இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடைபெறுகின்றதொரு ஒப்பந்தமாகும். அதன் மூலம் அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவருக்கு ஆகுமானவர்களாக, அனுமதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுகின்றார்கள். அவர்களது இந்த இணைப்பு அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றது. அன்புடனும், பாசத்துடனும், ஒற்றுமையுடனும், விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை என்ற வாழ்வின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளுடன் அவர்களது வாழ்வு பயணிக்க ஆரம்பிக்கின்றது. ஒருவர் மற்றவரது பாதுகாவலர்களாக மாறி விடுகின்றார்கள், அது பொருளாதார விஷயமானாலும் சரி அல்லது உணர்வுப்பூர்வமான விசயங்களாக இருந்தாலும் சரியே..!
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
திருமணம் என்ற அருட்கொடையின் மூலமாக இருமனங்கள் இணைகின்றன, அல்லாஹ்வின் அருட்கொடையின் காரணமாக அந்தத் தம்பதியினரிடையே, உறுதியான உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன. புரிந்துணர்வு, பரஸ்பரம் ஒத்துழைப்பு மற்றும் ஒருவர் மற்றவருக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கிக் கொள்ளுதல், தங்களது குழந்தைகளை இஸ்லாமியச் சூழலில் வளர்த்தெடுப்பதற்கான பரஸ்பர ஒத்துழைப்பு, நல்ல பண்பாடுகள், மற்றும் பழக்க வழக்கங்களை தானும் நடைமுறைப்படுத்துவதுடன், தங்களது குழந்தைகளிலும் அது மிளர வேண்டும் என்ற உழைப்பு, ஆகியவற்றுடன் அவர்களது வாழ்வு பயணிக்க ஆரம்பிக்கின்றது. இவ்வாறான ஆரம்பம் தான் ஒரு முஸ்லிம் தம்பதிக்குத் தேவையானதொன்றாகும்.
இஸ்லாமியக் குடும்பம் ஒவ்வொன்றும் ஒரு இஸ்லாமிய சமூகத்தை, மாளிகையை உருவாக்கக் கூடிய உறுதி மிக்க செங்கற்கலாகும். எனவே, தம்பதியர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவருக்கு துணையாக இருப்பதோடு, அவர்களுக்கிடையே நன்மையானவற்றை ஏவிக் கொள்வதும், தீமைகளிலிருந்து விலக்கிக் கொள்வதும் கடமையானதாக இருக்கின்றது.
ஒரு இஸ்லாமியக் குடும்பத்தை உருவாக்குவதற்கு பெண் என்பவள் ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் என்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவு முக்கியமானவளாக இருக்கின்றாள். ஆண்களின் வாழ்வில் அவளால் தான் சந்தோஷம் மிளர முடியும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''இந்த உலக வாழ்க்கையானது நிலையற்ற தற்காலிகமானது, இந்த உலகத்தில் மிகச் சிறந்த ஆறுதல் நேர்வழி பெற்ற பெண்மணியிடம் இருக்கின்றது"" 1என்று கூறினார்கள்.
ஒரு ஆணுக்கு நேர்வழி பெற்ற பெண்ணொருத்தி துணையாளாகக் கிடைப்பது என்பது இறைவனது மிகப் பெரும் அருட்கொடையாகும். அவள் மூலமாக அவனுக்கு ஆறுதலும் கிடைக்கின்றது, இந்த உலக வாழ்க்கையின் போட்டிகளினால் ஏற்பட்ட களைப்பினைப் போக்குவதற்கான நிழற்கொடையாகவும் அவளிடம் நிம்மதியுடன் கூடிய ஓய்வும் கிடைக்கின்றது. அவ்வாறானதொரு வாழ்வு வார்த்தைகளால் வடிக்க முடியாத இன்பமான வாழ்க்கையாகும் என்பதை அதனை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.
