ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்

ஃபத்வா ரமழானிய்யா (ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்)

நவீன கால மார்க்க அறிஞர்களிடம் ரமழான் நோன்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் சிலவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது வாசகர்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன்.

இங்கே சில அறிஞர்களின் பத்வாக்கள் பதிவாகின்றன. எனது மொழியாக்கத்தில் வார்த்தைக்கு வார்த்தை சரியாக மொழியாக்கம் செய்யும் வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த அறிஞர் குறிப்பிட முனையும் கருத்தில் எந்தச் சிதைவும் இல்லாமல் தமிழாக்கம் செய்துள்ளேன்.
(அபூ அப்னான்)

கேள்வி:
நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்:
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:183)

இந்த ஆயத்தைப் பார்த்தால் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். தக்வாவும் அல்லாஹ்வை வழிப்படுவதும்தான் நோன்பு கடமையாக்கப்பட்டமைக்கான காரணமாகும். தக்வா என்றால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து நடப்பதாகும். அதாவது, ஏவப்பட்டதை எடுத்து நடப்பதும், தடுக்கப்பட்டவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வதும் தக்வா என்று கூறலாம்.

‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பாணத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
ஆறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: புஹாரி- 1903

நபி(ச) அவர்களின் இந்தப் பொன்மொழியும் நோன்பாளி ஏவப்பட்ட கடமைகளை எடுத்து நடக்க வேண்டும் என்பதையும், தடுக்கப்பட்ட சொற்கள், செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. ஒரு நோன்பாளி மனிதர்கள் பற்றிப் புறம் பேசலாகாது; பொய் சொல்லலாகாது; மக்களுக்கு மத்தியில் கோள் சொல்லி மூட்டிவிடலாகாது; தடுக்கப்பட்ட விதத்தில் வியாபாரம் செய்யலாகாது. தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும். ஒரு மாதம் முழுவதும் ஒரு மனிதன் இப்படி இருந்து பயிற்சி எடுத்துவிட்டால் அவன் வருடம் முழுவதும் இதனைப் பேணி வாழ்வதற்கான பக்குவத்தைப் பெற்றுவிடுவான்.

ஆனால், அதிகமான நோன்பாளிகளின் நோன்புடைய நாளுக்கும் நோன்பு அல்லாத நாட்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாதிருப்பது வேதனையான விடயமாகும். அவர்கள் நோன்புக்கு முன்னர் வழமையாக கடமைகளைப் பேணாமலும் ஹறாம்களைச் செய்தும் வந்தார்களோ, அப்படியே நோன்பு காலங்களிலும் நடந்து கொள்கின்றனர். நோன்பினது கண்ணியத்தைப் பேண வேண்டும் என அவர்கள் உணர்வதில்லை. இந்தப் போக்கு நோன்பை முறித்துவிடாது. என்றாலும், நோன்பின் கூலியைக் குறைத்துவிடும். சில போது குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க நோன்பின் கூலிகள் அப்படியே வீணாகிவிடவும் வாய்ப்புள்ளது.
(அஷ்ய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)


கேள்வி:
உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு ‘மக்கா’ பிறையை மையமாகக் கொண்டு ரமழானைத் தீர்மானிக்கும்படியும் ஏனைய அம்சங்களைச் செய்யும்படியும் அழைப்புவிடுப்போர் உள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்:
வானியல் நோக்கில் இந்த வாதம் நடைமுறைச் சாத்தியமற்றதாகும். ஷைக்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகின்றது போல் சந்திர உதயம் இடத்துக்கு இடம் மாறுபடக் கூடியது என்பதில் வானியலாளர்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் உள்ளனர். சந்திர உதயம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது எனும் பொது மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும் வானியலின் அடிப்படையிலும் அந்தந்த நாட்டில் காணப்படும் பிறையின் அடிப்படையில் செயற்படுவதே சரியாகும்.

இதற்கான மார்க்க ஆதாரம் பின்வருமாறு,
‘யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். ‘
(2:185)

ரமழானை அடைந்தவர்களை அழைத்து நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கூறுகின்றான். பூமியின் ஒரு பகுதியில் இருப்பவர்கள் ரமழான் மாதத்தை அடையவில்லை. அதாவது, பிறையைக் காணவில்லை. உதாரணமாக, மக்காவாசிகள் பிறையைக் கண்டுவிட்டனர். பிறையைக் காணாத மக்கள் ரமழானை அடைந்தால் நோன்பு பிடியுங்கள் என்ற இந்தக் கட்டளைக்கு மாதத்தை அடையாமல் எவ்வாறு உள்வாங்கப்படுவார்கள்?

நபி(ச) அவர்கள் கூறினார்கள். ‘பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமாக இருந்தால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி)
ஆதாரம்: புஹாரி- 1909, முஸ்லிம்- 2597

இவ்வாறு நபி(ச) அவர்கள் கூறியிருக்கும் போது, உதாரணமாக மக்காவாசிகள் பிறை கண்டுவிட்டனர். பாகிஸ்தான் அவர்களுக்குப் பின்னால் உள்ள கிழக்கு மக்களும் நோன்பு பிடிக்க வேண்டும் என்று எப்படி நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியும்?

நபி(ச) அவர்கள், ‘பிறையைக் கண்டு பிடியுங்கள்’ என்று சொல்லியிருக்க, வானில் பிறை இன்னும் உதிக்கவில்லை என்பதை வானியல் அடிப்படையில் அறிந்து வைத்துள்ள நாம் குறித்த நாளில் நோன்பு பிடிக்க வேண்டும் என்று எப்படிக் கூற முடியும்?

அடுத்து, இந்த வாதம் பிழையானது என்பதை அறிவுப்பூர்வமாகவும் நாம் உணரலாம். முரண்பட முடியாத சரியான ஒப்பீட்டு ஆய்வின் மூலம் நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

பூமியின் மேற்குப் பக்கத்தை விட கிழக்குப் பக்கத்தில்தான் பஜ்ர் முதலில் உதிக்கின்றது என்பதை நாம் அறிவோம். கிழக்குப் பக்கத்தில் பஜ்ர் உதிக்கும் போது இரவுப் பொழுதில் இருக்கும் எமக்கு நோன்பு நோற்பது கடமையாகுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்.

கிழக்குப் பக்கத்தில் சூரியன் மறையும் போது பகல் பொழுதில் இருக்கும் எமக்கு நோன்பைத் திறப்பது ஆகுமானதா? நிச்சயமாக இல்லை.

அப்படியென்றால், சந்திரனும் சூரியனைப் போன்றதே! பிறை என்பது மாதத்தைக் காட்டும். சூரியன் என்பது நாட்களைக் காட்டும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் நோன்பு பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்.
‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்ளூ பருகுங்கள்ளூ பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் மஸ்ஜித்களில் (தங்கி) இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை நெருங்காதீர்கள். இவ் வாறே, மனிதர்கள் (தன்னை) அஞ்சி நடப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு தெளிவு படுத்துகின்றான்.’
(2:187)

இவ்வாறு கூறிய அல்லாஹ்தான் அந்த மாதத்தை உங்களில் எவர் அடைகின்றாரோ அவர் நோன்பிருக்கட்டும் என்று கூறுகின்றான்.
பஜ்ரை அடைந்தவர் நோன்பைப் பிடித்து, சூரிய மறைவை அடைந்தவர் நோன்பைத் திறப்பது போல் பிறை உதிப்பில் வேறுபாடு இருப்பது போல் பிறை எங்கு தென்பட்டதோ அவர்கள் மீதே நோன்பு பிடிப்பதும், விடுவதும் மார்க்க விதியாகும். மக்கா பிறையை வைத்து பிறை உதிக்காத பகுதியில் இருப்பவர்கள் நோன்பிருக்க முடியாது.
இந்த அடிப்படையில் நோன்பு மற்றும் பெருநாள் விடயத்தில் அல்லாஹ் தனது வேதத்திலும் நபியவர்கள் தமது ஸுன்னாவிலும் காட்டித் தந்த சந்திரனைக் காணுதல் அல்லது பஜ்ரை அடைதல் என்ற உணர்வு ரீதியான அடிப்படையில் அவரவர்குரிய தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இயங்குவதே சரியானதாகும்.
(அஷ்ஷய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)


கேள்வி:
ஒரு சிறிய பெண் பிள்ளைக்கு மாதத்தீட்டு ஏற்பட்டுவிட்டது. அவள் அறியாமை காரணமாக அந்நாட்களில் நோன்பு நோற்றுள்ளாள். அவள் மீதுள்ள கடமை என்ன?

