அனஸ் இப்னு மாலிக் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)

அவர் அல்லாஹ்வால் அருள் பாலிக்கப்பட்டவர்!

அண்ணல் நபியின் பிரார்த்தனையால் அல்லாஹ்வினால் பரகத் செய்யப்பட்டவர் ! ஒருநாளோ அல்லது ஒரு மாதமோ அல்ல! தொடர்ந்து பத்து ஆண்டுகள் பக்கத்திலேயே இருந்து பாடம் பயின்ற பாக்கியம் பெற்றவர்!

அவர்தான் அனஸ் இப்னு மாலிக் (ரலி). மதீனாவின் மக்களால் “காதிமுர்ரசூல்” (இறைத்தூதரின் பணியாள்) என்று இனிமையாக அழைக்கப்பட்டவர்!

"என் கடன் இறைத்தூதருக்குப் பணிசெய்து கிடப்பதே" என்பதைச் சொல்லாமலேயே செயலால் பறைசாற்றிய சேவகர்!

கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருபவராக, காலணிகளை எடுத்து வைப்பவராக, தலைப்பாகையைச்  சுமப்பவராக, தலை வாரும் சீப்பைத் தயாராக வைத்திருப்பவராக, அங்க சுத்தி செய்யத் தண்ணீர் சுமப்பவராக, அன்னை ஃபாத்திமாவின் உடன்பிறவாத் தம்பியாக, மிஸ்வாக்கைப் பத்திரப் படுத்துபவராக, முஃமின்கள் அன்னையரின் முழு அன்பைப் பெற்றவராக, ஒட்டகையின் கயிற்றைப் பற்றிப் பிடித்தவராக, ஓதும் நேரம் போக மீதம் நேரமெல்லாம் அண்ணலின் அழைப்பில் இன்பம் காண்பவராக, மொத்தத்தில் நீதி நபியின் நிழலாகவே மாறிப் போனார் அந்த நிஜமான நண்பர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்.

மாண்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) மதீனா வந்தபோது அனஸ் பின் மாலிக் பத்து வயது பாலகர்! உறுதியான முடிவெடுத்த உம்மு சுலைம் (ரலி), உத்தம நபியின் ஊழியத்தில் அனஸை அழைத்து வந்து சேர்த்தார்! உம்முசுலைமின் வேண்டுகோளுக்கு இணங்க அனஸை அருகே வைத்துக் கொண்டார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

எந்த மனிதரும் தன் வேலையாளுக்கு நிறைவான மனிதனாக விளங்க முடியாது என்று சொல்லப்படுகின்றது. ஆனால், அது ‘முத்திரைத் தூதர் முஹம்மது நபியைத் தவிர!’ காரணம், நெருங்கிப் பழகியவர்கள், அவரின் குறைகளையும் பலவீனங்களையும் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா?

ஆகவே, அனஸ் இப்னு மாலிக் (ரலி), மேதினி போற்றும் அந்த மேதை நபியைப் பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்ப்போம்!

நான் பத்து ஆண்டுகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப்  பணியாற்றும் ஊழியனாக இருந்து இருக்கின்றேன். ஒரு சந்தர்ப்பத்தில் கூட என்னை அவர்கள் இகழ்வாக அழைத்ததும் இல்லை. குறைவாக ஏசியதும் இல்லை! ‘இதை ஏன் செய்தாய்? இவ்வாறு ஏன் செய்யவில்லை?’ என்று ஒருபோதும் என்னைக் கேட்டதுமில்லை! சொந்தப் பிள்ளையைப் போன்றே என்மீது அன்பு செலுத்தினார்கள். ஆதரவு அளித்தார்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிலேயே மிகவும் நற்குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஒருநாள் ஒரு வேலையாக என்னை வெளியே அனுப்பினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் போகமாட்டேன்' என்று சொன்னேன். ஆனால், என் மனசாட்சி "நபியவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்படு" என்றே உரைத்தது!

எனவே, நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த  சிறுவர்களைக் கடந்து சென்றேன். அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாட ஆரம்பித்துவிட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் பின்பக்கமாக வந்து, என் பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் திரும்பிப் பார்த்தபோது, அந்திமழைச் சாரல் போல அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

என்னை நோக்கி, "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்குச் சென்றாயா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்கள்.

"ஆம்! இதோ செல்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!" என்று சொல்லிவிட்டுப் புறப்படலானேன்.