இன்றைய உலக வாழ்வு ஆடம்பரத்திலும், கவர்ச்சியூட்டப்பட்ட அழகிலும், செயற்கைச் சிரிப்பிலும் இன்பங் கண்டு? கொண்டிருக்கும் பொழுது, செயற்கையாக ஊட்டப்பட்ட கவர்ச்சி குறைந்தவுடன், அதன் மீதிருந்த பிடிப்பும் நீங்கி விடுகின்றது. உண்மையில், இத்தகைய செயற்கைக் கவர்ச்சியை இஸ்லாம் ஆதரிப்பதில்லை. இனக்கவர்ச்சியையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. மாறாக, ஒவ்வொருவரும் தங்களது துணையைத் தேடும் பொழுது, அவர்களுடைய வாழ்நாளில் சந்தோஷத்தையும், பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியவர்களாக அந்தத் துணை அமைய வேண்டும், நேர்வழி பெற்ற மக்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. எனவே, ஒருவனோ அல்லது ஒருத்தியோ தங்களது துணையைத் தேடும் பொழுது கவனிக்கத்தக்க சில அம்சங்களை இஸ்லாம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அதனை இனி பார்ப்போம்..!
பெண்களே.. நல்ல கணவனைத் தேர்வு செய்யுங்கள்
இன்றைய முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு என்னென்ன உரிமைகளை இஸ்லாம் வழங்கியிருக்கின்றது என்ற அறிவைப் பெற்றுக் கொள்வதில்லை. மார்க்கக் கல்வியிலும் பொடுபோக்காக இருக்கின்றார்கள். அதனால் இந்த சமூகத்திற்கு ஏகப்பட்ட நஷ்டங்கள் உருவாகி விடுகின்றன. வீட்டில் இஸ்லாமியச் சூழல் இல்லை, குழந்தை வளர்ப்பில் இஸ்லாம் இல்லை, கணவனின் வருமானத்திற்குத் தகுந்த செலவினங்கள் இல்லை.., உலகத் தேவைகளை முன்னிறுத்துவதால் விளைந்த கணவனும் மனைவியும் மிக நீண்ட நாட்களுக்கு பிரிந்திருக்கக் கூடிய வெளிநாட்டு வாசம் இப்படியாக.., சமூகம் சீரழிவுக்குக் காரணமாக எண்ணற்ற விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே, இல்வாழ்க்கையை ஆரம்பிக்கின்ற ஒருவனோ அல்லது ஒருத்தியோ தங்களுக்கு ஏற்ற துணையைத் தேடுவதில் கண்ணுக் கருத்துமாக இருக்க வேண்டும். இஸ்லாம் வலியுறுத்தக் கூடிய அம்சங்கள் அதில் கடைபிடிக்கப்பட வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் என்னென்ன உரிமைகள் வழங்கியிருக்கின்றது என்பதை அவர்கள் அறியாதவர்களாக உள்ளார்கள். பெண்களே..! உங்களுக்குப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் இஸ்லாம் உங்களுக்கு பூரண உரிமையை வழங்கியிருக்கின்றது. நீங்கள் விரும்பாத அல்லது வெறுக்கக் கூடிய ஒருவரை வற்புறுத்தி உங்களுக்கு மணமுடித்து வைக்க முடியாது. ஆனால், உங்களது பெற்றோர்கள் உங்களது பாதுகாவலர்கள், அவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் நீங்கள் செவியேற்க வேண்டும், அவர்கள் உள்ளத்தால் உங்களுக்கு தீங்கு நினைக்காதவர்கள், இந்த உலக வாழ்க்கையில் உங்களைவிட ஏராளமான அனுபவங்களுக்குச் சொந்தக்காரர்கள், எனவே அவர்களது ஆலோசனையின்படி நடந்து கொள்ள முயற்சிப்பதும், உங்களது கருத்துக்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்திக் கொள்வதும் அவசியமாகும். அதற்காக நீங்கள் உங்களது உரிமைகளை விட்டுக் கொடுத்து, நீங்கள் விரும்பாத ஒருவருக்கு உங்களை மணமுடித்துக் கொடுத்து விட முடியாது, அதில் பெற்றவர்களாக இருந்தாலும் ஒரு வரைமுறை இருக்கின்றது, அதனை அவர்களால் மீற முடியாது.
இதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வியலில் ஏராளமான ஆதாரங்களை நாம் காட்ட முடியும் :
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார் :
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். (புகாரீ : 5138).