பதில்:
அவள் மாதத்தீட்டுடைய நேரத்தில் பிடித்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும். அவள் அறியாமல் செய்திருந்தாலும் மாதத்தீட்டுடைய நேரத்தில் பிடிக்கப்பட்ட நோன்பு ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது, அது (ஸிஹ்ஹத்) அங்கீகரிக்கத்தக்க நோன்பும் அல்ல. கழா நோன்பைப் பிடிப்பதற்குக் கால வரையறை இல்லை. (அவள் அந்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும்.)

இதற்கு மாற்றமான ஒரு மஸ்அலாவும் உள்ளது. ஒரு சிறிய பெண் பிள்ளைக்கு மாதத்தீட்டு வந்துவிட்டது. அவள் வெட்கம் காரணமாகக் குடும்பத்தாரக்குச் சொல்லவில்லை. அவள் நோன்பு நோற்பவளாகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் உள்ள பெண் விடுபட்ட அந்த மாத நோன்பைக் கழாச் செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால் என்பதற்காக அடையாளமாக மாதத்தீட்டு உள்ளது. பருவ வயதை அடைந்துவிட்டால் மார்க்கச் சட்டத்தைப் பேணுவது கட்டாயமாகும் என்ற அடிப்படையில் அவள் பிடிக்காமல் விட்ட அம்மாதத்திற்கான நோன்பைக் கழாச் செய்ய வேண்டும்.
(ஷைய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)


கேள்வி:
ரமழான் மாதத்தின் முதல் நாள் ரமழான் பிறை கண்டதை அறிவிப்பதற்கு முன்னரே ஒரு மனிதர் தூங்கிவிட்டார். ரமழான் வந்துவிட்டதை அறியாத அவர் காலையில் நோன்பு நோற்கும் நிய்யத்துடனும் தூங்கவில்லை. சூரியன் உதித்த பின்னர்தான் இன்று ரமழானின் முதல் நாள் என்பதை அறிகின்றார். இந்நிலையில் அவர் என்ன செய்வார்? குறித் நோன்பை அவர் கழாச் செய்ய வேண்டுமா?

பதில்:
இந்த மனிதர் ரமழான் உறுதிப்பட முன்னர் ரமழானின் முதல் நாள் இரவு தூங்கியுள்ளார். பஜ்ர் உதயமானதன் பின்னர்தான் அன்றைய நாள் ரமழானின் முதல் நாள் என்பதை அறிகின்றார். அது ரமழானின் ஒரு நாள் என்பதை அறிந்துவிட்டதனால் நாளின் மீதி நேரத்தில் நோன்பிருப்பது அவருக்குக் கடமையாகின்றது. பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி அவன் அன்றைய நோன்பைக் கழாச் செய்யவும் வேண்டும். நான் அறிந்த வகையில் இது விடயத்தில் iஷக்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மட்டுமே மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளார்கள். 

அவர் இது குறித்துக் கூறும் போது,

‘நிய்யத் என்பது அறிவைப் பின்தொடரக் கூடியதாகும். அவர் (ரமழான் வந்துவிட்டதை) அறியாதவர். எனவே, அவர் மன்னிக்கப்படுவார். ரமழான் வந்துவிட்டதை அறிந்த பின்னர் அவர் நிய்யத்தை விட்டுவிடவில்லை. மாறாக, அவர் ரமழான் வந்துவிட்டதை அறியாதவராக இருந்தார். ‘அறியாதவர் மன்னிக்கப்படுவார்;’ என்ற அடிப்படையில் அந்த நாள் ரமழானுடைய நாள் என்பதை அறிந்ததில் இருந்து அவர் நோன்பு நோற்றாரெனில் அவரது நோன்பு சரியானதுதான். இந்த அடிப்படையில் அதை அவர் கழா செய்ய வேண்டியதில்லை’

இருப்பினும், அதிகமான உலமாக்கள் அவர் அறிந்ததிலிருந்து நோன்பையும் நோற்க வேண்டும். அந்த நோன்பைக் கழாவும் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கான காரணத்தை அவர்கள் கூறும் போது,

குறித்த நபர் அந்த நாளின் ஒரு பகுதியை (நோன்பின் சர்த்துக்களில் ஒன்றான) நிய்யத் இல்லாமலேயே கழித்துள்ளார் என்று கூறுகின்றனர். குறித்த அந்த நோன்பைக் கழா செய்வதுதான் பொருத்தமானதாக நான் கருதுகின்றேன்.
(ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)


கேள்வி:
பயணம் செய்யும் ஒருவர் அதிக சிரமத்துடன் நோன்பை நோற்பது பற்றிய சட்டம் என்ன?

பதில்:
அதிக சிரமப்பட்டு ஒருவர் பயணத்தில் நோன்பு நோற்பது ‘மக்ரூஹ்’ ஆகும்.
‘நபி(ச) அவர்கள் தமது ஒரு பயணத்தில் ஒரு மனிதரைச் சூழ மக்கள் ஒன்று கூடியிருந்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். ‘இவர் ஒரு நோன்பாளி’ என்று கூறிய போது, ‘ஒரு பயணத்தில் நோன்பு நோற்பதில் நன்மையில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்;துல்லாஹ்
ஆதாரம்: முஸ்லிம்- 2668

இதே வேளை பயணத்தில் நோன்பு நோற்பது மிகவும் கஷ;டமாக இருந்தால் அவர் நோன்பை விடுவது கட்டாயமாகும். ஏனெனில், ஒரு பயணத்தில் நோன்பால் மக்கள் அதிகம் கஷ;டப்படுவதாக நபி(ச) அவர்களிடம் மக்கள் முறையிட்ட போது ‘நோன்பை விடுமாறு கூறினார்கள். அதன் பின்னரும் சிலர் நோன்பு நோற்பதாக அவரிடம் கூறப்பட்ட போது அவர்கள் வரம்பு மீறியவர்கள், அவர்கள் வரம்பு மீறியவர்கள் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’ (பார்க்க: முஸ்லிம் 2666)

யாருக்குப் பயணம் சிரமமளிக்க வில்லையோ அவர் நபி(ச) அவர்களும் பயணத்தில் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதைப் பின்பற்றி நோன்பு நோற்பது சிறந்ததாகும்.

‘நாம் நபி(ச) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூடு அதிகமான ஒரு ரமழானாக அது இருந்தது. எங்களில் நபி(ச) அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்களையும் தவிர மற்றைய எவரும் நோன்பாளியாக இருக்கவில்லை’ என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அஹ்மத்: 22039 — 21696)


கேள்வி:
நவீன போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ள, இன்றைய சூழலில் நோன்பு நோற்பது பயணிக்குச் சிரமத்தை ஏற்படுத்தாது என்ற நிலையில் பயணியின் நோன்பு குறித்த சட்டம் என்ன?

