை அவர்களிடம் திரும்பச் செலுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் எவர் வாங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அதைச் செலுத்துகிறான். அதை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் வாங்குபவருக்கு, அல்லாஹ் அதை அழித்து விடுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

878 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இன்னாருக்கு ஸிரியா நாட்டிலிருந்த பருத்தித்துணி வந்துள்ளது. நீங்கள் அவரிடம் ஆள் அனுப்பினால் தங்களிடமிருந்து பணம் பெறும் வரை இரண்டு துணிகளைக் கடனுக்கு வாங்கலாம்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும் அவரிடம் ஆள் அனுப்பினார்கள். ஆனால் அவர் கொடுக்கவில்லை'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

879 ''அடமானம் வைக்கப்பட்ட கால்நடையில் அதன் செலவிற்குத் தக்கவாறு சவாரி செய்யலாம். இன்னும் பால் தரும் கால்நடையிடமிருந்து, அதன் செலவிற்குத் தக்கவாறு பால் (கறந்து) அருந்தலாம். இந்தச் செலவு சவாரி செய்பவர் மற்றும் பால் அருந்துபவரையே சாரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

880 ''அடமானம் வைக்கப்பட்ட பொருள் அதன் எஜமானனை விட்டு (லாபம்) அடைக்கப்பட்டதல்ல. அதன் லாபம் அவனுக்கே உரியது; அதன் இழப்பும் அவனுக்கே உரியது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ, ஹாகிம்

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். இது முர்ஸல் எனும் தரத்தை விட்டும் காக்கப்பட்டது என்று அபூதாவூதில் உள்ளது.

881 நபி(ஸல்) அவர்கள் ஒருவரிடம் இளவயது ஒட்டகம் ஒன்றைக் கடனாகப் பெற்றார்கள். அதற்குப் பின் அவர்களிடம் ஜகாத் ஒட்டகங்கள் வந்தன. (உடனே) அந்த நபருக்கு இளவயது ஒட்டகம் ஒன்றைக் கொடுக்குமாறு என்னிடம் கட்டளையிட்டார்கள். ''அதைவிட நல்ல ஒட்டகம் தான் உள்ளது'' என்று நான் கூறினேன். (அதற்கு) ''அதையே அவருக்குக் கொடுத்து விடு! ஏனெனில், அழகிய முறையில் கடனை அடைப்பவர்களே மக்களில் சிறந்தவர்களாகவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூராஃபிஃ(ரலி) அறிவிக்கிறார்.

882 ''லாபம் ஈட்டித் தரும் ஒவ்வொரு கடனும் வட்டியாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். ஹாகிம், இப்னு அபீ உஸாமா

இதன் அறிவிப்பாளர் வரிசைத் தொடர் விடுபட்டுள்ளது.

883 பைஹகீயில் ளயீஃப் எனும் தரத்தில் மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக ஃபளாலா இப்னு உபைத் வாயிலாக ஒர் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

884 புகாரியில் மவ்கூஃப் எனும் தரத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் வாயிலாக மற்றொரு ஹதீஸ் உள்ளது.

திவாலாகுதல் திவாலானவரின் பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்தல்

885 திவால் ஆனவரிடம் ஒருவர் தன்னுடைய சொத்தை அப்படியே கண்டால் (அதை எடுத்துக் கொள்ள) அவரே மற்ற அனைவரையும் விட உரிமை பெற்றவராவார்'' என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று அபூஹுரைரா(ரலி) கூற அபூபக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

886 ஒருவர் ஒரு பொருளை விற்பனை செய்திருந்து அதை வாங்கியவர் அதன் விலையைச் சிறிதும் கொடுக்காத நிலையில் திவாலாம் விட்டாரெனில் அவரிடம் அப்பொருளை அப்படியே கண்டாரெனில், அதை எடுத்துக் கொள்ள விற்றவரோ, அதிக உரிமையுடையவராவார் வாங்கியவர் இறந்து விட்டால் பொருளின் உரிமையாளர் ஏனைய கடன்காரர்களைப் போலாவார்'' என்று அபூபக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் வாயிலாக, அபூதாவூத் மற்றும் மாலிக்கில் முர்ஸல் எனும் தரத்தில் உள்ளது.

இது பைஹகீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

887 எங்களில் ஒருவர் திவாலாம் விட்டதால் அவர் விஷயமாக நாங்கள் அபூஹுரைரா(ரலி) அவர்களிடம் (சட்டம் கேட்கச்) சென்றோம். நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளிப்பளித்தவாறே உங்கள் விஷயத்தில் நான் தீர்ப்பளிப்பேன்'' என்று அபூஹுரைரா(ரலி) கூறி, ''மற்றொருவருடைய பொருளைக் கிரயம் பெறாமல் (கடனாக) எவரேனும் (வாங்கி அவர்) திவாலாம் விட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ அப்பொருளை எடுத்துக் கொள்ள விற்பனை செய்தவரே அதிக உரிமை பெற்றவர்'' என்று கூறினார்கள் என்று அம்ர் இப்னு கலதா வாயிலாக அபூதாவூத் மற்றும் இப்னு மாஜாவில் உள்ளது.

இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும், அபூதாவூதில் மரணத்தைப் பற்றிய செய்தி மட்டும் ளயீஃப் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

888 ''வசதியுள்ளவர் (கடனைத் திருப்பித் தராமல்) தள்ளிப் போடுவாராயின் அவரது மானம் போகும்படி அவரைக் கண்டிப்பதும் அவரைத் தண்டிப்பதும் அனுமதிக்கப்பட்டதாம் விடுகின்றது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷர்யத் தன்னுடைய தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அபூதாவூத் நஸயீ

இது புகாரியில் முஅல்லக் எனும் தரத்திலும், இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

889 நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஒருவர் வாங்கிய உணவுப் பொருள் (சேதமடைந்து) அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. (அதனால்) அவருக்குக் கடன் அதிகமாம் அவர் திவாலாம் விட்டார். எனவே, ''அவருக்குத் தர்மம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களும் அவருக்கு தர்மம் செய்தனர். இருப்பினும் அத்தொகை அவரது கடனை அடைப்பதற்குப் போதுமானதாக இல்லை. அதனால் நபி(ஸல்) அவர்கள் கடன்காரர்களிடம், ''ம்டைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறேதும் உங்களுக்கு இல்லை'' என்று கூறினார்கள் என அபூஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

890 நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களது சொத்தை (விற்கவிடாமல்) நிறுத்தி, அவரது கடனை அடைப்பதற்காக விற்பனை செய்து விட்டார்கள் என கஅப் இப்னு மாலிக் அறிவிக்கிறார். தாரகுத்னீ

இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும், அபூ தாவூதில் முர்ஸல் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முர்ஸல் எனும் தரமே மேலோங்கியள்ளதாகவும் அபூதாவூதில் உள்ளது.