அதன் பின்னர் உங்களுக்குப் பிடித்தமானதொருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு, எனக்கு என் தந்தை நிச்சயித்தவரையே திருமணம் செய்து கொள்கின்றேன் எனக் கூறினேன், ஆனால் தங்களது பெண் மக்களின் விசயத்தில் அவர்களது பெற்றோர்களுக்கு உரிமை இல்லை (அதாவது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை) என்பதை அறியவே நான் அவ்வாறு கூறினேன் என்றேன். (2)
முதலில் கன்ஸா (ரலி) என்ற அந்தப் பெண்மணியிடம் உனது தந்தைக்குக் கட்டுப்படு என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள், ஏனென்றால் ஒரு தந்தை தனது மகளுக்கு நல்லதையே நாடுவார் என்பதனால் அவர்கள் அவ்வாறு ஆலோசனை கூறினார்கள். ஆனால், அந்தத் தந்தை தனது மகளுக்குப் பிடிக்காத ஒருவருக்கு அவளை வற்புறுத்தி மணமுடித்துக் கொடுக்க நினைக்கும் பொழுது, அந்தத் திருமணத்தை ரத்து செய்ய முன்வருகின்றார்கள். அவள் விரும்பியதொரு மணமகனைத் தேர்வு செய்து மணமுடித்துக் கொள்ளும் உரிமையையும் அப்பொழுதே வழங்கி விடுகின்றார்கள். அதன் மூலம் அவளது தந்தையின் வற்புறுத்தலிலிருந்து அவளைப் பாதுகாத்தார்கள், இன்னும் பிடிக்காத ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு காலம் முழுவதும் கண்ணீர் சிந்தும் அவலத்தையும் அன்றே இதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் துடைத்தெறிந்தார்கள். அதுமட்டுமல்ல, ஏராளமான மண்ணெண்ணெய் விரையமாவதையும், ஸ்டவ் தானாக வெடிப்பதையும் தவிர்த்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது.
இஸ்லாம் எந்த ஒரு ஆத்மாவின் மீதும் அது சுமக்கவியலாத பாரத்தைச் சுமத்துவதில்லை. அதனைப் போலவே பெண்கள் விசயத்திலும் அவர்களுக்குப் பிடிக்காததொரு விசயத்தினை, அதிலும் திருமண விசயத்தில் அவர்கள் மீது நிர்ப்பந்தங்களைத் திணிப்பதை, கட்டாயத் திருமணத்திற்கு வற்புறுத்துவதை இஸ்லாம் தடுக்கின்றது, ஏனென்றால் ஒவ்வொரு திருமணமும் வெற்றிகரமான சமூக வாழ்வாக மாற வேண்டும், இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே விரும்புகின்றது. புறத்தோற்றம், நோக்கம், பழக்கவழக்கங்கள், கற்றறிவு மற்றும் ஆசாபாசங்கள் என அனைத்தும் அவர்களுக்கிடையே ஒத்துப் போகக் கூடியதாக, ஒருவர் மற்றவர் விரும்பக் கூடியவைகளாக இருக்க வேண்டும்.
மனங்கள் ஒத்துப் போகாத வாழ்வு இருளடைந்த வீட்டிற்குச் சமம். இருவரும் ஒருவரை ஒருவர் மனம் ஒன்றி நேசிக்க இயலாமல் தடுமாறுகின்ற வாழ்வைத் தான் அவர்கள் வாழ முடியும், தடுமாறும் ஒவ்வொரு நிமிடமும் மணமுறிவை நோக்கிக் கொண்டு செல்லும்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் :
ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்று கூறினார். அப்போது, ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா?" என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)"" என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ''தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!"" என்று கூறினார்கள். (புகாரீ 5273)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்திருக்கும் இந்த ஹதீஸில், (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், ''அவரை எனக்குப் பிடிக்கவில்லை"" என்று கூறுகின்றார்கள்.
இன்றைக்கு மணவிலக்குகள் எளிதாக்கப்படாததன் காரணமாக எத்தனையோ சமூகங்களில் பெண்கள் தற்கொலையை நாடக் கூடிய அசம்பாவிதங்கள் நடந்தேறி விடுகின்றன. நாகரீகமான சமூகங்கள் என்று தங்களை இனங்காட்டிக் கொண்டிருக்கக் கூடிய பல சமூகங்கள் பெண்கள் தங்களது மணவாழ்வைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமையை வழங்கவே இல்லை எனலாம். இன்னும் சில சமூகங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி இந்த உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இஸ்லாமோ 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்ற வறட்டுத் தத்துவத்தினை ஏற்பதில்லை. மாறாக மனித வாழ்வுக்கு இயைந்ததொரு வழியைத் தான் அது காட்டுகின்றது. வாழ்க்கையை எளிதாக்குகின்றது, எந்த உயிரின் மீதும் அது எந்தவித நிர்ப்பந்தத்தையும் திணப்பதில்லை.
இதுஒரு மனதை உருக்கும் சம்பவம்.., இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வில் நிகழ்ந்ததொரு சம்பவம், கற்பனைக் கதையல்ல..!
உத்பா இப்னு அபூ லஹப் என்பவரது அடிமை பர்ரிரா (ரலி), இவர் ஒரு எத்தியோப்பிய அடிமைப் பெண், இவரது விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்தமான நிலையில் முகீத் என்ற இன்னொரு அடிமைக்கு மணமுடித்து வைக்கப்பட்டிருந்தார். தான் சுதந்திரமான நிலையில் இருந்திருப்பின் என்றுமே முகீத் (ரலி) அவர்களை நான் எனது கணவராக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று பர்ரிரா (ரலி) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். பர்ரீரா (ரலி) அவர்கள் மீது இரக்கம் கொண்ட ஆயிஷா (ரலி) அவர்கள்.., அவர்களை விலைக்கு வாங்கி அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்தார்கள். எப்பொழுது இந்தப் பெண் விடுதலையாகி, தனது நிலையைத் தானே முடிவு செய்து கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டார்களோ, அப்பொழுதே தனது திருமண உறவு நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க தீர்மானித்தார்கள். அவரது கணவரிடம் தன்னை விவாகரத்துச் செய்து விடும்படி கோரினார்கள். அவரது வேண்டுகோளை அறிந்த அவரது கணவர், முடியாது.., என்று அழ ஆரம்பித்தார்கள். புகாரியில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழியில், தான் விரும்பாத ஒருவரிடம் இருந்து மணவிலக்குக் கோரி அந்த சுதந்திரமான பெண் வற்புறுத்த ஆரம்பித்தார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருந்த.., உறவுக்கும் பிரிவுக்கும் இடையேயான அந்தப் போராட்டத்தைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதில் தலையிட விரும்பினார்கள். அதனை மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள் :
பரீரா.. வின் கணவர் ஒரு அடிமை, முகீத் என்று அறியப்பட்டவர். பிரிவுத் துயரால் அவரது தாடி நனையும் அளவுக்கு கண்ணீர் புரண்டோட அழுது கொண்டிருப்பதை நான் எனது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஓ.. அப்பாஸ்..! உண்மையிலேயே இந்தக் காட்சி வித்தியாசமானது, பரீராவை முகீத் எந்தளவு விரும்புகின்றார்கள், இன்னும் (அதே நேரத்தில்) பரீரா முகீதை எந்தளவு வெறுக்கின்றார்?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரீரா அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழக் கூடாது? என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! அவ்வாறு செய்யும்படி நீங்கள் எனக்குக் கட்டளையிடுகின்றீர்களா? என்றார் பரீரா..!
அதற்கு, (உங்களது கணவராகிய) அவரது சார்பாக தலையிட்டு இருவருக்குமிடையே சமாதானம் செய்து வைக்கவே விரும்புகின்றேன்" என்று கூறினார்கள்.
அதற்கு, 'அவர் எனக்குத் தேவையில்லை" என்றார்கள் பரீரா..!
மனித உணர்வுகளின் வழியாக வெளிப்படுகின்ற தாபங்களைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக நெகிழ்ந்து போன இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.., ஆழமான மற்றும் பிரியத்தைத் தன்னில் தேக்கி வைத்திருக்கின்ற கணவர் ஒருபுறம்.., அதேபோல விருப்பமின்மையும், வெறுப்பும் கொண்டதொரு மனைவி ஒருபுறம்..! இருவருக்குமிடையே எதுவுமே செய்ய இயலாத இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.., அவரிடம் நீங்கள் ஏன் சேர்ந்து வாழக் கூடாது, அவர் உங்களது குழந்தையின் தந்தையுமல்லவா என்று அந்தப் பெண்ணுக்கு ஞாகப்படுத்துகின்றார்கள்.
இறைநம்பிக்கை கொண்ட அந்தப் பெண்.., இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., இது உங்களது கட்டளையா.., உத்தரவா? அவ்வாறு இது உங்களது உத்தரவாக இருந்து விடுமென்றால் இறைநம்பிக்கை கொண்ட பெண் என்பதால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்பது என்மீது கடமையாகி விடுகின்றது.. என்று சொல்கிறார்.