பதில்:
பயணிக்கு நோன்பு நோற்கவும் நோன்பை விடவும் அனுமதியுள்ளது.
‘ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை. ‘ (2:185)

நபித்தோழர்கள் நபி(ச) அவர்களுடன் பயணம் செய்வார்கள். அவர்களில் நோன்பாளியும் இருப்பார்கள்; நோன்பை விட்டவர்களும் இருப்பார்கள். நோன்பை விட்டவரை நோன்பாளி குறை கூறியதுமில்லை. நோன்பாளியை நோன்பை விட்டவர் குறை கூறியதுமில்லை. நபி(ச) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். இது குறித்து அபூதர்(வ) அவர்கள் அறிவிக்கும் போது பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.

‘சூடு அதிகமான ஒரு ரமழான் காலத்தில் நாம் நபி அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் நபி(ச) அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (வ) அவர்களையும் தவிர மற்றைய எவரும் நோன்பாளியாக இருக்கவில்லை’ என அபூதர்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’
(அஹ்மத்: 22039 — 21696)

பயணத்தில் நோன்பு நோற்பதா? இல்லையா? என்பதைப் பயணியே தீர்மானிப்பார். நோன்பு நோற்பது சிரமத்தை அளிக்காது என்றிருந்தால் பயணத்தில் நோன்பு நோற்பதே சிறந்ததாகும். அதில் மூன்று முக்கிய பயன்கள் உள்ளன.

1. நபி(ச) அவர்களைப் பின்பற்றுதல். (நபி(ச) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றுள்ளார்கள்.)

2. இலகுவானது:
மக்களோடு மக்களாக ரமழானிலே நோன்பை நோற்றுவிடுவது இலகுவானதாகும்.

3. விரைவாகத் தனது கடமையை நிறைவேற்றிவிடுதல். (கடமை நீங்கி விடுகின்றது.)
பயணத்தில் நோன்பு நோற்பது அதிக சிரமத்தைக் கொடுக்குமென்றிருந்தால் அது போன்ற சந்தர்ப்பத்தில் நோன்பை விட்டுவிட வேண்டும்.

‘நபி(ச) அவர்கள் ஒரு பயணத்தில் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரைச் சூழ மக்கள் இருந்து கொண்டு அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தனர். இவருக்கு என்ன என்று கேட்ட போது இவர் நோன்பாளி என்று கூறப்பட்டது. பயணத்தில் நோன்பு நோற்பதில் எந்த நன்மையும் இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினர்கள். (முஸ்லிம்)

நபி(ச) அவர்கள் இந்தப் பொதுவான வார்த்தையில் இவரைப் போல நோன்பு நோற்பதில் சிரமப்படுபவர்கள் கவனத்திற் கொள்ளப்படுவார்கள்.

இந்த அடிப்படையில் கேள்வி கேட்டவர் குறிப்பிடுவது போல் பயணம் என்பது இலகுவானதே! பெரும்பாலும் பயணத்தில் நோன்பு நோற்பது சிரமத்தைக் கொடுக்காது. பயணத்தில் நோன்பு சிரமத்தை அளிக்காது என்றிருந்தால் நோன்பு நோற்பதுதான் மிகச் சிறந்ததாகும்.
(ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்))


கேள்வி:
ரமழானில் நோன்பு நோற்பவர் ஒவ்வொரு நோன்புக்கும் நிய்யத்து வைக்க வேண்டுமா? அல்லது ரமழான் முழுவதுமாக நோன்பு நோற்பதாக எண்ணம் கொள்வதே போதுமானதா?

பதில்:
ரமழானில் முதல் நாளில் கொள்ளும் எண்ணமே ரமழான் முழுவதுக்கும் போதுமானதாகும். ஏனென்றால், நோன்பு நோற்பவர் ஒவ்வொரு நாளும் குறித்த நோன்புக்காகத் தனித்தனியாக இரவில் நிய்யத்து (எண்ணம்) கொள்ளாவிட்டாலும் கூட, ரமழானின் ஆரம்பத்திலே (எல்லா நாளும் நோன்பு பிடிக்க வேண்டும்) என்ற எண்ணம் அவரிடத்தில் இருந்தே உள்ளது.

இருப்பினும் ரமழானின் இடையில் பயணம், நோய், அல்லது வேறு காரணத்தால் நோன்பை விட்டு எண்ணத்தை முறித்துவிட்டால் மீண்டும் புதிதாக நிய்யத்து (எண்ணம்) கொள்வது கட்டாயமாகிவிடுகின்றது. ஏனெனில், அவர் பயணம், நோய் போன்ற காரணங்களால் நோன்பை விட்டு நிய்யத்தைத் துண்டித்து விட்டார்.
(அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்))


கேள்வி:
நோன்பை முறிக்கக் கூடியவைகள் எவை?

பதில்:
பின்வரும் காரணிகள் நோன்பை முறிக்கக் கூடியவைகளாகும்.
1. உடலுறவு கொள்ளல்.
2. உண்ணல்.
3. பருகல்.
4. இச்சையுடன் விந்தை வெளிப்படுத்துதல்.
5. உண்ணல், குடித்தலுக்குப் பகரமாக அமையக் கூடியவை.
7. வேண்டுமென வாந்தியெடுத்தல்.
6. ஹிஜாமா மூலம் இரத்தத்தை வெளியேற்றுதல்
8. மாதத் தீட்டு, பிரசவத் தீட்டு, இரத்தம் வெளியேறுதல்.

உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கும் என்பதற்கான ஆதாரமாகப் பின்வரும் வசனம் அமைகின்றன.

‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளி வாகும் வரை உண்ணுங்கள்ளூ பருகுங்கள்ளூ பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் மஸ்ஜித்களில் (தங்கி) இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே, மனிதர்கள் (தன்னை) அஞ்சி நடப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு தெளிவு படுத்துகின்றான். ‘
(2:187)

நான்காவதாக, இச்சையுடன் விந்தை வெளியேற்றுவது நோன்பை முறிக்கும் என்பதற்கு நோன்பாளி குறித்து அல்லாஹ் கூறும் பின்வரும் ஹதீஸுல் குத்ஸி ஆதாரமாக அமைகின்றது.
‘நோன்பாளி தனது உணவையும், தனது பானத்தையும், தனது இச்சையையும் எனக்காக விடுகின்றான்.’
(இங்கே நோன்பாளி அல்லாஹ் வுக்காகத் தனது ஷஹ்வத்தை – இச்சையை விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான்.) இந்திரியத்தை வெளியேற்றுவது ஷஹ்வத்தை – இச்சையைச் சேர்ந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

‘உங்களில் ஒருவர் இல்லறத்தில் ஈடுபடுவதும் ஸதகாவாகும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனது ஷஹ்வத்தை – இச்சையைத் தீர்ப்பதற்காக மனைவியிடம் செல்வதற்கு எமக்கு நற்கூலி உண்டா? என நபியவர்களிடத்தில் கேட்டனர். அதற்கு நபி(ச) அவர்கள் அவர் அதை ஹராத்தில் வைத்தால் அவருக்குப் பாவம் உண்டல்லவா? அவ்வாறே அவர் அதை ஹலாலான முறையில் வைத்தால் அதற்கு நற்கூலி உண்டு என்று கூறினார்கள்.’
(முஸ்லிம்: 2376)

