இமாம் அல் ஹாபிழ் அபுல் ஃபிதா இமாதுத்தீன் இஸ்மாயீல் பின் அபீ ஹஃபீஸ் உமர்பின் கஸீர் என்ற முழுப் பெயரைக் கொண்ட இவர் இன்றைய சிரிய நாட்டின் புஸ்ரா பிராந்தியத்திலுள்ள ‘மஜ்தல்’ என்ற கிராமத்தில் கி. பி 1300 (ஹிஜ்ரி 700)ம் வருடம் பிறந்தவராவார். இவரது தந்தை அவரது கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரகராக விளங்கினார். என்றாலும் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களுக்கு நான்கு வயதாக இருக்கும் போதே அன்னார் வபாத்தானார். அதனால் இப்னு கஸீர் தனது ஐந்தாவது வயதில் தன் சகோதரருடன் சேர்ந்து திமிஷ்க் (இன்றைய டமஸ்கஸ்) கில் குடியேறினார். அங்கு தான் இப்னு கஸீர் கல்வி பயின்றார். சிறு வயதிலேயே அல்-குர்ஆனை அவர் மனனம் செய்தார். இவர் கல்வி பெற்ற ஆசிரியர்களில் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) தஹ்தீபுல் கமால் என்ற நூலின் ஆசிரியர் யூஸுப பின் அப்துல் ரஹ்மான் அல் முஸ்ஸி, முஹம்மத் பின் அல் ராஸி ஆகி யோர் குறிப் பிடத்தக்கவர்களாவர்.
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அல்-குர்ஆன் விரிவுரை, நபி மொழிகள், மார்க்கச் சட்டவியல் ஆகிய துறைகளை மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் கற்றார். அவரிடம் சிறு பராயம் முதலே காணப்பட்ட சிறந்த ஞாபக சக்தி இதற்குப் பெரிதும் உதவியது. இவர் கல்வியை நிறைவு செய்ததோடு, அல்-குர்ஆன் விரிவுரை, நபி மொழிகள் என்பவற்றில் மாத்திரமல்லாமல் அரபு இலக்கியம், இலக்கணம், வரலாறு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
அதேநேரம் இப்னு கஸீர் அவர்கள் கற்றுத் தேறியதும் நியாய விசாரணை ஆணைக்குழுவில் அன்றைய ஆட்சியாளர்களால் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இது கி. பி. 1341 ஆம் ஆண்டும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வேறு வேறு நிமனங்களும் வழங்கப்பட்டன. அவற்றில் டமஸ்கஸ் பெரிய பள்ளிவாசலில் வழங்கப்பட்ட பதவியும் ஒன்றாகும்.
எனினும் இப்பதவிகள் எதுவும் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் இஸ்லாமிய மறுமலர்ச்சிப் பணிகளுக்கு இடையூறுகக அமையவில்லை. அந்த வகையில் தான் அவர் அல்-குர்ஆனுக்கு விரிவுரை (தப்ஸீர்) எழுதினார்.அந்த விரிவுரையே ‘தப்ஸீர் இப்னு கஸீர்’ என்ற பெயரில் இன்றும் முன்னணி தப்ஸீராக விளங்குகிக்கொண்டிருக்கின்றது.
இந்த தப்ஸீர் இற்றைக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. என்றாலும் அது இன்றைய நவீன விஞ்ஞான யுகத்திற்கு பொருத்தமானதாகவும், இப்போதைய சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய சிறந்த விரிவுரையாகவும் விளங்குகின்றது.
இதனை எல்லா இஸ்லாமிய அறிஞர்களும், கல்விமான்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான விரிவுரையை எழுதுவதற்கு அபார திறமையும் சக்தியும் அவரிடமிருந்தது.
