அத்தியாயம் 44 நபித்தோழர்களின் சிறப்புகள்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 44
நபித்தோழர்களின் சிறப்புகள்

பாடம் : 1 அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4747. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நாங்கள் (இருவரும் "ஸவ்ர்" எனும்) குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்தபோது, (எங்களைத் தேடிக்கொண்டிருந்த) இணைவைப்பாளர்களின் கால் பாதங்களை எங்கள் தலைக்கு அருகில் நான் கண்டேன்.
உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் ஒருவன் தன் கால் பாதங்களைக் கண்டால் அவற்றுக்குக் கீழே (ஒளிந்திருக்கும்) நம்மைப் பார்த்துவிடுவான்" என்று (அச்சத்துடன்) சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூபக்ர் அவர்களே! தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் இருவரைப் பற்றி என்ன கருதுகின்றீர்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4748. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்த போது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
"அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு அலங்காரமான இவ்வுலக வாழ்வு, அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு)வாழ்வு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடமிருப்பதையே தேர்ந்தெடுத்து விட்டார்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் மீண்டும் மீண்டும் அழுதார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி) "தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார். அபூபக்ர் (ரலி) அவர்கள்தான் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தமது செல்வத்தாலும் தோழமையாலும் எனக்குப் பேருபகாரம் செய்தவர் அபூபக்ர் அவர்கள்தான். நான் (என் சமுதாயத்தாரில் ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாக இருந்தால்,அபூபக்ரையே உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாமிய சகோதரத்துவமே போதுமானதாகும். (எனது) இந்தப் பள்ளிவாசலில் உள்ள வாசல்களில் அபூபக்ர் வாசலைத் தவிர மற்றவை விட்டுவைக்கப்பட வேண்டாம்"என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4749. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், அவர் என் (கொள்கைச்) சகோதரரும் என் தோழரும் ஆவார். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்கள் தோழரை (அதாவது என்னைத் தனது) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4750. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால், அபூபக்ர் (ரலி) அவர்களையே (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால், அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) அவர்களையே (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4752. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த பூமியில் உள்ளோரில் ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால், அபூகுஹாஃபாவின் புதல்வரையே என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். எனினும், உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின் உற்ற தோழன் ஆவேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4753. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவனியுங்கள்! நான் ஒவ்வொரு நண்பனின் நட்பிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் (இறைவனுக்கு மட்டுமே உற்ற தோழனாக இருக்க விரும்புகிறேன்). (யாரேனும்) ஒருவரை நான் (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால்,அபூபக்ர் அவர்களையே என் உற்றத் தோழராக ஆக்கியிருப்பேன். உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின் உற்ற தோழன் ஆவேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4754. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தாத்துஸ் ஸலாஸில்" எனும் படைப் பிரிவுக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்களிடம் நான் சென்று, "மக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?"என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், "ஆண்களில் (மிகவும் பிரியமானவர் யார்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)" என்று பதிலளித்தார்கள். "பிறகு யார்?" என்று கேட்டதற்கு, "(பிறகு) உமர்" என்று கூறிவிட்டு, மேலும் பலருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 44
4755. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியிருப்பார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூபக்ர் (ரலி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்)" என்று பதிலளித்தார்கள். "அபூபக்ருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "உமர் (ரலி) அவர்களை" என்று பதிலளித்தார்கள். "உமருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப் பட்டபோது, "ஆபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை" என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4756. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணைத் திரும்பவும் தம்மிடம் வரும்படி கட்டளையிட்டார்கள். அந்தப் பெண், "நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லை யென்றால்...?" என்று கேட்டார். -அறிவிப்பாளர் முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் தந்தை கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல் அப்பெண் கேட்டார்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னைக் காண முடியாவிட்டால் அபூபக்ரிடம் செல்" என்று பதில் சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, எதைப் பற்றியோ பேசினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ கட்டளையிட்டார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விஷயங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4757. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது, "உன் தந்தை (அபூபக்ர்) அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்துவா. நான் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன். ஏனென்றால், (தாமே கலீஃபாவாக ஆக வேண்டுமென) எவரும் ஆசைப்படவோ, "நானே (அதற்குத்) தகுதியானவன்" என்று யாரும் சொல்லிவிடவோகூடும் என நான் அஞ்சுகிறேன். (ஆனாலும், அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப்பட்டாலும்) அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4758. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?"என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?" என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்"என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?" என்று கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்களே "நான்" என்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை அனைத்தும் ஒரு மனிதரில் ஒன்று சேர்ந்தால், அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 44
4759. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் தமது மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு, அதை ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. "நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்படவில்லை;மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளேன்" என்று கூறிற்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மக்கள், "அல்லாஹ் தூயவன்" என்று வியப்புடனும் அதிர்ச்சியுடனும் கூறிவிட்டு, "மாடு பேசுமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்" என்று சொன்னார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டு இடையர் தம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஓநாய் ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விச் சென்றது. உடனே அந்த இடையர் அதைத் துரத்திச் சென்று ஓநாயிடமிருந்து அந்த ஆட்டை விடுவித்தார். அப்போது அந்த ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, "கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (யுக முடிவு) நாளில் இந்த ஆட்டுக்கு (பொறுப்பாளர்) யார்? அன்று என்னைத் தவிர வேறெந்தப் பொறுப்பாளனும் இருக்க மாட்டானே!" எனக் கூறிற்று என்று சொன்னார்கள்.
உடனே மக்கள் "அல்லாஹ் தூயவன்" என்று (வியந்து) கூறினர். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஆடு மற்றும் ஓநாய் பற்றிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. மாட்டைப் பற்றிய நிகழ்ச்சி காணப்படவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாடு, ஆடு ஆகியவை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், "நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் அந்த இடத்தில் இருக்கவில்லை" என்று (சற்று கூடுதலான தகவலு)ம் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 2 உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4760. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப் பட்டிருந்தார்கள். அப்போது மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கவும் பாராட்டவும் செய்தனர். பிரேதம் எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா தொழுகை) தொழுதனர். அவர்களிடையே நானும் இருந்தேன்.
அப்போது ஒரு மனிதர் எனக்குப் பின்னாலிருந்து என் தோளைப் பிடித்து என்னைத் திடுக்கிடச் செய்தார். (யாரென்று) நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் அலீ (ரலி) அவர்கள்தான்.
அவர்கள் "உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!" என்று பிரார்த்தித்துவிட்டு, "(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத்தக்கவர் யாரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அதற்குத் தகுதியான மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை உங்களுடைய இரு தோழர்களுடன்தான் அல்லாஹ் இருக்கச் செய்வான் (அதாவது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகியோருடன் நீங்கள் அடக்கம் செய்யப்படுவீர்கள்) என்றே நான் எண்ணியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அபூபக்ரும் உமரும் வந்தோம்". என்றும், "நானும் அபூபக்ரும் உமரும் உள்ளே சென்றோம்" என்றும், "நானும் அபூபக்ரும் உமரும் வெளியில் புறப்பட்டோம்" என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற்றிருக்கிறேன். அதனால்தான் உங்களை உங்கள் இரு தோழர்களுடன்தான் (அல்லாஹ்) அடங்கச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கிறேன் அல்லது எண்ணுகிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4761. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பல விதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் மார்பை எட்டக்கூடிய அளவு (சட்டைகளு)ம் இருந்தன; மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் (தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவுக்குகு முழுநீளச் சட்டையொன்றை அணிந்தவராக என்னைக் கடந்து சென்றார்" என்று கூறினார்கள்.
மக்கள், "இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்தச் சட்டைகள்) அவர்களது மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்" (என விளக்கம் கண்டேன்) என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4762. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்படுவதைப் போன்று கண்டேன். அதில் பால் இருந்தது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தணியும் அளவுக்கு) அருந்தினேன். எந்த அளவுக்கென்றால், (வயிறு நிறைந்து) அது என் நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்" என்று கூறினார்கள்.
மக்கள், "இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, அதற்கு அவர்கள், "அறிவு" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகில் கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன்.
பிறகு அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) அவர்கள் அதை வாங்கி அதன் மூலம் "ஒரு வாளி நீரை" அல்லது "இரண்டு வாளிகள் நீரை" இறைத்தார். அவர் இறைத்தபோது சோர்வு தெரிந்தது. -அல்லாஹ் அவருக்கு மன்னிப்பருள்வானாக.- பிறகு அது மிகப் பெரிய வாளியாக மாறியது.
அப்போது அதை கத்தாபின் புதல்வர் (உமர்) அவர்கள் வாங்கினார். உமர் பின் அல்கத்தாப் இறைத்ததைப் போன்று இறைக்கின்ற (வலிமை மிக்க) அபூர்வத் தலைவர் ஒருவரை நான் மக்களில் பார்க்கவில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) நீர் இறைப்பதைக் கண்டேன்" என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) ஒரு நீர்த் தடாகத்தின் அருகில் நான் இருந்துகொண்டு, நீர் இறைத்து மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் என்னிடம் வந்து எனக்கு ஓய்வளிப்பதற்காக என் கரத்திலிருந்த அந்த வாளியை வாங்கி, இரண்டு வாளிகள் தண்ணீர் இறைத்தார். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. -அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு அருள்வானாக-
பிறகு கத்தாபின் புதல்வர் (உமர்) வந்தார். அவர் அபூபக்ர் அவர்களிடமிருந்து (அந்த வாளியை) வாங்கி, மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி, தம் ஒட்டகங்களுக்கும் புகட்டிவிட்டுத்) திரும்பிச் செல்லும்வரை இறைத்துக்கொண்டேயிருந்தார். அவரைப் போன்று இறைக்கின்ற பலசாலியான ஒரு மனிதரை நான் ஒருபோதும் பார்க்கவில்லை. அப்போதும் தடாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4765. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) நான் சுற்றுச் சுவர் இல்லாத ஒரு கிணற்றுக்கு அருகிலிருந்த வாளியால் தண்ணீர் இறைப்பதைப் போன்று எனக்குக் காட்டப்பட்டது. அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி நீரை அல்லது இரண்டு வாளிகள் நீரை (சற்று) சோர்வான நிலையில் இறைத்தார். அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு அருள்வானாக. பிறகு உமர் பின் அல்கத்தாப் வந்து இறைத்தார்.
உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போன்று செம்மையாகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தம் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூபக்ர் (ரலி), உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஆகியோரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனவில் கண்டதாகக் கூறிய மேற்கண்ட ஹதீஸ், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4766. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "(கனவில்) நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன். அங்கு ஒரு "வீட்டை" அல்லது "மாளிகையைக்" கண்டேன். "இது யாருக்குரியது?" என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), "(இது) உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குரியது" என்று பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உமது தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. (ஆகவே, உள்ளே செல்லாமல் திரும்பி வந்துவிட்டேன்)"என்று கூறினார்கள்.
அதைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா தன்மானத்தைக் காட்டுவது?"என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கிருந்த மாளிகை ஒன்றின் ஓரத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்தாள். அப்போது நான், "இந்த மாளிகை யாருக்குரியது?" என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), "உமர் பின் அல்கத்தாபுக்குரியது" எனப் பதிலளித்தனர். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன்.) உமரின் தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பிவந்துவிட்டேன்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இ(வ்வாறு அவர்கள் கூறிய)தைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அந்த அவையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அனைவரும் இருந்தோம். பிறகு உமர் (ரலி) அவர்கள், "என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் தன்மான உணர்வைக் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4768. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி(ன் வீட்டுக்குள் செல்ல அவர்களி)டம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் உரத்த குரலில் (குடும்பச் செலவுத் தொகையை உயர்த்தித் தரும்படி கேட்டு) பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தம் பர்தாக்களை அணிந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளே சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுவதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) இருக்கச் செய்வானாக" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உமரே!) இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். என்னிடம் (சகஜமாக) இருந்த இவர்கள் உம்முடைய குரலைக் கேட்டதும் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்றுவிட்)டார்கள்" என்று சொன்னார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இவர்கள் (எனக்கு அஞ்சுவதைவிட) அதிகமாக அஞ்சத் தாங்கள் தான் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறிவிட்டுப் பிறகு, "தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்பெண்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால், நீங்கள் வரும் பாதையல்லாத வேறு பாதையில் அவன் சென்றுவிடுவான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்களுக்கு அருகில் (அவர்களுடைய துணைவியரான) பெண்கள் அவர்களிடம் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அவர்கள் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து (எழுந்து)கொண்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4769. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப் பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத்தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "முஹத்தஸூன்" எனும் சொல்லுக்கு "அகத்தூண்டல் மூலம் அறிவிக்கப்பட்டவர்கள்" என்பது பொருளாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4770. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்.
அவை: 1. மகாமு இப்ராஹீம் விஷயத்தில், 2. பர்தா விஷயத்தில், 3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில்.
அத்தியாயம் : 44
4771. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்தபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உபை (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சட்டையைத் தருமாறு கோரினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத் தொழுகை)த் தொழுவிக்க எழுந்தார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! (நயவஞ்சகரான) இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப் போகிறீர்கள்!" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்" என்று கூறிவிட்டு, "(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரும்! அல்லது அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோராமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்" (9:80) என்று கூறுகின்றான்.
நான் எழுபது தடவையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்" என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இவர் நயவஞ்சகராயிற்றே!" என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் ஒருபோதும் நீர் தொழுகை நடத்தாதீர்! அவரது சமாதி அருகிலும் நிற்காதீர்" (9:84) எனும் வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஆகவே, அவர்களுக்காக ஜனாஸாத் தொழுவிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 3 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4772. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் தமது "தொடைகளிலிருந்து" அல்லது "கணைக்கால்களிலிருந்து" (சற்று துணி) விலகியிருந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்படியே படுத்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.
அவர்கள் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் உள்ளே வர அனுமதியளித்தார்கள். அப்போதும் அதே நிலையிலேயே (படுத்துக்கொண்டு) இருந்தார்கள். உமர் அவர்களும் (வந்து) பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து) உட்கார்ந்து தமது ஆடையை ஒழுங்குபடுத்தினார்கள்.
- (இந்த இடத்தில்) அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீஹர்மலா, "(இதுவெல்லாம்) ஒரே நாளில் நடந்தது என நான் சொல்ல (வர)வில்லை" என்று கூறுகிறார்கள்.-
உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் நான், "அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது அவருக்காக நீங்கள் அசைய வில்லை; அவர்களைப் பொருட்படுத்தவில்லை. (சகஜமாகவே இருந்தீர்கள்.) பிறகு உமர் அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்போதும் நீங்கள் அவர்களுக்காக அசையவில்லை; பொருட்படுத்தவில்லை. பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது (மட்டும்) நீங்கள் (எழுந்து) உட்கார்ந்து உங்கள் ஆடையைச் சரி செய்துகொண்டீர்கள். (ஏன் அவ்வாறு செய்தீர்கள்?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரைக் கண்டு வானவர்கள் நாணம் கொள்கிறார்களோ அவரைக் கண்டு நான் நாணம் கொள்ள வேண்டாமா!" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் பன்னிரெண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4773. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கம்பளியாடையைப் போர்த்தியபடி தமது விரிப்பில் ஒருக்களித்துப் படுத்திருந்தபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (படுத்துக்கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். அவர்கள் உள்ளே வந்து தமது அலுவலை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு பிறகு திரும்பிச் சென்றார்கள்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (படுத்துக்கொண்டே) உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து தமது அலுவலை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு பிறகு திரும்பிச் சென்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நான் வந்து உள்ளே நுழைய அவர்களிடம் அனுமதி கேட்டேன். உடனே அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டார்கள். மேலும் (தம் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "உனது ஆடையை எடுத்து நன்கு அணிந்து கொள்" என்று கூறினார்கள். நான் அவர்களிடம் எனது அலுவலை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ர், உமர் ஆகியோருக்காக அசையாத நீங்கள் உஸ்மான் அவர்களுக்காக ஆடிப்போய்விட்டீர்களே!" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உஸ்மான் நாணம் மிகுந்த மனிதர். நான் அதே நிலையில் இருந்துகொண்டு அவருக்கு உள்ளே வர அனுமதியளித்தால், அவர் தமது தேவையை என்னிடம் தெரிவிக்காமலேயே போய்விடுவாரோ என்று நான் அஞ்சினேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஆயிஷா (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4774. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில், தம்மிடமிருந்த குச்சியைத் தண்ணீரிலும் களிமண்ணிலும் ஊன்றியபடி சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வந்து தோட்டத்தின் வாயிற்கதவைத்) திறக்கும்படி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்காகக் கதவைத் திறப்பீராக;அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்வீராக" என்று சொன்னார்கள். (நான் வாயிற்கதவைத் திறந்தேன்.) அங்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வாயிற்கதவைத் திறந்துவிட்டு,அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.
பிறகு மற்றொரு மனிதர் (வந்து வாயிற்கதவைத்) திறக்கும்படி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவருக்குக்) கதவைத் திறப்பீராக; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி கூறுவீராக" என்று சொன்னார்கள். நான் சென்று பார்த்தபோது, அங்கு உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு, அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.
பிறகு இன்னொரு மனிதர் (வந்து கதவைத்) திறக்கும்படி கேட்டார். அப்போது (சாய்ந்து கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து நேராக) அமர்ந்து, "அவருக்கு வாயிற்கதவைத் திறப்பீராக; (அவருக்கு) நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறுவீராக" என்று சொன்னார்கள். நான் சென்று (பார்த்தபோது) அங்கு உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
நான் கதவைத் திறந்துவிட்டு, அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன். மேலும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவருக்குத் துன்பம் நேர விருப்பதாகவும் அதையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாகவும்) கூறியதையும் சொன்னேன்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், "இறைவா! எனக்குப் பொறுமையை வழங்குவாயாக!" அல்லது "(எனக்கு நேரவிருக்கும் அத்துன்பத்தின்போது) அல்லாஹ்வே உதவி புரிபவன் ஆவான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டு, அதன் வாசலில் காவலுக்கு நிற்கும்படி என்னைப் பணித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4775. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் வீட்டில் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்) "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இன்று (முழுவதும்) இருப்பேன்" என்று சொல்லிக்கொண்டேன். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பக்கம்தான் போனார்கள்" என்று கூறினர்.
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற திசையில்) அவர்களைப் பின் தொடர்ந்து (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் ("குபா"வுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) "பிஃரு அரீசு"க்குச் சென்று அதன் தலை வாசலில் அமர்ந்தேன். அதன் கதவு பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். உடனே நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (எனும் அத்தோட்டத்திலுள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கணைக்கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டபடி அமர்ந்திருந்தார்கள்.
நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்) "இன்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிற்காவலனாக இருப்பேன்" என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான் "யார் அது?" என்று கேட்டேன். அவர்கள், "(நான்தான்) அபூபக்ர் (வந்துள்ளேன்)" என்று பதிலளித்தார்கள். உடனே நான் "சற்றுப் பொறுங்கள்"என்று சொல்லிவிட்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து தங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் "உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள்" என்று சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே, தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டு, கணைக்கால்களைத் திறந்துகொண்டார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்துகொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டுவிட்டு வந்திருந்தேன். ஆகவே (எனக்குள்), "அல்லாஹ் இன்ன மனிதருக்கு (அதாவது என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்" என்று சொல்லிக்கொண்டேன்.
அப்போது ஒரு மனிதர் கதவை அசைக்கிறார். நான் "யார் அது?" என்று கேட்டேன். வந்தவர், "(நான்தான்) உமர் பின் அல்கத்தாப் (வந்துள்ளேன்)" என்று சொன்னார். நான் "சற்றுப் பொறுத்திருங்கள்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறி, "இதோ, உமர் அவர்கள் வந்து (தங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். "அவருக்கு அனுமதி தாருங்கள்; அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்து விட்டார்கள்; நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்" என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச்சுவரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் அமர்ந்துகொண்டு தம் இரு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டுக்கொண்டார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்துகொண்டேன். "அல்லாஹ் இன்ன மனிதருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்" என்று (முன்பு போலவே எனக்குள்) கூறிக்கொண்டேன்.
அப்போது ஒரு மனிதர் வந்து கதவை அசைத்தார். நான் "யார் அது?" என்று கேட்டேன். அவர், "(நான்தான்) உஸ்மான் பின் அஃப்பான் (வந்திருக்கிறேன்)" என்று பதிலளித்தார். அப்போது நான், "சற்றுப் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (உஸ்மான் (ரலி) அவர்கள் வந்திருக்கும்) செய்தியை அறிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதிகொடுங்கள். அவர் சொர்க்கவாசி என்ற நற்செய்தியை அவரிடம் கூறுங்கள். அத்துடன் அவருக்குத் துன்பம் நேரவிருக்கிறது (என்ற செய்தியையும் சொல்லுங்கள்)" என்று சொன்னார்கள்.
அவ்வாறே நான் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) சென்று அவர்களிடம், "உள்ளே வாருங்கள். உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறுகிறார்கள். அத்துடன் உங்களுக்குத் துன்பம் நேரவிருக்கிறது என்ற செய்தியையும் சொன்னார்கள்" என்று கூறினேன்.
அவர்கள் உள்ளே வந்து (பார்த்தபோது) சுற்றுச் சுவர் நிரம்பிவிட்டிருப்பதைக் கண்டார்கள். ஆகவே, மற்றொரு பக்கத்தில் அவர்கள் (மூவருக்கும்) எதிரே அமர்ந்துகொண்டார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும்) ஒரே சுவரில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த நிலையையும் உஸ்மான் (ரலி) அவர்கள் எதிர் சுவரில் தனியே அமர்ந்திருந்த நிலையையும் (தற்போது) அவர்களின் அடக்கத்தலங்கள் அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நாடி நான் புறப்பட்டேன். அவர்கள் தோட்டங்கள் உள்ள பகுதிக்குச் சென்றுள்ளதாக அறிந்தேன். அவர்களைப் பின்தொடர்ந்து சென்றதில், ஒரு தோட்டத்திற்குள் அவர்கள் சென்றிருப்பதைக் கண்டேன். அங்கு கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து, தம் கணைக்கால்களைத் திறந்து, கிணற்றுக்குள் தொங்க விட்டிருந்தார்கள்" என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவர்களின் அடக்கத்தலங்கள் பற்றிய குறிப்பு அதில் இடம்பெறவில்லை.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் இந்த இடத்தில்தான் எனக்கு இதை அறிவித்தார்கள்" என்று கூறிவிட்டு, அங்கிருந்த கோட்டையின் ஓர் ஓரத்தைச் சுட்டிக்காட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த ஒரு தோட்டத்துக்குத் தமது (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், "அவர்கள் மூவருடைய அடக்கத் தலங்கள் இந்த இடத்தில் ஒன்றாக இருப்பதையும் உஸ்மான் (ரலி) அவர்களின் அடக்கத் தலம் தனியாக (மற்றோர் இடத்தில்) அமைந்திருப்பதையும் குறிப்பதாக விளக்கம் கண்டேன்"எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 4 அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4776. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "(நபி) மூசாவிடம் (நபி) ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருக்கிறீர்கள். எனினும், எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை" என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சஅத் (ரலி) அவர்கள் கூறியதாக ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே நேரடியாகச் செவியுற விரும்பினேன்.