891 உஹத் போரின் போது நான் நபி(ஸல்) அவர்கள் முன் நிறுத்தப்பட்டேன். அப்போது எனக்குப் பதினான்கு வயதாக இருந்தது. (எனவே போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. பின்னர் நான் அகழ் யுத்தத்தின் போது அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது. (எனவே போரில் கலந்து கொள்ள) எனக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

''நான் பருவமடையும் வரை எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை'' என்று பைஹகீயின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

892 பனூகுறைழா போரின் போது (யூதர்களான) நாங்கள் நபி(ஸல்) அவர்களின் முன்பு நிறுத்தப்பட்டோம். (எங்களில்) அடிவயிற்று முடி வளர்ந்தவர் கொல்லப்பட்டார். முடி வளராதவர் உயிர் பிழைத்துக் கொள்ள விட்டுவிடப்பட்டார். நான் (அடிவயிற்றில்) முடிவளராதவனாயிருந்தேன். எனவே என்னை உயிரோடு விட்டு விட்டார்கள் என்று அதிய்யா அல் குரழீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

893 ''கணவனின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் அன்பளிப்பு (நன்கொடை தருமம்) எதுவும் செய்யக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தற்தை மற்றும் பாட்டனாரிடமிருந்து அறிவிக்கிறார்.

மற்றோர் அறிவிப்பில், ''கணவன் அவளது பொறுப்பை ஏற்றிருக்கும் பொழுது பெண்ணுடைய சொத்தில் அவளது எந்த நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது'' என்று உள்ளது.

இதை அபூதாவூத் இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத் அனைவரும் பதிவு செய்துள்ளனர். மேலும், இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

894 மூன்று நபர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பிறரிடம் (தம் தேவைகளைக்) கேட்பது அனுமதிக்கப்பட்டதல்ல. (1. ஒரு கடனுக்குப்) பொறுப்பேற்றுக் கொண்டு (அதைக் கொடுக்க முடியாமல் தவிக்கும்) ஒருவர் அதை அடையும் வரை (பிறரிடம்) கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும். பிறகு கேட்பதை அவர் நிறுத்திக் கொள்வார். (2) ஒருவருக்கு அழிவேதும் ஏற்பட்டு, அதனால் அவர் நாசமடைந்திருந்தால் அவரது செல்வம் தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளும் அளவுக்குக் கேட்பது அனுமதிக்கப்பட்டதாகும். (3) ஒருவருக்குப் பஞ்சம் (பெரும் நஷ்டம்) ஏற்பட்டு அவருடை சமூகத்தார் மூவர், ''உண்மையில் அவருக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது'' என்று சாட்சி சொன்னால் அவருடைய பஞ்சம் தீரும் வரை தர்மம் கேட்பது அவருக்கு அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கபீஸா இப்னு முகாரிக்(ரலி) அறிவிக்கிறார்.



சமாதான ஒப்பந்தம்

895 ''அனுமதிக்கப்பட்டதை விலக்கப்பட்டதென்றும், விலக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதென்றும் ஆக்காதவரை முஸ்லிம்கள் தம்மிடையே ஒப்பந்தம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். அவ்வாறே அனுமதிக்கப்பட்டதை விலக்கப்பட்டதாகவும், விலக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்காத மற்ற நிபந்தனைகளில் முஸ்லிம்களில் தம்மிடையே ஒப்பந்தம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். அவ்வாறே அனுமதிக்கப்பட்டதை விலக்கப்பட்டதாகவும், விலக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்காத மற்ற நிபந்தனைகளில் முஸ்லிம்கள் நிலைத்திருக்கவும் வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு அவ்ஃப் முஸனீ(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்புத் தொடரில் கர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அம்ர் இப்னி அவ்ஃப் எனும் பலவீனமானவர் இடம் பெறுவதால் (அறிஞர்களில்) பலர் இதை ஸஹீஹ் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அதிகமான வழிகளில் இது அறிவிக்கப்படுவதால் திரிமிதீயில் ஸஹீஹ் என்றே உள்ளது.

896 மேற்கண்ட ஹதீஸே அபூஹுரைரா(ரழி) வாயிலாக ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

897 ''ஓர் அண்டை வீட்டார் மற்றோர் அண்டை வீட்டரின் சுவரில் கழியைப் பதிப்பதை தடுக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவித்து விட்டு, ''இது என்ன நிலை? இதனால் நீங்கள் முகம் திருப்பிக் கொள்வதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த சுன்னத்தை நான் உங்களது தோள்களின் மீது ஏற்றுவேன்'' என்று கூறினார். புகாரி, முஸ்லிம்

வார்த்தை மாற்றத்துடன் (அதே பொருளில்) இது அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது.

900 ஒருவர் இறந்து விட்டார். நாங்கள் அவரைக் குளிப்பாட்டி, நறுமணம் பூசி, கபன் ஆடையிட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துமாறு கூறினோம். அவர்கள் ஒரு அடி (முன்) எடுத்து வைத்துவிட்டு, ''இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?'' என்று கேட்டார்கள். நாங்கள், ''இரண்டு தீனார் கடன் உள்ளது'' என்று கூறினோம். (இதைக் கேட்டவுடன்) அவர்கள் திரும்பிச் செல்லலாயினர். அப்போது அபூ கதாதா அந்தக் கடனைத் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ''அந்த இரண்டு தீனாருக்கும் நான் பொறுப்பேற்கிறேன்'' என்று கூறினார். பின்னர் நபி(ஸல்) அவர்கள், ''கடன்காரருக்கு உரிமை கிடைத்து விட்டது! இந்த மைய்யித்தும் அதை விட்டு விலம்க் கொண்டது'' என்று கூறினார்கள். அதற்கவர், 'ஆமாம்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் அதற்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத் மற்றும் நஸயீ

இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

901 கடனாளியாக உள்ள எவருடைய ஜனாஸாவேனும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால், ''இவர் தன்னுடைய கடனைப் பூர்த்தி செய்ய ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?'' என்று கேட்பார்கள். அவர் விட்டுச் சென்றது கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லையெனில், ''உங்கள் நண்பருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறி விடுவார்கள். பின்னர் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்க பல வெற்றிகளைக் கொடுத்தபின் ''நான் முஸ்லிம்களின் உயிர்கள் மீது அதிக உரிமை பெற்றவன். எவரேனும் இறந்து விட்டு அவருக்குக் கடன் இருந்தால் அதைத் தீர்ப்பது என்னுடைய பொறுப்பாகும்'' என்று கூறினார்கள். என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

புகாரியின் மற்றோர் அறிவிப்பில் ''எவர் இறந்து தன்னுடைய கடனை அடைக்க எதுவும் விட்டுச் செல்ல வில்லையோ (அவருக்கு நான் பொறுப்பேற்கிறேன்)'' என்று உள்ளது.

