முஹர்ரம் மாதத்தின் பதினொராவது நாள் நோன்பு நோற்பது தொடர்பான ஹதீஸின் தரம் என்ன?

بسم الله الرحمن الرحيم

(அஸ்கி அல்கமி - பலகத்துறை)


முஹர்ரம் பதினொராவது நாள் நோன்பு நோற்பது பற்றிய ஹதீஸ் பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.

*“நீங்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்! அத்தினத்தில் யூதர்களுக்கு நீங்கள் மாற்றம் செய்யுங்கள்! அத்தினத்திற்கு முன்னைய ஒரு நாள் அல்லது பிந்திய ஒரு நாள் நீங்கள் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்!*

(முஸ்னத் அஹ்மத் : 2154, முஸ்னதுல் பஸ்ஸார் : 5238, இப்னு ஹுஸைமா : 2095)

முஸ்னத் அஹ்மத், அஸ்ஸுனனுல் குப்ரா ஆகிய நூற்களில் இடம்பெறும் இந்த ஹதீஸின் மற்றோர் அறிவிப்பில் "ஆஷூராவுடன் அத்தினத்திற்கு முந்திய நாளிலும் அதற்கு அடுத்த நாளிலும் நோன்பு வையுங்கள்!" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அபீ லைலா என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸை பாதுகாப்பதில் மோசமானவர் என்று இமாம் அலீ இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்.

 இன்னும், தாவூத் இப்னு அலீ என்பவரும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறுகிறார். இவரும் பலவீனமானவராவார். 

இமாம் தஹபீ, ஷூஐப் அல்அர்னாஊத் ஆகிய அறிஞர்கள் இவரை பலவீனமான அறிவிப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இமாம் அஹ்மத், ஷூஃபா, அபூஹாதிம் அர்ராஸீ, ஷவ்கானி, ஸன்ஆனி, அல்பானி, ஆகிய அறிஞர்களும் இந்த ஹதீஸ் பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஹதீஸ் பலவீனம் என்ற காரணத்தால் ஒன்பதாவது தினமும் பத்தாவது தினமும் நோன்பு நோற்பதே விரும்பத்தக்கதாகும்.

பத்தாவது தினத்தில் யூதர்களும் நோன்பு நோற்கின்றார்கள் என்பதை கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "நான் அடுத்து வரக்கூடிய வருடத்தில் உயிரோடு இருந்தால் நிச்சயமாக ஒன்பதாவது தினத்திலும் நோன்பு நோற்பேன்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2722)

 பதினோராவது தினத்தில் நான் நோன்பு நோற்பேன் என்று அவர்கள் கூறவில்லை.

மேலும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுமா அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: நீங்கள் ஒன்பதாவது நாளிலும், பத்தாவது நாளிலும் நோன்பு வையுங்கள், யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். (முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் : 7839)

எனவே, ஒன்பதாவது, பத்தாவது தினங்களில் நோன்பு நோற்கப்படுவதே நபியவர்களின் வழிகாட்டலாக உள்ளது. அதற்கு மேற்கூறப்பட்ட இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுமா அவர்களின் செய்தியும் அதற்கு வலுவாக அமைந்துள்ளது.

அல்லாஹ் மிக அறிந்தவன்.
----------------------------
*பார்க்க:*

பத்ஹுல் அல்லாம் : 2/704

தஹ்ரீஜு ஸாதில் மஆத் : 2/66

மீஸானுல் இஃதிதால் : 2/13

ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர் : 334

நைலுல் அவ்தார் : 4/330

அல்காமில் : 3/956

அல்முங்னீ : 1/219

அத்தன்வீர் : 7/19
أحدث أقدم