ஆகவே, நான் சஅத் (ரலி) அவர்களைச் சந்தித்து, எனக்கு ஆமிர் (ரஹ்) அவர்கள் அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது சஅத் (ரலி) அவர்கள் "நான் இதை (நபியவர்களிடமிருந்து) செவியுற்றேன்" என்று கூறினார்கள். "நீங்கள் இதைச் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அப்போது சஅத் (ரலி) அவர்கள் தம் இரு விரல்களைத் தம் காதுக்குள் வைத்து "ஆம் (நான்தான் செவியுற்றேன்); இல்லாவிட்டால் இவ்விரண்டும் செவிடாகப் போகட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4777. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4778. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களை விமர்சிக்குமாறு) எனக்கு உத்தரவிட்டார்கள். "நீர் அபுத்துராப் (அலீ) அவர்களை ஏச மறுப்பதற்கு என்ன காரணம்?" என்று முஆவியா (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்ன மூன்று விஷயங்களை நான் (இன்றும்) நினைத்துப்பார்க்கிறேன். எனவே, அலீ (ரலி) அவர்களை நான் ஒருபோதும் ஏசமாட்டேன். அந்த மூன்றில் ஒன்று என்னிடம் இருப்பதுகூட, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகம் எனக்குக் கிடைப்பதைவிட மிகவும் உவப்பானதாகும். (அந்த மூன்று விஷயங்கள் வருமாறு:)
1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் எனும்) ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்ற போது, (மதீனாவில்) அலீ (ரலி) அவர்களைத் தம் பிரதிநிதியாக விட்டுச்சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்களையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இறைத்தூதர்) மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்,) எனக்குப்பின் நபித்துவம் இல்லை" என்று கூறினார்கள்.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், "நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்" என்று கூறினார்கள். (அந்த மனிதர் நாமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்) நாங்கள் எங்கள் தலையை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால்) உயர்த்திக்காட்டினோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அலீ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அப்போது அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அவர்களது கண்ணில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்து (கண்வலியைக் குணப்படுத்திவிட்டு), கொடியை அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு அந்தப் போரில் அல்லாஹ் வெற்றியளித்தான்.
3. "வாருங்கள். எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்..." (3:61) எனும் இந்த வசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, "இறைவா! இவர்கள்தான் என் குடும்பத்தார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4779. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார். அவருடைய கரங்களில் அல்லாஹ் (இந்தப் போரில்) வெற்றியை அளிப்பான்" என்று சொன்னார்கள்.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய நாளைத் தவிர வேறெப்போதும் நான் தலைமைப் பொறுப்பை விரும்பியதில்லை. அதற்காக நான் அழைக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவனாக நான் தலையை உயர்த்திக்காட்டினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.
மேலும், "திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள் அல்லாஹ் உங்கள் மூலம் வெற்றியளிப்பான்" என்று சொன்னார்கள்.
உடனே அலீ (ரலி) அவர்கள் சிறிது தூரம் சென்று நின்றுகொண்டு திரும்பிப் பார்க்காமலேயே, "அல்லாஹ்வின் தூதரே! எந்த அடிப்படையில் நான் மக்களுடன் போரிட வேண்டும்?" என்று உரத்த குரலில் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் அவர்கள் உறுதியளிக்கும்வரை அவர்களுடன் போரிடுவீராக. அதற்கு அவர்கள் இணங்கிவிட்டால், உரிய காரணம் இருந்தால் தவிர அவர்கள் உங்களிடமிருந்து தம் உயிர்களையும் உடைமைகளையும் காத்துக்கொள்வார்கள். (மனத்தைப் பொறுத்தவரை) அவர்களது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4780. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில் "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள். அந்தக் கொடி தம்மில் யாரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர்.
மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் எங்கே?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண் வலி ஏற்பட்டுள்ளது" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது, அவருடைய கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.
உடனே அவரது கண் அதற்குமுன் வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போன்று குணமாகி விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மைப் போன்று அவர்களது (ஒரே இறைவனை ஏற்றுப் பணிபவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடுவேன்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் நிதானமாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து, (அதை அவர்கள் ஏற்கும்பட்சத்தில்) அவர்கள்மீது விதியாகின்ற, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள்மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4781. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது.
அப்போது அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே!" என்று (வருத்தத்துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.
எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றிகொள்ளச்செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாளை "(முஸ்லிம்களின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன்"; அல்லது "ஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்". "அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்"; அல்லது "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்". அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்" என்று கூறினார்கள்.
நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் (வந்து) எங்களுடன் இருந்தார்கள். அப்போது மக்கள், "இதோ அலீ (வந்துவிட்டார்)" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியை அலீ (ரலி) அவர்களிடமே கொடுத்தார்கள். அவர்களுக்கே அல்லாஹ் வெற்றியளித்தான்.
அத்தியாயம் : 44
4782. யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்), உமர் பின் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரும் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்றோம். நாங்கள் அவர்கள் அருகில் அமர்ந்தபோது, அவர்களிடம், ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைத் அவர்களே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டுள்ளீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளீர்கள். அவர்களுடன் சேர்ந்து அறப்போர்களில் கலந்துகொண்டுள்ளீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள். ஸைதே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். ஸைதே! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "என் சகோதரர் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு வயது அதிகமாகிவிட்டது; எனது காலம் கழிந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட சில ஹதீஸ்களை நான் மறந்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்கு அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் அறிவிக்காதவற்றைப் பற்றி என்னிடம் கேட்டு என்னைச் சிரமப்படுத்தாதீர்கள்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள "கும்மு" எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, "இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.
பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்" என்று (மூன்று முறை) கூறினார்கள்.
அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "நபியவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்" என்று கூறினார்கள்.
அதற்கு ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் "அவர்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும்,ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)" என்று பதிலளித்தார்கள்.
ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(அவற்றில் ஒன்று) அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. யார் அதைப் பெற்று அதனைக் கடைப்பிடிக்கிறாரோ அவர் நேர்வழியில் இருப்பார். யார் அதைத் தவறவிடுகிறாரோ அவர் வழிதவறிவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4783. மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று, "தாங்கள் பல நன்மைகளைக் கண்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள்"என்று கூறினோம்" என ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடர்கிறது.
ஆயினும் அதில், "கவனியுங்கள். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதமாகும். அது அல்லாஹ்வின் கயிறாகும். அதைப் பின்பற்றுபவர் நல்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் தவறான வழியில் இருப்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில், "நபியவர்களின் குடும்பத்தார் யார்? அவர்களுடைய துணைவியரா?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு பெண் ஓர் ஆணுடன் குறிப்பிட்ட சில காலம் (மனைவியாக) இருப்பாள். பின்னர் அவளை அவன் மணவிலக்குச் செய்துவிட்டால், அவள் தன் தந்தையிடமோ அல்லது தன் குடும்பத்தாரிடமோ திரும்பிச் சென்றுவிடுவாள். நபியவர்களுடைய குடும்பத்தார் அவர்களுடைய மூல உறவினரும் அவர்களுக்குப்பின் தர்மம் பெறுவது தடை செய்யப்பட்ட அவர்களுடைய தந்தை வழி உறவினர்களுமே ஆவர் என்று பதிலளித்தார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4784. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரலி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். அவர் என்னிடம், "நீர் (இதற்கு உடன்படாமல்) மறுப்பதாயிருந்தால், "அல்லாஹ் அபுத் துராபை சபிக்கட்டும்! என்று கூறுவீராக" என்று சொன்னார்.
அதற்கு நான், "(தம் பெயர்களில்) "அபுத் துராப்" (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள்" என்று சொன்னேன். அதற்கு அந்த ஆளுநர், "அந்தக் கதையை எமக்குச் சொல்வீராக. ஏன் அபுத்துராப் என (அலீ) பெயர் சூட்டப்பெற்றார்?" என்று என்னிடம் கேட்டார்.
நான் பின்வருமாறு பதிலளித்தேன்: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்தார்கள். அப்போது (மருமகன்) அலீ அவர்கள் வீட்டில் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் "எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஆகவே,அவர் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார்" என்று பதிலளித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பார்" என்று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்று சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயிடம் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக்கொண்டே, "அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள்"என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 5 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்பு.
4785. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), "இரவில் என்னைக் காவல் காப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் வேண்டுமே?" என்று கூறினார்கள்.
அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். வந்தவர், "அல்லாஹ்வின் தூதரே! (நான்தான்) சஅத் பின் அபீவக் காஸ், தங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்" என்று கூறினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அவர்களது குறட்டைச் சப்தத்தைக் கேட்குமளவுக்கு (நிம்மதியாக) உறங்கினார்கள்.
அத்தியாயம் : 44
4786. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில் ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), "இரவில் எனக்குக் காவல் இருப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் இருக்க வேண்டுமே!" என்று கூறினார்கள்.
இவ்வாறே நாங்கள் இருக்கும்போது ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். வந்தவர், "(நான் தான்) சஅத் பின் அபீவக்காஸ்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதற்காக வந்தீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் (ஆபத்து) நேர்ந்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். அவர்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்" என்று பதிலளித்தார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (நிம்மதியாக) உறங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யார் அது?" என்று நாங்கள் கேட்டோம் எனக் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறங்காமல்) கண் விழித்திருந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4787. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்காகவும் (அர்ப்பணிப்பதாகக்) கூறிய தில்லை. ஏனெனில், உஹுதுப் போர் நாளில் "சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று சஅத் (ரலி) அவர்களிடம் கூறலானார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4788. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ("என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று) கூறி (போர்புரிய உற்சாக மூட்டி)னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின் போது எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள். இணைவைப்பாளர்களில் ஒருவன் முஸ்லிம்களை (நெருப்பு போல) தாக்கிக் கொண்டிருந்தான். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!" என்று கூறி (உற்சாகமூட்டி)னார்கள்.
நான் முனை பொருத்தப்படாத அம்பொன்றை எடுத்து அவனது விலாப்புறத்தில் தாக்கினேன். அவன் கீழே விழுந்தான். அவனது (ஆடை விலகி) மறைவிடங்கள் வெளியே தெரிந்தன. (எதிரி வீழ்த்தப்பட்டதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள்,தம் கடை வாய்ப்பற்கள் தெரிய சிரித்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 44
4789. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:)
(என் தாயார்) உம்மு சஅத், நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்;உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் "உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான்தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்)" என்று கூறினார்.
இவ்வாறு என் தாயார் மூன்று நாட்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்கமுற்று விட்டார். அப்போது அவருடைய உமாரா எனப்படும் ஒரு மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், "மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்" என்று தொடங்கி, "உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்துகொள்" (31:14,15) என்பதுவரையிலான வசனங்களை அருளினான்.
அடுத்து (ஒரு போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் போர்ச் செல்வங்கள் கிடைத்தன. அவற்றில் வாள் ஒன்றும் இருந்தது. அதை நான் எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இந்த வாளை எனக்குப் போர்ச் செல்வத்தின் சிறப்புப் பரிசாகத் தாருங்கள். எனது நிலை குறித்துத் தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) "அதை எடுத்த இடத்திலேயே மறுபடியும் வைத்துவிடுவீராக" என்று சொன்னார்கள். நான் சென்று போர்ச்செல்வக் குவியலில் அதை வைக்க முற்பட்டபோது, என் மனம் என்னை இடித்துப் பேசியது. அதை (அங்கு வைக்காமல்) மறுபடியும் நானே எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இதை எனக்குக் கொடுத்துவிடுங்கள்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான குரலில் என்னிடம், "எடுத்த இடத்திலேயே மறுபடியும் அதை வைத்து விடுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (நபியே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்..." (8:1) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.
அடுத்து ("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினேன். அவர்கள் என்னிடம் வந்த போது நான், "என் செல்வங்கள் முழுவதையும் நான் நாடிய விதத்தில் (அறவழியில்) பங்கிட்டுவிட என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) மறுத்துவிட்டார்கள். "அவ்வாறாயின், (அதில்) பாதியையாவது (தர்மம் செய்கிறேன்)?" என்று நான் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். "அவ்வாறாயின், மூன்றில் ஒரு பகுதியை (தர்மம் செய்து விடுகிறேன்)?" என்று கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்(து அரை மனதுடன் சம்மதித்)தார்கள். அதன் பின்னரே மூன்றில் ஒரு பகுதி(யை மரண சாசனம் செய்வது) அனுமதிக்கப்பட்டது.
அடுத்து (ஒரு முறை) நான் அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், "வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்" என்று கூறினர். -இது மது தடை செய்யப்படுவதற்குமுன் நடைபெற்ற நிகழ்வாகும்.- அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன்.
அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.
அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான் "அன்சாரிகளைவிட முஹாஜிர்களே சிறந்தவர்கள்" என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்பத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக "இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டுவைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும்" (5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4790. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "என் தொடர்பாக நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்கள் என் தாயாருக்கு உணவளிக்க விரும்பினால், ஒரு குச்சியை அவரது வாய்க்குள் நுழைத்து (அவரை வாய் மூடாமல் தடுத்து) அதில் உணவைப் போடுவார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், அவரது அறிவிப்பில், "(விருந்தின் போது கோபமுற்ற அந்த மனிதர்) தாடையெலும்பை எடுத்து எனது மூக்கில் அடித்து மூக்கைக் கிழித்துவிட்டார்" என்று சஅத் (ரலி) அவர்கள் கூறியதாகவும், "சஅத் (ரலி) அவர்களின் மூக்கு பிளவுற்றதாகவே இருந்தது" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4791. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்திலேயே, "(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும், மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர்" (6:52) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
ஆறு பேர் தொடர்பாகவே மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது. அவர்களில் நானும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அடங்குவோம். இணைவைப்பாளர்(களில் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டவர்)கள் நபி (ஸல்) அவர்களிடம், "இ(ந்தச் சாமானிய எளிய)வர்களையா நீர் நெருக்கத்தில் வைத்திருக்கிறீர்?" என்று கேட்டனர்.
அத்தியாயம் : 44
4792. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஆறு பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களிடம் "இவர்களை விரட்டிவிடுங்கள்; எங்கள்மீது அவர்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது" என்று கூறினர். நானும் இப்னு மஸ்ஊதும் ஹுதைல் குலத்தாரில் ஒருவரும் பிலாலும் நான் பெயர் குறிப்பிட (விரும்பா)த இன்னும் இரு மனிதர்களுமே அந்த ஆறு பேர்.
(இணைவைப்பாளர்கள் இவ்வாறு கூறியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மனதில் (இணைவைப்பாளர்களின் கூற்றுக்கு ஆதரவான) அல்லாஹ் நாடிய ஓர் எண்ணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குள் (அவர்கள் சொல்வது சரியாயிருக்குமோ) என்று நினைத்தார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர்..." (6:52) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 44
பாடம் : 6 தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4793. தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இணைவைப்பாளர்களுடன்) போரிட்ட அந்த நாட்களில் ஒன்றில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் தல்ஹா (ரலி), சஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4794. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின்போது ("இன்றைய இரவில் தனியாகச் சென்று எதிரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என உளவு பார்ப்பதற்கு முன்வருபவர் யார்?" என்று தம் தோழர்களுக்கு) அழைப்பு விடுத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்கு முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்த போது (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்தபோது அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு; எனது (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4795. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்களுடன் (அவர்களுக்குப் பாதுகாப்பாக) "ஹஸ்ஸான்" கோட்டையில் இருந்தோம். அப்போது உமர் பின் அபீசலமா ஒருமுறை எனக்காகத் தலையைத் தாழ்த்துவார். நான் (எதிரிகளின் திசையில்) பார்ப்பேன். மறுமுறை நான் தலையைத் தாழ்த்திக்கொள்வேன். உமர் பின் அபீசலமா (எதிரிகளின் திசையில்) பார்ப்பார். என் தந்தை (ஸுபைர்) அவர்கள் குதிரை மீதமர்ந்து பனூ குறைழா (யூதர்களை) நோக்கி ஆயுதத்துடன் கடந்து சென்றபோது, அவர்களை நான் அறிந்துகொண்டேன்.
அப்துல்லாஹ் பின் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
பின்னர் (ஒரு முறை) அதைப் பற்றி நான் என் தந்தையிடம் பேசியபோது, "அன்பு மகனே! அப்போது என்னை நீ பார்த்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். கவனமாகக் கேள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து, "என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்" என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அகழ்ப்போர் தினத்தன்று நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்கள் - அதாவது நபி (ஸல்) அவர்களின் துணைவியர்- இருந்த கோட்டையில் இருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில் அப்துல்லாஹ் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தெரிவித்த செய்தி இடம்பெறவில்லை. ஹிஷாம் பின் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே அந்தக் குறிப்பு இடையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 44
4796. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி),தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும் "ஹிரா" மலைமீது இருந்தார்கள். அப்போது அந்தப் பாறை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று கூறினார்கள். - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹிரா" மலைமீது இருந்தபோது மலை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிராவே! அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது மலைமீது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி),ஸுபைர் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4797. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! உன் பெற்றோர் "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172)என்பதில் அடங்குவர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூபக்ர் (ரலி) அவர்களையும் ஸுபைர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4798. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் உன் பெற்றோர், "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172) எனும் இறை வசனத்தில் அடங்குவர் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 7 அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4799. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்கள்தான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4800. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யமன் (ஏமன்)வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களுக்கு நபிவழியையும் இஸ்லாத்தையும் கற்றுக்கொடுப்பதற்காக எங்களுடன் ஒரு மனிதரை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களின் கையைப் பிடித்து, "(இதோ) இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். (இவரை அழைத்துச் செல்லுங்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4801. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்ரான் (யமன்)வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நம்பிக்கைக்குரிய மனிதர் ஒருவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்பகத் தன்மையில் மிகவும் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுடன் நான் உறுதியாக அனுப்புவேன்" என்று சொன்னார்கள். அப்போது மக்களில் பலர் (அந்த "அமீன்" எனும் பெயருடன் அழைப்பாளராய்ச் செல்லும் சிறப்பு தமக்குக் கிட்டாதா என) தலையை உயர்த்தி (பேரார்வம்) காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 8 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4802. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்கள் குறித்து, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பகல் வேளையில் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேசவில்லை. (மௌனமாக நடந்தோம்.) "பனூ கைனுகா" கடைவீதி வந்தது.
பிறகு அங்கிருந்து திரும்பி (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் குடிசைக்கு வந்து, "இங்கே அந்தப் பொடிப் பையன் (அதாவது ஹசன்) இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?" என்று கேட்டார்கள்.
ஹசனின் தாயார், அவரை நீராட்டி நறுமண மாலையை அணிவிப்பதற்காகவே தாமதப்படுத்துகிறார் என்றே நாங்கள் எண்ணினோம். நீண்ட நேரம் கடந்திருக்கவில்லை. அதற்குள் குழந்தை (ஹசன்) ஓடிவந்தார். உடனே நபியவர்களும் அவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4804. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோள்மீது ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 44
4805. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோள்மீது வைத்துக்கொண்டு, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4806. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களையும் (அவர்களுடைய பேரர்களான) ஹசன், ஹுசைன் (ரலி) ஆகியோரையும் அவர்களது கறுப்பு வெள்ளைக் கோவேறு கழுதையில் ஏற்றி அழைத்து வந்து, நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தேன். இதோ இவர் (நபிக்கு) முன்பக்கத்திலும் இதோ இவர் (நபிக்கு) பின்பக்கத்திலும் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 9 நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாரின் சிறப்புகள்.
4807. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்புநிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது (அவர்களுடைய பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை (தமது போர்வைக்குள்) நுழைத்துக்கொண்டார்கள்;பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களும் (போர்வைக்குள்) நபி (ஸல்) அவர்களுடன் நுழைந்துகொண்டார்கள்; பிறகு (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தபோது, அவர்களையும் (போர்வைக்குள்) நுழைத்துக்கொண்டார்கள். பிறகு (மருமகனும் தமது வீட்டில் வளர்ந்தவருமான) அலீ (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக்கொண்டார்கள்.
பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்" (33:33) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 10 ஸைத் பின் ஹாரிஸா (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4808. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடம் நீதியானது" (33:5) எனும் இறைவசனம் அருளப்படும்வரை, நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை, ஸைத் பின் முஹம்மத் (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4809. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி (ஷாம் நாட்டுக்கு) ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் (இளம் வயதைக் காரணம் காட்டி) உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறை கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) நின்று, "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தை (ஸைத்-ரலி)யின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். அவருக்குப்பின் மக்களிலேயே இவர் (உசாமா) என் அன்புக்குரியவர் ஆவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4810. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபடி, "(இப்போது) இவரது தலைமையைக் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல!) இவருக்குமுன் இவருடைய தந்தை (ஸைத்) அவர்களின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அதற்குத் தகுதியானவராகவே இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவரும் அதற்குத் தகுதியானவரே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குப்பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். இவர் தொடர்பாக உங்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், இவர் உங்களில் தகுதியானவர்களில் ஒருவராவார்" என்று உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைக் குறித்துக் கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 11 அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4811. அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், "நானும் நீங்களும் இப்னு அப்பாஸும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்கள் ஒரு பயணத்தை முடித்துத் திரும்பியபோது) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "ஆம்" என்றார்கள். அப்போது (அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸையும்) வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீ முளைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4812. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தை முடித்துக்கொண்டு (ஊருக்குள்) வரும்போது, அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களால் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்கப் படுவார்கள். இவ்வாறு ஒருமுறை அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது நான் முந்திக்கொண்டு அவர்களிடம் சென்றேன். உடனே அவர்கள் என்னை (தமது வாகனத்தில்) முன்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்களின் இரு புதல்வர்களில் ஒருவர் அங்கு கொண்டுவரப்பட்டார். அவரைத் தமக்குப் பின்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தவாறு மதீனாவிற்குள் நுழைந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4813. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி (ஊருக்குள்) வரும்போது, (அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களான) நாங்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்போம். இவ்வாறு ஒரு முறை நானும் ஹசன் அல்லது ஹுசைன் ஆகியோரில் ஒருவரும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றபோது, எங்களில் ஒருவரைத் தமக்கு முன்பக்கத்திலும் மற்றொருவரைப் பின்பக்கத்திலும் தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் (மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தபடி) மதீனாவிற்குள் நுழைந்தோம்.
அத்தியாயம் : 44
4814. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு விஷயத்தை இரகசியமாக என்னிடம் சொன்னார்கள். அதை நான் மக்களில் யாரிடமும் சொல்லமாட்டேன்.
அத்தியாயம் : 44
பாடம் : 12 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4815. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்.
இதை அலீ (ரலி) அவர்கள் கூஃபா நகரில் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகுரைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் கூறியபோது அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் வானத்தையும் பூமியையும் நோக்கி (இம்மையிலும் மறுமையிலும் சிறந்தவர்) என்று சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 44
4816. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் பலபேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும்,ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பானது, எல்லா வகை உணவுகளையும்விட "ஸரீத்" (தக்கடி) எனும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4817. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதோ! கதீஜா தம்முடன் குழம்பு, அல்லது உணவு, அல்லது குடி பானம் உள்ள பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் முகமன் (சலாம்) கூறி, அவருக்குச் சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் தரப்பிலிருந்தும்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4818. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம், அவருக்குச் சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறிவந்தார்களா?"என்று கேட்டேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள், "ஆம்; சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ இல்லாத முத்து மாளிகை ஒன்று அவர்களுக்குக் கிடைக்க விருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4819. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா பின் குவைலித் (ரலி) அவர்களுக்குச் சொர்க்கத்தில் மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4820. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தன்மான உணர்ச்சியால்) கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் வைராக்கியம் கொண்டதைப் போன்று (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்) எந்தத் துணைவியரின் மீதும் நான் வைராக்கியம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன்.
-என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார்.-
மேலும், முத்து மாளிகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் கட்டளையிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில் சிறிதளவை) கதீஜா (ரலி) அவர்களின் தோழியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புவார்கள்.
அத்தியாயம் : 44
4821. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்கள்மீது நான் வைராக்கியம் கொண்டதைப் போன்று நபி (ஸல்) அவர்களின் வேறெந்த துணைவியர்மீதும் வைராக்கியம் கொண்டதில்லை. அவர்களை நான் சந்தித்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்தால், "கதீஜாவின் தோழியருக்கு இதைக் கொடுத்தனுப்புங்கள்" என்று கூறுவார்கள்.
ஒரு நாள் நான் வைராக்கியம் கொண்டு, "(பெரிய) கதீஜா!" என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(நான் என்ன செய்ய?) அவர்மீது எனக்கு அன்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டதே!" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஆட்டை அறுக்கும் செய்தி வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள விவரங்கள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4822. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கதீஜா (ரலி) அவர்கள்மீது வைராக்கியம் கொண்டதைப் போன்று, நபி (ஸல்) அவர்களின் வேறெந்த துணைவியர்மீதும் வைராக்கியம் கொண்டதில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கதீஜா அவர்களைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்துவந்தார்கள். ஆனால், நான் கதீஜா அவர்களைப் பார்த்ததே கிடையாது.