902 ''தண்டனையில் பொறுப்பேற்க அனுமதியில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இது பைஹகீயில் 'ளயீஃப்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



வியாபாரத்தில் கூட்டு மற்றும் வக்காலத்து

903 ''ஒருவருக்கொருவர் எதுவரை மோசடி செய்யாமல் இருக்கிறார்களோ, அதுவரை இரண்டு பங்குதாரர்களுக்கிடையே நான் மூன்றாமவனாக இருப்பேன். அதில் எவரேனும் ஒருவர் மோசடி செய்தால், அவர்களிடையேயிருந்து நான் விலம்க் கொள்வேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

904 'நான் நபி(ஸல்) அவர்களுடன் மக்கா வெற்றிக்கு முன்பு (வியாபாரத்தில்) பங்கு தாரராக இருந்தேன். நான் மக்கா வெற்றியன்று நபி(ஸல்) அவர்களிடம் வந்ததும், ''என்னுடைய சகோதரரே! என்னுடைய பங்கு தாரரே! வருக!'' என்று கூறினார்கள் என அஸ் ஸாயிப் அல் மக்ஸூமி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத் மற்றும் இப்னுமாஜா

905 ''நான், அம்மார் மற்றும் ஸஅத் ஆகியோர் பத்ரு தினத்தன்று கிடைத்த (கனீமத்)தில் கூட்டாக இருந்தோம்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) நஸயீ

906 நான் கைபர் செல்ல நாடிய போது நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ''நீ கைபர் சென்றால், அங்கு என்னுடைய பொறுப்பாளாரிடம் பதினைந்து வஸக் பேரீச்சம்பழம் வாங்கிக் கொள்!'' என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

907 தமக்காக ஒரு தீனாருக்கு குர்பானிப் பிராணி வாங்கி வருமாறு என்னை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள் என உர்வா அல்பாரிக்கீ(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) புகாரி

908 நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களை ஜகாத் வசூலிக்க நியமித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

909 நபி(ஸல்) அவர்கள் அறுபத்து மூன்று ஒட்டகங்களை அறுத்து விட்டு மீதத்தை அறுக்கும்படி அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.

910 பணியாள் விபச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறுகையில், ''உனைஸே! இவரது மனைவியிடம் செல்! அவள் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டால், கல் எறிந்து (கொன்று) விடு!'' என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.



ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல்

911 ''நீர் உண்மையையே பேசு அது (எவருக்கும்) கசப்பாக இருப்பினும் சரி'' என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இரவல்

912 ''பிறரிடமிருந்து ஒரு பொருளை வாங்கியவர் அதைத் திரும்பக் கொடுக்காதவரை அவரே அதற்குப் பொறுப்பாளியாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத் அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

913 '' உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உங்களிடம் ஒப்படைத்தவரிடமே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு மோசடி செய்தவருக்கும் கூட நீங்கள் மோசடி செய்து விடாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

இது அபூதாவூதில் ஹஸன் எனும் தரத்திலும், ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும், அபூஹாதமில் முன்கர் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

914 ''உன்னிடம் என்னுடைய தூதர்கள் வந்தால் அவரிடம் நீ முப்பது கேடயங்களைக் கொடுத்தனுப்பு'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த இரவலுக்கு விலை கொடுக்கப்படுமா? அல்லது இது திரும்பக் கொடுக்கப்படும் இரவலா?'' என்று நான் கேட்டதற்கு, ''திரும்பக் கொடுக்கப்படும் இரவல் தான்'' என்று பதிலளித்தார்கள் என யஃலா இப்னு உமையா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

915 ஹுனைன் போரின் போது நபி(ஸல்) அவர்கள் சில கேடயங்களைத் தன்னிடம் இரவல் வாங்கிய போது, ''முஹம்மதே! இது (போரின்) கொள்ளைப் பொருளா? அல்லது இரவலா?'' என்று கேட்டதற்கு, ''இல்லை! (திரும்பக் கொடுத்து விடுவதாகப்) பொறுப்பேற்றுக் கொண்ட இரவல்'' என்று நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக ஸஃப்வான் இப்னு உமையா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், அஹ்மத் மற்றும் நஸயீ. இது ஹாகிமில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

916 ''மேற்கண்ட ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக ளயீஃப் எனும் தரத்தில் ஹதீஸ் ஒன்றை ஹாகிம் பதிவு செய்துள்ளார்.



அபகரிப்பு

917 ''எவன் அநியாயமாக (பிறரது) பூமியில் ஓர் அங்குலத்தை எடுத்துக் கொள்கிறானோ, மறுமையில் அல்லாஹ் ஏழு பூமிகளை அவனது கழுத்தில் மாலையாகப் போட்டு விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

918 நபி(ஸல்) அவர்கள் தம்முடைய மனைவியர்களில் ஒருவருடன் இருந்த போது, அவர்களது மற்றொர மனைவி தனது பணிப்பெண்ணிடம் ஒரு தட்டில் அவர்களுக்காக உணவு கொடுத்தனுப்பினார். அதை அவர் (நபியின் மனைவி) கையால் தட்டி விட்டார். அதனால் அந்தத் தட்டு உடைந்து விட்டது. நபி(ஸல்) அவர்கள் அந்தத் தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் போட்டு ''இதைச் சாப்பிடு!'' என்றார்கள். பின்னர் கொண்டு வந்தவரிடம் ஒரு நல்ல தட்டைக் கொடுத்து விட்டு உடைந்த தட்டை வைத்துக் கொண்டார்கள். புகாரி, திர்மிதீ

திர்மிதீயில் ''உடைத்தவர் ஆயிஷா(ரலி) என்றும் ''உணவுக்குப் பதில் உணவு, பாத்திரத்திற்குப் பதில் பாத்திரம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

919 ''எவர் பிறரது பூமியில் (நிலத்தில்) அவரது அனுமதியின்றிப் பயிரிடுகிறாரோ, அவருக்கு அதிலிருந்து எதுவும் கொடுக்கப்படாது. அவர் செலவிட்டுள்ள அளவு மட்டுமே கொடுக்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராஃபிஉ இப்னு கதீக்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரி இதை ளயீஃப் என்று குறிப்பிட்டுள்ளார்.