கடந்த 14 நூற்றாண்டு காலப் பகுதியில் அல்-குர்ஆனுக்குப் பலர் தப்ஸீர்களை எழுதியுள்ள போதிலும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தப்ஸீரான இப்னு கஸீர் தான் இன்றும் முன்னணி தப்ஸீராக விளங்குகின்றது. இதற்கான காரணம் என்ன என்றொரு வினா பலர் மத்தியில் எழலாம். அது நியாயமான வினாவே.
தப்ஸீர் இப்னு கஸீர் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
அவற்றில் அல்-குர்ஆன் வசனங்களுக்கு அவர் அளித்துள்ள விரிவுரை ஒழுங்கு விஷேடமானது. அதாவது, இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அல்-குர்ஆன் வசனங்களுக்கு முதலில் அல்-குர்ஆன் வசனங்களைக் கொண்டும், அதன் பின்னர் நபி மொழி தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களை கொண்டும், இதன் பின்னர் ஸஹாபாக்கள் (நபித் தோழர்கள்), தாபியீன்கள் ஆகியோரின் கருத்துகளைக் கொண்டும் விளக்க மளிக்கும் வகையில் இத்தப்ஸீரை (விரிவுரை) எழுதியுள்ளார்.
அதனால் இத்தப்ஸீரை இஸ்லாமிய சிந்தனையாளர்களும், அறிஞர்களும் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளார்கள். அவர்களில் இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார்.
‘தப்ஸீர் இப்னு கஸீருக்கு ஒப்பாகவோ, ஈடாகவோ இதுவரையும் ஒரு தப்ஸீரும் வெளிவரவில்லை’ எனக் குறிப்பிட்டிருக்கின்றார் இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள்.
அதேநேரம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் உலகில் இன்று வரையும் முன்னணியில் திகழும் தப்ஸீர் இப்னு கஸீரை எழுதுவதோடு மாத்திரம் அவர் தனது பணிகளை சுருக்கிக் கொள்ளவில்லை. மாறாக அவர் நபி மொழி அறிவிப்பாளர் தொடர்களை பகுப்பாய்வு செய்து துல்லியமாகக் கணிப்பதிலும் நிகரற்று விளங்கினார். அதன் காரணத்தினால் அவர் நபி மொழி அறிவிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.
மேலும் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தப்ஸீர் இப்னு கஸீர் என்ற அல்-குர்ஆன் விரிவுரைக்கு மேலதிகமாக பல சிறப்பான நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் ‘அல் பிதாயா வந்நிஹாயா’ நூல் குறிப்பிடத்தக்கதாகும்.
இது ஒரு வரலாற்று ஆராய்ச்சி நூல். உலகம் தோற்றம் பெற்றது முதல் தாம் வாழ்ந்த காலம் வரையான இறைத் தூதர்கள், சமூகங்கள், நேர்வழிபெற்ற கலீபாக்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்து இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் வரிசை, அறிவிப்பாளர்களின் நிலை என்பவற்றை ஆராய்ந்தும் அவர் தனியான நூலொன்றை எழுதியுள்ளார். அதுவே ‘அத் தக்மீல்’ ஆகும். அத்தோடு முஸ்னத் மற்றும் சுனன் வகையான நபிமொழி தொகுப்புகளிலிருந்து திரட்டப்பட்ட ஹதீஸ்களை உள்ளடக்கிய ஜாமிவுல் மகானீத், தக்ரீஸுல் அதாதீஸ் இத்திஸாருல் உலூமில் ஹதீஸ், முஸ்னதுஷ் ஷைகான், அஷ் கரதுன் நபவிய்யா, அல்-முகத்திமாத், ஃபலாயிலுல் குர்ஆன் உட்பட பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவர் எல்லா நூல்களையும் அரபு மொழியிலேயே எழுதினார். எனினும் அந்நூல்கள் உலகின் பல மொழிகளுக்கும் இன்றுவரை மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் தப்ஸிர் இப்னு கஸீர் அல் குர்ஆன் விரிவுரையின் முதல் 21 அத்தியாயங்கள் ஐந்து பாகங்களாக தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அத்தோடு ‘அல் பிதாயா வந்நிஹாயா’ என்ற நூல் ‘நபிமார்கள் வரலாறு’ என்ற பெயரில் இரு பாகங்களில் தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.