இந்த உலகத்திற்கான வாழ்க்கைச் சட்டங்களை வகுத்தளிக்க வந்த உத்தமரான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியின் உரிமையில் கைவைக்காமல், உங்கள் இருவருக்குமிடையே சமாதானம் செய்து வைக்கவே நாடினேன், விருப்பமில்லாததன் மீது எனது விருப்பத்தைத் திணிப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை என்பதை அந்தப் பெண்ணுக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள். (ஃபத்ஹுல் பாரி, 9-408, கிதாப் அத் தலாக்)
அவர் ஒரு இறைத்தூதர்.., அவரது சொல்லும் செயலும் இறைநம்பிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டியதொரு ஆவணம். ஆனால், அவர்கள் சொல்வது சட்டமா.., அல்லது அறிவுரையா என்பதை அந்தப் பெண் கேட்கும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றாள்.
இந்தச் சம்பவத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வியும் இருக்கின்றது, வாழ்வும் இருக்கின்றது. திருமண விசயத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுக்கவே நாடுவார்கள். ஆனால், அதில் பெண்ணுக்கு உடன்பாடு இல்லை, கணவன் பிடித்தமானவனில்லை, அவனுடன் இணைந்து வாழ்வது சிரமம் என்பதை அந்த மணப்பெண் கருதுவாளெனில், அவள் தன்னுடைய பெற்றோரது விருப்பத்திற்கு சம்மதிக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் பெற்றோர்களுக்கும் அவள் மீது தங்களது விருப்பங்களை நிர்ப்பந்தமான முறையில் திணிப்பதற்கும் உரிமையில்லை. அவளது வாழ்வு குறித்து தங்களுக்குள்ள அக்கறையை எடுத்துக் கூற வேண்டியதும், தாங்கள் ஏன் அந்த மணமகனைத் தேர்வு செய்தோம் என்பதை தங்களது பெண்பிள்ளைகளுக்கு விளக்கிக் கூற வேண்டியதும், பெற்றோர்களது கடமையாகும்.
ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக நடக்க முனையாத பொழுது, இன்றைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விசயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் படிப்பினை இருக்கின்றது.
இன்றைக்கு நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தில் உறவுகள் முறிந்து போகக் கூடாது என்பதற்காகவும், சொத்துக்கள் பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காகவும், வாழ்க்கை வசதிகளுக்காகவும், அழகுக்காகவும், அந்தஸ்திற்காகவும் விருப்பமற்ற உள்ளங்களை இணைத்து வைக்கும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. ஆனால், என்ன தான் சொத்தும், வளமும் இருந்தாலும், உள்ளங்கள் இணையாத பொழுது எந்த வாழ்க்கையும் வசதியும், இவ்வுலக வாழ்வில் நரகமாகவே ஆகி விடும். கள்ளக்காதலும், விபச்சாரமும், மணவிலக்குமே இறுதி தீர்வாக அமையும். இவற்றில் எதுவுமே வாய்க்காத பொழுது வாழ்க்கையையே முடித்துக் கொள்கின்ற சம்பவங்கள் தான் அரங்கேறி விடுகின்றன. எனவே, இஸ்லாம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்களை அனுமதிக்க வேண்டும். அதற்கு பெற்றவர்களும், சமுதாயத் தலைவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். சமுதாயத் தலைவர் என்ற முறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போல அறிவுரை பகர முடியும், ஆனால் தனது விருப்பத்தை எவர் மீதும் திணிக்க முடியாது என்பதை சமுதாயத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றோம் என்றால் விவாகரத்து போன்ற விசயங்களில் சமுதாயத் தலைவர்கள் தவறிழைக்கின்றார்கள் என்பதை அறிய வருகின்றோம். சமுதாயத் தலைவர்கள் இஸ்லாத்தின் வழிகாட்டல்களின்படி இன்றைக்குத் தேர்வு செய்யப்படுவதில்லை. ஊரில் உள்ள தனவந்தர்கள், பெருந்தலைகள், அரசியல் பிரமுகர்கள் தான் சமுதாயத் தலைவர்களாக, ஜமாஅத்தை நிர்வகிக்கக் கூடியவர்களாக உள்ளனர். தீர வேண்டிய பிரச்னைகள் பலவற்றுக்கு இவர்களே கூட சில சமயங்களில் முட்டுக் கட்டைகளாகவும் ஆகி விடுகின்றனர். எனவே, பெண்களின் விசயத்தில் அவர்களது உரிமைகளை எளிதாகப் பெற்றுக் கொள்ள சமூகத்தின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.