அதை வைத்தால் என்று நபி(ச) அவர்கள் கூறியது, குதித்துப் பாயும் விந்தையே ஆகும். இதனால்தான் உடலுறவு அல்லாத இச்சையுடன் மனைவியுடன் கொள்ளும் சில சில்மிஷங்களால் ‘மதி’ (மதன நீர்) வெளிப்பட்டால் கூட நோன்பு முறியாது என்பதே சரியான கருத்தாக உள்ளது. (குதித்துப் பாயும் விந்துவே முன்னைய ஹதீஸின் கருத்தாகக் கொள்ளப்படுகின்றது என்பதைக் குறிக்கவே இது இங்கே கூறப்படுகின்றது)

ஐந்தாவதாக, உண்ணல் மற்றும் பருகலில் இல்லாத அதே வேளை, அந்த இடத்தை நிறைக்கக் கூடிய செயற்பாடுகள் நோன்பை முறிக்கும். உதாரணமாக, உணவுக்குப் பகரமாக ஏற்றப்படும் சேலைன். இது உண்ணல், பருகல் என்ற வட்டத்திற்குள் நேரடியாக வராவிட்டாலும் கூட உண்ணல், பருகல் என்பவற்றிற்கு ஈடாக நடக்கக் கூடியதாகும். இந்த வகையில் உணவுக்குப் பகரமாக ஏற்றப்படக் கூடிய சேலைன் மருந்தும் நோன்பை முறிக்கக் கூடியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். உணவாக அல்லாமல் மருந்தாக, ஊசி போன்ற வழிகளினூடாக மருந்து ஏற்றப்பட்டால் அது நோன்பை முறிக்காது.

ஆறாவதாக, வேண்டுமென்றே வாந்தி எடுத்தல். அதாவது, தனது வயிற்றில் உள்ளது வாய் மூலமாக வெளியே வர வேண்டும் என்ற நோக்கில் வாந்தி எடுத்தல் நோன்பை முறிக்கும். இது குறித்து அபூ ஹுரைரா(வ) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் பேசுகின்றது.

‘யாருக்கு வாந்தி வருகின்றதோ அவர் (அந்த நோன்பைக்) கழாச் செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கின்றாரோ அவர் (அந்த நோன்பைக்) கழாச் செய்யட்டும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி: 720)

ஒருவர் வாந்தி எடுத்தால் வயிறு காலியாகிவிடுகின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் தேவை ஏற்படுகின்றது. எனவே, ஒருவர் பர்ழான நோன்பை நோற்றிருந்தால் அவர் தானாக வாந்தி எடுப்பது கூடாது. ஏனெனில், அவர் வேண்டுமென வாந்தி எடுத்தால் கடமையான நோன்பை சீர்கெடுத்துக் கொள்கின்றார்.

ஏழாவது ஹிஜாமா மூலமாக இரத்தத்தை வெளியேற்றுதல்.
‘ஹிஜாமா செய்பவரும் செய்துவிடுபவரும் நோன்பை முறித்துக் கொண்டனர்.’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி: 1937, அபூதாவூத்- 2369)

எட்டாவதாக ஹைல், நிபாஸுடைய இரத்தம் வெளியேறுவது. ஒரு பெண் மாதத்தீட்டானால் தொழாமலும் நோன்பு நோற்காமலும் இருப்பதில்லையா? என்ற ஹதீஸ் இதற்கான ஆதாரமாகும். மாதத்தீட்டுடைய பெண் நோன்பு நோற்றால் அது செல்லாது என்பதில் அறிஞர்கள் ‘இஸ்மா’ முடிவில் உள்ளனர். பிரசவத் தீட்டும் இது போன்றதுதான்.

இந்த எட்டு விடயங்களும் நோன்பை முறிக்கக் கூடியவைகளாகும். இவை அனைத்தும் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டாலேயன்றி நோன்பு முறியமாட்டாது. அவையாவன,
1. அறிவு
2. நிலைவு – ஞபகம்
3. நோக்கம்

இந்த மூன்று நிபந்தனைகளும் இருந்தாலே அன்றி மேற்குறித்த நோன்பை முறிக்கும் செயல்கள் நோன்பைப் பாழாக்க மாட்டாது.

குறித்த நபர் இது குறித்த ஷரீஆ சட்டத்தை அறிந்தவராகவும் குறித்த நிலை அல்லது நேரம் பற்றிய அறிவுடையவராகவும் இருத்தல். அவர் ஷரீஆ சட்டம் குறித்து அறிவீனராகவும் அல்லது குறித்த நேரம் பற்றிய அறிவீனராகவும் இருந்தால் அவரது நோன்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
அல்குர்ஆனில் எமக்குக் கற்றுத் தரப்பட்டது இப்படி அமைந்துள்ளது.

”எங்கள் இரட்சகனே! நாம் மறந்துவிட்டாலோ அல்லது தவறிழைத்துவிட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து விடாதிருப்பாயாக! ‘
(2:286)

இவ்வாறு நாம் கேட்கும் போது நீங்கள் கேட்டதை நான் தந்துவிட்டேன் என அல்லாஹ் கூறுகின்றான்.

‘நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடைய வனாகவும் இருக்கின்றான்.’
(33:5)

இந்த இரு ஆயத்துக்களும் நாம் கூறியதற்கான ஆதாரமாகத் திகழ்கின்றன.

இது குறித்து குறிப்பாக நோன்பு குறித்தே ஹதீஸ் வந்துள்ளது. அதீஃ இப்னு ஹாதம்(வ) அவர்கள் தனது தலையணையின் கீழ் வெள்ளை, கறுப்பு என இரண்டு நூற்களை வைத்திருந்து அவற்றில் கறுப்பிலிருந்து வெள்ளை வெளிப்படையாகத் தெரியும் வரை உண்டு, குடித்து வந்தார். அதன் பின்னர்தான் நோன்பிருந்தார். இது குறித்து நபியவர்களிடம் அவர் கூறிய போது, அல்குர்ஆனில் கறுப்பு நூலில் இருந்து வெள்ளை நூல் தெரியும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள் என அல்லாஹ் கூறியது இந்த நூலைக் குறிக்கும் அர்த்தத்தில் அல்ல. வெள்ளை நூல் என்றால் பகலின் வெண்மை. கறுப்பு நூல் என்றால் இரவின் இருட்டு என நபி(ச) விளக்கப்படுத்தினார்கள். இருப்பினும் குறித்த நோன்பைக் கழாச் செய்யுமாறு கூறவில்லை.

அவர் சட்டம் குறித்துத் தெரியாமல் அந்த ஆயத்தின் அர்த்தம் இதுதான் என நினைத்துச் செயல்பட்டார்.

நேரம் தெரியாமல் நடப்பதும் நோன்பை முறிக்காது என்பதற்கு புஹாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

‘மேகமூட்டமுள்ள ஒரு நாளில் நபி(ச) அவர்கள் காலத்தில் நாம் நோன்பைத் திறந்த பின்னர் சூரியன் வெளிப்படாது.’
(புஹாரி: 1959)

சூரியன் மறைவதற்கு முன்னர் அது மறைந்துவிட்டதாக நினைத்து நோன்பைத் திறந்த அவர்களை அந்த நோன்பைக் கழாச் செய்யுமாறு நபி(ச) அவர்கள் ஏவவில்லை. கழாச் செய்வது கட்டாயம் என்றால் ஏவியிருப்பார்கள். அப்படி ஏவியிருந்தால் அது உம்மத்துக்கு அறிவிக்கப்பட்டு உம்மத்திற்கு வந்து சேர்ந்திருக்கும்.

