ஸுன்னா ஓர் அறிமுகம்


-மௌலவி SLM நஷ்மல் (பலாஹி)

(முஹம்மத்) அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை (53:3-4)

இஸ்லாமிய மார்க்கத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரம் ‘ஸுன்னா’ஆகும். இஸ்லாமிய உலகிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இஸ்லாமிய எழுச்சியும், மார்க்கம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுவருகின்ற இக்காலகட்டத்தில், தவ்ஹீத் பிரச்சாரத்தின் அடிப்படைகளில் ஒன்றான, ‘ஸுன்னா’ வின்பால் மக்களை அழைக்க வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.

நபிகளாரின் ‘அல்ஹதீஸ்’ எனப்படும் ‘ஸுன்னா’ விடயத்தில் நாம் அதீத கவனம் செலுத்தக் காரணம் என்னவெனில், இஸ்லாமிய மார்க்கத்தில்‘ஸுன்னா’வுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பரிய மகத்துவமும், அந்தஸ்த்து மேயாகும்.

‘ஸுன்னா’ என்பது திருமறை குர்ஆனுக்கான விளக்கவுரையாகும். ஏனெனில், திருமறை வசனங்களை விளக்கும் விதமாகவும், அதன் அந்தரங்கங்களை வெளிக் கொணர்வதாகவும், வரையறைகளை தெளிவு படுத்துவதாகவும் அல்குர்ஆனுக்கு செயல் வடிவம் கொடுக்கின்றதாகவும்‘ஸுன்னா’ அமைந்துள்ளது.

‘ஸுன்னா’வினை விடுத்து அல்குர்ஆனோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ள முடியாத இஸ்லாமிய மார்க்கத்தில் தூதரைப் பின்பற்றுவது பற்றி திருமறை என்ன கூறுகின்றது என்பதனையும், இறைத்தூதரின் பணிகள் தொடர்பாக ஆராய்வதன் மூலம் ஸுன்னாவின் முக்கியத் துவத்தினை உணர்ந்து கொள்ளலாம்.

01. திருக்குர்ஆனைப் போன்று ‘ஸுன்னா’வும் அல்லாஹ்வின் வஹியாகும்.

‘அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை’ (53:3,4).

02. திருமறை குர்ஆனை மக்களுக்கு விளக்கும் பணி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதே பொறுப்பாக்கப்பட்டதாகும்.

‘மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப்போதனையை உமக்கு அருளினோம்’ (16:44).

‘எந்த தூதரையும், அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கி கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்’ (14:4).

03. இறைவனுக்கு வழிப்பட்டவராக வேண்டுமென்றால் தூதருக்கும் வழிப்பட்டேயாக வேண்டும்.

‘இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவராவார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை’ (4:80).

04. பிறப்பு முதல் இறப்பு வரை எமது தனிப்பட்ட, சமூக, அரசியல் விவகாரங்கள், வணக்கவழிபாடுகள் அனைத்திலும் சர்ச்சை, தெளிவின்மை ஏற்படும் போது அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவினை நோக்கியே பயணிக்க வேண்டும்.

இறை விசுவாசத்தின் அடிப்படையும் அதுவேதான்.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும்(முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வி’யத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’ (4:59).

05. தூதரின் ஏவல், விலக்கல்களை கவனத்திற் கொள்ளாது விட்டால் அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்கு உட்பட நேரிடும்.

‘இத்தூதர் உங்களுக்கு எதைக்கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களை தடுத்தாரோ(அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்’ (59:07).

06. தூதருக்கு மாறு செய்தால் குழப்பம் ஏற்படுவதுடன், கடினமான வேதனைக்கும் இலக்காகவேண்டி வரும்.

‘உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்’ (24:63).

07. அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் தீர்ப்பை உளமாற ஏற்கவேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தில் தீர்ப்புச் செய்தால் மனோ இச்சை, பெரியார்கள், மத்ஹபுகள் போன்றவற்றிற்கு அடிமையாகாது. அப்படியே கட்டுப்படுவதுதான் நம்பிக்கை கொண்ட ஆண்களினதும், பெண்களினதும் கடமையாகும்.

‘அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்’ (33:36).

நாம் மேற்கண்ட வசனங்களிலிருந்து ‘ஸுன்னா’வின் முக்கியத்துவத்தினையும் இஸ்லாமிய மார்க்கத்தில் அது பெற்றிருக்கின்ற மிக உயர்ந்த அந்தஸ்த்தினையும் அறிந்து கொள்ளும் அதே வேளை, சமுதாயத்தில் ‘ஸுன்னா’வின் யதார்த்தமும், அது பற்றிய விழிப்புணர்வும் இல்லாத போதுதான் தனிமனிதர்களுக்குப் பின்னால் சென்று ‘பித்அத்’களை உயிர்ப்பித்து தமது அமல்களின் பரக்கத்துக்களை இழப்பதனைப் பார்க்கின்றோம்.

எனவேதான் எமது பிரச்சாரத்தில், மக்களை ‘ஸுன்னா’வின்பால் அழைக்கின்ற பெரும் பணியைச் செய்து வருவதனை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். அல்லாஹ்வின் தூதருடைய ‘ஸுன்னா’வின் மீது முஸ்லிம்கள் தமது முழுக் கவணத்தையும் செலுத்தும் போதுதான் இச்சமூகம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்ளும்.

இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையில் ஸுன்னாவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கின்ற அதேவேளை ஸுன்னாவிற்கெதிரான அம்சங்கள், மக்கள் மத்தியில் ஸுன்னா சென்றடையத் தடையாகவுள்ள அம்சங்கள் போன்றவற்றை சற்று விரிவாக நோக்குவோம்
‘ஸுன்னாஹ்’ பற்றிய சொல் விளக்கம்

‘அல்லாஹ்வையும்,  இறுதி  நாளையும்  நம்பி, அல்லாஹ்வை அதிகம்  நினைக்கும்  உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)

‘ஸுன்னா’ பற்றிய முக்கியத்துவம், இஸ்லாமிய சட்டவாக்கத்தில் அது கொண்டுள்ள அளப்பரிய பங்கு போன்றவற்றை சமுதாயம் சரிவரப் புரிந்து கொள்ளாததன் காரணத்தினால்தான் மக்களிடம் பித்அத்கள் செய்யாதீர்கள் எனக் கூறும்போது சமுதாய மக்கள் சில நேரங்களில் அது பற்றி கரிசனை கொள்வதில்லை.