அத்தியாயம் : 44
4823. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்கள் இறக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் வேறு யாரையும் மணமுடிக்கவில்லை.
அத்தியாயம் : 44
4824. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்களின் (இறப்புக்குப்பின் அவர்களுடைய) சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வர அனுமதி கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கதீஜா அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியால் (உணர்ச்சிவசப்பட்டு) "இறைவா! இவர் ஹாலா பின்த் குவைலித்"என்று கூறினார்கள்.
உடனே நான் ரோஷமடைந்து, "எப்போதோ இறந்துவிட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைவுகூர்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக (பருவத்தாலும் அழகாலும்) அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே! (அப்படியிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?)" என்று கேட்டேன்.
அத்தியாயம் : 44
பாடம் : 13 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு.
4825. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று இரவுகள் உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். வானவர் ஒருவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் என்னிடம் எடுத்து வந்து, "இவர் உங்கள் மனைவி"என்று கூறுகிறார். அப்போது நான் உன் முக்காட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் "இ(க்கனவான)து அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதை அல்லாஹ் நனவாக்குவான்" என்று கூறலானேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4826. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்போது நீ என்மீது திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்துவைத்துள்ளேன்" என்று சொன்னார்கள்.
அதற்கு நான், "எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என்மீது நீ திருப்தியுடன் இருக்கும் போது (நீ பேசினால்), "இல்லை; முஹம்மதின் அதிபதிமீது சத்தியமாக!" என்று கூறுவாய். என்மீது கோபமாய் இருந்தால், "இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக! என்று கூறுவாய்" என்று சொன்னார்கள்.
நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக்கொள்வேன் (தங்கள்மீதன்று)" என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்தள்ளது.
அதில், "இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதிமீது சத்தியமாக!" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4827. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்துபோய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகள் ("பனாத்")வைத்து விளையாடுவேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4828. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் முறை நாளையே, தம்முடைய அன்பளிப்புகளை (அவர்களுக்கு) வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்துவந்தார்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உவப்பைப் பெற விரும்பியே அப்படிச் செய்தனர்.
அத்தியாயம் : 44
4829. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபியவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களை (ஒரு முறை) நபியவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னுடன் எனது போர்வைக்குள் படுத்திருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உள்ளே வந்து), "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியர் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் (தாங்கள் அன்பு காட்டுவதைப் போன்றே பிற துணைவியரிடமும் அன்பு காட்டி) நீதியுடன் நடந்து கொள்ளும்படி கேட்டு என்னைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்" என்று கூறினார். நான் அமைதியாக இருந்தேன்.
நபி (ஸல்) அவர்கள், "என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிப்பாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்னைக் காட்டி) "அப்படியானால், இவரை நேசிப்பாயாக" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் எழுந்து, நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் திரும்பிச் சென்று, தாம் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதையும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலையும் தெரிவித்தார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்களின் துணைவியர், எங்களுக்கு நீங்கள் எந்த நன்மையும் செய்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே, (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, "தங்கள் துணைவியார் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் நீதியுடன் நடந்துகொள்ளும்படி கேட்கிறார்கள்" என்று கூறுமாறு சொன்னார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இனி) ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக நான் நபியவர்களிடம் ஒருபோதும் பேசமாட்டேன்" என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.
ஆகவே, நபி (ஸல்) அவர்களின் துணைவியர் தங்களில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும் இறைவனை அஞ்சி நடப்பதிலும் உண்மை பேசுவதிலும் உறவுகளை அனுசரிப்பதிலும் தாராளமாகத் தானம் வழங்குவதிலும் இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர் விரைவாகக் கோபப்படக்கூடியவராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார்.
அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் போர்வைக்குள் என்னுடன் இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம்மிடம் வந்தபோது இருந்த நிலையிலேயே அப்போதும் நபியவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களுக்கு உள்ளேவர அனுமதியளித்தார்கள்.
ஸைனப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய புதல்வி (ஆயிஷா) விஷயத்தில் (அவரிடம் அன்பு காட்டுவதைப் போன்றே தங்களிடமும் அன்புகாட்டி) நீதியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டு என்னைத் தங்களிடம் தங்களுடைய துணைவியர் அனுப்பியுள்ளார்கள்" என்று கூறினார்கள்.
பிறகு ஸைனப் என்னை எல்லைமீறி ஏசினார். நான் (அவருக்குப் பதில் சொல்ல) நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கிறார்களா எனக் காத்திருந்தேன். கண் சாடையாவது செய்கிறார்களா என்று எதிர்பார்த்தேன். ஆனால்,ஸைனப் அவர்கள் தொடர்ந்து ஏசிக்கொண்டேபோக அவருக்கு நான் பதிலடி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கமாட்டார்கள் என நான் அறிந்து கொண்டேன்.
நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, அவரை வாயடைக்கச் செய்ய நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தபடியே "இவள் அபூபக்ரின் மகளாயிற்றே!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அதில் "நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, வெகுவிரைவிலேயே அவரை முற்றாக அடக்கிவிட்டேன்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4830. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) என்னிடம் தங்கும் நாள் தள்ளிப்போவதாக எண்ணிக் கொண்டு, "இன்று நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது முறைநாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் காறையெலும்பு(ள்ள பகுதி)க்கும் நடுவில் (அவர்கள் தலை சாய்ந்திருந்த நிலையில்) அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றினான்.
அத்தியாயம் : 44
4831. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் நெஞ்சின் மீது தம்மைச் சாய்த்தபடி இருக்க,அவர்கள் (வாய்) பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள் "இறைவா! என்னை மன்னித்து,எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக" என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4832. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை" என்று (நபி (ஸல்) அவர்கள் கூறுவதை) நான் செவியுற்று வந்தேன்.
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்டிக்கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), "அல்லாஹ்வின் அருள் பெற்ற இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள்தான் மிகச் சிறந்த நண்பர்கள் ஆவர்" (4:69) எனும் இறைவசனத்தைக் கூறுவதை நான் கேட்டேன்.
ஆகவே "இம்மை மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இப்போது அவர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது" என்று நான் எண்ணிக்கொண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4833. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, "சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டு, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை" என்று கூறுவார்கள்.
பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, அவர்கள் தமது தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்த போது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பிறகு, "இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)" என்று சொன்னார்கள். அப்போது நான், "அவர்கள் (இப்போது) நம்முடன் இருப்பதை விரும்பவில்லை; (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்)" என்று (மனதிற்குள்) கூறிக்கொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, "சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டுப் பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை" என்று அவர்கள் கூறிய சொல் இதுதான் என நான் புரிந்துகொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசிய இறுதி வார்த்தை "அல்லாஹும்மர் ரஃபீக்கல் அஃலா" (இறைவா! உயர்ந்த தோழர்களுடன் என்னையும் சேர்த்தருள்) என்பதாகவே இருந்தது.
இதை அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவையில் சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.
அத்தியாயம் : 44
4834. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) எனது பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றோம். இரவு நேரப் பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டேவருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா என்னிடம், "இன்றிரவு நீங்கள் எனது ஒட்டகத்தில் பயணம் செய்துபாருங்கள்; நான் உங்களது ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்" என்று கேட்டார்கள். நான் "சரி" என்று (சம்மதம்) கூறினேன்.
ஆகவே, நான் ஹஃப்ஸாவின் ஒட்டகத்தில் ஏறிக்கொண்டேன்; ஹஃப்ஸா எனது ஒட்டகத்தில் ஏறிக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறிவந்த) எனது ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) சொன்னார்கள். பிறகு அவருடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
(பயணத்தின் இடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணாமல் அவர்களை நான் தேடினேன். (தன்மான உணர்வினால்) எனக்கு ரோஷம் ஏற்பட்டது. அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் எனது இரு கால்களையும் "இத்கிர்" புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, "இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என்மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்" என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்து கொள்ளத்தான் முடிந்ததே தவிர,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4835. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பானது, (மற்ற) உணவுகளைக் காட்டிலும் "ஸரீத்" (தக்கடி) எனும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4836. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) என்னிடம், "(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்" என்று சொன்னார்கள். நான் "வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத் துல்லாஹி" (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4837. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) "ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்" என்று சொன்னார்கள். நான் "வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி" (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன். நான் பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கிறார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 14 "உம்மு ஸர்உ" எனும் பெண்ணைப் பற்றிய செய்தி.
4838. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடிமறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) உரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.
முதலாவது பெண் கூறினார்: என் கணவர் (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும் அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால், (அந்த மலைப் பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை.
இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்றுகூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங்களைத்தான் கூற வேண்டியதிருக்கும்.
மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரைப் பற்றி எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடியாக வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.)
நான்காவது பெண் கூறினார்: என் கணவர் (மக்கா உள்ளிட்ட) "திஹாமா" பகுதியின் இரவு நேரத்தைப் போன்றவர் (இதமானவர்). (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.
ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழைந்தால், சிறுத்தையாகிவிடுவார். வெளியே போனால் சிங்கமாகிவிடுவார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார்.
ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டுவிடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.
ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் "விவரமில்லாதவர்" அல்லது "ஆண்மையில்லாதவர்"; சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார்.
எட்டாவது பெண் கூறினார்: என் கணவர் முகர்வதற்கு மரிக்கொழுந்தைப் போன்று மணக்கக்கூடியவர்; தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்.
ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்கு சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்திருப்பவர்.
பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர். எத்துணை பெரும் செல்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும்விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே இருக்கும். (விருந்தினர் வராத சில நாட்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால், தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்துகொள்ளும்.
பதினொன்றாவது பெண் (அவர்தான் உம்மு ஸர்உ) கூறினார்: என் கணவர் (பெயர்) அபூஸர்உ. அபூஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் புஜங்களைக் கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது "ஷிக்" எனுமிடத்தில்) சிறிய ஆட்டு மந்தையுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார்.
நான் அவரிடம் (சுதந்திரமாகப்) பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரை தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவுக்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.
(என் கணவரின் தாயார்) "உம்மு அபீஸர்உ" எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுத் தானியக் களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரது வீடு விசாலமானதாகவே இருக்கும்.
(என் கணவரின் புதல்வர்) "இப்னு அபீ ஸர்உ" எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை உருவப்பட்ட கோரையைப் போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று மெல்லியதாக) இருக்கும். (கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் சப்பை (இறைச்சி) அவரது வயிறை நிறைத்துவிடும். (அந்த அளவுக்குக் குறைவாக உண்ணுபவர்.)
(என் கணவரின் புதல்வி) பின்த் அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல்வாகு கொண்ட) அவரது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.
(என் கணவர்) அபூஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவர் தெரியுமா? அவள் எங்கள் (இரகசியச்) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருட்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பைகூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்பு மிக்கவள்; தூய்மை விரும்பி.)
(ஒரு நாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) "அபூஸர்உ" வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரு குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அவளது இடுப்புக்குக் கீழே (மடியில்) இருந்து இரு மாதுளங்கனிகளைத் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். ஆகவே, (அவளது கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை மணவிலக்குச் செய்துவிட்டு, அவளை மணமுடித்துக் கொண்டார்.
அவருக்குப் பின்னர் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாழ்க்கைப்பட்டேன். அவர் அதி விரைவாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) "கத்து" எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டியொன்றைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது, ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார். "(இவற்றை அறுத்து) உம்மு ஸர்உவே! (நன்றாக) நீயும் சாப்பிடு; உன் தாய் வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு" என்றார்.
(ஆனாலும்) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாய்க் குவித்தாலும், (என் முதல் கணவரான) அபூஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தின் அந்தஸ்தைக் கூட அவை எட்டா.
(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) (என்னருமைக் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "(ஆயிஷாவே!) உம்மு ஸர்வுக்கு அபூஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (சிறிதைக் கொடுத்தாலும் சிறப்பாகக் கொடுக்கும் அன்பான கணவராக) இருப்பேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ஏழாவது பெண் "(என் கணவர்) ஆண்மையில்லாதவர்" என்று மட்டும் கூறியதாக இடம் பெற்றுள்ளது; (அல்லது விவரமில்லாதவர் எனும்) ஐயப்பாடு இடம்பெறவில்லை.
(அபூஸர்உவின் புதல்வி குறித்து) "அவள் மேலாடை வெறுமையானவள்; (அவளுடைய கணவரின்) துணைவியரிலேயே மேலானவள்; அவளுடைய சக்களத்தியரை மலடியாக்கி விட்டாள்" என்று காணப்படுகிறது.
(அபூஸர்உவின் பணிப்பெண் குறித்து) "அவள் (உணவுப் பொருட்களை) சேதப்படுத்துவ தில்லை" என்பதைக் குறிக்க ("வலா துனக்கிஸு" என்பதற்குப் பதிலாக) "வலா தன்குஸு மீரத்தனா தன்கீஸா" என்று காணப்படுகிறது.
"(என் இரண்டாம் கணவர்) இறைச்சிக்காக அறுக்கப்படும் ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார்" என்று "உம்மு ஸர்உ" கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 15 நபி (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4839. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி, "ஹிஷாம் பின் அல்முஃகீரா கோத்திரத்தார், தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்துவைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். (எத்தனை முறை கேட்டாலும் அனுமதியளிக்க மாட்டேன்.)
அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). என் மகள் (ஃபாத்திமா),என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப் படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4840. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்.
இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4841. அலீ பின் அல்ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (எங்கள் தந்தை) ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள்.
அப்போது அவர்கள், "என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித்தர ஆயத்தமாயிருக்கிறேன்)" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், "அப்படி ஏதுமில்லை" என்று பதிலளித்தேன்.
மிஸ்வர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கிறீர்களா? ஏனெனில்,அந்த (பனூ உமய்யா) கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது" என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)
ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் துணைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். -அப்போது நான் பருவவயதை அடைந்து விட்டிருந்தேன்.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை ("அபுல்ஆஸ் பின் ரபீஆ") பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள்: அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.
மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப் பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன். (அலீ இரண்டாவது பெண்ணை மணந்து கொள்வதை நான் தடுக்க முடியாது.)
ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதியின் (அபூ ஜஹ்லின்) மகளும் ஒரே இடத்தில் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4842. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம்மிடம் (மனைவியாக) இருக்கவே, அபூஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்துகொள்ள)ப் பெண் பேசினார்கள்.
அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "(தந்தையே!) நீங்கள் உங்களுடைய புதல்வியருக்காக (அவர்கள் மனவேதனைக்கு உள்ளாக்கப்படும்போது) கோபப்படமாட்டீர்கள் என்று உங்கள் சமுதாயத்தார் பேசிக்கொள்கின்றனர். இதோ (உங்கள் மருமகன்) அலீ அபூஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்" என்று சொன்னார்கள்.
இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்ற) எழுந்தார்கள்.
அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்து)விட்டு, "இறைவாழ்த்துக்குப் பின்! (என் மூத்த மகள் ஸைனபை) அபுல்ஆஸ் பின் அர்ரபீஉக்கு நான் மணமுடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தம் மனைவியை மதீனாவுக்கு அனுப்பிவைப்பதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். முஹம்மதின் மகள் ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். (அபூஜஹ்லின் குடும்பத்தாராகிய) அவர்கள் என் மகளை (அவருடைய மார்க்க விஷயத்தில்) குழப்பிவிடுவதையே நான் வெறுக்கிறேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் (அவரது மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறியதை நான் கேட்டேன்.
பிறகு அலீ (ரலி) அவர்கள் (அபூஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை (தொடராமல்) விட்டு விட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4843. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரணப்படுக்கையில் இருந்தபோது) தம் புதல்வி ஃபாத்திமாவை அழைத்து,அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார்.
நான் ஃபாத்திமாவிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல, அதைக் கேட்டு நீங்கள் அழுதீர்கள். பிறகு உங்களிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது நீங்கள் சிரித்தீர்களே,அது என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு ஃபாத்திமா, "என்னிடம் இரகசியமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த நோயிலேயே) தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆகவே, நான் அழுதேன். பிறகு அவர்களின் குடும்பத்தாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான்தான் என்று இரகசியமாகச் சொன்னார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4844. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் நபி (ஸல்) அவர்(களின் இறப்பு நெருங்கியபோது அவர்)களுக்கு அருகில் இருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் நடந்துவந்தார்கள். அவரது நடை சிறிதும் பிசகாமல் அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது.
ஃபாத்திமாவைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், "என் மகளே! வருக!" என்று வரவேற்றார்கள். பிறகு அவரை "தமது வலப் பக்கத்தில்" அல்லது "இடப் பக்கத்தில்" அமர்த்திக்கொண்டார்கள். பிறகு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய பதற்றத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.
அப்போது அவரிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே?" என்று கேட்டேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தபோது ஃபாத்திமாவிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன soசொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஃபாத்திமா, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நான், "உங்கள்மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்து நம்பிக்கையுடன் கேட்கிறேன். அந்த இரகசியம் என்னவென்று நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்" என்றேன். ஃபாத்திமா, "சரி! இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்:
முதலாவது முறை என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். ஆனால், அவர் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.
ஆகவேதான், உங்கள் முன்னிலையில் நான் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, "ஃபாத்திமா! "இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு" அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு" தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?" என்று இரகசியமாகக் கேட்டார்கள். ஆகவேதான், உங்கள் முன்னிலையில் அவ்வாறு சிரித்தேன்.
அத்தியாயம் : 44
4845. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் (நாங்கள்) அனைவரும் (நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அவர்களுக்கு அருகில் இருந்தோம்.
அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் தந்தையை நோக்கி) நடந்துவந்தார். அவரது நடை அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "வருக! என் மகளே!" என்று அழைத்து,தமக்கு வலப் பக்கத்தில் அல்லது இடப் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்கள்.
பிறகு ஃபாத்திமாவிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா அழுதார். பிறகு அவரிடம் இரகசியமாக ஏதோ (இன்னொரு விஷயத்தைச்) சொன்னார்கள். அதைக் கேட்டதும் அவர் சிரித்தார். நான் அவரிடம் "ஏன் அழுதீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறினார்.
அப்போது நான், "இன்றைய தினத்தைப் போன்று துக்கம் அண்டிய ஒரு மகிழ்ச்சியை (எப்போதும்) நான் பார்த்ததில்லை"என்று சொல்லிவிட்டு, அழுதுகொண்டிருந்த அவரிடம், "எங்களை விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள். (அதைக் கேட்டு) பிறகு நீங்கள் அழுகிறீர்களே! (அப்படி) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று (மீண்டும்) கேட்டேன்.
அப்போதும் அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.
இறுதியில் நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்துவந்தார். இந்த ஆண்டு மட்டும் என்னை இரு முறை ஓதச் செய்தார். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன். என் குடும்பத்தாரில் என்னை முதலில் வந்தடையப்போவது நீதான். நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகை விட்டு) சென்றுவிடுவேன்" என்று கூறினார்கள். ஆகவே, நான் அழுதேன்.
பிறகு என்னிடம் "இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு" அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு"த் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா என்று இரகசியமாகக் கேட்டார்கள். அதற்காக நான் சிரித்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 16 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4846. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள், "உங்களால் இயன்றால் கடைத்தெருவுக்குள் நுழையும் முதல் ஆளாகவும் அதைவிட்டு வெளியேறும் இறுதி ஆளாகவும் இருக்காதீர்கள். ஏனெனில், கடைத்தெருவே ஷைத்தானின் போர்க்களமாகும். அங்குதான் ஷைத்தான் (முகாமிட்டு) தனது சேனையின் கொடியை நட்டுவைக்கிறான்" என்று கூறினார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேலும் (பின்வருமாறும்) எனக்குச் செய்தி எட்டியது:
நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்கள் இருந்தபோது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு எழுந்து (சென்று)விட்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் "இவர் யார் (தெரியுமா)?" என்றோ, அல்லது இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், "இவர் (தங்களுடைய தோழர்) திஹ்யா" என்று பதிலளித்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஏதும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார்கள்.)
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள், நாங்கள் பேசிக்கொண்ட விஷயம் குறித்து (மக்களிடையே) நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை அ(ப்போது வந்த)வர் திஹ்யா (ரலி) அவர்கள்தான் என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று நான் விளங்கிக்கொண்டேன்.)
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த) அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸைத் தாங்கள் யாரிடமிருந்து செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அவர்கள், "உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 17 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஸைனப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4847. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான எங்களிடம்), "(என் மரணத்திற்குப்பின்) உங்களில் கை நீளமானவரே என்னிடம் முதலில் வந்து சேருவார்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் (ஒரு குச்சியை எடுத்து), தங்களில் கை நீளமானவர் யார் என்று அளந்துபார்க்கலாயினர். (உண்மையில்) எங்களில் ஸைனப் (ரலி) அவர்களே கை நீளமானவராய் இருந்தார். ஏனெனில், அவர்தான் கைத்தொழில் செய்து, (அதிகமாக) தர்மம் செய்யக்கூடியவராக இருந்தார்.
அத்தியாயம் : 44
பாடம் : 18 உம்மு அய்மன் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4848. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.
உம்மு அய்மன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருப்பதைக் கண்டார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்துவிட்டார்கள்.)
அதற்காக உம்மு அய்மன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்துகொண்டார்கள்.
அத்தியாயம் : 44
4849. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்துவந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்" என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?" என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)" என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
அத்தியாயம் : 44
பாடம் : 19 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் தாயார் உம்மு சுலைம் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4850. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களைத் தவிர, தம் துணைவியரல்லாத வேறெந்த (அந்நியப்) பெண்களிடமும் (அவர்களது இல்லங்களுக்குச்) செல்லமாட்டார்கள். என் தாயாரின் இல்லத்திற்கு மட்டுமே செல்வார்கள்.
நபியவர்களிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, "நான் உம்மு சுலைமிடம் பரிவு காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் - ரலி) என்னு(டைய பிரசாரப் படையினரு)டன் இருந்தபோது, (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொல்லப்பட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4851. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடிச் சப்தத்தைக் கேட்டேன். அப்போது "இது யார்?" என்று கேட்டேன். அ(ங்கிருந்த வான)வர்கள், "இவர்தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த் மில்ஹான்" என்று பதிலளித்தனர்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு (கனவில்) சொர்க்கம் காட்டப்பட்டது. அங்கு நான் அபூதல்ஹா அவர்களின் துணைவியாரை (உம்மு சுலைமை)க் கண்டேன். பிறகு எனக்கு முன்னால் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். அங்கு (யார் என்று பார்த்தபோது) பிலால் அவர்கள் இருந்தார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 20 அபூதல்ஹா அல்அன்சாரீ (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4853. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு (அவர்களின் இரண்டாவது கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த மகனொருவர் இறந்துவிட்டார். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், "(என் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், அவருடைய மகன் (இறந்ததைப்) பற்றி நானாகச் சொல்லாத வரையில் நீங்கள் சொல்ல வேண்டாம்" என்று கூறினார்கள். (வெளியூர் சென்றிருந்த) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (வீட்டுக்கு) வந்தபோது, அவருக்கு அருகில் என் தாயார் இரவு உணவை வைத்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் உணவை உண்டார்கள்; பருகினார்கள்.
பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (துயரத்தை மறைத்துக்கொண்டு) முன்பு எப்போதும் அலங்கரித்துக் கொள்வதைவிட அழகாகத் தம் கணவருக்காகத் தம்மை அலங்காரம் செய்துகொண்டார்கள். பிறகு இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டனர்.