‘உங்களுக்கு முன்னுள்ள நூஹுடைய சமூகம் மற்றும் ஆத், சமூத் சமூகங்களுடையவும் அவர்களுக்குப் பின்னுள்ளவர்களினதும் செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வே நன்கறிவான். அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தும் அவர்கள் தமது கைகளைத் தமது வாய்களில் வைத்துக் கொண்டு, ‘நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாம் நிராகரிக்கின்றோம். எதன்பால் எங்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அது பற்றி நிச்சயமாக நாம் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றோம்’ என்றும் கூறினர்.’
(14:9)

என அல்லாஹ் அவனது திருமறையில் கூறுகின்றான். கழாச் செய்ய ஏவியதாக அறிவிப்பு வராததால் நபி(ச) அவர்கள் கழாச் செய்யுமாறு ஏவவில்லை என்பது உறுதியாகின்றது. அவர் கழாச் செய்யுமாறு ஏவவில்லை என்றால் கழாச் செய்வது கட்டாயம் இல்லை என்பது அர்த்தமாகும்.

இவ்வாறே ஒரு மனிதர் தூக்கத்தி லிருந்து விழிக்கின்றார்; உண்ணுகின்றார்; பருகுகின்றார்; இரவு என்று அவர் நினைக்கின்றார். ஆனால், அவர் பஜ்ர் உதயமான பின்னர்தான் உண்டு, குடித்துள்ளார். அவர் தெரியாமல் இப்படி நடந்து கொண்டதால் அவர் மீது அந்த நோன்பு கழாச் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில், அவர் அறியாமையால் இப்படி நடந்துள்ளார்.

இரண்டாவது நிபந்தனை நினைவுடன் இருத்தலாகும். அதற்கு எதிர் நிலை மறதியுடன் இருப்பதாகும். முன்னைய ஆதாரத்தினுடைய வசனமே இதற்கும் ஆதாரமாக உள்ளது.

‘யாராவது மறதியாக உண்டுவிட்டால் அல்லது பருகிவிட்டால் அவர் நோன்பை முறித்துவிடாது தொடர்ந்து நோன்பிருக்கட்டும். அவரை உண்ணச் செய்ததும், குடிக்கச் செய்ததும் அல்லாஹ்வே!’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி: 1933)

மூன்றாவது நிபந்தனை ‘நோக்கம்’ நோன்பை முறிக்கும் செயலை ஒருவர் தேர்வு செய்து செய்திருக்க வேண்டும். தேர்வு இல்லாமல் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டோ அல்லது நிர்ப்பந்திக்கப்படாமலோ நடந்திருந்தால் அது நோன்பைப் பாதிக்காது. நிர்ப்பந்திக்கப்பட்டவர் குப்ருடைய வார்த்தை யைக் கூடக் கூறலாம் எனக் கூறும் பின்வரும் அல்குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாகும்.

‘எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் அவரின் உள்ளம் நம்பிக்கையால் அமைதி பெற்ற நிலையில், அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதின் காரணமாக அவனை (வாயளவில்) நிராகரிக்கிறாரோ (அவர் மீது குற்றமில்லை.) எனினும், எவர்கள் மன நிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.’
(16:106)

குப்ருடைய விடயத்திலேயே நிர்ப்பந்தத்திற்கு மன்னிப்பு உண்டு என்றால் ஏனைய விடயங்களுக்கும் மன்னிப்பு உண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

‘தவறுதலாகவும், மறதியாகவும், நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் செய்யப்படும் குற்றங்களைப் பதிவதை விட்டும் அல்லாஹ் பேனையை உயர்த்திவிட்டான்’ என நபி(ச) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களும் இதற்கான ஆதாரமாகும்.

இந்த அடிப்படையில் புழுதி பறந்து சென்று ஒருவரது மூக்கு வழியாகத் தொண்டையை அடைந்து அதன் சுவையை அவர் உணர்கின்றார். இதனால் அவரது நோன்பு பாதிக்கப்படமாட்டாது.

இவ்வாறே நோன்பை விடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு அந்த நிர்ப்பந்தத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவர் இவற்றைச் செய்தால் அவரது நோன்பு முறியாது. அவரின் நோன்பு சரியான நோன்பேயாகும். ஏனெனில், இதை அவர் தேர்ந்தெடுத்துச் செய்யவில்லை.

இவ்வாறே பகல் நேரத் தூக்கத்தில் ஒருவருக்கு ஸ்கலிதமானால் அவரது நோன்பும் முறியாது. ஏனெனில், தூக்கத்தில் இருப்பவருக்கு எந்த நோக்கமும் இல்லை.

இவ்வாறே ஒருவர் நோன்பாளியான தனது மனைவியைக் கட்டாயப்படுத்தி நிர்ப்பந்தித்து உறவு கொண்டால் அவளது நோன்பு செல்லும். ஏனெனில், அவர் இதைத் தேர்வு செய்யவில்லை.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் உண்டு. தன்மீது நோன்பு கடமையான நிலையில் இருக்கும் ஒருவர் ரமழானில் பகலில் உறவு கொண்டதன் மூலம் நோன்பை முறித்தால் ஐந்து விடயங்கள் தொடர்ச்சியாகக் கவனிக்கப்பட வேண்டும்.

1. இதற்கான குற்றம் உள்ளது.
2. மீதி நோரத்தில் அவர் நோன்பிருக்க வேண்டும்.
3. அவரது நோன்பு பழுதாகிவிட்டது.
4. அவருக்குக் கழாச் செய்யும் கடமை உள்ளது.
5. இதற்கான குற்றப்பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும்.
இந்த உடலுறவு மூலமாக இதெல்லாம் நடக்கும் என்பதை அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் அவர் மீது இதெல்லாம் ஏற்பட்டுவிடும். உதாரணமாக, பகலில் நோன்பு காலத்தில் உறவு கொண்டால் நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் என்பது தெரியும். இருப்பினும் குற்றப் பரிகாரம் நிறைவேற்ற வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என அவர் நழுவ முடியாது. அவர் இந்த சட்டத்துக்குள்ளாகியே ஆக வேண்டும்.

ஏனெனில், அவர் நோன்பைப் பழுதாக்கும் காரியத்தை அறிந்து வேண்டுமென்றுதான் செய்தார். இந்தக் காரியத்தை அவர் வேண்டுமென்றே செய்ததால் அதைச் செய்தால் என்னென்ன சட்டம் உண்டோ அதையெல்லாம் அவர் செய்தாக வேண்டும். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது.

‘ஒரு மனிதர் நபி(ச) அவர்களிம் வந்து ‘நான் அழிந்துவிட்டேன்’ என்றார். ‘உன்னை அழித்தது எது?’ என நபி(ச) அவர்கள் கேட்ட போது, ‘ரமழானில் நோன்போடு மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன்’ என்றார். அவருக்கு அதற்குரிய குற்றப்பரிகாரத்தைச் செய்யுமாறு நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’

அந்த மனிதருக்கு இதற்குக் குற்றப்பரிகாரம் உண்டா? இல்லையா? என்பது தெரியாமல் இருந்தும் நபி(ச) அவர்கள் குற்றப்பரிகாரம் செய்யுமாறு ஏவியுள்ளதால் தவறு செய்தவர் அதற்கான பரிகாரம் உண்டு என்பதை அறியாமல் செய்திருந்தாலும் பரிகாரத்தைக் காண வேண்டும்.


கேள்வி:
உணவை ருசி பார்த்தால் நோன்பு முறிந்துவிடுமா?