பித்அத்தின் பாரதூரம் புரியாததால் ‘ஸுன்னா’ வினை நமது சமுதாயம் அலட்சியம் செய்கின்றது. எனவே, இது தொடர்பாக கவனம் செலுத்த முன்பு ‘ஸுன்னா’ என்றால் என்ன? அதன் வகையீடுகள் யாவை? என்பன குறித்து நோக்குவோம்.

பொதுவாக மொழி வழக்கில் ‘ஸுன்னா’  என்பது ஏதாவது ஒரு வழிமுறை அல்லது நடைமுறை என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. பின்வரும் நபிமொழியின் மூலம் ‘ஸுன்னா’ என்கின்ற பதத்தின் பொருளினை அறிந்து கொள்ளலாம்.

‘நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய வழிமுறையை செய்கிறாரோ அவருக்குப் பின் அவ்வாறு செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடைகின்றது.  இவர்களது கூலிகளில் இருந்து எதுவும் குறைக்கப்படாது. யார் இஸ்லாத்தில் ஓர் தீய நடைமுறையைச் செய்கிறாரோ பின்னர் அதுபோல் செய்பவர்களுடைய கூலிகளும் அவரைச் சென்றடை கின்றது. இவர்களது பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப்படாது.’ (இப்னுமாஜா)

இஸ்லாமிய ஷ‌ரீஆவில் ‘ஸுன்னா’வானது நபிகளார்(ஸல்) அவர்கள் ஏவிய, தடுத்த செயற்பாடுகள், அவர்களது வார்த்தைகள், அனுமதித்த விடயங்கள், நபியவர்கள் பற்றிய விபரங்கள் என்கின்ற பரந்த கருத்தில் அமைந்துள்ளது. இதனையே அண்ணலார் (ஸல்) அவர்கள்  எனது ஸுன்னாவைப் பற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள்.’ (அஹ்மத்)

இங்கு ஸுன்னாவை புரிய முற்படும்போது நபிகளார்(ஸல்) அவர்கள் காட்டித்தராத  அல்லது அவர்களது வழிமுறைக்கு எதிரான ‘பித்அத்’ எனும் நூதன அனுஷ்டானங்களுக்கு புறம்பானது என்றும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது குறித்த ஒரு மார்க்க விவகாரம் நபிகளார்(ஸல்) அவர்களின் முன்மாதிரி யுடன் நடைபெறும்போது ‘ஸுன்னா’ என்றும், நபிகளார்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணாகககாணப்படும் போது ‘பித்ஆ’ என்றும் அழைக்கப்படும். மேலும், கட்டாயம் செய்ய வேண்டியவிடயங்கள் தவிர, செய்தால் நன்மைகள் கிடைக்கப் பெறுகின்ற ‘நப்ல்’ என்றழைக்கப்படும் குறுகிய கருத்திலும் ‘ஸுன்னா’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.

கண்ணியமிகு அறிஞர்கள் அந்தந்த வட்டத்தில் ‘ஸுன்னா’  எனும் பதத்தை தத்தமது துறைகளை அடிப் படையாகக் கொண்டு விளக்கிச் சென்றனர். அந்த வகையில் ஹதீஸ்கலை அறிஞர்கள் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வு, பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், செய்திகள், வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகள் போன்ற அனைத்து துறைகளையும் கவனத்திற் கொண்டு முன்மாதிரி என்ற வகையிலும் கடைப்பிடிக்க வேண்டியவைகள் என்ற வகையிலும் அறிமுகம் செய்தனர்.

‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)

ஸுன்னா ஒரு சட்டமூலாதாரம் என்ற வகையில் முஜ்தஹிதுகள் ‘ஷரீஆ சட்டங்களை தொகுப்பதற்காகவும், மஸாயில்களை ஆய்வு செய்யும் நோக்கத்தோடும் விதிகளை வகுத்த அறிஞர்கள் சட்டவாக்கம் செய்ய ஏதுவாக காணப்பட்ட நபிகளார்(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றை ஸுன்னா என வரைவிலக் கணம் செய்தனர். சட்டக்கலை அறிஞர்கள் மாத்திரம் மக்களின் செயற்பாடுகளில் அல்லது வணக்க வழிபாடு களில் கட்டாயமானதா? இயலுமானதா? அல்லது தடை செய்யப்பட்டதா? என்ற அம்சங்களை கூற வரும்போது ‘வாஜிப்’ அல்லது ‘பர்ழ்’  போன்ற பதங்களுக்கு எதிர்ப் பதமாக ஸுன்னாவை அறிமுகம் செய்தனர்.

எது எவ்வாறாயினும் ஏனைய இரு சாராருடைய பார்வையினை விட ஹதீஸ் கலை அறிஞர்களது அவதானமும், நோக்கிய விதமும் பரந்துபட்டது.

‘என் ஸுன்னாவை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்   சொன்னார்கள்.’ ஸஹீஹுல் புஹாரி-5063, ஸஹீஹ் முஸ்லிம்-2714

அகீதா (இறைக்கொள்கை) அறிஞர்கள் ஸுன்னாவைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.

அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறும் இறைக்கொள்கையினை ஆரம்பகாலத்தில் மக்கள் எவ்வித சிரமமுமின்றி விசுவாசித்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், நபித்தோழர்கள் காலத்திலும் அகீதா, ஈமான் தொடர்பான அம்சங்களில் எந்தவித மாற்றுக் கலாசார கொள்கைகளும் ஊடுருவவில்லை.

அழ்ழாஹ் அர்ஷில் உள்ளான் என்றால் அப்படியே நம்பினார்கள். நபித்தோழர் முஆவியா பின் அல்கம்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

‘எனது ஒரு அடிமையை நான் தாக்கிவிட்டேன். அது எனக்கு சிரமமாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதை அறிந்து அப்பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள் எனக் கூறி, அவளிடம் அழ்ழாஹ் எங்கே? எனக் கேட்டார்கள். அப்பெண் அழ்ழாஹ் வானத்தில் என்றாள். நான் யார் என்று கேட்க நீங்கள் அழ்ழாஹ்வின் தூதர் எனப் பதிலளித்தாள். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள்  ‘அவள் விசுவாசி அவளை விடுதலை செய்’ எனக் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்-935, அபூதாவூத்-795, அஹ்மத்-7565)

