அத்தியாயம் 45 பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 45
பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

பாடம் : 1 பெற்றோருக்கு நன்மை செய்வதும் அவர்களே அதற்கு முன்னுரிமை பெற்றவர்கள் என்பதும்.
4979. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அவர் "பிறகு யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அவர் "பிறகு யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அவர் (நான்காவது முறையாக) "பிறகு யார்?" என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தந்தை" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?" என்றே இடம்பெற்றுள்ளது. "மக்களில் (மிகவும் தகுதியானவர் யார்?)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 45
4980. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாய், பிறகு உன் தாய், பிறகு உன் தாய். பிறகு உன் தந்தை. பிறகு உனக்கு மிகவும் நெருக்கமானவர். (அடுத்து) உனக்கு மிகவும் நெருக்கமானவர்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
4981. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அவற்றில், "ஆம்; உன் தந்தையின் மீது அறுதி(யிட்டுச் சொல்கிறேன்). உமக்கு (தக்க) பதில் கிடைக்கும்" என்று (கூறிவிட்டுப் பதில்) சொன்னார்கள்" எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
4982. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நன்மை செய்வதற்கு மிகவும் தகுதியானவர் யார்?"என அம்மனிதர் கேட்டார் என்று இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் தல்ஹா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?" என்று அவர் கேட்டார் என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
4983. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அறப்போரில் கலந்துகொள்ள அனுமதி கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா?" என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் "ஆம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின் (திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 45
4984. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து, "நான் அல்லாஹ்விடமிருந்து நற்பலனை எதிர்பார்த்துப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்வதற்கும் அறப்போர் புரிவதற்கும் தங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இப்போது உன் தாய் தந்தையரில் யாரேனும் உயிருடன் இருக்கின்றனரா?" என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், "ஆம்; இருவருமே உயிருடன் இருக்கின்றனர்" என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள், "நீ அல்லாஹ்விடமிருந்து நற்பலனை எதிர்பார்க்கிறாய் (அல்லவா)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம்” என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், நீ திரும்பிச்சென்று அவர்கள் இருவரிடமும் அழகிய முறையில் உறவாடு" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 2 கூடுதலான தொழுகை போன்றவற்றில் ஈடுபடுவதைவிடப் பெற்றோருக்கு நன்மை செய்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
4985. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல மனிதரான) ஜுரைஜ் என்பவர் தமது ஆசிரமத்தில் (இறைவனை) வழிபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அவருடைய தாயார் வந்(து அவரை அழைத்)தார்.
-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுரைஜை அவருடைய தாயார் அழைத்த முறையையும், அப்போது அவர் தமது புருவத்துக்கு மேலே கையை எப்படி வைத்திருந்தார்; பிறகு ஜுரைஜை நோக்கித் தமது தலையை உயர்த்தி எப்படி அழைத்தார் என்பதையும் சைகை செய்துகாட்டினார்கள். அதைப் போன்றே அபூஹுரைரா (ரலி) அவர்கள் சைகை செய்துகாட்ட, அறிவிப்பாளர் அபூ ராஃபிஉ (ரஹ்) அவர்கள் அவ்வாறே சைகை செய்து காட்டினார்கள் என ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது விளக்கினார்கள்.-
ஜுரைஜின் தாயார், "ஜுரைஜே! நான் உன்னுடைய தாய் (அழைக்கிறேன்); என்னிடம் பேசு" என்று கூறினார். அப்போது ஜுரைஜ் தொழுதுகொண்டிருப்பதைத் தாயார் கண்டார். உடனே ஜுரைஜ், "இறைவா! என் தாயா? என் தொழுகையா? (எதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்?)" என்று கூறிவிட்டு, தொழுகையையே தேர்ந்தெடுத்தார். உடனே அவருடைய தாயார் திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு மறுபடியும் அவரை அழைத்தார். "ஜுரைஜே! நான் உன் தாய் (அழைக்கிறேன்);என்னிடம் பேசு" என்று கூறினார். அப்போது(ம் தொழுது கொண்டிருந்த) ஜுரைஜ், "இறைவா! என் தாயா? எனது தொழுகையா?" என்று கூறிவிட்டு மீண்டும் தொழுகையையே தேர்ந்தெடுத்தார்.
அப்போது அவருடைய தாயார், "இறைவா! இதோ என் மகன் ஜுரைஜிடம் நான் பேசினேன். அவன் என்னிடம் பேச மறுத்துவிட்டான். இறைவா! விபசாரிகளை அவனுக்கு நீ காட்டாமல் அவனுக்கு (ஜுரைஜுக்கு) நீ மரணத்தைத் தந்துவிடாதே" என்று பிரார்த்தித்தார்.
(அந்நேரத்தில்) ஜுரைஜுக்கெதிராக அவருடைய தாயார், ஜுரைஜ் வேறு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திருந்தால், அவ்வாறே அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருப்பார். (ஆனால், விபசாரிகளைக் கண்ணில் படவைக்கும் குறைந்தபட்ச சோதனையையே அவருடைய தாயார் வேண்டினார்.)
ஆடு மேய்க்கும் இடையன் ஒருவன் ஜுரைஜின் ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். (இந்நிலையில் ஒரு நாள்) அந்தக் கிராமத்திலிருந்து (விபசாரியான) பெண்ணொருத்தி வந்தாள். அவளுடன் அந்த இடையன் விபசாரத்தில் ஈடுபட்டான். பிறகு அவள் கர்ப்பமுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவளிடம் "இது யாருடைய குழந்தை?" என்று கேட்கப்பட்டது. "இதோ இந்த ஆசிரமத்தில் இருப்பவரால்தான் (இக்குழந்தை பிறந்தது)" என்று அவள் கூறினாள்.
உடனே மக்கள் (வெகுண்டெழுந்து) கோடரிகளையும் மண்வெட்டிகளையும் எடுத்துக்கொண்டு வந்து ஜுரைஜை அழைத்தனர். அப்போது அவர் தொழுதுகொண்டிருந்ததால் அவர்களிடம் அவர் பேசவில்லை. உடனே (கோபம் கொண்ட) அம்மக்கள் அவருடைய ஆசிரமத்தைத் தகர்க்கலாயினர்.
இதைக் கண்ட ஜுரைஜ் (தம் ஆசிரமத்திலிருந்து) இறங்கி வந்தார். மக்கள், "இதோ இவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேள்" என்று கூறினர். ஜுரைஜ் புன்னகைத்துவிட்டு, அந்த (விபசாரியின்) குழந்தையின் தலையை தடவிக் கொடுத்தார்.
பிறகு "உன் தந்தை யார்?" என்று கேட்டார். (பேசும் பருவத்தை அடையாதிருந்த) அக்குழந்தை, "(இன்ன) ஆட்டிடையன்தான் என் தந்தை" என்று கூறியது.
இதை அக்குழந்தையிடமிருந்து செவியுற்ற அம்மக்கள், (தமது தவறை உணர்ந்து) "நாங்கள் இடித்துத் தகர்த்த உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தாலும் வெள்ளியாலும் கட்டித்தருகிறோம்" என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ் "இல்லை; முன்பிருந்ததைப் போன்று மீண்டும் மண்ணால் கட்டித்தாருங்கள் (அதுவே போதும்)" என்று கூறிவிட்டு,மேலே ஏறிச் சென்றுவிட்டார்.
அத்தியாயம் : 45
4986. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருந்தபோது) பேசியதில்லை. ஒருவர் மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள்; (மற்றொருவர்) ஜுரைஜின் பிள்ளை (என அவதூறு சொல்லப்பட்ட குழந்தை).