இவ்வாறு, அனஸை நெறிகள் நிறைந்த நேரிய வாழ்வுக்கு அண்ணலார் அவர்கள் அழைத்துச் சென்றார்கள்! கட்டுப்பாடு என்றால் என்னவென்று அவருக்குக்  காட்டித் தந்தார்கள்!

சிறுவராக இருந்த அவர் சிறந்த நண்பராக மாறினார். ஆமாம்! அனஸ் என்றாலே 'நண்பர்' என்றுதானே அர்த்தம்!

உண்மையே பேசும் உத்தம நபிக்கு உற்சாகம் வரும்போதெல்லாம் "ஓ! அந்த இரண்டு காதுகள் உடைய என்னருமைச் சிறுவனே!" என்று அனஸைப் பார்த்து, அழைப்பது கேட்டுப் பூரிப்பால் புளகாங்கிதப் படுவார், புண்ணியம் தேடிக்கொண்ட அனஸ் (ரலி) அவர்கள்.

ஆனாலும், அனஸின் இறுதி மூச்சுவரை அவருக்கு நீங்காத குறை ஒன்று இருந்து கொண்டே இருந்தது. இறைமறை தந்த இனிய நபியுடன் ஒன்றாகவே இருந்த பத்து வருடகாலத்தில், ஒரே ஒரு முறைகூட, உன்னதநபி (ஸல்) அவர்களுக்குத்  தாம் முதலில் 'ஸலாம்' கூற இயலவில்லையே! "ஸலாம்" சொல்வதில் சன்மார்க்கத் தூதரல்லவா எப்போதும் தம்மை முந்திக் கொண்டுவிடுகிறார்கள் என்பதேயாகும்!".

ஒருமுறை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் ஒரு படையணிக்குத் தலைமைதாங்கிச் சென்றார். எதிரிகளுடன் நீடித்த கடுமையான மோதலின் காரணத்தால் அஸர் உடைய தொழுகை நேரம் கடந்து சென்று விட்டது. இறுதியில் கோட்டை வீழ்ந்தது. பொழுது அடையும் நேரத்தில் எதிரிகள் தோற்று ஓடினர்! அது கண்டு, முஸ்லிம் படையினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துமகிழ்ந்தனர். ஆனால், அனஸ் (ரலி) அவர்கள் அழுதவண்ணம் நின்றிருந்தார்! காரணம் வினவப்பட்டபோது, வான்மறை தந்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள், "அஸர் தொழுகையை உரிய நேரத்தில் தொழுபவர்களுக்கு, சுவனத்தில் அழகிய மாளிகை ஒன்று அளிக்கப்படும்" என்று கூறினார்கள். ஆனால், "இம்மையின் கோட்டையை மாளிகை எனப் பெரிது கண்டு, மறுமையின் மாளிகையைக் கோட்டைவிட்டு விட்டோமே!" என்று வேதனைப்பட்டு அழுதார்.

அடிமைத்தளையை அறுத்தெறிந்த அண்ணலாரை  அண்மியே இருக்கும் பாக்கியம் பெற்றதால், மொத்தம் 2286 ஹதீஸ்கள், அனஸ்  இப்னு மாலிக் (ரலி) வாயிலாக நமக்குத் தெரிய வருகின்றன.

அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் நாம் காண்போம்:

நான் சாந்தி நபி நாயகம் (ஸல்) அவர்களோடு நடந்து கொண்டிருந்தேன். அவர்கள் கடினமானதொரு போர்வையால் தங்களின் மேனியைப் போர்த்தி இருந்தார்கள். ஒரு காட்டரபி, கருணை நபி (ஸல்)அவர்களிடம் வந்து, அவர்களின் போர்வையைப் பிடித்து, அண்ணலின் கழுத்தில் அடையாளம் விழும் அளவுக்குக் கடினமாக இழுத்தார். அதைக் கண்டு நானோ நிலை குலைந்து போனேன்! "ஓ முஹம்மதே! அல்லாஹ் உமக்குத் தந்திருப்பதிலிருந்து, என்னுடைய பங்கில் கொஞ்சம் கொடுப்பீராக" என அதிகாரமாய்க் கேட்டார். தோழர்கள் அவரது கதையை  முடிக்க வாளை உருவினர்! ஆனால், பொறுமை மிகும் பெருமானார் (ஸல்)அவர்கள் கொஞ்சம்கூடக் கோபப்படவே இல்லை! தோழர்களைக் கட்டுப்படுத்தினார்கள். அக்காட்டரபியைத் திரும்பிப்பார்த்து விட்டு, ஓர் ஒளி மிக்க சிரிப்பைத் தவழவிட்ட வண்ணம், அவர் கேட்பதை அவருக்கு வழங்கும்படித்  தோழர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்!

