அத்தியாயம் 65/1 திருக்குர்ஆன் விளக்கவுரை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 65

திருக்குர்ஆன் விளக்கவுரை 4474 - 4605


('பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதிலுள்ள) அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அர்ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) ஆகிய இரண்டு சொற்களும் 'ரஹ்மத் (கருணை') எனும் (வேர்ச்) சொல்லிருந்து பிறந்த இரண்டு பெயர்ச் சொற்களாகும். 2 அர்ரஹீம், அர்ரஹிம் ஆகிய இரண்டும் ஒரே பொருளுடையவை தாம். இவை, (பொருள் தருவதில்) ஆலிம் மற்றும் அலீம் (அறிந்தவன்) எனும் சொற்களைப் போன்றவையாகும். 3

பகுதி 1

'அல்ஃபாத்திஹா' அத்தியாயம்

குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை.

இதற்கு 'உம்முல் கிதாப்' ('இறைவேதத்தின் தாய்') என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித்தான் (திருக்கர்ஆன்) தொடங்கப்படுகிறது. தொழுகையில் இதை (முதலாவதாக) ஓதித் தான் தொடங்கப்படுகிறது. 4

(இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் 'மாலிகி யவ்மித்தீன்' என்பதில் இடம் பெற்றுள்ள) 'தீன்' எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்படவிருக்கிற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே, 'பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி' என இவ்வசனத்தின் பொருள் அமையும்.) 'கமாததீனு துதானு'' (நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் 'தீன்' எனும் சொல்லில் தொனிக்கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக நிகழ்கின்ற, அதே போன்ற விளைவைத் தருகிற பிரதிபலனை இச்சொல் குறிக்கிறது.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) 5 கூறுகிறார்கள்:

''அவ்வாறில்லை. மாறாக, (உண்மை என்னவெனில்) தீனை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள்'' எனும் குர்ஆனின் (திருக்குர்ஆன் 82:9வது) வசனத்தில் உள்ள 'தீனை' என்பதற்குச் 'செயல்களுக்கான விசாரணையை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 56:86வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'மதீனீன்' எனும் சொல்லுக்கு 'விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர்' என்று பொருள். 6

4474. அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் (தொழுது முடித்தபின்), 'இறைத்தூதர் அவர்களே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்'' என்று (திருக்குர்ஆன் 08:24வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?' என்று கேட்டார்கள்.7 பிறகு என்னிடம், 'குர்ஆனின் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு என் கையைப் பிடித்தார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், 'நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஃஸப்உல் மஸானீ) ஆகும். 8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும்'' என்று கூறினார்கள்.

பகுதி 2

''(அவர்கள் உன்னுடைய) கோபத்திற்குள்ளானவர்களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர்'' (எனும் 1:7வது இறைவசனம்)9

4475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

(தொழுகையில்) இமாம், 'ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வ லள்ளால்லீன்'' என்று ஓதியவுடன் நீங்கள், 'ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)'' என்று சொல்லுங்கள். ஏனெனில், வானவர்கள் 'ஆமீன்' கூறுவதுடன் ஒத்து ஆமீன் கூறுகிறவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 10

(2) 'அல்பகரா' அத்தியாயம் 1

பகுதி 1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... 'அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்'' (எனும் 02:31வது வசனத் தொடர்.)2

4476. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்று கூடி, '(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)'' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்'' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை'' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 3 'நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்'' என்று சொல்வார்கள்.

உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை'' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். 4 பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, இறை நம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் - அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை'' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். 5 பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை'' என்று சொல்வேன். 6

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:

உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர்ஆனில் யாரைக் குறித்து), 'நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே 'குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்' எனும் சொற்றொடர் குறிக்கிறது.

இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.

பகுதி 2

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்: 7

(திருக்குர்ஆன் 02:14வது வசனத்தில் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'இலா ஷயாத்தீனிஹிம்' (தங்களின் ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, 'நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்களுமான தங்களின் தோழர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:19வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஹீத்துன் பில் காஃபிரீன்' (இந்த நிராகரிப்போரை அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கிறான்) எனும் சொற்றொடருக்கு, 'இறை மறுப்பாளர்களான அவர்களை அல்லாஹ் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். (அவர்களால் தப்ப முடியாது)'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:138வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அலல் காஷியீன்' ('உள்ளச்சமுடையோர் மீது') எனும் சொற்றொடருக்கு 'உண்மையான இறைநம்பிக்கையாளர்களின் மீது'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:63வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பிகுவ்வத்தின்' (உறுதியாக) எனும் சொல்லுக்கு, 'வேதத்திலுள்ளபடி செயல்படுங்கள்'' என்று பொருள்.

அபுல் ஆலியா(ரஹ்) கூறினார். 8

(திருக்குர்ஆன் 02:10வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மரள்' (நோய்) எனும் சொல்லுக்குச் 'சந்தேகம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:66வது வசனத்தின் மூலத்திலுள்ள 'வமா கல்ஃபஹா' (பின்னால் உள்ளவர்களுக்கு) எனும் சொல்லுக்கு, 'அவர்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் (படிப்பினையாக நாம் ஆக்கினோம்)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:71வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா ஷியத்த' (மறு இல்லாதது) எனும் சொல்லுக்கு, 'வெண்மையில்லாதது' என்று பொருள்.

அபுல் ஆலியா(ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்:

(திருக்குர்ஆன் 02:49வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யசூமூனக்கும்' (கொடிய வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்) எனும் சொல்லுக்கு, 'உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தனர்' என்று பொருள். (இப்பொருளின் மூலச் சொல்லான)' அல்வலாயா' எனும் சொல், 'அல்வலாஃ' என்பதன் வேர்ச் சொல்லாகும். இதற்கு இறையாண்மை' என்று பொருள். 'அல்விலாயா' என்று அதனை வாசித்தால், அதற்கு 'ஆட்சியதிகாரம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:61வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபூம்' (கோதுமை) எனும் சொல், உண்ணப்படுகிற தானியங்கள் அனைத்தையுமே குறிக்கும்'' என்று சிலர் கூறுகின்றனர்.

கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) கூறினார். 9

(திருக்குர்ஆன் 02:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃப பாஊ' (இறை முனிவுக்கு ஆளாகி விட்டார்கள்) எனும் சொல்லுக்கு, 'அவர்கள் (இறை முனிவுடன்) திரும்பினார்கள்' என்று பொருள்.

கத்தாதா(ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்.

(திருக்குர்ஆன் 02:89 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஸ்தஃப்திஹூன்' (வெற்றியளிக்கும்படி வேண்டினர்) எனும் சொல்லுக்கு, 'உதவி தேடினர்' என்று பொருள்

(திருக்குர்ஆன் 02:102வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ராஇனா' எனும் சொல், 'ருஊனத்' (மடமை) எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அவர்கள் ஒரு மனிதனை மடையனாக்க விரும்பினால் அவனை நோக்கி, 'ராஇனா' (மடையனே) என்று சொல்வார்கள்.

(திருக்குர்ஆன் 02:48வது வசனத்தின் மூலத்திலுள்ள 'போதாது' எனும் சொற்பொருள் கொண்ட) 'லா தஜ்ஸீ' எனும் சொல்லுக்குப் 'பயனளிக்க முடியாது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:168வது வசனத்தின் மூலத்திலுள்ள 'எட்டுகள்' எனும் சொற்பொருள் கொண்ட) 'குத்வாத்' எனும் சொல், 'கத்வ்' எனும் (மூலச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்குக் 'கால் சுவடுகள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02: 124 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'கஷ்டம் கொடுத்தான்' எனும் சொற்பொருள் கொண்ட) 'இப்தலா' எனும் சொல்லுக்குச் 'சோதித்தான்' என்று பொருள்.

பகுதி 3

''எனவே, நீங்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்க இணைகளைக் கற்பிக்காதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:22வது) வசனத் தொடர்.

4477. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது'' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது'' என்று கூறினார்கள். 10

பகுதி 4

''மேலும், நாம் உங்களின் மீது மேகத்தை நிழலிடும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். 'நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்' (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக்கொன்றும் அவர்கள் தீங்கிழைத்து விடவில்லை. மாறாக, தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:57வது) இறைவசனம்.

முஜாஹித் இப்னு ஜபர்(ரஹ்) கூறினார்.

'மன்னு' என்பது வேலம் பசை ஆகும். 'சல்வா' என்பது பறவை ஆகும். 11

4478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். 12

என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 5

மேலும், '(அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பனவற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். 'ஹித்தத்துன்' (பாவச் சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்துவிடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்குவோம்' என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள் (எனும் 02:58வது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரஃகதன்' (தாரளமாக) எனும் சொல்லுக்கு 'விசாலமாகவும் அதிகமாகவும்' என்று பொருள்.

4479. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். 'ஹித்தத்துன்' (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள்'' (திருக்குர்ஆன் 02:58) என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, 'ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து)'' என்று (பரிகாசமாகச்) கூறினார்கள். 13

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

''ஜிப்ரீலுக்குப் பகைவர் அல்லாஹ்வுக்கும் பகைவராவார். ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களின் இதயத்தில் இறக்கி வைத்தார். (இவ்வேதம்) தனக்கு முன்னிருந்த வேதங்களை உண்மைப்படுத்துவதுடன், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தியாகவும் நேர்வழியாகவும் விளங்குகிறது'' என்று (நபியே) கூறும்! எனும் (திருக்குர்ஆன் 02:97வது) இறை வசனம்.

இக்ரிமா(ரஹ்) கூறினார். 14 ஆகிய வானவர்களின் பெயர்களில் தொடக்கத்திலுள்ள) ஜப்ர், மீக், சராஃப் ஆகியன 'அடிமை' எனும் பொருளுடையவை. இறுதியில் உள்ள 'ஈல்' எனும் சொல்லுக்கு 'அல்லாஹ்' என்று பொருள். (அதாவது 'அல்லாஹ்வின் அடியார்' என்பது இவற்றின் பொருளாகும்.)15

4480. அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்கள். பிறகு, '1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளிக்க, 'வானவர்களிலேயே ஜிப்ரீல்தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!'' என்று அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜிப்ரீலுக்குப் பகைவவர் அல்லாஹ்வுக்கும் பகைவராவார். ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களின் இதயத்தில் இறக்கி வைத்தார்'' என்று (நபியே) கூறும் எனும் இந்த (திருக்குர்ஆன் 02:97வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, 'அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த் துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். அறிக! சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனுடைய சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலைப் பெறுகிறது'' என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி அளிக்கிறேன். தாங்கள் இறைத்தூதர்தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்'' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து) கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத் தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் வந்தனர். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.) பிறகு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புல்வருமாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!'' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்'' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார்'' என்று அப்துல்லாஹ் இப்னு சலாமைக் குறித்துக் குறை கூறினர். அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'இதைத்தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். 16

பகுதி 7

''எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா?' எனும் (திருக்குர்ஆன் 02:106வது) இறைவசனம். 17

4481. உமர்(ரலி) அறிவித்தார்.

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார் எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்'' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்'' என்று கூறியுள்ளான். 18

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 8

'அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன்'' (எனும் 02:11வது வசனத் தொடர்). 19

4482. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும் அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, 'அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது' என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, 'எனக்குக் குழந்தை உண்டு' என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்'' என்று அல்லாஹ் கூறினான். 20

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 9

''மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்று கூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், 'இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள்' என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 02:125வது) வசனத் தொடர்.)

(இவ்வசனத்தின் மூலத்தில் 'ஒன்று கூடும் இடம்' என்ற பொருளைக் குறிக்கும்) 'மஸாபாத்தன்' எனும் சொல்லுக்கு 'மீளுமிடம்' என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) 'யஸுபூன்' எனும் சொல்லுக்கு 'மீண்டு(ம் மீண்டும்) வருவார்கள்' என்று பொருள். 21

4483. உமர்(ரலி) அறிவித்தார்

'மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்' அல்லது 'என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்' நான் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!'' என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும், நான், (அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னயரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!'' என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, 'நீங்கள் (நபி(ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ளவேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்'' என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, 'உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!'' என்று கேட்டார். அப்போது அல்லாஹ், 'இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருககு வழங்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 66:5வது) வசனத்தை அருளினான். 22

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பகுதி 10

''மேலும், (நபியே! நினைவு கூருக:) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது 'எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவாய்' (எனப் பிரார்த்தித்தார்கள்)'' எனும் (திருக்குர்ஆன் 02:127 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அல்கவாஇத்' (அடித்தளங்கள் எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை; 'காஇதா' ஆகும். (மாதவிடாய் நின்று போன முதிய) பெண்களைக் குறிக்கிற 'அல்காவஇத்' எனும் சொல்லின் ஒருமை, 'காஇத்' என்பதாகும்.

4484. நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்,) 'உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களை விடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக்கூடாதா?' எனக் கேட்டேன். 'உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)'' என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:

ஆயிஷா(ரலி), நபி(ஸல்) அவர்களிடமிருந்து மேற் சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரண்டு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம்(அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும். 23

பகுதி 11

(நம்பிக்கையாளர்களே!) 'அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ்வேதத்)தையும், மற்றும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபிமார்கள்) மீது அருளப் பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டவற்றையும், (இதர) அனைத்து இறைத்தூதர்களுக்கும் தங்களின் இரட்சகனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர்களாக இருக்கிறோம்'' என்று கூறுங்கள். (எனும் 02:136வது இறைவசனம்.)