கணவரின் பசி அடங்கி, தம்மிடம் (தேவையானதை) அனுபவித்துக்கொண்டதைக் கண்ட போது, "அபூதல்ஹா அவர்களே! ஒரு கூட்டத்தார் தம் பொருட்களை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்திருந்து, பிறகு அவர்கள் தாம் இரவலாகக் கொடுத்துவைத்திருந்த பொருட்களைத் திரும்பத்தருமாறு கேட்கும்போது அவர்களிடம் (திருப்பித் தரமுடியாது என) மறுக்கும் உரிமை அவ்வீட்டாருக்கு உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், "இல்லை" என்று கூறினார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்), "அவ்வாறாயின், தங்கள் மகனுக்காக (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பாருங்கள்" என்று கூறினார்கள். (தம்முடைய மகன் இறந்துவிட்டதைப் புரிந்துகொண்ட) அபூதல்ஹா (ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். "நான் (இன்பத்தில்) தோய்ந்திருக்கும்வரை (இதைப் பற்றி என்னிடம் சொல்லாமல்) விட்டுவிட்டு, இப்போது என் மகனைப் பற்றிச் சொல்கிறாயே!" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கடந்த இரவில் (நிகழ்ந்த உறவில்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் புரிவானாக!" என்று சொன்னார்கள். பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கர்ப்பமுற்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இருந்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு மதீனாவுக்கு வந்தால் இரவு நேரத்தில் தமது வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள்) அவ்வழக்கப்படியே அவர்கள் மதீனாவை நெருங்கியபோது உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. இதனால் ஊருக்குள் செல்ல முடியாமல் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தடுக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா) சென்றார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், "என் இறைவா! உன் தூதர் (ஸல்) அவர்கள் (ஊரிலிருந்து) புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் நானும் புறப்பட்டுச் செல்வதும், அவர்கள் திரும்பி (ஊருக்குள்) நுழையும்போது அவர்களுடன் நானும் நுழைவதும்தான் எனக்கு விருப்பமானது என்பதை நீ அறிவாய். ஆனால், (இப்போது) நான் ஊருக்குள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டேன். இதை நீயே பார்க்கிறாய்" என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அபூதல்ஹா அவர்களே! நான் உணர்ந்துவந்த (வலி) எதையும் (இப்போது) நான் உணரவில்லை" என்று கூறிவிட்டு, "நீங்கள் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.
அவ்விருவரும் ஊருக்குள் நுழைந்தபோது என் தாயாருக்கு (மீண்டும்) பிரசவ வலி ஏற்பட்டு, அவர் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அப்போது என்னிடம் என் தாயார், "அனஸே! இந்தக் குழந்தையை நீ காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லும் வரையில் அவனுக்கு யாரும் பாலூட்டிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
அவ்வாறே காலை நேரமானதும், நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடையாளமிடும் கருவியுடன் (தமது ஒட்டகத்திற்கு அடையாளமிட்டுக்கொண்டு) இருப்பதை நான் கண்டேன்.
என்னை அவர்கள் கண்டதும், "உம்மு சுலைமுக்குக் குழந்தை பிறந்துவிட்டது போலும்!" என்றார்கள். நான் "ஆம்" என்றேன். உடனே அவர்கள் அடையாளமிடும் கருவியை (கீழே) வைத்து விட்டார்கள். நான் குழந்தையைக் கொண்டுபோய் அவர்களது மடியில் வைத்தேன்.
அப்போது அவர்கள் மதீனாவின் (உயர் ரகப் பேரீச்சம் பழமான) "அஜ்வா"க்களில் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி,அதைத் தமது வாயிலிட்டு நன்றாக மென்று கூழாக்கி, குழந்தையின் வாயில் இட்டார்கள். குழந்தை நாக்கைச் சுழற்றி அதைச் சுவைக்கலாயிற்று.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளுக்குப் பேரீச்சம் பழத்தின் மீதுள்ள விருப்பத்தைப் பாருங்கள்" என்று கூறிவிட்டு, குழந்தையின் முகத்தைத் தடவி அதற்கு "அப்துல்லாஹ்" எனப் பெயர் சூட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் இறந்துவிட்டார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
பாடம் : 21 பிலால் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4854. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இஸ்லாத்தில் இணைந்தபிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தாலும், அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகையை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 22 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) மற்றும் அவர்களுடைய தாயார் ஆகியோரின் சிறப்புகள்.
4855. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் (தடை செய்யப் பட்டதை முன்பு) உட்கொண்டதால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால், அவர்கள் (இறைவனை) அஞ்சி, (முழுமையாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பின்னரும் (இறைவனை) அஞ்சி இறைநம்பிக்கை(யில் நிலையாக இருந்து)கொண்டு, பின்னரும் (இறைவனை) அஞ்சி நன்மை செய்திருக்க வேண்டும். (இவ்வாறு) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்" (5:93) எனும் இந்த இறைவசனம் முழுமையாக அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீங்களும் அவர்களில் ஒருவர்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4856. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் சகோதரர் ஒருவரும் யமன் (ஏமன்) நாட்டிலிருந்து வந்து (மதீனாவில்) சிறிது காலம் (தங்கி) இருந்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவருடைய தாயாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள்) அதிகமாகச் சென்றுவருவதையும் அவர்களுடனேயே எப்போதும் இருப்பதையும் கண்டு, அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் கருதினோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நானும் என் சகோதரர் ஒருவரும் யமன் நாட்டிலிருந்து (மதீனாவுக்கு) வந்தோம்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4857. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள், "நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரில் ஒருவர் என்றே கருதினேன்" என்றோ அல்லது இதைப் போன்றோ கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4858. அபுல்அஹ்வஸ் (அவ்ஃப் பின் மாலிக் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறந்த போது நான் அபூமூசா (ரலி), அபூமஸ்ஊத் (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம், "இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தமக்குப்பின் தம்மைப் போன்ற ஒருவரை விட்டுச்சென்றுள்ளார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு மற்றவர், "அவ்வாறு (யாரையும் அவர் விட்டுச்செல்லவில்லை என்று) நீங்கள் சொன்னால், (அது தவறாகாது. ஏனெனில்,) நாம் திரையிடப்பட்டு (நபியவர்களின் இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு) இருந்தபோது, அவர் (மட்டுமே) உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தார். நாம் வெளியூரிலிருந்தபோது அவர் (உள்ளூரில் நபியவர்களுக்கு) அருகில் இருந்தார்" என்று சொன்னார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4859. அபுல் அஹ்வஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் ஒரு நாள்) நாங்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்கள் சிலருடன் அபூமூசா (ரலி) அவர்களுடைய இல்லத்தில் இருந்தோம். அப்போது அம்மாணவர்கள் (இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிமிருந்து கேட்டு எழுதிவைத்திருந்த) குர்ஆன் பிரதியொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அப்போது அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப்பின் இதோ நிற்கிறாரே இவரைவிட, அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை நன்கு அறிந்த ஒருவரை விட்டுச்செல்ல வில்லை" என்று கூறினார்கள்.
உடனே அபூமூசா (ரலி) அவர்கள், "நீங்கள் இவ்வாறு கூறினால், அது சரிதான். (ஏனெனில்,) நாம் (நபியவர்களுடன்) இல்லாதபோது இவர் (நபியவர்களுடன்) இருந்துவந்தார். நாம் திரையிடப்பட்டு (நபியின் இல்லத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு) இருந்தபோது இவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுவந்தார்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில் "நான் அபூ மூசா (ரலி) அவர்களிடம் சென்றேன். அங்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),அபூமூசா (ரலி) ஆகிய இருவரையும் கண்டேன்..." என்று காணப்படுகிறது.
மற்ற அறிவிப்புகளில், "நான் ஹுதைஃபா (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன்" என்று ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், முந்தைய ஹதீஸே முழுமையானதும் கூடுதல் தகவல் உள்ளதும் ஆகும்.
அத்தியாயம் : 44
4860. ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்" (3:161) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, "யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள்,அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.
அத்தியாயம் : 44
4861. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்திலுள்ள ஒவ்வோர் அத்தியாயமும் அது எங்கே அருளப்பெற்றது என்பதை நான் நன்கு அறிவேன்; ஒவ்வொரு வசனமும் எது தொடர்பாக அருளப்பெற்றது என்பதையும் நான் நன்கு அறிவேன்.
என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கறிந்தவர் யாரேனும், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால், நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டுவிடுவேன்.
இதை மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4862. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்று "அவர்களுடன்" அல்லது "அவர்களுக்கு அருகில்" (இப்னு நுமைரின் அறிவிப்பிலுள்ள ஐயம்) பேசிக்கொண்டிருப்போம்.
ஒரு நாள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினோம். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். (அவர் எத்தகைய மனிதரென்றால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (1) "உம்மு அப்தின் புதல்வர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்), (2) முஆத் பின் ஜபல், (3)உபை பின் கஅப், (4) அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களையே முதலாவதாகக் குறிப்பிட்டர்கள். நான் அதைக் கேட்ட பிறகு அவரை என்றென்றும் நேசித்துக்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4863. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டோம்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அந்த மனிதர் எத்தகையவரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு அப்தின் புதல்வர் (இப்னு மஸ்ஊத்), உபை பின் கஅப், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, இப்னு மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதை நான் கேட்டேன். அப்போதிருந்து அவரை என்றென்றும் நேசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உபை பின் கஅபுக்குமுன் முஆத் பின் ஜபல் அவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் முஆத் பின் ஜபல் அவர்களுக்குமுன் உபை பின் கஅப் அவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீ அதீ (ரஹ்), முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்புகளில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் அந்நால்வரை வரிசைப்படுத்திக் கூறியது தொடர்பாக வித்தியாசமாக அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 44
4864. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் மக்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "அவர் எத்தகைய மனிதரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்ஊத், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம், உபை பின் கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதைக் கேட்டதிலிருந்து என்றென்றும் அவரை நேசிக்கலானேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (இறுதியில் சொல்லப்பட்ட) இவ்விருவரையுமே முதலில் அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். "அவ்விருவரில் முதலில் யாரைச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 23 உபை பின் கஅப் (ரலி) மற்றும் அன்சாரிகளில் ஒரு குழுவினரின் சிறப்புகள்.
4865. கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. முஆத் பின் ஜபல் 2. உபை பின் கஅப் 3. ஸைத் பின் ஸாபித் 4. அபூஸைத் (ரலி) ஆகியோர்தான் அவர்கள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அபூஸைத் என்பவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 44
4866. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆனை (மனனம் செய்து) திரட்டியவர்கள் யார்?" என்று கேட்டேன்.
"அவர்கள், நால்வர்: 1. உபை பின் கஅப். 2. முஆத் பின் ஜபல். 3. ஸைத் பின் ஸாபித். 4. அன்சாரிகளில் ஸைத் எனப்படும் ஒரு மனிதர்" என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 44
4867. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களுக்கு (குர்ஆனின் 98ஆவது அத்தியாயத்தை) ஓதிக்காட்டும் படி எனக்குக் கட்டளையிட்டான்" என்று சொன்னார்கள்.
அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்;) அல்லாஹ் தான் உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்"என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (மகிழ்ச்சிப் பெருக்கால்) அழத் தொடங்கினார்கள்.
அத்தியாயம் : 44
4868. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ், உங்களுக்கு "லம் யகுனில்லதீன..." (எனத் தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டான்" என்று கூறினார்கள்.
அதற்கு உபை (ரலி) அவர்கள், "என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (ஆனந்த மேலீட்டால்) அழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 24 சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4869. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் பிரேதம் (ஜனாஸா) மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சஅத் பின் முஆத் அவர்களின் இறப்புக்காக அளவற்ற அருளாள(னான இறைவ)னின் அரியணை (அர்ஷ்) அசைந்தது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4870. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஅத் பின் முஆத் அவர்களின் இறப்புக்காக அளவற்ற அருளாள(னான இறைவ)னின் அரியணை (அர்ஷ்) அசைந்தது.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4871. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அவர்களது (அதாவது சஅத் (ரலி) அவர்களது) பிரேதம் வைக்கப்பட்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள், "சஅத் அவர்களின் இறப்புக்காக அளவற்ற அருளாள(னான இறைவ)னின் அரியணை (அர்ஷ்) அசைந்தது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4872. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டுஅங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவையும் மென்மையானவையும் ஆகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தும் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பராஉ (ரலி) அவர்களது அறிவிப்பில், "(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பட்டாடை ஒன்று கொண்டுவரப்பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அனஸ் (ரலி) அவர்களது அறிவிப்பிலும் இவ்வாறே அல்லது இதைப் போன்றே இடம்பெறுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ (ரலி), அனஸ் (ரலி) ஆகியோரிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4873. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான மேலங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள், பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள். மக்களோ அந்த மேலங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிட அழகானவை ஆகும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "தூமத்துல் ஜந்தல்" பகுதியின் அரசர் "உகைதிர்" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாகத் தந்தார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அதில் "அவர்கள் பட்டாடை அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்துவந்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
பாடம் : 25 அபூதுஜானா சிமாக் பின் கரஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4874. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாள் ஒன்றை எடுத்து, "என்னிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். மக்களில் ஒவ்வொருவரும் "நான், நான்" எனத் தம் கைகளை நீட்டினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதற்குரிய கடமை(யை நிறைவேற்றும் வாக்குறுதி)யுடன் இதை வாங்கிக்கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள் அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள்.
அப்போது அபூதுஜானா சிமாக் பின் கரஷா (ரலி) அவர்கள், "நான் அதற்குரிய கடமை(யை நிறைவேற்றும் வாக்குறுதி)யுடன் இதை வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறி, அதைப் பெற்றுச் சென்று, (எதிரணியிலிருந்த) இணைவைப்பாளர்களின் மண்டையைப் பிளந்தார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 26 ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4875. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போர் நாளில் என் தந்தையின் உடல் சிதைக்கப்(பட்டு காது, மூக்கு உள்ளிட்ட உறுப்புகள் அறுக்கப்)பட்ட நிலையில் ஒரு துணியில் போர்த்திக் கொண்டுவரப்பட்டது. நான் (என் தந்தையின் முகத்திலிருந்த) துணியை விலக்கப்போனேன். என் குலத்தார் என்னைத் தடுத்துவிட்டனர். பிறகு மறுபடியும் துணியை விலக்கப்போனேன். அப்போதும் என் குலத்தார் என்னைத் தடுத்துவிட்டனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தைத் "தூக்கினார்கள்"; அல்லது "தூக்கும்படி உத்தரவிட்டார்கள்".அவ்வாறே தூக்கப்பட்டபோது யாரோ ஒரு பெண் "அழும் சப்தம்" அல்லது "ஓலமிடும் சப்தம்" கேட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அம்ர் (பின் ஹராம்) அவர்களின் புதல்வி" அல்லது "அம்ர் (பின் ஹராம்) அவர்களின் சகோதரி" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏன் அழுகிறாய்? வானவர்கள் தம் இறக்கைகளை விரித்து அவர் தூக்கப்படும்வரை நிழல் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள் (இத்தகைய சிறப்புக்குரிய ஒருவருக்காக ஏன் அழவேண்டும்?)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4876. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். பிறகு (அவர்களது உடல் கொண்டுவரப்பட்டபோது) அவர்களின் முகத்திலிருந்த துணியை விலக்கி நான் அழலானேன். மக்கள் என்னைத் தடுக்கலாயினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. (என் அத்தை) ஃபாத்திமா பின்த் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களும் அழலானார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அழுதாலும் அழாவிட்டாலும் அவரை நீங்கள் தூக்கும்வரை வானவர்கள் தம் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வானவர்களைப் பற்றியோ அப்பெண்மணி அழுதது பற்றியோ குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உஹுதுப் போர் நாளில் காது, மூக்கு ஆகிய உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டுவரப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
பாடம் : 27 ஜுலைபீப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4877. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு போர் பயணத்தில் இருந்தார்கள். பிறகு அவர்களுக்கு அல்லாஹ் போர்ச் செல்வங்களை வழங்கினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "(உங்களில்) யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகிறீர்களா?" என்று கேட்டார்கள். தோழர்கள் "ஆம்; இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் (காணாமல் தேடுகிறோம்)" என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்), "(உங்களில்) யாரையேனும் காணாமல் தேடுகிறீர்களா?" என்று நபியவர்கள் கேட்டார்கள். தோழர்கள், "ஆம்; இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் (காணாமல் தேடுகிறோம்)" என்று கூறினர்.
பிறகு (மூன்றாவது முறையாக) "(உங்களில்) யாரையேனும் காணாமல் நீங்கள் தேடுகிறீர்களா?" என்று கேட்டார்கள். தோழர்கள், "இல்லை (எல்லாரும் கிடைத்துவிட்டனர்)" என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "நான் ஜுலைபீபைக் காணாமல் தேடுகிறேன். நீங்களும் அவரைத் தேடுங்கள்" என்று கூறினார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர் தேடப்பட்டார். (எதிரிகளில்) ஏழு பேரின் உடல்களுக்கு அருகில் அவரது உடலைக் கண்டனர். ஜுலைபீப் அந்த எழுவரையும் கொல்ல, அவர்களும் ஜுலைபீபைக் கொன்றுவிட்டிருந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் வந்து ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு அருகில் நின்று, "இவர் (எதிரிகளில்) எழுவரைக் கொன்றார். அவர்களும் இவரைக் கொன்றுவிட்டனர். (இதோ) இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். நான் இவரைச் சேர்ந்தவன் ஆவேன். இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். நான் இவரைச் சேர்ந்தவர் ஆவேன்" என்று கூறினார்கள்.
பிறகு அவரைத் தமது (முன்)கையில் வைத்துத் தூக்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கைகளைத் தவிர (கட்டிலாக) வேறெதுவும் அவருக்கு இருக்கவில்லை. பிறகு குழி தோண்டப்பட்டு அவரது உடல் குழிக்குள் வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பில், அவர் நீராட்டப்பட்டாரா என்பது பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 28 அபூதர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4878. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மூவர்) எங்கள் "ஃகிஃபார்" குலத்தாரைவிட்டுப் புறப்பட்டோம். ஃகிஃபார் குலத்தார் (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களையும் (வழிப்பறி, போர் ஆகியவற்றுக்கு) அனுமதிக்கப்பட்ட மாதமாக ஆக்கிக்கொண்டிருந்தனர்.
ஆகவே, நானும் என சகோதரர் உனைஸும் எங்கள் தாயாரும் (ஃகிஃபார் குலத்தாரின் வசிப்பிடத்தைவிட்டுப்) புறப்பட்டு எங்கள் தாய்மாமன் ஒருவரிடம் வந்து தங்கினோம். எங்கள் மாமன் எங்களைக் கண்ணியமாக நடத்தினார்; உபசரித்தார். அதைக் கண்டு அவருடைய சமுதாயத்தார் எங்கள் மீது பொறாமைப்பட்டார்கள். அவரிடம், "நீர் உம்முடைய குடும்பத்தாரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றதும் அவர்களிடம் உனைஸ் வந்துபோகிறார்" என்று (அவதூறு) கூறினர்.
ஆகவே, எங்கள் தாய்மாமன் எங்களிடம் வந்து தம்மிடம் கூறப்பட்டதை வெளிப்படையாகப் பேசினார். அப்போது நான், "நீர் செய்த உபகாரத்தை நீரே அசிங்கப்படுத்திவிட்டீரே! இதற்குமேல் எங்களால் உம்முடன் சேர்ந்திருக்க இயலாது. எங்கள் ஒட்டகங்களை எங்களிடம் கொண்டுவாரும்" என்றேன்.
அவ்வாறே (எங்கள் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டபோது) அவற்றில் நாங்கள் ஏறிப் புறப்பட்டோம். அப்போது எங்கள் மாமன் (தாம் சொன்னதை நினைத்து வருந்தியவராக) தம்மீது தமது ஆடையைப் போட்டு மூடிக் கொண்டு அழலானார்.
நாங்கள் பயணம் செய்து மக்காவுக்கு அருகில் ஓரிடத்தில் இறங்கினோம். அங்கு (என் சகோதரர்) உனைஸ் (ஒரு கவிஞரிடம் அவரது) ஒட்டக மந்தைக்கு எங்கள் ஒட்டக மந்தையைப் பந்தயமாக வைத்து(க் கவிதை)ப் போட்டி நடத்தினார். இறுதியில் இருவரும் ஒரு குறிகாரரிடம் (தீர்ப்புக்காகச்) சென்றனர். அந்தக் குறிகாரர் உனைஸைத் தேர்வு செய்தார். இதையடுத்து உனைஸ் எங்கள் ஒட்டக மந்தையுடன் (போட்டிக் கவிஞரின்) ஒட்டக மந்தையையும் சேர்த்துக் கொண்டுவந்தார்.
(இந்த ஹதீஸை அபூதர்ரிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்) "என் சகோதரரின் புதல்வரே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொழுதிருக்கிறேன்" என்று கூற, அதற்கு நான், "யாரைத் தொழுதீர்கள்?"என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை" என்று கூறினார்கள்.
நான், "எதை நோக்கித் தொழுதீர்கள்?" என்று கேட்டேன். "என் இறைவன் என்னை முன்னோக்கச் செய்த திசையை முன்னோக்கினேன். நான் இரவுத் தொழுகை (இஷாவை) தொழுதுவிட்டு இரவின் இறுதி நேரமாகும்போது துணியைப் போல (சுருண்டு) கிடந்து சூரியன் உதிக்கும்வரை உறங்குவேன்" என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்னிடம் உனைஸ், "நான் ஓர் அலுவல் நிமித்தம் மக்காவுக்குச் செல்கிறேன். ஆகவே, நீர் (என் பணிகள் எல்லாவற்றையும்) கவனித்துக்கொள்வீராக" என்று கூறிவிட்டு, மக்காவுக்குச் சென்றார். பின்னர் தாமதமாகவே உனைஸ் என்னிடம் திரும்பிவந்தார். அப்போது அவரிடம் நான், "(இத்தனை நாட்கள்) என்ன செய்தாய்?" என்று கேட்டேன். அதற்கு உனைஸ், "நீர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் இருக்கும் ஒரு மனிதரை மக்காவில் சந்தித்தேன். அவர் "அல்லாஹ்தான் தம்மைத் தூதராக அனுப்பியுள்ளான்" என்று கூறுகிறார்" என்று சொன்னார்.
நான், "மக்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு உனைஸ், "(அவர் ஒரு) கவிஞர், சோதிடர்,சூனியக்காரர் என்று சொல்கிறார்கள்" என்றார். ஆனால், கவிஞர்களில் ஒருவராக இருந்த உனைஸ் கூறினார்:
நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன். (நான் மட்டுமல்ல) வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள்தான் பொய்யர்கள்.
பிறகு நான் (என் சகோதரர் உனைஸிடம்), "இனி (என் பணிகளை) நீர் கவனித்துக் கொள்வீராக. நான் சென்று (அவரைப்) பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மக்காவுக்குச் சென்றேன்.
மக்காவாசிகளில் நலிந்த ஒருவரைச் சந்தித்து, அவரிடம், "நீங்கள் "மதம் மாறியவர்" என்றழைக்கக் கூடிய இந்த மனிதர் எங்கே?" என்று கேட்டேன். உடனே அவர், "இதோ! மதம் மாறிய இவரைக் கவனியுங்கள்" என்று கூறி, என்னைச் சுட்டிக்காட்டினார். உடனே அந்தப் பள்ளத்தாக்கிலிருந்த மக்கள் ஓடுகள், எலும்புகள் (எனக் கையில் கிடைத்த) அனைத்தையும் எடுத்துவந்து என்னைத் தாக்கினர்.
நான் மயக்கமுற்று விழுந்தேன். பிறகு நானாக மயக்கம் தெளிந்து எழுந்தபோது சிவப்பு நிற சிலையைப் போன்றிருந்தேன். பின்னர் நான் "ஸம்ஸம்" கிணற்றுக்கு வந்து, என் உடலில் படிந்திருந்த இரத்தத்தைக் கழுவினேன். ஸம்ஸம் தண்ணீரை அருந்தினேன். என் சகோதரர் புதல்வரே! (அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித்தே!) இவ்வாறு நான் முப்பது நாட்கள் அங்கு தங்கியிருந்தேன். ஸம்ஸம் கிணற்றின் தண்ணீரைத் தவிர வேறெந்த உணவும் இல்லை. ஆனால், என் வயிற்றிலிருந்த மடிப்பு அகலும் அளவுக்கு நான் பருமனாகிவிட்டேன். என் ஈரலில் பசிக்கொடுமை தெரியவில்லை.
நன்கு நிலாக்காயும் ஒரு பிரகாசமான இரவில் மக்காவாசிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இறையில்லம் கஅபாவை யாரும் (தவாஃப்) சுற்றவில்லை.
மக்காவைச் சேர்ந்த இரு பெண்கள் மட்டும் (ஸஃபா மற்றும் மர்வாவில் இருந்த) இசாஃப், நாயிலா எனும் கடவுள் சிலைகளிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் (ஸஃபா - மர்வாவைச்) சுற்றிவரும்போது என்னிடம் வந்தனர்.