920 இரண்டு நபர்கள் ஒரு நிலம் தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடம் வழக்கு கொண்டு வந்தனர். அவர்களில், ஒருவர் மற்றொருவருக்குச் சொந்தமான பூமியில் பேரீச்சை மரம் பயிரிட்டு விட்டார். நிலத்தை அதனுடைய உரிமையாளரும், விளைச்சலை அதைப் பயிரிட்டவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என கட்டளையிட்டுத் தீர்ப்பளித்தார்கள். பின்னர் ''அநியாயக்காரனுக்கு நிலத்திலுள்ள எதற்கும் உரிமை கிடையாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என நபித்தோழர்களில் ஒருவர் கூறியதாக உர்வா இப்னு ஜுபைர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

921 மற்றோர் அறிவிப்பில் ஸுனன்களிடம் உர்வா மற்றும் ஸயீத் இப்னு ஸைத் வாயிலாக உள்ள ஹதீஸ் மவ்ஸூல் மற்றும் முர்ஸல் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஏனெனில், அறிவித்த ஸஹாபி யாரெனத் தெரியவில்லை.

922 ''உங்கள் இரத்தம், உங்களது சொத்துக்கள், உங்களது இந்த நாளில், உங்களது இந்த மாதத்தில், உங்களது இந்த நகரத்தில் விலக்கப்பட்டுள்ளது போன்று (எப்போதும்) விலக்கப்பட்டதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூபக்ரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்



ஷுஃப்ஆ (வாங்குவதில் முன்னுரிமை)

923 ''பிரித்தளிக்கப்படாத (தனக்குச் சேர வேண்டிய) ஒவ்வொரு பொருளிலும் ஷுஃப் ஆவிற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். ஆனால் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு பாதைகள் மாற்றப்பட்டு விட்டால்; அதில் ஷுஃஆ இல்லை'' என, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

924 ''நிலத்திலிருப்பினும், வீடு அல்லது நான்கு சுவர்களுக்கு மத்தியிலிருப்பினும் ஒவ்வொரு கூட்டிலும் ஷுஃஆ உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிமுடைய மற்றொரு அறிவிப்பில் உள்ளது.

''தன்னுடைய பங்குதாரரிடம் சமர்ப்பிக்காதவரை வியாபாரம் கூடாது'' என்று மற்றோர் அறிவிப்பில் ''உள்ளது.

''தன்னுடைய பங்குதாரரிடம் சமர்ப்பிக்காதவரை வியாபாரம் கூடாது'' என்று மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு பொருளிலும் ஷுஃப் ஆவிற்கு அனுமதியளித்தார்கள் என தஹாவியில் உள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

925 ''அண்டை வீட்டுக்காரரே (ஒரு வீட்டை வாங்கிட) அதிக உரிமையுடையவர் ஆவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மஃலூல் எனும் தரத்திலும் உள்ளது.

926 ''பக்கத்து வீட்டை வாங்கிட அண்டை வீட்டாரே அதிகம் உரிமை பெற்றவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ராஃபிஉ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, ஹாகிம்

இது நீண்ட சம்பவத்திலுள்ள ஒரு பகுதியாகும்.

927 ''ஷுஃப்ஆவில் அண்டை வீட்டாரே அதிகம் உரிமை பெற்றவராவார். அவர் ஊரில் இல்லாவிட்டாலும் அவர் வரும் வரை காத்திருந்து, பிறகு தான் விற்க வேண்டும். இருவரின் (வீட்டுப்) பாதையின் ஒன்றாக இருக்கும் வரை தான் இந்த நிபந்தனை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.

928 ''ஷுஃப்ஆ என்பது (ஒட்டகத்தைக் கட்டவிழ்த்து விடுவது போன்று வியாபாரத்தில்) கட்டவிழ்த்து விடுவதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். இப்னுமாஜா, பஸ்ஸார்

''ஊரில் இல்லாதவருக்கு ஷுப்ஆவின் உரிமை இல்லை'' என்று மற்றொரு அறிவிப்பும் உள்ளது. இது ளயீஃப் எனும் தரம் பெற்றதாகும்.



கிராள்

929 குறிப்பிட்ட கால அவகாசத்துடன் வியாபாரம் செய்தல், முகாரளா மற்றும் வியாபாரத்திற்கு அல்லாது வீட்டில் கோதுமையுடன் வாற் கோதுமையைக் கலந்து விடுதல் ஆகிய மூன்றில் அருள் வளம் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸுஹைப்(ரலி) அறிவிக்கிறார். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

930 என்னுடைய செல்வத்தை உயிருள்ளவற்றில் (முதலீடு) செய்வதோ, கடல் மார்க்கமாக எடுத்துச் செல்வதோ, அல்லது (வேறு) நீர் நிலை வழியாக எடுத்துச் செல்வதோ கூடாது. அப்படிச் செய்தால் நீயே என்னுடைய செல்வத்திற்கும் பொறுப்பாளியாவாய் என்ற நிபந்தனையுடன் தான் (தனது) செல்வத்தைக் கொடுத்தாக ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்

அலா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி யஃகூப் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனாரிடமிருந்து ''லாபம் இருவருக்கும் உரியது'' என்ற நிபந்தனையுடன் உஸ்மான்(ரலி) இவ்வாறு (முகாரளா) செய்துள்ளார்கள் என ஸஹீஹ் மவ்கூஃப் எனும் தரத்தில் முஅத்தாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



விவசாய ஒப்பந்தம் மற்றும் கூலி

931 நபி(ஸல்) அவர்கள் கைபர்வாசிகளுடன் பேரீச்சை அல்லது மற்ற பயிர்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் போரில் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

புகாரி, முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், ''அவர்கள் தங்களுக்கு தங்களின் உழைப்புக்குப் பகரமாக விளைச்சலின் ஒரு பகுதியை வேண்டினார்கள். அதாவது அரைப்பங்கு தங்களுக்கென வேண்டினார்கள். அதற்கு, ''நாங்கள் விரும்பும் வரை உங்களுக்கு நீங்கள் கேட்டதையே நிர்ணயிக்கின்றோம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்களை உமர்(ரலி) அவர்கள் நாடு கடத்தும்வரை அதே அளவு பங்கைப் பெற்று வந்தார்கள் என்று உள்ளது.

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் 'கைபர் هதர்களிடம், கைபர் பேரீச்சைத் தோட்டங்களையும், கைபர் நிலத்தையும் தங்களது செல்வத்தால் விவசாயம் செய்து அதில் அவர்கள் அடைகிற மகசூலில் அரைப்பாங்கு (மட்டும்) அவர்களுக்கு என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்று உள்ளது.

932 தங்கம் மற்றும் வெள்ளிக்கு பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு வாங்குவது பற்றி ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ''நபி(ஸல்) அவர்களது காலத்தில் அப்போது நீர்நிலைகளைச் சுற்றியுள்ள நிலங்கள் மற்றும் நதிக்கரைகளில் உள்ள நிலங்களிலும் நிலத்தின் சில பகுதிகளிலும் சில சமயம் நஷ்டம் அடைந்து விடும். இதைத் தவிர வேறு எதிலும் மக்கள் குத்தகை வைத்துக் கொள்ளவில்லை. இதனால், இதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இன்னும் குறிப்பிட்ட அளவு பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தார்கள் என ஹன்ளலா இப்னு கைஸ்(ரலி) அறிவிக்கிறார்.