4485. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'வேதக்காரர்கனை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்'' (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.24

பகுதி 12

''அவர்கள் முன்னர் (முன்னோக்கிக் கொண்டு) இருந்த தம் கிப்லா - தொழும் திசையிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?' என மக்களில் அறிவீனர்கள் வினவுவார்கள். (நபியே!) நீர் கூறும்: 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுகிறவர்களை அவன் நேரான வழியில் செலுத்துவான் (எனும் 02:142வது இறைவசனம்).

4486. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் 'பதினாறு மாதங்கள்' அல்லது 'பதினேழு மாதங்கள்' தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 02:144வது வசனத்தை அருளினான். உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் 'ருகூஉ' செய்து கொண்டிருந்தனர். அவர், 'அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்'' என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்து விட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது 'அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்குகிறவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான்'' எனும் (திருக்குர்ஆன் 02:143வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். 25

பகுதி 13

இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (எனும் 02:143வது வசனத்தொடர்.)

4487. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், 'இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்'' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், '(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?' என்று இறைவன் கேட்பான். அவர்கள், 'ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)'' என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம், 'உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை'' என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், 'உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?' என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், 'முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்'' என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், 'நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்து விட்டார்கள்'' என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே 'இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக'' எனும் (திருக்குர்ஆன் 02:143) இறைவசனம் குறிக்கிறது.

'நடுநிலையான' (வசத்) என்பதற்கு 'நீதியான' என்று பொருள்.26

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகுதி 14

இறைத்தூதரைப் பின்பற்றுகிறவர் யார்; தம் குதிகால் புறமாகத் திரும்பிவிடுகிறவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி (பின்பு மாற்றி)னோம். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களுக்கேயன்றி (மற்றவர்களுக்கு) இது நிச்சயம் பளுவாகவே இருந்தது. மேலும், அல்லாஹ் உங்களின் நம்பிக்கையை வீணாக்குகிறவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையயோனும் கருணையுடையோனுமாவான் (எனும் 02:143வது வசனத்தொடர்)

4488. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

மக்கள் 'சுப்ஹு'த் தொழுகையை 'மஸ்ஜிது குபா'வில் தொழுது கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, 'கஅபாவை (த் தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான்'' என்று கூறினார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுதுகொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக்கொண்டனர். 27

பகுதி 15

(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகிற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கிறோம். எனவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்கித் திருப்புங்கள். மேலும், அவர்கள் செய்கிறவற்றைப்பற்றி அல்லாஹ் கவனமற்றவன் அல்லன் (எனும் 02:144வது இறைவசனம்).

4489. அனஸ்(ரலி) அறிவித்தார்

(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை. 28

பகுதி 16

(நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் எத்தனைச் சான்றுகளைக் கொண்டு வந்தாலும் உங்கள் கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீங்களும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுவரல்லர். இன்னும் அவர்களில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினாரின் கிப்லாவைப் பின்பற்றுவோராயும் இல்லை. எனவே, உங்களுக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் சுயவிருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் அக்கிரமக்காரர்களில் (ஒருவராக) ஆகிவிடுவீர்கள் (எனும் 02:145 வது இறைவசனம்.)

4490. இப்னு உமர்(ரலி) கூறினார்

மக்கள் குபாவில் 'சுப்ஹு'த் தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'சென்ற இரவு இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கித் வந்த பைத்துல் மக்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்'' என்று கூறினார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள். 29

பகுதி 17

எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கிறோமோ அவர்கள் தங்களின் பிள்ளைகளை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் அதை அவரை (-கஅபாவை அல்லது நபி முஹம்மதை) நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். இந்த உண்மை, உங்களுடைய இறைவனிடமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிடவேண்டாம் (எனும் 02:146, 147 ஆகிய இறைவசனங்கள்).

4491. இப்னு உமர்(ரலி) கூறினார்

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகை தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'சென்ற இரவு நபி(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை நாம் முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்'' என்று கூறினார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமிட்டு கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.

பகுதி 18

ஒவ்வொரு (மதத்த)வருக்கும் அவரவர் திரும்பக் கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கிறான் (எனும் 02:148 வது இறைவசனம்.)30

4492. பராஉ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி 'பதினாறு' அல்லது 'பதினேழு' மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான். 31

பகுதி 19

மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான கட்டளை)யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 02:149வது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள 'பாதி' எனும் சொற்பொருள் கொண்ட) 'ஷத்ர்' எனும் சொல்லுக்கு 'நோக்கி' (திசையில்) என்று பொருள்.

4493. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

மக்கள் 'குபா'வில் 'சுப்ஹு'த் தொழுகையிலிருந்த போது, ஒருவர் வந்து, 'சென்ற இரவு (நபி(ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்'' என்று கூறினார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பினார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. 32

பகுதி 20

மேலும், (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமே திருப்புங்கள் (எனும் 02:150வது வசனத் தொடர்.)33

4494. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

மக்கள் குபாவில் 'சுப்ஹுத்' தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன்வசனம்) அருளப்பெற்றது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்'' என்று கூறினார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.

பகுதி 21

நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எனவே, இறையில்லத்தில் 'ஹஜ்' அல்லது 'உம்ரா' (எனும் வழிபாடுகளைச்) செய்கிறவரின் மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறவரை அல்லாஹ் மதிப்பவனும் மிக அறிபவனுமாவான்'' எனும் (திருக்குர்ஆன் 02:158வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஷஆயிர்' (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு 'அடையாளங்கள்' என்று பொருள். அதன் ஒருமை 'ஷஈரா' என்பதாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

'ஸஃப்வான்' எனும் சொல்லுக்கு 'கற்கள்' என்று பொருள்.

எதையும் முளைக்கவிடாத வழுக்குப் பாறைகளும் 'ஸஃப்வான்' எனப்படுவதுண்டு. இதன் ஒருமை 'ஸஃப்வானா' என்பதாகும். இதுவும் 'ஸஃபா'வும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) 'ஸஃபா' என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

4495. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமில்லை'' என்ற (திருக்குர்ஆன் 02:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா(ரலி), '(என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு அந்த வசனத்தில் 'அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமில்லை' என்றிருந்தால் தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் தாங்கள் வணங்கி வந்த 'முஷல்லல்' எனும் குன்றில் உள்ள) 'மனாத்' எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) 'குதைத்' எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்தபோது அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகிறோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை'' என்ற (திருக்குர்ஆன் 02:158) இந்த வசனத்தை அருளினான். 34

4496. ஆஸிம் இப்னு சுலைமான்(ரஹ்) கூறினார்

நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், 'ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதி வந்தோம். எனவே, இஸ்லாம் வந்தபோது நாங்கள் அவற்றுக்கிடையே ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், 'ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எனவே, இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறவர் அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவதில் குற்றமில்லை' எனும் (திருக்குர்ஆன் 02:158வது) இவ்வசனத்தை அருளினான்'' என்று பதிலளித்தார்கள். 35

பகுதி 22

''அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல் அவற்றை நேசிக்கிறவர்களும் மனிதர்களில் உள்ளனர்'' எனும் (திருக்குர்ஆன் 02:165வது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அன்தாத்' (இணைகள்) எனும் சொல்லுக்கு 'நேர் எதிரானவை' (அள்தாத்) என்று பொருள். இதன் ஒருமை 'நித்து' என்பதாகும்.

4497. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்'' என்று கூறினார்கள். '(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்'' என்று நான் சொன்னேன். 36

பகுதி 23

இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்களுடைய இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு (எனும் 02:178வது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு 'விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்று பொருள்.

4498. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவே, அல்லாஹ் (முஹம்மத்(ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்திற்கு, 'கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) நிறைவேற்றிட வேண்டும்'' என்று கூறுகிறான்.

'மன்னிப்பளித்தல்' (அஃப்வ்) என்பது வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்லமுறையில் அதனைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.

''இது உங்களுடைய இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும்'' அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)களின் மீது கடைமையாக்கப்பட்டிருந்ததை விட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் வரம்பு மீறுகிறானோ அவனுக்கு - அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு - துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 02:178)

இதை முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்.

4499. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார். 37

4500. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

என் தந்தையின் சகோதரி (அத்தை) 'ருபய்யிஉ' (பின்த் நளர்) அவர்கள் ஒர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினார். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையில் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்குவதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) 'ருபய்யிஉ'வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரின் முன்பல் உடைக்கப்படக்கூடாது'' என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அன்ஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்'' என்று கூறினார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறைவேற்றி (மெய்யாக்கிக் காட்டி) விடுகிறான்'' என்று கூறினார்கள். 38

பகுதி 24

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தூய்மை அடையும்பொருட்டு (எனும் 02:183வது இறைவசனம்).

4501. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி(ஸல்) அவர்கள், '(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதை விட்டுவிடலாம்'' என்று கூறினார்கள்.

4502. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு 'ஆஷூரா' (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டார்கள். 39

4503. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, 'இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே'' என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) கூறினார். நான், 'ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. எனவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்'' என்று சொன்னேன்.

4504. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையானபோது ரமளான் (மாத நோன்பு) கடமையான வணக்கமாகி, ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாக) ஆகி விட்டது. 40

பகுதி 25

''(நோன்பு நோற்கவேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாள்களில் தான். ஆனால், (அந்நாள்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாள்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாள்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளவேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகிறவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். ஆனால், எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம்.

''அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப்பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் விட்டுவிடலாம்'' என்று 'அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்)' அவர்கள் கூறுகிறார்கள். 41

ஹஸன் அல்பஸாரீ, இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். 42

(குழந்தைக்குப்) பாலூட்டுகிறவளும் கார்ப்பிணிப்பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம்.

தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பை விட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். அனஸ்(ரலி) முதுமையடைந்துவிட்ட பின்னால், 'ஓராண்டு' அல்லது 'ஈராண்டுகள்' ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக்கொடுத்து (பரிகாரம் தேடிக்கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள்.

(இந்த 02:184வது வசனத்திலுள்ள 'சிரமப்படுகிறவர்கள்'எனும் சொல்லின் மூலச் சொல்லைப்) பெரும்பாலோர் 'யுதீகூனஹு' என்றே ஓதுகிறார்கள். இதுவே, பெரும்பான்மை (குர்ஆன் அறிஞர்களின் நிலை)யாகும். 43

4505. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி), 'வ அலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத்துன் தஆமு மிஸ்கீன்'' (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனத்தை ஓதி, 'இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும்'' என்று கூறினார்கள்.

பகுதி 26

உங்களில் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 02:185வது வசனத் தொடர்).

4506. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி), (திருக்குர்ஆன் 02:184வது வசனத்தில் 'அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்'' என்பதன் மூலத்தை) 'ஃபித்யத்து தஆமி மஸாகீன' என்று ('ஏழைகள்' எனப் பன்மையாக) ஓதிக்காட்டி 'இது, சட்டம் மாற்றப்பட்டுவிட்ட வசனமாகும்'' என்று கூறினார்கள்.

4507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்

''நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்'' எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் ('உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது. 44

அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். 45

பகுதி 27

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்தும் விட்டான். எனவே, இனி நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) ஒன்று கூடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததிகளாக) ஏற்படுத்தியதைத் தேடிக்கொள்ளுங்கள் (எனும் 02:187வது வசனத் தொடர்).

4508. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அல்லாஹ், '(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்'' என்று (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்தை அருளினான். 46

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

பகுதி 28

''இன்னும் இருள் ரேகையிலிருந்து விடியலின் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள் பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும்போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடி விடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்குகிறான்'' எனும் (திருக்குர்ஆன் 02:187வது) வசனத் தொடர்.

'இஃதிகாஃப் இருப்பர்' என்றால் 'தங்கியிருப்பவர்' என்று பொருள்.

4509. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்

(இந்த 02:187வது வசனம் அருளப்பட்டவுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி(ஸல்) அவர்களிடம் சென்று,) 'இறைத்தூதர் அவர்களே!'' என் தலையணையின் கீழே (இந்த இரண்டு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும்) பிரித்தறிய முடியவில்லையே?!)'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்'' என்று கூறினார்கள். 47

4510. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்

''இறைத்தூதர் அவர்களே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை'' என்ற (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள் தாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்) தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, '(அதன் பொருள்) அது வன்று; மாறாக, அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்'' என்று கூறினார்கள்.

4511. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

(ஆரம்பத்தில்) 'வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02: 187வது வசனத்தின்) தொடர் 'விடியலின்' ('மினல் ஃபஜ்ர்') எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரண்டு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், 'மினல் ஃபஜ்ர்' (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும் தான் இது குறிக்கிறது என்று அறிந்துகொண்டார்கள். 48

பகுதி 29

நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் (எனும் 2;189வது வசனத் தொடர்.)