இவற்றின் மூலம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் சிந்தனைகளையும், நோக்கங்களையும் தமிழ் பேசும் சமுதாயத்தினரும் அறிந்து தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
இருந்த போதிலும் உலகில் பல நூற்றாண்டுகளாக முன்னணியில் திகழுகின்ற வகையில் அல்-குர்ஆனுக்கு விரிவுரை எழுதுவதும், அதற்கு மேலதிகமாக பல்துறை சார்ந்த தரமான ஆய்வு நூல்களை எழுதுவதும் இலேசான காரியமல்ல. அந்த வகையில் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் அறிவு மற்றும் செயல் திறன் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
என்றாலும் இமாம் கஸீர் (ரஹ்) அவர்கள் தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்களும், சிந்தனையாளர்களும் முன்வைத்திருக்கும் கருத்துக்களும் அபிப்பிராயங்களும் அவரது அறிவு மற்றும் செயல்திறனை விளங்கிக் கொள்ளுவதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக விளங்கிக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இஸ்லாமிய அறிஞரான அல்-ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் தமது ‘அத்துருல் காமினா’ என்ற நூலில்’ இப்னு கஸீர் அவர்கள் ஹதீஸ் மூலப் பாடங்களையும் அறிவிப்பாளர் தொடர்களையும் நன்கு ஆராயந்தவர். சிறந்த நினைவாற்றல் மிக்கவர். அவர் எழுதிய நூல்கள் அவரது காலத்திலேயே பிரபல்யமடைந்ததோடு, அவரது மரணத்திற்குப் பின்னரும் அவற்றால் பலர் பயனடைந்து வருகின்றார்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
மற்றொரு இஸ்லாமிய அறிஞரான அல்-ஹாபிழ் அத்தஹபி (ரஹ்) அவர்கள், ‘இப்னு கஸீர் ஒரு இமாமாக, மார்க்க சட்ட அறிஞராக, ஹதீஸ் துறை வல்லுனராக, அல்-குர்ஆன் விரிவுரையாளராக சிறந்த நூல்களின் ஆசிரியராக எனப் பல்துறை மேதையாக திகழ்ந்துள்ளார் எனக் கூறி இருக்கின்றார்.
இவ்வாறு பல இஸ்லாமிய அறிஞர்களும், சிந்தனையாளர்களும் இமாம் கஸீர் (ரஹ்) அவர்கள் தொடர்பாக சிலாகித்துக் கூறியுள்ளார்கள்.
உண்மையில் அவர் ஒரு முபஸ்ஸிராக ஹதீஸ் மற்றும் பிக்ஹ் (மார்க்க சட்டம்) துறை மேதையாகத் திகழ்ந்திருக்கின்றார் என்பதில் ஐயமல்லை.
என்றாலும் அன்னார் தனது 72 வது வயதில் கி. பி. 1372ம் ஆண்டு (ஹிஜ்ரி 774) ஷஃபான் மாதம் 26 ஆம் நாள் வபாத்தானார். (இன்னாலில்லா....)
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தனது 72 வருட கால வாழ்வுக் காலத்தில் இஸ்லாமிய அறிவியல், சிந்தனை மேம்பாட்டுக் குக்காக அளித்த பங்களிப்புகள் 600 வருடங்களுக்கும் மேலாக உலகில் நிலை பெற்று சமுதாய மறுமலர்ச்சிக்காகப் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றன.
ஆகவே அல்லாஹுத ஆலா அவரது தவறுகள், குறைகளை மன்னித்து பிர்தெளஸ் என்ற உயர்ந்த சுவனத்தை அன்னாருக்கு வழங்குவானாக ஆமீன்!