புகாரி மற்றும் முஸ்லிம் இருவரும் இணைந்து வழங்கிய ஹதீஸில் பொதுவாக நிலக்குத்தகை தடை செய்யப்பட்டுள்ளதாக உள்ளதற்கு மேற்கண்ட ஹதீஸில் தடுக்கப்பட்டதற்கான விளக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

933 ''நபி(ஸல்) அவர்கள் முஸாராஅத்தை தடை செய்து குத்தகை முறையைப் பின்பற்றும்படி கட்டளையிட்டார்கள் என ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவிக்கிறார்.

934 நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்ததற்காக இரத்தம் குத்தி எடுத்தவருக்கு கூலி கொடுத்தார்கள். இந்தக் கூலி விலக்கப்பட்டது என்றால், நபி(ஸல்) அவர்கள் கொடுத்திருக்கமாட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

935 ''இரத்தம் குத்தி எடுப்பவனுடைய சம்பாத்தியம் அசுத்தமானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவிக்கிறார்.

936 ''என்னுடைய பெயரால் வாக்குறுதியளித்து விட்டு மாறு செய்பவன்; சுதந்திரமாகத் திரிபவனை (அடிமையாக) விற்பனை செய்து அதன் கிரயத்தை உண்பவன் இன்னும் பணியாளாரிடம் முழுக்க முழுக்க வேலை வாங்கிக் கொண்டு, அவனுக்குரிய கூலியைக் கொடுக்காதவன் ஆகிய மூன்று நபர்களுக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுவேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

937 ''நீங்கள் ஊதியம் பெறுவதற்கு அதிக உரிமையுடையது அல்லாஹ்வின் வேதமேயாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

938 ''தொழிலாளியின் வியர்வை உலரும் முன்பு அவனுக்குரிய கூலியைக் கொடுத்து விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

939 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா(ரலி) வாயிலாக அபூயஃலா மற்றும் பைஹகியில் இடம் பெற்றுள்ளது.

940 ஜாபிர்(ரலி) வாயிலாக தபரானியிலும் இடம் பெற்றுள்ளது.

இவை அனைத்தும் ளயீஃப் எனும் தரத்தில் உள்ளவையாகும்.

941 ''பணியாளனை நியமிப்பவர் (அப்போதே) அவருக்கான கூலியையும் நிர்ணயித்துக் கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். அப்துர் ரஸ்ஸாக்

இது முன்கதிஃ எனும் தரத்தில் உள்ளது. மவ்ஸூல் எனும் தரத்தில் அபூஹனிஃபா வாயிலாக பைஹகீயிலும் உள்ளது.



தரிசு நிலத்தை உழவு செய்து உயிராக்குதல்

942 ''எவருக்கும் சொந்தமில்லாத (புறம்போக்கு) நிலத்தை எவர் (சீர் செய்து) உயிர்ப்பிக்கின்றாரோ, அது அவருக்கே உரியது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா(ரஹ்) அறிவிக்கிறார். ''உமர்(ரலி) அவர்களது தமது ஆட்சிக் காலத்தில் இதன் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள் எனவும் உர்வா(ரஹ்) கூறினார். புகாரி

943 ''இறந்த (தரிசு) நிலத்தை எவர் உயிர்ப்பிக்கின்றாரோ, அது அவருக்குரியதே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ, மற்றும் நஸயீ

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 'முர்ஸல்' எனும் தரம் பெற்றது என்றும் திர்மிதீ குறிப்பிட்டுள்ளார். அறிவித்த தோழர்(பெயர்) ஜாபிர்(ரலி) என்றும், ஆயிஷா(ரலி) என்றும், அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) என்றும் கருத்து வேறுபாடுள்ளது. இருப்பினும் முதல் கூற்றே பலமானது.

944 ''பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டுமே உரியதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தியை ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா அல்லைஸி அறிவித்தார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

945 ''பிறருக்கு நட்டம் ஏற்படுத்துவதும், நட்டம் ஏற்படுத்தப்படுதலும் அனுமதிக்கப்பட்டது அல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், இப்னுமாஜா

946 அபூ ஸயீத்(ரலி) வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் போன்றே இப்னுமாஜாவிலும் உள்ளது. இன்னும் அது 'முர்ஸல்' எனும் தரத்தில் முஅத்தாவிலும் உள்ளது.

947 ''எவரொருவர் (யாருக்கும் சொந்தமில்லாத) நிலத்தில் (நன்கு) வேலிகளைப் போட்டுக் கொள்கிறாரோ, அது அவருக்கே உரியது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது இப்னுல் ஜாரூதில் ஸஹிஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

948 ''எவர் (பிறருக்குச் சொந்தமில்லாத) ஓர் இடத்தில் கிணறு தோண்டியுள்ளாரோ, அவர் தம்முடைய கால்நடைகள் நீரருந்தி ஒய்வெடுக்கும் இடமாக வைத்துக் கொள்ள (அதைச் சுற்றியுள்ள இடத்தில்) நாற்பது முழம் இடம் அவருக்கே உரியதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவிக்கிறார். இது இப்னுமாஜாவில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

949 நபி(ஸல்) அவர்கள் 'ஹளராமவ்த்' எனும் இடத்தில் உள்ள நிலத்தை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள் என அல் கமா இப்னு வாயில் தம்முடைய தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

950 நபி(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களுக்கு அவரது குதிரை ஓடிய தூரம் வரை நிலத்தை மானியமாகக் கொடுத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்கள் தம்முடைய குதிரையை அது நிற்கும் வரை ஓட்டிச் சென்றார்கள். அது ஓடி நின்ற பின் தமது சாட்டையை வீசினார்கள். அதற்காக அந்த சாட்டை சென்றடைந்த அளவு தூரமுள்ள நிலத்தை அவருக்குக் கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது 'ளயீஃப்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

951 நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் இருந்த போது ''புல், தண்ணீர், நெருப்பு ஆகிய மூன்று பொருட்களில் (அனைத்து) மக்களும் பங்குதாரர்களாவர். (இதை யாரும் யாருக்கும் தடை செய்யக்கூடாது)'' என்று அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்களில் ஒருவர் அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.



