கடல்களும், கப்பல்களும்...

- மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

அல்லாஹ்வின் பிரம்மாண்டமான படைப்புகளை பற்றி தொடராக உங்களது சிந்தனைக்கு முன்வைத்து, அவைகள் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் ஆகும். அந்த அத்தாட்சிகளை பார்க்கும் பொழுது,  ஒரு முஃமினின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை தொடராக உங்களுக்கு நினைவுப்படுத்தி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!

அந்த வரிசையில் இந்த தொடரில்  அல்லாஹ்வுடைய அதிசயமான படைப்பான கடல்களின் படைப்பை பற்றி உங்களுடைய சிந்தனைக்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் தொகுத்து வழங்க உள்ளேன்.
கடல்கள் எப்படி பிரமாண்டமான முறையில் படைக்கப்பட்டிருக்கின்றது.

 அதேபோன்று கடலுக்கு மேல் பயணிக்க கூடிய கப்பல் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளது என்பதையும் அல்லாஹ் குர்ஆன் ஊடாக நமது சிந்தனைக்கு முன்வைக்கின்றான்.

  " இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்".
 (42:32,33)
மேலும்   (நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான். தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (22:65)

இந்த கடல்கள் மூலமாக அல்லாஹ் பல கோடி மக்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கின்றான். அல்ஹம்து லில்லாஹ் ! அதேபோன்று ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்காக தண்ணீரை கிழித்துக்கொண்டு செல்லக்கூடிய விதவிதமான கப்பல்களை மனிதர்களுக்கு வசப்படுத்தி தந்திருக்கின்றான். 

மேலும் ஒரு நாட்டிலிருந்து உணவுப் பொருட்களையும், ஏனைய அத்தியாவசியமான பொருட்களையும் கொண்டு செல்வதற்காக , மலை போன்ற பிரம்மாண்டமான கப்பல்களையும் அல்லாஹ் மனிதர்களுக்கு வசப்படுத்தி தந்திருக்கின்றான். அல்ஹம்து லில்லாஹ் ! 

கடல்கள் மூலம் உணவு...

"இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக,  குடிப்பதற்குச் சுவையாக இருக்கின்றது. மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கின்றது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (இயற்கையான மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக" ! (35:22)

நாம் உண்பதற்காக வேண்டி எந்த விதமான இரசாயனம் கலப்படமில்லாத மீன் வகைகளை உலக மக்களுக்கு அல்லாஹ் வழங்கிக் கொண்டிருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்!

 மேலும் மனிதர்கள் உழைப்பதற்காக வேண்டி முத்துக்களையும், பவளங்களையும் கடல்களில் இருந்து அல்லாஹ் வெளியாக்குகின்றான். 
எனவே இத்தனை பாக்கியங்களையும் தந்த அல்லாஹ்வுக்கு, அதிகமாக நாம் நன்றி செலுத்த வேண்டும் என்பதை அவனே நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றான்.

இரண்டு கடல்கள் ஒன்று சேர்தல்...

அல்லாஹ் கடலுக்குள் பல விதமான ஆச்சரியமான காட்சிகளை அமைத்துள்ளான். அதில் ஒன்றுதான் இரண்டு கடல்கள் ஒன்று சேரக்கூடிய காட்சியாகும். அதாவது ஒரு பக்கம் குடிப்பதற்கு சுவையான நீரும், மறுபக்கம் கசப்பு நிறைந்த உப்பு நீருமாகும்.

"அவனே இரு கடல்களையும் ஒன்றுடன் ஒன்று சந்திக்குமாறு விட்டு விடுகிறான்". (55:19)

"ஒன்றை ஒன்று தாண்ட முடியாத திரை அவ்விரண்டுக்கும் இடையில் இருக்கின்றது". (55:20) (27:61) (25:53)

மூன்று திரைகள்...

நவீன கருவிகளின் துணைக் கொண்டு கடலுக்குள் மூன்று அடுக்கடுக்கான திரைகள் (தடுப்புகள்) உள்ளன.  அந்த திரைகளுக்கு இடையில் இருக்கக்கூடிய தண்ணீர் ஒன்றோடு ஒன்று சேராது என்பதை, கடலியல் நிபுணர்கள், துறை சார்ந்தவர்கள், கடல்களின் தன்மைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி நாம் கடற்கரையில் இருந்து மேலே பார்க்கும் தண்ணீர், தெளிந்த தண்ணீராகவும், அதற்கு கீழே உள்ள தண்ணீர் அதைவிட இருண்டதாகவும், அதற்கு கீழே உள்ள தண்ணீர் கரும் இருட்டாகவும் இருக்கும்.