ஜுரைஜ் (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த) வணக்கசாலியான மனிதராயிருந்தார். அவர் ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டு அதில் இருந்து (வழிபட்டு)வந்தார். (ஒரு முறை) அவர் தொழுதுகொண்டிருந்தபோது அவரிடம் அவருடைய தாயார் வந்து, "ஜுரைஜே!" என்று அழைத்தார். அப்போது ஜுரைஜ், "என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?" (என் தாய்க்குப் பதிலளிப்பதா, அல்லது தொழுகையைத் தொடர்வதா?) என்று (மனதிற்குள்) வினவிக்கொண்டு, தொழுகையில் கவனம் செலுத்தினார்.
ஆகவே, அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு) திரும்பிச்சென்றுவிட்டார். மறுநாளும் அவர் தொழுதுகொண்டிருந்த போது அவரிடம் அவருடைய தாயார் வந்து, "ஜுரைஜே!" என்று அழைத்தார். அப்போதும் அவர், "என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?" என்று (மனதிற்குள்) வினவிக்கொண்டு, தொடர்ந்து தொழுகையில் கவனம் செலுத்தினார். ஆகவே, (அன்றும்) அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு) திரும்பிச் சென்றுவிட்டார்.
அதற்கடுத்த நாளும் அவருடைய தாயார் வந்தார். அப்போதும் அவர் தொழுது கொண்டிருந்தார். அவர், "ஜுரைஜே!" என்று அழைத்தார். ஜுரைஜ், "என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?" என்று (தமக்குள்) வினவிக்கொண்டு தொழுகையில் கவனம் செலுத்தினார். ஆகவே, அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு), "இறைவா! அவனை (ஜுரைஜை) விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே" என்று பிரார்த்தித்தார்.
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஜுரைஜைப் பற்றியும் அவருடைய வணக்க வழிபாடுகளைப் பற்றியும் (புகழ்ந்து) பேசிக்கொண்டனர். பனூ இஸ்ராயீலில் அழகுக்குப் பெயர்போன, விபசாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருத்தி இருந்தாள். அவள் (பனூ இஸ்ராயீல் மக்களிடம்), "நீங்கள் விரும்பினால் உங்களுக்காக அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறேன்" என்று கூறிவிட்டு, அவரிடம் தன்னை ஒப்படைத்தாள். ஆனால், அவளை ஜுரைஜ் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ஆகவே, (அவரைப் பழிவாங்குவதற்காக) அவள் ஓர் ஆட்டு இடையனிடம் சென்றாள். அவன் ஜுரைஜின் ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். தன்னை அனுபவித்துக்கொள்ள அந்த இடையனுக்கு அவள் வாய்ப்பளித்தாள். அவனும் அவளுடன் (தகாத) உறவில் ஈடுபட்டான்.
(இதில்) அவள் கர்ப்பமுற்றாள். குழந்தை பிறந்ததும், "இது ஜுரைஜுக்குப் பிறந்த குழந்தை" என்று (மக்களிடம்) கூறினாள். எனவே, மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்து அவரைக் கீழே இறங்கிவரச் செய்துவிட்டு, அவரது ஆசிரமத்தை இடித்துத் தகர்த்துவிட்டனர். அவரையும் அடிக்கலாயினர்.
அப்போது ஜுரைஜ், "உங்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?)" என்று கேட்டார். மக்கள், "நீர் இந்த விபசாரியுடன் உறவுகொண்டு அதன் மூலம் அவள் குழந்தை பெற்றெடுத்துவிட்டாள்" என்று கூறினார். உடனே ஜுரைஜ், "அந்தக் குழந்தை எங்கே?" என்று கேட்டார். மக்கள் அந்தக் குழந்தையைக் கொண்டுவந்தனர்.
அப்போது ஜுரைஜ், "நான் தொழுது கொள்ளும்வரை என்னை விட்டுவிடுங்கள்" என்று கூறிவிட்டுத் தொழுதார். தொழுகை முடிந்ததும் அந்தக் குழந்தையிடம் வந்து, அதன் வயிற்றில் (தமது விரலால்) குத்தினார். பிறகு "குழந்தாய்! உன் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு அக்குழந்தை, "இன்ன ஆட்டு இடையன்தான் (என் தந்தை)" என்று பேசியது.
(உண்மையை உணர்ந்துகொண்ட) அம்மக்கள், ஜுரைஜை முன்னோக்கிவந்து அவரை முத்தமிட்டு அவரைத் தொட்டுத்தடவினர். மேலும், "தங்களது ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித்தருகிறோம்" என்று கூறினார்கள். அதற்கு ஜுரைஜ், "இல்லை; முன்பிருந்ததைப் போன்று களிமண்ணால் கட்டித்தாருங்கள் (அதுவே போதும்)" என்று கூறிவிட்டார். அவ்வாறே மக்களும் கட்டித்தந்தனர்.
(மழலைப் பருவத்தில் பேசிய மூன்றாமவர்:) ஒரு குழந்தை தன் தாயிடம் பாலருந்திக்கொண்டிருந்தது. அப்போது வனப்புமிக்க ஒரு மனிதன் மிடுக்கான வாகனமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான். உடனே அக்குழந்தையின் தாய், "இறைவா! இதோ இவனைப் போன்று என் மகனையும் ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தாள். அக்குழந்தை மார்பை விட்டுவிட்டு அப்பயணியைத் திரும்பிப்பார்த்து, "இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே" என்று பேசியது. பிறகு மறுபடியும் மார்புக்குச் சென்று பால் அருந்தலாயிற்று.
-இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தக் குழந்தை பால் குடித்ததை அறிவிக்கும் முகமாக, தமது ஆட்காட்டி விரலை வாயில் வைத்து உறிஞ்சுவதைப் போன்று சைகை செய்து காட்டியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
பிறகு தாயும் மகவும் ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றனர். மக்கள் அவளை, "நீ விபசாரம் செய்தாய்;திருடினாய்" என்று (இடித்துக்) கூறி அடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவளோ, "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; பொறுப்பாளர்களில் அவனே நல்லவன்" என்று கூறிக்கொண்டிருந்தாள். அப்போது அக்குழந்தையின் தாய், "இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கிவிடாதே" என்று கூறினாள். உடனே அக்குழந்தை பால் அருந்துவதை நிறுத்திவிட்டு அந்த அடிமைப் பெண்ணை நோக்கி(த் திரும்பி), "இறைவா! என்னை இவளைப் போன்று ஆக்குவாயாக!" என்று கூறியது.
அந்த இடத்தில் தாயும் மகவும் பேசிக் கொண்டனர். தாய் சொன்னாள்: உன் தொண்டை அறுபடட்டும்! அழகிய தோற்றம் கொண்ட மனிதர் ஒருவர் கடந்து சென்றபோது நான், "இறைவா! இதோ இவனைப் போன்று என் மகனை ஆக்குவாயாக" என்று கூறினேன். அப்போது நீ "இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!" என்று கூறினாய்.
பிறகு மக்கள், "விபச்சாரம் செய்துவிட்டாய்; திருடிவிட்டாய்" என்று (இடித்துக்)கூறி அடித்துக் கொண்டிருந்த இந்த அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றபோது நான், "இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தேன். அப்போது நீ "இறைவா! இவளைப் போன்று என்னை ஆக்குவாயாக!" என்று கூறினாய். (ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டாள்.)
