-சகோதரி நாஸியா ஜனார்
நமக்கு உண்மையிலேயே ஏதாவது தேவை இருந்தால், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும், நாம் து’ஆ செய்கிறோம், இரவின் ஆழத்தில், தஹஜ்ஜுத்தில் நின்று அல்லாஹ்விடம் கண்ணீர் விட்டு, நம்முடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறோம். ஆனால், சில சமயம் அது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நமக்கு அது மிகவும் விருப்பமாக இருக்கிறது! நாம் நம்பிக்கை இழந்து, மனம் உடைந்து, உலகமே முடிந்து விட்டது போல் அல்லது, குறைந்தபட்சம், நம்முடைய உலகம் முடிந்து விட்டது போல் உணருகிறோம். இது தான் ‘துன்யா – உலகம்’ – இடது புறத்திலிருந்தும், வலது புறத்திலிருந்தும், மத்தியிலிருந்தும் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டிய துன்யா என்பதை உணரத் தவறி விடுகிறோம். அல்லாஹ் (சுபஹ்) குர்’ஆனில் கூறுகிறான், “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? [அல் குர்’ஆன் 29:2] நம்முடைய து’ஆ ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது நம்முடைய சோதனையில் ஒரு பகுதி. அல்லாஹ் தாமதப்படுத்துவது, அவன் மறுப்பதல்ல, மேலும், இறுதியில் அல்லாஹ்வுக்குத் தான் நமக்கு எது சிறந்தது என்பது தெரியும். சோதனைக்காலத்தில் இஸ்லாம் என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, அல்லாஹ்வுடைய வாக்கில் அசையாத நம்பிக்கை கொண்டு, நாம் உறுதியாக இருந்து அழகிய பொறுமையை (ஸப்ரன் ஜமீலா) கடைபிடிக்க வேண்டும். அல்லாஹ் (சுபஹ்) நம்பிக்கையாளர்களுக்கு அழகிய வாக்குறுதிகளை குர்’ஆனில் அளித்துள்ளான். அப்படியிருக்கும்போது, நம்முடைய து’ஆக்களில் ஒன்று நிறைவேறவில்லை என்பதற்காக நாம் எப்படி வருத்தமாக இருக்க முடியும? அதற்கு மாறாக, நாம் நேர்மையான, தூய்மையான வாழ்வுக்கும், நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதற்கும், அல்லாஹ்(சுபஹ்) தன் அடியார்களுக்கு அளித்துள்ள வாக்குகளிலேயே மிகவும் அழகிய வாக்கான, ஜன்னத்துல் ஃபிர்தௌஸை அடைவதற்கும் கடுமையாக முயல வேண்டும். வாக்குறுதி என்றால் என்ன? அதன் வரையறையை நாம் புரிந்து கொள்வோம்: ஒரு வாக்குறுதி என்பது ஒரு அறிவிப்பு அல்லது ஒருவர் ஒன்றைச் செய்வார் அல்லது ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் என்பதற்கான உத்திரவாதம். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வாக்குறுதி:
1. மன்னிப்பு
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.. [அல் குர்’ஆன் 5:9] எப்போதும் நற்செயல்களை அல்லாஹ்வின் திருப்தியை நாடி மட்டுமே செய்யுங்கள், ஒரு போதும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பதில் குறை வைத்து விடாதீர்கள் -ஏனென்றால், மிகவும் கருணையுள்ளவனும், மிகவும் மன்னிப்பவனுமாகிய அல்லாஹ் (சுபஹ்) தன்னுடைய அடியார்களுக்கு மன்னிப்பை வாக்களித்துள்ளான். மேலும், அவன் மகத்தான நற்கூலியையும் வாக்களித்துள்ளான். அதனால், மிகப் பெரியவனான அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய நற்கூலி எத்தனை மகத்தானதாக இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!
2. வழிகாட்டுதல் – ஹிதாயா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். [அல் குர்’ஆன் 10:9] தினமும் நம்முடைய தொழுகைகளில் அல்லாஹ்விடம் நமக்கு வழிகாட்டும்படி கேட்கிறோம். தொழுகையை குறித்த நேரத்தில், விடாமல் தொழுது, நற்செயல்கள் செய்யுங்கள். அல்லாஹ் (சுபஹ்) உங்களுடைய இந்த து’ஆவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் உங்களை அதைவிட சிறந்த வேறு ஏதாவது செய்யும்படி வழிகாட்டுகிறான் அல்லது, உங்களுடைய ஈமானை உறுதிப்படுத்துவதற்கு பிற்காலத்தில் கொடுப்பதற்காக தாமதப்படுத்துகிறான்.
3. ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு
எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.. [அல் குர்’ஆன் 16:99] உங்களுடைய சோதனையில் நீங்கள் தோல்வியடைவதற்காக ஷைத்தான் காத்திருக்கிறான் – அதன் மூலம் அவன் உங்கள் மனதை ஆக்கிரமித்து, சோகம் மற்றும் குறைகளால் அதை நிரப்புவதற்காக. ஏன் எனக்கு மட்டும் இப்படி? அல்லாஹ் ஏன் என் து’ஆவை ஏற்றுக்கொள்ளவில்லை?, நாம் ஒரு பயனும் இல்லாதவன், எனக்கு தகுதியில்லை, நாம் மிகவும் கெட்டவன் போன்ற எண்ணங்களால் நிரப்புவான். உங்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் எப்போதாவது தோன்றியதுண்டா? அது தான் ஷைத்தான். அந்த எண்ணங்களையெல்லாம் ஒதுக்கி, ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள். உங்களுடைய நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது முழுமையாக வைத்து, உங்களுக்கு அல்லாஹ் அதை விட சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறான் என்பதை உறுதியாக அறியுங்கள்.
4. உங்களுடைய முயற்சிகளுக்கு நற்கூலி கிடைக்கும்
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். [அல் குர்’ஆன் 18:30] சில சமயங்களில், நன்மைகள் புரிவதற்கும் பாவங்களிலிருந்து விலகிடவும் நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள், தொழுகையில் உறுதியாக இருக்கிறீர்கள், இருப்பினும், உங்கள் வாழ்க்கை நீங்கள் திட்டமிட்டபடி இருப்பதில்லை. நான் என்ன தவறு செய்கிறேன் என நீங்கள் வியக்கக்கூடும். அல்லாஹ் (சுபஹ்), நம்முடைய எந்த முயற்சியும் வீணாகாது என வாக்களிக்கிறான். ஒவ்வொரு நற்செயலுக்கும் கூலி கிடைக்கும், நாம் பொறுமையாக மட்டும் இருக்க வேண்டும், நற்கூலி, இந்த உலகில் கிடைக்கும், அல்லது மறுமையில் கிடைக்கும். நாம் அழகிய பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். நற்கூலி, நாம் விரும்பிய விதத்தில் கிட்டும், இல்லையென்றால், நமக்கு எது சிறந்ததோ அந்த வடிவத்தில் கிடைக்கும், ஏனென்றால், அல்லாஹ், நம்மைப் பெற்ற தாய் நம்மீது வைத்திருக்கும் நேசத்தை விட அதிகமான நேசம் வைத்துள்ளான். அவன், மிக உயர்ந்தோன், மட்டுமே தன்னை நம்புபவர்களுக்கு எது சிறந்தது என அறிவான்.
5. சுவனம்
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். [அல் குர்’ஆன் 2:25] தன்னை விசுவாசிப்பவர்களுக்கு அல்லாஹ் வாக்களிக்கும் உச்சகட்ட வெகுமதி, ஜன்னா (சுவனம்). இவ்வுலக வாழ்வில் நாம் அனைவரும் பாடுபட வேண்டியது இந்த நிரந்தரமான தங்குமிடத்திற்காகத் தான். இவ்வுலகில் நம்முடைய எல்லா செயல்களும் நம்மை அல்லாஹ்வை நெருங்கச் செய்வதாகவும், சுவனத்தில் நம்மை கொண்டு சேர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய செயல்கள் நம்மை அல்லாஹ்வை நெருங்கச் செய்யாவிட்டால், நாம் நம்முடைய வாழ்வை மறுபரிசீலனை செய்து, பாவங்களிலிருந்து விலகி, நம் நோக்கங்களைத் தூய்மையாக்கிக் கொண்டு, அல்லாஹ்வின் மன்னிப்பையும், கருணையையும் தேட வேண்டும். அல்லாஹ்(சுபஹ்)வை நம்பி, அவனுடைய வாக்கில் முழு நம்பிக்கை வைத்தால், உங்களுடைய வாழ்க்கை எப்படி மேம்படுகிறது என்று பாருங்கள்.