வக்ஃப் (தானம்)

952 ''நிலையான தர்மம், பயன் தரக்கூடிய கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடிய வாரிசு ஆகிய இவை மூன்றைத் தவிர மற்ற அனைத்து செயல்களும் மனிதன் இறந்து விட்டால் அவனை விட்டு நின்று விடுகின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

953 உமர்(ரலி) அவர்களுக்கு கைபரில் சிறிது நிலம் கிடைத்தது. அதைப் பற்றிக் கேட்பதற்கு அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கைபரில் எனக்குக் கொஞ்சம் நிலம் கிடைத்துள்ளது. இதைவிடச் சிறந்ததாக ஒரு சொத்தை நான் எப்போதும் பெற்றதில்லை'' என்று கூறினார். அதற்கு, ''நீ விரும்பினால் அடிநிலத்தை உன்னிடமே வைத்துக் கொண்டு, அதில் கிடைப்பவற்றை தர்மம் செய்து விடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே, உமர்(ரலி) அவர்கள் அந்த நிலத்தை விற்கவோ, அன்பளிப்பாக அளிக்கவோ, வாரிசுரிமையாகப் பெறவோ முடியாது. அதை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் போர்புரியச் செல்வோருக்கும், வழிப்போக்கர்களுக்கும் மற்றும் விருந்தினர்களுக்கும் செலவிட வேண்டும். அதைத் தன்னுடைய சொத்தாக ஆக்கிக் கொள்ளாத நிலையில் அதன் பொறுப்பாளர்களும், அவர்களது நண்பர்களும் அதில் உண்பது பாவமாகாது என்னும் நிபந்தனையின் போரில் அதன் வருமானத்தை போரில் அதன் வருமானத்தை தர்மம் செய்து விட்டார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. புகாரியுடைய மற்றோர் அறிவிப்பில், ''அந்த நிலத்தை வக்ஃப் செய்து விடுங்கள். அதை விற்பனை செய்யவோ, அன்பளிப்பாக அளிக்கவோ கூடாது. ஆனால், அதன் விளைச்சலை இறைவழியில் செலவிட வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உள்ளது.

954 நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களை தர்மப் பொருட்களை வசூலிக்க நியமனம் செய்தார்கள். (நீண்ட ஹதீஸ்) காலித் தன்னுடைய உருக்குச் சட்டைகளையும், ஆயுதங்களையும் இறைவழியில் வக்ஃப் செய்துவிட்டார் என்பதும் அதில் உள்ளது. புகாரி, முஸ்லிம்



அன்பளிப்பு, உகிறா, ருக்பா

955 என்னுடைய தந்தை என்னை நபி(ரலி) அவர்களிடம் அழைத்துச்சென்று, ''என்னுடைய இந்த அடிமையை என்னுடைய இந்த மகனுக்குக் கொடுத்துவிட்டேன்'' என்று கூறியதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உன்னுடைய ஒவ்வொரு மகனுக்கும் இவ்வாறே செய்துள்ளாயா?'' என்று கேட்டார்கள். அவர், ''இல்லை'' என்றார். அதற்கு, ''அப்படியானால் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்'' என்று அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார்.

மற்றோர் அறிவிப்பில், ''என்னுடைய தந்தை எனக்கு (அன்பளிப்பாக அடிமையை) அளித்ததற்கு நபி(ஸல்) அவர்களை சாட்சியாக்குவதற்காக அவர்களிடம் சென்றார். அதற்கு ''நீர் உம்முடைய பிள்ளைகளி எல்லோருக்கும் இவ்வாறு செய்துள்ளீரா?'' என்று அவர்கள் கேட்டார்கள். என் தந்தை ''இல்லை'' என்றார். அதற்கு ''அல்லாஹ்வைப் பயந்து கொள்! உன்னுடைய பிள்ளைகளுக்கிடையே நியாயமாக நடந்துகொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் என்னுடைய தந்தை அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்று உள்ளது. புகாரி, முஸ்லிம்

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''நீ என்னைத் தவிர்த்து மற்றவரை சாட்சியாக்கிக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் என்னுடைய தந்தை அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்று உள்ளது. புகாரி, முஸ்லிம்

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''நீ என்னைத் தவிர்த்து மற்றவரை சாட்சியாக்கிக் கொள்!'' என்று கூறிவிட்டு பின்னர், ''அவர்கள் அனைவருமே உன்னுடன் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீ விரும்புகிறாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, 'ஏனில்லை' என்றார். அதற்கு '' அப்படியானால் நீ இவ்வாறு செய்யாதே!'' என்றும் உள்ளது.

956 ''தன்னால் அன்பளிப்புச் செய்யப்பட்டதை எவர் (அதைத் திருப்பித் தருமாறு கேட்டு) திரும்பப் பெறுகிறாரோ அவர் வாந்தி எடுத்துவிட்டு மறுபடியும் அதை தின்னும் நாயைப் போன்றவர் ஆவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

''நாய் வாந்தி எடுத்து விட்டு பின்னர் அதைத் திரும்பத் தின்றுவிடுவது போன்று எவன் தான் அன்பளிப்புச் செய்ததைத் திரும்பப் பெறுகிறானோ, அதைப் போன்றதொரு தீய செயல் நம்மில் (வேறு எதுவும்) இல்லை'' என்று புகாரியின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

957 ''தன்னுடைய மகனுக்குத் தந்தை கொடுத்த அன்பளிப்பைத் தவிர்த்து பிறருக்குத் தானளித்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுவது முஸ்லிமான எந்த ஓர் ஆணுக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றனர். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா,

இது திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

958 நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டும், அதற்குக் கைம்மாறு செய்து கொண்டுமிருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

959 நபி(ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். அதற்காக அவருக்கு நபி(ஸல்) அவர்கள் கைம்மாறு செய்து, ''மகிழ்வுற்றாயா?'' என்று கேட்டார்கள். அவர், ''இல்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு இன்னும் அதிகப் படியாகக் கொடுத்து, அதிகப் படியாகக் கொடுத்து, ''மகிழ்வுற்றாயா?'' என்று கேட்டார்கள். அவர், ''இல்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுத்து, ''(இப்போது) மகிழ்வுற்றாயா?'' என்று கேட்டதற்கு, அவர், ''ஆம்'' என்றார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத். 

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

960 ''எவருக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதோ, அவருக்கே ''உம்ஹா'' உரியதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்.

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், ''நீங்கள் உங்களுக்காக உங்கள் சொத்துக்களை இருப்பில் (வைத்து)க் கொள்ளுங்கள். அதை வீணடித்து விடாதீர்கள். ஏனெனில், எவருக்கேனும் 'உகிறா' கொடுக்கப்பட்டால் அவர் உயிருள்ள வரை அது அவருக்கும், இறந்த பின்னர் அவரது சந்ததியினருக்கு உரியதாகும்'' என்று உள்ளது.

மற்றோர் அறிவிப்பின்படி, ''இது உனக்கும் உன் சந்ததினருக்குமாகும்'' என்று சொல்லி அன்பளிப்புச் செய்யும் உகிறாவைத்தான் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். ''நீ உயிர் வாழும் காலம் வரை இது உனக்குரியது என்று ஒருவர் சொல்லி அன்பளிப்புச் செய்வாராயின் அது உரிமையாளாரிடமே திரும்பப் போய் சேர்ந்து விடும்.