பிற்பட்ட காலங்களில் தர்க்கவியல், தத்துவவியல் போன்ற கலைகள் முஸ்லிம் சமுதாயத்திற்குள் புகுந்ததன் பின்பு, அகீதா தொடர்பான பல அம்சங்களை மறுத்தும், விமர்சித்தும் பல குழுக்கள் தோற்றம் பெற்றன. இவற்றிற்கு உதாரணமாக, கதரிய்யா, முஃதஸிலா, அஷ்அரிய்யா போன்றவைகளை குறிப்பிடலாம். இவ்வாறு பிழையான அகீதாவினை உடையவர்கள் ‘அஹ்லுல் பித்ஆ’ என்றும், சரியான அகீதாவினை உடையவர்களினை ‘அஹ்லுல் ஸுன்னா’ என்றும் அழைக்கப்படலாயினர்.இக்கோணத்தில் தான் தலாக்கில் கூட ‘தலாக் பிதஈ’ என்றும் ‘தலாக் ஸுன்னி’ என்றும் அழைக்கப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் ஸுன்னா என்ற பதத்தை பயன்படுத்திய விதம்:
‘நபி(ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர்(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார்.

அப்போது அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீஙகள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்- அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அழ்ழாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அழ்ழாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் ‘ஸுன்னாவை’ யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி), நூற்கள்: புஹாரி-5063, முஸ்லிம்-2714)

‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந் தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம். நான், அழ்ழாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அழ்ழாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான்.

இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை(குழப்பம்) இருக்கின்றதா என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ஆம் (இருக்கின்றது) என்று பதிலளித்தார்கள். நான், அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை(குழப்பம்) இருக்கும் என்று பதிலளிக்க நான் அந்தக் கலங்கலான நிலை என்ன என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ஒரு கூட்டத்தார் எனது ‘ஸுன்னா அல்லாத’ ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய், தீமையையும் நீ காண்பாய் என்று பதிலளித்தார்கள். நான், அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் நரகத்தின் வாசல்களுக்கு(வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

நான், அழ்ழாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள் என்று பதிலளித்தார்கள். நான் இந்த(மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன(செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை(கூட்டமைப்பை)யும் அவர்களுடைய தலைவரையும்(இறுகப்) பற்றிக்கொள் என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நான் அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை(பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்(என்ன செய்வது) என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு(விலகி) ஒதுங்கிவிடு ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக்கொண்டாலும் சரி(எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே) என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) நூல்: புஹாரி-7084)

நபித்தோழர்களின் வார்த்தைகளில் ‘ஸுன்னா’:

‘தமது(தொழுகையில்) ருகூஉவையும், சஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா(பின் அல்யமான்(ரலி)) அவர்கள், அவர் தொழுது முடித்தபோது, நீர்(உரியமுறையில்) தொழவில்லை, என்று கூறினார்கள். மேலும் அவர்கள்,(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால் முஹம்மது(ஸல்) அவர்களுடைய ‘ஸுன்னாவுக்கு’  மாற்றம் செய்தவராகவே இறக்கின்றீர் என்று சொன்னதாகவும் நான் எண்ணுகிறேன்.’ (அறிவிப்பவர்: அபூவாயில் ஷகீக் பின் சலமா-ரஹ்)  நூல்:புஹாரி-389)

‘நான் உஸ்மான்(ரலி) அவர்களுடனும், அலீ(ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து(கிரான்)செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ்(தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ(ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் கட்டி ‘லப்பைக்க பி உம்ரத்தின் வஹஜ்ஜத்தின்’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களின் ‘ஸுன்னாவை’ யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடமாட்டேன் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: மர்வான் பின் ஹகம், நூல்: புஹாரி-1563)

இவ்வாறாக நபிமொழிகளிலும், நபித்தோழர்களின் கூற்றுக்களிலும் ஸுன்னா என்ற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம்.

‘மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்’ (அல்குர்ஆன் 16:44)

நபிகளார்(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ‘ஸுன்னா’ என்ற பதத்தை பயன்படுத்திய விதம் பற்றி அறிந்து கொண்டோம்.

‘ஸுன்னா’ என்பது அல்குர்ஆனுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியது என்ற வகையில் அல்குர்ஆனோடு இணைந்து இஸ்லாமிய மார்க்கத்தில் எத்தகைய பங்கை ஆற்றுகின்றது என்பதைப் பார்ப்போம்.  பின்வரும் மூன்று முறைகளில் ஸுன்னாவின் பயன்பாடு அமைந்து காணப்படும்.

01. திருமறைக்குர்ஆனில் இடம்பெறுகின்ற அம்சங்களை உறுதி செய்வதாக அமைந்திருத்தல்.

அதாவது அல்குர்ஆன் கூறுகின்ற குறித்ததொரு விடயத்தை ஸுன்னாவும் வேறு விதத்தில் எடுத்துச் சொல்வதாகும். அந்த வகையில் அல்குர்ஆன் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்’  (அல்குர்ஆன் 02:43),

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற் காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமை யாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’  (அல்குர்ஆன் 02:183)

மற்றும் ‘அந்த ஆலயத்தில் அழ்ழாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.’ (அல்குர்ஆன்  03:97) 

என்றெல்லாம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற விடயங்களை நபிமொழியும் பின்வருமாறு கூறுகின்றது. ‘அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.

1. அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலைநிறுத்துவது. 

3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.

4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 

5. ரமளானில் நோன்பு நோற்பது ஆகியவையாகும்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-08)

அதே போன்று ‘நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம்.’ (அல்குர்ஆன்  49:10) என திருமறைக் குர்ஆன் குறிப்பிட, நபிமொழியும் ‘ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்’ (அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-5010) எனக் கூறுகின்றது.

02. அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற அம்சங்களை விளக்கி வைக்கும் ஸுன்னா இவ் இரண்டாவது வகையில் அல்குர்ஆன் பொதுப்படையாகக் கூறுவதை ஸுன்னா விளக்குவதாகவும் அல்குர்ஆனின் பரந்துபட்ட பொருளை  ஸுன்னா குறிப்பாக்குவதாகவும், சிரமமான அம்சங்களை விபரிப்பதாகவும் அமைந்து காணப்படும். எனவே, இப்பகுதியினை பின்வரும் குறிப்புக்களினூடாக அவதானிக்கலாம்.