உண்மையில், மார்க்கத்தின் அடிப்படையில் வாழக் கூடிய மணமகனே ஒரு பெண்ணின் தலைசிறந்த தேர்வாக இருக்க முடியும். அவ்வாறில்லையேல்.., குழப்பங்கள் விளையக் கூடிய வாழ்க்கையே வாழ வேண்டியதிருக்கும்.
கானல் நீர் போல கிளர்ந்தெழுகின்ற.., உணர்ச்சிகளில் வசப்படுகின்ற.., 'காதல்" வரிகளுக்குள் வாழ்க்கையை அடைகாக்கும் வாலிபர்கள் நிறைந்த உலகு இது. கண்டதும் காதல் என்பார்கள். அழகுப் பெண்களைப் பார்த்தால் ஆசை வலை விரிப்பார்கள். இத்தகைய மலர் விட்டு மலர் தாவும் உள்ளங் கொண்டவர்களிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இஸ்லாமிக் கல்வி ஊட்டப்பட்டதொரு பெண் இத்தகைய நாசவலைகளில் வீழ்ந்து விட மாட்டாள். அதனை விட இஸ்லாமியப் பண்பாட்டோடு வாழுகின்ற, கல்வியறிவுள்ள, உதவும் மனப்பான்மை மிக்க ஆண்களைத் தான் அவள் தனது கணவனாகத் தேர்வு செய்யக் கூடியவளாக இருப்பாள். இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு .., இறைநம்பிக்கை கொண்ட ஆண்களே சரியான தேர்வாக இருக்கும் என்பதைக் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது :
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்). (24:26)
மேலே உள்ள வழிகாட்டுதல்களிலிருந்து புறத்தோற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதல்ல. மாறாக, தனக்கு விருப்பமான துணைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்மகனது குணநலனும், பண்புநலன்களோடு, அழகும் இருப்பது தானே அழகு. எனவே, பண்பாடுகளோடு, புற அழகையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமே.
பெண்கள் தங்களுக்குரிய துணையைத் தேடும் பொழுது, தங்களை நிர்வகிக்கக் கூடிய அளவுக்கு, பாதுகாக்கக் கூடிய அளவுக்கு, தைரியமும், திறமையும் கொண்டவர்களாகத் தேர்வு செய்ய வேண்டும்.
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (4:34)
பலசாலியான, ஆரோக்கியமான, திறமையான ஒரு ஆண்மகனால் தான் குடும்பத்தை நல்லமுறையில் நிர்வகிக்க முடியும். இன்னும் அதற்குத் தேவையான பொருளாதாரத்தையும் வழங்க முடியும். அதன் காரணமாகவே இல்லம் என்பது நல்லறங்களும், சந்தோஷமும் பூத்துக் குலுங்கும் நந்தவனமாக மாறும். அவ்வாறில்லை என்றால் இயலாமையுடன், பற்றாக்குறையும் இணைந்து விட்டால் வீட்டில் எப்பொழுதும் நிம்மதி இருக்காது. 'சம்சாரம் என்றாலே மின்சாரம்" ஆகிவிடும் சூழல் தான் உருவாகும். வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் பிரச்னைகள் குழந்தை வளர்ப்பையும் பாதிக்கும்.
இவ்வாறான சூழ்நிலைகளில், கணவனின் வரவுக்கு ஏற்ற வகையில் செலவழிக்கக் கூடியவளாக இறைநம்பிக்கை கொண்டவள் இருப்பாள், அதைப் போலவே மனைவியின் குறிப்பறிந்து நடந்து கொள்ளக் கூடியவனாக கணவன் இருப்பான், இறைநம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே நடுநிலைப் போக்கோடு நடந்து கொள்ள முடியும்.