அதற்கு அக்குழந்தை, "(வாகனத்தில் சென்ற) அந்த மனிதன் (அடக்குமுறைகளை அவிழ்த்து விடும்) கொடுங்கோலனாக இருந்தான். ஆகவே, நான் "இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!" என்று கூறினேன். "நீ விபசாரம் செய்துவிட்டாய்" என்று கூறிக்கொண்டிருந்தனரே அப்பெண் விபசாரம் செய்யவுமில்லை. "நீ திருடிவிட்டாய்" என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அவள் திருடவுமில்லை. ஆகவேதான், "இறைவா! அவளைப் போன்று என்னையும் (நல்லவளாக) ஆக்குவாயாக!" என்று கூறினேன்" என்று பதிலளித்தது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம்: 3 முதுமைப் பருவத்தில் பெற்றோர் இருவரையுமோ, அல்லது அவர்களில் ஒருவரையோ அடைந்தும் (அவர்களுக்கு நன்மை செய்து) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்.
4987. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 45
4988. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! யார்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "தம் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது அவ்விருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு நன்மை செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன்தான்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று மூன்று தடவை சொன்னார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
பாடம் : 4 தாய், தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவினரின் நண்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதன் சிறப்பு.
4989. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது,அவருக்கு அப்துல்லாஹ் முகமன் (சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலைமீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், "அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்" என்று கூறினோம்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 45
4990. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தையின் அன்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
4991. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதையொன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்து விட்டால், அக்கழுதைமீது ஓய்வெடுத்துக்கொள்வார்கள். மேலும், தலைப்பாகையொன்றும் அவர்களிடம் இருந்தது. அதை அவர்கள் தமது தலையில் கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் அந்தக் கழுதையில் (பயணம் செய்துகொண்டு) இருந்தபோது, கிராமவாசி ஒருவர் அவர்களைக் கடந்துசென்றார்.
உடனே அவரிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இன்ன மனிதரின் புதல்வரான இன்ன மனிதரல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்" என்றார். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தமது கழுதையை அக்கிராமவாசியிடம் கொடுத்து "இதில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றார்கள்; தலைப்பாகையைக் கொடுத்து, "இதைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய தோழர்களில் சிலர், "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! தாங்கள் ஓய்வெடுப்பதற்காக (மாற்று வாகனமாகப்) பயன்படுத்திவந்த கழுதையை இந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டீர்களே? (பயணத்தின்போது) தாங்கள் தலையில் கட்டிக்கொண்டிருந்த தலைப்பாகையையும் கொடுத்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தை மறைந்தபின் அவருடைய அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தக் கிராமவாசியின் தந்தை (என் தந்தை) உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம்: 5 நன்மை (அல்பிர்ரு), தீமை (அல்இஸ்மு) ஆகியவற்றின் விளக்கம்.
4992. நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு") மற்றும் தீமை ("அல்இஸ்மு") பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
4993. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்தேன். அவர்களிடம் கேள்வி கேட்டு விடை தெரிந்துகொள்வ(து இயலாமல் போய் விடுமோ என்ப)தே ஹிஜ்ரத் செய்(து மதீனாவில் வந்து குடியேறு)வதற்கு எனக்குத் தடையாக இருந்தது. எங்களில் ஒருவர் ஹிஜ்ரத் செய்து (மதீனாவுக்கு வந்து குடியேறி)விட்டால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதைப் பற்றியும் கேள்வி கேட்காமலிருந்தார். (வெளியூர்காரர்கள் கேட்கட்டும். அதன் மூலம் நாம் அறிந்து கொள்வோம் என்று இருந்துவிடுவார்.) (இந்த வகையில்,)நான் அவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் கேட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மை என்பது, நற்பண்பாகும். தீமை என்பது, எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 6 உறவைப் பேணுவதும், உறவை முறிப்பது தடை செய்யப்பட்டதாகும் என்பதும்.
4994. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது "உறவு” எழுந்து, (இறைஅரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) "(மனிதர்கள் தம்) உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்" என்று கூறி (மன்றாடி)யது.
அல்லாஹ், "ஆம்; உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?" என்று கேட்டான். அதற்கு உறவு, "ஆம் (திருப்தியே) என் இறைவா!" என்று கூறியது. அல்லாஹ், "அது உனக்காக நடக்கும்" என்று சொன்னான் என்றார்கள்.
பிறகு, "நீங்கள் விரும்பினால் "நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?" (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
4995. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது) உறவானது, இறை அரியணையைப் பிடித்துக்கொண்டு, "என்னோடு ஒட்டி வாழ்பவனுடன் இறைவனும் உறவாடுவான். என்னை முறித்துக்கொள்பவனை இறைவனும் முறித்துக்கொள்வான்" என்று கூறியது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
4996. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முறித்து வாழ்பவன் -அதாவது உறவைத் துண்டித்து வாழ்பவன்- சொர்க்கத்தில் நுழைய மாட்டான். - இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
4997. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
4998. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
4999. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5000. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 7 ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வது, கோபப்படுவது, பிணங்கிக்கொள்வது ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
5001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உறவை முறித்துக்கொள்ளாதீர்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் மேற்கண்ட (கோபம், பொறாமை, பிணக்கு, உறவை முறித்தல் ஆகிய) நான்கு குணங்கள் குறித்தும் இடம்பெற்றுள்ளன.
அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் (மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அறிவிப்பில், "ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள்" என்று (மூன்று குணங்கள் மட்டுமே) இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
5002. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளதைப் போன்று (சகோதரர்களாய் இருங்கள்)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 8 மார்க்க ரீதியான எந்தக் காரணமுமின்றி (ஒருவரிடம்) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர்தான்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அனைத்து அறிவிப்புகளிலும் ("அவரும் இவரும் முகத்தைத் திருப்பிக்கொள்வர்" என்பதைக் குறிக்க) "ஃப யுஅரிளு ஹாதா வ யுஅரிளு ஹாதா" என்றே இடம்பெற்றுள்ளது. மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் "ஃப யஸுத்து ஹாதா வ யஸுத்து ஹாதா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5004. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5005. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று நாட்களுக்குப்பின் பேசாமலிருத்தல் கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 9 (ஆதாரமின்றிப் பிறரைச்) சந்தேகிப்பது, துருவித்துருவி ஆராய்வது, போட்டி பொறாமை கொள்வது, (வாங்கும் எண்ணமின்றி) பொருளின் விலையை ஏற்றிக் கேட்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டவையாகும்.
5006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது,பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5007. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருக்காதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (பிறரைப் பற்றித்) துருவித் துருவிக் கேட்காதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5008. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (பிறர் அந்தரங்கம் பற்றித்) துருவித் துருவி ஆராயாதீர்கள்;துருவித்துருவிக் கேட்காதீர்கள். (பிறரை அதிகவிலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளை) ஏற்றிக் கேட்காதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உறவை முறித்துக்கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளதைப் போன்று சகோதரர்களாய் இருங்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
5009. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (நீங்கள் வாழ பிறர் வீழவேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 10 ஒரு முஸ்லிமுக்கு அநீதியிழைப்பது, துரோகம் செய்வது, அவரைக் கேவலப்படுத்துவது, அவரது உயிர், மானம்,பொருள் ஆகியவற்றைப் பறிப்பது ஆகியன தடை செய்யப்பட்டவையாகும்.
5010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ,அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5011. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகச் சற்று கூடுதல் குறைவுடன் இடம்பெற்றுள்ளது.
அதில், "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5012. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 11 ஒருவருக்கொருவர் பகைமை கொள்வதற்கும் பேசாமல் இருப்பதற்கும் வந்துள்ள தடை.
5013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.
அப்போது "இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்;இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்" என்று கூறப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஸீஸ் அத்தாரவர்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பேசிக்கொள்ளாத இருவரைத் தவிர” (இல்லல் முத்தஹாஜிரைனி) என்று இடம்பெற்றுள்ளது. குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அதே பொருள் கொண்ட மற்றொரு சொற்றொடரில் "இல்லல் முஹ்தஜி ரைனி” என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
5014. ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர.
அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்" என்று கூறப்படுகிறது.
- மனிதர்களின் செயல்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது, "இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது;தமக்கும் தம் சகோதரருக்குமிடையில் பகைமையுள்ள அடியாரைத் தவிர. அப்போது, "இவ்விருவரும் (சமாதானத்தின்பால்) திரும்பும்வரை இவ்விருவரையும் விட்டுவையுங்கள். அல்லது தாமதப்படுத்துங்கள்" என்று கூறப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 12 அல்லாஹ்வுக்காக நேசிப்பதன் சிறப்பு.
5015. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில், "என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5016. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?" என்று அந்த வானவர் கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்.அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்" என்று சொன்னார்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 13 நோயாளிகளை நலம் விசாரிப்பதன் சிறப்பு.
5017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோயாளியை நலம் விசாரித்துக்கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டேயிருக்கிறார்.
இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5019. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் (உடல் நலிவுற்ற) தம் சகோதர முஸ்லிமை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டேயிருக்கிறார்.- இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5020. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் "குர்ஃபா"வில் இருக்கிறார்" என்று கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் "குர்ஃபா" என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதன் கனிகளைப் பறிப்பதாகும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5021. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 14 ஓர் இறைநம்பிக்கையாளரின் காலில் தைக்கும் முள் உள்பட அவருக்கு ஏற்படும் நோய் நொடிகள், துயரம் போன்றவற்றுக்காக அவருக்கு நற்பலன் வழங்கப்படுகிறது.
5022. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5023. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். அவர்களை(ப் பரிவோடு) எனது கையால் தொட்டு, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் ஒருவனே சிரமப்படுகிறேன்" என்றார்கள். நான், "இத்துன்பத்தின் காரணமாகத் தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் உண்டு தானே?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டுப் பிறகு, "ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும்,அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனது கையால் அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆம்; என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! பூமியின் மீதுள்ள ஒரு முஸ்லிமுக்கு (ஏற்படும் எந்த நோயாயினும்...)" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5024. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் "மினா"வில் இருந்தபோது அவர்களிடம் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்தார். அப்போது அ(ங்கிருந்த)வர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், "உங்களுடைய சிரிப்புக்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அம் மக்கள், "இன்ன மனிதர் கூடாரத்தின் கயிற்றில் இடறி விழுந்துவிட்டார். அவரது கழுத்தோ கண்ணோ போயிருக்கும் (நல்லவேளை பிழைத்துக்கொண்டார்)" என்று கூறினர்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(இதற்கெல்லாம்) சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிடச் சிறிய துன்பம் எதுவாயினும், அதற்காக அவருக்கு ஓர் அந்தஸ்து பதிவு செய்யப்படுகிறது; அதற்குப் பகரமாக அவருடைய தவறுகளில் ஒன்று துடைக்கப்படுகிறது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; அல்லது அவருடைய தவறு ஒன்றை அவரைவிட்டுத் துடைத்துவிடுகிறான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய தவறுகளில் சிலவற்றைக் கழித்துவிடுகிறான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட எத்துன்பமாயினும் அதற்குப் பதிலாக அவரது பாவம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் முள் உள்பட எத்துன்பமாயினும் அதற்குப் பதிலாக "அவருடைய தவறுகளில் சில கழிக்கப்படாமல்" அல்லது "அவருடைய தவறுகளில் சில மன்னிக்கப்படாமல்" இருப்பதில்லை. (அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் இவ்விரண்டில் எதைக் கூறினார் என்பது அறிவிப்பாளர் யஸீத் பின் குஸைஃபா (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.)
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5029. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் முள் உள்பட (துன்பங்கள்) எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருக்கு ஓர் நன்மையைப் பதிவு செய்யாமல், அல்லது அதற்குப் பதிலாக அவருடைய தவறுகளில் ஒன்று மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார்" (4:123) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அது முஸ்லிம்களுக்குக் கடுமையான கவலையை ஏற்படுத்தியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நற்செயல்களில்) நடுநிலையாகச் செயல்படுங்கள்; சரியானதைச் செய்யுங்கள். (நாம் மிகப்பெரிய அளவில் வழிபாடுகள் செய்யவில்லையே என வருந்தாதீர்கள்.) ஏனெனில், கால் இடறி (காயமடைவது), அல்லது முள் தைப்பது உள்பட ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் அவருக்குப் பாவப் பரிகாரமாகவே அமையும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) இப்னு முஹைஸின் என்பவர், மக்காவாசியான உமர் பின் அப்திர் ரஹ்மான் பின் முஹைஸின் என்பவர் ஆவார்.
அத்தியாயம் : 45
5031. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உடல் நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல் முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது "உம்முஸ் ஸாயிபே! அல்லது உம்முல் முசய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், "காய்ச்சல். அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை இரும்பின் துருவை அகற்றிவிடுவதைப் போன்று, ஆதமின் மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5032. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "சரி! (காட்டுங்கள்)" என்று சொன்னேன். அவர்கள், "(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்" என்று சொன்னார்கள். இப்பெண்மணி "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 15 அநீதியிழைப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5033. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே!
அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
என் அடியார்களே!
உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன்.
என் அடியார்களே!
நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!
என் அடியார்களே!
நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்!
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சயீத் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் குத்சியை அறிவிக்கும்போது, (இந்த இறைச்செய்தியைக் கண்ணியப்படுத்துவதற்காக) முழந்தாளிட்டு நின்றுகொள்வார்கள்.
- அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் அபூமுஸ்ஹிர் (ரஹ்) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மர்வான் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களே அபூமுஸ்ஹிர் (ரஹ்) அவர்களைவிட ஹதீஸ் அறிவிப்பில் முழுமையானவர் ஆவார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அநீதியிழைப்பதை என்மீதும் தடை செய்துகொண்டேன். என் அடியார்கள் மீதும் தடைசெய்துவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்" என்று வளமும் உயர்வும் மிக்க தம் இறைவனிடமிருந்து கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸே இதைவிட முழுமையானதாகும்.
அத்தியாயம் : 45
5034. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப் பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5035. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5036. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டு விடவுமாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), "திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5038. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்த அளவுக்கென்றால்,கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5039. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால், அவனைத் தப்பவிடமாட்டான்" என்று கூறிவிட்டு, "அநீதி இழைத்த ஊர்(க்காரர்)களைப் பிடிக்கும்போது இவ்வாறே உம்முடைய இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி வதைக்கக்கூடியது; கடுமையானது" (11:102) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 16 அநீதியிழைத்த சகோதரனுக்கும் அநீதிக்குள்ளான சகோதரனுக்கும் உதவுதல்.
5040. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு போரின்போது) முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்சாரிகளில் ஓர் இளைஞரும் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது "அந்த முஹாஜிர்" அல்லது "முஹாஜிர்கள்", "முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த அன்சாரி, "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, "என்ன இது, அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிரச்சினை இல்லை. ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவராக இருக்கும் நிலையிலும் அவருக்கு உதவட்டும். (அது எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி செய்யட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5041. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("பனூ முஸ்தலிக்" எனும்) ஓர் அறப்போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரை (விளையாட்டாக)ப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த முஹாஜிர், "முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து), "இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இனமாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசக்கூடியவை" என்று கூறினார்கள்.
அப்போது (மதீனாவாசியான நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு "அப்படியா அவர்கள் (முஹாஜிர்கள்) செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச்சென்றால் (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை நிச்சயமாக அங்கிருந்து வெளியேற்றி விடுவர்" என்று (அன்சாரிகளுக்காகப்) பேசினார்.
(இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தோழர்களுக்கும் எட்டியபோது) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள். முஹம்மத் தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5042. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமெனக் கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இத்தகைய (இன மாச்சரியங்களைத் தூண்டும்) கூப்பாடுகளை விடுங்கள். இவை நாற்றம் வீசக்கூடியவை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 17 இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும் பரிவு காட்டுவதும் தோள் கொடுத்து ஒத்துழைப்பதும்.
5043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுசேர்க்கிறது.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது, ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5045. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனுக்குத் தலையில் சுகவீனமேற்பட்டால் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டுவிடுகிறது. அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்திருக்கின்றன.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனது கண்ணுக்கு நோய் ஏற்பட்டால், உடல் முழுவதும் நோய்வாய்ப்படுகிறது. அவனது தலைக்கு நோய் ஏற்பட்டால், உடல் முழுவதும் நோய் காண்கிறது.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5046. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரையொருவர் ஏசிக்கொள்ளும் இருவரில் முதலில் ஏச ஆரம்பித்தவரையே குற்றம் சாரும்; அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாத வரை!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய விரும்புவோர் பற்றிய குறிப்பு.
5047. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5048. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 21 அல்லாஹ் ஒருவரது குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், மறுமையிலும் அதை அவன் மறைப்பான் எனும் நற்செய்தி.
5049. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஓர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், அதை அவன் மறுமை நாளிலும் மறைக்காமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 22 அருவருப்பாகப் பேசும் ஒருவரிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காக அவரிடம் ஒருவர் கனிவாகப் பேசுவது.
5051. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரை உள்ளே வரச்சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்" என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதைப் போன்றே) அவரிட(மு)ம் நபி (ஸல்) அவர்கள் கனிவாகப் பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரைக் குறித்து ஒரு விதமாகச் சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?" என்று கேட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷா! அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர் யாரெனில், மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தம்மைத்) தற்காத்துக் கொள்ள ஒதுங்கிக்கொள்கிறார்களோ அவர்தான். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் (வார்த்தைகளில் சிறிது வேறுபாட்டுடன்) வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 23 நளினத்தின் சிறப்பு.
5052. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மையை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5054. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5055. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5056. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5057. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஆயிஷா (ரலி) அவர்கள் (பயணத்துக்குப் பழக்கப்படாத) முரட்டு சுபாவமுடைய ஒட்டகம் ஒன்றில் ஏறிச்சென்றார்கள். அப்போது அதை விரட்டலானார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) நளினத்தைக் கையாள்வாயாக" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 24 கால்நடைகள் முதலியவற்றைச் சபிப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5058. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்தபோது, அன்சாரிகளில் ஒரு பெண் ஒட்டகமொன்றின்மீது அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தபோது அப்பெண் அ(ந்த ஒட்டகத்)தைச் சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு, அதை விட்டு விடுங்கள். ஏனெனில், அது சாபத்திற்குள்ளானதாகும்" என்று கூறினார்கள்.
அதையடுத்து அந்த ஒட்டகம் மக்களிடையே நடந்து செல்வதையும், அதை எவரும் சீண்டாமலிருந்ததையும் இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5059. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்தச் சாம்பல் நிற ஒட்டகத்தை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்று இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு அதை வெறுமேனியாக விட்டுவிடுங்கள். ஏனெனில், அது சாபத்துக்குரியதாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5060. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடிமைப் பெண் ஒட்டகமொன்றின் மீதிருந்த(படி பயணம் செய்துகொண்டிருந்)தார். அதன் மீது மக்களின் பயணச் சாதனங்கள் சில இருந்தன. (முன்னே) சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களையும் குறுகலான மலை வருவதையும் கண்ட அப்பெண், "ஹல்!" என அந்த ஒட்டகத்தை அதட்டிவிட்டு, "இறைவா! இ(ந்த ஒட்டகத்)தை நீ சபிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "சாபத்தைச் சுமந்துவரும் இந்த ஒட்டகம் நம்முடன் வர வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5061. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சாபத்தைச் சுமந்துள்ள எந்த வாகனமும் நம்முடன் வரவேண்டாம் என்றோ, அல்லது இதைப் போன்றோ கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5062. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5063. ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் (தம் விருந்தினராக வந்திருந்த நபித்தோழியரில் ஒருவரான) உம்முத் தர்தா (ரலி) அவர்களுக்குத் தம் சார்பாக வீட்டு அலங்காரப் பொருட்களை அனுப்பிவைத்தார். (உம்முத் தர்தா (ரலி) அவர்களைத் தம் மனைவியரின் இல்லத்திற்கு வரவழைத்து அவரிடம் நபிமொழிகளைக் கேட்பார்.)
ஒரு நாள் இரவில் அப்துல் மலிக் எழுந்து தம் ஊழியரை அழைத்தார். அவர் தாமதமாக வந்த போது அவரைச் சபித்தார். காலையானதும் அப்துல் மலிக்கிடம் உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு நீங்கள் உங்கள் ஊழியரை அழைத்தபோது, அவரைச் சபிப்பதை நான் செவியுற்றேன். (என் கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் பரிந்துரைப்பவர்களாகவோ சாட்சியமளிப்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்" எனக் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சியமளிப்பவர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5065. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 25 நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கெதிராகப் பிரார்த்திக்கவோ ஏசவோ சபிக்கவோ செய்து, அவற்றுக்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால், அவருக்கு அது பாவப் பரிகாரமாகவும் நற்பலனாகவும் அருளாகவும் மாறிவிடும்.
5066. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள்.
அவர்கள் இருவரும் சென்றதும், நான், "அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை" என்று கூறினேன். அதற்கு "அது எதனால்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், "அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே? ஏசினீர்களே?" என்று பதிலளித்தேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறியவில்லையா? "இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தால், அல்லது ஏசியிருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் ஆக்கிவிடுவாயாக" என்று கூறியுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தனியாகப் பேசினர். அப்போது அவ்விருவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏசினார்கள்;சபித்தார்கள். பிறகு அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5067. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் முஸ்லிம்களில் எவரையேனும் ஏசியிருந்தால், அல்லது சபித்திருந்தால், அல்லது அடித்திருந்தால் அவற்றை அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.
ஆயினும் அதில், "பாவப்பரிகாரமாகவும், நன்மையாகவும் (மாற்றிடுவாயாக!)" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் "நன்மையாகவும்" என்பதை அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பிலும், "அருளாகவும்” என்பதை ஜாபிர் (ரலி) அவர்களது அறிவிப்பிலும் இடம்பெறச்செய்துள்ளார்கள்.
அத்தியாயம் : 45
5068. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("அவரை அடித்திருந்தால்" என்பதைக் குறிக்க) "ஜலத்துஹு" (ஷீóகூóகுøõடூõõ) என்றே இடம்பெற்றுள்ளது. இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழி வழக்காகும். (ஹதீஸின் மூலத்தில் இருப்பது) "ஜலத்துஹு"(ஷீóகூóகுúஸீõடூõ) என்பதேயாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5069. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மத் ஒரு மனிதரே! (எல்லா) மனிதர்களும் கோபப்படுவதைப் போன்றே அவரும் கோபப்படுவார். நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுத்துள்ளேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். அதாவது நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது மனவேதனைப் படுத்தியிருந்தால், அல்லது ஏசியிருந்தால்,அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் அவருக்கு மறுமை நாளில் உன்னிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிடுவாயாக!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அத்தியாயம் : 45
5070. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இறைநம்பிக்கையுள்ள எந்த அடியாரையாவது ஏசியிருந்தால்,அதையே அவருக்கு மறுமைநாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றிவிடுவாயாக!" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
அத்தியாயம் : 45
5071. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுத்துள்ளேன். அதற்கு நீ ஒருபோதும் மாறு செய்யமாட்டாய். அதாவது நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது ஏசியிருந்தால், அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்கு மறுமையில் பாவப்பரிகாரமாக மாற்றி விடுவாயாக!" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5072. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒரு மனிதரே. நான் வல்லமையும் மாண்பும் மிக்க என் இறைவனிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளேன். (அது) நான் முஸ்லிம்களில் ஓர் அடியாரை ஏசியிருந்தால், அல்லது திட்டியிருந்தால், அதை அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் நன்மையாகவும் மாற்றி விடுவாயாக (என்பதாகும்)" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5073. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, "நீயா அது? மிகவும் பெரியவளாகிவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!" என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, "நபி (ஸல்) அவர்கள் என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?" என்று கூறினாள்.
உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருக்கும் அநாதைச் சிறுமிக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தித்தீர்களா?" என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "என்ன விஷயம், உம்மு சுலைமே?" என்று கேட்டார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அவளுடைய ஆயுள் கூடாமல் போகட்டும் எனத் தாங்கள் பிரார்த்தித்ததாக அச்சிறுமி கூறினாள்" என்றார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
பிறகு, "உம்மு சுலைமே! நான் என் இறைவனிடம் முன்வைத்துள்ள நிபந்தனையை நீ அறிவாயா? நான் என் இறைவனிடம், "நான் ஒரு மனிதனே! எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நானும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா மனிதர்களும் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்படுகிறேன். ஆகவே, நான் என் சமுதாயத்தாரில் யாரேனும் ஒருவருக்கெதிராகப் பிரார்த்தித்து அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால்,அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் இறைவனிடம் நெருக்கமாக்கும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூமஅன் அர்ரகாஷீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (அநாதைச் சிறுமி என்று வரும்) மூன்று இடங்களிலும் (அதைக் குறிக்க "யதீமா” எனும் சொல்லுக்குப் பகரமாக) "யுதய்யிமா” எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (பொருள்: மிகச்சிறிய அநாதைச் சிறுமி.)
அத்தியாயம் : 45
5074. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, "நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்" என்று கூறினார்கள். (அவர் நபி (ஸல்) அவர்களின் எழுத்தராக இருந்தார்.)
அவ்வாறே நான் சென்றுவிட்டு வந்து, "அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்" என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) என்னிடம், "நீ போய் முஆவியா அவர்களை என்னிடம் வரச் சொல்" என்று கூறினார்கள். மீண்டும் நான் சென்றுவிட்டு வந்து, "அவர் (இன்னும்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ், அவருடைய வயிறை நிரப்பாமல் விடட்டும்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) உமய்யா பின் காலித் (ரஹ்) அவர்களிடம், (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "ஹத்தஅனீ” எனும் சொல்லுக்கு என்ன பொருள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "என் பின்தலையில் ஒரு தட்டு தட்டினார்கள்" என்பது பொருள் என்றார்கள்.
அத்தியாயம் : 45
5075. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் (ஒரு முறை) சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் சென்று ஒளிந்துகொண்டேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
பாடம் : 26 இரட்டை முகத்தான் பற்றிய பழிப்புரையும் அவனது செயல் தடை செய்யப் பட்டதாகும் என்பதும்.
5076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5077. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5078. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே மிகவும் தீயவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர்கள். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 27 பொய் தடை செய்யப்பட்டதாகும் என்பதும் பொய்யில் அனுமதிக்கப்பட்டது எது என்பது பற்றிய விளக்கமும்.
5079. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!
1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், "உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், "மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 45
பாடம் : 28 கோள் சொல்வது தடை செய்யப்பட்டதாகும்.
5080. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "அல்அள்ஹு" (பொய், அவதூறு) என்றால் என்னவென்று உங்களுக்கு நான் அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டுவிட்டு, "அது மக்களிடையே கோள் சொல்வதாகும்" என்று கூறினார்கள். மேலும், "ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் "ஸித்தீக்" (மாபெரும் வாய்மையாளர்) எனப் பதிவு செய்யப்படுவார். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்" என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 29 பொய் அருவருப்பானது; உண்மை அழகானது என்பதும், உண்மையின் சிறப்பும்.
5081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார். பொய், தீமைக்கு வழி வகுக்கும்;தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5082. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை என்பது நன்மையாகும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஓர் அடியார் உண்மையைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அல்லாஹ்விடம் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். பொய் என்பது தீமையாகும். தீமை நரகநெருப்புக்கு வழிவகுக்கும். ஓர் அடியார் பொய்யைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் "பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5083. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்; அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
பொய் பேசாதீர்கள். பொய் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார்; அதைத் தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் "பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தேர்ந்தெடுத்து உண்மையே பேசிவருவார்; தேர்ந்தெடுத்துப் பொய்யே பேசிவருவார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறுதியில் அவரை அல்லாஹ் ("வாய்மையாளர்" அல்லது "பொய்யர்" எனப்) பதிவு செய்துவிடுகிறான்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
பாடம் : 30 கோபத்தின்போது தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்பவரின் சிறப்பும், கோபம் விலக என்ன வழி என்பதும்.
5084. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "உங்களில் "சந்ததியிழந்தவன்" (அர்ரகூப்) என்று யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "குழந்தைப் பாக்கியமற்றவரையே (நாங்கள் "அர்ரக்கூப்" எனக் கருதுகிறோம்)" என்று பதிலளித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் சந்ததியிழந்தவன் அல்லன். மாறாக,தம் குழந்தைகளில் எதுவும் (தமக்கு) முன்பே இறக்காதவனே சந்ததியிழந்தவன் ஆவான்" என்று கூறினார்கள்.
பிறகு, "உங்களில் வீரன் என யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "எவராலும் அடித்து வீழ்த்த முடியாதவனே (வீரன் என நாங்கள் கருதுகிறோம்)" என்று பதிலளித்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் வீரனல்லன். மாறாக, வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5086. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்" என்று கூறினார்கள். மக்கள், "அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5087. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருடைய கண்கள் (கோபத்தால்) சிவந்து, கழுத்து நரம்புகள் புடைக்கலாயின.
நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை அவர் சொல்வாராயின் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோப) உணர்ச்சி விலகிவிடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" (ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) (என்பதே அது)" என்று கூறினார்கள். (மக்கள் கோபத்திலிருந்த அந்த மனிதரிடம் இதை எடுத்துரைத்தபோது) அந்த மனிதர், "எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகத் தெரிகிறதா?" என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னுல் அலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 45
5088. சுலைமான் பின்த் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருக்குக் கோபமேற்பட்டு அவரது முகம் சிவக்கலாயிற்று. அவரை உற்றுப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை அவர் சொல்வாராயின் அ(வருக்கு ஏற்பட்டிருக்கும் கோபமா ன)து அவரைவிட்டுப் போய்விடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" (என்பதே அந்த வார்த்தை)" என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டவர்களில் ஒருவர் அந்த மனிதரை நோக்கிச் சென்று, "சற்று முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று உமக்குத் தெரியுமா? எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இ(வருக்கு ஏற்பட்டுள்ள கோபமான)து இவரைவிட்டுப் போய்விடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தா னிர் ரஜீம்" (என்பதே அந்த வார்த்தை) என்று கூறினார்கள்" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் உனக்குப் பைத்தியக்காரனாகத் தெரிகிறேனா?" என்று கேட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 31 மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (பலவீனமான) படைப்பாகவே படைக்கப்பட்டுள்ளான்.