அபூதாவூத் மற்றும் நஸயீயின் மற்றோர் அறிவிப்பின்படி ''நீங்கள் ருக்பா, உகிறா, செய்யாதீர்கள். ஏனெனில் ருக்பா, உகிறா' செய்யக்கூடிய பொருள் எவருக்கு (அன்பளிப்புச்)செய்யப்படுகிறதோ, அவரது சந்ததியினருக்குரியதாகும்'' என்று உள்ளது.

961 அல்லாஹ்வின் பாதையில் அவர் சவாரி செய்து கொள்வதற்காக ஒருவருக்கு நான் குதிரை ஒன்றைக் கொடுத்தேன். ஆனால், அவர் அதை வீணடித்து (குறைந்த விலைக்கு விற்க முற்பட்டு) விட்டார். அவர் அதைக் குறைந்த விலைக்கு விற்று விடுவார் என நான் எண்ணியதால் அதை நானே வாங்கிக் கொள்வது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ''அவர் ஒரு திர்ஹத்திற்கேனும் அதை விற்றாலும் அதை நீ வாங்காதே!'' என்று கூறினார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்.

962 '' நீங்கள் ஒருவருக் கொருவர் அன்பளிப்புச் செய்து, உங்களுக்கிடையே அன்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

இது புகாரியின் 'அல் அதபுல் முப்ஃரத்'' எனும் நூலிலும் பதிவாகியள்ளது. 'அபூ யஃலா' எனும் நூலில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

963 ''நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்கள் மனக்குறைகளை அகற்றி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். பஸ்ஸார். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

964 ''முஸ்லிம் பெண்களே! ஒருவருக்கு அவருடைய அண்டை வீட்டார் ஆட்டு குழம்பைக் கொடுத்தாலும் அதை இழிவாகக் கருதாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார். புகாரி, முஸ்லிம்

965 '' எவரேனும் அன்பளிப்புச் செய்தால் அவருக்கு பதிலளிக்கப் படாதவரை (அவரிடத்தில்) அவர் (அன்பளிப்புச் செய்தவர்) அதிகம் உரிமை பெற்றவராவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். ஹாகிமில்  இது ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளது.



கண்டெடுக்கும் பொருள்

966 நபி(ஸல்) அவர்கள், வழியில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்ற போது, ''இது தர்மப் பொருளாக இருக்கக் கூடும் என்று நான் அஞ்சவில்லை என்றால் இதை நான் புசித்திருப்பேன்'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்.

967 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கண்டெடுக்கும் பொருட்களைப் பற்றி வினவினார். அதனுடைய பை மற்றும் சுருக்கிடும் கயிற்றை அறிவிப்புச் செய்து விட்டு, பின்னர் ஒரு வருட காலம் காத்திரு. அந்தப் பொருளுக்குரியவர் வந்து விட்டால் அது அவருக்கே உரியதாகும். இல்லையெனில், அதை நீ பயன் படுத்திக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர் ''காணாமல் போன ஆடு?'' என்று கேட்டார் ''அது உனக்கு அல்லது உன்னுடைய சகோதரனுக்கு அல்லது ஓநாய்க்குரிய தாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர் ''காணாமல் போன ஒட்டகம்?'' என்று கேட்டார். அதற்கு ''உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன் அதன் வயிறும் கால்களும் இருக்கின்றன. அதை அதனுடைய எஜமானன் காணும் வரை அது தண்ணீரைப் பருகிக் கொண்டும், மரங்களைத் தின்று கொண்டும் திரியும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

968 ''எவரேனும் காணாமல் போன கால்நடைக்கு அபயமளித்தால், அவர் அதை அறிவிக்காத வரை வழிகேட்டில் உள்ளவராவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

969 ''எவரேனும் ஒரு பொருளைக் கண்டெடுத்தால், அவர் அதற்கு நீதியான இரண்டு சாட்சிகளை நியமனம் செய்து கொள்ளட்டும். இன்னும் அதன் பை மற்றும் கயிற்றை நினைவில் வைக்கட்டும். அதை அவர் மறைக்கவோ - ஒளிக்கவோ கூடாது. அதன் உரிமையாளர் வந்துவிட்டால், அவரே அதில் அதிக உரிமை பெற்றவராவார். இல்லையெனில், அது அல்லாஹ்வின் சொத்தாகும். அவன் அதை விரும்பியவருக்கு அளிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இயாள் இப்னு ஹிமார்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு குஸைமா, இப்னு அல் ஜாரூத் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

970 ஹாஜிகள் தவறவிட்டபொருட்களை பிறர் எடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு உஸ்மான்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

971 ''அறிந்து கொள்ளுங்கள்! மிருகங்களில் கோரைப் பற்களுடையவையும், நாட்டுக் கழுதையும் இஸ்லாமிய அரசின் கீழ் ஒப்பந்தம செய்து வாழ்பவரின் காணாமல் போன பொருள் அவனுக்குத் தேவையில்லை என்கிற பட்சத்திலே தவிர மற்றவை விலக்கப்பட்டதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம் இப்னு மஃதீ கரிப்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்



பாகப் பிரிவினை

972 ''வாரிசுகளுக்கு அவர்களுக்குரிய பங்கை கொடுத்து விடுங்கள். அதில் மீதம் இருப்பவற்றை நெருங்கிய உறவுக்கார ஆணுக்குக் கொடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

973 ''எந்த முஸ்லிமும் இறை நிராகரிப்பாளனுக்கு வாரிசாக மாட்டான்(அவ்வாறே) இறை நிராகரிப்பாளன் எவனும் முஸ்லிமிற்கு வாரிசாக மாட்டான்.'' என்று நபி(ஸல்) அவர்கள். கூறினார்கள். என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

974 மகளுக்கு அரைப் பங்கையும், மகனுடைய மகளுக்கு (பேத்தி) ஆறில் ஒரு பங்கையும், மூன்றில் ஒரு பங்கு பூர்த்தியாக்குவதற்காகக் கொடுக்க வேண்டும். இன்னும் அதில் மீதமுள்ளது சகோதரிக்குரியதாகும் என நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

975 ''இரு வேறுபட்ட மதத்தினர் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

உஸாமா(ரலி) வாயிலாக ஹாகிமிலும்  நஸயீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

976 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''என்னுடைய பேரன் இறந்து விட்டான். அவனது சொத்தில் எனக்குரிய பங்கு என்ன?'' என்று கேட்டதற்கு, ''ஆறிலொரு பங்கு உன்னுடையது'' என்று என்று நபி(ஸல்) அவர் திரும்பிச் சென்ற போது அவரை (மறுபடியும்) அழைத்து, ''உனக்கு மற்றுமொரு ஆறிலொரு பங்கு உண்டு'' என்று கூறினார்கள். பின்னர் (அவர் மறுபடியும்) திரும்பிச் சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவரை (மறுபடியும்) அழைத்து, ''இந்த மற்றோர் ஆறிலொரு பங்கு உனக்கு ஆறிலொரு பங்கு உனக்கு அதிகப்படியாக கிடைப்பதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஹஸன் பஸாரி வாயிலாக இம்ரானிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

977 (இறந்தவருக்குத்) தாய் இல்லை எனில் பாட்டிக்கு ஆறிலொரு பங்கை நபி(ஸல்) அவர்கள் (உரிமை) ஆக்கினார்கள் என புரைதரா(ரலி) தம்முடைய தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ.