இறைவன் எப்போது இந்த மூன்று வகை தண்ணீரையும் ஒன்று சேர்த்து வெளியே அனுப்ப நாடுகிறானோ, அப்போது அந்த மூன்று தடுப்புகளும் அகற்றப்பட்டு, எல்லா தண்ணீர்களும் கலந்து, பூமியை நோக்கி வீசப்படும். 

அதை நாம் சுனாமி சந்தர்ப்பத்தில் பார்த்தோம். வெளியே வந்த தண்ணீர் கருமை நிறைந்ததாக இருந்ததை அனைவரும் பார்த்தோம்.
இந்த ஆச்சரியமான விஞ்ஞான தகவலை குர்ஆன் எங்களுக்கு பின்வருமாறு விவரிக்கின்றது.

"அல்லது (அவர்களின் செயல்கள்) ஆழ்கடலில் உள்ள இருள்களை போன்றதாகும். அதனை ஓர் அலை மூடிக் கொள்கிறது. அதற்கு மேல் மற்றொரு அலை இருக்கிறது. அதற்கு மேலே மேகம் இருக்கிறது. இவ்வாறு பல இருள்கள் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கின்றன. அவன் தனது கையை வெளிப்படுத்தினாலும் அதனை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் எவனுக்கு பிரகாசத்தை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த பிரகாசமும் கிடையாது. (24:40)
இணை வைக்கக்கூடிய மக்களுக்கு உதாரணமாக கூறப்படும் இந்த வசனத்தில் கடல்களின் தன்மையான மூன்று தடுப்புகளைப் பற்றி அல்லாஹ் ஒன்றுக்கு மேல் பல அலை என்ற அடிப்படையில் நினைவுப் படுத்துகின்றான். 

எந்த நவீன விஞ்ஞானமும் தெரியாத, ஒரு எழுத்து எழுதத் தெரியாத, வாசிக்க தெரியாத, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக இதை சொல்லி இருக்க முடியாது. அவர்களை தூதராக தேர்ந்தெடுத்த இறைவனாகிய அல்லாஹ்வுடைய வார்த்தை தான், இந்த வேதம் என்பதை இந்த தகவல் உலகத்திற்கு உண்மைப்படுத்திக் கொண்டிருகின்றது.

எரிமலை வெடிக்கும் பொழுது...

சில நாடுகளில் பூமிக்கு மேல் எப்படி எரிமலைகள் காலத்துக்கு காலம் வெடித்து சிதறுகின்றதோ, அதேபோன்று கடலுக்குள்ளும் பல மலைகள், அதிலும் எரிமலைகளும் உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

 அதற்கு ஏற்ப பின்வரக்கூடிய குர்ஆன் வசனத்தை அவதானிக்கலாம்.

"கடல்கள் எரியூட்டப்படும் போது"(81:06)

மறுமைக்கான அடையாளமாக உலகம் அழிக்கப்படும் பொழுது, இந்த கடல்களும் தீ மூட்டப்படும் என்று இறைவன் எச்சரிக்கின்றான். அதாவது கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெடித்து சிதறும் பொழுது, கடல் நீர் பூமியை நோக்கி வீசப்படும் என்பதை தான் இந்த குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

எனவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பார்க்கக்கூடிய இறை விசுவாசிகள் நின்ற நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும், அல்லாஹ்வை நினைப்பார்கள். " அல்லாஹ்வின் அத்தாட்சிகளான  "கடல்களையும், கப்பல்களையும்" பார்க்கக்கூடிய ஒவ்வொருவரும் இந்த துஆவை அடிக்கடி ஓதக்கூடிய பழக்கத்தை வழமையாக அமைத்துக் கொள்ளுங்கள்.
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ  எங்கள் இரட்சகனே ! நீ இவற்றை வீணுக்காகப் படைத்து விடவில்லை, நீ மிகத் தூயவன், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக ! என்று கூறுவார்கள். ( 3-189,190)
أحدث أقدم