பதில்:
உணவை ருசி பார்ப்பவர் அதை விழுங்கிவிடாத பட்சத்தில் அவரது நோன்பை அது முறிக்காது. எனினும், அவசியம் தேவை ஏற்பட்டாலேயன்றி அதை நீங்கள் செய்ய வேண்டாம். இது போன்ற சந்தர்ப்பத்தில் உண்ணும் எண்ணம் இல்லாமல் தப்பித் தவறி விழுங்கப்பட்டால் அது நோன்பை முறித்துவிடாது.
(முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)


கேள்வி:
மாதத்தீட்டுடைய பெண் வெட்கம் காரணமாக நோன்பு நோற்றால் அவளுக்குப் பாவம் பதியப்படுகின்றனவா?

பதில்:
அப்பெண்ணின் செயல் தவறானது என்பதில் சந்தேகமே இல்லை. இது போன்ற விடயங்களில் வெட்கப்படுவது ஆகுமானதல்ல. மாதத்தீட்டு என்பது பெண்களுக்கு அல்லாஹ் விதித்த இயற்கையான ஒரு அம்சம். தீட்டுடைய ஒரு பெண் தொழுவதையும், நோன்பு நோற்பதையும் இஸ்லாம் தடுத்துள்ளது. வெட்கத்தின் காரணமாக மாதத்தீட்டுடன் நோன்பு நோற்ற அப்பெண் தான் மாதத்தீட்டுடன் பிடித்த அந்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும். இதன் பின்னர் இவ்வாறு செயற்படக் கூடாது. அல்லாஹு அஃலம்!
(முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)


கேள்வி:
தனது உடல் எடையைக் குறைப்பதற்காக அல்லது நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக ரமழானில் நோன்பு பிடிப்பவர் பற்றிய சட்டம் என்ன?

பதில்:
தனது நோக்கத்தை இந்த வட்டத்திற்குள் அவர் சுருக்கிக் கொண்டால் அவருக்கு மறுமையில் எந்தக் கூலியும் இல்லை.
‘(விரைவாக அழியும்) இவ்வுலகை யார் விரும்புகின்றார்களோ, நாம் நாடுவோருக்கு நாடுவதை அதில் அவசரமாக வழங்குவோம். பின்னர் அவனுக்கு நரகத்தை ஏற்படுத் துவோம். இழிவுபடுத்தப் பட்டவனாகவும், அருளை விட்டும் விரட்டப்பட்ட வனாகவும் அதில் அவன் நுழைவான்.’
‘யார் மறுமையை விரும்பி, நம்பிக்கை கொண்ட நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனரோ அவர்களின் முயற்சி நன்றி பாராட்டப்படத்தக்கதாகும்.’
(17:18-19)

‘யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பாத்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்ற ஹதீஸுக்கு ஏற்ப ஒரு முஃமினுடைய எண்ணம் அமைய வேண்டும்.

மக்களுக்கு மார்க்கத்தைச் சொல்லுவோர் ‘இஹ்திஸாப்’ அல்லாஹ் வுக்காக அவனிடம் கூலியை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தின்பால் உள்ளம் ஈர்க்கப்படுவதற்காக நோன்பு நோற்பதில் உள்ள நன்மைகளைச் சொல்ல வேண்டும்.
(முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)


கேள்வி:
சூரியன் மறைவதற்கு சில வினாடிகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு மாதத்தீட்டு வந்துவிட்டது. அவளது நோன்பின் நிலை என்ன?

பதில்:
இரத்தம் வெளியே வந்துவிட்டால் அவளது நோன்பும் முறிந்துவிடும். அவள் அதுவரை நோன்பு நோற்றதற்காகக் கூலி வழங்கப்படுவாள். அதற்குப் பகரமாக அவர் ஒரு நோன்பைக் கழாச் செய்ய வேண்டும். மாதத்தீட்டு ஏற்படுவதற்கான அடையாளங்களை அவள் உடலில் உணர்ந்து சூரியன் மறைவதற்குள் இரத்தம் வெளியே வராவிட்டால் அல்லது சூரியன் மறைந்த பின்னர் இரத்தம் வெளியே வந்தால் அவளது நோன்பு சரியான நோன்பாகும்.
(அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)


கேள்வி:
ஒரு பெண் பஜ்ருக்கு முன்னர் மாதத்தீட்டிலிருந்து சுத்தமாகின்றாள். பஜ்ருக்குப் பின்னர்தான் குளிக்கின்றாள். இவ்வாறே ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் பஜ்ரை அடைகின்றார். பஜ்ருக்குப் பின்னர்தான் குளிக்கின்றார். இவர்களின் நோன்பின் நிலை என்ன?

பதில்:
குறித் பெண்ணின் நோன்பு சரியானதே! இவ்வாறே ஜுனுபுடைய நிலையில் நோன்பு நோற்பவரின் நோன்பு அங்கீகரிக்கப்படும். ‘நபி(ச) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் பஜ்ரை அடைவார்கள்; குளிப்பார்கள்; நோன்பு பிடிப்பார்கள்;’ (புஹாரி 1926) என்ற ஹதீஸும் இதையே கூறுகின்றது. பிரசவத்தீட்டுடைய பெண்ணும் இது விடயத்தில் மாதத்தீட்டுடைய பெண்ணின் நிலையிலேயே இருக்கின்றாள். அவள் பஜ்ருக்கு முன்னர் நிபாஸிலிருந்து விடுபட்டுவிட்டால் நோன்பை நோற்றுவிட்டு பின்னர் குளிக்கலாம். எனினும் பஜ்ருடைய தொழுகைக்காக விரைவாகக் குளித்துவிட வேண்டும்.
(அல் முனாஜ்ஜித்)


ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்

இஸ்லாம் கூறும் அடிப்படை வணக்கங்களில் நோன்பு
பிரதானமான தொன்றாகும். மனித ஆன்ம பரிசுத்தத்திற்கு வழி வகுக்கும் இவ்வணக்கத்தை மேற்கொள்ளும் ஒருவரின் உள்ளத்தில் எழக்கூடிய ஐயங்கள் எவை என யூகித்து அவற்றைத் தெளிவுபடுத்துமுகமாக இவ்வாக்கம் எழுதப்படுகின்றது.

சந்தேகம்:-
அனைத்து இபாதத்துக்களும் “நிய்யத்” அவசியமானது. நோன்பிற்கும் “நிய்யத்” அவசியமானதே. நோன்பின் நிய்யத் எனக் கூறப்படும் வாசகங்கள் ஆதாரபூர்வமானவைதாமா?

தெளிவு:-
“நிய்யத்” என்றால் “எண்ணங்கொள்ளல்” என்பதே அர்த்தமாகும். “நிய்யத்தை” வாயால் மொழிதல் கூடாது. எந்த இறை வணக்கத்தைச் செய்தாலும், அல்லாஹ்வுக்காக செய்கின்றேன் என்ற இஹ்லாஸான எண்ணத்துடன் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

நோன்பின் நிய்யத் என நபி(ஸல்) அவர்கள், குறிப்பிட்ட ஏதேனும் வாசகங்களைக் கற்றுத் தந்துள்ளார்களா? என வினவினால் அனைத்து ஹதீஸ்களும் “இல்லை” எனத் தலையசைக்கின்றன. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ழி ரமழான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹித் தஆலா” என்ற நோன்பு நிய்யத் (?) வாசகங்கள் ஒரு ஹதீஸ் கிரந்தத்தில் கூட இடம்பெறவில்லை. (வேண்டுமானால் உலமாக்களிடம், இந்த வாசகங்கள் எந்த ஹதீஸ் கிரந்தத்தி;ல் இடம்பெற்றுள்ளது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் நழுவுவதை நீங்களே காண்பீர்கள்) ஹதீஸ்களில் இல்லாத இந்த துஆவை மக்கள் கூறும் விதத்திலும், இந்த துஆவின் வாசகங்களிலும் அநேக தவறுகள் உள்ளன.