இது இப்னு குஸைமா மற்றும் இப்னு அல் ஜாரூதில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இப்னு அதீ இதை பலமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்.

978 ''வாரிசு இல்லாதவருக்கு அவரது தாய்மாமன் வாரிசாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அல்மிக்தாம் இப்னு மஃதீ கருப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா

இது அபூ ஸரஆ அர்ரா எனும் நூலில் ஹஸன் எனும் தரத்திலும், ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹிஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

979 ''எவருக்குப் பொறுப்பாளர் இல்லையோ, அவருக்கு அல்லாஹ்வும், அவனது தூதரும் பொறுப்பாளராவர். இன்னும் வாரிசு இல்லாதவருக்கு அவரது மாமன் வாரிசாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ உபைதா(ரலி) அவர்களுக்கு உமர்(ரலி) எழுதினார்கள் என, அபூஉமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும், இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

980 ''பிறந்த குழந்தை (அழுது) சத்தம் எழுப்பி விட்டால் அது வாரிசுரிமை பெற்றதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

981 ''கொலைகாரனுக்கு (கொலை செய்யப்பட்டவனிடமிருந்து) சொத்துரிமை எதுவும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தமது தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். நஸயீ, தாரகுத்னீ

இது இப்னு அப்தில் பர் எனும் நூலில் பலமானது என்றும், நஸயீயில் மஃலூல் எனும் தரத்திலும் இடம் பெற்றுள்ளது. இது மவ்கூஃப் எனும் தரத்திலும் உள்ளது.

982 ''தந்தை அல்லது பிள்ளைகள் வீட்டிற்கு எதைக் கொண்டு வந்தாலும் அதில் (வீட்டிலுள்ள) உறவினர் ஒவ்வொருவருக்கும் உரியதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு அல் மதீனீ மற்றும் அப்துல் பர் ஆகிய நூல்களில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

983 ''வலா எனும் உரிமையின் தொடர்வு நெருங்கிய உறவினர்களின் தொடர்பைப் போன்றது. அது விற்கப்படவோ, அன்பளிப்பாக அளிக்கப்படவோ கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

முஹம்மத் இப்னு அல் ஹஸன் அபூ யூசுஃபிடமிருந்து அஷ்ஷாஃபிஈ வழியாக ஹாகிமில் இது பதிவு செய்யப் பட்டுள்ளது. இன்னும் இது இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்திலும், பைஹகீயில் மஃலூல் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

984 ''உங்களில் வாரிசுரிமைச் சட்டத்தைப் பற்றி அதிகம் அறிந்தவர் ஜைது இப்னு ஸாபித் அவர்கள் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) வாயிலாக அபூ கிலாபா அறிவிக்கிறார். அஹ்மத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



மரண சாசனம் (உயில்)

985 ''எதைப் பற்றியேனும் மரண சாசனம் எழுத விரும்பி, அந்த மரண சாசனம் எழுதப் படாமலேயே இரண்டு இரவுகளைக் கழிப்பது முஸ்லிமான எந்த ஓர் ஆணுக்கும் சரியானதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லீம்

986 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் செல்வம் உள்ளது. எனக்கு வாரிசாக என்னுடைய ஒரே பெண்ணைத் தவிர வேறுயாருமில்லை. எனவே நான் என்னுடைய சொத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?'' என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ''கூடாது'' என்றார்கள். பின்னர் நான் ''அரைப் பங்கை கேட்க அதற்கும் அவர்கள், ''கூடாது'' என்றார்கள். பின்னர் நான் ''மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விட்ட்டுமா?'' என்று கேட்டதற்கு, ''மூன்றில் ஒரு பகுதி (சரிதான்), (இருப்பினும்) அதுவும் அதிகம் தான். உண்மையில் நீ உன்னுடைய வாரிசுகளை தேவையுள்ள வராகவும், மக்களிடம் யாசிப்பவராகவும் விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்.

987 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய தாய் திடீர் என மரணமடைந்து விட்டார். மரண சாசனம் எதுவும் செய்யவில்லை. அவர்(மரண சாசனமாக) ஏதாவது பேசியிருந்தால் தர்மம் செய்திருப் பார் என நான் எண்ணுகிறேன். எனவே, அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அவருக்கு (அதற்கான) கூலியுண்டா?'' என்று கேட்டதற்கு ''ஆம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

988 ''நிச்சயமாக அல்லாஹ் உரிமையுடையவர் ஒவ்வொருக்கும் அவருக்குரிய உரிமையை வழங்கி விட்டான். எனவே, இனி எந்த வாரிசுக்கும் (மற்ற வாரிசை விட அதிகப் படியாக) மரண சாசனம் எதையும் எழுதக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா அல் பாஹிலி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, மற்றும் இப்னுமாஜா.

இது அஹ்மத் மற்றும் திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு குஸைமா மற்றும் இப்னு அல்ஜாரூதில் பலமானது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

989 இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக தாரகுத்னியின் அறிவிப்பின் இறுதியில், ''வாரிசுகள் நாடினால் தவிர'' எனும் வாசகம் அதிகமாக இடம் பெற்றுள்ளது .இது ஹஸன் எனும் தரத்திலும் உள்ளது.

990 ''நீங்கள் மரணிக்கும் போது உங்களது நன்மையை அதிகமாக ஆக்குவதற்காக உங்களது சொத்தின் மூன்றில் ஒரு பகுதியை (தர்மம் செய்யும் உரிமையை) இறைவன் உங்களுக்கு வழங்கியள்ளான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

991 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா(ரலி) வாயிலாக இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. இவையனைத்தும் 'ளயீஃப்' எனும் தரத்தில் உள்ளன. ஆனாலும் இந்த அறிவிப்புகளில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளனர். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

993 ''எவரிடத்தில் ஒரு பொருள் (பொறுப்பு) ஆக வைக்கப்படுகிறதோ அதற்கு அவர், பிணை ஏற்க வேண்டியதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தமது தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்.

இது இப்னு மாஜாவில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Previous Post Next Post