தேவைக்கு அதிகமான எதுவும் ஆபத்தானதே

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்..

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ضَمْرَةُ، عَنِ ابْنِ شَوْذَبٍ قَال، قَالَ الْحَسَنُ: مَنْ بَنَى فَوْقَ مَا يَكْفِيهِ طُوِّقَهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ "

இமாம் ஹஸன் கூறுகிறார்கள்: யார் தமக்கு போதுமான அளவிற்கு மேல் கட்டிடம் கட்டுவாரோ மறுமையில் ஏழு பூமியிலிருந்து அதை அவருடைய கழுத்தில் அரிகண்டமாக மாட்டப்படும்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று, எண் : 1553

கருத்து: 

உலகத்தில் எதையும் நமது தேவைக்கு ஏற்பதான் நாம் செய்துகொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக நாம் தேடுகிற எதுவும் நமக்கு வேதனையாகத்தான் மாறும். உலக செல்வத்தில் நமது அவசிய தேவைக்கு அதிகமாக உள்ள எல்லாம் நாம் மறுமைக்கு முற்படுத்த வேண்டிய சொத்தாகும். அதை உலக வாழ்க்கையில் வீண்விரயம் செய்து அழித்து நாசமாக்கி விடக்கூடாது.

விளக்கம்: 

அல்லாஹ்வே! நாங்கள் உன் பக்கமே மீளுகிறோம்! இந்த உலகத்தில் நீ எங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு மறுமையைத் தேடிக்கொள்கிற நற்பாக்கியத்தை எங்களுக்குத் தா! உலக மோகத்தில் மூழ்கிவிடாமல், அற்ப ஆசாபாசங்களில் சிக்கிவிடாமல், அழியும் உலகத்தில் மயங்கிவிடாமல், நீ கொடுத்த செல்வத்தை ஆடம்பரங்களிலும் வீண் செலவுகளிலும் செலவு செய்து மறுமையின் தண்டனைக்கு ஆளாகிவிடாமல் எங்களைப் பாதுகாத்துக்கொள்!

சரி, இப்போது இமாம் கூறிய கூற்றின் விளக்கத்திற்குள் செல்வோம்!

மனிதன் மிகப் பெரிய பேராசைக்காரன்! 
சுகபோகத்தை தேடுவதில் அலாதியான பிரியமுடையவன்! 
அதிகமாக சொத்துகளை சேமிப்பதிலும் விதவிதமான பொருட்களிலும் ஆடம்பர வஸ்த்துக்களிலும் மனதை பரிகொடுக்கும் பலவீனமானவன்!

இன்னொரு பக்கம் மனிதனிடம் செல்வம் குவியும்போது அவன் அதை வெளிப்படுத்த வேண்டுமென்று ஆசைப்படுவான். அந்த செல்வத்தை கொண்டு தனக்கு கண்ணியமும் பதவியும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவான். தன்னைப் போல் யாரும் இல்லை, தன்னிடம் இருப்பது போல் யாரிடமும் இல்லை என்று கான்பிக்க விரும்புவான். 

ஆகவே, அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வான், தன்னை மட்டுமல்ல, தன்னை சுற்றி உள்ளதையும், தனக்குள்ளதையும் விலை உயர்ந்ததாக, மதிப்பு மிக்கதாக, ஆடம்பரமாக, பிறர் பார்த்தால் அவர்களுக்கு பிரமிப்பு ஊட்டக்கூடியதாக மாற்றிக் கொள்ள பெரு முயற்சி செய்வான்.

உலகமே தனக்கு வேண்டும், உலகத்தில் எல்லாம் தனக்கு வேண்டும், நானே அரசன், நானே பெரியவன், நானே பெரிய செல்வந்தன், என்னிடம் இருப்பதுதான் பிறரிடம் இருப்பதை விட அதிகமாகவும் உயர்வானதாகவும் இருக்கிறது என்று தற்புகழ்சி செய்வதில் மிகவும் வல்லவன் மனிதன். அல்லாஹ் பாதுகாப்பானாக!