ஓர் இறைவிசுவாசியின் நல்ல ஒழுக்கமே அவனது பக்தி! சகிப்புத்தன்மையே அவனதுஅறிவு! தாராளத் தன்மையே அவனது பண்புகளில் சிறந்தது என்பதை நபியவர்களின் நடவடிக்கையின் மூலம் நாம்  அறிந்து கொண்டோம் அல்லவா! ஆம். புன்முறுவல் ஒருகணமே இருந்தாலும்கூட, அதன் நினைவுகள் நீண்டகாலம் நிலைத்துவிடுகின்றன! நிலையான பலன்களையும் அளிக்கின்றன என்பது நம் சத்தியமார்க்கம் சொல்லும் உண்மையாகும்!

இன்னுமொரு நெகிழ்ச்சியான சம்பவத்தை அனஸ் இப்னு மாலிக் (ரலி) இவ்வாறு அறிவிக்கின்றார்:

ஒருநாள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களோடு மஸ்ஜித் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். அவ்வேளை, எங்கோ நாட்டுப் புறத்திலிருந்து காட்டரபி ஒருவர் கண்ணியத்தின் இருப்பிடமாம் கருணை நபி (ஸல்) அவர்களைக் காண வந்தார்.

வழக்கம்போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், அவரை நன்கு உபசரித்தார்கள். பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் உண்மைத்தூதர் அவர்களோடு உரையாடினார். தோழர்களும் அந்த உரையாடலில் கலந்துகொண்டனர்.  கடைசியாக விடைபெற்றுச் செல்ல எழுந்த அந்த நாட்டுப்புற அரபி, மன்னர் நபியின் மலர்க்கரங்களைப் பற்றிக்கொண்டு நல்வாழ்த்துக் கூறினார்.

அவரது கைகளின் கடினத்தைக் கண்டு வேந்தர் நபி (ஸல்) அவர்கள் வியப்படைந்தார்கள். கொஞ்சம்கூட நளினமின்றி, மரத்தைப் போல் சொரசொரவென்றிருந்தன அந்தக் கரங்கள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் வினவினார்கள்:

"நண்பரே, உமது  கைகள் ஏன் இத்தனைக் கடினமாக இருக்கின்றன?"

காட்டரபி சொன்னார்: “இறைத்தூதர் அவர்களே! விபரம்தெரிந்த நாளில் இருந்து எனது உடலுழைப்பால் வாழ்க்கையை நடத்தி வருபவன் நான்!”

இதைக் கேட்ட ஏந்தல் நபி (ஸல்) அவர்கள், உடனே அந்தக் காட்டரபியின் கரடுமுரடான அந்தக் கைகளை எடுத்து, தங்கள் கருணைக் கண்களிலே ஒத்திக் கொண்டு அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள்!

சபையில் இருந்த தோழர்களுக்கு பெரும் ஆச்சர்யமாகப் போய்விட்டது! அவர்கள் கேட்டார்கள்: "யா ரஸூலல்லாஹ், அந்த முரட்டு மனிதனின் கைகளை ஏன் தங்கள் கண்களிலே ஒத்திக் கொண்டீர்கள்?"

“உழைத்து உழைத்து உரமேறிப்போய்விட்ட ஓர் உத்தமனின் புனிதக் கரங்கள் அவை!”

என அமைதியுடன் பதிலளித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

உழைப்புக்கு பெருமானார் (ஸல்) அளித்த பெருமையும் புனிதமும் தோழர்களின் உள்ளங்களில் பசுமரத்தாணியாய்ப் பதிந்துபோனது!

மேலும், அனஸ் (ரலி)  கூறுகின்றார். வாய்மையிலே வரலாறு கண்ட வள்ளல் நபி (ஸல்) அவர்கள், என்னை அழைத்துப் பின்வருமாறு போதனைகள் செய்தார்கள்:

அருமை அனஸே! முடிந்த அளவு உன்னுடைய காலைநேரம் யாரைப்பொருத்த வரையிலும் உள்ளத்தில் குரோதம், வெறுப்புணர்வு இல்லாதவகையில் இருக்கவேண்டும். மேலும், மாலைவேளையும் இதேநிலையில் கழியவேண்டும் என்பதில் உறுதியாக இரு!