தராவீஹ் தொழுது முடிந்தவுடன் இமாம் இந்த துஆவை (?) மஃமூனுக்குச் சொல்லிக் கொடுப்பார். இமாம் இதை அரபியிலும் கூறி பொருளையும் தமிழில் கூற மஃமூம்களும் வழிமொழிவர். நிய்யத் இரு மொழிகளில் கூற வேண்டுமா? மக்களுக்கு அரபியில் சொல்ல (?) முடியுமென்றால் தமிழ் தேவையில்லை. அல்லாஹ்வுக்குத் தமிழ் தெரியாது; மக்களுக்கு அரபு புரியாது என்ற தவறான எண்ணம் அடி மனதில் இருப்பதனால் தானோ என்னவோ இவர்கள் இரு மொழிகளிலும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

சில இடங்களில் அரபியிலும், தமிழிலும் மும்மூன்று விடுத்தங்கள் சொல்லிக் கொடுப்பர். தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம் என்று சமாளிக்க முடியாத அளவுக்கு சின்னஞ் சிறுசுகளின் உள்ளங்களில் கூட இந்த துஆ ஆழப் பதிந்துள்ளது. தொழுகைக்கும் அரபு, தமிழ் என்று ஆறுவிடுத்தம் இவர்கள் “நிய்யத்”துச் சொல்லுவார்களோ?

ஆதாரமில்லாத நிய்யத்தை அர்த்தமற்ற விதத்தில் சொல்லிக் கொடுக்கின்றனர். சொல்லப்படும் வாசகங்களாவது தவறில்லாமல் இருக்கக்கூடாதா? “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக!” எனச் சொல்லப்படுகின்றது.

றமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஒருவன் சென்ற வருடத்து நோன்பையோ, வருகின்ற வருட நோன்பையோ நோற்கப் போவதில்லை. எனவே, “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின்” என்ற வார்த்தை அர்த்தமற்றதாகின்றது. “பர்ழான நோன்பை” என்ற அடுத்த வாசம்கூட றமழான் மாதத்தில் சுன்னத்தான நோன்பு இல்லை என்பதால் தேவையற்ற ஒன்றாகின்றது.

அடுத்து “நாளை பிடிக்க” நிய்யத்துச் செய்கிறேன் என்று சொல்லப்படுகின்றது. நாளை எதையேனும் செய்வேன் எனக் கூறுவதாயின் “இன்ஷா அல்லாஹ்” என்ற வாசகத்தை இணைத்தே கூற வேண்டும் என்ற சின்ன விடயம் கூட “துஆ”க் கண்டு பிடிப்பாளருக்கோ, அதை அணுவும் பிசகாது நடைமுறைப் படுத்தும் ஆலிம்களுக்கோ தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

மேலும் ஒரு விபரீதம் நிகழ்வதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா முஸ்லிம்களும் ஸஹரில் சாப்பிட்டு விட்டு “நாளை நோன்பு பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன்” (அதாவது இன்று நான் நோன்பு பிடிக்கவில்லை) என்று கூறிவிடுகின்றனர். இது எவ்வளவு விபரீதமான வார்த்தை? இதை உலமாக்களும் கண்டு கொள்வதில்லை; மக்களும் சிந்திப்பதில்லை. மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்களோ அதை அப்படியே செய்வதை உலமாக்களும், உலமாக்கள் எதைச் செய்தாலும் அது பற்றி சிந்தனை செய்யாது பின்பற்றுவதைப் பொது மக்களும் வழமையாகக் கொண்டுள்ளனர். சாதாரண தமிழ் அறிவுள்ளவன் கூட இந்த “துஆ” தவறானது என்பதை அறியமுடியுமல்லவா?

இறுதியாக “அல்லாஹ்வுக்காக” என்று சொல்லப்படுகின்றது. நோன்பின் நிய்யத் என்று சொல்லப்படும் வார்த்தைகளிலே இது ஒன்று மாத்திரம் தான் அர்த்தமுள்ளதாக உள்ளது. எனவே, “நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன்” என்ற எண்ணத்துடன் மாத்திரம் நோற்போமாக!

சந்தேகம் :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாமா?

தெளிவு :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாம். தொழுகைக்காக மாத்திரம் அவர் குளித்துக் கொண்டால் போதுமானது. இது பற்றி அன்னை ஆயிஷா(ث), உம்மு ஸல்மா(ث) ஆகியோர் கூறும் போது, “நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பும் நோற்பார்கள்” என அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: தாரமீ-1725, புஹாரி-1925, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா- 1704, முஅத்தா-644,645)

சந்தேகம்: நோன்பாளி ஒருவர் பகலில் உறங்கிக் கொண்டிருக்கும் போது “இஹ்திலாம்” ஏற்பட்டு (கனவில் விந்து வெளிப்பட்டு) விட்டால் அவரின் நோன்பு முறிந்து விடுமா?

தெளிவு :-
உறக்க நிலையில் ஒருவர் முழுக்காளியாவதால் நோன்பு முறிந்து விடாது. அவர் தொடர்ந்து அந்நோன்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், “கனவின் மூலம் முழுக்காளியானவர் நோன்பை விட்டுவிட வேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்:பாகம்-1:பக்:554)

சந்தேகம் :- �“ஸஹர்” உடைய முடிவு நேரம் எது?

தெளிவு :-
ஸஹர் செய்யுமாறும், அதில் அதிகம் பரக்கத் உள்ளதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள பல ஹதீஸ்கள் உள்ளன. (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஹதீஸ் எண் -1692). இந்த ஸஹர் உணவை முடிந்தவரை தாமதப்படுத்துவதையே இஸ்லாம் விரும்புகின்றது. சுப்ஹுடைய நேரம் வந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தால் கூட உண்பதை நிறுத்த வேண்டியதில்லை. சுப்ஹுடைய நேரம் வந்துவிட்டது என்று உறுதியானால் தான் உண்பதை நிறுத்த வேண்டும். இதையே “குமரி இருட்டு நீங்கி விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரை புசியுங்கள், பருகுங்கள்…” (2:187) என்ற வசனம் உணர்த்துகின்றது.

றமழான் காலத்தில் மக்களை எழுப்புவதற்காகவும், சுப்ஹுடைய தொழுகைக்காகவும் இரு அதான் கூறும் வழிமுறை நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அந்த இரு அதான்களுக்குமிடையில் சுமார் 50 ஆயத்துக்கள் ஓதும் இடைவெளி இருந்ததாக ஸஹாபாக்கள் கூறுகின்றனர். (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா 1694)

சுப்ஹுடைய தொழுகைக்காக கூறப்படும் இரண்டாவது அதான் வரையிலும் உண்ணல், குடித்தல், எதுவும் தடுக்கப்படடதல்ல; சுப்ஹுடைய அதான் கூறுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னரே ஸஹருடைய நேரம் முடிந்து விட்டது என்ற கருத்து தவறானதாகும். ஏனெனில் “பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள், உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” என நபி() அவர்கள் ஏவியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆராதம்: இப்னு குஸைமா 1932)

சந்தேகம் :�
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ண ஆரம்பிக்கும் போதே சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் அவர் தொடர்ந்து உண்ணலாமா? அல்லது உண்ணாமலே பட்டினி நோன்பு இருக்க வேண்டுமா?