நாம் இந்த உலகத்தில் எவ்வளவு காலம் வாழ்ந்துவிட போகிறோம்! 
இந்த உலகம் நமக்கு எத்தனை காலம்? 
நாமும் இந்த உலகத்தில் நிரந்தரமானவர்கள் இல்லை. 
இந்த உலகமும் நமக்கு நிரந்தரமானது இல்லை. 
நாமும் மாறக்கூடியவர்கள். நமது உலகமும் மாறக்கூடியதுதான். 
நாம் இல்லாமல் இருந்தோம். பிறகு பிறந்தோம். பிறகு, குழந்தையாகவும் சிறுவனாகவும் விளையாடினோம். பிறகு படித்து வாலிபனாக வளர்ந்து திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று, பிறகு வயோதிகமடைந்து மரணத்தை நோக்கி நிற்காமல் பயணித்துக் கொண்டே இருப்போம். ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிக்கொண்டே இருப்போம். 
ஓடி ஆடி, இறுதியாக மண்ணறையில் அடங்கி போய்விடுவோம். புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் இரையாகி, இருட்டு அறையில் நிரந்தர நித்திரரையில் தங்கிவிடப்போகிறோம். 

இந்த உலகமோ ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் என்று இடம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த உலகம் தொடர்ந்து அதன் உரிமையாளரை மாற்றிக் கொண்டே இருக்கும். 
ஓர் அரசனின் உரிமையாக இருந்த நாடும் காடும் அவனுக்கே நிரந்தரமாக இருந்து விடாது. அவன் இறந்த பின்னர் அவனது மகனுக்கு அதன் உரிமை மாறிவிடும். 

சக்கரவர்த்தியாக இருந்த தனது தகப்பனையே கொன்றுவிட்டு அல்லது சிறை பிடித்துவிட்டு அரியணை ஏறிய இளவரசர்களும் இருக்கிறார்கள். ஒரு மன்னனை வீழ்த்திவிட்டு அவனை அடிமையாக்கி அவனது பெண்ணுக்கும் பொன்னுக்கும் மண்ணுக்கும் உரிமையாளர்களாக ஆகிய அரசர்களின் கதைகள் உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை நிறைய உள்ளன.

ஆம், அப்படித்தான் இந்த உலகம்.
 
இதில் மதி மயங்கியவன் இதன் சதி வலையில் சிக்கி மாண்டு விடுவான்.

இந்த உலகத்தில் அதிகம் ஆசைப்பட்டவன் அல்லல்பட்டே சாவான்.

இந்த உலகம் எனக்கு கணக்கில்லாமல் வேண்டும் என்று அயராது உழைத்தவன் திடீர் மரணத்தால் செத்துப் போவான்.

நிற்காமல் உழைப்பேன், அயராமல் பாடுபடுவேன், உண்ணாமல், உறங்காமல், சலைக்காமல் சம்பாதிப்பேன் என்றெல்லாம் செல்வத்திற்கு பின்னால் ஓடியவர்கள் அந்த செல்வத்தினாலேயே உயிரை பறிகொடுத்திருக்கிறார்கள்.

இந்த உலகம் பட்டு கம்பலம் விரிக்கப்பட்ட சதுப்பு நிலமாகும். அதில் காலை வைத்தால்தான் தெரியும் அது மனிதனை காவு வாங்கும் மர்ம பூமி என்று.

இந்த உலகம் விலங்குகளுக்கும் பறைவைகளுக்கும் அவற்றின் தீனியோடு விரிக்கப்படுகிற வலைகள் போன்றது. அதற்குள் காலை வைக்கும்போதுதான் அந்த விலங்கிற்கு தெரியும், தான் மாட்டிக்கொண்டது. அப்படித்தான் இந்த உலகம் இதில் அதிகத்தை தேடி அலைந்தவன் அந்த அதிகம் கிடக்கப்பெற்ற பின்னர் எப்படி சிரமப்படுகிறான் என்று.