4512. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:189 வது) வசனத்தை அருளினான். 49

பகுதி 30

குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள். அவர்கள் (குழப்பத்திலிருந்து) விலகிக் கொண்டால் அப்பால் அநீதி இழைப்போர் மீதேயன்றி போர்தொடுத்தல் என்பது இல்லை (எனும் 02:193 வது இறைவசனம்.)

4513. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, 'மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர்(ரலி) அவர்களின் புதல்வரும் நபி(ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?' என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர்(ரலி), 'என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது'' என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும் 'குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்' என்று (திருக்குர்ஆன் 02:193 வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர்(ரலி), '(ஆம்! இறைத்தூதர்(ஸல்) காலத்தில்) குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்க உரித்தானதாக ஆனது. ஆனால், (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகிறீர்கள்!'' என்றார்கள். 50

4514. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி) அவர்களிடம், (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு 'ஹஜ்' செய்கிறீர்கள்; மறு ஆண்டு உம்ராச் செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கைவிட்டுவிடுகிறீர்களே, ஏன்? அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்!'' என்று கேட்டார். (அதற்கு) இப்னு உமர்(ரலி), 'என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு. 4. (கடமையானோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஅபாவில் ஹஜ் செய்தல்'' என்றார்கள்.

அந்த மனிதர், 'அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் 'இறை நம்பிக்கையாளர்களிலுள்ள இரண்டு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்தால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்பால் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள்'' என்றும் (திருக்குர்ஆன் 49:09), 'குழப்பம் நீங்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்'' என்றும் (திருக்குர்ஆன் 02:193) குறிப்பிட்டிருப்பதை நீங்கள் செவியுற மாட்டீர்களா?' என்று கேட்டார். இப்னு உமர்(ரலி), '(நீர் குறிப்பிட்டுக் காட்டிய வசனங்களின் படி) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் செயல்பட்டோம். அப்போது இஸ்லாம் குறைந்த (அங்கத்தினர்களைக் கொண்ட) தாகவே இருந்தது. அப்போது (மார்க்கத்தை ஏற்ற) ஒருவர் தம் மார்க்கத்தைக் கட்டிக்காக்கும் விஷயத்தில் (பல்வேறு) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று, அவரை (எதிரிகள்) கொன்றனர்; அல்லது அவரைத் துன்புறுத்தினர். முடிவில், இஸ்லாம் அதிகம் (அங்கத்தினர் கொண்டதாக) ஆனபோது குழப்பம் ஏதும் இருக்கவில்லை'' என்றார்கள்.

4515. அந்த மனிதர், 'அலீ(ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான்(ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார்.

இப்னு உமர்(ரலி), 'உஸ்மான்(ரலி) அவர்களை (அன்னார் உஹுதுப் போரின்போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அல்லாஹ் அவரை மன்னிப்பதை நீங்கள் தாம் விரும்பவில்லை. அலீ(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி(ஸல்) அவர்களின் மருமகனுமாவார்'' என்று கூறியவாறே, '(நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கிறீர்களே இதுதான் அலீ அவர்களின் வீடாகும்'' என்று தம் கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.

பகுதி 31

''மேலும், நீங்கள் இறைவழியில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். (நல்லெண்ணத்துடன்) சிறந்த முறையில் செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவர்களை நேசிக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 02:195 வது) இறைவசனம்.

(இறை வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஹ்லுகா' (அழிவு) எனும் சொல்லும் 'ஹலாக்' எனும் சொல்லும் ஒன்றேயாகும். (இரண்டும் அழிவு' எனும் பொருள் கொண்ட வேர்ச் சொற்களேயாகும்.)

4516. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்

''இறைவழியில் செலவிடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:195 வது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது. 51

பகுதி 32

ஆயினும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்களில் யாரேனும் நோயாளியாக, அல்லது தம் தலையில் பிணி ஏதும் உள்ளவராக இருந்து பலியீடுவதற்கு முன்பே தலை முடியைக் களைய வேண்டிய கட்டாயம் நேரிட்டிரு)ந்தால், அதற்குப் பரிகாரம் நோன்பு நோற்றல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது பலிகொடுத்தல் ஆகும் (எனும் 02:196 வது வசனத் தொடர்).

4517. அப்துல்லாஹ் இப்னு மஅகில்(ரஹ்) கூறினார்

நான் இந்தப் பள்ளிவாசலில் - அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் - கஅப்பின் உஜ்ரா(ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி(ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், 'உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை'' என்று கூறிவிட்டு, 'உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை 'ஸாவு' உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்'' என்று கூறினார்கள். 52

பகுதி 33

எவரேனும் 'உம்ரா'(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப் பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்துவிட்டால் அவர் பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாள்களும் (வீடு) திரும்பிவிட்ட பின் ஏழு நாள்களும் நோன்பு நோற்கவேண்டும். இவை முழுமையான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 02:196 வது வசனத் தொடர்). 53

4518. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்

'தமத்துஉ' (ஹஜ் தொடர்பான இந்த 02:196 வது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. எனவே, நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி(ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைக் தம் (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.

முஹம்மத் இப்னு இஸ்மாயீல் புகாரீயாகிய நான் கூறுகிறேன்: 'அவர் உமர்(ரலி) தாம்'' என்று சொல்லப்படுகிறது.

பகுதி 34

(ஹஜ் பயணத்தில்) உங்களுடைய இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) நீங்கள் தேடிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது (எனும் 02:198 வது வசனத் தொடர்).

4519. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச் செயலாகக் கருதினர். எனவே, ஹஜ் பருவத்தில், 'உங்களுடைய இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது'' எனும் (திருக்குர்ஆன் 02:198 வது) வசனத்தொடர் அருளப்பட்டது. 55

பகுதி 35

பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகிற ('அரஃபாத்' எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 02:199 வது வசனத் தொடர்).

4520. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) 'உறுதிமிக்கவர்கள்' எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் 'மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:199 வது) இறைவசனமாகும். 56

4521. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது 'தமத்துஉ' ஹஜ் செய்கிற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுதலாக) இறையில்லம் கஅபாவை அவர் வலம் வரலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாகி விட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்கவேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையென்றால் ஹஜ் நாள்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்துவிட்டாலும் பரவாயில்லை. பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ருத் தொழுகையிலிருந்து இரவின் இருள்படரும் வரைத் தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல்லாம் புறப்பட்டு திரும்பிச் செல்லும்போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்தலிஃபாவில் கழிக்கட்டும். பிறகு, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரட்டும்! (அவர் மட்டுமின்றி) நீங்கள் (அனைவரும்) விடியும் வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், லாஇலாஹ இல்லல்லாஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்துதான் திரும்பிக் கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்: 'மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கருணையுள்ளவனும் ஆவான். (திருக்குர்ஆன் 02:199)

(அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறியும் வரை (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.)

பகுதி 36

(அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவு கூரும் மக்கள் உள்ளனர்.) அவர்களில் சிலர், 'எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!'' எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 02:201 வது இறைவசனம்.)

4522. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?' எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

பகுதி 37

அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 02:204 வது வசனத் தொடர்).

''(திருக்குர்ஆன் 02:205 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஸ்ல்' எனும் சொல்லுக்கு 'உயிரினம்' என்று பொருள்'' என அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்.

4523. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்பவனேயாவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 57

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 38

உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கை கொண்ட)வர்களின் (சோதனையான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்துவிடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங்களும் துயரங்களும் ஆட்கொண்டன. இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் 'அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?' என்று கேட்கிற அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். 'இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது'' (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்படடது (எனும் 02:214 வது இறைவசனம்).

4524 இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) '(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது'' எனும் (திருக்குர்ஆன் 12:110 வது) வசனத்தில் ('குஃத்திபூ' இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள் - என்று வாசிக்காமல்) 'குஃதிபூ' (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்'') என்று வாசித்துவிட்டு அவ்வசனத்திலிருந்து, 'இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கிற அளவிற்கு அலைக்கழிக்கப்பட்டார்கள். 'இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது' (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது'') எனும் (திருக்குர்ஆன் 02:214 வது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள். 58

பிறகு நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் (குஃதிபூ என இப்னு அப்பாஸ்(ரலி)) அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.

4525. அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற்படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன'' என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா(ரலி), 'வழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ' என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் 'குஃத்திபூ' என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள். 59

பகுதி 39

''உங்கள் மனைவியர் உங்களுக்குரிய 'விளைநிலம்' ஆவர். எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர்கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள் தாம் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) இறைவசனம்.

4526. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி) குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும் வரை (வேறு எதுவும்) பேசமாட்டார்கள். ஒரு நாள் (அவர்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த போது) அவர்களை (ஓதவிடாமல்) நான் பிடித்துக்கொண்டேன். அவர்கள் 'அல்பகரா' அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி 'இந்த வசனம் எந்த விஷயத்தில் அருளப்பட்டது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'தெரியாது'' என்றேன். அதற்கு அவர்கள், 'இன்ன இன்ன விஷயத்தில் அருளப்பட்டது'' என்று கூறிவிட்டு பிறகு தொடர்ந்து ஓதினார்கள். 60

4527. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

''எனவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர்(ரலி), 'மனைவியிடம் அவளுடைய... கணவன் புணரலாம்'' என்று குறிப்பிட்டார்கள். 61

4528. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, 'உங்கள் பெண்கள் உங்களுக்குரிய 'விளை நிலம்' ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) இறைவசனம் அருளப்பட்டது. 62

பகுதி 40

நீங்கள் (உங்களுடைய) மனைவியரை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் ('இத்தா') தவணையின் இறுதியை அடைந்தால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்துகொள்வதை (உறவினர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம் (எனும் 02:232 வது வசனத் தொடர்.)

4529. மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்

எனக்கு சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண் கேட்டு வந்தனர்.

ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) கூறினார்

மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களின் சகோதரியை அவரின் கணவர் விவாகரத்துச் செய்து 'இத்தா' காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே)விட்டுவிட்டார். (எனவே, இது முழு விவாகரத்து (தலாக் பாயின்) ஆகும்.) பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில்(ரலி) (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள்.

அப்போதுதான், 'அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்துகொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் அருளப்பட்டது. 63

பகுதி 41

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களின் தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்களின் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்து கொள்கிற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவிர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்களின் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கிறவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 02:234 வது இறைவசனம்).

(திருக்குர்ஆன் 02:237 வது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) 'யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு 'அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.

4530. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்

நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்'' என்று பதிலளித்தார்கள். 64

4531. அப்துல்லாஹ் இப்னு அபீ நஜீஹ் அல்மக்கீ(ரஹ்) அறிவித்தார்

''உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள்'' (எனும் 02:234 வது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்:

(கணவன் இறந்த) அந்தப் பெண் (நான்கு மாதம், பத்து நாள்கள் காத்திருத்தல் எனும்) இந்த 'இத்தா'வைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம் மரண சாசனம் செய்வார்களாக, ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது.'' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாள்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாள்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாள்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாள்களுக்குப் பின்) வெளியேறிக் கொள்ளலாம். இதைத்தான் 'வெளியேற்றிவிடலாம் ஓராண்டுக்காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்றவற்றைச்) செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது'' என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 02:240) குறிப்பிடுகிறது. ஆக, (நான்கு மாதம் பத்து நாள்கள் எனும்) 'இத்தா' கால வரம்பு கணவனை இழந்த கைம் பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும். 65

(எனவே, 02:234 வது வசனம் 02:240 வது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித்(ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீ நஜீஹ்(ரஹ்) கூறினார்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்

இந்த வசனம் (திருக்குர்ஆன் 02:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் 'இத்தா' இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருப்பாள். இதையே '(தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக்காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக'' எனும் இந்த இறைவசனத் தொடர் குறிக்கிறது.

(இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுப்படுத்தும் விதத்தில்) அதாஉ(ரஹ்) கூறினார் அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் 'இத்தா' இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க் கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறினான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ(ரஹ்) கூறினார்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12 வது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் சாசனம் செய்து தரவேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தன் விரும்பிய இடத்தில் 'இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது. (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை. 66

இதையே முஜாஹித்(ரஹ்) கூறினார்கள் என்றும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இப்னு அபீ நஜீஹ்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அதாஉ(ரஹ்) வழியாக முஜாஹித்(ரஹ்) அறிவித்த மேற்சொன்ன கருத்தைப் போன்றே அதாஉ அவர்கள் வழியாக இப்னு அபீ நஜீஹ்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

4532. முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார்

அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் ஹாரிஸ்(ரலி) தொடர்பான அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன். 67 அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்), 'அப்துல்லாஹ் இப்னு உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்கள்) இதை ஏற்றுக் கொண்டதில்லையே'' என்று கூறினார்.