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:35)
திருமண வாழ்வு என்பது வெற்றிகரமான வாழ்வாக அமைய வேண்டும், நிலையான குடும்ப வாழ்விற்கு அடித்தளமைக்கின்ற வாழ்வாக இருக்க வேண்டுமெனில், சரியான துணையைத் தேர்வு செய்தல் வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்களும், தோழியர்களும் தங்களுக்குரிய துணையை எவ்வாறு தேர்வு செய்திருக்கின்றார்கள் என்பதும், எந்தளவு தொலை நோக்குச் சிந்தனையுடன் அவர்கள் செயலாற்றி இருக்கின்றார்கள் என்பதையும் நாம் வரலாற்றிலே காண முடிகின்றது.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள்.., மதினாவை இருப்பிடமாகக் கொண்ட அன்ஸாரிப் பெண்மணி, ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்மணியும் கூட. இவரது கணவர் மாலிக் பின் நதர், இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது, அவரது பெயர் அனஸ். இந்தப் பெண்மணி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது கணவர் மாலிக் பின் நதர் அவர்களுக்குப் பிடிக்கவில்லை, கோபம் கொண்டார், கணவரது கோபம் காரணமாக அந்தப் பெண்மணி இஸ்லாத்தைக் கைவிட்டு விடவில்லை. மாறாக, உள்ளப்பிடிப்போடு இஸ்லாத்தைப் பேணி வந்தார்கள். குறுகிய காலத்திலேயே அந்தப் பெண்மணியின் கணவர் மாலிக் பின் நதர் இறந்து விட்டார்கள். இவர்களோ இளமை பூத்துக் குலுங்கும் பருவத்தில் உள்ள பெண்மணியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் கருணையை எதிர்பார்த்தவர்களாக கணவரது இழப்பைத் தாங்கிக் கொண்டார்கள், தனது நேரத்தை தொழுகை போன்ற இறைவணக்கத்தில் கழித்தார்கள், தனது மகன் அனஸ் (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பணியாளாகச் சேர்த்து விட்;டார்கள்.
மதினாவில் உள்ளவர்களில் மிகவும் பார்ப்பதற்கு அழகானவராகவும், பணக்காரராகவும், இன்னும் வலிமைமிக்கவராகவும் இருந்த ஒருவர் இவரை மணமுடிக்க விருப்பம் தெரிவித்தார். அவரது பெயர் அபூ தல்ஹா.. அவர் அந்த நேரத்தில் முஸ்லிமாக ஆகி இருக்கவில்லை. அவரது செல்வத்திற்காகவும், இளமைக்காகவும், வனப்பிற்காகவும் அபூ தல்ஹா அவர்களை மணமுடிக்க மதினாவில் வாழ்ந்த பல பெண்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில்.., உம்மு ஸுலைம் அவர்களிடம் தனது விருப்பத்தைச் சொன்னால் தட்டாமல் தன்னை ஏற்றுக் கொள்வார் என்று மனக்கணக்குப் போட்டுக் கொண்டு, உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் அபூ தல்ஹா தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
ஆனால் சற்றே ஆச்சரியம் கலந்த தொணியில்.., ஓ..அபூ தல்ஹா.., நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கின்ற கடவுளைப் பற்றி அறிவீர்களா.., அது பூமியில் விளைந்த மரத்திலிருந்து செய்தது என்பதை அறிவீர்களா.., இன்னின்ன அடிமை அதனை வெட்டி சீர் செய்து உருவாக்கிய பொம்மை என்பதை அறிவீர்களா..? என்று கேட்டார்கள் உம்மு ஸுலைம் அவர்கள்.
இந்தக் கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்க்காத அபூ தல்ஹா அவர்கள் விக்கித்து நின்றார்.., நான் உங்களுக்கு அதிகமான மணக்கொடையைத் தருகின்றேன், வசதியான வளமான வாழ்க்கையைத் தருகின்றேன்.., என்னை மணக்கச் சம்மதிப்பீர்களா என்று தான் வந்த நோக்கத்தை கோடிட்டுக் காட்டினார் அபூதல்ஹா.
ஓ.. அபூ தல்ஹா.., உம்மைப் போன்ற மனிதரது வேண்டுகோளை எந்தப் பெண்ணும் புறக்கணிக்கக் கூடியதல்ல, இருப்பினும் நீங்கள் ஒரு இறைநம்பிக்கையற்றவராக இருக்கின்றீர்கள், நானோ ஓரிறையை ஏற்றுக் கொண்ட முஸ்லிமாக இருக்கின்றேன், நான் உம்மைத் திருமணம் முடித்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டவளல்ல, ஆனால் ஒன்று.., நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்.., அதுவே எனக்கு நீங்கள் வழங்கக் கூடிய மணக்கொடையாக இருக்கும், அதுவன்றி எனக்கு உம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை என்று பதில் கூறினார்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்.
