பொறுமை காத்த மனிதருக்குக் கிடைத்த கூலி

பழங்காலத்தில் வாழ்ந்த அப்துல்லாஹ் பின் முஹம்மது என்ற ஒரு நல்ல மனிதரின் கதையை இமாம் அத்தஹபி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் ஒரு பயணத்தின் போது வழி தவறி ஒரு குன்றை அடைந்து விடுகிறார். அந்த குன்றில் மீது ஒரு கூடாரம் இருப்பதைப் பார்க்கிறார். அந்த கூடாரம் கிழிந்து, கூளமாக இருக்கிறது. அதற்குள் அதிகமாக காற்று வீசுகிறது. அதனால், நல்ல மனிதர் அப்துல்லாஹ், அந்த கூடாரத்துக்குள் எட்டிப் பார்க்கும்போது, ஒரு முதியவர் இருப்பதைப் பார்க்கிறார். அவருக்கு கைகள் இல்லை, பார்வையும் இல்லை. அதற்கு மேல், அவர் பக்க வாதத்தில் விழுந்திருக்கிறார். அவர்:

الحمد لله الذي فضلني على كثير من عباده تفضيلا

“அவனுடைய ஏராளமான அடியார்களில் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்ற துவாவை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்துல்லாஹ் “அஸ்ஸலாமு அலைக்கும்” என கூறுகிறார்.

முதியவர், “யாரது?” என கேட்டார்.

அப்துல்லாஹ், “நான் ஒரு வழிப்போக்கன், வழி தவறி விட்டது. ஆனால், உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.” என்றார்.

“உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுவேன், ஆனால் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.” என்றார்.

அப்துல்லாஹ் ஒப்புக் கொண்டு தன் கேள்வியைக் கேட்டார். “நடக்க முடியாமல், கைகளை இழந்து, பார்வையில்லாமலும் நீங்கள் இருக்கும் இந்த நிலையில், செல்வமும் இல்லாமல் இருக்கும்போது, அவனுடைய ஏராளமான அடியார்களில் உங்களைத் தேர்ந்தெடுத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்?”

முதியவர், “நான் ஆரோக்கியமான மன நிலையில் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.

அப்துல்லாஹ், “ஆம்” என்றார்.

முதியவர்,”அல்லாஹ்வின் அடியார்களில் எத்தனை பேர் ஆரோக்கியமற்ற மன நிலையில் இருக்கிறார்கள்?” என கேட்டார்.

அப்துல்லாஹ், “பலர்” என்றார்.

முதியவர்,”அல்ஹம்துலில்லாஹ், தன்னுடைய அடியார்களில் எத்தனையோ பேர் மனக்கோளாறுடன் இருக்கும் போது என்னைத் தேர்ந்தெடுத்திருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எனக்கு காது கேட்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என கேட்டார்.

அப்துல்லாஹ், “ஆம்” என்றார்.

முதியவர்,”அல்லாஹ்வின் அடியார்களில் எத்தனை பேர் காது கேட்காத நிலையில் இருக்கிறார்கள்?” என கேட்டார்.

அப்துல்லாஹ், “பலர்” என்றார்.

முதியவர்,”அல்ஹம்துலில்லாஹ், தன்னுடைய அடியார்களில் எத்தனையோ பேர் செவிடாக இருக்கும்போது என்னைத் தேர்ந்தெடுத்திருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.” என்றார்.

அம்மனிதர் தொடர்ந்து, அல்லாஹ்வின் அடியார்களில் எத்தனையோ பேர் ஊமையாக இருக்கும்போது, தன்னால் இன்னும் பேச முடிகிறது என்று குறிப்பிடுகிறார். இன்னும், எத்தனையோ மனிதர்கள் சிலைகளையும், மரங்களையும், மனிதர்களையும் வழிபட்டுக் கொண்டிருக்கும்போது தான் ஒரு முஸ்லிமாக இருக்கும் அருளைப் பற்றி குறிப்பிடுகிறார்.

இப்போது, அப்துல்லாஹ், “நீங்கள் உண்மையையே கூறினீர்கள். அதனால், இப்போது கூறுங்கள், உங்களுடைய வேண்டுகோள் என்ன?” என்று கேட்டார்.

முதியவர்,”என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் இறந்து விட்டார்கள். இப்போது இருப்பது ஒரு சிறுவன் மட்டுமே. அவன் தான் எனக்கு உணவு கொண்டு வந்து ஊட்டி விடுவதோடு என்னுடைய எல்லா காரியங்களிலும் உதவி செய்கிறான். நேற்று அவன் வெளியே சென்றான், இன்னும் திரும்ப வரவில்லை. அதனால், வெளியே சென்று எனக்காக அவனைத் தேடிக் கொண்டு வாருங்கள்.” என்றார்.

அதனால் அப்துல்லாஹ் பின் முஹம்மது அச்சிறுவனைத் தேடச் சென்றார். சிறிது நேரம் கழித்து, மலை உச்சிக்கு வந்த போது, சில கழுகுகள் வட்டமடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவருக்கு கழுகுகள் பிணத்தை தான் வட்டமடிக்கும் என்பது தெரியும்.

உடனே அவர் அந்த இடத்தை நோக்கி விரைந்து பார்த்த போது, ஒரு சிறுவனின் பிணம் இருப்பதைப் பார்த்தார். ஒரு ஓநாய் அவனைக் கொன்று, உடலின் பெரும்பாகத்தை தின்று விட்டது. அதைக் கண்ட அபுதுல்லாஹ், “உலகில் வேறு எதுவுமே இல்லாமல், அவருக்கென்று இருந்த ஒரே மனிதனையும் ஓநாய் தின்று விட்டது என்பதை நான் எப்படி அந்த பெரியவரிடம் சொல்வேன்?” என்று திகைத்தார்.

அவரிடம் திரும்ப செல்லாமலே போய் விடலாம் என நினைத்தார். ஆனால் அவரால் அப்படிச்செய்ய முடியவில்லை. அதனால், அவர் கூடாரத்தை நோக்கி நடக்கும் போது அவருக்கு அய்யூப் நபியின் நினைவு வருகிறது. அவர் கூடாரத்தில் நுழைந்து, அவருக்கு முகமன் கூறுகிறார்.

முதியவர், “அவனை எங்கே கண்டுபிடித்தீர்?” என ஆவலாகக் கேட்டார் (அவன் கிடைத்து விட்டான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.)

அப்துல்லாஹ், “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவர் நீங்களா, அய்யூப் (அலை)நபியா?” என்று கேட்டார்.

முதியவர், “சந்தேகமேயில்லாமல், அய்யூப் நபி (அலை) தான்.” என்று கூறினார்.

அப்துல்லாஹ், “அப்படியானால், யாருக்கு கடினமான சோதனை, உங்களுக்கா, அய்யூப் நபிக்கா?”

என்று கேட்டார். முதியவர், “சந்தேகமேயில்லாமல், அய்யூப் நபிக்குத் தான்.” என்று கூறினார்.

அப்துல்லாஹ், “அல்லாஹ்விடன் உங்களுக்கான நற்கூலியைக் கேளுங்கள். உங்கள் சிறுவனை ஓநாய் அடித்து தின்று விட்டிருப்பதை மலை உச்சியில் பார்த்தேன்.” என்றார்.

முதியவர், “லா ஹௌலா வ லா குவ்வத இல்லா பில்லாஹ். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’வூன் அஷ்ஷஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வுக்கு மிஞ்சிய சக்தியோ, ஆற்றலோ எதுவும் இல்லை. நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என நான் சாட்சி சொல்கிறேன்.)” என்று கூறினார்.

அவர் இந்த சொற்களை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே பெரிதாக மூச்சை இழுத்து விட்டு தொடர்ந்து இந்த திக்ரை சொல்லிக் கொண்டிருந்தார். அப்துல்லாஹ்வுக்கு அவர் இறந்து விடுவாரோ என தோன்றியது. அவர் முதியவரின் தலையைத் தாங்கிப்பிடித்து தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அம்மனிதர், ‘அஷ்ஷஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’வூன்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கும்போது, இறந்து விடுகிறார்.
அப்துல்லாஹ், அப்பள்ளத்தாக்கு வழியாக பயணிப்பவர்கள் வரும் வரை காத்திருந்தார். பிறகு அவர்களின் உதவியுடன், அவர் உடலைக் கழுவி, கஃபன் உடுத்தி, ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்தார்.

அதன் பின், தன் பயணத்தை தொடர்ந்தார். அவ்விரவு, அப்துல்லாஹ் தன் கனவில் அம்முதியவரைக் கண்டார். அவர் நல்ல தோற்றமுடையவராக, மிகச் சிறந்த ஆரோக்கிய நிலையில் இருப்பது போல் தோன்றியது. கனவில் அப்துல்லாஹ் அவருடன் பேசினார். “நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? எப்படி சுகமானீர்கள்? உங்களிடம் எப்படி இத்தனை மாற்றம்?” என்றெல்லாம் கேட்டார்.

அதற்கு அம்முதியவர், “என் இறைவன் என்னை சுவனத்தில் அனுமதித்தான். பிறகு, ‘நீ பொறுமை காத்ததற்காக உங்கள் மீது அமைதி உண்டாகட்டும். என்ன அழகிய முடிவு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.’ என்று என்னிடம் கூறப்பட்டது.

இது ஒரு முதியவரின் கதை. அவருடைய பெயர் கூட தெரியாது. அவர் பிரபலமானவரும் அல்ல. அவர் வாழ்ந்த வாழ்க்கையும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. இருப்பினும், நம் சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதருக்கு சுவனத்தில் அவர் நுழைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் “நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்;”[அல் குர்’ஆன் 14:7] என்ற குர்’ஆன் வசனமாகவே வாழ்ந்தார்.

-நூல்: சியார் ஆலம் அந்நுபுலா

ஆசிரியர்: இமாம் அத்தஹபி
أحدث أقدم