உடனே நான் உரத்த குரலில், 'கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் இப்னு உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன் தான்'' என்று சொன்னேன். 68 பிறகு நான் (அந்த அவையிலிருந்து வெறியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) 'மாலிக் இப்னு ஆமிர்' அல்லது 'மாலிக் இப்னு அவ்ஃப்'(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், 'தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னை விட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர், 'இப்னு மஸ்வூத்(ரலி), '(கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். (இந்நிலையில் தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம் பெற்றுள்ள 'அல்பகரா' எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு ('அத்தலாக்' எனும்) சிறிய அத்தியாயம் இறங்கிற்று'' என்று கூறினார்கள். 69

மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்), '(வழியில்) நான் அபூ அதிய்யா மாலிக் இப்னு ஆமிர் அவர்களைச் சந்தித்தேன்'' என்று (சந்தேகமின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறினார்கள் என வந்துள்ளது.

பகுதி 42

(நம்பிக்கையாளர்களே!) அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள் (எனும் 02:238 வது வசனத் தொடர்.)

4533. அலீ(ரலி) அறிவித்தார்

அகழ்ப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், 'நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் 'வீடுகளையும்' அல்லது அவர்களின் 'வயிறுகளையும்' நெருப்பால் நிரப்புவானாக' என்று கூறினார்கள். 70

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்களே சந்தேகத்துடன் (''அல்லது அவர்களின் வயிறுகளையும்'' என்று) கூறினார்கள் 71

பகுதி 43

மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள் (எனும் 02:238 வது வசனத் தொடர்).

(இதன் மூலத்திலுள்ள) 'கானித்தீன்' எனும் சொல்லுக்குக் 'கீழ்படிந்தவர்களாக' என்று பொருள்

4534. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். 'அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகயையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:238 வது) வசனம் அருளப்படும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசி வந்தோம்). இந்த வசனம் அருளப்பட்டவுடன் பேசாமலிருக்கும் படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது. 72

பகுதி 44

நீங்கள் (சூழ்நிலை குறித்து) அச்சம் கொண்டால் நடந்தவர்களாகவோ, வாகனத்தில் இருந்தவர்களாகவோ (தொழுங்கள்). அச்சம் அகன்றுவிடின், அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் அறியாதவற்றைக் கற்றுக்கொடுத்த பிரகாரம் அவனை(த் தொழுது) நினைவு கூருங்கள் (எனும் 02:239 வது இறைவசனம்.)

இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார். 73

(திருக்குர்ஆன் 02:255 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'குர்சிய்யுஹு' (அவனுடைய அரசாட்சி)  எனும் சொல்லுக்கு அவனுடைய அறிவு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02: 247 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'பஸ்தத்தன்' (அதிகம்) எனும் சொல்லுக்கு 'கூடுதல்' 'சிறப்பு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:250 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அஃப்ரிஃக்' (பொழிவாயாக!) எனும் சொல்லுக்கு 'இறக்கியருள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:255 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'வலா யஊதுஹு' (அவனுக்குச் சுமையாகாது) எனும் சொற்றொடருக்கு '(வானங்கள் பூமியைப் பாதுகாப்பது) அவனுக்குப் பளுவானதல்ல' என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல் இடம் பெற்றுள்ள) 'அதனீ' என்பதற்கு 'எனக்குப் பளுவாகிவிட்டது' என்று பொருள். 'அது' என்பதற்கும் 'அய்த்' என்பதற்கும் 'பலம்' என்று பொருள்.

(அதே வசனத்தில் இடம் பெற்றுள்ள) 'சினா' எனும் சொல்லுக்குச் 'சிற்றுறக்கம்' என்று பொருள்.)

(திருக்குர்ஆன் 02:259 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'யதசன்னஹ்' (கெட்டுப் போனது) எனும் சொல்லுக்கு '(இயல்பு) மாறிவிட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:258 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஃப புஹித்த' (வாயடைத்துப் போனான்) என்பதற்கு 'அவனுடைய ஆதாரம் போய்விட்டது' என்று பொருள். (திருக்குர்ஆன் 02: 259 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'காவியான' (விழுந்து கிடந்தது) எனும் சொல்லுக்கு, 'மக்கள் சஞ்சாரமற்ற' என்று பொருள். 'உரூஷிஹா' (முகடுகள்) என்பதற்கு 'அதன் கட்டடங்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02:259 வது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம் பெற்றுள்ள) 'நுனஷிருஹா' எனும் சொல்லுக்கு 'அதை வெளிப்படுத்துகிறோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 02: 266 வது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) 'இஃஸார்' (சூறாவளி) எனும் சொல்லுக்குத் 'தூணைப் போன்று பூமியிலிருந்து வானத்தை நோக்கி வீசுகிற நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 02:264 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸல்த்' (வெறும் பாறை) எனும் சொல்லுக்கு 'மேலே எதுவும் இல்லாத (எதுவும் வளராத வழுக்குப்பாறை)' என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 02:265 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வாபில்' என்பது பெருமழையும் 'அத்தல்லு' என்பது தூறலும் ஆகும். இது இறை நம்பிக்கையாளரின் செயலுக்கு உவமையாகும்.

(திருக்குர்ஆன் 02:259 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'யதசன்னஹ்' (கெட்டுப் போனது) என்பதற்கு '(இயல்பு) மாறிவிட்டது' என்று பொருள்.

4535. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:

(முதலில்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே (பாதுகாப்பு அரணாக) இருப்பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்துவிட்டால், சலாம் கொடுக்காமலேயே இது வரை தொழாதவர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இதுவரை தொழாதவர்கள், முன் சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுதுகொள்வர்.

பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரண்டு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக, இரண்டு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.

இதன் அறிவிப்பாளரான மாலிக்(ரஹ்) கூறினார்:

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக கருதுகிறேன் என்று நாஃபிஉ(ரஹ்) கூறினார்கள். 74

பகுதி 45

உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக! (எனும் 02:240) வது வசனத் தொடர்).

4536. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்

நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக!'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:240 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (திருக்குர்ஆன் 02:234 வது) இறை வசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' என்று கேட்டேன்.

உஸ்மான்(ரலி), இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவிடு! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்'' என்று பதிலளித்தார்கள். 75

பகுதி 46

இப்ராஹீம் (இறைவனை நோக்கி,) 'இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டு!' எனக் கூறியபோது, அவன், 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டான். (அதற்கு) 'ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கு இறைவன்) 'நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உங்களிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தை, ஒவ்வொரு மலையின் மீது வைத்துவிட்டு அவற்றை நீங்கள் அழையுங்கள்! அவை உங்களிடம் விரைந்து வந்து சேரும். நிச்சயமாக அல்லாஹ், வல்லோனும் நுண்ணறிவு உள்ளோனுமாக இருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்'' என்றான் (எனும் (திருக்குர்ஆன் 02:260 வது இறைவசனம்).

(இவ்வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஸுர்ஹுன்ன' ('அவற்றை உங்களிடம் வைத்து') எனும் சொல்லுக்கு 'அவற்றைப் பல துண்டுகளாக்கி' என்று பொருள்.

4537. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(இறந்தவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டிகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களை விடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், 'என் இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டு'' என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டான். அதற்கு அவர்கள், 'ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்'' என்று பதிலளித்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 76

பகுதி 47

''நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிற திராட்சை மற்றும் பேரீச்சந்தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகையான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடைகிறது. வலுவில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலையில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்து போவதை உங்களில் எவரேனும் விரும்புவாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்கு தெளிவுபடுத்துகிறான்'' எனும் (திருக்குர்ஆன் 02:266 வது) இறைவசனம்.

4538. (அப்துல் அஸீஸ் இப்னு அப்தில் மலிக் இப்னி ஜுரைஜ்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்), இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களின் சகோதரர் அபூ பக்ர் இப்னு அபீ முலைக்கா அவர்கள், உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித்தார்கள்:

உமர்(ரலி) ஒரு நாள் நபித்தோழர்களிடம், 'நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிற திராட்சை மற்றும் பேரீச்சைத் தோட்டம் ஒருவருக்கு இருந்து...'' (என்று தொடங்கும்) இந்த (திருக்குர்ஆன் 02:266 வது) வசனம் எது தொடர்பாக இறங்கிற்று என நீங்கள் கருதுகிறீர்கள்?' என்று கேட்க, அவர்கள், 'அல்லாஹ்வே அறிந்தவன்'' என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி) கோபமடைந்து, 'எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டிலொன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள்'' என்று கேட்க, இப்னு அப்பாஸ்(ரலி), 'அதைப் பற்றி என் உள்ளத்தில் ஞானம் உள்ளது. இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்பமாகக் கருதிக்கொள்ளாதீர்கள்'' என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), 'இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'என்ன செயல்?' என்று கேட்க, இப்னு அப்பாஸ், 'ஒரு செயலுக்கு'' என்று (மீண்டும்) கூறினார்கள். உமர்(ரலி), 'செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்து வந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்துவிட்டது; (அதைத்தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்)'' என்று கூறினார்கள். 77

பகுதி 48

(பொருளீட்ட முடியாதவாறு) இறைவழியில் தடுத்துவைக்கப்பட்ட ஏழைகளுக்கே, (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் நடமாட இயலாதவர்கள். அவர்கள் இரவாததால், அறியாதோர் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமைத்) தோற்றத்தைக் கொண்டு அவர்களை நீர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள் (எனும் 02:273 வது வசனத்தொடர்).

''(தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான்'' என்று சொல்வதற்கு 'அல்ஹஃப அலய்ய' என்று (அரபுகள்) கூறுவர். இச்சொல்லின் வேர்ச் சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் 'இல்ஹாஃப்' (வற்புறுத்தல்) என இடம் பெற்றுள்ளது.

4539. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், 'அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்'' எனும் (இந்த 02:273 வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 49

வட்டியை (வாங்கி) விழுங்குகிறவர்கள் ஷைத்தானின் தீண்டலால் பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழமாட்டர். இது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் 'வணிகம் என்பதே வட்டியைப் போன்றதுதானே'' எனக் கூறியதனாலேயாகி. அல்லாஹ் வணிகத்தை அனுமதித்தும் வட்டியை விலக்கியும் இருக்கிறான் (எனும் 02:275 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அல்மஸ்ஸு' (தீண்டல்) எனும் சொல்லுக்குப் 'பைத்தியம்' என்று பொருள்.

4540. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அல்பகரா அத்தியாயத்தின் இறுதிவசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 - 281) வட்டி தொடர்பாக இறங்கியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி வாசலில் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள். 78

பகுதி 50

அல்லாஹ் வட்டிக்கு அழிவையும் தான தர்மங்களுக்கு வளர்ச்சியையும் அளிக்கிறான் (எனும் 02:276 வது வசனத் தொடர்).

(அதாவது) வட்டியைப் பயனற்றுப் போகச் செய்துவிடுகிறான்.

4541. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02: 275 - 281) அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாசலில் (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மதுவியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.

பகுதி 51

''(வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் நீங்கள் போரிடுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும் 02:279 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஃபஃதனூ' எனும் சொல்லுக்கு 'அறிந்து கொள்ளுங்கள்' என்று பொருள். 79

4542. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 - 281) அருளப்பெற்றபோது அவற்றை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

பகுதி 52

(உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி நெருக்கடி உள்ளவராக இருந்தால், வசதி வருகிறவரை எதிர்பார்(த்து பொறுத்திரு)த்தல் வேண்டும். நீங்கள் (தர்மத்தின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின், தர்மமாக வழங்கிவிடுவதே மிகவும் மேலானதாகும் (எனும் 02:280 வது இறைவசனம்),

4543. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 - 281) அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடைசெய்தார்கள். 80

பகுதி 53

ஒருநாளைப் பற்றி அஞ்சுங்கள். அந்நாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்தவற்றுக்கு நிறைவாக(ப் பிரதிபலன்) அளிக்கப்படுவான். இன்னும் அவர்கள் (எந்த வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (எனும் 02:281 வது இறைவசனம்).

4544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 02:281 வது) வசனம் ஆகும். 81

பகுதி 54

உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (எனும் 02:284 வது வசனத்தொடர்.)

4545. மர்வான் அல் அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர்(ரலி) தாம் - 'உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் ஆற்றல்மிக்கவன் ஆவான்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். 82

பகுதி 55

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றனர். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்.) (இவர்கள்) யாவரும், அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்றுச் சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். 'எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம்; வழிப்பட்டோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது'' என்றும் வேண்டுகிறார்கள் (எனும் 02:285 வது இறைவசனம்).

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 02:286 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'இஸ்ரன்' (பளு, சுமை) எனும் சொல்லுக்குப் 'பொறுப்பு' என்று பொருள்.