அ) மிகச்சுருக்கமாகவும், பொதுப்படையாகவும் அல்குர்ஆன் முன்வைக்கின்ற அம்சங்களை விளக்கி நிற்கும் பொறுப்பை ஸுன்னா ஏற்றுக்கொள்ளும். தொழுகை விடயத்தில் அல்குர்ஆனைப் பொறுத்த வரைக்கும் ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்!’ (அல்குர்ஆன் 02:43),

‘நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக வுள்ளது.’ (அல்குர்ஆன்  04:103),

மற்றும் ‘நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.’ (அல்குர்ஆன் 23:1,2) 

போன்ற பொதுவான வசனங்களை அல்குர்ஆன் எடுத்துச் சொன்னாலும் தொழுகையின் நேரங்கள், ரக்அத்துக்களின் எண்ணிக்கைகள், செயன்முறை ஆகிய அனைத்து அம்சங்களையும் ஸுன்னாவே விபரிக்கின்றது.

இதனையே அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ், நூல்: ஸஹீஹுல் புஹாரி-631) 

அதே போன்று ஸகாத் விடயத்தில் ஸகாத் விதியாகும் பொருட்கள், அளவுகள் போன்றவற்றையும் ஹஜ் முறைமைகள், நோன்பின் பரந்துபட்ட அம்சங்கள், சுத்தம், திருமணம், வியாபாரம், குற்றவியல்  தண்டனை முறைகள் இவ்வாறு அனைத்து அம்சங்களையும் விபரிக்கின்ற பணி  ஸுன்னாவையே சாரும்.

ஆ) குறித்தவொரு சட்டத்தின் வரையறைகளை சுருக்கமாகக் கூறுதல். அல்குர்ஆனில் அந்நிஸா அத்தியாயத்தில் ‘இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அழ்ழாஹ் வலியுறுத்துகிறான்.’ (அல்குர்ஆன் 04:11) என்று குறிப்பிடுகின்ற இச்சட்டம் நபிமார்களை உள்ளடக்காது என பின்வரும் நபிமொழி வரையறுக் கின்றது.

‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்’ (அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3712)

மேலும், திருடுகின்ற ஆண்-பெண் இருபாலாரினதும் கைகளை வெட்டுமாறு குறிப்பிடும் அல்குர்ஆன் ‘திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்’ (அல்குர்ஆன் 05:38) எனக்கூறுகின்றது. எக்கையை, எதுவரை வெட்ட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நபிமொழியே தெளிவுபடுத்துகின்றது.

இ) மேலெழுந்தவாரியாக அல்குர்ஆன் கூறும் அம்சங்களை ஸுன்னா குறிப்பாக்குகிறது. திருமறைக்குர்ஆன் வஸிய்யத் செய்தல் பற்றி ‘(இவையாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே’ (அல்குர்ஆன் 04:11) என்று குறிப்பிட, ஸுன்னாவானது அந்த வஸிய்யா மொத்தப் பொருளில் மூன்றிலொரு பகுதியாகவே இருக்க வேண்டும் (அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3349) என ஸுன்னா மட்டுப்படுத்துவதை ஹதீஸே குறிப்பிடு கின்றது.

ஈ) விளங்கச் சிரமமானதை விளக்கி வைத்தல். ‘நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (06:82) எனும் இறை வசனம் அருளப்பட்ட போது, நாங்கள் அழ்ழாஹ்வின் தூதரே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தான் இருக்கிறார் என்று கேட்டோம். அதற்கு அவர்கள், (அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. தங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்து விடாதீர்கள் என்று தான் அதற்குப் பொருள். லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ‘என் அருமை மகனே! அழ்ழாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்’ என்று குறிப்பிட்டதை நினைவூட்டு வீராக!’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3360)

மேலும், அல்பகறா வசனத்தில் இடம்பெறும் ‘வைகறை எனும் வெள்ளைக் கயிறு, கறுப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்’ (அல்குர்ஆன்  2:187) கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு என்கின்ற அம்சம் இரவையும், பகலையுமே குறிக்கின்றது என்பதை அல்ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை, என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோதுஇ நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக்கொண்டேன். இரவில் அதைப் பார்க்கலானேன். எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (கறுப்புக் கயிறு என்பதன் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்’ (அறிவிப்பவர்:  அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1916)

அல்குர்ஆனில் நிரூபணமான சட்டங்களை ஸுன்னாவின் மூலம் மாற்றப்படுவதென்பது குறைந்தளவிலேயே இடம்பெறுவதால் பல அறிஞர்கள் இதனையொரு தனிப்பகுதியாகக் கருதுவதில்லை. இன்ஷா அழ்ழாஹ் எமது அடுத்த இதழில் அல்குர்ஆன் குறிப்பிடாத ஸுன்னாவினால் மாத்திரம் சட்டமாக்கப்படும் அம்சங்கள் பற்றி நோக்குவோம்.

அல்குர்ஆன் கூறுகின்ற அதே அம்சங்களை ஸுன்னாவும் உறுதி செய்வது, அல்குர்ஆன் கூறுகின்ற அம்சங்களை விட மேலதிக விளக்கங்களை ஸுன்னா தெளிவுபடுத்துவது ஆகிய இரு அம்சங்களையும் நாம் கடந்த இதழில் நோக்கினோம்.

இவ்விதழில் ஸுன்னாவானாது தனித்து நின்று எவ்வாறு சட்டங்களை ஆக்கும் என்பதைக் கவனிப்போம்.

அல்குர்ஆனைப் பொறுத்தவரைக்கும் கால சூழ்நிலைகளுக்கேற்ப அர்ஷில் உள்ள அழ்ழாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதநூலாகும். மக்கா காலகட்டத்தில் இறக்கியருளப்பட்ட வசனங்களை நோக்கினால் இறைவனை மட்டும் வணங்குவது பற்றியும், ஓரிறைக் கொள்கையினை மனித நெஞ்சங்களில் ஆழப்பதிப்பதை நோக்காக கொண்டிருப்பதனையும் காணலாம். எனவேதான், அல்குர்ஆன் இரத்தினச்சுருக்கமாகவும், மேலோட்டமாகவும் பேசியவற்றையெல்லாம் ஸுன்னாவே மிகவிபரமாகத் தெளிவுபடுத்துகின்றது.

அவ்வாறே அல்குர்ஆன் குறிப்பிடாத பல்வேறு அம்சங்களை ஸுன்னாவே முதன்முதலில் அறிமுகம் செய்கின்றது. இதனை அறிஞர்கள் ‘ஸுன்னா முஷர்ரிஆ’ என்று அழைக்கின்றனர்.