அவர்களிடம் நான், "அந்தச் சிலைகளில் ஒன்றை மற்றொன்றுக்கு மணமுடித்து வைத்து விடு" என்று சொன்னேன். ஆனால், அவர்கள் இருவரும் அவற்றைப் பிரார்த்திப்பதிலிருந்து விலகவில்லை.
பிறகு (மற்றொரு சுற்றில்) அவர்கள் இருவரும் என்னிடம் வந்தபோது, ஒளிவு மறைவின்றி "(அவ்விரு சிலைகளும்) மரக்கட்டைக்கு நிகரான இன உறுப்புகளைப் போன்றவை" என்று சொன்னேன்.
அப்போது (எனக்குச்) சாபம் கொடுத்த அவ்விரு பெண்களும் "எங்கள் ஆட்களில் யாரேனும் இங்கிருந்திருந்தால் (நடந்திருப்பதே வேறு)" என்று சொல்லிக்கொண்டே சென்றனர்.
அப்போது அங்கு கீழிறங்கி வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவ்விரு பெண்களை எதிர்கொண்டனர். "உங்கள் இருவருக்கும் என்ன நேர்ந்தது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கு அப்பெண்கள், "கஅபாவுக்கும் அதன் திரைக்குமிடையே மதம் மாறிய ஒருவர் இருக்கிறார் (அவர் எங்கள் சிலைகளைக் கேவலப்படுத்தி எங்களை மனவேதனைப்படுத்திவிட்டார்)" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (உங்களிடம்) என்ன சொன்னார்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்கள், "அவர் எங்களிடம் வாய்க்கு ஒவ்வாத வார்த்தையைச் சொன்னார்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கஅபாவுக்கு) வந்து "ஹஜருல் அஸ்வதை"த் தொட்டு முத்தமிட்டுவிட்டு,கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய நண்ப(ர் அபூபக்)ரும் சுற்றிவந்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், நானே முதலில் (சென்று) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்க! (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்)" என இஸ்லாமிய முகமன் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வ அலைக்க, வ ரஹ்மத்துல்லாஹ் (அவ்வாறே உங்களுக்கும் சாந்தியும் இறையருளும் கிடைக்கட்டும்)" என்று பதில் சொன்னார்கள்.
பிறகு "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். நான், "ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்தவன்" என்று பதிலளித்தேன். நான் அவ்வாறு (என் குலத்தாரின் பெயரைக்) கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (கை) விரல்களைத் தமது நெற்றியின்மீது வைத்தார்கள். அப்போது நான் எனக்குள்ளே, "நான் ஃகிஃபார் குலத்தாரோடு இணைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதை அவர்கள் வெறுக்கிறார்கள்" என்று சொல்லிக்கொண்டேன்.
பிறகு (அன்போடு) அவர்களது கரத்தைப் பற்றிக்கொள்ளப்போனேன். ஆனால், அவர்களுடைய நண்பர் (அபூபக்ர்) என்னைத் தடுத்துவிட்டார். அல்லாஹ்வின் தூதரைப் பற்றி என்னைவிட அவரே நன்கறிந்தவராக இருந்தார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, "எத்தனை நாட்களாக இங்கிருக்கிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "இரவு பகலென முப்பது நாட்களாக இங்கிருந்துகொண்டிருக்கிறேன்" என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இத்தனை நாட்களாக) உமக்கு உணவளித்து வந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஸம்ஸம் தண்ணீரைத் தவிர வேறெந்த உணவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும்,என் வயிற்றின் மடிப்புகள் அகலும் அளவுக்கு நான் பருமனாகிவிட்டேன். என் ஈரலில் பசிக்கொடுமை தெரியவில்லை" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (ஸம்ஸம்) வளமிக்கதாகும். அது(ஒரு வகையில்) வயிற்றை நிரப்பும் உணவாகும்" என்று சொன்னார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு இன்றிரவு உணவளிக்க எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கதவைத் திறந்து எங்களுக்காக "தாயிஃப்" நகர உலர்ந்த திராட்சையை அள்ளித் தரலானார்கள். அதுவே நான் மக்காவில் உண்ட முதல் உணவாகும். பின்னர் இதே நிலையில் சில நாட்கள் இருந்தேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமி எனக்கு (கனவில்) காட்டப்பட்டது. அது "யஸ்ரிப்" (மதீனா) என்றே நான் கருதுகிறேன். ஆகவே, நீங்கள் என்னைப் பற்றி(ய செய்தியை) உங்கள் குலத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பீர்களா? அல்லாஹ் உங்கள் மூலம் அவர்களுக்குப் பயனளிக்கக்கூடும். (நல்வழி அடைந்தால்) அவர்களுக்காக உங்களுக்கும் அவன் பிரதிபலன் அளிப்பான்"என்று கூறி (என்னை அனுப்பி)னார்கள்.
ஆகவே, நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் "நீங்கள் என்ன செய்தீர்கள்?"என்று கேட்டார். "நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்" என்று கூறினேன். உனைஸ், "(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்" என்று கூறினார்.
பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், "(நீங்கள் இருவரும் ஏற்றுள்ள) உங்கள் மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்" என்று கூறினார்.
பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் "ஃகிஃபார்" குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்; அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார்.
ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப்பேர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்" என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது,எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.
"அஸ்லம்" குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(பெயருக்கேற்பவே) "ஃகிஃபார்" குலத்தாரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்; "அஸ்லம்" குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்றவர்களாக ஆக்கிவிட்டான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் (அங்கு) சென்று பார்த்துவருகிறேன். அதுவரை நீர் (என் பணிகளைக்) கவனித்துக்கொள்வீராக" என்று கூறினேன்.
அதற்கு உனைஸ் "சரி" என்று கூறிவிட்டு, "மக்காவாசிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்; வெறுப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னார் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "என் சகோதரர் மகனே! நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் தொழுதிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
நான், "அப்போது நீங்கள் எதை முன்னோக்கி(த் தொழுது)வந்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் என்னை முன்னோக்கச் செய்த திசையில்" என்று பதிலளித்தார்கள் என ஹதீஸ் தொடர்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
மேலும் அந்த அறிவிப்பில், "உனைஸும் அந்த இன்னொரு மனிதரும் (கவிதைப் போட்டிக்காக) சோதிடர்களில் ஒருவரிடம் சென்றனர். அப்போது என் சகோதரர் உனைஸ், அந்தச் சோதிடரைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே அந்த மனிதரை வென்றுவிட்டார். பிறகு அந்த மனிதரிடமிருந்த ஒட்டக மந்தையை (பரிசாகப்) பெற்று எங்கள் மந்தையோடு சேர்த்துக்கொண்டோம்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அதே அறிவிப்பில், "...பிறகு நபி (ஸல்) அவர்கள் சென்று இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டு,மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய முகமனை முதன் முதலில் கூறியவன் நான்தான். நான், "அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்க" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் "வ அலைக்கஸ் ஸலாம்" (என்று பதில் சொல்லிவிட்டு) "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், "எத்தனை நாட்களாக இங்கு இருக்கிறீர்?" என்று கேட்டார்கள். நான், "பதினைந்து நாட்களாக என்று பதிலளித்தேன்" என்று காணப்படுகிறது. இந்த அறிவிப்பில், "இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் (மகத்தான) வாய்ப்பினை எனக்கு வழங்குங்கள்" என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கேட்டார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4879. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதர் (அல்ஃகிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது, தம் சகோதரர் (உனைஸ்) இடம், "இந்தப் பள்ளத்தாக்கை (மக்காவை) நோக்கிப் பயணம் செய்து, தமக்கு வானத்திலிருந்து இறைச்செய்தி வருவதாகக் கூறிவரும் இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) என்னிடம் கொண்டுவந்து சொல். அவரது சொல்லை அவரிடமிருந்தே கேட்டபிறகு என்னிடம் வா" என்று கூறியனுப்பினார்கள்.
அவ்வாறே அந்தச் சகோதரர் புறப்பட்டு மக்காவுக்குச் சென்று நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூதர் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்று, "அவர் நற்குணங்களைக் கடைப்பிடிக்கும்படி (மக்களுக்கு) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (அவரிடமிருந்து செவியுற்றேன்); அது கவிதை இல்லை" என்று சொன்னார்.
அபூதர், "நான் விரும்பிய விதத்தில் (போதுமான விவரங்களுடன் என்னிடம் வந்து) நீ என்னைத் திருப்தியடையச் செய்யவில்லை" என்று கூறிவிட்டார்கள். பிறகு பயண உணவு எடுத்துக்கொண்டு நீர் நிரம்பிய தமது தோல்பை ஒன்றைச் சுமந்துகொண்டு அபூதர் புறப்பட்டார். மக்கா வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார்.
நபி (ஸல்) அவர்களை அபூதர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷியர் தமக்குத் தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை.
இரவு நேரமானதும் (அங்கேயே) படுத்துக்கொண்டார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் வெளியூர்க்காரர் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அலீ (ரலி) அவர்களைக் கண்டவுடன் (அலீ (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில்) அபூதர் அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். விடியும்வரை அவர்களில் எவரும் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.
(விடிந்த) பிறகு அபூதர் தம் தோல்பையையும் பயண உணவையும் தூக்கிக்கொண்டு பள்ளி வாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும்வரை நபி (ஸல்) அவர்களைக் காணாத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார்.
பிறகு தமது படுக்கைக்குத் திரும்பினார். அன்றும் அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்துசென்றார்கள். "தமது தங்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் நேரம் இம்மனிதருக்கு இன்னும் வரவில்லையோ?" என்று கூறிவிட்டு, அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். (அன்றும்) அவர்களில் எவரும் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.
மூன்றாம் நாள் வந்தபோதும் அபூதர் அவ்வாறே செய்தார். அன்றும் அலீ (ரலி) அவர்கள் அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பி தம்முடன் அழைத்துச் சென்றார்கள்.
பிறகு, "நீங்கள் எதற்காக இந்த ஊருக்கு வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?" என்று கேட்டார்கள். அபூதர், "(நான் தேடிவந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதாக நீங்கள் உறுதிமொழியளித்தால் (நீங்கள் கேட்டதைச்) செய்கிறேன்" என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதி மொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், "(நீர் தேடிவந்த) அந்த மனிதர் உண்மையாளர்தான்; அவர் அல்லாஹ்வின் தூதர்தான். காலையில் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். (நாம் செல்லும் போது) உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நான் அஞ்சுகின்ற எதையேனும் நான் கண்டால், சிறுநீர் கழிப்பதைப் போன்று நின்றுகொள்வேன். நான் (நிற்காமல்) போய்க்கொண்டேயிருந்தால், நான் நுழையும் வீட்டுக்குள் நீங்களும் நுழையும்வரை என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்" என்று சொன்னார்கள்.
அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அபூதர்ரும் நுழைந்தார். அங்கு நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியுற்று அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் உங்கள் "ஃகிஃபார்" குலத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்துசேரும்வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்" என்று சொன்னார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்தியமாக! நான் இந்தச் செய்தியை (மக்கா இறைமறுப்பாளர்களான) இவர்களிடையேயும் உரக்கச் சொல்வேன்" என்று சொல்லிவிட்டு, (கஅபா) பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறினார்.
உடனே அங்கிருந்த (குறைஷி) மக்கள், கொதித்தெழுந்து, அவரை அடித்துக் கீழே சாய்த்தனர். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர்மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். "உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! இவர் "ஃகிஃபார்" குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தார் வசிக்கும்) ஷாம் (சிரியா) நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியாதா?" என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள் அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அதே போன்று (உரத்த குரலில் உறுதிமொழி) சொல்ல, அவர்மீது பாய்ந்து (குறைஷியர்) தாக்கினர். (அன்றும்) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள்மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல்) அவரைக் காப்பாற்றினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 29 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4880. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து (நான் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. சிரித்த முகத்துடனே தவிர அவர்கள் என்னைக் கண்டதில்லை.
இதைக் கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4881. மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து (நான் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. என் முகத்திற்கெதிரே புன்னகைக்காமல் என்னை அவர்கள் கண்டதில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அவற்றில் இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருக்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக என்று பிரார்த்தித்தார்கள்" என ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4882. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் "துல்கலஸா" என்றழைக்கப்பட்டுவந்த (இணைவைப்பாளர்களின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா" என்றும் "ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா" என்றும் அழைக்கப்பட்டுவந்தது.
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை துல்கலஸாவிலிருந்தும் யமன் நாட்டு கஅபா, ஷாம் நாட்டு கஅபா எனப்படும் அந்த ஆலயத்தி(ன் கவலையி)லிருந்தும் விடுவிப்பீரா?" என்று கேட்டார்கள்.
உடனே நான் "அஹ்மஸ்" எனும் (என்) குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் அங்கு விரைந்தேன். அதை நாங்கள் உடைத்துவிட்டு அதனருகில் இருந்தவர்களைக் கொன்றோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கேற்ற) "அஹ்மஸ்" குலத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4883. ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஜரீரே! துல்கலஸாவி(ன் கவலையி) லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். அது "கஸ்அம்" குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா" என்று அழைக்கப் பட்டுவந்தது.
எனவே, நான் ("அஹ்மஸ்" குலத்தைச் சேர்ந்த) நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் விரைந்தேன். நான் குதிரையின் மீது (சரியாக) அமர முடியாதவனாக இருந்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் என் நெஞ்சில் அடித்து, "இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே நான் அங்கு சென்று அதைத் தீயிட்டு எரித்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக எங்களில் "அபூஅர்த்தாத்" எனப்படும் ஒரு மனிதரை அனுப்பினேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அ(ந்த ஆலயத்)தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் உங்களிடம் வந்துள்ளேன்" என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளுக்காகவும் அக்குலத்தாருக்காகவும் வளம் வேண்டி ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாவும் வந்துள்ளது.
அவற்றில் மர்வான் அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து நற்செய்தி சொல்லும் தூதுவராக அபூஅர்த்தாத் ஹுஸைன் பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 30 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4884. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றார்கள். நான் அவர்களுக்காக (அங்கத் தூய்மை செய்ய) தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் "இதை வைத்தவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள், "இப்னு அப்பாஸ்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "இறைவா! அவருக்கு மார்க்கத்தில் (நல்ல) விளக்கத்தை அளிப்பாயாக"என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அந்நள்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (மக்கள் என்பதற்குப் பதிலாக) "நான், இப்னு அப்பாஸ்(தான் வைத்தேன்)"என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 31 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4885. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) கண்ட கனவில், எனது கையில் பட்டுத் துண்டு இருப்பதைப் போன்றும் சொர்க்கத்தில் நான் விரும்புகின்ற இடத்திற்கெல்லாம் அது என்னைத் தூக்கிக்கொண்டு பறப்பதைப் போன்றும் கண்டேன். இது குறித்து நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அது குறித்து ஹஃப்ஸா, நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தபோது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் ஒரு நல்ல மனிதர் என்றே நான் அறிகிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4886. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் ஒரு மனிதர் கனவொன்றைக் கண்டால்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதை விவரித்துச் சொல்வார். அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்துச் சொல்வதற்காகக் கனவொன்றை நானும் காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். (அப்போது) நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலில் நான் உறங்குவது வழக்கம்.
(ஒரு நாள்) கனவில் இவ்வாறு கண்டேன்: வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்தை நோக்கிக் கொண்டுசென்றார்கள். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரு பக்கங்களிலுமுள்ள கல் தூண்களைப் போன்று இரு தூண்கள் அதற்கும் இருந்தன. அதனுள் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர்.
உடனே நான், "நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றேன்; நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றேன்; நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகின்றேன்" என்று பிரார்த்திக்கலானேன். (அப்போது என்னைப் பிடித்துச் சென்ற) அவ்விரு வானவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், "இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்" என்று சொன்னார்.
நான் இதை (என் சகோதரியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள், அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் (பின் உமர்) ஒரு நல்ல மனிதர்;அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)" என்று சொன்னார்கள்.
(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வர்) சாலிம் (ரஹ்) அவர்கள், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்" என்று கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் குடும்பம் (மனைவி, மக்கள்) இல்லாதவனாயிருந்தபோது இரவில் பள்ளிவாசலில் உறங்கிவந்தேன். (ஒரு நாள்) கனவில் ஒரு கிணற்றை நோக்கி நான் இழுத்துச் செல்லப்படுவதைப் போன்று கண்டேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
பாடம் : 32 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4887. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் சேவகர் அனஸ். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்" என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள (ஆயுள் முதலான)வற்றில் வளம் சேர்ப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் சேவகர் அனஸ்..."என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்டவையே.
- மேற்கண்ட அதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4888. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (எங்கள் இல்லத்திற்கு) வந்தார்கள். அப்போது அங்கு நானும் என் தாயாரும் என் தாயின் சகோதரி உம்மு ஹராம் (ரலி) அவர்களுமே இருந்தோம். அப்போது என் தாயார், "அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் அன்பு சேவகர் (அனஸ்). அவருக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் எனக்காக எல்லாவித நலன்களும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் தமது பிரார்த்தனையின் முடிவில், "இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி, அ(வருக்கு நீ அளித்திருப்ப)தில் வளம் சேர்ப்பாயாக!" என்று எனக்காக வேண்டினார்கள்.
அத்தியாயம் : 44
4889. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது தமது முக்காட்டுத் துணியில் ஒரு பகுதியை எனக்குக் கீழாடையாகவும் மற்றொரு பகுதியை எனக்கு மேல் துண்டாகவும் போர்த்திவிட்டிருந்தார்கள். என் தாயார், "அல்லாஹ்வின் தூதரே! இவர் என் (செல்ல) மகன் அனஸ். தங்களுக்குச் சேவகராகப் பணியாற்றுவதற்காக இவரை உங்களிடம் அழைத்துவந்துள்ளேன். இவருக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தில் என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் நூறை எட்டியிருக்கிறது.
அத்தியாயம் : 44
4890. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள். அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குரலைக் கேட்டார்கள். உடனே (அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (இதோ உங்கள் சேவகர்) அனஸ்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக மூன்று பிரார்த்தனைகளைச் செய்தார்கள். அவற்றில் இரண்டை நான் இந்த உலகத்திலேயே பார்த்துவிட்டேன். மூன்றாவதை நான் மறுமையில் எதிர்பார்க்கிறேன்.
அத்தியாயம் : 44
4891. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சேவகனாக இருந்தபோது) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். நான் (வீட்டுக்கு) வந்தபோது என் தாயார், "உன் தாமதத்திற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்தார்கள்" என்று பதிலளித்தேன். அப்போது என் தாயார், "என்ன அலுவல்?" என்று கேட்டார்கள். நான், "அது இரகசியம்" என்று சொன்னேன். என் தாயார், "நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அனஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை என்னிடம் அறிவித்தபோது) "அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த இரகசியத்தை நான் யாரிடமாவது சொல்வதாயிருந்தால் ஸாபித்தே! உங்களிடம் அதைச் சொல்லியிருப்பேன் (அதை நான் என்றைக்கும் யாரிடமும் அதைச் சொல்ல மாட்டேன்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4892. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களது இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 33 அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4893. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பூமியின்மீது நடமாடும் எவரையும் "இவர் சொர்க்கவாசி" என்று சொல்லி நான் கேட்டதில்லை; அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைத் தவிர.
அத்தியாயம் : 44
4894. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவில் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலில்) மக்களில் சிலருடன் இருந்தேன். அவர்களில் நபித்தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர் வந்தார். அவரது முகத்தில் சிரம்பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளம் இருந்தது. மக்களில் சிலர், "இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்; இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்" என்று சொன்னார்கள். அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர் தமது இல்லத்திற்குள் நுழைந்தபோது நானும் நுழைந்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
அவர் சகஜ நிலைக்கு வந்தபோது, "நீங்கள் சற்று முன்னர் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்த சமயம், ஒரு மனிதர் இப்படி (நீங்கள் சொர்க்கவாசி என்று) சொன்னார்" என அவரிடம் சொன்னேன். அவர் கூறினார்: அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்)! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையாகாது. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பதைப் போன்று கண்டேன். (அதன் விசாலத்தையும் புற்பூண்டுகளையும் பசுமையையும் வர்ணித்தார்) பூங்காவின் நடுவே இரும்பாலான தூண் ஒன்று இருந்தது. அதன் அடிப்பகுதி தரையிலும் மேற்பகுதி வானத்திலும் இருந்தது. அதற்கும் மேலே "கைப்பிடி" ஒன்று இருந்தது. என்னிடம் "இதில் ஏறு" என்று சொல்லப்பட்டது. நான் "என்னால் இயலாதே!" என்று சொன்னேன்.
அப்போது என்னிடம் "மின்ஸஃப்" ஒருவர் வந்தார் ("மின்ஸஃப்" என்பதற்கு ஊழியர் என்பது பொருள் என அறிவிப்பாளர் இப்னு அவ்ன் சொல்கிறார்). அவர் என் ஆடையைப் பிடித்து பின்பக்கமாக என்னை இவ்வாறு தூக்கிவிட்டார். அதைச் சைகையால் செய்து காட்டுகிறார். உடனே நான் அந்தத் தூணில் ஏறினேன். இறுதியில் அதன் உச்சிக்கு நான் சென்று அந்தப் பிடியைப் பற்றினேன். அப்போது என்னிடம் "நன்கு பற்றிப் பிடித்துக்கொள்" என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றிக்கொண்டேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க, (திடுக்கிட்டு) நான் விழித்தேன்.
நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, "அந்தப் பூங்காதான் இஸ்லாம். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறைநம்பிக்கை எனும்) பிடியாகும். ஆகவே, நீங்கள் இறக்கும்வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்" என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள்தான்.
அத்தியாயம் : 44
4895. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) வட்ட(மாக மக்கள் வீற்றிருந்த ஓர்) அவையில் இருந்தேன். அதில் சஅத் பின் மாலிக் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் இருந்தனர். அப்போது அப்துல் லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள்.
அப்போது அ(ங்கிருந்த)வர்கள், "இவர் சொக்கவாசிகளில் ஒருவர்" என்று கூறினர். உடனே நான் (அங்கிருந்து) எழுந்து அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களிடம் (சென்று), "மக்கள் இப்படி இப்படிக் கூறினர்" என்று சொன்னேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், "அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாததைச் சொல்வது எவருக்கும் தகாது. (அவர்கள் இப்படிச் சொல்வதற்குக் காரணம் ஒன்று உண்டு:) நான் ஒரு கனவு கண்டேன். ஒரு பசுமையான பூங்காவில் தூண் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பின்பு அது அங்கு நாட்டப்பட்டது. அதன் மேற்பகுதியில் "பிடி" ஒன்று இருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் "மின்ஸஃப்" ஒருவர் இருந்தார். (மின்ஸஃப் என்பதற்கு ஊழியர் என்பது பொருள்)
அப்போது என்னிடம் "இதில் ஏறு" என்று சொல்லப்பட்டது. நான் அதில் ஏறி அந்தப் பிடியைப் பற்றினேன். பிறகு அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பலமான பிடி(யான இஸ்லாமிய நெறி)யைப் பற்றிய நிலையில் இறப்பார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4896. கரஷா பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வட்ட(மாக மக்கள் வீற்றிருந்த) அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அங்கு அழகிய தோற்றத்துடன் முதியவர் ஒருவர் இருந்தார். அவர்தான் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள்.
அவர்கள் மக்களுக்கு அழகிய ஹதீஸ் ஒன்றைக் கூறலானார்கள். பிறகு அவர்கள் எழுந்து சென்றபோது மக்கள், "சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்" என்று கூறினர். அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களது இல்லத்தை நான் அறிந்துகொள்வேன்" என்று கூறிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்.
அவர்கள் நடந்து, மதீனாவைவிட்டு வெளியேறும் தூரத்திற்குச் சென்று தமது இல்லத்திற்குள் நுழைந்தார்கள். பிறகு நான் (சென்று) அவர்களிடம் உள்ளே நுழைய அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.