அருமை அனஸே! உனக்குக் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் செயலும் எனது நடைமுறையாக (சுன்னத்தாக) இருக்கிறது. யார் எனது நடைமுறையை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசிக்கிறார். எவர் என்னை நேசிப்பாரோ, அவர் என்னுடன் இருப்பார்!

அனஸ் இப்னு மாலிக் (ரலி)  கூறுகின்றார்:

ஜாஹிர் என்ற பெயருடைய கிராமவாசி இருந்தார். அவர் அவ்வப்போது, கிராமத்துப் பொருட்களை (காய்கறிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை) நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பார். நபி (ஸல்) அவர்கள், அவர் மதீனா வந்து ஊர் திரும்பும்போது, அவருக்குத் தேவையானவைகளை தயார் செய்து கொடுப்பார்கள். எனவே, மகிமை நிறைந்த நபியவர்கள் "ஜாஹிர் நம்முடைய கிராமத்தார். நாம் அவருடைய நகரம்" என்றார்கள்! நேசமிகு நபி அவர்கள், அவரை நேசித்தார்கள். அவரும் பாசத்துடன் நபியிடம் பழகிவந்தார். ஆனால், அவரது முகத்தின்  அம்மைத் தழும்புகளால்,  அவர் பார்ப்பதற்கு அழகற்றவராக இருப்பார்.

ஒருநாள் அவர் வியாபாரத்தில் மும்முரமாக, அவருடைய சரக்குகளை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர் எதிர்பார்க்காத வண்ணம், அவர் பின்னால் சென்று அவரை அன்புடன் கட்டி அணைத்தார்கள்! அவர் வியப்புடன், யார் அது! என்னை விட்டுவிடுங்கள்! என்று பதறியவராகத் திரும்பினார். ஆனால், அங்கே, அண்ணலைக் கண்டதும் ஆனந்தம் கொண்டார்! அல்லாஹ்வின் தூதரின் நெஞ்சில் தம் முதுகை அன்புடன் இணைத்துக் கொண்டார்.

அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள், "இந்த அடிமையை விலைக்கு வாங்கிக் கொள்பவர் யார்?"என்று மக்களைப் பார்த்து வேடிக்கையாக வினவினார்கள். அதற்கு ஜாஹிர், அல்லாஹ்வின்மீது ஆணையாக, என்னைப் போய் யார் விலைக்கு வாங்குவார்கள்  யாரசூலல்லாஹ்! என்றார்.

அதற்கு அண்ணல் நபியவர்கள், "அவ்வாறல்ல! நீர் அல்லாஹ்விடத்தில் குறைவான மதிப்புடைய மனிதர் அல்லர்! நிச்சயமாக, நீர் அல்லாஹ்விடம் விலை உயர்ந்தவராவீர்!" என்று சொல்லிய வண்ணம், ‘முத்துக்கள் சிதறியது போன்று, முகம் முழுதும் சிரித்தார்கள்’ நம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்!

சஞ்சலம் தீர்க்க வந்த சன்மார்க்கத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்:

ஓர் அடியான் பாவம் செய்தபின், பாவமன்னிப்புக் கோருவதற்காக, மனம்வருந்தி அல்லாஹ்விடம் திரும்பும்போது, அவனைப்படைத்த இறைவன் பெருமகிழ்ச்சி அடைகிறான். எந்தஅளவுக்கு என்றால்;

தன் வாழ்க்கையில் முதுகெலும்பாகத் திகழக்கூடிய, தன் ஒரே ஒரு ஒட்டகத்தை நடுக்காட்டில், தொலைத்து விட்டமனிதன், திடீரென்று அந்த ஒட்டகம் கிடைத்தால், எந்தஅளவுக்கு மகிழ்ச்சி அடைவானோ அதுபோல, இன்னும் அதைவிட அதிகமாக அல்லாஹ் (ஜல்) மகிழ்ச்சி அடைகிறான் (4) 

அன்னை உம்முசுலைம் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அண்ணல்நபி (ஸல்) செய்த துஆவின் காரணமாக, இவர் நீண்டஆயுள் பெற்றிருந்தார். பிற்காலத்தில், அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் மிகப்பெரும் செல்வந்தராகவும்  விளங்கினார். இவரின் ஈச்சமரங்கள் ஆண்டுக்கு இருபோகம் விளைந்தன. இவருக்கு 98 மகன்களும் 2 மகள்களும் பிறந்தனர். இவர் ஹிஜ்ரீ 93ல் தமது 103 வது வயதில் பஸராவில்  இருந்தபோது இறப்பெய்தினார்.

ரலியல்லாஹு அன்ஹும்

أحدث أقدم