மீண்டும் அடுத்த நாளும் அபூ தல்ஹா அங்கு வந்தார். வந்தவர் சும்மா வரவில்லை, முன்னைக்காட்டிலும் அதிக மணக்கொடையையும், பரிசுப்பொருட்களையும் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார். ஆனால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களோ தனது நோக்கத்தில் உறுதியாக இருந்தார்கள்.
ஓ.. அபூ தல்ஹா.., நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கின்ற கடவுள்.., இன்னின்ன அடிமையினால் தச்சுவேலை செய்யப்பட்டது என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள். ''அதில் நீங்கள் நெருப்பிட்டால், அது எரிந்து சாம்பலாகி விடும்.""
உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடமிருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத அபூ தல்ஹா அதிர்ச்சியில் உறைந்தே போனார்.
சிந்திக்க சில நிமிடங்களே ஆயின.., தனக்குள் கூறிக் கொண்டார், ''அந்தச் சிலை கடவுளாக இருக்குமென்றிருந்தால்.., தீயினால் எரிந்து சாம்பலாகிப் போவது எவ்வாறு? என்று தனக்குள் கூறிக் கொண்டார். பின்னர்.., மொழிந்தார்..,
''வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடிமையாகவும் இருக்கின்றார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்"" என்று கூறினார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
தன்னுடைய மகனை அழைத்த உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்.., தனது திருமணத்திற்கு சாட்சியாளர்களை அழைத்து வரும்படிக் கூறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். அவரது செல்வ வளம் அத்தனையையும் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களது காலடியில் கொட்டத் தயாராக இருந்த பொழுதும், உண்மையான தூய்மையான, சுயநலமில்லாத இறைநம்பிக்கை கொண்ட பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் நடந்து காட்டினார்கள்.
ஓ.. அபூ தல்ஹா.., அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே நான் உங்களை மணந்து கொள்ளச் சம்மதிக்கின்றேன், நீங்கள் அதற்காக எந்தவித மணக்கொடையையும் தர வேண்டாம்"" எனக் கூறினார்கள்.
அவர்களுக்குத் தெரியும்.., அபூதல்ஹா (ரலி) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் ஒரு பரிசினைப் பெற்றுக் கொண்டார், இன்னும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் அல்லாஹ்விடம் இன்னுமொரு பரிசையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டார், ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் மூலமாக ஒரு மனிதர் நேர்வழி பெறுவதென்பது, நீங்கள் செந்நிற ஒட்டகங்களைப் பெற்றிருப்பதனையும் விடச் சிறப்பானதாகும்.""
இத்தகைய சிறப்புமிக்க பெண்கள் வாழ்ந்து வரலாறு படைத்த மார்க்கமாக இருக்கின்றது இஸ்லாம். அதன் மூலம் அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு மிகச் சிறந்த வாழ்வியல் முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றார்கள். அதன் காரணமாகவே, அவர்களது வரலாறு இன்றளவும் பேசப்படுகின்றது.
ஆனால், இன்றைக்கு நீங்கள் திரையில் காணும் பெண்களைப் போல வலம் வர வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்..! ஆனால் அவர்களுக்கு இரண்டு படங்கள் தோல்விப்படமாக அமைந்து விட்டால், அடுத்துவரும் நாட்களில் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதே யாருக்கும் தெரியாது போய் விடும், அவர்களது அடையாளங்கள் கூட மறைந்து விடும். பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்தவர்களாக இன்றைக்கு இருப்பவர்கள் நாளைய கடைச்சரக்குகளை மடிக்கும் காகிதக் குப்பைகளாக இருப்பார்கள். இதுவே வரலாறு படைத்த உம்மு ஸுலைம் போன்ற பெண்களுக்கும், இருளில் வந்து பகலில் தொலைந்து போகும் 'நட்சத்திரங்களுக்கும்?" உள்ள வித்தியாசமாகும்.
பெண்களே..! உங்களது உரிமைகள் எங்கே இருக்கின்றது என்று தேடிப்பாருங்கள்.., அதுவே இந்த உலகத்தில் உங்களது பிறப்பின் உன்னதமென்ன என்பது குறித்து உங்களுக்கு விளக்கம் சொல்லும்.