வஞ்சகம் செய்து, சூழ்ச்சிகள் பல செய்து, ஏமாற்று வேலைகள் பல பார்த்து, பொய்கள் பல கூறி, பித்தலாட்டங்கள் பல செய்து, பலபேரின் வயிற்றில் அடித்து, பலருடையதை அபகரித்து, உரிமைகளை கொடுக்காமல், கடன்களை அடைக்காமல் சொத்துகளை சேர்த்தோர் எல்லாம் அந்த சொத்துகளுக்கு நிரந்தர சொந்தக்காரர்களாக ஆகிவிட்டார்களா? எங்கள் சொத்து என்று பெயர் மாற்றி பத்திரம் போட்டுக் கொண்டார்கள். ஆனால், எத்தனை நாளைக்கு அல்லது எத்தனை ஆண்டுகளுக்கு அந்த பத்திரங்கள். ஒரு நாள் நீ அவற்றை இழப்பாய்! அல்லது கண்டிப்பாக உன்னை விட்டு அவை பறிபோகும், எப்படி பிறரிடமிருந்து உன்னிடம் வந்ததோ அதுபோலவே உன்னிடம் இருக்க வேண்டிய காலம் முடிந்த உடன் எழுதப்பட்ட விதியின் படி அது யாருக்கு செல்ல வேண்டுமோ அவர்களுக்கு கண்டிப்பாக சென்று விடும். 

இரவில் மது வின் போதை ஏறியவன் பகலில் அதிலிருந்து தெளிவுபெறுவது போலவே இந்த உலக மோகம் என்ற போதையிலிருந்து அவனுக்கு ஒரு நாள் தெளிவு கிடைக்கும். அப்போது அவன் கைசேதப்படுவான், தனது முட்டாள் தனத்தை நினைத்து வருந்துவான், இறைவனிடம் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கேட்டு அழுது பிரலாபிப்பான்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ 

இன்னும், உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். ஆக, (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா! நீ என்னை (-என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா! (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா!). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.” (அல்குர்ஆன் 63 : 10)

قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُواْ يُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُواْ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خِلَٰلٌ

(நபியே! என் மீது) நம்பிக்கைகொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்யட்டும் ஒரு நாள் வருவதற்கு முன்னதாக. அந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் இருக்காது.” (அல்குர்ஆன் 14 : 31)

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَٰعَةٌ ۗ وَٱلْكَٰفِرُونَ هُمُ ٱلظَّٰلِمُونَ

நம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இருக்காது. (மறுமை நாளை) நிராகரிப்பவர்கள்தான் (பெரும்) அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 2 : 254)

وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلْمُجْرِمُونَ نَاكِسُواْ رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَآ أَبْصَرْنَا وَسَمِعْنَا فَٱرْجِعْنَا نَعْمَلْ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ

குற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; இன்னும், (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவியுற்றோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று கூறுகிற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த ஒரு காட்சியாக இருக்கும்). (அல்குர்ஆன் 32 : 12)

மேற்கூறப்பட்ட ஒவ்வொரு வசனமும் நமக்கு உணர்த்துகிற பாடம் என்ன?

அல்லாஹ் நமக்கு கொடுத்த செல்வம் மறுமையின் சொர்க்க வீட்டை தேடுவதற்காக ஆகும்.

அல்லாஹ்வின் அன்பையும் பொருத்தத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்வதற்காக அல்லாஹ் நமக்கு இந்த உலக வாழ்க்கையில் செல்வத்தை கொடுத்திருக்கிறான். அது எப்படி நமக்கு சாத்தியமாகும் என்றால் நமது அவசிய தேவைக்கு போக மீதமுள்ளதை குறிப்பிட்ட அளவு நமது வாரிசுகளுக்கு ஒதுக்கிய பின்னர் நமது மறுமைக்காக அந்த செல்வத்தை தர்ம காரியங்களில் செலவு செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் இல்லங்களையும் மார்க்க கல்வி சாலைகளை இலவச மருத்துவமனைகளை ஏழைகள் எளியவர்களுக்கு தங்கும் விடுதிகளை கட்டி எழுப்புவதிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்புவதற்காக, மார்க்க கல்வியை வளர்ப்பதற்காக, ஏழை எளியோரின் வாழ்க்கை மேம்படுவதற்காக, உறவுகளின் ஹலாலான தேவைகளுக்காக இப்படி நல்ல வழிகளை தேடி அவற்றில் கருமித்தனம் இல்லாமல் விசாலமான உள்ளத்துடன் இரவு பகலாக தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ

இன்னும், அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். “(உங்கள் தேவைக்குப் போக) மீதமுள்ளதை (தர்மம் செய்யுங்கள்)’’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 219)

الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

எவர்கள் தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 274)

لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ 

நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னும் செல்வத்தை அதன் விருப்பம் (தமக்கு) இருப்பதுடன் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்தவர்கள்; தொழுகையை நிலைநிறுத்தியவர்கள்; ஸகாத்தைக் கொடுத்தவர்கள்; மேலும், உடன்படிக்கை செய்தால் தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்கள்; கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாக இருப்பவர்கள் ஆகிய இவர்களுடைய செயல்கள்தான் நன்மை ஆகும். அவர்கள் எத்தகையோர் என்றால் (தங்கள் நம்பிக்கையை) உண்மைப்படுத்தினார்கள். இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்! (அல்குர்ஆன் 2 : 177)

இதுபோன்ற வசனங்கள் உண்மையான நம்பிக்கையாளரை கண்டிப்பாக நல்ல வழியில் அதிகமதிகம் செலவு செய்வதற்கு தூண்டிக்கொண்டே இருக்கும். ஹராமான வழிகளில் செலவு செய்வதை விட்டும், தேவையற்ற அனாவசியமான காரியங்களில் செலவு செய்வதை விட்டும், ஆடம்பரமான தேவைகளில் செலவழிப்பதை விட்டும் அற்ப தேவைகளுக்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்வதை விட்டும் நிலையற்ற வாழ்க்கையின் சுகத்துக்காக மறுமையை மறந்து வீண் செலவுகள் செய்வதை விட்டும் தடுத்துக் கொண்டே இருக்கும்.

அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

إن المسلم يؤجر في كل شيء ينفقه إلا في شيء يجعله في هذا التراب

நிச்சயமாக முஸ்லிம் செலவு செய்கிற எல்லாவற்றுக்கும் அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும். ஆனால், அவர் இந்த மண்ணில் செலவு செய்த செல்வத்தை தவிர.

ஹதீஸ் மவ்க்கூஃப் – புகாரி, முஸ்லிம்


أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلم خرج ، فرأى قبَّةً مشرفةً ، فقال : ما هذه ؟ قال له أصحابهُ : هذه لفلانٍ – رجلٍ من الأنصارِ – قال فسكتَ ، وحملها في نفسِهِ ، حتَّى إذا جاء صاحبُها رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلم يسلِّمُ عليه في الناسِ ، أعرض عنه – صنع ذلك مرارًا - حتَّى عرف الرجلُ الغضبَ فيه ، والإعراضَ عنه ، فشكا ذلك إلى أصحابِهِ ، فقال واللهِ إني لأنكرُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلم ، قالوا خرج فرأى قبَّتَك ! قال : فرجعَ الرجلُ إلى قبَّتِه فهدمَها ، حتَّى سوَّاها بالأرضِ ، فخرج رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلم ذاتَ يومٍ فلم يرَها ، قال : ما فعلتِ القُبَّةُ ؟ قالوا : شكا إلينا صاحبُها إعراضَك عنه ، فأخبرناهُ ، فهدمَها ، فقال : أما إنَّ كلَّ بناءٍ وبالٌ على صاحبِه إلَّا ما لا ، إلا ما لا – يعني : ما لا بدَّ منه -
الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 5237 | خلاصة حكم المحدث : صحيح

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை மதீனாவின் தெருவுகளில்) வெளியே சென்றார்கள். அங்கு உயரமான ஒரு கோபுரத்தை பார்த்தார்கள். இது என்ன என்று கேட்டார்கள். நபியவர்களின் தோழர்கள், இது இன்ன அன்ஸாரி நபருக்கு சொந்தமானதாகும் என்று கூறினார்கள். நபியவர்கள் அமைதியாகி விட்டார்கள். அதை தமது மனதில் நிறுத்திக்கொண்டார்கள். அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு மத்தியில் இருக்கும்போது வந்து நபியவர்களுக்கு ஸலாம் கூறினார். நபியவர்கள் பதில் கூறாமல் அவரை புறக்கனித்தார்கள். நபியவர்கள் கோபத்தில் இருப்பதை அந்த மனிதர் அறிந்து கொண்டார். அவர் இதை தமது தோழர்களிடம் முறையிட்டார். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுப்பாக இருப்பதாக நான் கருதுகிறேன் என்று கூறினார். அதற்கு தோழர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ஒரு முறை வெளியே சென்றபோது உமது கோபுரத்தை பார்த்தார்கள். உடனே அந்த மனிதர் திரும்ப சென்று அந்த கோபுரத்தை இடித்து தரைமட்டமாக அதை ஆக்கிவிட்டார். ஆக, மற்றொரு நாள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே சென்றபோது அந்த கோபுரத்தை அவர்கள் பார்க்க முடியவில்லை. இங்கிருந்த கோபுரம் என்ன ஆனது என்று கேட்டார்கள். தோழர்கள் கூறினார்கள்: அதன் உரிமையாளர் நீங்கள் அவரை பார்க்காமல் புறக்கணித்ததைப் பற்றி எங்களிடம் முறையிட்டார். நாங்கள் அவருக்கு நடந்த செய்தியை கூறினோம். ஆகவே அவர் அதை இடித்துவிட்டார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: எல்லா கட்டிடமும் அதன் உரிமையாளருக்கு நாசமாகவே அமையும். மிக அவசியமானதை தவிர.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத், எண்: 5237.