ஹலால், ஹராம் என்பவற்றைத் தீர்மானிக்கின்ற விடயத்தில் திருமறைக்குர்ஆனுக்கு நிகராக ஸுன்னாவும் சட்டமியற்றும் என்பதே அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்பவர்களின் நிலைப்பாடாகும்.

இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘அறிந்து கொள்ளுங்கள் நான் அல்குர்ஆனையும், அது போன்ற ஒன்றையும் கொடுக்கப்பட்டுள்ளேன்’என்று குறிப்பிட்டார்கள்.’(அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதி கரிப் (ரழி), நூல்: அஹ்மத் 16841)

அல்குர்ஆன் வசனங்களை விபரிக்கின்ற மற்றும் வரையறைகளை விதிக்கின்ற ஒரு பெரும்பணியை ஸுன்னாவால் மேற்கொள்ள முடியுமாக இருந்தால், அல்குர்ஆன் கூறாத சட்டங்களை கூட வஹியென்ற வகையில் ஸுன்னா கொண்டு வரும்.

இது விடயத்தில் ஹவாரிஜுகள், முனாபிக்குகள் மற்றும் ஸிந்தீக்குகள் மாற்றுக் கருத்தில் இருந்தார்கள். ஸுன்னா இரண்டாம் நிலை வஹியென்று கூறிய அவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் அறிமுகம் செய்தார்கள். ‘என்னைத் தொட்டு ஏதேனும் விடயம் உங்களிடம் வந்தால் அதனை அல்குர்ஆனோடு பொருத்திப்பாருங்கள்.

அல்குர்ஆனோடு உடன்பட்டால் அதனை நான் சொல்லியிருப்பேன். அல்குர்ஆனோடு முரண்பட்டால் அதனை நான் சொல்லவில்லை என்று எடுத்து கொள்ளுங்கள்’; என்பதே அவ் இட்டுக்கட்ப்பட செய்தியாகும். அல்குர்ஆன் மட்டும் போதும் என்கின்ற பயங்கர வழிகேட்டின் அடிப்படையும் இதுவேயாகும்.

இன்று அரபு நாட்டிலும், தமிழ் நாட்டிலும் அல்குர்ஆன் மட்டும் போதும் என்று கோஷமிடுகின்ற ஒரு சிந்தனைப்பிரிவினர் அல்குர்ஆனின் ஒரு சில வசனங்களை மாத்திரம் மேலோட்டமாக விளங்கிக் கொண்டு (உதாரணமாக: இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர் வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம். அல்குர்ஆன் 16:89)  ஸுன்னா தேவையற்றது என்று கூறுகின்றனர். ஆனால் ஸுன்னாவில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை அவர்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, செத்த பிராணிகள், இரத்தம் போன்றவற்றை உண்பதை அல்குர்ஆன் முற்றாக தடைசெய்கின்றது.

‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அழ்ழாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.’(அல்குர்ஆன் 05:03)

ஆனால், இப்பொதுத் தடையிலிருந்து செத்த மீன்களும், கல்லீரல், மண்ணீரல்  என்பனவும் விலக்களிக்கப்பட்டுள்ளன  என ஸுன்னா பறைசாற்றுகின்றது. இந்தக் குர்ஆனிய்யீன்கள் தங்களது குற்றில் உண்மையாளர்களாக இருந்தால் உயிருள்ள மீனையே சாப்பிட வேண்டும். ஈரல் வகைகளை உண்ணக் கூடாது. இத்தகைய வழிகெட்ட சிந்தனையிலிருந்து அழ்ழாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக!

இவ்விடத்தில் வாசகர்கள் மற்றுமொரு விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது அல்குர்ஆன், ஹதீஸில் இல்லாத அம்சங்களை இஜ்மா, கியாஸ் மற்றுமுள்ள சட்ட மூலாதாரங்களால்தான் புரிந்து கொள்ள முடியும் எனக்கூறுகின்றவர்கள்  பெரும்பாலும் ஸுன்னாவை இரண்டாம் நிலை வஹியாகவே கருதுகின்றார்கள்.ஆனால்,
‘அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.’ (அல்குர்ஆன் 53:3,4) 

எனும் வசனமானது ஸுன்னாவும் அல்குர்ஆனுக்கு நிகரான வஹியே என்பதை உணர்த்துகின்றது.

ஸுன்னாவின் பணி பற்றிக்கருத்துக் கூறுகையில் அறிஞர் அவ்சாயி அவர்கள் ‘ஸுன்னா அல்குர்ஆனின் பால் தேவையாவதை விட அல்குர்ஆன் ஸுன்னாவின் பால் அதிகம் தேவையுடையது’ என்றும், யஹ்யா பின் கதீர் அவர்கள் ‘அல்குர்ஆன் தொடர்பாக தீர்ப்புக் கூறக்கூடியது ஸுன்னாவே’ எனக் கூறுகின்றார்கள்.

அந்த வகையில் ஸுன்னாவால் மாத்திரம் சட்டமாக்கப்பட்ட சில அம்சங்களை பின்வருமாறு நோக்கலாம்.

01.ஒரு பெண்ணையும் அவளது தாயின் சகோதரியையும், ஒரு பெண்ணோடு அவளது தந்தையின் சகோதரியையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

‘(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அழ்;ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்:ஸஹீஹுல் புஹாரி 5108)

02.பறவைகளில் கோரைப் நகங்களால்; கிழித்தும், மிருகங்களில் கோரைப் பற்களால் குதறியும் சாப்பிடும் பிராணிகளை உண்ணுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

‘விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடானெத்) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 3914)

03.நாட்டுக் கழுதைகள் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணவேண்டாமெனத் தடை செய்தார்கள்’ (அறிவிப்பவர்:  அப்துல்லாஹ்பின் உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 5522)

04.திருமணம் முடித்த விபச்சாரியை கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
‘(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ (ரலி) அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன் என்று சொன்னார்கள்’  (அறிவிப்பவர்:  ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி 6812)

05.காலுறை அணிந்துள்ளவர் வுழுச் செய்யும் போது இறுதியாகக் காலைக் கழுவாமல் காலுறை மேல் தண்ணீரைத் தடவுதல்.
‘முஃகீரா (ரலி) அவர்கள் கூறியதாவது, நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்ளுடன் இருந்தேன். அவர்கள் (உழூ செய்ய முற்பட்டபோது) அவர்களது இரு காலுறைகளையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும்போதுதான் காலுறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு, (ஈரக்கையால்) அவ்விரு காலுறைகள் தடவி (மஸஹ் செய்யலா)னார்கள்.’ (அறிவிப்பவர்:  முகீரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 206) 