4546. மர்வான் அல்அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர்(ரலி)தாம் என்று எண்ணுகிறேன் - 'உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான்.'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை இதற்குப் பின்னுள்ள (''அல்லாஹ், எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பொறுப்புகளைச் சுமத்துவதில்லை'' எனும் 02:286 வது) இறைவசனம் மாற்றிவிட்டது'' என்று கூறினார்கள். 83

(3) 'ஆலுஇம்ரான்' அத்தியாயம் 1

(திருக்குர்ஆன் 03:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துக்காத்தன்' எனும் (வேர்ச்) சொல்லும் (மற்றொரு வேர்ச்சொல்லான) 'தகிய்யத்தன்' எனும் சொல்லும் ('தற்காத்துக் கொள்ளல்' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 03:117 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸிர்ருன்' எனும் சொல்லுக்குக் 'கடுங்குளிர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 03: 103 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷஃபா ஹுஃப்ரத்' (நெருப்புக் கிடங்கின் விளிம்பு) எனும் சொற்றொடர் 'ஷஃபா அர்ரக்கியத்' (கிணற்றின் விளிம்பு) போன்றதாகும். 'ஷஃபா' என்பதற்கு 'விளிம்பு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 03:121 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துபவ்விஉ(ல் முஃமினீன மகாஇத லில்கிதால்)' (நம்பிக்கையாளர்களை உரிய இடங்களில் நிறுத்தும் பொருட்டு) என்பதற்கு 'நீங்கள் களம் அமைக்கும் பொருட்டு' என்று பொருள். (திருக்குர்ஆன் 03:125 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்முஸவ்விம்' (அல்லது 'அல்முஸவ்வம்) எனும் சொல்லுக்கு ஒரு தோற்றக் குறியால், அல்லது கம்பளியால், அல்லது அதிலுள்ள ஏதேனும் ஒன்றால் அடையாளம் உள்ளது என்று பொருள்.

(திருக்குர்ஆன் 03:146 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரிப்பிய்யூன்' (இறைபக்தர்கள்) எனும் சொல் பன்மையாகும். அதன் ஒருமை 'ரிப்பிய்யுன்' என்பதாகும்.

(திருக்குர்ஆன் 03:152 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஃத் தஹுஸ்ஸுனஹும்' எனும் சொற்றொடருக்கு 'நீங்கள் அவர்களை (பகைவர்களை) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தபோது...'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 03:156 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகுஸ்ஸு' (போர் புரிபவர்கள்) என்பதன் ஒருமை 'ஃகாஸ்' என்பதாகும்.

(திருக்குர்ஆன் 03:181 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஸ நக்த்துபு' (நாம் பதிவு செய்வோம்) எனும் சொல்லுக்கு 'நாம் பாதுகாப்போம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 03:198 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நுஸுல்' எனும் சொல்லுக்கு 'நற்பலன்' என்று பொருள். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த 'விருந்து உபசரிப்பு' என்றும் பொருள் கொள்ளலாம். இது 'அனஸல்த்துஹு' (அவனை நான் உபசரித்தேன்) என்பதைப் போன்றதாகும்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 03:125 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'முஸவ்விமீன்' எனும் சொல் போன்ற) 'அல்கைலுல் முஸவ்வமா' என்பதற்கு 'நிறையழகுக் குதிரைகள்' என்று பொருள்.

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 03:39 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹஸூர் (பற்றற்றவர்) எனும் சொல்லுக்குப் 'பெண்களிடம் செல்லாதவர்' என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 03:125 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மின் ஃபவ்ரிஹிம்' (இதே நேரத்தில் - திடீர்த் தாக்குதல் தொடுக்க - உங்களிடம் அவர்கள் வந்தாலும்) எனும் சொல்லுக்கு, 'பத்ர் நாளில் அவர்கள் கோபத்துடன் உங்களிடம் வந்தாலும்' என்று பொருள்.

('உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் நீ வெளியாக்குகிறாய்' எனும் 3:27 வது வசனத்தின் விளக்கவுரையில்) முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்), 'இறைவன் (உயிரற்றதிலிருந்து) உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். விந்து உயிரற்றதாக (உடலிலிருந்து வெளியேறுகிறது; ஆனால், அதிலிருந்து உயிரினம் வெளிப்படுகிறது'' என்று கூறினார்கள். 2

(திருக்குர்ஆன் 03:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்இப்கார்' எனும் சொல்லுக்கு 'அதிகாலை' என்று பொருள். 'அல் அஷிய்யு' என்பதற்குச் சூரியன் மறையப் போகும் நேரம்' என்று பொருள்.

பகுதி 1

இ(ந்தவேதத்)தில் தெளிவான கருத்துள்ள வசனங்களும் இருக்கின்றன (எனும் 37 வது வசனத் தொடர்).

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்.

(தெளிவான கருத்துள்ள வசனங்கள் என்பது) 'அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப்பட்டவை பற்றிக் குறிப்பிடும் வசனங்கள் ஆகும்.

(திருக்குர்ஆன் 03:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ உகரு முதாஷாபிஹாத்'' (ஒன்றையொன்று ஒத்த வேறுவசனங்களும் உள்ளன) எனும் தொடருக்கு 'ஒன்றினையொன்று உறுதிப்படுத்துகிற வசனங்கள்'' என்று பொருள்.

எடுத்துக்காட்டாக, 'இன்னும் துன்மார்க்கர்களைத் தவிர (எவரையும்) அவன் வழி தவறச் செய்வதில்லை'' என்று (ஒரு வசனத்தில் 02:26) அல்லாஹ் கூறினான். (மற்றொரு வசனத்தில் 10-100) 'சிந்தித்துணராதவர்கள் மீதே அவன் பாவச் சுமையை வைக்கிறான்'' என்று அல்லாஹ் கூறினான். (இன்னுமொரு வசனத்தில் 47-17) 'நேர்வழி பெற்றிருக்கிறவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியை இன்னும் அதிகமாக அளிக்கிறான்'' என்று அல்லாஹ் கூறினான். (இவ்வசனங்களில் ஒன்று மற்றொன்றின் கருத்தை வலியுறுத்துகின்றன.)3

(திருக்குர்ஆன் 03:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸைஃக்' (கோணல்) எனும் சொல்லுக்குச் 'சந்தேகம்' என்று பொருள்.

(இதே வசனத்திலுள்ள) 'இப்திஃகா அல்ஃபித்னத்' எனும் சொல்லுக்குக் 'குழப்பம் செய்ய விரும்புதல்' என்று பொருள்.

(இதே வசனத்திலுள்ள) 'அர்ராஸிகூன ஃபில் இல்மி' எனும் தொடரின் பொருளாவது: அறிவில் முதிர்ந்தவர்களும் அவற்றின் விளக்கத்தை அறிவார்கள். 'இவற்றை நாங்கள் நம்பினோம்' என்றும் கூறுவார்கள். 4

4547. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் 'கோணல்' உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ 'இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, 'முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' என்று கூறினார்கள். 5

பகுதி 2

இன்னும் நான் இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன் (என இறைவனை வேண்டினார் இம்ரானின் துணைவியார் எனும் 3:36 வது வசனத் தொடர்). 6

4548 ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்

''(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவரின் புதல்வரையும் தவிர!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். பிறகு அபூ ஹுரைரா(ரலி), 'நீங்கள் விரும்பினால், 'இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)'' எனும் (திருக்குர்ஆன் 03:36 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். 7

பகுதி 3

அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு (எனும் 3:77 வது இறைவசனம்).

(இவ்வசனத்தில் 'ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்த 'துன்பம் தரும்' என்ற பொருளைக் குறிக்கும்) 'அலீம்' எனும் சொல்லுக்கு 'முஃப்இல்' வாய்பாட்டில் அமைந்த 'முலீம்' என்பதன் பொருளாகும். (அதாவது) 'துன்புறுத்துகின்ற' (என்று பொருள்.)

4549 / 4550 அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்

''ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண (வாக்கு மூல)த்தின்போது துணிவுடன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அல்லாஹ், அவர்களிடம் பேசவுமாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான்'' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்பால், அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (எங்களிடம்) வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) அவர்கள் கூறினார்கள். அப்பால், அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (எங்களிடம்) வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்கிறார்?' என்று கேட்க, நாங்கள் 'இப்படி இப்படிக் கூறினார்கள்'' என்று பதிலளித்தோம்.

(அதற்கு) அஷ்அஸ் இப்னு கைம்(ரலி) கூறினார்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத்தான் அந்த (திருக்குர்ஆன் 03:77 வது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் என்னுடைய கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம்.) நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய (இரு) சாட்சி(கள்); அல்லது (பிரதிவாதியான) அவரின் சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.)'' என்று கூறினார்கள்.

உடனே நான், 'அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஒரு பிரமாண(வாக்குமூல)த்தின்போது அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாகப்) பறித்துக்கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்'' என்று கூறினார்கள். 8

4551. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம்) தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனம் அருளப்பட்டது. 9

4552. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்

இரண்டு பெண்கள் 'ஒரு வீட்டில்' அல்லது 'ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும்' என்று கூறினார்கள்' எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள், 'பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும்' என்று கூறினார்கள்'' எனக் கூறினார்கள்.

பகுதி 4

(நபியே!) கூறுக: வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியிலுள்ள பொதுவான விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது.' இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் 'நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகிறவர்கள்) முஸ்லிம்கள் தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள் (எனும் 3:64 வது இறைவசனம்).

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'சவாஇன்' (பொதுவான) எனும் சொல்லுக்கு 'நடுநிலையான' என்று பொருள்.

4553. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது:

(குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து 'திஹ்யா அல் கல்பீ' அவர்கள் கொண்டு வந்து, 'புஸ்ரா'வின் ஒருவரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.

அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) 'தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கிறார்களா?' என்று கேட்டதற்குவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். எனவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?' என்று கேட்டதற்கு நான், 'நான் (தான் நெருங்கிய உறவினன்)'' என்று சொன்னேன். எனவே, அவரின் முன்னிலையில் என்னை அமர்த்தினர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினர். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்'' என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்துவிடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன். பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், 'உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள்'' என்று கூறினார். நான், 'அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவராவார்'' என்று பதிலளித்தேன்.

ஹெராக்ளியஸ் 'அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கிறாரா?' என்று கேட்டார். நான் 'இல்லை'' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் கூறினார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன். 'அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; பலவீனமானவர்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்'' என்றேன். அவர், 'அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?' என்று கேட்டார்.

நான் 'இல்லை; அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்'' என்று சொன்னேன். அவர், 'அவரின் மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன்.

அவர், 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'உண்டு'' என்று சொன்னேன். அவர், 'அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?' என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்'' என்று சொன்னேன்.

அவர், 'அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது'' என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

(பிறகு) அவர், 'இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை 'நபி' என) வாதித்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன்.

பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: 'அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவரின் குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பாரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பாரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். நான் உம்மிடம் அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை' என்றீர். அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், 'தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒருவர் இவர்' என்று கூறியிருப்பேன்.

''மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?' என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை'' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணியாத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் 'அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு 'இல்லை' என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்துவிடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் 'அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா?' என்று கேட்டேன், நீர் 'அதிகரித்தே வருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்). மேலும், உம்மிடம் நான் 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள் தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். 'அவர் வாக்கு மீறுகிறாரா?' என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், 'அவர் வாக்கு மீறுவதில்லை' என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை.

நான் 'இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?' என்று உம்மிடம் கேட்டபோது நீர் 'இல்லை' என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், 'தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கிற ஒருவர் இவர்' என நான் சொல்லியிருப்பேன்'' என்று கூறினார்.

பிறகு ஹெராக்ளியஸ், 'என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்து வரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்'' என்று சொன்னேன்.

ஹெராக்ளியஸ், 'அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர் தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரின் ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரண்டு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்'' என்று கூறினார்.

பிறகு ஹெராக்ளியஸ் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அளவிலா அருளும் நிகரிலா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது இறைத்தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்பட்ட நிருபம்:)

நேர்வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரண்டு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்களான) விவசாயிகளின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சாரும். 'வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் நான் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், 'நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகிறவர்கள்) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள்.

ஹெராக்ளியஸ் அந்த நிருபத்தைப் படித்து முடித்தபோது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே, நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.

நாங்கள் வெளியே வந்தபோது, நான் என் சகாக்களிடம் 'இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (-ரோமரின்-) மன்னரே அவருக்கு அஞ்சுகிறாரே!'' என்று சொன்னேன். (அன்று முதல்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதிகொண்டவனாகவே இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.

ஸுஹ்ரி(ரஹ்) (தம் அறிவிப்பில்) கூறியிருப்பதாவது: 'பிறகு ஹெராக்ளியஸ் ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களுக்கு அழைப்புவிடுத்து, அவர்களை தம் மாளிகை ஒன்றில் ஒன்றுகூட்டி அவர்களிடையே 'அந்திமக் காலத்தில் உங்களுக்கு வெற்றியும் நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்களின் ஆட்சி உங்களிடமே நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? (அப்படியானால் இந்த இறுதித் தூதரை நம்புங்கள்)'' என்று பேசினார். இதைக் கேட்டவுடனேயே போன்று வாசல்களை நோக்கி அவர்கள் வெருண்டோடி, வாசல் அருகில் சென்றதும், அவை தாளிடப்பட்டிருக்கக் கண்டனர். அப்போது மன்னர் ஹெராக்ளியஸ் 'அவர்களை என்னிடம் திருப்பிக்கொண்டு வாருங்கள்'' என அவர்களுக்கு அழைப்புவிடுத்தார். (அவ்வாறே அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம்) 'நீங்கள் உங்கள் மதத்தின் மீது எவ்வளவு பிடிப்புக் கொண்டுள்ளீர்கள் என்பதை நான் சோதிக்கவே இவ்வாறு செய்தேன். நான் விரும்பியதை இப்போது ஐயமற அறிந்து கொண்டேன்'' என்று அவர் கூறியதும், அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தனர். அவரைக் குறித்துத் திருப்தியும் அடைந்தனர். 10

பகுதி 5

நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள். மேலும், நீங்கள் எப்பொருளை தானம் செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிகிறவனாக இருக்கிறான் (எனும் 3:92 வது இறைவசனம்).

