நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வோம்

إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلّونَ عَلَى النَّبِيِّ يا أَيُّهَا الَّذينَ آمَنوا صَلّوا عَلَيهِ وَسَلِّموا تَسليمًا
[الأحزاب: ٥٦] 

*நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள், (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலாவத்துச் சொல்லுங்கள், ஸலாமும் கூறுங்கள்.*
(அல்குர்ஆன் : 33:56)


*விளக்கக் குறிப்புகள்*

அல்லாஹ் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் சொல்கிறான் என்பதன் அர்த்தம், அவர்களைப் பற்றி வானுலகில் மலக்குகளிடத்தில் புகழ்ந்துரைக்கிறான் என்பதாகும்.

நபி ﷺ அவர்கள் மீது மலக்குகள் ஸலவாத் சொல்கிறார்கள் என்பதன் அர்த்தம், நபி ﷺ அவர்களை வானவர்கள் புகழ்கிறார்கள் மற்றும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள் என்பதாகும்.

முஃமின்களாகிய நாம் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் சொல்லுவது என்பதன் அர்த்தம், அவர்கள் மீது ஸலவாத் சொல்லுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகும்.

ஸலாம் கூறுதல் என்பதன் அர்த்தம்: எல்லா ஆபத்துக்களில் இருந்தும் *பாதுகாக்குமாறு* அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகும்.

நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது முஃமின்களின் பண்பாகும்.

இந்த ஆயத் நபி ﷺ அவர்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்தையும் சிறந்த மதிப்பையும் எடுத்தியம்புகிறது.

நபி ﷺ அவர்கள் வானுலகிலும் பூமியிலும் புகழப்படுகின்ற மாமனிதராக இருக்கின்றார்கள்.

நபி ﷺ அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்காமல் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவதோ இழிவுபடுத்துவதோ மிகப்பெரும் குற்றமாகும்.

இந்த ஆயத்தில் "அவனுடைய வானவர்கள்" என்று அல்லாஹ் வானவர்களைத் தன் பக்கம் இணைத்துக் குறிப்பிட்டிருப்பது அவனிடத்தில் அவர்களுக்குரிய உயர்ந்த அந்தஸ்தை எடுத்துக்காட்டுகிறது.

அல்லாஹ் இந்த ஆயத்தின் ஆரம்பத்தில் "ஈமான் கொண்டவர்களே" (விசுவாசிகளே) என்று விழித்து இருப்பதன் மூலம் பின்னால் சொல்லப்படும் விடயம் மிக முக்கியமானது என்பது உணர்த்தப்படுகின்றது.

நபிமார்களுக்குப் பிரார்த்திக்கும் போது ஸலவாத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பிரார்திக்கிறோம். உதாரணம்:
عليه الصلاة والسلام
(அலைஹிஸ் *ஸலாத்து*  வஸ்-ஸலாம்). 
அது அவர்களுக்குரிய அடையாளமாக இருக்கின்றது. நபிமார்கள் அல்லாதவர்களுக்காக ஸலவாத் என்ற வார்த்தையை அடையாளமாக வைத்து பிரார்த்திக்கக் கூடாது. அடையாளச் சின்னமாக வைக்காமல் சில சந்தர்ப்பங்களில் நபிமார்கள் அல்லாதவர்களைக் குறித்து அல்லாஹ் உன்/அவர்/அவர்கள் மீது ஸலவாத் சொல்வானாக என்று பயன்படுத்துவதில் தவறில்லை. ஏனெனில், நபி ﷺ அவர்களும் நபித்தோழர்களுக்காக அவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள். 

ஸுன்னஹ்வில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில்: தொழுகை, ஜனாஸா தொழுகை, நபி ﷺ அவர்கள் ஞாபகப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் போன்றவற்றில் அவர்கள் மீது ஸலவாத் சொல்வது மிக அவசியமாகும். மேலும், துஆ கேட்கும் போது, அதான் முடிந்ததற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை போன்ற சந்தர்ப்பங்களில் ஸலவாத் கூறுவது ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

நபி ﷺ அவர்கள் கற்றுத் தந்துள்ள ஸலவாத்களில் பின்வரும் ஸலவாத் முக்கியமானது:
اللَّهُمَّ صَلِّ علَى مُحَمَّدٍ وعلَى آلِ مُحَمَّدٍ، كما صَلَّيْتَ علَى إبْرَاهِيمَ وعلَى آلِ إبْرَاهِيمَ؛ إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ علَى مُحَمَّدٍ وعلَى آلِ مُحَمَّدٍ، كما بَارَكْتَ علَى إبْرَاهِيمَ وعلَى آلِ إبْرَاهِيمَ؛ إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பெயரை மொழியும் போதும் எழுதும் போதும் செவிமடுக்கும் போதும் *"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"* என்று பிரார்த்திக்கிறோம். இதில் ஸலவாத், ஸலாம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. நாம் எழுதும் போது *"(ஸல்)"* என்று சுருக்கமாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகமானவர்கள் ஸலவாத்தை முழுமையாக வாசிக்காமல்; எழுத்தில் உள்ளது போன்று "ஸல்" என்று மாத்திரம் அர்த்தமற்ற வார்தையொன்றை வாசிக்கின்றனர். எங்களது நேர்வழிக்குக் காரணமாக இருந்த, எமக்குச் சுவனம் செல்லும் வழியைக் காட்டித்தந்த எமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதில் நாம் கஞ்சர்களாக இருந்துவிடக்கூடாது.

யா அல்லாஹ்! யா றஹ்மான்! உன் அருள் நபி ﷺ அவர்களின் வழியில் செல்ல எம்மனைவருக்கும் தவ்ஃபீக் செய்வாயாக! அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!

பார்க்க:
١- تفسير ابن كثير
٢- تفسير السعدي
٣- تفسير ابن عثيمين 

-ஸுன்னா அகடமி
أحدث أقدم