பாவமன்னிப்பு தேடல்

 எல்லோரும் தவறு செய்பவர்களே!

‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.

பாவமன்னிப்பு தேடினால் வெற்றியாளராகலாம்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)

கலப்பற்ற மனதோடு பாவமன்னிப்பு தேடினால் சுவனச்சோலை பரிசாக கிட்டும்!

அல்லாஹ் கூறுகிறான்: –

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்-குர்ஆன் 66:8)

நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடிய நபி (ஸல்) அவர்கள்!

‘மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் நூறு முறை பாவமன்னிப்புத் தேடுகிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அஃகர்ரு பின் யஸார் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்பு தேடினார்கள் என்றால் நாம் எவ்வாறு தேட வேண்டும் என சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவனின் மகிழ்ச்சி!

‘உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் தனது ஒட்டகத்தை தவறவிட்ட பிறகு திடீரென அது கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் அடைகின்ற மகிழ்ச்சியை விட அதிகமாக அல்லாஹ், தனது அடியான் பாவமன்னிப்புத் தேடும் போது மகிழ்ச்சி அடைகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

பாவமன்னிப்பு தேடுவதை தாமதிக்க கூடாது!

‘உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்பு வரை ஒரு அடியானின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் (ரலி)

சூரியன் மேற்கில் உதிக்குமுன்…

‘அல்லாஹ் இரவில் தன் கையை நீட்டுகிறான் பகலில் பாவம் செய்தவர் மன்னிப்பு கேட்பதற்காக. பகலில் தன் கையை நீட்டுகிறான் இரவில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கோருவதற்காக. சூரியன் மேற்கில் உதிக்கும் வரை இவ்வாறு செய்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.


பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?

ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பின், அவர் மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவராக தூய மனதுடன் அவனிடம் பாவமன்னிப்பு கோருவாராயின், அந்த முஃமின் ஷிர்க் போன்ற படுபயங்கரமான பாவங்களைச் செய்திருப்பினும் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறியிருக்கிறான்.

அதுமட்டுமல்லாமல் அளவற்ற அருளாளனும் தன்னுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவில்லாத கருணையினாலும் அந்த முஃமினுடைய பாவங்களை மன்னிப்பதோடு அல்லாமல் அவர் செய்த தீய செயல்களை நற்செயல்களாக மாற்றி விடுவிடுகிறான்.

அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதற்கான நிபந்தனைகள்: –

  1. மனத் தூய்மையுடன் பாவமன்னிப்பு கோரவேண்டும்
  2. செய்துக் கொண்டிருக்கின்ற பாவமான செயல்களை உடனே நிறுத்த வேண்டும்
  3. மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது
  4. தாம் செய்த பாவமான செயல்களை நினைத்து கைசேதப்படவேண்டும்
  5. ஒரு அடியான் மற்றொரு அடியானுக்குச் செய்த பாவங்களுக்காக முதலில் அந்த அடியானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
  6. மரணத்தருவாயில் உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
  7. சூரியன் மேற்கில் உதயமாவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்

வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்: –

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: –

39:53 ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: –

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: –

3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

தவ்பா செய்து, ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்பவருடைய பாவங்களை நன்மையாக அல்லாஹ் மாற்றி விடுகிறான்: –

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 25, வசனங்கள் 63-71 ல் கூறுகிறான்: –

25:63 இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

25:64 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

25:65 ‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள்.

25:66 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

25:67 இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

25:68 அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

25:69 கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

25:71 இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.

அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பாவத்தை விட்டும் திருந்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிக்கிறான்: –

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 6, வசனம் 54 ல் கூறுகிறான்: –

6:54 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

பாவ மன்னிப்பு கோருபவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்: –

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்’ (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஆதாரம்: திர்மிதி)

உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் பாவமன்னிப்பு கோரவேண்டும்: –

‘அல்லாஹ் தன்னுடைய அடியானுடைய பாவமன்னிப்பை மரணத்தருவாயில் அவர் உயிர் விடும் வரைக்கும் ஏற்றுக் கொள்கிறான்’(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: திர்மிதி)

பாவமன்னிப்புக் கோருவதன் அவசியம்: –

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்” அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ்விடம் தினமும் நூறு முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்றால் நாம் எவ்வாறு கோரவேண்டும் என்பதைச் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2:286)

أحدث أقدم