பிறகு என்னிடம், "என் சகோதரர் புதல்வரே! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்கள். அவர்களிடம் நான், "நீங்கள் எழுந்து சென்றபோது உங்களைப் பற்றி மக்கள், "சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் (இதோ) இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று கூறியதைக் கேட்டேன். ஆகவே, தங்களுடன் இருப்பதை நான் விரும்பினேன்" என்று சொன்னேன். அதற்கு அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகளை அல்லாஹ்வே நன்கறிவான். மக்கள் ஏன் இவ்வாறு கூறினர் என உமக்கு நான் தெரிவிக்கிறேன்:
(ஒரு நாள்) நான் உறங்கிக்கொண்டிருந்த போது (கனவில்) ஒரு மனிதர் என்னிடம் வந்து, "எழுங்கள்" என்று சொல்லிவிட்டு, எனது கையைப் பிடித்துக்கொண்டார். அவருடன் நான் நடந்தேன். அப்போது நான் எனக்கு இடப் பக்கத்தில் தெளிவான பல பாதைகளைக் கண்டேன். அதில் நான் செல்லப்போனேன். அப்போது அந்த மனிதர் என்னிடம், "அவற்றில் நீங்கள் செல்லாதீர்கள். இவை இடப் புறத்திலிருப்போரின் (நரகவாசிகளின்) பாதைகள்" என்று கூறினார்.
எனக்கு வலப் பக்கத்தில் பல நேரான பாதைகள் இருந்தன. அப்போது அந்த மனிதர், "இதில் செல்லுங்கள்" என்று கூறினார். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஒரு மலை அருகே சென்றார். "இதில் ஏறுங்கள்" என்று கூறினார். அதில் நான் ஏறப்போனபோது மல்லாந்து விழலானேன். இவ்வாறு பல முறை செய்தேன்.
பிறகு அவர் என்னை ஒரு தூண் அருகே அழைத்துச் சென்றார். அதன் மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் கீழ்ப்பகுதி தரையில் இருந்தது. அத்தூணுக்கு மேலே வளையம் ஒன்று இருந்தது. அவர் என்னிடம், "இதற்கு மேலே ஏறுங்கள்" என்று கூறினார். நான், "இதில் எப்படி ஏறுவேன்? அதன் மேற்பகுதி வானத்தில் இருக்கிறதே!" என்று கேட்டேன். உடனே அவர் என்னைப் பிடித்து மேலே வீசினார். உடனே நான் அந்த வளையத்தைப் பிடித்துத் தொங்கினேன்.
பிறகு அவர் அந்தத் தூணை அடித்தார். அது கீழே விழுந்துவிட்டது. அப்போதும் நான் அந்த வளையத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தேன். விடிந்தவுடன் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அவர்களிடம் விவரித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களுக்கு இடப் பக்கத்தில் நீங்கள் கண்ட பாதைகள் இடப் புறக்காரர்களின் (நரகவாசிகளின்) பாதைகளாகும். உங்களுக்கு வலப் பக்கத்திலிருந்த பாதைகள் வலப் புறக்காரர்களின் (சொர்க்கவாசிகளின்) பாதைகளாகும். அந்த மலை உயிர்த்தியாகிகளின் இருப்பிடமாகும். அதை உங்களால் ஒருகாலும் அடைய முடியாது. அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும்.அந்தப் பிடி (வளையம்) இஸ்லாத்தின் பிடியாகும். நீங்கள் இறக்கும்வரை எப்போதும் அதைப் பலமாகப் பற்றிக்கொண்டே இருப்பீர்கள்" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 34 ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4897. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவி பாடிக்கொண்டிருந்தபோது, அங்கு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். ஹஸ்ஸானை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தார்கள்.
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், "நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களைவிடச் சிறந்தவர் (நபியவர்கள்) இருந்தபோது கவிபாடிக்கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு, என்னை நோக்கித் திரும்பி, "அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு "ரூஹுல் குதுஸ்" (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல்) மூலம் வலிமையூட்டுவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "ஆம்; இறைவா (நீயே சாட்சி)!" என்று பதிலளித்தேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் ஓர் அவையில் இருந்தார்கள். அதில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், "அபூ ஹுரைரா அவர்களே! அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று வினவியதாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4898. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், "அபூ ஹுரைரா அவர்களே! அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: நபி (ஸல்) அவர்கள், "ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக எதிரிகளுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக! இறைவா! "ரூஹுல் குதுஸ்" (எனும் தூய ஆத்மா ஜிப்ரீல்) மூலம் இவருக்கு வலிமையூட்டுவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டு சாட்சியம் சொல்ல அழைத்தார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம் (செவியுற்றேன்)" என்று (சாட்சியம்) கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4899. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பனூ குறைழா போரின்போது, கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், "எதிரிகளுக்கு எதிராக வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்" என்று கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4900. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார் அஸ்மாவின் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களுக்கெதிராக (அவதூறு சம்பவத்தில்) அதிகமாகப் பேசியவர்களில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களும் ஒருவராயிருந்தார். ஆகவே, அவரை நான் ஏசினேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அவரை (ஏசாதே) விட்டுவிடு. ஏனெனில்,அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக (எதிரிகளைத் தாக்கி) வசைக்கவி பாடுபவராக இருந்தார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4901. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷா (ரலி) அவர்களைப்) பாராட்டிக்கொண்டுமிருந்தார்கள்.
"நீங்கள் பத்தினி;
அறிவாளி;
சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.
(அவதூறு பேசுவதன்மூலம்)
பேதைப் பெண்களின்
மாமிசங்களைப் புசித்துவிடாமல்
பட்டினியோடு காலையில் எழுபவர்"
என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து) கவிதை பாடினார்கள்.
அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், "ஆனாலும், நீங்கள் அப்படியல்ல. (என்னைப் பற்றி அவதூறு பேசியவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்)" என்று கூறினார்கள்.
அப்போது நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "இவரைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தனது வேதத்தில்) "அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்குக் கடினமான வேதனையுண்டு" (24:11)எனக் கூறுகின்றானே?" என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "கண் பார்வையை இழப்பதைவிட கொடிய வேதனை ஏது?" என்று கூறிவிட்டு, "அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக (எதிரிகளைத் தாக்கி) பதில் கவிபாடுபவராக, அல்லது வசைக்கவி பாடுபவராக இருந்தார்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (கவிதையால்) பதிலடி கொடுக்கக் கூடியவராக இருந்தார்"என்று இடம்பெற்றுள்ளது. "நீங்கள் பத்தினி; அறிவாளி..." என்று தொடங்கும் கவிதை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4902. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யானுக்கெதிராக (அவருடைய வசைக்கவிகளுக்குப் பதிலடி கொடுக்க) எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அவரோடு இணைந்துள்ள) என்னுடைய வமிசாவளியை அவரிடமிருந்து எப்படி (பிரித்துப் பாடுவீர்கள்)?" என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், "தங்களை மேன்மைப்படுத்தியுள்ள (இறை)வன் மீதாணையாக! (அவர்களைப் பற்றி நான் எதிர்க் கவிகூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று உங்களை உருவி எடுத்துவிடுவேன்" என்று கூறினார்கள்.
"ஹாஷிம் கிளையின்
மக்ஸூம் குலமகளின் மக்களுக்கே
மேன்மையின் சிகரம் உரியது.
ஆனால்,
(அபூசுஃப்யானே!) உமது தந்தை,
(அப்து மனாஃபின்)
அடிமையாவார்"
என்பதே (இயைபுத் தொடையில் அமைந்த) அவரது அந்தக் கவிதையாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (குறைஷி) இணைவைப்பாளர்களைத் தாக்கி (எதிர்க் கவி) பாட அனுமதி கேட்டார்கள்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது. "அபூசுஃப்யானுக்கெதிராக" எனும் குறிப்பு இல்லை. அதில் ("குழைத்த மாவு" என்பதைக் குறிக்க "அல்கமீர்" என்பதற்குப் பகரமாக) "அல்அஜீன்" எனும் சொல் காணப்படுகிறது.
அத்தியாயம் : 44
4903. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹுதைபியா பயணத்தின்போது) "குறைஷியருக்கெதிராக வசைக்கவி பாடுங்கள். ஏனெனில், அது ஈட்டியைவிட பலமாக அவர்களைத் தாக்கக்கூடியதாகும்" என்று கூறினார்கள். "அவர்களுக்கெதிராக வசைக்கவி பாடுங்கள்" என்று அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களுக்குக் கூறியனுப்பினார்கள். அவ்வாறே, அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் குறைஷியருக்கெதிராக வசைக்கவி பாடினார்கள். ஆனால், அது நபியவர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. எனவே, கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள்.
பிறகு ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் வந்தபோது, "தனது வாலை(ச் சுழற்றி) அடிக்கும் இந்தச் சிங்கத்திடம் ஆளனுப்ப இப்போதுதான் உங்களுக்கு நேரம் வந்திருக்கிறது" என்று கூறிவிட்டுத் தமது நாவை வெளியே நீட்டி அதைச் சுழற்றத் தொடங்கினார்கள். (நபி (ஸல்) அவர்களை நோக்கி) "தங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீதாணையாக! தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களை (அவர்களது குலப் பெருமையை)க் கிழித்தெறிவேன்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவசரப்படாதீர். அபூபக்ர், குறைஷியரின் வமிசாவளி குறித்து நன்கறிந்தவர். குறைஷியரோடு எனது வமிசமும் இணைந்துள்ளது. அபூபக்ர் உம்மிடம் எனது வமிசாவளியைத் தனியாகப் பிரித்தறிவிப்பார்" என்று கூறினார்கள்.
ஆகவே, ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (குறைஷி வமிசாவளி பற்றி கேட்டு)விட்டுத் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ர் (ரலி) அவர்கள் உங்களது வமிசாவளியை எனக்குப் பிரித்தறிவித்தார்கள். தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவதைப் போன்று அவர்களிடமிருந்து உங்களை நான் உருவியெடுத்துவிடுவேன்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் சார்பாகவும் அவன் தூதர் சார்பாகவும் பதிலடி கொடுக்கும்வரை "ரூஹுல் குதுஸ்" (எனும் தூய ஆத்மா ஜிப்ரீல்) உம்மோடு உறுதுணையாக இருந்துகொண்டிருப்பார்" என்று கூறியதை நான் கேட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், "குறைஷியருக்கெதிராக ஹஸ்ஸான் வசைக்கவி பாடினார். நம்மையும் திருப்திப்படுத்தினார். தாமும் திருப்தி கொண்டார்" என்று கூறினார்கள்.
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (ஹுதைபியா வில்) பாடிய கவி வருமாறு:
நீ, முஹம்மத் (ஸல்) அவர்களை
இகழ்ந்து வசைக்கவி பாடுகிறாய்.
நான் அவர் சார்பாக
எதிர்க்கவி பாடுகிறேன்.
அதற்காக அல்லாஹ்விடமே
நற்பலன் உண்டு (எனக்கு).
நீ
தயாள மனத்தவரும்
பயபக்தியாளருமான
இறைத்தூதர் முஹம்மதை இகழ்ந்து
வசைக்கவி பாடுகிறாய்!
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதே
அவர்தம் பண்பு.
என் தந்தையும்
என் தந்தையின் தந்தையும்
எந்தன் மானமரியாதையும்
உங்களிடமிருந்து
முஹம்மத் (ஸல்) அவர்களைக்
காக்கும் கேடயம்.
"கதா" மலைக்குன்றின்
இரு மருங்கிலிருந்தும்
புழுதி கிளப்பும்
குதிரைகளை நீங்கள் காணாவிட்டால்
என் மகள்
இறந்துபோகட்டும்!
(விறைப்பிலும் வலுவிலும்)
கடிவாளங்களுக்குப் போட்டி போடும்
அக்குதிரைகளின் முதுகுகளில்
(இரத்த) தாகம் கொண்ட
ஈட்டிகளே வீற்றிருக்கும்.
அக்குதிரைகள்
ஒன்றையொன்றை முந்திக்கொண்டு
உங்களை முன்னோக்கி
விரைந்தோடி வரும்.
எங்கள் மங்கையர்
தம் முக்காட்டுத் துணிகளால்
அவற்றுக்கு
முகம் துடைத்துவிடுவர்.
நாங்கள்
(மக்காவுக்குள் நுழையும்போது)
கண்டுகொள்ளாமல்
நீங்கள் விட்டுவிட்டால்
நாங்கள் உம்ரா வழிபாட்டை
நன்கே நிறைவேற்றுவோம்.
அதுவே
எங்களுக்கு வெற்றியாக மாறும்;
திரையும் விலகும்.
இல்லாவிட்டால்
அல்லாஹ், தான் நாடியவர்களை
கண்ணியப்படுத்தும் போர்த் தினத்துக்காக
நீங்கள் பொறுமையோடு காத்திருங்கள்.
"உண்மையை
ஒளிவு மறைவின்றிப் பேசும்
அடியார் ஒருவரை
நான் அனுப்பியுள்ளேன்"
என்று அல்லாஹ் சொன்னான்.
"நான் ஒரு படையைத்
தயாரித்துள்ளேன்;
அவர்களே அன்சாரிகள்;
எதிரிகளைச் சந்திப்பதே
அவர்தம் இலக்கு"
என்றும் அல்லாஹ் சொன்னான்.
நாங்கள்
அனுதினமும்
"மஅத்" (குறைஷி) குலத்தாரிடமிருந்து
வசை மொழியும்
போர் முனையும்
வசைக் கவியும்
சந்திப்பதுண்டு.
உங்களில்
அல்லாஹ்வின் தூதரை
இகழ்ந்து பாடுபவர் யார்?
அவரைப் புகழ்ந்து
அவருக்கு உதவுபவர் யார்?
அவரைப் பொறுத்தவரை
(இருவரும்) சமமே!
இறையின் தூதர் ஜிப்ரீல்
எம்மிடையே உள்ளார்.
அந்தத் தூய ஆத்மாவிற்கு
நிகராருமில்லை (இங்கு).
அத்தியாயம் : 44
பாடம் : 35 அபூஹுரைரா அத்தவ்சீ (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4904. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் இணைவைப்பாளராக இருந்த போது, இஸ்லாத்திற்கு (வருமாறு) அவருக்கு நான் அழைப்பு விடுத்துவந்தேன். ஒரு நாள் நான் அவருக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுத்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காதுபடக் கூறினார்.
உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் தாயாருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்துவந்தேன். அவர் மறுத்துவந்தார். இன்றைய தினமும் அவருக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவர் உங்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காதுபடக் கூறினார். ஆகவே, (இந்த) அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தவனாக நான் (வீட்டை நோக்கிப்) புறப்பட்டேன். நான் வீட்டு வாசலை அடைந்தபோது (உள்ளே) அது தாழிடப்பட்டிருந்தது. என் தாயார் என் காலடிச் சப்தத்தைக் கேட்டுவிட்டு, "அபூஹுரைரா அங்கேயே இரு" என்று கூறினார்.
அப்போது தண்ணீர் புழங்கும் சப்தம் எனக்குக் கேட்டது. என் தாயார் குளித்துவிட்டு, தமது சட்டையை அணிந்துகொண்டு, முக்காட்டுத் துணி அணியாமல் விரைந்து வந்து கதவைத் திறந்தார். பிறகு, "அபூஹுரைரா! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் உறுதி மொழிகிறேன்" என்று கூறினார்.
உடனே நான் மகிழ்ச்சியில் அழுது கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான். அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டிவிட்டான்" என்று சொன்னேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நல்ல வார்த்தைகளைச் சொன்னார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும் என் தாயார்மீதும் நேசம் ஏற்படவும் அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும், தாங்கள் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! உன்னுடைய இந்தச் சிறிய அடியார் (அபூஹுரைரா) மீதும் அவருடைய தாயார்மீதும் இறைநம்பிக்கையாளர்களான உன் அடியார்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறைநம்பிக்கையாளர்கள்மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னைப் பார்க்காவிட்டாலும் என்னைப் பற்றிக் கேள்விப்படும் எந்த ஓர் இறை நம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.
அத்தியாயம் : 44
4905. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அபூஹுரைரா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கின்றாரே!" என்று நீங்கள் (குறை) கூறுகிறீர்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு.
நான் ஓர் ஏழை மனிதன். நான் என் வயிறு நிரம்பினால் போதும் (பெரிய அளவில் பொருளாதாரம் எதுவும் தேவையில்லை) என்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடைகள் செய்துவந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வணிகம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகளோ தம் (வேளாண்) செல்வங்களைப் பராமரிப்பதில் கவனம் செலுத்திவந்தார்கள். (ஆனால், நானோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடையே இருந்துவந்தேன்.)
இந்நிலையில் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் தமது துணியை (மேல் துண்டை) விரித்து வைத்(திருந்து பிறகு அதைச் சுருட்டி நெஞ்சோடு அணைத்)துக் கொள்கிறாரோ அவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசி முடிக்கும்வரை நான் எனது துணியை விரித்(துப் பிடித்)தேன். பிறகு அதை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட எதையும் நான் மறந்ததில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அன்சாரிகள் (வேளாண்) செல்வங்களைப் பராமரிப்பதில் கவனம் செலுத்திவந்தார்கள்" என்பதோடு ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4906. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "அபூஹுரைரா(வின் நடவடிக்கை) உனக்கு வியப்பூட்டவில்லையா? (ஒரு நாள்) அவர் வந்து என் அறைக்கருகில் அமர்ந்து என் காதில் விழும் விதமாக நபிமொழிகளை அறிவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது நான் கூடுதல்தொழுகை (நஃபில்) தொழுதுகொண்டிருந்தேன். நான் தொழுது முடிப்பதற்குமுன் அவர் எழுந்து சென்றுவிட்டார். அவர் என்னிடம் சிக்கியிருந்தால், "நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஹதீஸ்களை அறிவித்துக்கொண்டிருப்பதைப் போன்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக (ஹதீஸ்களை) அறிவித்துக் கொண்டிருக்கவில்லை" என்று அவருக்கு மறுப்புத் தெரிவித்திருப்பேன்" என்று கூறினார்கள்.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அபூஹுரைரா அதிகமான நபிமொழிகளை அறிவிக்கிறாரே!" என்று மக்கள் (குறை) கூறுகிறார்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. "முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்தது? அபூஹுரைராவைப் போன்று (அதிகமான) நபிமொழிகளை அவர்கள் அறிவிப்பதில்லையே!" என்றும் கேட்கிறார்கள். அது குறித்து அவர்களுக்கு விளக்கப்போகிறேன்:
என் அன்சாரி சகோதரர்கள் தம் நிலபுலன்களில் (விவசாயத்தில்) கவனம் செலுத்தி வந்தார்கள். என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனம் செலுத்திவந்தார்கள். அதே நேரத்தில் நானோ, என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (பொருள் சேர்க்கும் பணியில் ஈடுபடாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். மக்கள் (வருவாய் தேடி) வெளியே சென்றுவிடும்போதும் நான் அல்லாஹ்வின் தூதருடனேயே இருப்பேன்; அவர்கள் (நபிமொழிகளை) மறந்துவிடும்போது நான் (அவற்றை) நினைவில் வைத்திருப்பேன்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் தமது ஆடையை விரித்து வைத்து, என்னுடைய இந்த உரையை வாங்கி, பிறகு தமது நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொள்கிறாரோ அவர் (என்னிடமிருந்து) கேட்ட எதையும் மறக்கமாட்டார்" என்று கூறினார்கள்.
உடனே நான் என் மீதிருந்த போர்வையை விரித்(துப் பிடித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை முடிக்கும்வரை அதை விரித்து வைத்திருந்துவிட்டு, பிறகு அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொண்டேன். அன்றைய தினத்திற்குப் பிறகு அவர்கள் எனக்கு அறிவித்த செய்திகள் எதையும் நான் மறந்ததேயில்லை.
அல்லாஹ் தனது வேதத்தில் அருளியுள்ள இரு வசனங்கள் மட்டும் இல்லாவிட்டால் நான் (நபிமொழிகளில்) எதையுமே ஒருபோதும் அறிவித்திருக்கமாட்டேன். (இவைதான் அந்தத் திரு வசனங்கள்:)
"நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்.
எனினும், பாவத்திலிருந்து மீண்டு, (தம்மைச்) சீர்திருத்தி, (தாம் மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிகவும் மன்னிப்பவனும் பெருங்கருணையாளனும் ஆவேன்". (2:159,160)
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூஹுரைரா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கின்றார் என்று நீங்கள் (குறை) கூறுகிறீர்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
பாடம் : 36 பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களின் சிறப்புகளும் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களின் நிகழ்ச்சியும்.
4907. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) ஆகியோரையும், நீங்கள் "ரவ்ளத்து காக்" எனும் இடத்திற்குச் செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகப் பல்லக்கில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியனுப்பினார்கள்.
அவ்வாறே நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்து சென்றன. (அந்த இடத்தை அடைந்தோம்.) அங்கு அந்தப் பெண் இருந்தாள். நாங்கள் அவளிடம், "அந்தக் கடிதத்தை வெளியே எடு" என்று சொன்னோம். அவள் "என்னிடம் கடிதம் எதுவுமில்லை" என்று சொன்னாள். நாங்கள், "நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு; இல்லாவிட்டால் (சோதனைக்காக) உன் ஆடையை நீ அவிழ்க்க வேண்டியதிருக்கும்" என்று கூறினோம்.
உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையிலிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அந்தக் கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தோம்.
அதில், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள், மக்காவாசிகளான இணை வைப்பாளர்களில் சிலருக்கு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (போர்) விவகாரம் குறித்து சிலவற்றை (முன் கூட்டியே) தெரிவித்திருந்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹாத்திபே! என்ன இது?" என்று கேட்டார்கள்.
ஹாத்திப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரைச் சார்ந்து வாழ்பவனாகவே இருந்து வந்தேன். (அதாவது குறைஷியரின் நட்புக் குலத்தாராகவே இருந்துவந்தார்; குறைஷிக் குலத்தில் ஒருவராக இருக்கவில்லை என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) தங்களுடன் இருந்துவந்த முஹாஜிர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர் பலர் இருந்தனர்.
எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் எவரும் இல்லாததால் (இணை வைப்பாளர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து, அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள) என் (பலவீனமான) உறவினரைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால்தான் இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தகவல்களைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்கமான இஸ்லாத்தைவிட்டு வேறு மதத்தை ஏற்பதற்காகவோ,இறைமறுப்பாலோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இப்படிச் செய்யவில்லை" என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் சொல்வது உண்மையே" என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் பத்ருப்போரில் கலந்துகொண்டிருக்கிறார். உமக்கென்ன தெரியும்? பத்ருப்போரில் கலந்துகொண்டவர்களை நோக்கி, "நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களை மன்னித்துவிட்டேன்" என்று அல்லாஹ் கூறிவிட்டிருக்கலாம்" என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ், "இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரைப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்" (60:1) எனும் வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்), ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் இந்த வசனம் அருளப்பெற்றது பற்றிய குறிப்பு இல்லை. இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக்காட்டியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைவீரர்களான என்னையும் அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்களையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் "நீங்கள் "ரவ்ளத்து காக்" எனும் இடம் வரை செல்லுங்கள். அங்கு இணைவைப்பாளர்களில் ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (மக்கா) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று இருக்கும்" என்று கூறியனுப்பினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4908. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார்; "அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ தவறாகச் சொல்கிறாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப்போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கிறார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 37 "பைஅத்துர் ரிள்வான்" ஒப்பந்தத்தில் கலந்துகொண்டு, அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் அளித்தவர்களின் சிறப்புகள்.
4909. (ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் துணைவியார்) உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப் பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழையமாட்டார்கள்" என்று கூறினார்கள். அதற்கு ஹஃப்ஸா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அப்படியல்ல" என்று கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஃப்ஸா (ரலி) அவர்களைக் கண்டித்தார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது" (19:71) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், "பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்" (19:72) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 38 அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த அபூமூசா (ரலி), அபூஆமிர் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4910. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் "ஜிஅரானா" எனுமிடத்தில் தங்கியிருந்தபோது அவர்களுடன் நானும் இருந்தேன்; அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசியொருவர் வந்து, "முஹம்மதே! நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?"என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், "நற்செய்தியைப் பெற்றுக்கொள்" என்று சொன்னார்கள். அதற்கு அவர் "நற்செய்தியைப் பெற்றுக்கொள் என்று என்னிடம் பலமுறை சொல்லிவிட்டீர்களே!" என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி கோபத்திலுள்ள ஒரு மனிதரைப் போன்று திரும்பி, "இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
நாங்கள் இருவரும் "நாங்கள் ஏற்றுக் கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், "தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் கைகளையும் முகத்தையும் கழுவி அந்தப் பாத்திரத்திற்குள் உமிழ்ந்தார்கள். பிறகு "நீங்கள் இருவரும் இதில் சிறிது அருந்திவிட்டு, உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்; நற்செய்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். நாங்கள் அந்தப் பாத்திரத்தை எடுத்து நபியவர்கள் கூறியதைப் போன்றே செய்தோம்.