4554. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த 'பீருஹா' (அல்லது 'பைருஹா') எனும் தோட்டம் தம் சொத்துக்களிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள நல்ல(சுவையான) நீரைப் பருகும் வழக்கமுடையவராய் இருந்தார்கள்.

''நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 03:92 வது) இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! 'நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்'' என அல்லாஹ் கூறினான். என் சொத்துகளில் எனக்கு மிகவும் விருப்பமானது 'பீருஹா' (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நல்லது. அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அதைத் தர்மம் செய்து, மறுமைக்குச் சேமிப்பாக்கிக் கொள்வது நல்லதுதான்.)'' என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட்டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன்'' என்றார்கள்.

அபூ தல்ஹா(ரலி), 'அவ்வாறே செய்கிறேன் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ('அது அழிந்துபோய்விடும் செல்வம்தானே!' என்பதற்கு பதிலாக) 'அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே' என்று (நபிகளார் கூறினார்கள் என) இடம் பெற்றுள்ளது. 11

யஹ்யா இப்னு யஹ்யா(ரஹ்) கூறினார்:

நான் மாலிக்(ரஹ்) அவர்களிடம் 'அது (அழிந்து) போய்விடும் செல்வம்தானே' என்று வாசித்துக் காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.)

4555. அனஸ்(ரலி) அறிவித்தார்

எனவே, அந்த (பைருஹா)த் தோட்டத்தை ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களுக்கும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களுக்கும் (அபூ தல்ஹா(ரலி) தர்மமாக) வழங்கிவிட்டார்கள். ஆனால், நானே (அவ்விருவரையும் விட) அவருக்கு நெருங்கிய உறவினராய் இருந்தேன். அதிலிருந்து எனக்கு அவர் சிறிதும் கொடுக்கவில்லை. 12

பகுதி 6

(நபியே!) கூறுக: (யூதர்களாகிய) நீங்கள் உண்மையாளர்களாயின் 'தவ்ராத்'தைக் கொண்டுவந்து ஓதிக்காட்டுங்கள் (எனும் 3:93 வது வசனத் தொடர்).

4556. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், '(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) 'ரஜ்கி' (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?' என்று கேட்க, யூதர்கள், '(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை'' என்று பதிலளித்தனர். உடனே, (யூதமார்க்க அறிஞராயிருந்) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், 'பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்'' என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்கி' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, 'இது என்ன?' என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, 'இது ரஜ்முடைய வசனம்'' என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.

அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவளின் மீது கவிழ்ந்து கொள்வதை பார்த்தேன். 13

பகுதி 7

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப்பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர் (எனும் 3:110 வது வசனத் தொடர்.)

4557. அபூ ஹாஸிம் சுலைமான் அல்அஷ்ஜஈ(ரஹ்) அறிவித்தார்

''(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப்ப பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர்'' எனும் (திருக்குர்ஆன் 03:110 வது வசனத்திற்கு விளக்கமளிக்கையில் 'நீங்கள் மக்களில் சிலரை (போர்க் கைதிகளாகச் சிறைபிடித்து) அவர்களின் கழுத்தைச் சங்கிலிகளில் பிணைத்துக் கொண்டுவருகிறீர்கள். (இந்நிலையிலும் மனம் திருந்தி) முடிவாக அவர்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர். (இவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும் நீங்களே) மக்களிலேயே சிறந்தவர்களாவீர்கள்'' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 14

பகுதி 8

உங்களில் இரண்டு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூருக!) இறை நம்பிக்கையாளர்கள் (எந்நேரமும்) அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (எனும் 3:122 வது இறைவசனம்.)

4558. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

''உங்களில் இரண்டு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூருக!)'' எனும் (திருக்குர்ஆன் 03:122 வது) இறைவசனம் (அன்சாரிகளாகிய) எங்கள் விஷயத்திலேயே இறங்கியது. பனூ ஹாரிஸா மற்றும் பனூசலிமா குலத்தாரான நாங்கள்தாம் அந்த இருபிரிவினர். இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், 'அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான்'' என்று (அதில்) அல்லாஹ் கூறியிருக்கிறான்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) மற்றொரு முறை அறிவிக்கும்போது, 'இது இறங்காமலிருந்திருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராது'' என்று கூறினார்கள். 15

பகுதி 9

அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (எனும் 3:128 வது இறைவசனம்.)

4559. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(உஹுத் போரில் பலத்த காயமுற்ற பின்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தும்போது, 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹகித்' (அல்லாஹ், தன்னைப் புகழ்வோரின் புகழுரையைச் செவிமடுக்கிறான்; எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.) என்று சொன்ன பின்பு, 'இறைவா! இன்னார், இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!'' என்று (சில எதிரிகளுக்கெதிராகப்) பிரார்த்திப்பதை கேட்டிருக்கிறேன். அப்போது அல்லாஹ், 'அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளினான். 16

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4560. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு 'குனூத்' (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை 'சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹகித்' என்று சொன்ன பின்பு, 'இறைவா! வலீத் இப்னு வலீத், ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! 17 இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக!'' என்று பிரார்த்திப்பார்கள். 18 அதை சப்தமாகச் சொல்வார்கள். தம் ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், 'இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக'' என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் 'அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள். 19

பகுதி 10

''இறைத்தூதர் உங்கள் பின்னாலிருந்து உங்களை அழைத்துக்கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்). இதனால் (அல்லாஹ்) உங்களுக்கு துக்கத்திற்கு மேல் துக்கத்தைக் கொடுத்தான்'' எனும் (திருக்குர்ஆன் 03:153 வது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'உக்ராக்கும்' (உங்கள் பின்னால்) எனும் சொல், 'ஆகிரிக்கும்' எனும் சொல்லின் பெண்பாலாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(உஹுதுப் போர் குறித்துப் பேசும் 9: 52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஹ்தல் ஹுஸ்னயைன்' (இவ்விரு நன்மைகளில் ஒன்றை) எனும் சொற்றொடர் 'வெற்றி அல்லது வீர மரணத்தைக்' குறிக்கிறது.

4561. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு(த் தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத்தான் 'இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்)'' எனும் இந்த (திருக்குர்ஆன் 03:153 வது) இறைவசனம் குறிப்பிடுகிறது. அப்போது நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை. 20

பகுதி 11

''பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன) அமைதி தருகிற சிற்றுறக்கத்தை அவன் உங்களுக்கு அருளினான்'' எனும் (திருக்குர்ஆன் 03:154 வது) வசனத் தொடர்.

4562. அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்

உஹுதுப் போர் நாளில் எங்கள் அணிகள் (நின்றிருந்த) இடத்தில் நாங்கள் இருந்தபோது எங்களைச் சிற்றுறக்கம் ஆட்கொண்டது. அதனால் என்னுடைய வாள் என் கையிலிருந்து (நழுவி) விழத் தொடங்க, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, நானும் அதை எடுப்பேன். 21

பகுதி 12

''அவர்கள் (எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப் படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 03:172 வது இறைவசனம். 22

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அல்கர்ஹ்' எனும் சொல்லுக்குப் 'படுகாயம்' என்று பொருள். 'இஸ்தஜாபூ' ('இணங்கினர்') எனும் சொல்லுக்கு 'பதிலளித்தார்கள்'' என்று பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) 'யஸ்தஜீபு' என்பதற்கு, 'பதிலளிப்பார்' என்று பொருள்.

பகுதி 13

'இவர்களிடம் 'நிச்சயமாக மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் இவர்கள் கூறினார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 03:173 வது) இறைவசனம்.

4563. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது 'அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத்(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்'' என மக்கள் (சிலர்) கூறியபோது கூறினார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் அவர்கள் கூறினார்கள். 23

4564. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது, 'எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' (ஹஸ்பியல்லாஹ் வநிமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது.

பகுதி 14

''அல்லாஹ் தன்னுடைய பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், நீங்கள் செய்கிறவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்' எனும் (திருக்குர்ஆன் 03:180 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'சயு(த்) தவ்வக்கூன்' (அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படும்) எனும் சொற்றொடர் 'தவ்வக்துஹு பிதவ்கின்' (நான் அவனுக்கு மாலையிட்டேன்) எனும் வாக்கியத்திற்கு நிகரானதாகும்.

4565. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரின் செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாகக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரண்டு கறுப்புப் புள்ளிகள் இருக்கும் மறுமை நாளில் அது (அவரின் கழுத்தில்) மாலையாக) சுற்றப்படும். அந்தப் பாம்பு அவரின் முகவாய்க் கட்டையை அதாவது அவரின் இரண்டு தாடைகளைப் பிடித்துக்கொண்டு, 'நானே உன்னுடைய செல்வம்; நான்தான் உன்னுடைய கருவூலம்' என்று சொல்லும்' எனக் கூறிவிட்டு, பிறகு, 'அல்லாஹ் தன்னுடைய பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கிறார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிடவேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், நீங்கள் செய்கிறவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 03:180 வது) இறைவசனத்தை ஓதினார்கள். 24

பகுதி 15

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும் (எனும் 3:186 வது) வசனத் தொடர்.)

4566. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் இப்னு அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள் - இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. - அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது. - அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் இப்னு உபை தன்னுடைய மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, 'எங்களின் மீது புழுதி கிளப்பாதீர்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.

இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் (நபி(ஸல்) அவர்களிடம்) 'மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்'' என்றார். இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி), 'ஆம்! இறைத்தூதர் அவர்களே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்'' என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறி ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் 'சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் இப்னு உபை - சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்'' என்றார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவரை மன்னித்துவிட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்துவிட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கீரிடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்தால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்'' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.

அல்லாஹ் கூறினான்:

(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன்வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிபந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமைகாத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (திருக்குர்ஆன் 03:186)

மேலும் அல்லாஹ் கூறினான்:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேதாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். திண்ணமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (திருக்குர்ஆன் 02:109)

அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி(ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்ருப்போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் '(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. எனவே, இந்த (இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்'' என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை எற்றனர்.

பகுதி 16

தாம் செய்து (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு (எனும் 3:188 வது இறைவசனம்).

4567. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புனிதப் போருக்குச் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் 'தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 03:188 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

4568. அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) அறிவித்தார்

(மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம்25 தம் காவலரிடம் 'ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று, 'தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட்ட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்'' என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) 'உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி(ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக்கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்'' என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் 'நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188) 26

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 17

''நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு -பகல் மாறி, மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன'' எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) இறைவசனம்.

4569. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கியிருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கிவிட்டார்கள். இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு 'நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு - பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன'' எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) உளூ (அங்க சுத்தி) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு பிலால்(ரலி) பாங்கு சொன்னபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுடன்) 'சுப்ஹு' தொழுதார்கள். 27

பகுதி 18

அவர்கள் நின்றவர்களாகவும், அமர்ந்தவர்களாகவும், ஒருக்களித்துப்படுத்தவர்களாகவும் அல்லாஹ்வை நினைக்கிறார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக் குறித்துச் சிந்திக்கிறார்கள். (சிந்தித்துவிட்டு இவ்வாறு பிரார்த்திக்கிறார்கள்:) எங்கள் இரட்சகனே! இதை(யெல்லாம்) நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே, நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக! (எனும் 3:191 வது இறைவசனம்.

4570. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) வீட்டில் இரவு தங்கினேன். அப்போது நான் 'நிச்சயம் (இன்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகையை பார்ப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தலையணையொன்று போடப்பட்டது. அவர்கள் அதன் நீள வாட்டில் (தலை வைத்து) உறங்கினார்கள். அவர்கள் (விழித்தெழுந்து) தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தைக் துடைக்கலானார்கள். பிறகு (குர்ஆனின் 3 வது அத்தியாயமான) ஆலுஇம்ரானிலிருந்து கடைசிப்பத்து வசனங்களை ஓதி முடித்தார்கள். பிறகு (கட்டித்) தொங்க விடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று, அதை எடுத்து 'உளூ' (அங்கசுத்தி) செய்தார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்ததைப் போன்றே செய்தேன். பிறகு சென்று அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் (வலக்) கரத்தை என் தலை மீது வைத்தார்கள். பிறகு, என் காதைப் பிடித்துத் திருகி (உஷார்படுத்தி)னார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் தொழுதுவிட்டு, பிறகு 'வித்ர்' தொழுதார்கள். 28

பகுதி 19

எங்கள் இரட்சகனே! நீ யாரை நரகத்தில் நுழைய வைக்கிறாயோ, நிச்சயமாக அவனை நீ இழிவுக்குள்ளாக்கிவிட்டாய். மேலும் (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிவோர் எவருமிலர் (எனும் 3:192 வது இறைவசனம்.)