06.சூரிய, சந்திர கிரகணத் தொழுகைகள் அறிமுகம் செய்யப்படல்
‘நாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக்கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எஙகளுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு சூரியனும் சந்திரனும் அழ்ழாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணஙகள் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீஙகள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும் வரை நீஙகள் தொழுங்கள், பிரார்த்தியுஙகள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்:  அபூபக்ரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 1040)

07.பொருளாதார நடைமுறைகள், பங்குடமை, கூட்டு முறை மற்றும் பங்கிடலில் முன்னுரிமை பற்றிய ஹதீஸ்கள்
‘பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டுவிட்டால் பஙகாளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலையில்லை, என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) விதித்தார்கள்.’ (அறிவிப்பவர்:  ஜாபிர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 2257)

08. தவறிப் போன பொருட்கள், உயிரினங்கள் என்பவைகள் தொடர்பான சட்டங்கள்
‘நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள்.

நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள் என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள்,(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா, அல்லது ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது எனக்கு நினைவில்லை) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி 2426) 

இவ்வாறாக, மேலுள்ள நபிமொழிகள் மூலம் ஸுன்னாவினது அளப்பரிய முக்கியத்துவத்தினை அறிந்த பின்பும் வஹியில் ஒன்றினை விட்டு ஒன்றினை எடுக்க கூடிய வழிகேட்டை என்னவென்று சொல்வது?

நபிகளாரின் செயற்பாடுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

‘அழ்ழாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்திழ்ழாஹ் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2946)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தல் கற்பித்தல் மற்றும் தஸ்கிய்யா (தூய்மைப்படுத்தல்) போன்ற பணிகளைக் கொண்டு அழ்ழாஹ்வால் பணிக்கப்பட்டிருந்தார்கள். இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்  ‘அழ்ழாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்திழ்ழாஹ் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2946)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அமானத்தை ஏற்று தனது பணியை முழுமையாக நிறைவு செய்தார்கள். ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர் : அபூபக்ரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078) மேலும் தனக்கு அருளப்பட்ட இறைசெய்தியை எற்றிவைக்க தன்னாலான முழு வழிவகைகளையும் பயன்படுத்தி சொல்லால் சமூகத்திற்கு நேர்வழிகாட்டியது போன்று செயலாலும் நேர்வழிகாட்டி பின்பற்றப்படக்கூடியவர் என்று அழ்ழாஹ்வால் அழைக்கப்பட்டார்கள்.

எனவே இமாம் எனும் பதமானது அவரது செயற்பாடுகள் மற்றவர்களால் பின்பற்றப்படக்கூடியது என்பதைக் குறித்து நிற்கின்றது. இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.

‘பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள் அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூவு செய்)யுங்கள் அவர் ‘சமி அழ்ழாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொன்னால் நீங்கள் ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’ எனச் சொல்லுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள் என்று  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-734)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது செயற்பாடுகள் மற்றவர்களால் அவதானிக்கப்படக் கூடியவை என்பதனால் நடந்து கொண்ட விதம்:

1. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தேகம் வருகின்ற இடங்களை தவிர்ந்து கொள்வார்கள். யதார்த்தத்தில் ஆகுமான ஒன்றைக் கூட அது வெறுக்கப்படுமானால் வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள்.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களை சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச்செல்ல எழுந்தேன். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்) அப்போது அன்சாரிகளின் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிதானமாகச் செல்லுங்கள் இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான் என்று சொன்னார்கள். 

இதைக் கேட்ட அவ்விருவரும் அழ்ழாஹ் தூயவன். அழ்ழாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்) என்று சொன்னார்கள். அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஷைத்தான் மனிதரின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான். அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான். என்று நான் அஞ்சினேன் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-3281)

2. வெளிப்படையான செயற்பாடுகளில் தன்னால் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது கவனத்திற் கொள்வதற்கு ஆசைப்படுவார்கள்.
‘உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும்இ இரக்கமும் உடையவர்.’(அல்குர்ஆன் 09:128)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர்.

அந்த மூன்றாம்நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின்இ ‘அம்மா பஃது’ (இறைவாழ்த்துக்குப் பின்) எனக் கூறிவிட்டுஇ நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. எனினும்இ (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை) என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-924)

3.தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளில் பெரும்பாலும் முழுமையாகவும் பூர்த்தியாகவும் செய்பவர்களாக இருந்தார்கள். ‘ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-6462)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஒரு தடவை மற்றும் இரு தடவைகள் உளூ உறுப்புக்களை கழுவுவதன் மூலம் உளூச் செய்துள்ளார்கள். மாறாக அதிகமான தடவைகள் உளூவின் உறுப்புக்களை மூன்று தடவை கழுவுவதன் மூலமே உளூச் செய்துள்ளார்கள்.
ஒரு தடவை கழுவி உளூச் செய்தல்

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒவ்வொரு உறுப்பையும்)தலா ஒரு முறைக் கழுவி உளூ செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-157)

இரு தடவைகள் கழுவி உளூச் செய்தல்
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலையைத் தவிர மற்ற உறுப்புக்களை)தலா இரண்டு முறை கழுவி உளூ செய்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் ஸைத் (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-158)

மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்தல்
‘உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (உளூச் செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். (பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்துஇ வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஹும்ரான் (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-159) 

4. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது செயற்பாடுகளிலிருந்து தவறான விளக்கம் எடுக்கப்படாத அளவிற்கு விபரமாக விளக்குவார்கள்.
ஜனாஸாவிற்காக அழ வேண்டாமென தடுத்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் வரையறை தொடர்பாக பின்வருமாறு தெளிவுபடுத்து கின்றார்கள். ‘சஅத் பின் உபாதா (ரழி) அவர்கள் நோயுற்ற போது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் சஅத் பின் அபீவக்காஸ் அப்துழ்ழாஹ் பின் மஸ்ஊத் (ரழி) ஆகியோருடன் சென்றார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த போது (சஅத் பின் உபாதா அவர்களின் குடும்பத்தார் அவரைச்) சூழ்ந்திருப்பதைக் கண்டதும் என்ன ‘இறந்து விட்டாரா?’ என்று கேட்டார்கள். அவர்கள் இல்லை அழ்ழாஹ்வின் தூதரே!’ என்றனர். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘(மக்களே!) நீங்கள் (செவிசாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாக கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அழ்ழாஹ் தண்டிப்பதில்லை. மாறாக இதோ இதன் காரணமாகவே தண்டிக்கின்றான் அல்லது தயவு காட்டுகிறான்’ என்று கூறி தமது நாவைக் காட்டினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ்; பின் உமர் (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1683)

‘(ஒரு முறை) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் அல்முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்துவைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன். (எத்தனை முறை கேட்டாலும் அனுமதியளிக்கமாட்டேன்)
அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை  (பாத்திமாவை) மணவிலக்குச் செய்து விட்டு அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்குநான் அனுமதி வழங்கமாட்டேன்).