அப்போது இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, "உங்கள் அன்னைக்காகவும் (அதாவது எனக்காகவும்) அதிலிருந்து சிறிது தண்ணீரை மீதி வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அதில் சிறிது தண்ணீரை மீதி வைத்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4911. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போர் முடிந்த பின்னர் அபூஆமிர் (ரலி) அவர்களின் தலைமையில் "அவ்தாஸ்" பள்ளத்தாக்கிற்கு ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். அப்போது அபூஆமிர் (ரலி) அவர்கள் (கவிஞன்) "துரைத் பின் அஸ்ஸிம்மா"வைச் சந்தித்தார்கள்.
(அவர்கள் இருவருக்குமிடையே நடந்த சண்டையில்) "துரைத்" கொல்லப்பட்டான்; அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூஆமிர் அவர்களுடன் என்னையும் நபி (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூஆமிர் அவர்களின் முழங்கால்மீது அம்பு (வந்து) பாய்ந்தது. "பனூ ஜுஷம்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனே அந்த அம்பை எய்து, அதை அவர்களது முழங்காலில் நிறுத்தினான்.
உடனே நான் அபூஆமிர் அவர்களுக்கு அருகில் சென்று, "என் தந்தையின் சகோதரரே! உங்கள்மீது அம்பெய்தவன் யார்?" என்று கேட்டேன். "இதோ அங்கே தெரிகிறானே அவன்தான் என்மீது அம்பெய்து என்னைக் கொன்றவன்"என்று எனக்குச் சைகை செய்து காட்டினார்கள். நான் அவனைக் குறி வைத்து நேராக அவனை நோக்கிச் சென்று அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். "புறமுதுகிட்டு ஓடுகிறாயே உனக்கு வெட்கமில்லையா? நீ ஓர் அரபியன் இல்லையா? நீ நிற்கமாட்டாயா?" என்று அவனிடம் கேட்டுக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தேன். உடனே அவன் (ஓடு வதை) நிறுத்திக்கொண்டான்.
பிறகு நானும் அவனும் நேருக்குநேர் சந்தித்து, வாளால் மாறி மாறித் தாக்கிக்கொண்டோம். அவனை நான் வாளால் வெட்டிக் கொன்றேன். பிறகு அபூஆமிர் அவர்களிடம் திரும்பி வந்து, "உங்களைக் கொ(ல்ல முய)ன்றவனை அல்லாஹ் கொன்றொழித்துவிட்டான்" என்று சொன்னேன். பிறகு "(எனது முழங்காலில் தைத்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கி எடுங்கள்" என்று அபூஆமிர் (ரலி) அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது.
அப்போது அபூஆமிர் அவர்கள், "என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு என் முகமன் (சலாம்) கூறி, அபூஆமிர் தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கூறியதாகச் சொல்வீராக!"என்றார்கள்.
பிறகு அபூஆமிர் (ரலி) அவர்கள் என்னை மக்களுக்குத் தளபதியாக நியமித்துவிட்டுச் சிறிது நேரத்திற்குப்பின் இறந்துவிட்டார்கள்.
நான் (அங்கிருந்து) திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டில் (பேரீச்ச நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. எனினும், கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும் விலாப் புறங்களிலும் அடையாளம் பதிந்திருந்தது.
அப்போது அவர்களிடம் எங்கள் (படையினர் பற்றிய) செய்தியையும் அபூஆமிர் (ரலி) அவர்களது செய்தியையும் கூறி,தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி அபூஆமிர் வேண்டியது பற்றியும் கூறினேன்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு தம் அக்குள்களின் வெண்மையை நான் பார்க்குமளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, "இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் "படைப்பினங்களில்" அல்லது "மனிதர்களில்" பலரையும்விட (தகுதியில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே நான், "எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "இறைவா! "(அபூமூசா) அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியமான இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் செய்த) இரு பிரார்த்தனைகளில் முந்தியது அபூஆமிர் (ரலி) அவர்களுக்கும் இரண்டாவது (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 39 அஷ்அரீ குலத்தாரின் சிறப்புகள்.
4912. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அஷ்அரீ" குலத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் (தம் பணிகளை முடித்துக்கொண்டு) இரவில் (இருப்பிடங்களில்) நுழையும்போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரங்களில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன்.
அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் "குதிரைப் படையினரை" அல்லது "எதிரிகளை"ச் சந்தித்தால்,அவர்களைப் பார்த்து (வெருண்டோடாமல்) "என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றனர்" என்று கூறுவார்.
அத்தியாயம் : 44
4913. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறப்போரின்போது "அஷ்அரீ" குலத்தாரின் பயண உணவு (இருப்புக்) குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தம் மனைவி, மக்களின் உணவு (இருப்புக்) குறைந்துபோய் விட்டால், தம்மிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு ஒரே பாத்திரத்தின் மூலம் சமமாக அதைத் தமக்கிடையே பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 40 அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4914. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் அபூசுஃப்யான் (ரலி) அவர்களை (அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகும்) ஏறெடுத்துப் பார்க்காமலும் அவரைத் தம் அவைகளில் அனுமதிக்காமலும் இருந்து வந்தனர்.
(இந்நிலையில்,) அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மூன்று கோரிக்கைகளை எனக்கு (நிறைவேற்றி)த் தாருங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆ(கட்டு)ம்" என்றார்கள். அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், "என்னிடம் அரபியரிலேயே மிகவும் அழகான இலட்சணமான பெண் இருக்கிறார். அவர்தான் (என் மகள்) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான். அவரைத் தங்களுக்கு நான் மணமுடித்துத் தருகிறேன்" என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆ(கட்டு)ம்" என்றார்கள்.
அடுத்து "தாங்கள் (என் புதல்வர்) "முஆவியா"வை தங்களுடைய எழுத்தராக ஆக்கிக் கொள்ளுங்கள்" என்றார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், "ஆ(கட்டு)ம்" என்றார்கள். அடுத்து "படைப் பிரிவொன்றுக்கு என்னைத் தலைவராக்குங்கள். முஸ்லிம்களுடன் நான் போரிட்டுக் கொண்டிருந்ததைப் போன்று இறைமறுப்பாளர்களுடனும் நான் போரிட வேண்டும் (அவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு என்மீதுள்ள வெறுப்பை நான் அகற்றிக்கொள்வேன்)" என்றார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "ஆ(கட்டு)ம்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஸுமைல் சிமாக் பின் அல்வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் இவற்றைக் கோராமலிருந்தால், அவற்றை நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கொடுத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் எதைக் கேட்டாலும் "ஆ(கட்டு)ம்" என்றே கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 41 ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) மற்றும் அவர்களுடன் (அபிசீனியாவிலிருந்து) கப்பலில் வந்தோர் ஆகியோரின் சிறப்புகள்.
4915. அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அவர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்ம் ஆவார். நான்தான் அவர்களில் இளையவன் ஆவேன்" என்று கூறிவிட்டு, "என் (அஷ்அரீ) குலத்தாரில் "ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன்" அல்லது "ஐம்பத்திரண்டு பேர்களுடன்" அல்லது "ஐம்பத்து மூன்று பேர்களுடன்" சேர்ந்து நாங்கள் சென்றோம்" என்று (அபூமூசா (ரலி) அவர்கள்) கூறினார்கள். பிறகு பின்வருமாறும் குறிப்பிட்டார்கள்:
நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனாவை நோக்கி)ப் பயணம் செய்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கிவிட்டது. அங்கு ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் நஜாஷீக்கு அருகில் சந்திக்க நேர்ந்தது. (ஏற்கெனவே அவர்கள் மக்காவிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்தனர்.)
அப்போது ஜஅஃபர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அனுப்பி (இங்கு) தங்கியிருக்கும்படி உத்தரவிட்டார்கள். நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்கிவிடுங்கள்" என்று கூறினார்கள்.
ஆகவே, நாங்களும் அவர்களுடன் (அபிசீனியாவில்) தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்துசேர்ந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் (கைபர் போரில் கிடைத்த செல்வங்களில்) "எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள்". அல்லது "எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள்". கைபர் போரில் கலந்து கொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை; தம்முடன் அதில் கலந்துகொண்டவர்களுக்கு மட்டுமே பங்கிட்டுத் தந்தார்கள்.
ஆனால், ஜஅஃபர் (ரலி) அவர்களுடனும் அவர்களுடைய சகாக்களுடனும் எங்களது கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் (முஸ்லிம்களிடம் ஆலோசனை கலந்து ஒப்புதல் பெற்றபின்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
அப்போது மக்களில் சிலர் கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, "உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்" என்று கூறலானார்கள்.
- எங்களுடன் (மதீனாவுக்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார்.
ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு அருகில் அஸ்மா (ரலி) அவர்கள் இருந்தபோது, அங்கு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அஸ்மாவைக் கண்டபோது "இவர்யார்?" என்று (தம் மகள்) ஹஃப்ஸாவிடம் கேட்டார்கள். "இவர் அஸ்மா பின்த் உமைஸ்" என்று ஹஃப்ஸா பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இவர் அபிசீனிய (ஹிஜ்ரத்கார)ரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?" என்று கேட்டார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். ஆகவே, உங்களைவிட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் (நெருக்கமானவர்கள்)" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, ஏதோ சொல்லிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமரே! நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (நீங்கள் கூறியதைப் போன்று) இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களுக்கு அருகிலேயே) இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவருக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவுரீதியாக அவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்றுவந்தீர்கள்.)
நாங்களோ உறவிலும் மார்க்கத்திலும் வெகு தொலைவிலிருக்கும் அபிசீனிய "நாட்டில்" அல்லது "அந்தப் பகுதியில்"இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இவ்வாறு செய்தோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்காமல் நான் எதையும் உண்ணவோ பருகவோமாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம்.
நான் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி அவர்களிடம் (நியாயம்) கேட்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்லமாட்டேன். திரித்துப் பேசவு மாட்டேன்; நீங்கள் சொன்னதைவிடக் கூட்டிச் சொல்லவுமாட்டேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உமர் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர், உங்களை விட எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு)தான் உண்டு. (அபிசீனியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவுக்கு ஒன்றும், மதீனாவுக்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு" என்று கூறினார்கள்.
அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூமூசாவும் அவர்களுடைய கப்பல் தோழர்களும் கூட்டம் கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இந்தப் புகழுரையைவிட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரியதாகவோ அவர்களின் மனதில் பெருமிதத்துக்குரியதாகவோ இருக்கவில்லை.
என்னிடம் அபூமூசா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 42 சல்மான் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4916. ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சல்மான், ஸுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை எற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்தபோது, அக்குழுவினர் "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே!" என்று கூறினர்.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், "குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள்!" என்று (கடிந்து) கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தபோது, "அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக் கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்திவிட்டீர்கள்" என்று சொன்னார்கள்.
ஆகவே, அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, "என் சகோதரர்களே! நான் உங்களைக் கோப்படுத்திவிட்டேனா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இல்லை, எங்கள் அருமைச் சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 43 அன்சாரிகளின் சிறப்புகள்.
4917. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அப்போது உங்களில் இரு குழுவினர் துணிவிழந்து (திரும்பி)விட எண்ணினர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்" (3:122) எனும் இறை வசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே அருளப்பெற்றது. "இந்த வசனம் அருளப்பெறாமலிருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்று நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்" என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறானே (பிறகு எப்படி அவ்வாறு விரும்ப முடியும்?).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4918. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளுக்கும் அன்சாரிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4919. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்சாரிகளுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அன்சாரிகளின் சந்ததிகளுக்கும் அன்சாரிகளால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கும் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இதில் நான் ஐயம் கொள்ளவில்லை.
அத்தியாயம் : 44
4920. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திருமண விருந்தொன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரிப்) பெண்களையும் சிறுவர்களையும் நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று அவர்களுக்கு நேராக நின்று, "இறைவா! (நீயே சாட்சி)" என்று கூறிவிட்டு, "மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். இறைவா! (நீயே சாட்சி) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்" என்று அன்சாரிகளைப் பற்றிக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4921. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அன்சாரிப் பெண்களில் ஒருவர் வந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்" என்று மூன்று முறை சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள். (அன்சாரிகள்) குறைந்துவிடுவார்கள். ஆகவே, அன்சாரிகளில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 44 அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களின் சிறப்பு.
4923. அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு" என்று சொன்னார்கள்.
அப்போது (பனூ சாஇதா குடும்பத்தைச் சேர்ந்தவரான) சஅத் (பின் உபாதா (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைவிட (மற்ற மூன்று குலங்களைச்) சிறப்பித்துக் கூறியதாகவே நான் அறிகிறேன்" என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத இன்னும்) பலரையும்விட உங்களைச் சிறப்பித்துக் கூறி விட்டார்களே!" என்று சொல்லப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஉசைத் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
ஆனால், ஹதீஸி(ன் இறுதியி)ல் இடம்பெற்றுள்ள சஅத் பின் உபாதா (ரலி) அவர்களின் கூற்று இங்கு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4924. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ அப்தில் அஷ்ஹல் அந்நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமும் பனூ சாஇதா குடும்பமும் ஆகும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் முஹம்மத் பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அபூஉசைத் (ரலி) அவர்கள், (மதீனா ஆட்சியரான) வலீத் பின் உத்பாவுக்கு அருகில் உரையாற்றியபோது கூறினார்கள். மேலும், அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் ஒன்றுக்கு நான் முதலிடம் தருவதாக இருந்தால், (பனூ சாஇதா எனும்) என் குடும்பத்தாருக்கே முதலிடம் அளித்திருப்பேன்" என்றும் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4925. அபூஉசைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது "பனுந் நஜ்ஜார்" குடும்பமாகும். பிறகு "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பமாகும். பிறகு "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பமாகும். பிறகு "பனூ சாஇதா" குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஉசைத் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது இட்டுக்கட்டுவேனா? நான் பொய்யுரைப்பவனாயிருந்தால், என் பனூசாஇதா குடும்பத்தாரையே முதலில் கூறியிருப்பேன்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிய செய்தி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது,அவர்கள் மன வேதனைப்பட்டார்கள். மேலும், "(பனூ சாஇதா குலத்தாராகிய) நாங்கள் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டோம். என் கழுதையில் சேணம் பூட்டுங்கள்; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லப்போகிறேன்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் மகன் சஹ்ல் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க நீங்கள் செல்லப் போகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர்தான் (இதைப் பற்றி) நன்கு அறிந்தவர்கள். (சிறப்பித்துக் கூறப்பட்ட) நான்கு குடும்பங்களில் நான்காவது குடும்பமாக நீங்கள் இருப்பது போதுமாகவில்லையா?" என்று கேட்டார்கள்.
உடனே சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். மேலும், தமது கழுதையை அவிழ்த்துவிடும்படியும் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அது அவிழ்த்துவிடப்பட்டது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஉசைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அன்சாரிகளில் சிறந்தவர்கள் அல்லது அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, கிளைக் குடும்பங்கள் தொடர்பான மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் பற்றிய நிகழ்வு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4926. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்கள் திரளாகக் குழுமியிருந்த ஓர் அவையில், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள்) "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பத்தார் ஆவர்" என்றார்கள். மக்கள், "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிறகு "பனுந் நஜ்ஜார்" குடும்பத்தார்" என்றார்கள். மக்கள், "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, "பிறகு "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பத்தார்" என்றார்கள்.
"பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டதற்கு, "பிறகு "பனூ சாஇதா" குடும்பத்தார்" என்று விடையளித்தார்கள். "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று மககள் கேட்க, "பிறகு அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் குலத்தாரின் பெயரை நான்காவதாகக் கூறியதைக் கேட்டு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கோபத்துடன் எழுந்து, "நான்கு குடும்பங்களில் நாங்கள் தான் கடைசியா?" என்று கேட்டபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது பற்றிப்) பேச முனைந்தார்கள்.
அப்போது அவர்களுடைய குலத்தைச் சேர்ந்த சிலர், "அமருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் குடும்பத்தை நான்கு குடும்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதே உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட குடும்பத்தாரின் எண்ணிக்கையே, பெயர் குறிப்பிட்ட குடும்பங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்" என்று கூறினர்.
ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசாமல் விலகிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 45 அன்சாரிகளுடன் நல்லுறவு பாராட்டல்.
4927. அனஸ் பின் மாலிக் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அவர்கள் எனக்குப் பணிவிடைகள் செய்துவந்தார்கள். நான் "(எனக்கு) நீங்கள் (பணிவிடைகள்) செய்ய வேண்டாம்" என்று அவர்களிடம் கூறினேன்.
அதற்கு ஜரீர் (ரலி) அவர்கள், "அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்த (உயர்ந்த நன்மை) ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். (அன்றே) "அன்சாரிகளில் எவருடன் நான் சென்றாலும் அவருக்கு நான் பணிவிடைகள் செய்தே தீருவேன்" என்று சத்தியம் செய்துவிட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்), இப்னு பஷ்ஷார் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், "ஜரீர் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைவிடப் பெரியவராக இருந்தார்கள்" என்றும், இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அனஸ் (ரலி) அவர்களைவிட வயதில் மூத்தவராக இருந்தார்கள்" என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 46 நபி (ஸல்) அவர்கள் "ஃகிஃபார்" மற்றும் "அஸ்லம்" குலத்தாருக்காகச் செய்த பிரார்த்தனை.
4928. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக. அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4929. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) குலத்தாரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக! ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள் என்று கூறுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4930. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக. ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவ மன்னிப்பு அருள்வானாக" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவும் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4931. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அஸ்லம் குலத்தாருக்கு அல்லாஹ் அமைதியை வழங்கிவிட்டான். ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருளிவிட்டான். இவ்வாறு நான் சொல்லவில்லை. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்தான் சொன்னான்" என்றார்கள்.
அத்தியாயம் : 44
4932. குஃபாஃப் பின் ஈமா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு தொழுகையில், "இறைவா! பனூ லிஹ்யான், ரிஅல், தக்வான் ஆகியோரைச் சபிப்பாயாக! உஸைய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டனர். ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குவானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச் செய்வானாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4933. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குவானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக! உஸைய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டனர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸாலிஹ் மற்றும் உசாமா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி இவ்வாறு கூறினார்கள்" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 47 ஃகிஃபார், அஸ்லம், ஜுஹைனா, அஷ்ஜஉ, முஸைனா, தமீம், தவ்ஸ், தய்யி ஆகிய குலத்தாரின் சிறப்புகள்.
4934. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளும், முஸைனா குலத்தாரும், ஜுஹைனா குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும், பனூ அப்தில்லாஹ் குலத்தில் இருப்போருமே (இஸ்லாத்தை, அதன் ஆரம்பக் கட்டத்திலேயே தழுவிய காரணத்தால்) என் சிறப்பு உதவியாளர்கள் ஆவர்; மற்றவர்கள் அல்லர். அவர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பொறுப்பாளர்கள் ஆவர். - இதை அபூஅய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷியரும், அன்சாரிகளும், முஸைனா குலத்தாரும், ஜுஹைனா குலத்தாரும், அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும் என் சிறப்பு உதவியாளர்கள் ஆவர். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அன்றி பொறுப்பாளர்கள் வேறெவரும் இலர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் சில குலத்தார் குறித்து அறிவிப்பாளர் சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகையில் "நான் அறிந்தவரையில் இவ்வாறு தான்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4936. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, "ஜுஹைனா குலத்தில் இருப்போர்" அல்லது ஜுஹைனா ஆகிய குலங்கள், பனூ தமீம்,பனூ ஆமிர் மற்றும் ஒன்றுக்கு ஒன்று நட்புறவு கொண்டிருந்த அசத் மற்றும் ஃகதஃபான் குலங்கள் ஆகியவற்றைவிடச் சிறந்தவை ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஃகிஃபார், அஸ்லம், "முஸைனா", அல்லது "முஸைனா குலத்தில் இருப்போர்", "ஜுஹைனா குலத்தில் இருப்போர்" அல்லது "ஜுஹைனா" ஆகிய குலங்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், தய்யி, ஃகதஃபான் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4938. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், "முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சில குடும்பங்களும்"அல்லது "ஜுஹைனா மற்றும் முஸைனா குலத்தாரில் சில குடும்பங்களும்" மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், ஃகதஃபான், ஹவாஸின், தமீம் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவை ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4939. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ஹஜ் பயணிகளின் பொருட்களைக் களவாடிய அஸ்லம், ஃகிஃபார், முஸைனா ஆகிய குலங்கள்தான் தங்களிடம் (வந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதாக) வாக்குறுதி அளித்துள்ளனர்" என்று கூறினார்கள். (ஜுஹைனா குலத்தையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்).
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அஸ்லம், ஃகிஃபார், முஸைனா (ஜுஹைனாவையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்) ஆகிய குலத்தார், பனூ தமீம், பனூ ஆமிர், அசத், ஃகதஃபான் ஆகிய குலத்தாரைவிடச் சிறந்தவர்களாக இருந்தாலுமா அவர்கள் நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டனர், சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அக்ரஉ (ரலி) அவர்கள் "ஆம்" (இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்) என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏகயிறை)வன் மீதாணையாக! அவர்கள் இவர்களைவிட மிகவும் சிறந்தவர்களே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஜுஹைனா குலத்தாரும்" என்று உறுதிபடவே இடம்பெற்றுள்ளது. "ஜுஹைனா குலத்தாரையும் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்" என்று (ஐயத்துடன்) இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ ஆமிர் மற்றும் நட்புறவுக் குலங்களான பனூ அசத், ஃகதஃபான் ஆகியவற்றைவிடச் சிறந்தவர்களாவர்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4941. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஜுஹைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள், பனூ தமீம், பனூ அப்தில்லாஹ் பின் ஃகதஃபான், ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக இருந்தாலுமா, கூறுங்கள்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில் கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "அப்போது (பனூ தமீம் உள்ளிட்ட) அவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்; இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்,அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "(ஆம்;) அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (குலங்கள் வரிசையில் சற்று முன்பின்னாக) "ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார்..." என்று ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 44
4942. அதீ பின் ஹாத்திம் அத்தாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தையும் அவர்களுடைய தோழர்களின் முகங்களையும் (மகிழ்ச்சியால்) வெண்மையாக்கிய முதலாவது தர்மப் பொருட்கள், தய்யீ குலத்தார் அளித்ததாகும். அதை நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4943. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
துஃபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) தவ்ஸ் குலத்தார் (இஸ்லாத்தை ஏற்க) மறுத்து நிராகரித்துவிட்டார்கள். அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர்.
அப்போது "தவ்ஸ் குலத்தார் அழிந்தனர்" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "இறைவா! தவ்ஸ் குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்து சேர்ப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4944. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அ(க் குலத்த)வர்களை எப்போதும் நேசிக்கலானேன்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் சமுதாயத்தாரிலேயே மிகக் கடுமையாக தஜ்ஜாலை எதிர்ப்பார்கள்" என்று சொன்னார்கள்.
(ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தர்மப் பொருள்கள் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை எங்கள் இனத்தாரின் தர்மப் பொருட்கள்" என்று கூறினார்கள்.
(ஒரு முறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நீ இப்பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் எப்போதும் அவர்களை நேசிக்கலானேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரின் மூன்று பண்புகளைக் கூறக் கேட்டதன் பின்னர் அவர்களை எப்போதும் நான் நேசித்துக் கொண்டிருக்கிறேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அதில் "மக்களிலேயே போர்க்களங்களில் அறப்போர் புரிவதில் அவர்கள் மிகவும் கடுமையானவர்கள்" என்று (பொதுவாகவே) இடம்பெற்றுள்ளது. தஜ்ஜாலைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 48 மக்களிலேயே சிறந்தவர்கள்.
