வாயில் பின் ஹுஜ்ர் என்று அழைக்கப்படும் ஒரு மனிதர் எமனிலிருந்து வந்தார். அவர் எமனின் தலைவர்களில் ஒருவர், மற்றும் எமன் நாட்டு மன்னர்களில் ஒருவரும் ஆவார். அவர் இஸ்லாத்தை ஏற்கும் ஆவலோடு வந்திருந்தார் அவரை யாரும் இஸ்லாத்திற்கு அழைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன் மீது கொண்ட ஈர்ப்பினால் அவராகவே தேடி வந்தார்.
அவர் மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவரது உள்ளத்தைக் கவர்வதற்காக மதீனாவில் அவருக்கு ஒரு நிலப்பகுதியை நபியவர்கள் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
பிறகு நபியவர்கள், "முஆவியாவே!" என்று அழைத்தார்கள். (முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு வஹியை—இறைச்செய்தியை—எழுதிக் கொடுக்கும் எழுத்தாளராக இருந்தார்கள்). நபியவர்கள், "முஆவியாவே, எழுந்து சென்று இவருக்கு இவரது நிலத்தைக் காண்பிப்பீராக" என்றார்கள்.
முஆவியா (ரலி) கூறுகிறார்: "நான் வெறும் காலுடன் (செருப்பின்றி) புறப்பட்டேன். அந்த மனிதரோ ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தார். அது கடுமையான வெயில் காலம், வெப்பம் கொதிக்கும் ஒரு நாளாக இருந்தது. தரை மணல் நெருப்பாய் சுட்டது."
அப்போது முஆவியா (ரலி) அவரிடம், "வாயிலே (ரலி)! என்னை உங்களுக்கு பின்னால் ஒட்டகத்தில் ஏற்றிக் கொள்ளுங்கள், என்னையும் உங்களோடு ஒட்டகத்தில் அழைத்துச் செல்லுங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர், "உங்களைப் போன்றவர்கள் அரசர்களுக்குப் பின்னால் அமரக் கூடாது" என்றார். மேலும், "நான் ஒரு மன்னனின் மகன், பரம்பரை பரம்பரையாக இந்த அரச பதவியை அடைந்தவன். நீங்களோ வெறும் காலுடன் நடப்பவர், அரசர்களுக்குப் பின்னால் அமர தகுதியற்றவர்!" என்றார்.
அப்போது முஆவியா (ரலி), "அப்படியென்றால் உங்களது செருப்பையாவது எனக்குத் தாருங்கள் (அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்துவானாக). நீங்கள் ஒட்டகத்தின் மேல் இருக்கிறீர்கள், உங்களுக்கு செருப்பு தேவையில்லை அல்லவா?" என்று கேட்டார். அதற்கு அவர், "ஒட்டகம் நடக்கும்போது அதன் நிழலைப் பாருங்கள், அந்த நிழலில் நடந்து செல்வாயாக; அதுவே உங்களுக்கான செருப்பு!" என்றார். அந்த மனிதருக்கு அப்போது இஸ்லாத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை, அவர் அப்போதுதான் புதிதாக வந்திருந்தார்.பிறகு முஆவியா (ரலி) அவருக்கு நிலத்தைக் காட்டிவிட்டுத் திரும்பினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுமார் முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான காலம் கடந்து சென்றது. முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் இப்போது அமீருல் மூமினீனாக (ஆட்சியாளராக) ஆகியிருந்தார். அவர் டமஸ்கஸில் தனது கிலாபத் தலைமைப் பீடத்தில், ஆட்சி அரியணையில் அமர்ந்திருந்தார்.
அப்போது வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) மதீனாவாசிகளின் ஒரு குழுவோடு அங்கே சென்றார். முஆவியா (ரலி) அவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். ஒரு பழமொழி சொல்வார்கள்: "அடித்தவன் மறந்துவிடுவான், ஆனால் அடி வாங்கியவன் மறக்க மாட்டான்." முஆவியா (ரலி) அந்தச் சம்பவத்தை மறக்கவில்லை. ஆனால் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களை மறந்துவிட்டார், அந்தச் சம்பவத்தையும் மறந்துவிட்டார்.
அவர் உள்ளே வந்தபோது, முஆவியா (ரலி) அவருக்கு மிகுந்த மரியாதை செய்தார். ஷாம் (சிரியா) தேசத்தில் அவருக்கு ஒரு நிலத்தை ஒதுக்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரை கண்ணியப்படுத்தி, உபசரிப்பதில் உச்ச எல்லையைக் கடந்தார். இந்த அதீத உபசரிப்பு வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களை கவர்ந்தது (வியப்படையச் செய்தது).
அப்போது முஆவியா (ரலி) அவரிடம், "நீங்கள் மதீனாவிற்கு வந்ததும், நபியவர்கள் உங்களுக்கு ஒரு நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தது நினைவிருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "ஆம், நினைவிருக்கிறது" என்றார். முஆவியா, (ரலி) "அப்போது உங்களோடு ஒரு சிறுவன் வந்தானே, நினைவிருக்கிறதா?" எனக் கேட்க, அவர் "ஆம்" என்றார்.
முஆவியா (ரலி), "அந்தச் சிறுவன் நான்தான்... அந்தச் சிறுவன் தான் இன்று அமீருல் மூமினீனாக இருக்கிறான்" என்றார். இதைக் கேட்டதும் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) விம்மி அழுது, மிகுந்த மனவேதனை அடைந்தார். அவர், "அந்த நாளில் நான் முஆவியாவை என் தலைக்கு மேல் தூக்கிச் சுமந்திருக்கக் கூடாதா (அவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டேனே)!" என்று வருந்தினார்.
-அஷ்ஷைக் வலீத் அத்தஹ்வான்-
தமிழில்: Azhan Haneefa