என் மகள் (பாத்திமா) என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப் படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.’  (அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-4839)

5. மற்றவர்கள் தனதுசெயற்பாடுகளைப் புரிந்து கொண்டு பின்பற்றவேண்டுமென்பதற்காக செய்தவைகள்.
‘அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பிவைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள்.’ (அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-1658)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது (மிம்பர்) நின்று தொழு(வித்)ததையும் அதன் மீது நின்று தக்பீர் கூறியதையும் அதன் மீது ருகூஉ செய்ததையும். பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து வந்து அந்த சொற்பொழிவுமேடையின் அடிப்பாகத்திற்கு இறங்கி அதில் சஜ்தா செய்ததையும் பிறகு பழையபடி மேடைக்கே சென்றதையும் நான் பார்த்தேன். தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி ‘மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் எனது தொழுகையை நீங்கள் அறிந்துகொள்ளுவதற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்’ என்று குறிப்பிட்டார்கள்.’ (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூ ஹாஸிம் பின் தீனார் (ரஹ்) நூல்: ஸஹீஹுல் புஹாரி-917)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின் போது தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்திமிட்)டார்கள். (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை அவர்கள் வெறுத்ததே அ(வர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த)தற்குக் காரணமாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2443)

6. இது தவிர ஒருவரின் கேள்விக்கு பதிலாக ஒருவரின் செயற்பாட்டைக் கண்டிக்கும் விதத்தில் ஒருவரின் செயற்பாட்டை புகழும் விதத்தில் மற்றும் அங்கீகரிக்கும் வகையில் கூறியவைகள்:

‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம் நான் சாய்ந்துகொண்டு சாப்பிடமாட்டேன் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஜுஹைபா (ரழி)இ நூல்: ஸஹீஹுல் புஹாரி-5399)

‘ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குளியல் கடமையாகுமா? என்று ஒரு மனிதர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம்’ என்றார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-580)

‘அழ்ழாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அழ்ழாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அழ்ழாஹ் வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடு கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-5063)

பின்பற்றும் நோக்கில் நபிகளாரின் செயற்பாடுகளை நபித்தோழர்கள் அவதானித்தல்:
‘நான் என் சிறிய தாயார் மைமூனா (ரழி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு (வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புக்களைக் கழுவாமல் நடுநிலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன்.

நான் அவர்களை நோட்டமிடுவதற்காக விழித்துக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பில்லாததால் மெதுவாக எழுந்து அங்கத் தூய்மை செய்தேன். அப்போது அவர்கள் நின்று தொழ நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்கையைப் பிடித்துச் சுற்றி என்னைத் தமது வலப்பக்கத்திற்கு கொண்டு வந்தார்கள். பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இரவுத் தொழுகையைப் பதின்மூன்று ரக்அத்களுடன் முடித்துக் கொண்டார்கள். பின்னர் ஒருக்களித்துப் படுத்துக் குறட்டை விட்டபடி உறங்கினார்கள். உறங்கும் போது குறட்டை விடுவது அவர்களது வழக்கமாகும். பின்னர் பிலால் (ரழி) அவர்கள் வந்து அவர்களை (ஃபஜ்ர்) தொழுகைக்காக அழைத்தார்கள். அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்கொண்டிருந்தார்கள்.

அழ்ழாஹும்மஜ்அல் ஃபீ கல்பி நூரன். வஃபீ பஸரீ நூரன். வஃபீ சம்ஈ நூரன். வஅன் யமீனீ நூரன். வ அன் யசாரீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ அழ்ழீம் லீ நூரா.
(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! எனக்கு (எல்லாத்திசைகளிலும்) ஒளியை வலிமையாக்குவாயாக!’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)இ நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1399)

‘நான் ஒரு நாள் இரவு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை (கண்விழித்து) கவனிக்கப்போகிறேன் எனச் சொல்லிக் கொண்டேன். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்(முதலில்) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (உளூவின் காணிக்கையாகத்) தொழுதார்கள். பிறகு மிக மிக மிக நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.   அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாக இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே  இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே  இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும் விடச் சுருக்கமாகவே  இருந்தன. பிறகு (ஒரு ரக்அத்) வித்ர் தொழுதார்கள்.  இவை பதின்மூன்று ரக்அத்கள் ஆகும்.’ (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹைனி (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1413)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரழி) பிலால் (ரழி) உஸ்மான் பின் தல்ஹா (ரழி) ஆகியோரும் கஅபாவினுள் சென்று கதவை மூடிக்கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்தபோது நானே முதல் முதலில் உள்ளே நுழைந்தேன். பிலால் (ரழி) அவர்களிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவினுள்) தொழுதார்களா என்று கேட்டேன். பிலால் (ரழி) அவர்கள் ஆம்! வலப் புறத்து இரு தூண்களுக்கு மத்தியில் எனப் பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் உமர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-1598)

‘ஒரு நாள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் மக்கா வீதியில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் இப்னு உமர் (ரழி) அவர்களும் இருந்தார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் இப்னு உமர் (ரழி) அவர்கள் அவ்வீதியால் செல்ல நேரிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் செல்லமாட்டார்கள்.

இது தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் போத இப்னு உமரை விட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடவடிக்கைகளை பின்பற்றும் எவரையும் நான் கண்டதில்லை என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: நாபிஉ (ரஹ்) நூல்: ஸியரு அஃலா மின்நுபலா (இப்னு உமர் (ரழி) அவர்கள் பற்றிய பாடம்)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற் பாடுகளில் வணக்கம் என்ற வகையில் பின்பற்றப்படுவதற்கு அப்பாலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகளை இப்னு உமர் (ரழி) அவர்கள் பின்பற்றுபவர்களாக இருந்தார்கள்.  ஆனால் அவை அனைத்தும் வணக்கம் என்பதற்குள் உள்ளடங்காது.