தெளிவு :-
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ணும் போது சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் உண்பதை உடனே நிறுத்தி விட வேண்டியதில்லை. இதை அறியாத மக்கள் பலர் சுப்ஹுடைய அதானுக்குப் 15 நிமிடங்கள் இருக்கின்ற போது எழுந்தால் கூட பட்டினி நோன்பிலிருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வதுடன், தனது நோன்புக்கும், யூத நஸாராக்களின் நோன்புக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் “ஸஹர்” எனும் சுன்னத்தையும் விட்டு விடும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதோ! இந் நபிமொழியைக் கவனியுங்கள்.

“தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)

சந்தேகம் :�
நோன்பாளியொருவர் மறந்த நிலையில் எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

தெளிவு :-
பதினொரு மாதங்கள் உண்டு பழக்கப்பட்டிருப்பதனால் சில வேளைகளில் நோன்பாளிகள் எதேச்சையாக எதையேனும் வாயில் போட்டு விடுவதுண்டு. இவ்வாறு மறதியாக உண்பதால் நோன்பு முறியவும் மாட்டாது; அதன் பலன் குறைந்து விடவும் மாட்டாது. அவர் தொடர்ந்து நோன்பிலேயே இருக்க வேண்டும்.

“யாரேனும் ஒரு நோன்பாளி மறதியாக எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் அவர் தனது நோன்பை (நிறுத்திவிடாமல்) பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்ள். (அறிவிப்பவர்: அபூ ஹுறைரா(ரழி) – ஆதாரம்: புஹாரி, தாரமீ, முஸ்லிம்)

சந்தேகம் :�
நோன்பாளி பகல் வேளைகளில் பல் துலக்குவதால் நோன்பின் பலன் குறைந்து விடுமா?

தெளிவு :-
நோன்பாளி பகல் வேளைக்குப் பின் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து ஷாபி மத்ஹபு உடையோருக்கிடையே நிலவி வருகின்றது. நோன்பாளியின் வாயின் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிடச் சிறந்ததாகும் என்ற கருத்துடைய ஹதீஸ்களையே அவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.

இந்த ஹதீஸ் வாயில் வாடை வீச வேண்டும் என்ற கருத்தைத் தரவில்லை. இது இயற்கையாகப் பசியின் போது எழுகின்ற மணத்தையே குறிக்கும் என்று மாற்றுக் கருத்துடைய சிலர் விளக்கமளிப்பர்.

தர்க்க ரீதியாக நோக்கும் போது நாற்றம் வீசும் வாயே கஸ்தூரி போல் மணக்கும் எனின் நாற்றமற்ற நல் மணம் கொண்ட வாய் அல்லாஹ்விடத்தில் அதிக நறுமணமுள்ளதாக இருக்கும். எனவே, நோன்பு காலத்தில் மற்றக் காலத்தை விட அதிகமாகப் பல் துலக்க வேண்டும் என்றும் கூட இதே ஹதீஸை வைத்து முடிவு செய்ய வேண்டும். தர்க்க ரீதியாக இத் தீர்மானத்திற்குப் பின்வரும் ஹதீஸ் பலமுள்ள சான்றாகத் திகழ்கின்றது.

“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கின்ற போது என்னால் கணிப்பிட முடியாது என்கின்ற அளவுக்கு அதிகமாக பல்துலக்க நான் கண்டேன்” என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) கூறினார்கள். (புஹாரி:1933, அபூ தாவூத், திர்மிதி:721)

இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் “இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள், முற்பகலிலோ, பிற்பகலிலோ பல் துலக்குவதில் தவறிருப்பதாகக் கருதவில்லை” எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

எனவே, நோன்பாளி அதிகளவில் பல் துலக்க வேண்டும். அதுவே, தூய்;மைக்கும், சுகாதாரத்திற்கும், தொழும் போது அணியில் இருப்போர்க்கும், மலக்குகளுக்கும் தொல்லை கொடுக்காத வழிமுறையாகும்.

சந்தேகம் :�-
நோன்பாளி பகல் வேளையில் நீராடலாமா? உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக தண்ணீரை தன் மேனியில் ஊற்றிக்கொள்ளலாமா?

தெளிவு :-
மக்களில் சிலர் நோன்பென்றால் தன்னைத் தானே வருத்திக் கொள்வதென்று கருதுவதால் கஷ்டத்தை நீக்கும் எதையும் செய்யலாகாது என நினைக்கின்றனர். இதனால் தான் நோன்பாளி பகலில் நீராடக் கூடாது என்றும், வெயிலைத் தணிக்க தண்ணீரை ஊற்றிக் கொள்வது நோன்பின் “பாயிதாவை” குறைத்து விடும் என்றும் நம்புகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தாகத்தை அல்லது சூட்டைத் தனிப்பதற்காக தங்கள் தலையில் நீரை ஊற்றிக் கொள்வதை நான் பார்த்தேன்” என அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஅத்தா, அபூ தாவூத்)

குளிக்கும் போது உடல் உரோமத்தால் நீர் உட்செல்வதால் நோன்பு முறியாது. அவ்வாறே மணச் சவக்காரம் உபயோகித்தல், வாசனை பூசல், நுகர்தல், கண்ணுக்கு சுருமா இடல் என்பவற்றாலும் நோன்புக்கு எத்ததைய பாதிப்பும் இல்லை என்பதைக் கவனத்தில கொள்க.

சந்தேகம் :�-
நோன்பாளி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன் மனைவியை முத்தமிட்டுவிட்டார். இப்போது இவரது நோன்பின் நிலை என்ன? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

தெளிவு :-
நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)

சில அறிவிப்புக்களில். “நானும் நோன்பாளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பாளியான அவர் என்னை முத்தமிட்டார்” என்று காண்ப்படுகிறது. (அபூ தாவூத், கிதாபுல் ஸவ்ம் 24ம் பாடம்)

இது நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரிய சட்டமல்ல. என்பதற்கும் அநேக சான்றுகள் உள்ளன. அதில் ஒன்றை மாத்திரம் வேறு சில தேவை கருதி இங்கே குறிப்பிடுகின்றோம்.

“ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தமது மனைவியை முத்தமிட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெரியதொரு தவறைச் செய்து விட்டேன். நோன்புடன் (என் மனைவியை) முத்தமிட்டுவிட்டேன் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ நோன்பு நோற்றிருக்கும் போது வாய் கொப்பளிப்பது பற்றி என்ன எண்ணுகிறாய்? என வினவினார்கள். உமர்(ரழி) அவர்கள், அதில் தவறில்லையே எனப் பதிலளித்தார்கள். உடலுறவு, நீர் அருந்துதல் போன்றது என்றால் முத்தமிடுவது வாய்கொப்பளிப்பது போன்றது தான் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் சூசகமாக உணர்த்தினார்கள்” (ஆதாரம்: தாரமீ-1724, அபூதாவூத்- 2385, இப்னு குஸைமா-1999)

எனவே, நோன்பாளியான கணவன்-மனைவி முத்தமிட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதை உணரலாம். உணர்ச்சி வசப்பட்டு உடலுறவில் ஈடுபட்டுவிடுவோமோ என்ற அச்சம் இருப்பின் அதிலிருந்து விலகிக் கொள்ளல் கடமையாகும். நபியவர்களின் உவமானத்தைக் கூர்ந்து நோக்கும் போத இன்னுமொரு உண்மையையும் அறியலாம். “நோன்பாளி ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது தொண்டை வரை நீர் சென்று விடும் அளவுக்கு எல்லை மீறிச் செல்லலாகாது” என்பது நபிமொழி. இதனோடு ஒப்பிட்டு உவமையை நோக்கும் போது முத்தமிடுவதில் எல்லை மீறிச் சென்றிடலாகாது என்பதையும் யூகிக்கலாம்.
Previous Post Next Post