5089. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 32 முகத்தில் அடிக்கலாகாது.
5090. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உங்களில் ஒருவர் (தம் சகோதரரை) அடித்தால்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 45
5091. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அறைவதைத் தவிர்க்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5093. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 33 நியாயமான காரணமின்றி மக்களைத் தண்டிப்பதற்கு வந்துள்ள கடுமையான கண்டனம்.
5095. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களது தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், "என்ன இது?" என்று கேட்டார்கள். "கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்" என்று சொல்லப் பட்டது.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், "அறிக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்"என்றார்கள்.
அத்தியாயம் : 45
5096. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் விவசாயிகளில் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், "இவர்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். மக்கள், "ஜிஸ்யா (செலுத்த மறுத்தது) தொடர்பாகப் பிடிக்கப்பட்டனர்" என்று பதிலளித்தனர்.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அன்றைய தினத்தில் பாலஸ்தீனத்தின் ஆட்சியாளராக உமைர் பின் சஅத் என்பவர் இருந்தார். அவரிடம் ஹிஷாம் (ரலி) அவர்கள் சென்று (மக்களுக்கு இழைக்கப்படும் வேதனையைத்) தெரிவித்தார்கள். உடனே உமைர் பின் சஅத் ஆணையின் பேரில் அந்த விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5097. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள், "ஹிம்ஸ்" பகுதியின் ஆட்சியர் ஒருவர், ஜிஸ்யா செலுத்தாதது தொடர்பாக விவசாயிகளில் சிலரை வெயிலில் நிறுத்திவைத்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள் "என்ன இது?" என்று கேட்டுவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 34 பள்ளிவாசல், கடைத்தெரு உள்ளிட்ட மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் ஆயுதத்தைக் கொண்டுசெல்பவர், அதன் முனைப் பகுதியைப் பிடித்து (மறைத்து)க் கொள்ளுமாறு வந்துள்ள கட்டளை.
5098. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அம்புகளின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க் கொள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5099. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் பள்ளிவாசலில் அம்புகளில் சிலவற்றை, அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். அப்போது அவை எந்த முஸ்லிமையும் கீறி(க் காயப் படுத்தி)விடாதபடி எடுத்துச் செல்லுமாறு அவர் கட்டளையிடப்பட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5100. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் பள்ளிவாசலில் அம்புகளைத் தர்மம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவற்றின் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொண்டுதான் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5101. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் பள்ளிவாசலிலோ அல்லது கடைத்தெருவிலோ தமது கையில் அம்புடன் நடந்துசென்றால், அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்!" என்று (மும்முறை) கூறினார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் சிலர் வேறுசிலரின் முகங்களுக்கெதிரே அம்புகளை உயர்த்திப் பிடிக்காத வரையில் நாங்கள் இறக்கவில்லை.
அத்தியாயம் : 45
5102. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம்முடன் அம்புகள் இருக்கும் நிலையில் நமது பள்ளிவாசலிலோ அல்லது கடைத்தெருவிலோ நடந்துசென்றால், அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் ஒருவரைக் காயப்படுத்திவிடாமலிருக்க "அவற்றின் முனைகளைத் தமது கரத்தால் பிடித்து (மறைத்து)க் கொள்ளட்டும்!" அல்லது "அவற்றின் முனைகளை கைக்குள் வைத்துக் கொள்ளட்டும்!"
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 35 ஒரு முஸ்லிமை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்வதற்கு வந்துள்ள தடை.
5103. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள், "ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால்,அவர் அதைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5104. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பறித்து (சகோதரரைத் தாக்கி)விடக்கூடும். அதனால் நீங்கள் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவீர்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 36 தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதன் சிறப்பு.
5105. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் ஒரு சாலை வழியே நடந்து செல்லும்போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டார். உடனே அதை (எடுத்து) தள்ளிப்போட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவருக்குப் பாவமன்னிப்பு அருளினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்" என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5107. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தி)யதற்காகச் சொர்க்கத்தில் நடமாடுவதை நான் கண்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மரமொன்றை, ஒரு மனிதர் வந்து வெட்டி (அப்புறப்படுத்தி)னார். இ(ந்த நற்செயலைச் செய்த)தற்காக அவர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5109. அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக்கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம்கள் நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராக" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5110. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (இறந்து) போய்விட்ட பின்னரும் நான் வாழக்கூடிய நிலை ஏற்படுமா என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, எனக்கு அல்லாஹ் பயனளிக்கக்கூடிய (நற்செயல்) சிலவற்றை முன்கூட்டியே சொல்லித்தாருங்கள்?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்னின்னதைச் செய்வீராக" (அறிவிப்பாளர் அபூபக்ர் அதை மறந்துவிட்டார்) என்று கூறிவிட்டு, "தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்துவீராக" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 37 பூனை முதலிய தீங்கு செய்யாத பிராணிகளை வேதனை செய்வது தடை செய்யப்பட்டதாகும்.
5111. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூனையொன்றைச் சாகும்வரை சிறை வைத்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அதை அடைத்து வைத்திருந்தபோது, அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; குடிப்பதற்கும் (எதுவும்) கொடுக்கவில்லை; பூமியின் புழுப்பூச்சிகளைத் தின்பதற்கு அதை அவள் (திறந்து)விடவுமில்லை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், பூனையொன்றைக் கட்டிவைத்தாள். அதற்குத் தீனியும் போடவில்லை; குடிப்பதற்கு எதுவும் கொடுக்கவுமில்லை; பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5113. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், தான் கட்டிவைத்த பூனையொன்றின் காரணத்தால் நரகத்திற்குள் நுழைந்தாள். அவள் அதற்குத் தீனி போடவுமில்லை. பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்துவிடவுமில்லை. இறுதியில் அது (பட்டினியால்) மெலிந்துபோய் செத்துவிட்டது.
அத்தியாயம் : 45
பாடம் : 38 பெருமை தடை செய்யப்பட்டதாகும்.
5114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியம், அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்துவிடுவேன்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 39 இறையருள்மீது யாரையும் நம்பிக்கையிழக்கச் செய்வது தடை செய்யப் பட்டதாகும்.
5115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்" என்று கூறினார். அல்லாஹ், "இன்ன மனிதனை நான் மன்னிக்கமாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்" என்றோ, அதைப் போன்றோ கூறினான்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 40 பலவீனமானோர் மற்றும் அடக்கத்தோடு வாழ்வோரின் சிறப்பு
5116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டுவாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 41 "மக்கள் நாசமாகிவிட்டனர்” என்று கூறுவது தடை செய்யப்பட்டதாகும்.
5117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மக்கள் நாசமாகிவிட்டனர்" என்று ஒருவர் கூறினால், அவர்களைவிட அவரே மிகவும் நாசமடைந்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளன.
(ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அவர் அவர்களை நாசமாக்கிவிட்டார்" ("அஹ்லகஹும்") என்பதா? அல்லது "அவரே அவர்களைவிட மிகவும் நாசமடைந்தவர்" ("அஹ்லகுஹும்") என்பதா என்று எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 42 அண்டை வீட்டார் குறித்த அறிவுரையும் அவர்களுக்கு நன்மை செய்வதும்.
5118. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு (எனது சொத்தில்) வாரிசாக்கியேவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு அவர் வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5120. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5121. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்,) என்னிடம், "நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்து, உம்முடைய அண்டை வீட்டார்களில் ஒரு வீட்டாரைப் பார்த்து அதிலிருந்து சிறிதளவை அவர்களுக்கும் கொடுத்துதவுக!" என்று அறிவுறுத்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 43 ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முகமலர்ச்சி காட்டுவது விரும்பத்தக்கதாகும்.
5122. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 44 தடை செய்யப்படாத விஷயங்களில் பிறருக்காகப் பரிந்து பேசுவது விரும்பத் தக்கதாகும்.
5123. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
தேவையுடையவர் யாரேனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், தம்முடன் அமர்ந்திருப்பவர்களை முன்னோக்கி, "(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்;அல்லாஹ் தன் தூதருடைய நாவால் தான் விரும்பியதைத் தீர்ப்பளிக்கட்டும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 45 நல்லோருடன் நட்புகொள்வதும் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகியிருப்பதும் விரும்பத்தக்கவையாகும்.
5124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது, கஸ்தூரி வியாபாரியின் நிலையையும், (உலைக்களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரி வியாபாரி, ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், உலை ஊதுபவனோ, ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்;அல்லது (அவனிடமிருந்து) துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 46 பெண் குழந்தைகளுக்கு நன்மை செய்வதன் சிறப்பு.
5125. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் என்னிடம் (ஏதேனும் தரும்படி) கேட்டு வந்தார். அவருடன் அவருடைய இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். அப்போது அவருக்கு(க் கொடுக்க) என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதை வாங்கி, அதை இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார். அதிலிருந்து சிறிதளவும் அவர் சாப்பிடவில்லை.
பிறகு அவரும் அவருடைய குழந்தைகளும் எழுந்து சென்றுவிட்டனர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "யார் இப்பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5126. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் ஏழைப்பெண் தன்னுடைய இரு பெண்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டுசென்றார்.
அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவருடைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஆகவே, அவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்". அல்லது "அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 45
5127. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 47 தமது குழந்தை இறந்தும் நன்மையை எதிர்பார்(த்துப் பொறுமை கா)ப்பவரின் சிறப்பு.
5128. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமுடைய பிள்ளைகளில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்துபோனால், அந்த மனிதரை நரகம் தீண்டாது; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர் நரகத்தில் நுழையமாட்டார்; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5129. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், "உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால்,அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?" என்று கேட்டார். "இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
5130. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே (அந்த வாய்ப்புகளைத்) தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவே,எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். அந்நாளில் நாங்கள் தங்களிடம் வருகிறோம். அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள்" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன இன்ன நாளில் நீங்கள் ஒன்று கூடுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் சென்று தமக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அப்பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
(ஒரு நாள்), "உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் பிள்ளைகளில் மூன்று பேரை இழந்துவிடுகிறாரோ அவருக்கு அப்பிள்ளைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர், "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா?" என்று (மூன்றுமுறை திரும்பத்திரும்பக்) கேட்க, "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும் தான்" என்று (மும்முறை) நபியவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 45
5131. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவ்வாறே, அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "பருவ வயதை அடையா மூன்று பிள்ளைகளை" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5132. அபூஹஸ்ஸான் (முஸ்லிம் பின் அப்தில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், "என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்துவிட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் ஒன்றை எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டு, "குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர்.அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். -(அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று- பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சுவைத் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம் என்றார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5133. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (உடல் நலமில்லாத) இந்தக் குழந்தைக்காகப் பிரார்த்தியுங்கள். (இதற்குமுன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார். "மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று சொன்னார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5134. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன்னுடைய ஆண் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவன் உடல் நலிவுற்றுள்ளான். இவனுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன். (இதற்கு முன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 48 அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும் போது, அவர்மீது தன் அடியார்களுக்கும் நேசத்தை ஏற்படுத்துகிறான்.
5135. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதரை நேசிக்கிறேன். நீரும் நேசிப்பீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில், "அல்லாஹ் இன்ன மனிதரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
அவ்வாறே, அல்லாஹ் ஓர் அடியார்மீது கோபம் கொள்ளும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளேன். நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவர்மீது கோபம் கொள்கிறார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள்,விண்ணகத்தாரிடையே, "அல்லாஹ் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளான். ஆகவே, நீங்களும் அவர்மீது கோபம் கொள்ளுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவர்மீது கோபம் கொள்வார்கள். பிறகு பூமியில் அவர்மீது கோபம் ஏற்படுத்தப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் கோபத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. (நேசத்தைப் பற்றிய குறிப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது.)
அத்தியாயம் : 45
5136. சுஹைல் பின் அபீஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு ஹஜ்ஜின்போது) அரஃபா பெருவெளியில் இருந்தோம். அப்போது (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எங்களைக் கடந்துசென்றார்கள். அவர்கள் (அந்த ஆண்டின்) ஹாஜிகளுக்குத் தலைவராக இருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து அவரை உற்றுப் பார்த்தனர்.
நான் என் தந்தை (அபூஸாலிஹ்) அவர்களிடம், "தந்தையே! (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் அவர்களை இறைவன் நேசிப்பதாகவே நான் கருதுகிறேன்" என்று சொன்னேன். என் தந்தை "அது ஏன்?" என்று கேட்டார்கள். நான், "மக்கள் மனதில் அவருக்கிருக்கும் நேசத்தின் அடிப்படையிலேயே (நான் கூறுகிறேன்)" என்றேன்.
அப்போது என் தந்தை, "நீ சொன்னது சரி தான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 49 உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும்.
5137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் நேசிக்கின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (எதிராகி)விடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5138. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனிதர்கள் வெள்ளி மூலகங்களையும் பொன் மூலகங்களையும் போன்றவர்கள். அறியாமைக்காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களே; மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால். உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை (உடலுக்குள் வந்த பின்பு) பரஸ்பரம் நேசிக்கின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (எதிராகி)விடுகின்றன.
இந்த ஹதீஸை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 50 மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்.
5139. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நேசம் வைத்துள்ளேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) இருப்பாய்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 45
5140. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அம்மனிதர் (தாம் புரிந்துள்ள நற்செயல்கள்) எதையும் பெரிய அளவில் கூறவில்லை. அவர், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) இருப்பாய்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. ஆயினும் அவற்றில், "நான் என்னை மெச்சிக்கொள்ளும் அளவுக்கு அதிகமான நற்செயல்கள் எதையும் தயார் செய்துவைக்கவில்லை" என்று அம்மனிதர் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5141. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மறுமைக்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் கொண்ட அன்பை" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமை யில்) நீ இருப்பாய்" என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இதைப் போன்று நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் நான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்கள் அளவுக்கு நான் நற்செயல்கள் புரியாவிட்டாலும் சரியே!
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்... நேசிக்கிறேன்" என்பதும் அதற்குப் பின்னுள்ளதும் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 45
5142. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது பள்ளிவாசலின் முற்றத்தின் அருகில் ஒரு மனிதரைச் சந்தித்தோம். அவர், "அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக நீ (முன்னேற்பாடாக) என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்துள்ளாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் (பதிலளிக்காமல்) அடங்கிப் போனவரைப் போன்றிருந்தார்.
பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! அதற்காக நான் பெரிதாகத் தொழுகையையோ நோன்பையோ தானதர்மங்களையோ முன்னேற்பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5143. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் வாயிலாகவும் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
பாடம் : 51 நல்ல மனிதருக்குக் கிடைக்கும் பாராட்டு நற்செய்தியே; அதனால் அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை.
5144. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து வரும் அனைத்து அறிவிப்புகளிலும் (அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பைத் தவிர), "அதற்காக அவரை மக்கள் நேசிக்கின்றனர்" என்று காணப்படுகிறது.
அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸ் உள்ளதைப் போன்றே, "அதற்காக அவரை மக்கள் பாராட்டுகின்றனர்" என்று இடம் பெற்றுள்ளது.
Previous Post Next Post