நபிகளாரின் செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை புரிந்து கொள்வது எப்படி?

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அழ்ழாஹ்வை அஞ்சுங்கள்! அழ்ழாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.’ (அல்குர்ஆன் 59:07)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகளிலிருந்து கட்டாயமானது, ஸுன்னத், ஆகுமானது போன்றவற்றை பிரித்து விளங்கு வதற்கான வழிமுறைகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள் வாஜிபாக (கட்டாயமானது), ஸுன்னத்தானதாக (மன்தூப்), மற்றும் ஆகுமானவை (முபாஹ்)களாகவோ இருக்க முடியும். சில நேரங்களில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் மறதியாக சில விடயங்கள் இடம்பெற்றுவிடும்.

‘(ஒரு நாள்) அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹர் அல்லது அஸர்த் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)த போது அவர்களிடம்,
‘அழ்ழாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘நீங்கள் இப்படி இப்படித் தொழுவித்தீர்கள் (அதனால்தான் கேட்கிறோம்)’ என்று கூறினர். உடனே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள்.

பின்னர், எங்களை நோக்கித் திரும்பி, ‘ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்கு தெரிவித்துவிடுவேன். ஆயினும், நானும் மனிதன்தான். (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நானும் எதையேனும் மறந்துவிட்டால் எனக்கு (அதை) நினைவு படுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செய்துவிட்டதாகச்) சந்தேகித்தால் யோசித்து முடிவுசெய்து அதற்கேற்ப தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு இரண்டு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் புஹைனா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-991)

அந்த வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் ஒவ்வொரு விடயங்களையும் பிரத்தியேகமாக விளங்கிக் கொள்வதற்கான அளவுகோள்களை நோக்குவோம்.

நபிகளாரின் செயற்பாடுகளில் வாஜிப்

1. தான் மேற்கொண்ட செயற்பாடு வாஜிபானாது என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவாகக் கூறுதல்.

2. கட்டாயமானது என்று சொல்கின்ற அந்தஸ்த்தில் குறித்த செயல் இடம் பெறுதல். ‘தொழுகையை நிறைவேற்றுங்கள்’ என்ற அழ்ழாஹ்வின் வார்த்தைக் கமைவாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது, கடமையான தொழுகையின் நேரங்கள் பற்றி வினவப்பட்ட போது, ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார்.

அவரிடம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நம்முடன் இவ்விரு நாட்கள் தொழுங்கள்! என்று கூறி தனது செயற்பாடுகளின் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  தொழுகையின் ஆரம்ப நேரத்தையும், இறுதி நேரத்தையும் விளக்கியமை’ (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: புரைதா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1078)

3.முன்னர் வாஜிபான ஒரு விடயத்துடன் உவமைப்படுத்துதல்

4.கடமைகளுக்கு அடையாளமாக மார்க்கத்தில் காணப்படும் விடயங்கள்: அதான், இகாமத்துடன் தொழுகை நடாத்துதல்

5.நேரம் கடந்திருந்த போதிலும் ஏற்கனவே, என்ன முக்கியத்துவத்துடன் ஒரு செயலைச் செய்தார்களோ, அவ்வாறே நிறைவேற்றுதல்: ‘நாங்கள் (ஒரு நாள்) இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் (யாரும்) விழிக்கவில்லை. பிறகு, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து), ‘ஒவ்வொருவரும் தமது வாகனத்தின் தலையைப் பிடித்து(க் கொண்டு இந்த இடத்தை விட்டு நகர்ந்து) செல்லட்டும். ஏனெனில், இந்த இடத்தில் நம்மிடம் ஷைத்தான் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக  இகாமத் சொல்லப்பட, வைகறைத் தொழுகை (பஜ்ர்) தொழுவித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1212)

நபிகளாரின் செயற்பாடுகளில் ஸுன்னத் என்கின்ற வரையறைக்குள் இடம்பெறும் விடயங்களை  பின்வரும் அடிப்படைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1. அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கூற்றின் மூலமே ஸுன்னத் என விளக்குதல்: ‘திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, இவ்விரு தினங்களிலும் அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் எனது அமல்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரழி), நூல்: நஸாயி-2330)

2.ஸுன்னத் என்று கூறுவதற்கு ஏற்றவாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடுகள் காணப்படுதல்

3.ஸுன்னத்தான ஒரு விடயத்தோடு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) பிறிதொரு விடயத்தை ஒப்பிட்டுக் கூறுதல்.

4.ஸுன்னத்திற்கான அறிகுறியாக மார்க்கத்தில் காணப்படும் அம்சங்களோடு குறித்த செயல் இடம்பெறல்

5.நஸ்ஹ் (சட்டம் மாற்றப்படல்) அல்லது எந்த தடையும் இல்லாது ஒரு சில வேளைகளில் விட்டாலே தவிர ஒரு அமலைத் தொடராக மேற்கொள்ளல்: ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் பஜ்ர் தொழுகையில் ‘அலிப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-891)

ஆகுமான விடயங்களை அறிந்து கொள்வதின் அளவுகோல்கள் 

1.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தனது செயற்பாடு ஆகுமானது என வெளிப்படையாகக் கூறுதல்: ‘நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1776)

2.ஆகுமானதென்பதை விளக்கும் வகையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது செயற்பாடு அமைந்திருத்தல்: ‘போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அழ்ழாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அழ்ழாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 08:69) என்கின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனீமத்தில் இருந்து சாப்பிட்டமையும், ‘ஒட்டகங்களை உங்களுக் காக அழ்ழாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அழ்ழாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.’ (அல்குர்ஆன் 22:36) என்கின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு குர்பானி இறைச்சியிலிருந்து சாப்பிட்டமையும்.

3.ஏற்கனவே, ஆகுமானதென அறியப்பட்ட விடயத்தையும் குறித்த அம்சத்தையும் இணைத்து உவமைப் படுத்துதல்: குறித்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயற்பாட்டில் கட்டாயமானதிற்கும், ஸுன்னத்திற்குமானதுமான ஆதாரங்கள் இல்லாதிருப்பது. அத்தகைய சந்தர்ப்பங்களில் வாஜிப், ஸுன்னத் ஆகியவைகளில் ஒன்று நிரூபணமாகாத நிலையில் ஆகுமானதென்ற நிலைக்கே செல்ல வேண்டும். அதுவே அடிப்படையுமாகும்.
أحدث أقدم