நபிகளாரை ஈருலகத் தலைவராகப் பெற்றதன் மூலம் இச்சமூகம் அடைந்து கொண்ட இம்மை, மறுமைப் பயன்கள் மிக ஏராளம்.
நபிகளார் என்ற பேரருளை வல்ல அல்லாஹ் இச்சமூகத்துக்கு வழங்கியமைக்கான நன்றியின் உச்ச வடிவமாகவும் நபிகளாருக்கு நாம் வழங்கும் உயர்ந்த கௌரவமாகவும் அவர்கள் மீது நாம் கூறும் ஸலவாத் அமைகிறது.
அல்லாஹ்வின் அளவிட முடியா தயாளகுணத்தை பாருங்கள், நாம் செலுத்தும் நன்றிக்கடனிலும் வழங்கும் கௌரவத்திலும் நமக்கு பல வெகுமதிகளை வைத்திருக்கிறான்.
நமக்கு தரப்பட்ட அருளுக்காக நாம் செலுத்தும் நன்றியின் வாசகங்கள் மீளவும் நமக்கே அரிய பல நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கின்றன.
- பாவங்கள் மன்னிக்கப்படல்
- அந்தஸ்துகள் உயர்த்தப்படல்
- நன்மைகள் பதியப்படுதல்
- மறுமையில் நபிகளாரின் அருகில் அமரும் பேறு
- அல்லாஹ்வின் அருள் நம்மை சூழ்தல்
- பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுதல்
- மனதை அழுத்தும் கவலைகள் நீங்குதல்
- கஞ்சத்தனத்திலிருந்து விடுபடல்
- நபிகளாரின் ஷபாஅத்துக்கு தகுதியடைதல்
- மரணத்திற்கு முன் சுவன நன்மாராயத்தைப் பெற்றுக்கொள்ளல்
- தேவைகள் நிறைவேற காரணமாகுதல்
- நபிகளாரை உளப்பூர்வமாக நேசிப்பதற்கு சான்றாகுதல்
போன்ற இன்னோரன்ன இம்மை, மறுமைப் பயன்களை நாம் மொழியும் ஸலவாத் பெற்றுத்தருவதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வாக்களிக்கின்றன.
- அபூதல்ஹா (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு நாள் காலை வேளையில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகம் மிக மலர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். இதை கண்ணுற்ற ஸஹாபாக்கள் 'யாரஸூலல்லாஹ்! இன்று தாங்கள் மிகுந்த முகச் செழிப்போடும் மகிழ்ச்சியோடும் காணப்படுகிறீர்களே...' என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார் அவர்கள் 'ஆம்; இன்று என்னிடம் ஒரு வானவர் வருகை தந்து 'உங்களது சமூகத்தில் ஒருவர் உங்கள் மீது ஒரு தடவை ஸலவாத் கூறினால் அவருக்கு பத்து நன்மைகளை பதிவுசெய்கிறான்; அவரது பத்து பாவங்களை அழித்துவிடுகிறான்; பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான். அவர் கூறியது போன்று அவருக்கு பதிலளிக்கிறான்' என்று கூறிச்சென்றார். (அதனால்தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்)' என்று கூறினார்கள். (நூற்கள் : முஸ்னத் அஹ்மத், ஸஹீஹுத் தர்ஹீப் வத்தர்ஹீப்).
- நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ' வெள்ளிக்கிழமை தினத்தில் என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள்; எனது சமூகத்தார் என் மீது கூறும் ஸலவாத் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு எடுத்துக்காட்டப்படும். யார் என் மீது அதிகமாக ஸலவாத் கூறுகிறாரோ அவர் மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக வீற்றிருப்பார்' (ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்).
- ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் -
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)