4945. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களை நீங்கள் மூலகங்களாகக் காண்பீர்கள். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்கள்தான்; அவர்கள் மார்க்க விளக்கத்தைப் பெற்றுக்கொண்டால்! (இஸ்லாம் எனும்) இந்த விஷயத்தில் நுழைவதற்குமுன் அதைக் கடுமையாக வெறுத்தவர்களே. பின்னர் அதில் மக்களிலேயே சிறந்தவர்களாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாகவே இரட்டை முகத்தானைக் காண்பீர்கள். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது இன்னொரு முகத்துடனும் செல்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "மக்களை நீங்கள் மூலகங்களாகக் காண்பீர்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அபூஸுர்ஆ மற்றும் அஃரஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், "இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்புக் காட்டக்கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 44
பாடம் : 49 குறைஷிப் பெண்களின் சிறப்புகள்.
4946. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள் "குறைஷிப் பெண்கள் ஆவர்" அல்லது "நல்ல குறைஷிப் பெண்கள் ஆவர்". அவர்கள் அநாதைக் குழந்தைகள்மீது அதிகமான பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவ்விரு அறிவிப்புகளிலும் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது. ஆயினும், தாவூஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்" என்று (பொதுவாகவே) இடம்பெற்றுள்ளது. "அநாதைக் குழந்தைகள்" என்ற குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44
4947. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷிப் பெண்கள்தான் ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள். (தம்) குழந்தைகள்மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்து விட்டுத் தொடர்ந்து, "இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) அவர்கள் ஒட்டகம் எதிலும் பயணம் செய்ததேயில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் "உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)" அவர்களைத் தமக்காகப் பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஹானீ அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வயதாகி விட்டது; எனக்குக் குழந்தை குட்டிகளும் உள்ளனர்" என்று கூறி (மறுத்து) விட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள், (மேற்கண்டவாறு) "ஒட்டகத்தில் பயணம் செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள்..." என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஆயினும் இவற்றில் "(தம்) குழந்தைகள் மீது அதிகப் பாசமுடையவர்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4948. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகத்தில் பயணம் செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் நல்ல குறைஷிப் பெண்களேயாவர். அவர்கள் (தம்) குழந்தைகள்மீது அதிகப் பாசமுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அப்படியே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 50 நபி (ஸல்) அவர்கள் தம் (முஹாஜிர் - அன்சாரித்) தோழர்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தியது.
4949. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஹாஜிரான) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களுக்கும் (அன்சாரியான) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.
அத்தியாயம் : 44
4950. ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக் கொள்கிற ஒருவருக்கொருவர் வாரிசாகிக் கொள்ளும் ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தங்களுக்குச் செய்தி கிடைத்ததா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையை ஏற்படுத்தியிருந்தார்களே!"என்றார்கள்.
அத்தியாயம் : 44
4951. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்த எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4952. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக்கொள்கிற ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை. அறியாமைக் காலத்தில் நடைபெற்ற ஒப்பந்த நட்புறவுகள் இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் பலத்தை அதிகரிக்கவே செய்யும். (காலாவதியாகிவிடாது.)
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 51 நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தது அவர்களுடைய தோழர்களுக்குப் பாதுகாப்பாகவும் நபித்தோழர்கள் உயிருடன் இருந்தது (ஒட்டுமொத்த) சமுதாயத்திற்குப் பாதுகாப்பாகவும் அமைந்தது பற்றிய விளக்கம்.
4953. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம். பிறகு நாங்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழும்வரை (இங்கேயே) அமர்ந்திருந்தால் நன்றாயிருக்கும்" என்று கூறிக் கொண்டு (அங்கேயே) அமர்ந்திருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதுவிட்டுப் பிறகு "தங்களுடன் இஷாத் தொழுகையையும் தொழும்வரை அமர்ந்திருப்போம்" என்று கூறினோம்" என்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் செய்தது "நன்று" அல்லது "சரி" என்று சொல்லி விட்டு, வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். -(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமாக வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தக்கூடியவராக இருந்தார்கள்.-
பிறகு, "நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 52 நபித்தோழர்கள், பிறகு அவர்களை அடுத்து வந்தவர்கள் (தாபிஈன்), பிறகு அவர்களை அடுத்து வந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) ஆகியோரின் சிறப்பு.
4954. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்கின்ற ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தவர்கள் (நபித்தோழர்கள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர், "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அடுத்த தலைமுறை) மக்களில் மற்றொரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉகள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்கப்படும். அப்போது அக்குழுவினர் "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறை) மக்களில் வேறொரு குழுவினர் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களுடன் தோழமைகொண்டிருந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர் "ஆம் (இருக்கிறார்கள்)" என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4955. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களிலிருந்து ஒரு படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களில் எவரையேனும் உங்களில் காண்கிறீர்களா என்று பாருங்கள்" என்று கூறுவர். அப்போது ஒரு மனிதர் காணப்படுவார். ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அடுத்த தலைமுறையில்) இரண்டாவது படைப்பிரிவு ஒன்று அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉ) எவரேனும் அவர்களிடையே இருக்கிறார்களா?" என்று கேட்பார்கள். (அப்போது ஒரு மனிதர் காணப்படுவார்.) ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) மூன்றாவது படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது "நபித்தோழர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்கள் (தபஉத் தாபிஉ) எவரையேனும் அவர்களிடையே நீங்கள் காண்கிறீர்களா?" என்று கேட்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறையில்) நான்காவது படைப்பிரிவு அனுப்பப்படும். அப்போது நபித்தோழர்களைப் பார்த்த ஒருவரை (தாபிஉ) பார்த்தவரை (தபஉத் தாபிஉ) பார்த்த எவரேனும் அவர்களிடையே நீங்கள் காண்கிறீர்களா,பாருங்கள்" என்று சொல்லப்படும். அத்தகைய ஒருவர் காணப்படுவார். ஆகவே, அவருக்காக அப்படைக்கு வெற்றியளிக்கப் படும்.
அத்தியாயம் : 44
4956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னை ஒட்டியுள்ள தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களது சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களது சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹன்னாத் பின் அஸ்ஸரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "தலைமுறையினர்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பிறகு "சமுதாயங்கள் பல வரும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4957. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "மக்களில் சிறந்தோர் யார்?" என்று கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மக்களில் சிறந்தோர்) என் தலை முறையினர், பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களது சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்" என்று விடையளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் சிறுவர்களாயிருந்தபோது எங்களை "அஷ்ஹது பில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ, "அலய்ய அஹ்துல்லாஹ்" (அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ கூறுவதை அவர்கள் (நபித்தோழர்கள்) தடுத்து வந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இருவரின் அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4958. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறிவிட்டு, மூன்றாவது தடவையில் அல்லது நான்காவது தடவையில் "அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4959. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள், நான் யாரிடையே அனுப்பப்பட்டுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறிவிட்டு, -மூன்றாவது முறையும் அவ்வாறு கூறினார்களா, இல்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்- "பிறகு அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் உண்டு கொழுப்பதை விரும்புவார்கள். சாட்சியமளிக்கும்படி கோரப்படுவதற்கு முன்பே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று) இரண்டு முறை கூறினார்களா அல்லது மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4960. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை (உங்களை) அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலைமுறையினருக்குப் பிறகு ("அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று) இரண்டு தடவை கூறினார்களா, அல்லது மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
பிறகு "அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் சாட்சியமளிக்கும்படி கோரப்படாமலேயே (தாமாக) சாட்சியம் அளிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படமாட்டாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலைமுறையினர் பற்றிக் குறிப்பிட்ட பிறகு இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
ஷபாபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் ஒரு தேவைக்காகக் குதிரையில் என்னிடம் வந்திருந்தபோது, இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாக (மேற்கண்ட ஹதீஸை) அறிவித்தார்கள்" என்று காணப்படுகிறது.
யஹ்யா பின் சயீத், ஷபாபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ("நிறைவேற்றமாட்டார்கள்" என்பதைக் குறிக்க "வலா யூஃபூன" என்பதற்குப் பதிலாக) "வலா யஃபூன" என்று இடம் பெற்றுள்ளது.
பஹ்ஸ் பின் அசத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யூஃபூன" என்றே (முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலுள்ளதைப் போன்றே) காணப்படுகிறது.
அத்தியாயம் : 44
4961. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "இந்தச் சமுதாயத்தில் சிறந்தவர்கள், நான் யாரிடையே அனுப்பப்பெற்றுள்ளேனோ அந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்றாவது தடவையில் ("பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று) கூறினார்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து ஹிஷாம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "சத்தியம் செய்யும்படி கேட்கப்படாமலேயே சத்தியப் பிரமாணம் செய்ய அவர்கள் தாமாகவே முன்வருவார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4962. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "மக்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(மக்களில் சிறந்தவர்கள்) நான் யாரிடையே இருக்கிறேனோ அந்தத் தலைமுறையினர். பிறகு இரண்டாவது தலைமுறையினர். பிறகு மூன்றாவது தலைமுறையினர்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 53 "இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் ஒரு நூற்றாண்டுக்குப்பின் உயிருடன் இருக்கமாட்டார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
4963. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதிக் காலத்தில் ஓர் இரவில் எங்களுக்கு இஷாத் தொழுகை தொழுவித்து, சலாம் கொடுத்து முடித்தபோது எழுந்து, "இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில், இன்று பூமியில் இருக்கும் எவரும் எஞ்சியிருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் நூறாண்டைப் பற்றிய இந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து(கொண்டு, நூறு ஆண்டுகளுக்குப் பின் உலகம் அழிந்து விடும்போலும் என்று புரிந்து)கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இருக்கமாட்டார்கள் என்ற பொருளில்தான்.
இதன் மூலம், அன்று இருந்த தலைமுறையினர் நூறு ஆண்டுகளுக்குள் முடிந்து போவர் என்பதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4964. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், "என்னிடம் மறுமை நாளைப் பற்றிக் கேட்கிறீர்களா?அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்: (இன்றிலிருந்து) ஒரு நூறாண்டுக்குள் இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "இன்று உயிருடன் இருப்பவர்களில் எவரும் ஒரு நூறாண்டுகளுக்குள் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்று தாம் இறப்பதற்கு ஒரு மாதத்திற்குமுன் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களது மற்றோர் அறிவிப்பில், அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் இதற்கு "இன்று உயிருடன் இருப்பவர்களின் ஆயுள் குறைவானதாகும்" என்று விளக்கம் அளித்ததாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4965. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "தபூக்" போரிலிருந்து திரும்பியபோது அவர்களிடம் மக்கள் மறுமை நாளைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(அது அல்லாஹ்வுக்கே தெரியும். ஆனால்,) இன்று உயிர் வாழ்வோரில் யாரும் ஒரு நூற்றாண்டுக்குள் இருக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4966. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்கள், "இன்று உயிர் வாழ்வோரில் யாரும் ஒரு நூற்றாண்டை எட்டமாட்டார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள். உடனே இது குறித்து நாங்கள் அவர்களிடம் விவாதித்தோம். அப்போது "அன்றைய நாளில் படைக்கப்பட்டு (உயிருடனு)ள்ள ஒவ்வொருவரையுமே இது குறிக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 54 நபித்தோழர்களை ஏசுவது தடை செய்யப்பட்டதாகும்.
4967. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹுத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4968. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களான) காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சினை) இருந்தது. காலித் (ரலி) அவர்கள் (அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை) ஏசினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள். உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகியோரைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 55 உவைஸ் அல்கரனீ (ரஹ்) அவர்களின் சிறப்புகள்.
4969. உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) கூஃபாவாசிகளின் தூதுக்குழு ஒன்று (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்தது. அவர்களிடையே உவைஸ் அவர்களைப் பழித்துப் பேசிவந்த மனிதர் ஒருவரும் இருந்தார்.
உமர் (ரலி) அவர்கள், "இங்கு (உங்களில்) "கரன்" குலத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் வந்தார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களிடம் யமன் நாட்டிலிருந்து ஒரு மனிதர் வருவார். அவர் "உவைஸ்" எனப்படுவார். அவர் யமன் நாட்டில் தம் தாயார் ஒருவரை மட்டுமே விட்டுவருவார். அந்த மனிதருடைய மேனியில் வெண்குஷ்டம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். அதையடுத்து ஒரு தீனார் அல்லது ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர (மற்ற இடங்களிலிருந்து) அதை அல்லாஹ் குணப்படுத்தினான்.
ஆகவே, உங்களில் யாரேனும் அவரைச் சந்தித்தால் அவர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரட்டும் (அவரிடம் உங்கள் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கச் சொல்லவும்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4970. மேற்கண்ட ஹதீஸ் உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தாபிஉகளில் (உங்களைத் தொடர்ந்து வருவோரில்) சிறந்தவர் உவைஸ் எனப்படும் ஒரு மனிதர் ஆவார். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார்; அந்த மனிதருக்கு வெண்குஷ்டம் இருக்கும். (அவரைக் கண்டால்) உங்களுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள்" என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4971. உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் உதவிப் படைகள் வந்தால், அவர்களிடம் "உங்களிடையே உவைஸ் பின் ஆமிர் (எனப்படும் மனிதர் ஒருவர்) இருக்கிறாரா?" என்று கேட்பார்கள்.
இந்நிலையில் (ஒரு முறை) உவைஸ் (ரஹ்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, "நீர்தான் உவைஸ் பின் ஆமிரா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்" என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "முராத் (மூலக்) கோத்திரத்தையும் பிறகு "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்தவரா (நீங்கள்)?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, அதில் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றது (உமது பிரார்த்தனை மூலம்) குணமாகிவிட்டதா?" என்று கேட்டார்கள்.
அதற்கும் உவைஸ் அவர்கள் "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "உமக்குத் தாயார் ஒருவர் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்" (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டு, பின்னர் ஒரு திர்ஹம் அளவைத் தவிர மற்றவை குணமாயிருக்கும். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்க வாய்ப்புக் கிட்டினால் அவரைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டி பிரார்த்தியுங்கள்.
அவ்வாறே உவைஸ் (ரஹ்) அவர்களும் உமருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "கூஃபாவிற்கு" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "கூஃபாவின் ஆளுநரிடம் உமக்காகப் (பரிந்துரைத்து) கடிதம் எழுதட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு உவைஸ் (ரஹ்) அவர்கள், "சாதாரண மக்களில் ஒருவனாக நான் இருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறிவிட்டார்கள்.
அடுத்த ஆண்டில் "கரன்" குலத்தைச் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த போது உமர் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் உமர் (ரலி) அவர்கள் உவைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், "மிக எளிய குடிலில் (நெருக்கடியான வாழ்விலும்) மிகக் குறைவான வாழ்க்கைச் சாதனங்களிலுமே அவரை விட்டுவந்துள்ளேன்" என்று கூறினார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யமன்வாசிகளின் உதவிப் படையினருடன் "முராத்" (மூலக்) கோத்திரத்தையும் பின்னர் "கரன்" (கிளைக்) குலத்தையும் சேர்ந்த உவைஸ் பின் ஆமிர் என்பவர் உங்களிடம் வருவார். அவருக்கு (மேனியில்) வெண்குஷ்டம் ஏற்பட்டுப் பின்னர் ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர மற்றவை குணமாகியிருக்கும்.
அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார். அவருக்கு உவைஸ் ஊழியம் புரிபவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றி வைப்பான். (உமரே!) அவர் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கும் வாய்ப்புக் கிட்டினால் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
ஆகவே, அப்பிரமுகர் உவைஸ் (ரஹ்) அவர்களிடம் சென்று, "எனக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அப்போது உவைஸ் அவர்கள், "நீர்தான் இப்போது புனிதப் பயணம் ஒன்றை முடித்து வந்துள்ளீர். ஆகவே, நீர்தான் எனக்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்" என்றார்கள்.
"நீர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தீரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். பிறகு அவருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் மக்களும் உவைஸ் அவர்களை அறிந்துகொண்டனர். பிறகு உவைஸ் அவர்கள் தமது திசையில் நடக்கலானார்கள்.
தொடர்ந்து (உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் உவைஸ் அவர்களுக்கு (நல்ல) போர்வையொன்றை அணியக் கொடுத்தேன். அவரை யாரேனும் ஒருவர் காணும்போதெல்லாம் "உவைஸ் அவர்களுக்கு இந்தப் போர்வை எப்படிக் கிடைத்தது?" என்று கேட்பார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 56 எகிப்துவாசிகளின் நலனைக் காக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரை.
4972. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் விரைவில் ஒரு நாட்டை வெற்றி கொள்வீர்கள். அங்கு "கீராத்" எனும் சொல்லே ஆளப்படும். அந்நாட்டவரின் நலன் காக்குமாறு நான் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடன் நமக்கு உறவு (முறையு)ம் உண்டு. அவர்களில் இருவர் ஒரு செங்கல் அளவு நிலத்துக்காகச் சண்டையிட்டுக்கொள்வதைக் கண்டால் அங்கிருந்து நீங்கள் வெளியேறிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் ஷுமாஸா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அபூதர் (ரலி) அவர்கள், ஷுரஹ்பீல் பின் ஹசனாவின் புதல்வர்களான ரபீஆவும் அப்திர் ரஹ்மானும் ஒரு செங்கல் அளவு நிலத்துக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டபோது அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4973. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் விரைவில் எகிப்தை வெற்றி கொள்வீர்கள். அது "கீராத்" எனும் சொல் புழங்கப்படும் பூமியாகும். எகிப்தை நீங்கள் வெற்றி கொண்டால் அந்நாட்டவருடன் நன்முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடன் நமக்கு உறவு (முறையு)ம் உண்டு. அல்லது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். (பெண் எடுத்த வகையில்) அவர்களுடன் நமக்குப் பந்தமும் உண்டு.
(அபூதர்ரே!) அங்கு ஒரு செங்கல் அளவு நிலத்துக்காக அவர்களில் இருவர் சண்டையிட்டுக் கொள்வதை நீங்கள் கண்டால் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அவ்வாறே (அந்நாட்டை வெற்றி கொண்ட பின்னர்) அப்துர் ரஹ்மான் பின் ஷுரஹ்பீல் பின் ஹசனாவும் அவருடைய சகோதரர் ரபீஆவும் ஒரு செங்கல் அளவு நிலத்துக்காகச் சண்டையிட்டுக்கொள்வதை நான் கண்டேன். ஆகவே அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 57 ஓமன் (உமான்)வாசிகளின் சிறப்பு.
4974. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அரபுக் குலங்களில் ஒரு குலத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அந்த மனிதரை ஏசியும் அடித்தும் விட்டனர். பிறகு அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (நடந்ததைத்) தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ஓமன்வாசிகளிடம் சென்றிருந்தால் அவர்கள் உம்மை ஏசியிருக்கவுமாட்டார்கள்; அடித்திருக்கவுமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 58 ஸகீஃப் குலத்தின் பெரும் பொய்யன் மற்றும் நாசகாரன் ஆகியோரைப் பற்றிய குறிப்பு.
4975. அபூநவ்ஃபல் முஸ்லிம் பின் அபீஅக்ரப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் படையால் கொல்லப்பட்டு, பேரீச்ச மரத்தில் சிலுவையிலேற்றித் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது உடலை நான் மதீனா(விலிருந்து மக்கா வரும் வழியிலுள்ள) "அகபா" பள்ளத்தாக்கில் கண்டேன்.
அப்போது குறைஷியரும் மற்ற மக்களும் அவரது உடலை(ப் பார்த்துவிட்டு)க் கடந்து செல்லலானார்கள். இறுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வந்து அவர்களுக்கு அருகில் நின்று, "அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் (ஆட்சியாளருக்கெதிரான போராட்டத்தில்) ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்தவரை நீர் அதிகமாக நோன்பு நோற்பவராகவும் அதிகமாக நின்று வழிபடக்கூடியவராகவும் உறவுகளை அரவணைக்கக்கூடியவராகவும் இருந்தீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! சமுதாயத்தில் நீர் மிகவும் தீயவர் என்றால், (இன்றைய) மக்களில் வேறு யார் நல்லவர்கள்?" என்று கூறிவிட்டுப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இப்னுஸ் ஸுபைருக்கு அருகில்) நின்றதைப் பற்றியும் அவர்கள் பேசியதைப் பற்றியும் ஹஜ்ஜாஜுக்குச் செய்தி எட்டியபோது, உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரின் உடலை நோக்கி ஆளனுப்பினார்.
அவரது உடல் மரத்திலிருந்து இறக்கப்பட்டு, யூதர்களின் மையவாடியில் போடப்பட்டது. பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களைத் தம்மிடம் வரும்படி ஹஜ்ஜாஜ் ஆளனுப்பினார். ஆனால், ஹஜ்ஜாஜிடம் வர அஸ்மா (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். மீண்டும் தம் தூதரை அனுப்பி, "ஒன்று நீயாக வருகிறாயா, அல்லது உமது சடையைப் பிடித்து இழுத்துவரக்கூடியவரை உன்னிடம் நான் அனுப்பட்டுமா?" என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.
அப்போதும் அஸ்மா (ரலி) அவர்கள் வர மறுத்ததோடல்லாமல், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனது சடையைப் பிடித்து என்னை இழுத்துக் கொண்டுவரக்கூடியவரை நீர் அனுப்பாத வரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை" என்று கூறிவிட்டார்கள்.
உடனே ஹஜ்ஜாஜ், "என் செருப்புகள் எங்கே?" என்று கூறி அதைப் பெற்று (அணிந்து) கொண்டு, பிறகு (இறுமாப்போடு) விரைவாக நடந்து அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்தார். பிறகு "அல்லாஹ்வின் விரோதியை (உமது மகனை) என்ன செய்தேன் பார்த்தாயா?" என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்துவிட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ அவரை "இரு கச்சுடையாளின் புதல்வரே!"என (நகைப்போடு) அழைப்பாய் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. (ஆம்) அல்லாஹ்வின் மீதாணையாக! இரு கச்சுடையாள் நான்தான். (மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவையும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் உணவையும் அவ்விரு கச்சுகளில் ஒன்றால் கட்டி எடுத்துச்சென்றேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய கச்சாகும்.
நினைவிற்கொள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "ஸகீஃப் குலத்தாரில் மகா பொய்யன் ஒருவனும் நாசகாரன் ஒருவனும் இருப்பார்கள்" என்று கூறினார்கள். மகா பொய்யனை (முக்தார் பின் அபீஉபைத்) நாங்கள் பார்த்துவிட்டோம். அந்த நாசகாரன் நீதான் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார். உடனே ஹஜ்ஜாஜ் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்; அஸ்மா (ரலி) அவர்களுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.
அத்தியாயம் : 44
பாடம் : 59 பாரசீகர்களின் சிறப்பு.
4976. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மார்க்க (ஞான)ம் "கிருத்திகா" நட்சத்திரக் குழுமத்தின் (ஸுரய்யா) அருகில் இருந்தாலும், அதைப் "பாரசீகர்களில்" அல்லது "பாரசீக மக்களில்" ஒருவர் எடுத்துக்கொண்டுவந்து விடுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4977. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு "அல்ஜுமுஆ"எனும் (62ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்த அத்தியாயத்)தை ஓதிக்கொண்டு வந்து, "இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இத்தூதரை அவன் அனுப்பியுள்ளான்)" (62:3) எனும் வசனம் வந்தபோது, மக்களில் ஒருவர், "அந்த (ஏனைய) மக்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். ஒரு தடவை, அல்லது இரண்டு தடவை, அல்லது மூன்று தடவை அவர் கேட்கும்வரை அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
அப்போது எங்களிடையே சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி) அவர்கள்மீது தமது கையை வைத்துவிட்டுப் பிறகு, "கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை (ஈமான்) இருந்தாலும், இவர்களில் சிலர் அதை அடைந்தே தீருவர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 60 "மனிதர்கள் நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை (மிக அரிதாகவே தவிர) நீங்கள் காணமாட்டீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
4978. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களை நீங்கள் நூறு ஒட்டகங்களைப் போன்று காண்பீர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை ஒருவர் (மிக அரிதாகவே தவிர) காணமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Previous Post Next Post