அவ்லியாக்கள் யார்?
வலி என்ற சொல்லின் பன்மைதான் அவ்லியா என்பது. இதற்கு நேசன், நேசர்கள் என்று பொருளாகும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், தூதர்கள், வேதம் இன்னும் மலாயிக்காவை நம்பிக்கை கொள்வார்களோ அத்தகைய முஃமின்கள் அனைவரும் இறைநேசர்களாவார்கள். இவர்களைத்தான் அவ்லியா என்று கூறுவோம்.
இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
முஃமின்கள் அனைவரும் அர் ரஹ்மானின் நேசர்களாவார்கள்.
நூல்: ஷரஹ் தஹாவியா - 341
இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
முஃமினாகவும், இறையச்சமுடைவராகவும் யார் உள்ளார்களோ அவர்கள் அனைவரும் (இறை நேசர்கள்) வலியாவார்கள்.
நூல்: மஜ்மூஃல் ஃபதாவா - 2/224
அல்லாஹ் கூறுகிறான்:
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
(அல்குர்ஆன் : 10: 62-64)
மேலும் கூறுகிறான்:
اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
(அல்குர்ஆன் : 2:257)
முஃமின்கள் அல்லாஹ்வின் நேசர்களாவார்கள், அல்லாஹ் முஃமின்களின் நேசனும் ஆவான்.
முஃமின்களில் அல்லாஹ்வின் நேசர்கள் இரண்டு பிரிவினர்கள் ஆவார்கள்.
1. நடுநிலையாளர்கள்,
2. அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள்.
இதில் முதல் பிரிவினர் உடலாலும், உள்ளத்தாலும் கடமையான செயல்களை நிறைவேற்றி அல்லாஹ்வை நெருங்குபவர்கள்.
இரண்டாவது பிரிவினர்கள் நற்செயல்களால் முந்துபவர்கள்.
அதாவது கடமையான அமல்களுடன் சேர்த்து உபரியான வணக்கங்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குபவர்கள் ஆவார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்:
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி : 6502.
அல்லாஹ்வின் நேசர்கள் அவனது வரம்புகளைப்பேணி நடப்பவர்களாக, அவனது மார்க்கத்தை நிலைநாட்டுபவர்களாக, இன்னும் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவர்களாக இருப்பார்கள்.
- உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி