தொழுகையின் விடயத்தில் மக்களின் தராதரங்கள்

தொழுகை விடயத்தில் மக்கள் ஐந்து வகைப்படுவர்.

1. தனக்குத் தானே அநீதி இழைத்துக்கொண்ட, பொடுபோக்குத்தனமுடையவனின் படித்தரம். அவன் தான், தொழுகைக்கான வுழூ, அதன் நேரங்கள், வரையறைகள், கடமைகள் என்பவற்றில் குறைபாடு செய்பவன்.

2. தொழுகையின் நேரங்கள், வரையறைகள், வெளிரங்கமான கடமைகள், வுழூ என்பவற்றில் பேணிப்பாக இருப்பவர். என்றாலும், ஷைத்தான் தொழுகையில் கிளப்பும் எண்ணங்களைத் தடுப்பதற்காக தனது உள்ளத்துடன் போரடாமல், வீண் எண்ணங்களுடனும், வேறு சிந்தனைகளுடனும் தொழுபவர்.

3. தொழகையின் வரையறைகளையும், கடமைகளையும் பேணி, வீண் எண்ணங்களையும், சிந்தனைகளையும் தடுப்பதற்காக தனது உள்ளத்துடன் போராடுபவர். இவர் தனது எதிரி தன் தொழுகையைத் திருடிவிடக் கூடாது என்பதற்காக, அவனுடன் போராடுவதில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். எனவே, அவர் தொழுகையிலும் ஜிஹாதிலும் இருக்கின்றார்.

4. தொழுகைக்காக நின்றுவிட்டால், அதன் உரிமைகளையும், கடமைகளையும், வரையறைகளையும் பூரணமாக நிறைவேற்றுவார். அதன் கடமைகள், வரையறைகள் எந்தவொன்றும் பாழாகாமல் இருக்க தனது உள்ளத்தை முழுமையாக தொழகையிலேயே ஈடுபடுத்துவார். அவரது முழு சிந்தனையும் தொழுகையை, நிறைவேற்ற வேண்டிய விதத்தில் பூரணமாக நிறைவேற்றுவதிலேயே இருக்கும். அவரது உள்ளம் தொழுகையிலும், தனது ரப்பை வழிபடுவதிலும் திளைத்துப் போயிருக்கும்.

5. தொழுகைக்காக நின்றுவிட்டால், நான்காவது வகையினரைப் போலவே நிற்பார். எனினும், அவற்றுடன், தனது உள்ளத்தை எடுத்து அல்லாஹ்வுக்கு முன்னால் வைத்து, தனது உள்ளத்தால் அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டு, அல்லாஹ் தன்னைப் பார்ப்பதையும் மனதில் கொண்டு, அல்லாஹ்வின் மீதான அன்பாலும், மகத்துவத்தாலும் நிறைந்த உள்ளத்துடன் தொழுவார். அவர் அல்லாஹ்வைக் பார்த்துக்கொண்டு தொழுபவர் போலத் தொழுவார். அந்த எண்ணங்கள், ஊசலாட்டங்கள் அனைத்தும் அவரது உள்ளத்தை விட்டும் நீங்கி அவருக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் அவை ஏற்படுத்தும் திரைகளும் நீங்கியிருக்கும். இவருடைய தொழுகைக்கும் ஏனையோரது தொழகைக்கும் மத்தியுள்ள தூரம் வானம், பூமிகளுக்கு இடையிலான தூரத்தைப் போலவாகும். இவர் தனது தொழுகையில் அல்லாஹ்வைக் கொண்டு கண்குளிர்ச்சி அடைந்தவராக, அவனுடனே தன் சிந்தனையை ஈடுபடுத்திக் கொள்வார்.

முதல் தரப்பினர் தண்டிக்கப்படுவர். இரண்டாம் தரப்பினர் விசாரிக்கப்படுவர், மூன்றாம் தரப்பினர் மன்னிக்கப்படுவர். நான்காம் தரப்பினர் கூலி வழங்கப்படுவர். ஐந்தாம் தரப்பினர் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கப்பட்டவர்கள். ஏனெனில் அவர்களுக்கு தொழகையில் கண்குளிர்ச்சி இருக்கின்றது. யார் இவ்வுலகில் தொழகையில் கண்குளிர்ச்சியைக் காண்கின்றாரோ, அவர் மறுமையில் தன் ரப்பை நெருங்குவது கொண்டு கண்குளிர்ச்சி அடைவார். மேலும், இவ்வுலகிலும் அல்லாஹ்வைக் கொண்டு கண்குளிர்ச்சி அடைவார். யார் அல்லாஹ்வைக் கொண்டு கண்குளிர்ச்சி அடைகின்றாரோ, அவரைப் பார்த்து அனைத்துக் கண்களும் குளிர்ச்சி அடையும். யாருடைய கண் அல்லாஹ்வைக் கொண்டு குளிர்ச்சி அடையவில்லையோ, அவரது உள்ளம் உலகில் தனக்குக் கிடைக்காதவைக்காகக் கைசேதப்பட்டு வெடித்தவிடும்.

– இமாம் இப்னுல் கய்யிம்
أحدث أقدم