குர்ஆனை ஓதும் போது …!

- அஷ்ஷெய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி 


அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாம். மனித சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டுவதற்காக அல்லாஹ் அதை இறக்கிவைத்தான். இன்னும் அதனை முறையாக ஓதவும் கட்டளையிட்டுள்ளான்.

முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அல்லாஹ்விடம் கூலியையும் நன்மையையும் பெறுவதற்காக குர்ஆனை ஓதுகிறார்கள். அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் நன்மையிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

யார் அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் எழுத்தை ஓதுவாரோ அவருக்கு அதற்கு நன்மையுள்ளது. அதன் நன்மை பத்து மடங்காகும், அலிஃப் லாம் மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்லவில்லை, மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து ஆகும்.
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி)
நூல்: சுனனுத் திர்மிதி 2910

நன்மைப்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் யாராவது குர்ஆனை ஓதினால் அவருக்கு நிச்சயம் அதற்கான கூலி கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.
நூல் ஸஹீஹுல் புஹாரி 1.

ஆனால் மனித சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டக்கூடிய அல்லாஹ்வின் வார்த்தையை பொருள் புரியாமலும், விளாங்காமலும் நன்மையை பெறலாம் என்று மட்டுமே எண்ணி ஓதக்கூடாது. மாறாக இவ்வேதம் அருளப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து அதன் பொருளை அறிந்து வாழ்க்கையில் அதனை கடைபிடிக்க முன்வரவேண்டும்.

குர்ஆன் என்பது நமது வாழ்வியல் வழிகாட்டியாகும் எனவே குர்ஆனை ஓதும் நாம் நமது நிய்யத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் வாருங்கள் அறிந்துகொள்வோம் …….

1. குர்ஆனை கல்வி கற்கவும் அமல் செய்யவும் ஓதுகிறேன்.

2. அல்லாஹ்வின் புறத்திலிருந்துள்ள ஹிதாயத்தை நேர்வழியைஅடைய குர்ஆனை ஓதுகிறேன்.

3. அல்லாஹ்விடம் ரகசியமாக உரையாட குர்ஆனை ஓதுகிறேன்.

4. வெளிப்படையான மறைமுகமான நோயிலிருந்து நிவாரணம் பெற குர்ஆனை ஓதுகிறேன்.

5. இருளிலிருந்து அல்லாஹ் என்னை வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவர குர்ஆனை ஓதுகிறேன்.

6. இறுகிய உள்ளத்தை சீர் செய்யவதற்காக இன்னும் உயிரோட்டமான உள்ளத்திற்காகவும், மனநிறைவிற்காகவும் குர்ஆனை ஓதுகிறேன்.

7. அல்லாஹுவை மறந்து அலட்சியமாக இருப்பவனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக குர்ஆனை ஓதுகிறேன்.

8. அல்லாஹ்வின் மீதுள்ள ஈமானும், யகீனும் அதிகரிக்க குர்ஆனை ஓதுகிறேன்.

9. அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக செயல்படுத்தவேண்டுமென்று குர்ஆனை ஓதுகிறேன்.

10. மறுமையில் குர் ஆனின் பரிந்துரை கிடைக்க குர்ஆனை ஓதுகிறேன்.

11. நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை பின்பற்ற குர்ஆனை ஓதுகிறேன்.

12. என்னுடைய அந்தஸ்த்தை அல்லாஹ் உயர்த்தவேண்டுமென்று குர்ஆனை ஓதுகிறேன்.

13.சொர்க்கத்தில் உயர்ந்த படித்தரங்கள் கிடைக்க இன்னும் ஒளிமயமான கிரீடம் சூட்டப்பட என் பெற்றோருக்கு உயர்ந்த பட்டாடை அணிவிக்கப்பட குர்ஆனை ஓதுகிறேன்

14. அல்லாஹ்விடம் நெருங்க குர்ஆனை ஓதுகிறேன்.

15. அல்லாஹ்விற்குரியவர்களாக ஆவதர்காக குர்ஆனை ஓதுகிறேன்.

16. குர்ஆனை திறம்பட ஓதுபவர் சங்கைக்குறிய மலக்குகளுடன் இருப்பார் என்பதற்காக குர்ஆனை ஓதுகிறேன்.

17. நரகிலிருந்து தப்பிக்கவும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து காப்பாற்றப்படவும் குர்ஆனை ஓதுகிறேன்.

18. அமைதி என்மீது இறங்கவும் அல்லாஹ்வின் ரஹ்மத் என்னை சூழ்ந்துகொள்ளவும் அல்லாஹ் தன்னுடன் இருப்பவர்களிடத்தில் என்னைக்குறித்து நினைவு கூறவும் குர்ஆனை ஓதுகிறேன்.

19. உலகில் வழிதவறக்கூடாது, மறுமையில் நற்பேறு இழந்தவனாக ஆகக்கூடாது என்பதற்காக குர்ஆனை ஓதுகிறேன்.

20. ஷைத்தானுடனும் மனோஇச்சையுடனும் போராடுவதற்காக குர்ஆனை ஓதுகிறேன்.

வேதம் வழங்கப்பட்ட மக்கள் அவ்வேதத்தோடு எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைக்குறித்து அல்லாஹ் கூறுகிறான்,

”நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப் படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே நட்டமடைந்தவர்கள்.” (அல்குர்ஆன்:- 2:121)
Previous Post Next Post