துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் மகிமை

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்று தொடக்கம் பிறை 10 (ஹஜ் பெருநாள்) வரையான நாட்கள் மிகச் சிறப்பும் மகிமையும் வாய்ந்தவையாகும்.

1.' மனிதன் நற்செயல்கள் புரிவதற்கு அல்லாஹ் மிகவும் விரும்பும் நாட்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களாகும்' என நபிகளார் கூறிய போது 'அல்லாஹ்வின் பாதையில் மேற்கொள்ளப்படும் புனிதப் போரின் நிலை என்ன?' என ஸஹாபாக்கள் வினவினர். 'ஆம், அல்லாஹ்வின் பாதையில் புரியப்படும் புனிதப் போர் கூட, இப் பத்து தினங்களில் புரியப்படும் அமல்களுக்கு ஈடாகாது. ஆயினும் யார் தன் உடலையும் செல்வத்தையும் புனிதப் போருக்காக அர்ப்பணித்து ஷஹீதாக்கப்படுகிறாரோ அவரை தவிர' என்று கூறினார்கள் (ஸஹீஹுல் புஹாரி).

2. துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களும் மனிதன் நல் அமல்கள் புரிவதற்கு அல்லாஹ்விடத்தில் மிக மதிப்புள்ள, அல்லாஹ்வுக்கு அதிக விருப்பத்துக்குரிய நாட்களாக இருக்கின்றன. எனவே, அத்தினங்களில் அதிகமாக ஏகத்துவ கலிமாவை கூறுவதிலும் தக்பீர் சொல்வதிலும் இறைவனை புகழ்வதிலும் அதிகம் ஈடுபடுங்கள்' (முஸ்னத் அஹ்மத்).

வேறு எத்தினங்களிலும் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் இப்பத்து தினங்களிலும் அடங்கியிருப்பதனால்தான் இவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாக அல்லாஹ்விடம் கருதப்படுகின்றன என்பதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஹஜ், உம்றா, அறபா நோன்பு, ஹஜ் பெருநாள், உழ்ஹிய்யா போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கிய காலப்பகுதியாக இப்பத்து தினங்களும் காணப்படும் அதே வேளை, இப் பத்து தினங்களில் ஒன்றில்தான் அல்லாஹ்வின் மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டதாக அல்லாஹ் பிரகடனம் செய்தான். ஒரு வருடத்திலுள்ள வேறு எந்த குறித்த தினங்களிலும் இத்தனை சிறப்பம்சங்களும் உள்ளடங்கியிருக்கவில்லை. அதனால்தான் அல்லாஹ்வின் பாதையில் மேற்கொள்ளப்படும் புனிதப் போர் கூட இத்தினங்களில் மேற்கொள்ளப்படும் அமல்களுக்கு ஈடாகாது என நபிகளார் கூறினார்கள். 

தொழுகைகளை உரிய வேளையில் ஜமாஅத்தாக நிறைவேற்றுதல், ஸுன்னத்தான தொழுகைகளை விடாது பேணுதல், அல்குர்ஆன் ஓதுதல், மார்க்க விடயங்களை கற்றல், சமூகத்துக்கு பயனுள்ள காரியங்களில் ஈடுபடல், பாவமன்னிப்பு கோருதல், தஸ்பீஹ், திக்ர், ஸலவாத் கூறுதல் போன்றவை நாம் இத்தினங்களில் அதிகமாக செய்ய வேண்டிய நற்செயல்களாகும்.

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
Previous Post Next Post