4571. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் என் சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா(ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலைவைத்துப்) படுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் இரண்டு கரங்களால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (திருக்குர்ஆன் 03:190 - 200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து 'உளூ' (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்தது போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக்காதைத் திருகினார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு 'வித்ர்' தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.

பகுதி 20

''எங்கள் இரட்சகனே! உங்களுடைய இறைவனை நம்புங்கள் - என்று இறைநம்பிக்கைக்கு அழைப்புவிடுத்த ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்று, உறுதியாக நம்பிக்கை கொண்டோம். எனவே, எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும் எங்களை விட்டுத் தீமைகளை அகற்றுவாயாக! மேலும் நல்லோருடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக!'' எனும் (திருக்குர்ஆன் 03:193 வது இறைவசனம்.)

4572. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் என் சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா(ரலி) அவர்களிடம் (ஒருநாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு, அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் கரத்தால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு, ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப்பத்து வசனங்களை (திருக்குர்ஆன் 03:190 - 200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே எழுந்து சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து 'உளூ' (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளூவை அவர்கள் செம்மையாகச் செய்துகொண்டு தொழுவதற்காக நின்றார்கள்.

அவர்கள் செய்தது போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக் காதைத் திருகலானார்கள்.

(பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு 'வித்ர்' தொழுதார்கள்.

பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால்(ரலி) பாங்கு சொல்லிவிட்டுத்) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு, வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். 29

4. 'அந்நிஸா' அத்தியாயம் 1

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:172 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'யஸ்தன்கிஃப்' (இழிவாகக் கருதுகிறார். எனும் சொல்லுக்கு '(அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுத்து) அகந்தை கொள்கிறார்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கிவா(யா)ம்' (ஆதாரமான / அடிப்படையான) எனும் சொல்லுக்கு 'உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லஹுன்ன சபீலா' (அவர்களுக்கு ஒரு வழியை எனும் சொற்றொடரில் உள்ள 'சபீல்' (வழி) என்பது, (விபசாரம் செய்த) கன்னி கழிந்த பெண்ணை கல்லெறிந்து கொல்வதையும் கன்னிப்பெண்ணுக்கு (நூறு) கசையடி வழங்குவதையும் குறிக்கிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதவர்கள் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 04:3 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'மஸ்னா, வ ஸுலாஸ, வ ருபாஅ எனும் சொற்களுக்கு இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக என்று பொருள் 'ருபாஉ' (நான்கு நான்காக) என்பதைத் தாண்டி (குமாஸ் - ஐந்து ஐந்தாக, கதாஸ் - ஆறு என்றெல்லாம்) அரபுகள் செ(ா)ல்வதில்லை.

பகுதி1

அநாதை (ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீங்கள் நீதிசெலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்துகொள்ளலாம் (எனும் 4:3 வது வசனத் தொடர்.)

4573. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணந்தார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரின் உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. எனவே, அவர் விஷயத்தில் தான் 'அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம்'' எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பாளர் (ஹிஷாம் இப்னு யூசுஃப், அல்லது ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறுகிறார்:

(இதை அறிவித்தபோது) உர்வா(ரஹ்), 'அந்தப் பேரீச்ச மரத்திலும் அவரின் செல்வத்திலும் அப்பெண் அவருக்குப் பங்காளியாய் இருந்தாள்'' என்று அறிவித்தார் என்று எண்ணுகிறேன். 2

4574. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம்'' எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கிற அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் - மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் - அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.

இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல் அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே, அல்லாஹ், 'பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத்தை அருளினான்.

மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (திருக்குர்ஆன் 04:127) உயர்வுக்குரிய அல்லாஹ் 'மேலும் யாரை நீங்கள் நீங்கள் மணந்துகொள்ள விரும்புவதில்லையோ...'' என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை (மணந்து கொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும்.

அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் 'நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணந்துகொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. 3

பகுதி 2

(அநாதைகளைப் பராமரிப்பவராகிய) அவர் செல்வராக இருந்தால் (பராமரிப்புக்கான சன்மானம் எதையும் பெறாமல்) தவிர்த்து விடட்டும்! அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்! அநாதைகளிடம் அவர்களின் செல்வங்களை நீங்கள் ஒப்படைக்கும்போது அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ் போதுமானவன் (எனும் 4:6 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'பிதாரன்' எனும் சொல்லுக்கு 'அவசரமாக' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:18 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அஃதத்னா' எனும் சொல்லுக்குத் 'தயார்படுத்தி வைத்துள்ளோம்'' என்று பொருள். இச்சொல் 'இதாத்' (ஆயத்தம்) எனும் மூலச் சொல்லிலிருந்து 'அஃப் அல்னா' எனும் வாய்ப்பாட்டில் வந்தாகும்.

4575. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதைகளின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்!'' எனும் (திருக்குர்ஆன் 04:6 வது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதனைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இதுதான் அதன் பொருள்.)4

பகுதி 3

பாகப்பிரிவினை செய்துகொள்ளும்போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி(அனுப்பி)விடுங்கள் (எனும் 4:8 வது இறைவசனம்).

4576. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

பாகப்பிரிவினை செய்துகொள்ளும்போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி (அனுப்பி) விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:8 வது) வசனம், (சட்டம்) நடை முறையிலுள்ள வசனமாகும்; சட்டம் மாற்றப்பட்ட வசனமன்று. 5

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 6

பகுதி 4

அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் (இவ்வாறு) கட்டளையிடுகிறான்... (என்று தொடங்கும் 4:11 வது வசனம்.)

4577. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என்) பனூசலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். எனவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!'' என்று கேட்டேன். அப்போதுதான் 'அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:11 வது) வசனம் அருளப்பட்டது. 7

பகுதி 5

(இறந்த) உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற (சொத்)தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப் பாங்கு உங்களுக்குரியதாகும். (எனும் 4:12 வது வசனத்தொடர்.)

4578. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) மரணசாசனம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்து வந்தது.

அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பியதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரண்டு பெண்களின் பங்கை நிர்ணயித்துத்தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றிலொரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டிலொரு பங்கையும் நான்கிலொரு பங்கையும் கணவனுக்குப் பாதிப்பங்கையும் நான்கிலொரு பங்கையும் நிர்ணயித்தான். 8

பகுதி 6

''இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தலான்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:19 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'லா தஃளுலூ ஹுன்ன' எனும் சொல்லுக்கு 'அவர்களைப் பலவந்தப்படுத்தாதீர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஊலூ' (பேதம் பாராட்டுவது / நீதி தவறுவது) எனும் சொல்லுக்கு '(ஓர வஞ்சனையாக) நீங்கள் சாய்ந்துவிடுவது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நிஹ்லா' எனும் சொல்லுக்கு 'மஹ்ர்' (மணாளன் மணாளிக்கு வழங்க வேண்டிய விவாகக் கொடை) என்று பொருள்.

4579. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்கா(து அப்படியேவிட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக 'இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) வசனம் அருளப்பட்டது.

பகுதி 7

''தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக் காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கும் அவர்களின் பங்கை அளித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 04:33 வது) இறைவசனம்.

மஅமர்(ரஹ்) கூறினார்.9

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'மவாலிய' எனும் சொல்லுக்கு 'வாரிசுகள் எனும் நேசர்கள்' என்று பொருள்.

'ஆகதத் அய்மானுக்கும்' (நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்கள்) என்பது நேச ஒப்பந்தப்படி அமையும் வாரிசுகளைக் குறிக்கிறது.

('மவாலி' என்பதன் ஒருமையான) 'மவ்லா' என்பது தந்தையின் சகோதரர் மகனையும் குறிக்கும்; (அடிமையை) விடுதலை செய்து, உபகாரம் புரியும் எஜமான்; விடுதலை செய்யப்பட்ட அடிமை; அரசன் ஆகியோரையும் குறிக்கும். மார்க்கத் தோழன் என்ற பொருளும் உண்டு.

4580. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இந்த (திருக்குர்ஆன் 04:33 வது) வசனத்தின் மூலத்திலுள்ள 'மவாலிய' எனும் சொல்லுக்கு 'வாரிசுகள்' என்று பொருள். இவ்வசனத்தின் விவரமாவது:

முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகி வந்தார். நபி(ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) 'தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளோம்'' எனும் (திருக்குர்ஆன் 04:33 வது) வசனம் அருளப்பட்டபோது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது.

பின்னர் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவி புரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவைதாம் உள்ளன. உடன்படிக்கை செய்துகொண்டவருக்காக மரணசாசனம் (வேண்டுமானால்) செய்யலாம். 10

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 11

பகுதி 8

நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான் (எனும் 4:40 வது வசனத் தொடர்).

அதாவது அணுவின் எடையளவு கூட (மனிதர்கள் செய்த நன்மைகளுக்கான பிரதிபலனைக் குறைத்தோ, பாவங்களுக்கான தண்டனையைக் கூட்டியோ) அநீதி இழைக்கமாட்டான்.

4581. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! (காண்பீர்கள்) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'இல்லை'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொள்ளாதது போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்'' என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்.

மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் 'ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்'' என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம் 'யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்'' என்று கேட்கப்படும். அவர்கள், 'அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை'' என்று கூறப்படும். மேலும், 'இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்கப்படும். அதற்கவர்கள் 'எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!'' என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக்கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, 'நீங்கள் எதை வணங்கிக்கொண்டிருந்தீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் 'நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) வணங்கிக்கொண்டிருந்தோம்'' என்று கூறுவர். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை'' என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்)12 அப்போது 'எதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயம் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்கின்றனரே!'' என்று கேட்கப்படும். அவர்கள், 'உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்'' என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், 'நானே உங்களுடைய இறைவன்'' என்பான். அதற்கு அவர்கள் 'நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டோம்'' என்று இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ கூறுவர். 13

பகுதி 9

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? (எனும் 4:41 வது இறைவசனம்.)

(திருக்குர்ஆன் 04:36 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முக்தால்' எனும் சொல்லும், (இதே மூலத்திலிருந்து வந்த) 'கத்தால்' எனும் சொல்லும் ('கர்வம் பிடித்தவன்' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 04:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நத்மிஸ வுஜூஹன்' (முகங்களை மாற்றி விடுவோம்) எனும் சொற்றொடருக்கு 'அவர்களின் பிடரியைப் போன்று முகங்களையும் (தடவி) சம மட்டமாக மாற்றிவிடுவோம்' என்று பொருள்.

(இதன் இறந்தகால வினைச் சொல்லான) 'தமஸல் கி(த்)தாப்' என்பதற்கு 'எழுத்தை அழித்தான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:55 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'சஈர்' (கொழுந்து விட்டெரிகின்ற) எனும் சொல்லுக்கு 'எரிபொருள்' என்று அர்த்தம்.

4582. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்'' என்று கூறினார்கள். நான், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு 'அந்நிஸா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'நிறுத்துங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு 'அந்நிஸா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்போது நபி(ஸல்) அவர்கள், 'நிறுத்துங்கள்'' என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. 14

பகுதி 10

''நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் (மலஜலம் கழித்துவிட்டுக்) கழிப்பிடத்திலிருந்து வந்தால், அல்லது பெண்களை நீங்கள் தீண்டியிருந்தால் (இந்நிலைகளிலெல்லாம் துப்பரவு செய்ய) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணால் 'தயம்மும்' செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களின் முகங்களிலும் கைகளிலும் (அதைத்) தடவிக் கொள்ளுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:43 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஸஈதன்' (மண்) எனும் சொல் பூமியின் மேல் பரப்பைக் குறிக்கிறது.

ஜாபிர்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04: 60 வது வசனத்தில் - 'அவர்கள் 'தாஃகூத்தை' (விஷமியை) நிராகரித்துவிட வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டிருக்க, அந்த தாஃகூத்திடமே தீர்ப்புக் கேட்க அவர்கள் விரும்புகின்றனர்'' என்பதில் - உள்ள) 'தாஃகூத்' எனும் சொல் சோதிடனைக் குறிக்கும். (அன்றைய அரபுகளில்) 'ஜுஹைனா' குலத்தாரிடையே ஒருவனும், ஒவ்வொரு குலத்தாரிடையே ஒருவனுமாகப் பல சோதிடர்கள் இருந்தனர். அவர்களின் மீது (குறிசொல்லும்) ஷைத்தான் இறங்குவான். இத்தகைய தாஃகூத்களிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்டுவந்தனர்.

உமர்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:51 வது வசனத்திலுள்ள) 'ஜிப்த்' எனும் சொல் சூனியத்தையும், 'தாஃகூத்' என்பது ஷைத்தானையும் குறிக்கும்.

இக்ரிமா(ரஹ்), 'ஜிப்த் என்பது அபிசீனிய(ர்களின்) மொழியில் ஷைத்தானைக் குறிக்கும்; தாஃகூத் என்பது சோதிடனைக் குறிக்கும்'' என்று கூறினார்கள்.