இறைவசனங்கள், நபியவர்களின் நற்போதனைகள், சான்றோரின் அறிவுரைகள் மூலம் படிப்பினை பெறாமல், உலக வாழ்க்கையை சுகபோகத்தை தேடுவதில் நாசமாக்கிய, மறதியில் மயங்கி கிடந்த மனிதன் மறுமையில் என்ன நிலையில் இருப்பான் என்பதை அல்லாஹ் வர்ணிக்கிறான்:

وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُواْ عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ ۚ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُواْ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

இன்னும், (அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்) பார்த்தால், (அப்போது இறைவன், விசாரணை நாளாகிய) இது உண்மை இல்லையா? என்று கூறுவான். அவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக! ஏனில்லை (உண்மைதான்)’’ எனக் கூறுவர். “ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்’’ என்று (இறைவன்) கூறுவான். (அல்குர்ஆன் 6 : 30)

وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُواْ عَلَى ٱلنَّارِ فَقَالُواْ يَٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

நரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால், (அப்போது) அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட வேண்டுமே! இன்னும், எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்ப்பிக்க மாட்டோமே; இன்னும், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே!” (அல்குர்ஆன் 6 : 27)

وَلَوْ تَرَىٰٓ إِذْ فَزِعُواْ فَلَا فَوْتَ وَأُخِذُواْ مِن مَّكَانٍۢ قَرِيبٍۢ

“(நமது பிடி வரும்போது) அவர்கள் திடுக்கிடுவார்கள். ஆனால், (அவர்கள் அதிலிருந்து) தப்பிக்கவே முடியாது. இன்னும், வெகு சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப்பட்டுவிடுவார்கள். (பின்னர் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.)” (நபியே!) இதை நீர் பார்த்தால் மிக ஆச்சரியமான ஒரு காரியத்தை பார்ப்பீர். (அல்குர்ஆன் 34 : 51)

இத்தகைய ஒரு நிலை நமக்கு வந்து விடாமல் இருக்க நாம் இம்மையை விட மறுமையை தேர்ந்தெடுக்க வேண்டும். உலக ஆசைகளை விட மறுமை ஆசையை முற்படுத்த வேண்டும். சொர்க்க வீட்டை வாங்குவதற்கு நமது செல்வத்தை அதிகமதிகம் அல்லாஹ் உடைய பாதையில் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லா வகையான வீண் விரயங்களில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும். உலக தேவைக்காக உழைப்பது, சம்பாதிப்பது தவறல்ல, பாவமல்ல. ஆனால், பாவம் என்பது அல்லாஹ்வை மறப்பதும் மறுமையை மறப்பதும்தான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! 

அல்லாஹ்வே! எங்களையும் எங்களுக்கு நீ கொடுத்த செல்வத்தையும் குடும்பத்தையும் உனக்காக உனது மார்க்கத்திற்காக நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! ஷைத்தானின் மாய வலைகளில் சிக்கி உலக ஆசாபாசங்களில் மூழ்கி அழிவதை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக! நீ மகா கருணையாளர், மகா மன்னிப்பாளர். நீதான் எங்கள் எஜமானனும் பாதுகாவலனும் ஆவாய்.

أحدث أقدم