4583. ஆயிஷா(ரலி) கூறினார்

(என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிடமிருந்து) தொலைந்துவிட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அப்போது அவர்கள் உளூவுடன் (அங்க சுத்தியுடன்) இருக்கவில்லை. (உளூச் செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, உளூ இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போதுதான் உயர்ந்தோனாகிய அல்லாஹ் - தயம்மும் (பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை - அருளினான்.15

பகுதி 11

இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59 வது வசனத் தொடர்.)

4584. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக'' எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) வசனம், நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ(ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது. 16

பகுதி 12

இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட (சண்டை சச்சரவு முதலிய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்ற பின்னர் நீர் அளிக்கிற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள் (எனும் 4:65 வது இறைவசனம்).

4585. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

(என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுக்கு 'ஹர்ரா' எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சரித் தோழர், 'இறைத்தூதர் அவர்களே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் ஆயிற்றே! (எனவேதான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)'' என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (ஸுபைர்(ரலி) அவர்களைப் பார்த்து), 'ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரைவிட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அந்த அன்சரித்தோழர் தம்மைக் கோபபப்படுத்தியபோது நபி(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்கு முன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

ஸுபைர்(ரலி) கூறினார்:

குர்ஆனின் 'இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட (சண்டை சச்சரவு முதலிய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்ற பின்னர் நீர் அளிக்கிற தீர்ப்புக்குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் நம்பிக்கைகொண்டவர்களாக மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:65 வது) வசனம் இது தொடர்பாக இறங்கிற்று என்றே எண்ணுகிறேன். 17

பகுதி 13

யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள், அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் (மறுமையில்) இருப்பார்கள். இவர்கள் தாம் சிறந்த தோழர்கள் (எனும் 4: 69 வது இறைவசனம்.)

4586. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இறுதியாக) நோயுற்றுவிடுகிற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு - மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை'' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், 'அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னை சொர்க்கத்தில் சேர்த்தருள்)'' என்று சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டேன். (இதிலிருந்து) நபி(ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன். 18

பகுதி 14

''(அடக்கி ஒடுக்கப்பட்டு) பலவீனர்களாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக இறைவழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ 'எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிடுவாயாக! இன்னும் எங்களுக்குப் பாதுகாவரையும் உதவியாளரையும் உன்னிடமிருந்து வழங்குவாயாக! எனப் பிராத்தித்துக்கொண்டிருக்கின்றனர்'' எனும் (திருக்குர்ஆன் 04:75 வது) இறைவசனம்.

4587. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர்களாயிருந்தோம். 19

4588. இப்னு அபீ முலைக்கா (அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறினார்

இப்னு அப்பாஸ்(ரலி), 'எந்த உத்தியையும் கையாள முடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர'' எனும் (திருக்குர்ஆன் 04:98 வது) இறைவசனத்தை ஓதிவிட்டு, '(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்'' என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹஸிரத்' (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, '(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக்கொண்டன' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:135 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தல்வூ' (தவறாக சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு 'நீங்கள் (உண்மைக்குப் புறம்பாக) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்'' என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 04:100 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முராஃகம்' எனும் சொல்லுக்கு 'ஹிஜ்ரத் செல்லுமிடம்' (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லான) 'ராஃகமத்து' எனும் சொல்லுக்கு 'நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:103 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மவ்கூத்' எனும் சொல்லுக்கு 'அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை)' என்று பொருள்.

பகுதி 15

உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரண்டு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆம்விட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான் (எனும் 4:48 வது வசனத்தொடர்).

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(இந்த' வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்கஸ' எனும் சொல்லுக்குப் 'பிரித்துத் தனித்தனியாக அவர்களின் கூட்டமைப்பைச் சிதற அடித்துவிட்டான்' என்று பொருள்.

'ஃபிஅத்' எனும் சொல்லுக்குக் 'குழுவினர்' என்று பொருள்.

4589. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) 4:88 வது இறைவசனம் குறித்துக் கூறினார்

(உஹுதுப் போருக்காக) நபி(ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்துவிட்டார்கள். இவர்களின் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபட்டு) மக்கள் இரண்டு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்'' எனும் (திருக்குர்ஆன் 04:88 வது) இறைவசனம் அருளப்பட்டது.

மேலும், நபி(ஸல்) அவர்கள், 'மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப்போல் அது தீமையை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள். 20

அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதனை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:82 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அஃதாஊ' எனும் சொல்லுக்குப் 'பரப்பிவிடுவார்கள்' என்று பொருள். 'யஸ்தன்பித்தூன்' எனும் சொல்லுக்கு 'ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:86 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹசீப்' எனும் சொல்லுக்குப் 'போதுமானவன்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04: 117 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இனாஸ்' எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். 'மாரீத்' எனும் சொல்லுக்கு '(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:119 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபல்யுபத்திகுன்ன' எனும் சொல்லுக்கு 'அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:122 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கீல்' எனும் பதமும் 'கவ்ல்' எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 04:155 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'தபஅ' எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) 'துபிஅ' எனும் சொல்லுக்கு 'முத்திரையிடப்பட்டது' என்று பொருள்.

பகுதி 16

ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும் (எனும் 4:93 வது வசனத்தொடர்.)

4590. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடவில்லை'' என்று கூறினார்கள். 21

பகுதி 17

(தம்மை இறைநம்பிக்கையாளர் என்று உங்களுக்குக் காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள் (எனும் 4:94 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'சலாம்' எனும் சொல்லுக்கு (இன்னும் இரண்டு வகையான ஓதுதல் முறையில் வந்துள்ள) சில்கி, சலம் ஆகிய சொற்களும் ('சாந்தி' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

4591. இப்னு அப்பாஸ்(ரலி) 4:94 வது வசனம் குறித்துக் அறிவித்தார்

ஒருவர் தன்னுடைய சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், 'அஸ்ஸலாமு அலைக்கும்'' (உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அவரின் ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். 'இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 04:94) (இங்கே 'உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான். 22

அறிவிப்பாளர் அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி), (இந்த வசனத்தில் 'சலாம்' எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.)

பகுதி 18

இறைநம்பிக்கையாளர்களில் - இடையூறு உள்ளவர்கள் தவிர - அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள் (எனும் 4:95 வது வசனத்தொடர்.)

4592. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்

நான் மர்வான் இப்னு ஹசுமைப் பள்ளி வாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் இப்னு ஸாபித்(ரலி) (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

''இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மகத்தூம்(ரலி) வந்து, 'அதல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன்'' என்று கூறினார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்களின் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். எனவே, என் தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி(ஸல்) அவர்களின் தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு, அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் 'இடையூறு உள்ளவர்களைத் தவிர' எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான். 23

4593. பராஉ(ரலி) அறிவித்தார்

''இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அழைக்க அவர் (வந்து) அதனை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம்(ரலி) வந்து தம் ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ் 'இடையூறு உள்ளவர்களைத் தவிர' எனும் சொற்றொடரை அருளினான். 24

4594. பராஉ(ரலி) அறிவித்தார்

''இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்னாரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறினார்கள். (ஸைத் இப்னு ஸாபித்) அவர்கள், மைக்கூட்டையும் 'பலகையையும்' அல்லது 'அகலமான எலும்பையும்' தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 'இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுக்குப் பின்புறம் இப்னு உம்மி மக்த்தூம்(ரலி) இருந்தார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நான் கண்பார்வையற்றவன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில் 'இறைநம்பிக்கையாளர்களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்'' என்ற இறைவசனம் (திருக்குர்ஆன் 04:95 முழுமையாக) இறங்கிற்று.

4595. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்'' எனும் வசனம் (திருக்குர்ஆன் 04:95) பத்ருப்போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.

பகுதி 19

''(மார்க்கக் கடமைகளைச் சாரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறைமறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, (அவர்களை நோக்கி, 'மார்க்கக் கடமைகளை நிறைவேற்றமுடியாத இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?' என வினவுவார்கள். அதற்கு அவர்கள், 'பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்'' என பதிலளிப்பார்கள். 'அல்லாஹ்வின் பூமி விசாலமான தாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?' என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:97 வது) இறைவசனம்.

4596. முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 25 அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்:

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி 'இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?' என வினவுவார்கள். அதற்கு அவர்கள், 'பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்'' என பதிலளிப்பார்கள். 'அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?' என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும். 26

இதை அபுல் அஸ்வத்(ரஹ்) அவர்களிடமிருந்து ஸைத் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

பகுதி 20

ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல் உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! (எனும் 4:98 வது வசனம்.) 27

4597. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்

''இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர!'' எனும் (திருக்குர்ஆன் 04:98 வது) இறைவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின் வருமாறு) கூறினார்கள்: இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயிருந்தார். 28

பகுதி 21

''அத்தகையோரின் பிழைகளை அல்லாஹ் பொறுக்கக் கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும் மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 04:99 வது) இறைவசனம்.

4598. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்தபோது, 'சமி அல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, 'இறைவா! (மக்காவில் சிக்கிக் கொண்டிருக்கும்) அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ஸலமா இப்னு ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! இறைநம்பிக்யாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 29

பகுதி 22

''(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்களின் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:102 வது) இறைவசனம்.

4599. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) '(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்களின் மீது தவறேதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 04:102 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது, 'அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது)'' என்று கூறினார்கள்.

''(நபியே!) பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் அவர்கள் கோருகின்றனர். நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், எந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட (மஹ்ர் போன்ற)வற்றை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களோ அந்தப் பெண்களின் விஷயத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டமும் (உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறது.)'' எனும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத் தொடர்.

4600. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) இந்த வசனத்திற்கு (திருக்குர்ஆன் 04:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள். (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும், வாரிசாகவும் இருந்து வருவார். பேரீச்ச மரம் உள்பட அவரின் செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணந்துகொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகிறவ)னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்து வந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்து வந்தார். அப்போதுதான் 'ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:128 வது) வசனம் அருளப்பட்டது. 30

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:35 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஷிகாக்' எனும் சொல்லுக்குப் 'பரஸ்பரப் பிணக்கு' என்று பொருள்.

பகுதி 24

மனித உள்ளங்கள் உலோபித்தனத்திற்கு(ம் குறுகிய எண்ணத்திற்கும் விரைவாக உட்பட்டுவிடுகின்றன (எனும் 4:128 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அஷ்ஷுஹ்ஹு' எனும் சொல், மனிதன் ஒன்றின் மீது பேராசைகொண்டு அதிகமாக விரும்புவதைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 04:129 வது வசனத்திலுள்ள) 'கல்மு அல்லகா' (அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போன்று) எனும் சொல், அவள் விதவையாகவும் இல்லாமல் கணவன் உடையவளாகவும் இல்லாமல் கணவன் உடையவளாகவும் இல்லாமல் இருக்கும் (தொங்கு) நிலையைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 04:128 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நுஷுஸ்' (நல்ல விதமாக நடந்து கொள்ளாமை) எனும் சொல்லுக்குச் 'சினம் கொள்ளல்' என்று பொருள்.

4601. ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்

ஆயிஷா(ரலி), 'ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 04:128 வது) வசனம் குறித்துக் கூறுகையில், 'தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்துவிட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள் 'என்னுடைய (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக்கொடுத்து விடுகிறேன்; (என்னை விவாகாரத்துச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்கவேண்டும்)' என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (திருக்குர்ஆன் 04:128) இறங்கிற்று'' என்று குறிப்பிட்டார்கள். 31

பகுதி 25

நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டிலேயே இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் ஒருபோதும் நீங்கள் காணமாட்டீர்கள் (எனும் 4:145 வது வசனம்).

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத் தர்க்குல் அஸ்ஃபல்' எனும் சொல்லுக்கு 'நரகத்தின் கீழ்த்தட்டு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 06:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஃபக்' (சுரங்கப்பாதை) எனும் சொல்லுக்கு 'வழி' என்று பொருள்.

4602. அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ(ரஹ்) கூறினார்

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா(ரலி) வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு, 'உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப்(பட்டு சோதிக்கப்)பட்டது என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) 'நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள்' என்று அல்லாஹ் கூறுகிறானே'' என்று சொல்ல, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) புன்னகைத்தார்கள்.

ஹுதைஃபா(ரலி) பள்ளி வாசலின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எழுந்து நிற்க, அவர்களின் தோழர்கள் கலைந்து சென்றார்கள். உடனே, ஹுதைஃபா(ரலி) பொடிக் கற்களை என் மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். உங்களை விடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தினர் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான்'' என்றார்கள். 32

பகுதி 26

''(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததைப் போன்ற நிச்சயமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் மற்றும் யஅகூப் உடைய வழித் தோன்றல்களுக்கும், ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம்'' எனும் (திருக்குர்ஆன் 04:163 வது) இறைவசனம்.

4603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “நான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்' என்று (என்னைப் பற்றி) எவரும் கூறுவது அவருக்குத் தகாது.  இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

4604. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார்.  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4605. பராஉ(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் 'பராஅத்' எனும் (9 வது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம் '(நபியே!) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்'' எனும் (இந்த 4:176 வது) வசனமாகும். 34
Previous Post Next Post